Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

என் இனிய இன்பனே 25

“சொல்லு சிந்து! உடம்புக்கு எதுவும் செய்யுதா?” எனக் கேட்டான் இன்பா.

அந்த அறையின் ஓரத்தில் நின்று கண்ணாடி ஜன்னல் வழியாக வெளியே சாலையைப் பார்த்தவாறு மெதுவாக கைப்பேசியில் அவன் பேச, அந்த மீட்டிங் அறையிலிருந்த அனைவரின் பார்வையும் அவனின் முதுகை துளைத்தன.



Advertisement

அவன் கேட்ட கேள்வியைக் கிடப்பில் போட்டவளாய், “என்னங்க எனக்காகத் தான் உங்கம்மாகிட்ட இத்தனை நாளா பேசாம இருந்தீங்களா?” உற்சாகத்துடன் கேட்டிருந்தாள் சிந்து.

அவளின் கேள்வியில் கடுப்பானவனாய், “இப்ப இதைக் கேட்க தான் கால் செஞ்சியா?” பல்லை நறநறத்தவாறு அவன் கேட்கவும்,

Advertisement

Advertisement

‘ஆஹா சிங்கம் சிலுப்பிக்கிட்டு இருக்கும் போது போன் செஞ்சிட்டோம் போலயே’ அச்சத்துடன் அவள் எண்ணும் போதே,

“அறிவிருக்கா உனக்கு! செம்ம கடுப்புல இருக்கேன்‌. ஏதாவது திட்டிடப் போறேன்” கடுப்பாக உரைத்தான்.

Advertisement

சில மணித்துளிகள் மறுபக்கத்தில் அவளிடமிருந்து பதில் வராதிருக்க, தன்னை ஆசுவாசப்படுத்தியவனாய், “உனக்கு உடம்புக்கு எதுவும் பண்ணுதா சிந்து?” எனக் கேட்டான்.

“எனக்கு என்ன ஆனா உங்களுக்கு என்ன! உங்க வேலையவே கட்டிக்கிட்டு அழுங்க” என்றவளாய் இணைப்பைத் துண்டித்திருந்தாள் சிந்து.

பெருமூச்சுடன் கைபேசியை எடுத்து பார்த்தவன், ‘இருக்கிற பிரச்சனைல இவ வேற’ என்று மனதிற்குள் புலம்பியனாய் அங்குமிங்குமாக நடந்து தன்னைக் கட்டுக்குள் கொண்டு வந்தவன்,

“அன்னம் நீ வீட்டுக்குக் கிளம்பு! இன்னிக்கு நைட் ஷிப்ட் வர வேண்டாம். இதை நாங்க சால்வ் பண்ணிட்டு சொல்றோம். உன்னைப் பார்க்க பார்க்க கடுப்புல ஏதாவது திட்டிடுவேனோனு இருக்கு! நீ கிளம்பு” என்றான் இன்பா.

அவளை இந்தப் பிரச்சனையிலிருந்து தள்ளி வைத்து காப்பாற்றுவதற்காகவும் அவ்வாறு கூறினான் இன்பா.

“ஆமா அன்னம்! இன்பா சொல்றது சரி தான். நீ கிளம்பு” என மோகனும் உரைக்க,

“சாரி இன்பா! இப்ப என்னால உங்களுக்கு ரொம்பப் பிரச்சனைல” அழுகை குரலில் அன்னம் கேட்க,

“ஆமா தான்! ஆனா சமாளிச்சிடலாம். இது கூடச் சமாளிக்க முடியலைனா அப்புறம் நான் என்ன மேனேஜர். யூ ஜஸ்ட் கோ அண்ட் டேக் ரெஸ்ட்” என்று அவளை அனுப்பி வைத்தான். சரியெனக் கிளம்பி விட்டாள் அன்னம்.

மோகனிடம் வந்த இன்பா, “எப்பவும் அவளை நீ காப்பாத்திட்டே இருக்கனும் நினைக்காத! அவ வேலையை அவ பார்க்கட்டும்” முறைத்தவாறு உரைத்தவனாய் சென்று விட்டான்.

