Skip to content
Post Views: 7,862
மேல் தளத்தில் சிறிது நேரத்திற்கு முன்பு இருந்த இறுக்கமான சூழல் மாறி அனைத்து முகமும் லேசான புன்னகையின் சாயல் கொண்டு இயல்பாகி இருக்க,
அதற்கு முற்றிலும் நேர் மாறான நிலையில் இருந்தாள் சம்யுக்தா.
Advertisement
இன்னும் பக்குவம் கொள்ளாத.. கல்லூரி மட்டுமே முடித்த இளம் பெண்ணால்.. அந்த கனமான சூழலில் இருந்து அவ்வளவு சுலபமாய் மீள முடியவில்லை.
முகுந்தின் உடலில் கண்ட தழுப்பும், அவன் மூச்சுக்கு திணறி தன் கழுத்து வளைவில் விசும்பிய நிலையும்.. அவளால் தாங்கிக் கொள்ளவே இயலவில்லை.
Advertisement
Advertisement
பெண்களுக்கே உரித்தான தாய்மை உணர்வு அது.
பெற்றாலும், பெறாவிட்டாலும் அழும் குழந்தையை ஆதரவாய் அள்ளி ஆறுதல் தர உந்தி தள்ளும் சக்தி தானே தாய்மை..
Advertisement
அது ஏற்கனவே.. வெண்பா விசயத்தில் அதீதமாய் கொண்ட பெண்ணவளுக்கு முகுந்தை வேறாக பார்க்க முடியவில்லை.
கூடவே இருக்கும் வெண்பா அழுது அவள் அதிகமாக கண்டதே இல்லை.
கீழே விழுந்தால் கூட, “சாக்லேட் வாங்கி தர்றேன்..” என சொன்னால், நொடியில் அழுகையை நிறுத்தி, “வா போலாம்..” என நிற்பாளே.
ஆனால் அதே வயதை கொண்ட ஒரு சிறு பிள்ளை தாங்கும் வலியா அது..?
அதை எப்படி அவன் கடந்திருப்பான்..? என்ற எண்ணமே அவளைப் படுத்தி எடுக்க,
அதில் அவனை பார்த்துக்கொள்ளவென வந்தவர்களிடம் அவன் பட்ட பாடு வேறு.. அவளின் சிந்தனையை ஆக்ரமிக்க,
அவளால் ஒரு வாய் உணவை கூட உண்ண முடியாமல் தவித்தாள்.
உணவு கூடத்தில்.. ஆட்கள் மத்தியில் மனபாரம் குறைய கண்ணீரை கூட சிந்த முடியாத நிலை அவளை பாடாய் படுத்த.. திறந்த உணவு டப்பாவை வெறித்து பார்த்து இருந்தாளே அன்றி ஒரு வாய் கூட உண்ணவில்லை.
அவள் சாப்பிட சொல்லும் போதே உணவு நேரம் பாதி கடந்திருக்க, இப்போது உணவு வேளையே முடிந்து போனதால்.. அங்கு ஒருவரும் இல்லாத நிலையில்.. அவளின் நிலையை கண்டு கேட்க தான் எவருமில்லையே..!
எவ்வளவு நேரம் அப்படியே இருந்தாளோ..! ஒருகட்டத்தில், சுதாரித்து சுற்றம் பார்த்தவள்.. அதை அப்படியே மூடி வைத்துவிட்டு தண்ணீரை மட்டும் குடித்து வயிற்றை நிரம்பிக்கொண்டு தனக்காக கொடுத்த வேலையை பார்க்க அவனின் அறைக்குச் சென்றாள்.
ரியான் சொன்ன எல்லாவற்றையும் முயன்று.. தன் மனதில் கொண்டு வந்தவள் சிரத்தையுடன் அதை செய்ய துவங்கினாள்.
அது கூட முகுந்துக்காக தான்..
ஆம்.. அவனுக்காக தனது வேலையை தூக்கி போட்டுவிட்டு, இங்கு வந்த ரியான்.. இந்த தொழில் போட்டி நிறைந்த உலகில்.. நிலைத்து நின்றால் தானே முகுந்துக்கு நல்லது.
இந்த எண்ணம் அவளை ஊக்கப்படுத்த தன்னால் முடிந்த அனைத்தையும் அந்த கம்பெனியின் வளர்ச்சிக்கு செய்தே தீர வேண்டும்.. என்ற முடிவோடு.. ரியான் கொடுத்தை செய்ய ஆரம்பித்தவளுக்கு நேரம் சென்றதே தெரியவில்லை.
