Skip to content
Post Views: 10,574
அத்தியாயம் 16
“உன்னை நம்பி நின்னுருந்தா இன்னும் தெருவுல தான் நின்னுட்டு இருந்துருக்கணும்! வரலைனா வரலன்னு கால் பண்ணி சொல்ல முடியாதா டா? உன்னையெல்லாம் பிரண்ட்டா வச்சுக்கிட்டு சுத்துறேன் பாரு! என்னை சொல்லணும்!” என தீபக் அத்தனை அத்தனை புலம்பல் கொடுக்க, கொஞ்சமும் அசையாமல் அப்படியே சோஃபாவில் அமர்ந்திருந்தான் அர்ஜுன்.
Advertisement
“கேட்டேன்ல? முக்கியமான வேலை இருந்தா பாரு! நான் வந்துக்குவேன் சொன்னேன்ல? மதியம் தான டா வர்ற! நான் ஆபீஸ்லேர்ந்து அப்படியே வந்துடுறேன்! ரெண்டு பேருமா சாப்பிட்டு அப்டியே உன்னை ட்ராப் பண்ணிட்டு நான் ஆபீஸ் போய்க்குறேன்னு சொன்ன? ஒரு மணி நேரமா நின்னேன். கால் பண்ணினேன். அதையும் எடுக்கல. சரி வேலையா இருக்க போலனு ஆட்டோ போட்டு வீட்டுக்கு வந்தா சோஃபால படுத்துட்டு இருக்க.. என்ன தான் டா உன் பிரச்சனை?” தீபக் கேட்க அப்போதும் வாய் திறக்கவில்லை அர்ஜுன்.
காலையில் அனன்யாவை பார்க்க கிளம்பிக் கொண்டிருந்த நேரம் தான் தீபக் அழைத்து ஊரில் இருந்து தான் வந்து கொண்டிருப்பதாய் கூறி இருந்தான்.
Advertisement
Advertisement
அர்ஜுனும் பேருந்து நிலையத்தில் அழைக்க தான் வந்துவிடுவதாய் கூறி இருக்க, நின்று நின்று பார்த்துவிட்டு தானே வந்துவிட்டான் தீபக்.
“இப்ப யார் என்ன பண்ணி வச்சாங்க?” குளித்து சட்டையை மாற்றி வந்து தீபக் அர்ஜுனிடம் கேட்க, அர்ஜுன் அமைதியில்,
Advertisement
“என்ன டா பண்ற நீ? உன்னை நினச்சா எனக்கே பயமா இருக்கு! சட்டுன்னு ஆஃப் ஆகிடுற! என்ன பிரச்சனைனு வாயை திறந்து சொல்லு!” தீபக் மீண்டும் மீண்டும் கேட்டான்.
“தீபக் ப்ளீஸ்! எனக்கு மூச்சு முட்டுது! நான் என்ன பண்றேன்னு எனக்கே தெரியல! அனுக்கு வேற உடம்பு சரி இல்ல!” அர்ஜுன் கூற,
“ஏன் அக்காக்கு என்ன? அவங்களை பார்க்க தான மார்னிங் போறதா சொன்ன?” என்ற தீபக் அர்ஜுன் அப்போதும் அமைதியாய் இருந்ததில்,
“எல்லாத்தையும் அடக்கி அடக்கி வச்சு என்ன பண்ண போற? இப்ப என்கிட்ட சொல்ல போறியா இல்லையா?” என்று கோபமாய் கேட்ட பின் நடந்ததைக் கூறினான் அர்ஜுன்.
“அக்கா ஓகே தானே?” தீபக் கேட்க,
“ஹ்ம்! இப்ப ஓகே தான். ஈவ்னிங் கால் பண்ணனும்!” என்றான் அர்ஜுன்.
“நீ இப்ப அக்காக்காக மட்டும் பீல் பண்ணல ரைட்?” தீபக் கேட்க, அர்ஜுன் அமைதி.
