Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் செல்ல சீமாட்டி

என் செல்ல சீமாட்டி 13

அத்தியாயம் 13 

காலை ஐந்தரை மணி, வெள்ளை மேகங்கள் அனைத்தும் வானில் இருந்து நிலத்திற்கு வந்தது போல இருந்தது. எங்கே பார்த்தாலும் பனி மூட்டைகள். அந்தப் பனி மூட்டைகளுக்கு நடுவில், சிகப்பு நிற ஸ்வட்டரும் குல்லாவும்  அணிந்துகொண்டு சொக்கன் டீ கடை வாசலில் கோலம் போட்டு கொண்டிருந்தாள் அருணாளினி.



Advertisement

அச்யுதம் கேஶவம் கிருஷ்ண தாமோதரம்

ராம நாராயணம் ஜானகி வல்லபம்

அச்யுதம் கேஶவம் கிருஷ்ண தாமோதரம்

Advertisement

ராம நாராயணம் ஜானகி வல்லபம்

Advertisement

மிதமான ஒலியில் பஜனை பாடல்கள் இனிமையாக ஒலித்துக்கொண்டிருந்தது.

ஏற்கெனவே சுத்தமாக இருந்த கடையை மீண்டும் ஒருமுறை சுத்தப்படுத்திவிட்டு, அடுப்பையும் துடைத்து எல்லாம் எடுத்து அந்தந்த இடத்தில் வைத்தான் கந்தகுரு. செப்பு பாய்லரை தினமும் இரவு புளி போட்டு நன்றாக விளக்கி எடுத்து வைத்துவிடுவான். அதை எடுத்து அடுப்பினில் வைத்து, கை  நிறைய விபூதி  எடுத்து அதன் மேலே பட்டை போட்டு, நடுவில் சந்தனம் வைத்து அழகாக குங்குமப் பொட்டும் வைத்தான். பண்ணையில் இருந்து சரியாக அந்த நேரம் பாலும் வந்து இறங்கியது.

Advertisement

அங்கே இருந்த பிள்ளையார் படத்திற்கு பூ வைத்து, விளக்கேற்றி, அடுப்பை பற்ற வைத்தான்.

“செல்லம்மா.. சொன்ன பேச்சை கேக்கவே மாட்டேங்கிற? எவ்வளவு நேரம் பனியில் நின்னு கோலம் போட்டுட்டு  இருப்ப? சீக்கிரம் உள்ளே வா..” என்று மனைவியிடம் பேசிக்கொண்டே தன் தினசரி வேலைகளை தொடர்ந்தான்.

“இதோ ஆச்சு“ என்று அழகாக கோலத்தை முடித்துவிட்டு கடையினுள்  நுழைந்தவளை ஏலக்காய் டீ மணக்க மணக்க வரவேற்றது. முதல் ஸ்பெஷல் டீ அருணாவிற்கு தான் தினமும்.

காலை ஆறு மணி முதல் ஒன்பது மணி வரையும், மாலை நான்கு மணி முதல் ஏழு மணி வரையும் தான் கடை திறந்திருக்கும். மற்ற நேரங்களில் தேவையான  பொருட்களை வாங்குவது, அதை சரி பார்த்து எடுத்து வைப்பது, டெலிவரி ஆர்டர்கள் பிடிப்பது, ஸ்னாக்ஸ் வாங்குவது, அதை சரி பார்ப்பது, கணக்கு பார்ப்பது, இப்படி பல வேலைகள் இருந்தது. 

இவர்கள் காலையும் மாலையும் வாங்கும் பால் மிச்சம் இருந்தால், அதை தயிராக மாற்றி மதிய நேரத்தில் லஸ்ஸி, மசாலா மோர் என்று விற்க ஏற்பாடு செய்தனர். அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்தது.

  

கடை ஆரம்பித்து இரண்டு மாதங்கள் தான் ஆனது என்றால் நம்பவே முடியவில்லை. கந்தகுரு கடையுடன்  அவ்வளவு பொருந்தி போனான். நம்மூரில் உள்ளதை போல கடையை அமைத்திருந்தான். ஆங்கிலம், ஹிந்தி என்று இரண்டு மொழிகளிலும் தினசரி நாளிதழ்கள் வாங்கி வைத்தான். இரண்டு பெஞ்சுகள் போடப்பட்டிருந்ததது. காலையில் தினமும் இதமான பக்தி பாடல்கள், அதன் பின் மெலடி பாடல்கள் என்று பாட்டும் மெல்லிய சத்தத்தில் வைத்திருப்பான்.