அன்றிரவு தாமதமாக வீட்டிற்குச் சென்றான் இன்பா.

யுகேந்திரன் அறையில் உறங்கிக் கொண்டிருக்க, கதவைத் திறந்த சிந்துவைப் பார்த்தவன், “சாப்பிட்டியா சிந்து” எனக் கேட்டவனாய் உள்ளே நுழைந்தான்.

ஹ்ம்ம் என்றாள் அவள்.

“உங்க ஆபிஸ்ல இஷ்யூ சரி ஆகிடுச்சா?” என்றவள் கேட்க, அவளிடம் நடந்ததைக் கூறியவாறே அறைக்குள் சென்றவன்,

“நீ தூங்கு சிந்து! நான் போட்டுச் சாப்பிட்டுக்கிறேன்” என்றவனாய் மாற்றுத்துணி எடுத்துக் கொண்டு ஓய்வறைக்குள் நுழைந்து கொண்டான்.

அவளிடம் மாலை கோபமாகப் பேசியது கூட மறந்திருந்தது அவனுக்கு. அவளுக்குமே அவனின் பேச்சில் அது புரிந்தது.

அவனுக்கான உணவை உணவு மேஜை மீது எடுத்து வைத்தவளாய் அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்தாள் சிந்து‌.

குளித்து முடித்து வந்தவன் மேஜை மீது தலை சாய்த்திருந்தவளை நோக்கி, “உன்னைப் படுக்கச் சொன்னேன்ல! எனக்காக ஏன் வெயிட் செஞ்சிட்டு இருக்க” எனக் கேட்டவாறு அமர்ந்தான்.

ஏதும் பதிலிறுக்காது, அவனுக்குத் தட்டு எடுத்து வைத்து உணவை அவள் பரிமாற, அவளின் இந்த வார்த்தையற்ற மௌனத்திலும் முகச்சுணகத்திலும் தான் மாலை அவளிடம் கோபமாகப் பேசியது நினைவுக்கு வந்தது அவனுக்கு.

தலையில் தட்டிக் கொண்டவனாய், “சாரி சிந்து! ஆபிஸ்ல செம்ம டென்ஷன்ல இருக்கும் போது போன் செஞ்சியா அதான் கோபமா பேசிட்டேன்” என்றவாறு அப்படியே இட்லியை எடுத்து அவளுக்கு ஊட்டி விட, அவனை முறைத்தவாறே வாயில் வாங்கிக் கொண்டாள்.

“இன்னும் ஏன் முறைப்பு” என்றவனாய் அவளுக்கு ஊட்டி விட்டவாறே அவனும் உண்ண, “அத்தை போன் செஞ்சாங்க” என்றாள்.

‘ஆஹா இப்ப என்ன ஏழுரையைக் கூட்டினாங்கனு தெரியலையே’ எண்ணியவாறு, “என்ன சொன்னாங்க?” எனக் கேட்டான்.

பிறந்தநாள் விழாவிற்குத் திவ்யா அழைத்ததை உரைத்தவள், அத்தையும் அதற்காகத் தான் அழைத்ததாகக் கூறினாள்.

அவள் கூறி முடித்த நொடி, “அதெல்லாம் ஒன்னும் போக வேண்டாம் சிந்து!” என்றான் இன்பா.

“ஆமா நீங்க இப்படித் தான் சொல்லுவீங்கனு எனக்குத் தெரியும். நீங்க எல்லாச் சொந்தத்துக்கிட்ட இருந்தும் ஒதுங்கி இருக்கிறதுக்குக் காரணம் நான் தான்னு உங்க அம்மா என்னைத் திட்டுறாங்க. நாளைப்பின்ன நம்ம பிள்ளைக்கு உறவுனு யாரும் வேண்டாமா! உங்க அண்ணன் மகனும் இவனும் அண்ணன் தம்பி தானே! இப்படியே ஒதுக்கி வச்சி வளர்த்துட்டா அவங்க எப்டி ஒட்டுறவா இருப்பாங்க” ஆதங்கத்துடன் அவள் பொரிந்து தள்ள,