“உன்னை வேண்டாம்னு போனவங்க எப்படி போனா என்ன டா? ஏன் எல்லாருக்காகவும் பார்த்து பார்த்து நீ இப்படி இருக்க? என்ன வாழ்க்கை வாழற நீ? நிஜமா சொல்லட்டா? உன் வாழ்க்கையை உன் அம்மாவோடயே தொலைச்சுட்டு என்ன பண்ணனு தெரியாம ஏதோன்னு வாழ்ந்துட்டு இருக்க!” என்ற தீபக்,
“நான் சொல்றேன்! உன் வாழ்க்கையை நீ வாழனும்னா உனக்குன்னு யாராவது வேணும் அர்ஜுன்!” என்று சொல்லவும்,
“ப்ச்! மறந்துட்டேன் பாரு! பொண்ணு பார்க்க போன தானே? அங்க என்னாச்சு?” என்றான் அர்ஜுன்.
“நீ பேச்சை மாத்தாத டா! எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா அந்த விஜியை உனக்கு ரொம்ப பிடிச்சது? ஏன்டா பத்து வருஷம் பதினைஞ்சு வருஷம்னு லவ் பண்ணிட்டு அசால்ட்டா தூக்கிப் போட்டு போறானுங்க! உனக்கென்ன வந்துச்சு? உன்னை தூக்கிப் போட்டவளுக்காக உக்காந்து மருகிட்டு இருக்க?”
“ப்ச்! தீபக்!” என்று அர்ஜுன் எழ,
“இது சரி இல்ல அர்ஜுன்! அனு அக்காவும் எவ்வளவு நாள் தான் உனக்காக கவலைலேயே இருப்பாங்க? உனக்கு இன்னும் என் அம்மா பொண்ணு பார்த்துட்டு தான் இருக்காங்க. உனக்கு ஈக்குவல்லா இருக்கனும்னு பார்த்து பார்த்து தேடி, வரும் போது கூட சொல்லி விட்டாங்க எப்படியாவது அர்ஜுன்கிட்ட பேசுன்னு! ஏன் டா இப்படி இருக்க? உன் அம்மா இப்ப மட்டும் சந்தோசப்படுவாங்களா நீ வாழற வாழ்க்கையைப் பார்த்து?”
“தீபக் ப்ளீஸ் டா! விடு! அப்புறம் பேசலாம்!”
“அந்த விஜி போனா போறான்னு விட்டு தொலையேன்!” என்றவன்,
“இங்க பாரு! நான் அந்த ப்ரணித்தாவை பேசினதை கூட மறந்துடு! உனக்கு அந்த பொண்ணை பிடிக்கும்னா ப்ரணித்தாவையே நீ கல்யாணம் பண்ணினாலும் எனக்கு ஓகே தான்! நான்…” என பேசிக் கொண்டிருக்க,
“ஸ்டாப் இட் இடியட்! ஒருவாட்டி சொன்னா உனக்கு புரியாதா டா? ப்ரணித்தாவை போய் மறுபடி மறுபடி… என்னை இன்சல்ட் பண்ணிட்டு இருக்க நீ! புரியுதா இல்லையா உனக்கு?” என்று கத்திவிட்டான் அர்ஜுன்.
“இல்ல டா உனக்கு அவளை பிடிக்குமேன்னு தான் சொன்னேன்!”
“புடிக்கும்னா? புடிச்ச பொண்ணை எல்லாம் கட்டிக்க முடியுமா? எனக்கு நீ எப்படியோ அப்படி தான் ப்ரணித்தா! இன்னொருவாட்டி இப்படி பேசின!” என்றவன் கோபத்தில் தீபக் நிதானமானான்.
“எனக்கு நீங்களும் அனு அக்காவும் தான் டா எல்லாம்! நீயும் இப்படி பேசினா நான் என்ன பண்ண?” அர்ஜுன் சொல்ல,
“ப்ச்! டேய்!” என அணைத்துக் கொண்டான் அர்ஜுனை.