குருவின் சிரித்த முகமும், கடையின் தெய்வீக சூழலும் அனைவர் மனதையும் கவர்ந்தது. சொக்கன் கடை தேநீரின் சுவை குடிப்பவர்கள் நாவினில் மட்டுமல்லாமல் மனதிலும் நிலைத்து நின்றுவிடும். பம்பரமாய் தான் சுழல்வான் குரு. நிறைய வாடிக்கையாளர்கள் வரத்தொடங்கினார்கள்.

உதவிக்கு இரண்டு பேர்களை வேலைக்கு சேர்த்துக்கொண்டான். டெலிவரி செய்ய ஒரு பையன். பாட்டி வீட்டில் வேலை செய்யும் ருக்மணி மதியம் ஒரு முறையும் இரவு ஒரு முறையும் வந்து பாத்திரம் கழுவி விட்டு செல்வார். அவரது தம்பி கோலு, கொஞ்சம் மனநலம் சரி இல்லாதவன். இருபத்தி ஐந்து வயது இருக்கும். மந்த புத்தி என்று சொல்வார்களே, அது போல. லேர்னிங் டிஸ்அபிலிட்டி. சுயமாக யோசித்து செய்ய தெரியாது. ஆனால் சொன்னதை கேட்டு செய்வான். அருணாவிடம் ஒரு உதவியாக தான் ருக்மணி கேட்டிருந்தார். 

“அருணா, கோலுவை உங்க கடையில் வைத்து பார்த்துக்கொள்ள முடியுமா? சொல்ற வேலையை செய்வான். நான் வேலைக்கு வரும் போது வீட்டில் சும்மாதான் இருக்கிறான். ஆண் துணை இல்லாத வீட்டில் துணையாக இருக்கட்டும் என்று எங்களோடு வைத்திருக்கிறேன். அவனுக்கும் என்னை விட்டா வேற யாரும் இல்லை” என்று.

அமைதியான முகம், கள்ளங்கபடமில்லா மனம் என்று பார்த்ததும் குருவிற்கு கோலுவை பிடித்து விட்டது.

‘பையா பையா’ என்று குருவோடு ஒட்டிக்கொண்டான். கொஞ்சம் கொஞ்சமாக அவனுக்கு வேலைகளை பழக்க படுத்தி உடன் வைத்துக்கொண்டான் குரு. மாதம் அவனுக்கு சம்பளம் கொடுத்துவிடுவார்கள். முதல் மாதம் சம்பளம் கொடுத்ததும், நெகிழ்ந்து போய்விட்டார் ருக்மணி. “எங்க கோலு வேலைக்கு போய் சம்பாதிக்கிறான்” என்று பார்ப்பவர்களிடம் சொல்லி சொல்லி மகிழ்ந்தார். 

குருவின் மேலே தனி மரியாதை வந்தது அவருக்கு. பாட்டியிடமும் சொல்லி மகிழ்ந்தார்.

கோலுவிற்கு அருணா என்றால் மிகவும் பிரியம். பாபி பாபி என்று ஆசையாக பேசுவான் அருணாவிடம். அருணாவிற்கு முதலில் பழகுவதில் சிரமம் இருந்தாலும், பின் அவனை புரிந்து கொண்டு அதற்கேற்றார் போல அவனுடன் பேசி பழகுவாள்.

ஒன்றிரண்டு ஆட்கள் வர தொடங்கவுமே, “நான் வீட்டுக்கு போறேன் குரு “ என்று அருணா டீயை குடித்துவிட்டு கிளம்பிவிட்டாள். 

அவர்கள் வீடு சிறியதாக இருந்தாலும், அருணா மிகவும் நேர்த்தியாக வைத்திருந்தாள். ஹாலில் அவள் வளைகாப்பிற்கு எடுத்த புகைப்படத்தை மாட்டி வைத்திருந்தனர். பழகுவதற்கு மிகவும் இனிமையான பெண் அருணா. அதனால் அக்கம்  பக்கம் என்று அனைவரும் நட்புடன் பழகினார்கள். அந்த புகைப்படத்தை பார்த்ததும் சிலர் குழந்தை எங்கே என்று கேட்டனர். பின் விஷயம் அறிந்து அத்தனை அனுசரணையாக இருந்தனர் அனைவரும்.

இரண்டு மாடிகள் கொண்ட குடி இருப்பு. கீழே நான்கு வீடுகளும் மேலே நான்கு வீடுகளும் இருந்தது. பின் பக்கம் அனைவரும் புழங்கும் கொல்லைப்புறம். பிறந்தது முதலே வசதியாக வாழ்ந்த அருணாவிற்கு ஆரம்ப நாட்கள் கஷ்டமாக தான் இருந்தது. அதுவும் கையில் துணி துவைப்பது.

