Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

என் இனிய இன்பனே 1

“நான் என் அம்மா கூட இருந்ததை விட அப்பா கூட இருந்ததை விட உன் கூட நல்லா இருக்கேன்! சந்தோஷமா இருக்கேன்”

படத்தின் காட்சியினில் கண்களைப் பதித்திருந்த சிந்துஜாவின் பார்வை இந்த வசனத்தைக் கேட்ட நொடி சட்டெனக் கணவனிடம் தாவியது!

எத்தனை நிஜமான வரிகள்!

நொடிப்பொழுதில் வாழ்வினில் கடந்து வந்த நிகழ்வுகள் யாவும் மனக்கண்ணில் மின்னி மறைய, இன்பாவுடனான வாழ்வு தனக்களித்திருக்கும் இன்பத்தினையும் நிறைவினையும் உணர்ந்தவளாய் மென் ஸ்பரிசமாய் அவனை வருடின அவளின் கண்கள். மனதினுள் நிரம்பி வழிந்த அவன் மீதான நேசத்துடன் அவனின் முன்னங்கையை இறுகப் பற்றிக் கொண்டு தோள் சாய்ந்தாள் சிந்துஜா.



Advertisement

அவளைத் திரும்பிப் பார்த்துப் புன்னகைத்தவனாய் அவள் தோள் மீது கைப்போட்டுத் தன்னோடு அணைத்தவாறு வாகாய் அமர்ந்து மீண்டுமாய்ப் படத்தினுள் மூழ்கிப் போனான் இன்பா.

மணாளனாகி மனதிற்கினியவனாய் மாறிப்போன மன்னவனுக்குள் மூழ்கிப்போகத் தவித்த மனத்தினை அடக்கி ஆசையாய் அவன் மார்போடு சாய்ந்திருந்தாள் சிந்துஜா.

கணவனை எண்ணி நெஞ்சம் நெகிழ, படத்தில் கேட்ட ஜோதிகாவின் குரலாய் அவளின் உள்ளமும் தன்னவனிடம் அதையே உரைத்திட சித்தமாயிருந்தது. மார்பில் இருந்து நிமிர்ந்து பார்க்க கணவனைக் காதலாய்த் தழுவின கண்கள்.

Advertisement

சில்லுனு ஒரு காதல் படத்தினை இணைய வழியாகப் பார்த்துக் கொண்டிருந்தான் இன்பா.

Advertisement

அவனது வழமையான செயலிது. தகவல் தொழில்நுட்ப அலுவலகத்தில் மேனேஜராய்ப் பணிபுரியும் அவனுக்குப் பணியின் பொருட்டு மன அழுத்தம் உண்டாகி நெஞ்சம் சுணங்கும் வேளைகளில் இரவு காட்சியாக ஏதேனும் மனதிற்கு இதமான படங்களைக் காண்பான். இந்நேரங்களில் அவனுடன் இணைந்து அவனையும் அவனின் ரசனையையும் ரசித்துப் பார்ப்பதில் அலாதி இன்பம் அவளுக்கு‌. தம்பதியருக்கான பிரத்யேக நேரம் அது.

அவனுக்குப் பிடித்தமானவை அனைத்தும் தனக்கும் பிடித்தம் எனுமளவு அவனைப் பிடிக்கும் அவளுக்கு.

இரவு பத்து மணியளவில் தங்களது மூன்று வயது மகன் யுகேந்திரனை படுக்கையறையில் உறங்க வைத்து விட்டு வரவேற்பறைக்கு வந்தவள், கண்கள் மின்ன மகிழ்வாய் இப்படத்தினைப் பார்த்திருந்த கணவனுடன் தானும் இணைந்துக் கொண்டாள்.

Advertisement

இருவரும் கால்களை நீட்டி தரையில் தளர்வாய் அமர்ந்து தொலைகாட்சியைப் பார்த்திருத்தனர்.

சில திரைப்படங்கள் நம்முடன் உறவாடி வாழ்வின் பக்கங்களைப் புரட்டிப் பார்க்க வைத்து விடும்.

கல்லூரி காலத்தில் இப்படத்தினைப் பார்த்திருந்தவன் அதன் பின்பு இன்று தான் இந்தப் படத்தினைப் பார்க்கிறான். பெரும்பாலான காட்சிகள் வசனங்கள் எல்லாம் மறந்து விட்டிருந்தது அவனுக்கு.