“நான் பார்த்தேன்! அம்மா இல்லைனு அனு சொன்னதும் நான் திரும்பி விஜி முகத்தைப் பார்த்தேன். துடிச்சிருப்பா டா! என்னால அங்க நிக்க முடியல!” அர்ஜுன் தன் மனதின் பாரத்தினை அப்படியே கூற,
“இதை தான் சொல்றேன் அர்ஜுன்! உனக்கு இப்பவும் அவ்வளவு பிடிக்கும்னா விஜிகிட்டயே பேசேன்! புடிச்ச வாழ்க்கையை அமைச்சுக்கோயேன்!” என்றான் தீபக்.
“பைத்தியம் பிடிக்குது! பேசாம போ டா! ஏன் பேசணும்? பேசி எதுவும் ஆக போறது இல்ல. நான் பேச போறதும் இல்ல. எங்கேயாச்சும் யாரையாச்சும்…. கலயாணம் பண்ணிட்டு…. போகட்டும்!” என முடிக்கும் முன் அத்தனை இடைவெளி எடுத்துக் கொண்டான்.
“அப்போ என்ன டேஷ்க்கு அவ பீலிங்ஸ்க்கு நீ உணர்ச்சிவசப்படுற? எதுவுமே பண்ண மாட்டன்னா நீ கிளம்பு! வேற எங்கேயாவது போய் கொஞ்ச நாள் இருந்துட்டு வா! மொத்தமா எல்லாத்தையும் இங்கேயே புதைச்சுட்டு போய் இரு! இங்க உன்னை நினச்சு அழுறவங்களை எல்லாம் என்னனு நினைச்சுட்டு இருக்க நீ? பைத்தியங்கன்னா?” என்ற தீபக்கிற்கு நிஜமாய் அத்தனை கோபம் அவன்மேல்!
“என்ன டா லவ் உன்னோடது? உன்னை வேண்டாம்னு சொன்ன பொண்ணை நினச்சு மட்டும் நீ வாழுறதுக்கு என்ன பெரிய இவனா நீ?”
“நான் ஒன்னும் அப்படி சொல்லல! என்னால முடியல! வேற எந்த பொண்ணைப் பார்த்தும் எனக்கு எதுவும் தோணல!”
“குட்! அப்ப ஒத்துக்குற இன்னும் விஜியை லவ் பண்றதை?”
“ப்ச்!”
“இதுக்கு மேல நான் மட்டும் பேசி உனக்கு புரிய வைக்க என்னால முடியாது அர்ஜுன்! நான் அனு அக்காகிட்ட பேசிக்குறேன்!” என்ற தீபக் முன் வந்து நின்றான் அர்ஜுன்.
“என்ன பேச போற? நான் தான் சொல்றேனே! வேற பொண்ணு இல்ல என்னால விஜியே சொன்னாலும் அவளை கல்யாணம் பண்ணிக்கிட்டு நிம்மதியா வாழ முடியாது டா!” ஒவ்வொரு வார்த்தையையும் அழுத்தி அர்ஜுன் சொல்ல,
“இப்ப மட்டும் நிம்மதியா இருக்கியா நீ?”
“அது தான் என் விதி! அம்மா எனக்கு அமைச்சு தர நினச்ச வாழ்க்கை தான் நான் ஆசைப்பட்ட வாழ்க்கையும். எனக்கு கல்யாணம்னாலே அம்மா நியாபகம் தான் வருது! எனக்காகவே இருந்து எனக்காகவே இறந்து…. அவங்களுக்கு நான் என்ன செஞ்சேன்?” அர்ஜுன் கேட்க,
“லூசாடா நீ?” என்று தீபக் கேட்கவும் காலிங் பெல் சத்தம் கேட்க,
“ப்ச்! மாமாவா தான் இருக்கும். சொல்லிக்காம வந்துட்டேன். அதான் வந்திருப்பாங்க!” அர்ஜுன் சொல்ல,
“இத்தனை பேர் தாங்குறாங்க! சோதிக்குற நீ எல்லாரையும்!” என முடிந்த மட்டும் பேசிவிட்டே தீபக் சென்று கதவை திறந்தான்.
கதவைத் திறந்ததும் அவன் எதிர்பார்த்தது என்னவோ அர்ஜுன் சொல்லியதால் விவேக்கை மட்டும் தான். அங்கே நின்றவளைப் பார்த்து அதிர்ச்சியோடு அப்படியே நின்றுவிட்டான் தீபக்.