“என் அண்ணி உன்னை அவங்க வீட்டு வேலைக்காரி மாதிரி நடத்துறதைலாம் என்னால பார்த்துட்டு இருக்க முடியாது சிந்து. நீயும் அங்க நம்ம பார்ட்டிக்கு போய்ருக்கோம்றதையே மறந்துட்டு வேலையை இழுத்து போட்டு செய்வ! அவங்க உன்னை வேலை செய்ய விட்டுட்டு மத்தவங்ககிட்ட அரட்டை அடிச்சிட்டு இருப்பாங்க. இப்படி அவங்க தேவைக்கு நம்மளை யூஸ் செஞ்சிக்கிற உறவுலாம் நம்ம பையனுக்கு உறவாவே இருக்கத் தேவையில்ல சிந்து” என்று ஆத்திரமாக உரைத்து விட்டு அவன் எழும்ப, ‘இதுவும் எனக்காகத் தானா!’ இன்ப அதிர்ச்சியுடன் இன்பாவைப் பார்த்திருந்தவள், அவன் கையைப்பிடித்து அமர்த்தியவளாய்,

“எதுக்கு இப்ப சாப்பாட்டுல கோபத்தைக் காண்பிக்கிறீங்க. ஒழுங்கா எல்லாத்தையும்‌ சாப்பிடுங்க” என்று மேலும் இட்லிகளை அவனது தட்டில் அவள் வைக்க, சட்னியைத் தொட்டு அவளுக்கு ஊட்டியவனைக் காதலுடன் பார்த்தவள் சட்னி பூசிய உதட்டுடன் அவனது கன்னத்தில் அழுந்த இதழ் பதித்திருந்தாள்.

மென்னகையுடன் கன்னத்தைத் தடவியவாறு அவளைப் பார்த்தவன், “எதுக்கு இந்த முத்தம்? உன்னைத் திட்டினதுக்கா?” எனக் கேட்டான்.

அவனின் புஜத்தைப் பற்றியவாறு தோளில் சாய்ந்தவள், “இன்னிக்கு நான்‌ ரொம்பச் சந்தோஷமா இருக்கேன்” என்றாள்‌.

“ஏன் நீங்க என்கிட்ட சொல்லலை?” என்றவாறு நிமிர்ந்து அவன் முகம் பார்த்தாள்.

“என்ன சொல்லலை?” கேள்வியுடன் அவளை அவன் நோக்க,

“எனக்காகத் தான் உங்கம்மாகிட்ட பேசலைனு ஏன் சொல்லலை? அன்னிக்கு நான் உங்க முதல் காதலுக்காகத் தான் பேசாம இருக்கீங்கனு சண்டை போடும் போதும் கூடச் சொல்லலை!” ஆதங்கத்துடன் கேட்டாள்.

“அன்னிக்கு எங்க என்னைப் பேச விட்ட நீ?” எனச் சிரிப்புடன் கேட்டான் அவன்.

சற்று நேரம் அமைதியாக அவன் தோள் சாய்ந்திருந்தவள், “ஆனாலும் அம்மாகிட்ட பேசாம இருக்கிறது தப்புங்க. எனக்காகத் தான் நீங்க பேசாம இருக்கீங்கனு முன்னாடியே தெரிஞ்சிருந்தா அப்பவே இதைச் சரி செஞ்சிருப்பேன்” என்றவள் நிமிர்ந்து அமர, எழுந்து சென்று தான் சாப்பிட்ட தட்டை கழுவி வைத்து விட்டு அவளருகில் வந்து அமர்ந்தான் இன்பா.