“I’m the happiest man in the world”

சூர்யாவின் மகிழ்வான குரல் தொலைக்காட்சியின் வழியாகச் செவியை நிறைக்க, தன்னை ஊடுருவும் மனைவியின் பார்வையை நோக்கி பயணித்தன அவனின் கண்கள்.

நேசிப்பதை விட நேசிக்கப்படுவதின் சுகம் பேரின்பம் அல்லவா! இன்பாவின் பேரின்பம் அவள்! தன்னை ரசிக்கும் மனைவியை அதே ரசனை பார்வையுடன் பார்த்திருந்தான் இன்பா. படக்காட்சியினுள் ஊடாடிக் கொண்டிருக்கும் காதல் இவர்களையும் தாக்கிக் கொண்டிருந்தது.

கணவனை நிமிர்ந்து பார்த்தவள், “உங்களுக்கு என்னிக்காவது இப்படித் தோணிருக்காப்பா” அவனின் கை வளைவுக்குள் இருந்தவளாய் ஆவலுடன் கேட்டாள்.

“எப்படி?” புருவம் உயர்த்தியவாறு கேட்டான் இன்பா.

“இப்படி! இந்த நொடி! இந்தப் பொழுது, உலகத்திலேயே மகிழ்வானவன் நான் தான்னு உங்களுக்கு என்னிக்காவது தோணிருக்கா?” எனக் கேட்டாள் சிந்துஜா.

கலகலவெனப் பேசும் சிந்துஜாவின் எதிர்பதமாக அளவாகப் பேசுபவன் இன்பா. சிந்துவை போலவே ஆற்று நீராய் அவனும் ஒரு காலத்தில் சலசலத்துக் கொண்டிருந்தவன் தான். காலங்கள் அளித்த காயங்களும் அனுபவங்களும் அவனை இறுக்கமாக்கி இருந்த நேரம், சிந்துவின் நேசம் அவனை இயல்பாக்கி அவளிடம் மட்டுமாகச் சலசலக்கவும் வைத்திருந்தது‌.

அவளின் கேள்வியில் இவனது மூளை முன் நடந்த வாழ்வின் நிக்ழ்வுகளைப் புரட்டிப் பார்க்க, “அதெல்லாம் ஒரு காலம் சிந்து” என்றான் இன்பா.

சட்டென முகம் சுருங்க அவனை விட்டு தள்ளி அமர்ந்தவளாய், “ஏன் இப்ப நீங்க ஹேப்பியா இல்லையா?” எனக் கேட்டாள் சிந்துஜா.

எதிர்பார்ப்பின் ஏமாற்றம் அவள் முகத்தில்!

அவளின் விலகலிலும் கேள்வியிலும் படத்தை நிறுத்தி விட்டு அவளின் கைப்பற்றித் தன்னை நோக்கி இழுத்தவனாய், “என்னைப் பார்த்தா உனக்கு எப்படித் தெரியுது? சோகமா இருக்க மாதிரி தெரியுதா?” எனப் புன்னகைத்தான் இன்பா.

“ம்ப்ச் நான் கேட்குற ஹேப்பினஸ் வேறப்பா” என்று அவள் சிணுங்க, அவளின் கன்னத்தைப் பிடித்துக் கிள்ளியவனாய், “என்னிக்கும் எல்லாத்தையும் எக்ஸ்பிரஸ் செஞ்சிட்டே இருக்க முடியாது சிந்து. கூடச் சேர்ந்து வாழுற வாழ்க்கைல புரிஞ்சிக்க முடியாததை, சொல்லி மட்டும் புரிய வச்சிட முடியுமா என்ன?” என்று கேட்டான் இன்பா.

“நீங்க தானே அதெல்லாம் ஒரு காலம்னு சொன்னீங்க?” என்று முறுக்கி கொண்டு அவள் கேட்க,

“ஆமா சிந்து! காலேஜ் படிக்கும் போது எதுக்காகவும் கவலைப்பட்டதில்லை. அப்ப சுத்தி சந்தோஷம் மட்டுமே இருந்ததா தோணுச்சு. அதனால அது ஒரு காலம்னு சொன்னேன்” என்றான்.