சிவந்த கண்களோடு லேசாய் புன்னகைக்க முயன்று அங்கே நின்றிருந்தவள் விஜயலக்ஷ்மி.
“விஜி! நீ இங்க? விவேக் சார் வந்திருக்காங்களா?” என்று அவளுக்கு பின் தேட,
“நான் தான் ண்ணா வந்தேன்!” என்றாள் அங்கேயே நின்று.
“சரி உள்ள வா!” என்று கூறியும் அத்தனை தயக்கமும் கவலையும் என அசையாமல் நிற்க,
“உள்ள வா மா!” என்று தீபக் அழைத்தவன்,
“அர்ஜுன்!” என்று அழைக்க, மனம் பலமாய் அடித்துக் கொண்டது விஜயலக்ஷ்மிக்கு.
என்னவென்று அவன் முகம் பார்க்க? ஆனாலும் இப்பொழுதும் பேசாமல் இருந்துவிட முடியுமா? என பல கேள்விகள்.
கலையரசி நடந்ததை கூறியதில் அவர் கூறாமலே புரிந்து கொள்ள முடிந்தது கயல்விழி இறப்பின் முதல் ஆரம்பம் அர்ஜுனின் நிச்சயம் அன்று தன்னால் துவங்கியது என்று.
விவேக் பேசிவிட்டு சென்றதில் இருந்து மனமே ஆறவில்லை. எத்தனை பெரிய வலி இவர்களுக்கு? அன்னையை எவ்வளவு மதித்தாளோ அதே அளவுக்கு தான் கயல்விழி மேலும் பாசத்தை வைத்திருந்தாள்.
தன்னைப் பார்த்ததும் மலர்ந்து விகசிக்கும் அவர் முகம் இன்றும் மனதில் தனி இடத்தில் தான் இருக்க, அவர் இல்லை என்ற செய்தியை மனம் ஏற்கவே இல்லை.
ப்ரணித்தா என்ற ஒருத்திகாக மட்டுமே சிந்தித்து இந்த திருமணம் வேண்டாம் என்று அவ்வளவு முறை யோசித்து முடிவெடுத்த பொழுதுகளில் கொஞ்சமும் அர்ஜுன் என்னமோ அவன் மேல் உயிரை வைத்து சுமந்து கொண்டிருக்கும் கயல்விழியின் எண்ணமோ கொஞ்சமும் இல்லாமல் போனதை எண்ணி துவண்டுவிட்டாள்.
இதயத்தில் பிரச்சனை இருந்த போதும் மிக திடமானவர். அன்பானவர். பேச்சினில் எத்தனை இனிமை இருக்கும்? அர்ஜுன் தான் அனைத்தும் என இருந்தவர். அவர் இறப்பிற்கு தன்னைத் தவிர முழுக் காரணம் வேறு எதுவும் இல்லை என நினைக்கும் பொழுதே விம்மி வெடித்தது நெஞ்சம்.
அன்னை மடியில் இருந்து எழுந்து அறைக்குள் சென்று வெடித்து அழுது நீண்ட நேரம் தொடர்ந்தவள் ப்ரணித்தா தன்னிடம் கூறிய அந்த வார்த்தைகளில் அதன்பின் தான் கவனத்தைக் கொண்டு சென்றாள்.
உடனே ப்ரணித்தாவிற்கு அழைத்துவிட்டு காத்திருக்க, முழு அழைப்பும் சென்று நின்றிருந்தது. அவள் எடுக்கவில்லை என்றதும் தான் ஒரு முடிவோடு அர்ஜுனைத் தேடி வந்திருந்தாள்.
“என்ன டா?” என்று வந்த அர்ஜுனும் சுத்தமாய் விஜயலக்ஷ்மியின் வரவை எதிர்பார்க்கவே இல்லை.
“அ.ர்.ஜு.ன்!” என்று அழைத்து அவனைப் பார்க்கும் போதே அவள் கண்ணில் நீர் வடிந்தோட, சட்டென திரும்பிக் கொண்டான் அவளைப் பாராமல்.