ரியானும், சந்தீப்பும் மற்ற டீம் முடித்த ப்ராஜெக்ட் பற்றிய விவரங்களையும், அவர்களின் டெமோ பார்த்து.. அதில் எதாவது மாற்றம் உள்ளதா..? என சரிபார்த்துவிட்டு,
புதிதாக ஆரம்பித்துள்ள ப்ராஜெக்ட் பற்றிய கலந்தாய்வு மாலை இருக்க அதை பற்றிய பேச்சு.. எனச் சென்று கொண்டிருக்க, சம்யுக்தா பற்றிய சிந்தனையே இருக்கவில்லை.
சம்யுக்தாவின் அறிவுக்கு ரியான் கொடுத்தது அவ்வளவு சுலபமாக செய்து விட முடியாதது தான்.. அவளின் திறனை சோதனை செய்யவென கொடுத்தது தான் அது.
ஆனால் சம்யுக்தாவினுள் புதிதாக எழுந்த வைராக்கியம்.. அவளை எப்படு பட்டாவது அதை செய்து முடித்தே தீர வேண்டும்.. என்ற உத்வேகத்தை கொடுக்க அவளும் அதிலேயே மூழ்கி போனாள்.
ஒருவழியாக முட்டி மோதி அதை செய்து முடித்து பார்க்க.. நேரம் இரவை தொட்டிருந்தது.
அதை அவசரமாக ரியானுக்கு மெயிலில் அனுப்பி விட்டு தன் உடைமைகளோடு வெளி வந்தவளுக்கு மனம் படபடக்கத்துவங்கியது.
போக்குவரத்து உள்ள சாலை தான் என்றாலும் வந்த இரண்டாம் நாளே இந்த நேரத்தில் செல்வது.. என்பது அவளுக்கு கொஞ்சம் பயத்தை கொடுக்க தான் செய்தது.
ஒருவழியாக பேருந்து நிலையம் சென்று வீட்டை அடைந்தவளை தனத்தில் கோபக்குரலே வரவேற்றது.
“படுச்சு முடுச்சதும் இவளை யாருக்காச்சும் கட்டி வச்சிட்டா நிம்மதின்னு சொன்னேனா இல்லையா..?
இப்ப பாரு மணி என்ன ஆகுதுன்னு.. போனவ இப்படி வீட்டுக்கு ஒரு தகவலும் சொல்லாம.. நம்ம போன் போட்டாலும் எடுக்காம.. ஆடி அசஞ்சு வந்து நின்னா என்ன அர்த்தம்..?
எல்லாம் நீ கொடுக்கற இடம்..” என பொரிந்து தள்ள,
“ம்மா.. அதான் அவ வந்துட்டாளே.. வேலைக்கு போன இடத்துல என்ன பிரச்சினையோ..? நா பாத்துக்கறேன்.
நீங்க போய் தூங்குங்க..” என அவரை ஒருவழியாய் பேசியே சமாதானம் செய்து அவரின் அறைக்கு அனுப்பி வைத்த இனியாள்,
சம்யுக்தாவின் சோர்ந்து போன முகத்தை கண்டு அவள் கையிலிருந்த பேகை வாங்கிக்கொண்டு,
“போய் ட்ரஸ் மாத்திட்டு மூஞ்சிய கழுவிட்டு வாம்மா.. சாப்பிடலாம்..” என சொல்லி தங்களின் அறைக்குள் அனுப்பினாள்.
‘சரி..’ என்பதைக்கூட தலையாட்டலால் சொல்லிச் சென்றவளை விநோதமாக தான் பார்த்தாள் இனியாள்.
தனம் படிப்பு முடிந்து.. கல்யாணம் செய்யாமல் வேலைக்கு அனுப்பியது தவறு.. என பேசியதற்கு சம்யுக்தா எதுவும் பேசாமல் இருந்தது இனியாளுக்கு மிகுந்த ஆச்சரியத்தை கொடுத்தது.
‘கூடக்கூட வாய் பேசாவிட்டால்.. அது சம்யுக்தா இல்லையே..!’ என நினைத்தவள்,
‘வேலை பாத்து வந்த அசதியா இருக்குமோ..?’ என மனதை தேற்றி கொண்டு,
அவளின் வந்ததும் சாப்பிட வசதியாய் எல்லாவற்றையும் எடுத்து வைத்தவள்,
அவளின் லன்ச் பேக்கை ஓப்பன் செய்ய அதோ சீண்டப்படாமல் அப்படியே இருந்தது.