“ஓ காலேஜ் லைஃபை சொன்னீங்களா… அப்ப சரி” என்று சமாதானம் ஆகி அவன் மடியினில் படுத்துக் கொண்டவளாய் படத்தினைப் பார்க்க ஆரம்பித்தாள்.

அவள் அப்படித் தான்! சட்டெனக் கோபித்து; கேள்வி கேட்டு; சண்டையிட்டு; சட்டெனச் சமாதானமும் ஆகி விடுவாள்.

இந்த ஏழு வருட மணவாழ்வில் மனைவியை நன்கு அறிந்தவனாய் அவளின் தலையை வருடியவாறு மென்னகை புரிந்தான் இன்பா.

இன்பா படத்தினில் மூழ்கிப் போக, சிந்துஜா அவன் மடி சாய்ந்த சுகத்தில் உறங்கியிருந்தாள்‌.

“ஏன்னா நான் உன்னை லவ் பண்றேன் கௌதம். நான் உன்னை மட்டும் லவ் பண்ணலை கௌதம். உன்னோட ஆசையை, உன்னோட உணர்வை, உன்னோட கனவை எல்லாத்தையும் சேர்த்து தான் லவ் பண்றேன் கௌதம்”

மனம் கனக்க இன்பா இக்காட்சியினைப் பார்த்திருக்க, அவனின் கைகளோ மனைவியின் தலையைக் கோதிய வண்ணம் இருந்தது.

தான் வாழ்வில் செய்த ஒரே பாவமாக எண்ணி மறுகும் அந்நிகழ்வினை நினைவூட்டி அதன் பிறகான தனது வாழ்வினுள் பயணித்துச் சிந்துவிடம் வந்து நின்ற மனம் முழுவதும் தன்னை நேசிக்கும் தன்னவளே நிறைத்திருந்தாள் அவனுக்கு.

குந்தவை போலத் தானே இவளும்!

தன் மீது எதிர்பார்ப்பற்ற அளவற்ற அன்பை பொழிபவள் தானே இவளும்! தனக்காகவே தனது காதலுக்காகவே வாழும் உள்ளம்‌. ஆனால் குந்தவை போல் இவளுக்குத் தனது முன் காதல் தெரிந்தால்? அக்காதலை விரட்டியடிக்கத் தான் செய்த பாவச்செயலினை அறிந்தால்? தன்னை விட்டு பிரிந்திடுவாளோ! நினைக்கவே நெஞ்சம் நடுங்கியது இன்பாவிற்கு!

தனது முன் காதல் கதையினைக் கேட்டு சிந்து துயுருறுவாளோ என்பதை விட அதனை அவளிடம் உரைத்திடும் தைரியம் இல்லை அவனுக்கு. பெரியதாக வெளி அனுபவம் இல்லாத, தான் தான் அவளின் உலகமென வாழ்பவளிடம் இதனைக் கூறினால் கண்டிப்பாக இயல்பாக ஏற்றுக்கொள்ள மாட்டாள் என்று திட்டவட்டமாக நம்பினான் இன்பா.

தனது வாழ்வின் இன்பமாய் மாறியிருக்கும் சிந்துவை எந்நிலையிலும் பிரியும் தைரியமற்றவனாய் இருந்தான் இன்பா.

பலவிதமான சிந்தனையில் உழன்றவனாய்ப் படத்தினைப் பார்த்து முடித்திருந்தவன் மனத்தில் இனம்புரியா இறுக்கம் சூழ்ந்திருத்தது‌.

இன்பாவின் மடியினில் நல்ல உறக்கத்தில் இருந்தவள் லேசாகக் கலைந்தவளாய் கணவனின் இடையைக் கட்டிக்கொண்டு வயிற்றினை ஒட்டியவாறு மீண்டுமாய் உறக்கத்திற்குள் ஆழ்ந்தாள்‌.

கள்ளமில்லாத அவளின் முகத்தினைப் பார்த்தவாறு அவளுடனான திருமணத்தின் பின்பான நிகழ்வுகளை நினைத்தவாறு அமர்ந்திருந்தவனுக்கு மனதின் இறுக்கங்கள் மெல்ல தளர்ந்து போகக் கண்கள் காதலை தத்தெடுத்தது. குனிந்து அவள் நெற்றியில் அழுத்தமாய் முத்தமிட்டான்.