“உனக்காகனு இல்லை சிந்து! என்னை அவங்க ஆட்டுவிக்கிற பொம்மைனு நினைச்சிட்டாங்களானு கோபம். முதல் காதலே அவங்களுக்காகத் தான் வேண்டாம்னு விட்டேன். அடுத்துக் கல்யாணம் செஞ்சி இருக்கப் பொண்டாட்டியை என்னைக் கேட்காம அனுப்ப பார்த்ததுல அவ்ளோ கோபம். அப்ப உன்னை அனுப்பிட்டு என்னைச் சமாளிச்சி அவங்களுக்குப் பிடிச்ச பொண்ணா பார்த்து கட்டி வச்சிடலாம்ற நினைப்பு தானே அவங்களுக்கு! நான் என்ன அவங்க அடிமையா! ஆமா அம்மானா எனக்கு ரொம்பப் பிடிக்கும். அதுக்காக அவங்க இஷ்டத்துக்கு என்னை இழுக்கலாம்னு பார்த்தா ரப்பர் பேண்ட் ரொம்ப இழுத்தா என்னாகும்! கட்டாகி தானே போகும். அப்படித் தான் போய்டுச்சு எங்க உறவு” கூறியவனின் குரலில் அத்தனை வலி! அவனும் அன்னையுடன் பேசாததில் வேதனையுடன் இருக்கிறான் என்றே இன்று தான் புரிந்தது சிந்துவிற்கு.

நிஜமாகவே என்ன சொல்லவெனத் தெரியவில்லை சிந்துவிற்கு. அமைதியாக அவனைப் பார்த்திருந்தவள் பேசத் தொடங்கினாள்.

“ஆனாலும் அம்மா அம்மா தானே! உங்களை எவ்ளோ ஆசை ஆசையா வளர்த்திருப்பாங்க‌. உங்களுக்காக என்னலாம் தியாகம் செஞ்சிருப்பாங்க.

இப்ப கூட என்‌ மனசு என் அம்மாவை தேடுதுப்பா! ஒருத்தங்க இருக்கும் போது நாம ஒதுக்கி வைக்கிற வலியை விட அவங்க இல்லாதப்ப இப்படிச் செஞ்சிட்டோமேனு குற்றவுணர்வு கொடுக்கிற வலி நரகமா இருக்கும்ப்பா! அதுக்கு இருக்கும் போதே நம்ம மன நிம்மதிக்காக அவங்களை மன்னிச்சுடலாம். நாம என்ன அவங்க கூடயேவா இருக்கப் போறோம். அப்பப்ப போய்ட்டு வர தானே போறோம்” என்றாள் சிந்து.

பெருமூச்சுடன் எழுந்து நின்றவன், “பார்க்கலாம் சிந்து! என்‌ மனசுக்கு எப்ப பேசனும்னு தோணுதோ அப்ப நான் கண்டிப்பாகப் பேசுவேன்” என்றவாறு அவளைக் கைப்பிடித்து எழுப்பிப் படுக்கையறை நோக்கிச் செல்ல, “சரி இந்த ஞாயித்துக்கிழமை உங்க அண்ணா வீட்டுக்குப் போகலாம் தானே! அது உங்களுக்கு ஓகே தானே” எனக் கேட்டாள்.

“இல்ல சிந்து! இந்தச் சண்டே என் டீமையும் செல்வா டீமையும் சேர்த்து கூர்க்கு டீம் அவுட்டிங் கூட்டிட்டு போகலாம்னு பிளான் செஞ்சிருக்கோம். ஹெச் ஆர்கிட்ட பட்ஜட் டிஸ்கஷன் போய்ட்டு இருக்கு! உன்னை இந்த நிலைமைல எங்கேயும் கூட்டிட்டு போக முடியாது! கீதாக்காவை உனக்குத் துணையா கூட இருக்க வச்சிட்டு தான் நான் போகனும்னு நினைச்சிருக்கேன்” என்றான்.

அவன் அலுவல் வேலையாய் இவ்வாறு அவளை தனித்து விட்டு சென்றிருக்கிறான் என்பதால் அது அவளைப் பெரியதாய் பாதிக்கவில்லை. அவனது தாயை எப்படி சமாளிப்பது என்கின்ற அச்சம் தான் மேலோங்கியிருந்தது அவளுக்கு.