கொள்ளை புறத்தில் துணி துவைப்பதற்கு ஒரு கல் இருந்தது. அங்கே சில பெண்கள் துணி துவைப்பதை பார்த்து முதலில் பயந்தே போனாள் அருணா. இங்கே வந்த புதிதில் ஒரு நாள், ஒரு மத்திய வயது பெண்மணி, கையில் ஒரு மர கட்டை வைத்து துணிகளை அடி  வெளுத்தார். பதறி போய் அருணா” தீதி.. ஏன் அடிக்கிறீங்க? உங்க வீட்டுக்காரர் சட்டை மாதிரி இருக்கே, அவர் கூட சண்டையா? அவரை அடிக்க முடியாமல், அவர் சட்டையை அடிக்கிறீங்களா?” என்றாள்.

அருணா கூறியதை கேட்ட அந்த பெண்மணி கலகலவென சிரிக்க தொடங்கினார். “உங்க ஊர்ல யாரும் துணி துவைத்து நீ பார்த்ததில்லையா? பாரு அவர் சட்டைல எவ்வளவு அழுக்கு. இப்படி நல்லா அடிச்சு துவைச்சா தான் அழுக்கு போகும். இது துவைக்கிறதுக்காக இருக்க கட்டை “ என்று கூறி, அவர் எப்படி சோப் போட்டு, அழுக்கா இருக்கும் துணிகளை எப்படி துவைப்பது என்று இவளுக்கு கற்று கொடுத்தார். இவளுக்கும் அவரே ஒரு கட்டையும் வாங்கி கொடுத்தார்.

“எங்க வீட்ல மெஷின்ல தான் துவைப்போம். கைல துவைக்கிறவங்களும்  கல்லில் அடிச்சு தான்  துவைப்பாங்க, இப்படி கட்டை எல்லாம் இல்லை” என்று கூறி அவரிடம் நட்பாகி விட்டாள்.

இப்படி கணவனும் மனைவியும் தங்கள் புது வாழ்க்கையை சுவாரசியமாக வாழ தொடங்கினார்கள்.

 இரவு கடை அடைத்ததும், கணவன் மனைவிக்கான ஏகாந்த நேரம்.

“செல்லம்மா, இன்னிக்கு நாள் எப்படி போச்சு?” 

“இன்னிக்கு சூப்பரா போச்சு. பாட்டி பேத்திக்கு ஆண் குழந்தை பிறந்திருக்காம். பாட்டியை கையில பிடிக்க முடியலை. பாட்டியும் நானும் சேர்ந்து பாதாம் அல்வா செஞ்சோம். உங்களுக்கும் கொண்டு வந்தேன். இருங்க போய் எடுத்துட்டு வரேன்.” 

“சூப்பர் செய்தி தான். பாட்டி அப்ப ஊருக்கு போகணும் இல்ல?”

ஒரு வில்லல் அல்வாவை குருவிற்கு ஊட்டிவிட்டு,  “ஆமா, அடுத்த வாரம் அவங்க மருமகன் வந்து கூட்டிட்டு போவாராம். ஒரு மாசம் அங்க தான் பாட்டி“ என்றாள் கொஞ்சம் வருத்தமாக.

“அல்வா சூப்பரா இருக்கு அருணா. பாட்டிக்கும் ஆசையா இருக்கும் இல்ல. நம்ம கூடவே இருக்க சொல்ல முடியுமா? எதுக்கு வருத்தம்” என்று கூறி, ஒரு வில்லல் அல்வாவை அருணாவிற்கு ஊட்டி விட்டான்.

“புரியுது.. ஆனாலும் அவங்க இல்லாம இந்த ஊர் நமக்கு அன்னியம் தானே”

“ஹல்த்வானி இப்ப நம்ம ஊரு செல்லம்மா, நீ சொன்னப்ப நான் உணரல்ல. இப்ப இந்த ஊர், நம்ம வீடு, நம்ம கடை எல்லாம் நம்ம உணர்வோடு சேர்ந்த மாதிரி இருக்கு”

“ஆஹான்.. சொக்கரே.. அப்ப நான்..”

“நீ என் கண்ணோட.. மனசோட… உடலோடு..  உணர்வோடு… உயிரோட.. கலந்து நிக்குற செல்லம்மா..” என்று மயக்கும் குரலில்  கூறி தன செல்லமாவோடு இரண்டற கலந்துவிட்டான்.

அதற்கு மேலே அங்கே பேச்சுகளுக்கு வேலை இன்றி போனது. தித்திக்கும் இரவாகி போனது இருவருக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!