அவனின் முத்தத்தில் உறக்கம் கலைந்தவள் உடலை முறுக்கி கண்களைச் சிமிட்டியவாறு அவனைப் பார்த்தாள்.

“படம் முடிஞ்சிடுச்சாப்பா!” என்றவளாய் எழுந்து அமர்ந்தாள்.

ஹ்ம்ம் என்றவனின் பார்வை மாற்றத்தினை உணராதவளாய் எழும்பப் போனவளை அருகில் இழுத்து நெற்றியில் தொடங்கிய இதழ் முத்தத்தைத் தொடர்ந்தவனாய் அவளுள் கரைய, தடம் மாறிய கணவனின் கைகளைப் பற்றியவளாய் வேண்டாம் எனத் தலையைசைக்க, வேண்டுமென முன்னேறினான் அவன். விரும்பியே அவனுள் தொலைந்தாள் அவள்.

விடியற்காலையில் கண் விழித்தவளுக்குப் படுக்கையறையில் கை அணைவிற்குள் இருக்கும் மகனே தட்டுப்பட, கண்கள் கணவனைத் தேடியது.

தாய் மீது ஒரு கால் போட்டுத் தந்தையிடம் ஒரு கை போட்டு வாயைச் சிறிது பிளந்தவாறு உறங்கும் மகனைக் கண்டு ரசித்துச் சிரித்தவளாய், அவனைச் சுற்றியிருந்த தனது கையைத் தூக்கி மகனின் மறுபுறம் உறங்கியிருந்த கணவனின் மார்பில் வைத்தாள்.

மீண்டுமாய் உறக்கம் கண்களைத் தழுவ ஆழ்ந்த உறக்கத்திற்குள் சென்றாள்‌.

விடியற்காலையில் குளித்து முடித்து அடுப்படியில் அரிசி கழுவி வைத்து விட்டு பாலை ஒரு அடுப்பில் வைத்து விட்டு வந்து மனைவியை எழுப்பினான் இன்பா.

இது தான் அவர்களது அன்றாட வழக்கம்‌. சமையலறையில் காலையில் அடுப்பில் அரிசியையும் பாலையும் வைத்து விட்டு தான் மனைவியை எழுப்புவான். அவன் எழுந்திருக்கும் நேரத்தைப் பொறுத்து குளியல் போடுவான்.

ஆறரை மணியளவில் எழுந்த சிந்துஜா அவசர குளியல் போட்டு சமையல் வேலையைக் கவனிக்க, மகனுக்கான உணவினைக் கொடுத்து அவனைக் கவனித்துக் கொண்டான் இன்பா.

எட்டரை மணியளவில் அலுவலகத்திற்குப் புறப்பட்டவன், போக்குவரத்து நெரிசல் காரணமாகப் பத்து மணியளவில் அலுவலகத்தை வந்தடைந்தான்.

இன்பா பிராஜக்ட்டில் ஷிப்ட் இருந்ததால் அவனது குழு மக்கள் அவரவர் ஷிஃப்ட்டிற்கு ஏற்றவாறு அலுவலகத்திற்கு வந்து வேலை செய்தனர்‌.

அன்னம், பாலாஜி, மோகன், அசோக் ஆகியோர் அவனது டீம் மக்கள் ஆவர்‌‌.

பாலாஜியும் மோகனும் மதியம் ஷிப்ட்டில் வந்து அவரவர் வேலைகளைப் பார்த்துக் கொண்டிருந்த நேரம், “கைஸ் குட் நியூஸ்” முகம் நிறைத்த புன்னகையுடன் இவர்களின் அருகே வந்தான் இன்பா.

“என்ன இன்பா?” என்று மோகனும் பாலாஜியும் கேட்க, “நம்ம பிராஜக்ட்டுக்கு இந்த வருஷத்துக்கான பெஸ்ட் பிராஜக்ட் அவார்ட் கிடைச்சிருக்கு! நம்ம கம்பெனில நடக்குற பங்ஷன்ல கொடுக்கிறாங்க” என்றான்.

பாலாஜியும் மோகனும் கைகளைக் குலுக்கி வாழ்த்துக் கூறி மகிழ்வைத் தெரிவித்தனர்.