“சாப்பிடாம கூட அப்படி என்ன வேலை..?
ஒரு வேள அங்கே கேண்டீன்ல சாப்பிட்டிருப்பாளா..?
இல்ல.. அவ சோர்ந்த முகத்த பார்த்தாலே தெரியுது.. எதுவும் சாப்பிடலன்னு..” என புலம்பலோடு அதை குப்பையில் கொட்டிவிட்டு,
“என்ன.. இன்னுமா பேஷ் வாஸ் பண்ணிட்டு இருக்கா..?
உடம்பு எதாவது சரியில்லையா..?” என்ற குழப்பத்தோடு அவர்களின் அறைக்கு சென்றவள் கண்டது, உறங்கும் வெண்பாவை வெறித்து பார்த்து நின்ற சம்யுக்தாவையே..!
உடை மாற்றாமல்.. உள்ளே வந்த அதை நிலையில் நின்றவளை கண்டு உள்ளம் பதற, “சம்யூம்மா.. என்னம்மா..! என்னாச்சு..? உடம்பு சரியில்லையா..?
எதுக்கு பாப்பாவ இப்படி பார்த்துட்டு இருக்கே..?” என கேட்டவாரே அவளின் தோளைத்தொட,
அதுவரை அவளை அழுத்திக்கொண்டிருந்த பாரத்தை மொத்தமாக கொட்டி தீர்த்தாள் சம்யுக்தா அழுகையோடு.
அவள் சொல்லச் சொல்ல இனியாளுக்கும் மனது ஏதோ செய்ய, தானும் வருத்தப்பட்டால் தங்கையை தேற்றுவது யார்..? என நினைத்தவள்,
“சம்யூம்மா.. இங்கே பாரு.. அதான் இப்போ குழந்தை நல்லா இருக்கானே..
இப்படி மறுபடியும் ஆகக்கூடாதுன்னு தானே அந்த பையனோட அப்பாவும் இங்கேயே நிரந்தரமா வந்துட்டாரு..
அப்புறம் என்னம்மா.. அதெல்லாம் இனி அவன் சரியாகிடுவான். போ, போய் நீ முகத்தை கழுவிட்டு வா சாப்பிடலாம்.
இதுக்காக மதியமும் சாப்பிடாம உன்னை வருத்திட்டு..
அந்த குழந்தைய பெத்தவரே இதெல்லாம் செஞ்சிருக்க மாட்டார்..” என தேற்றி அனுப்பியவள்,
விரைந்து சமையலறை சென்று உணவை கொண்டு வந்தவள்.. தானே பிசைந்து அவளுக்கு ஊட்டி விட்டு தூங்க வைத்தாள்.
அவள் நன்றாக உறங்கிவிட்டாள்.. என்ற பிறகே நிம்மதி பெருமூச்சை வெளிவிட்ட இனியாளுக்கோ.. இப்போது கோபம் கொந்தளித்தது.
தாய்மையை உணர்வால் மட்டுமே அனுபவித்த சம்யுக்தாவிற்கே வலிக்கிறது.. எனும் போது,
வெண்பாவை பத்து மாதம் கரு தாங்கி, வலித்து பெற்று வளர்த்த தாயாய்.. அமிழ்தினியாளுக்கு நெஞ்சமெல்லாம் சொல்லொண்ணா வலி எழுந்தது.
அந்த வலி கொஞ்சம் கொஞ்சமாக கோபமாய் மாறி.. அதற்கு ரியானை இறையாக்க துவங்கியது.
இதுவரை வாழ்வில்.. ஒரு முறை கூட காணாத ரியானை.. மனதளவில் வெறுக்கவே துவங்கியிருந்தாள் அக்கணம் முதல்.
“ச்சே.. என்ன மனுஷன் இவன்..? குழந்தைய பெத்தா போதுமா..? அதை பாதுகாக்க தெரிய வேணாம்..!
அடுத்தவங்க மேல பழிய போட்டு என்ன பிரயோஜனம்.
முதல்ல அவன் குழந்தை மேல அவனுக்கில்ல அக்கறை இருந்திருக்கனும்.
வேலை அது எப்போதும் இருக்கும்.. பணத்துக்காக குழந்தைய தூக்கி யார்கிட்டையோ கொடுத்திருக்கான். இவனுக்கெல்லாம் குழந்தை ஒரு கேடு..” என பொறுமியவளின் கோபம்..
என்ன என்ன விளைவை உண்டாக்க போகுறதோ..?!
error: Content is protected !!