“அய்யோ உங்க அம்மாகிட்ட வரோம்னு சொல்லிட்டேனே! நாளைக்கு என்னை வச்சி செய்யப் போறாங்க. எனக்காகவாவது உங்க அம்மாகிட்ட பேச கூடாதா! பிரச்சனையை விட்டு ஒதுங்கி போறதை விட அதுக்கான தீர்வையோ சமாளிப்பையோ கண்டுபிடிச்சி வாழப் பார்க்கனும்ப்பா! எப்படிச் சமாளிக்கலாம்னு யோசிக்காம நீங்க இப்படி ஒதுங்கி இருக்கிறது தப்புங்க” அவனின் சட்டையைப் பற்றியவளாய் அவள் கூற,

“டோண்ட் ஃபோர்ஸ் மீ சிந்து” சற்று காட்டமாகவே கூறினான்.

“சரி உங்க இஷ்டம்” என்றவாறு உதட்டை சுழித்தவளாய் படுக்கையில் அவள் படுத்துக் கொள்ள, அவளின் நெற்றியில் முத்தமிட்டவனாய், “குட் நைட்” என்றவன், “ஆமா இன்னிக்கு வேலை செய்றவங்க வந்தாங்களா?” எனக் கேட்டவாறு மகனின் மறுபுறம் சென்று படுக்க, சிந்து சிறிது நேரம் வீட்டிற்குப் புதிதாய் வேலைக்கு வந்தவரைப் பற்றியும் மற்ற விவரங்களையும் மெல்லிய குரலில் அவனிடம் விவரிக்க, அவனும் அலுவலகத்தில் நடந்ததை அவளிடம் கூறியவனாய் உறங்கிப் போனான்.

மறுநாள் காலை சிந்து வாந்தி எடுத்து விட்டு அமர்ந்திருந்த வேளையில் அவளின் கைபேசி அலறியது.

அதனை எடுத்து வெறித்தவாறு பார்த்திருந்தவளை நோக்கி வந்த இன்பா, “போன் எடுக்க வேண்டியது தானே! அதை ஏன் அப்படியே பார்த்துட்டு இருக்க” என்றவனாய் வாங்கிப் பார்க்க, அவனது அன்னை தான் அழைத்திருந்தார்.

“அம்மா தான் கூப்டுறாங்க! பேச வேண்டியது தானே” என்று அவளிடம் கொடுத்த போது அழைப்பு நின்றிருந்தது.

“உங்களுக்கு என்ன! நீங்க பாட்டுக்கு பேசுனு சொல்லிட்டு போய்டுவீங்க. திட்டு வாங்க போறது நான் தானே” அவள் புலம்பும் போதே மீண்டுமாய்க் கைபேசி ஒலிக்க, இன்பாவின் கைப்பற்றித் தன்னருகே அமர வைத்தவள்,

“இன்னிக்கு உங்கம்மா பேசுறதை முழுசா கேளுங்க! அப்ப தான் அவங்ககிட்ட நான் படுற பாடு புரியும் உங்களுக்கு” என்றவளாய் கைபேசியை ஸ்பீக்கரில் போட்டவள் தனது இரு கன்னங்களையும் உள்ளங்கையில் தாங்கியவளாய் அமர்ந்து கொண்டாள். அமைதியாக அவளருகில் அமர்ந்தான் இன்பா.

“என்னம்மா சொல்றான் உன் புருஷன்! ஞாயித்துக்கிழமை தூயவன் வீட்டுக்கு வரதை பத்தி அவன்கிட்ட சொல்லிட்ட தானே” என்று கேட்டார் பூர்ணம்.