“நாம எல்லாரும் அந்தப் பங்ஷனுக்கு நம்மளோட குடும்பத்தோட கலந்துக்கனும். இன்னும் ஒரு வாரத்துல ஃபங்ஷன் இருக்கு. எல்லாரும் அவங்கவங்க வீட்டுல சொல்லிடுங்க. நைட் ஷிப்ட்ல அசோக் வந்ததும் சொல்லிடுங்க. அன்னம் காலைல ஷிப்ட்ல வந்துட்டு போய்ட்டால! அவளுக்கு ஃபோன் செஞ்சி நான் சொல்றேன்” என்றவாறு தனது அறையை நோக்கிச் சென்றான் இன்பா.

இன்பாவின் மூலம் இச்செய்தியை கேட்டுத் துள்ளிக் குதித்த அன்னம், அவளின் பெற்றோர்கள் மதுரையில் இருப்பதனால் இங்கு அவள் தங்கியிருக்கும் உறவினரான அண்ணி குடும்பத்தினருடன் வருவதாக உரைத்தாள்.

இன்பா பணி செய்யும் அந்த அலுவலகத்தில் வருடத்திற்கு ஒரு முறை விருது வழங்கும் விழா நடைபெறும்.

அதிக லாபம் ஈட்டிய பிராஜக்ட், கிளையண்ட் பாராட்டைப் பெற்ற பணியாளர்கள் எனப் பல்வேறு தலைப்பில் விருதுகள் வழங்கப்படும். அதில் ஒரு விருதிற்காகத் தான் இன்பாவின் பிராஜக்ட் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தது. இவ்வாறு விருது பெறும் அனைவருமே அவ்விழாவில் தங்களது குடும்பத்தினருடன் பங்கேற்க அழைப்பர்.

அன்று மாலை எட்டு மணியளவில் வீட்டிற்குச் சென்ற இன்பா, சிந்துஜாவிடம் இந்த மகிழ்வான செய்தியைப் பகிர்ந்து கொண்டான்.

“உங்க உழைப்புக்கு கிடைச்ச வெற்றிங்க! ரொம்பச் சந்தோஷமா இருக்கு! அன்னம், பாலாஜி, அசோக், மோகன் எல்லாரும் அவங்க குடும்பத்தோட வருவாங்கல! இது வரைக்கும் இவங்க பேரு தானே கேட்டிருக்கேன். இவங்களை எல்லாம் நேரில் பார்க்க போறேன்கிறதே சந்தோஷமா இருக்கு” என்றாள் சிந்துஜா.

தனது அன்றாட அலுவலக நிகழ்வுகளைச் சிந்துவிடம் பகிர்ந்து கொள்வான் இன்பா. அதன் மூலமாகவே இவர்கள் அனைவரைப் பற்றியும் அறிந்து வைத்திருந்தாள் சிந்துஜா.

தான் கணவனின் அலுவலக நிகழ்ச்சிக்குச் செல்ல போகிறோம் என்ற நினைப்பே அவளுக்கு மகிழ்வை அளித்திருக்க, “ஃபங்ஷனுக்கு நான் என்ன புடவை கட்டுறதுங்க?” எனக் கேட்டாள்.

“நான் உனக்குப் புதுப் புடவை வாங்கித் தரேன்” இன்பா கூற,

“இல்லை எதுக்கு வீண் செலவு? இருக்கிற புடவைலயே ஏதாவது கட்டிக்கிறேன்” என்றாள்‌.

ஆனாலும் அந்த வாரயிறுதியில் கடைக்கு அழைத்துச் சென்று அவளின் நிறத்திற்கு ஏற்றவாறு ஒரு டிசைனர் புடவையை வாங்கிக் கொடுத்தான் இன்பா. அந்த டிசைனர் புடவையின் நிறத்திற்கு ஏற்றவாறு தனக்கும் மகனுக்குமான உடையையும் தேர்ந்தெடுத்தான் இன்பா.

குடும்பத்தினருடன் செல்லவிருக்கும் அலுவலக நிகழ்ச்சிக்காகச் சிந்துஜா பூரிப்புடன் கிளம்பிக் கொண்டிருக்க, அந்நாள் தனக்கு வைத்திருக்கும் அதிர்ச்சியை அறியாதவனாய் மனைவி மகனுடன் கிளம்பினான் இன்பா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!