“அத்தை அது வந்து.. அவருக்கு ஆபிஸ்ல டீம் அவுட்டிங் இருக்காம்! கூர்க்குப் போறாங்களாம்! வர முடியாதுனு சொல்லிட்டாரு அத்தை” சற்று தயங்கியவாறே அவள் கூற,

“எனக்குத் தெரியும்! அவனே வரேன்னு சொல்லிருந்தாலும் நீ தான் அவனைக் கூர்க்குப் போறது தான் முக்கியம்னு சொல்லி திசை திருப்பி விட்டிருப்ப! எங்க குடும்பத்தைப் பிரிக்க வந்தவத் தானே நீ! புருஷன்காரன் அம்மாகிட்ட பேசாம இருக்கானே! அவனைச் சமாதானம் செஞ்சி பேச வைப்போம்னு என்னிக்காவது நினைச்சிருக்கியா! அவன் கோபத்துல கூடக் கொஞ்சம் எண்ணெய் ஊத்தி எங்க கூடச் சேராமலே வச்சிக்கனும்னு தானே நீ பார்க்கிற” ஆத்திரத்துடன் அவர் பேசிக் கொண்டே போக,

ஏற்கனவே வாந்தி எடுத்துச் சோர்ந்திருந்த முகத்தினில் சோகம் வழிந்தோட கண்களில் தேங்கிய கண்ணீருடன் அமைதியாக அவனைப் பார்த்தாள் சிந்துஜா.

தொடர்ந்த அவரின் ஐந்து நிமிட வசவுகளையும் பழிச்சொல்லையும் தாங்க முடியாதவனாய், “அம்மா! அடுத்த வாரம் கெட் டூகதர் வச்சிக்கலாம். அண்ணா வீட்டுக்குலாம் வர முடியாது. நம்ம காஞ்சிபுரம் வீட்டுக்கு வரேன். அவங்களை அங்க வர சொல்லிடுங்க. சாப்பாடுலாம் வேலைக்கு ஆளு வச்சிக்கோங்க. இல்லனா ஹோட்டல்ல ஆர்டர் செஞ்சிக்கோங்க. என் பொண்டாட்டி அங்க வந்துட்டு யாருக்கும் சமைச்சு போட்டுட்டு இருக்க மாட்டா! இப்ப மட்டுமல்ல எப்பவுமே நாங்க வரோம்னா சமைக்க ஆளு வச்சிடுங்க. இதுக்கெல்லாம் உங்களுக்கும் உங்க மூத்த பையன் பொண்டாட்டிக்கும் சம்மதம்னா மட்டும் சொல்லுங்க! அடுத்த வாரம் மீட் செய்யலாம்”

திடீரெனக் கேட்ட மகனின் குரலில், “இன்பா” இன்ப அதிர்ச்சியுடன் அழைத்திருந்தார் பூர்ணம்.

“நிஜமாவா இன்பா?” என்றவர் கேட்க,

“நிஜமா தான்மா! நான் சொன்னதுக்குலாம் சம்மதம்னா எனக்கு அங்க வரதுக்கு சம்மதம்” என்றவனாய் அவரின் பதிலுக்குக் கூடக் காத்திராது இணைப்பைத் துண்டித்தான் இன்பா.

கண்களுக்குள் இருந்த கண்ணீர் காற்றோடு கரைந்திருக்க வியப்பில் விரிந்த விழிகளுடன் ஆச்சரியமும் இன்ப அதிர்ச்சியுமாக அவனைப் பார்த்திருந்தாள் சிந்துஜா.

“நிச்சயமாக இது உனக்காக மட்டும் தான்! நேத்து நீ தானே சொன்ன! ஒதுங்கி போறதை விட்டுட்டு எப்டி சமாளிக்கலாம்னு பாருங்கனு! எனக்காக இனி நீ அம்மாகிட்ட திட்டு வாங்க வேண்டாம்” என்றவனாய் விரிந்திருந்த அவளின் கண் இமைகளில் இதழ் பதித்துச் சிரித்தான்.

அதீத மகிழ்ச்சியில் அவனது தோளில் முகம் புதைத்தவளாய் தன்னவனைத் தன்னோடு சேர்த்து இறுக அணைத்திருந்தாள் சிந்துஜா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!