நாட்களெல்லாம் நரகமான உணர்வுகளில் அவனுமே எரிந்து கொண்டிருந்தான்.
மூன்று வருடங்களாய் நிம்மதியை இழந்து தவித்து வரும்வேளையில் இப்படி கண்ணீரோடு தன்னைத் தேடி வந்து நின்று மிச்சமிருக்கும் உயிரையும் வதைப்பதாய் மனம் தளர்ந்தது அர்ஜுனுக்கு.
“அர்ஜுன்!” தீபக் அதிர்ந்தான் அவன் திரும்பிக் கொண்டதில்.
“உள்ள கூப்பிடு டா!” தீபக் மெதுவாய் அர்ஜுனிடம் கூறியவன்,
“அர்ஜுன்!” என மீண்டும் தீபக் அழைக்க, திரும்பியவன், “வா!” என்று சொல்லி உள்ளே சென்றுவிட, விஜயலக்ஷ்மியுமே கயல்விழியின் நினைவுகளோடு உள்ளே சென்றாள்.
எதையும் கேட்கும் மனநிலை இல்லை. அனன்யா எதுவும் கூறி இருக்க வாய்ப்பில்லை என்றாலும் கலையரசி வேண்டாத எதையாவது கூறி இருக்க கூடும். மன்னிப்பு அது இதுவென்று எதையும் உளராமல் இருந்தால் போதுமே! என்று தனக்குள் சுழன்றான் அர்ஜுன்.
இதுவரை விரல் விட்டு எண்ணும் அளவுக்கு தான் அவளிடம் பேசி இருந்தது. அப்போதிருந்த பேசிடும் ஆசைகள் இந்த நிமிடம் சுத்தமாய் இல்லை. என்னவென்று கேட்கவே கூட பயம் தான்.
“ஆபீஸ் வர போய்ட்டு வந்துடுறேன் அர்ஜுன்!” என்று தீபக் கிளம்ப இருந்தவன்,
“ஆமா நீ இன்னும் சாப்பிடல இல்ல?” என்றான்.
“ப்ச்! நான் பாத்துக்குறேன்! இப்ப நீ கண்டிப்பா ஆபீஸ் போயே ஆகணுமா?” அர்ஜுன் முறைத்தபடி கேட்க,
“ஆமா டா! நான் போகலனா அங்க வேலையே ஓடாது! ஆபீஸ் திவால் ஆகிடும்! ஆல்ரெடி நாலு நாள் லீவு வேற! போயே ஆகணும்! உனக்கு லஞ்ச் ஆர்டர் பண்ணிடுறேன்!” என்றவன் அர்ஜுன் மீண்டும் மீண்டும் அழைத்தது கேட்காததை போலவே சென்று விட்டான் “பை விஜி!” என்று சொல்லிவிட்டு.
‘இப்போதாவது தேறுவானா? தேறிடட்டுமே!’ என்பது தான் தீபக்கின் எண்ணம்.
அவன் சென்று சில நிமிடங்கள் எடுத்துக் கொண்டு தன்னை சமாளித்து சமன்செய்து தான் அர்ஜுன் விஜயலக்ஷ்மி பக்கம் திரும்பினான்.
அவளின் இந்த கண்ணீர் சுமந்த முகம் மனதை வெகுவாய் பாதித்து அலைப்புற வைத்தது.
“உக்காரு!” என்று சொல்லி அவன் உள்ளே செல்ல, அவனின் பேச்சு தன்னிடம் பல வருடங்களுக்கு பின் என்பதை நினைக்கவும் மறக்கவில்லை அவள்.
இரண்டு நிமிடங்களில் தீபக் சூடாய் வைத்திருந்த பாலை காபி கலந்து கொண்டு வந்து அவளருகில் வைத்துவிட்டு அமர்ந்தான்.
“எனக்கு… இப்படியெல்லாம் நடக்கும்னு…..” என்ற விஜயலக்ஷ்மி பேச முடியாமல் திணறி ஏங்க ஆரம்பிக்க,
“இட்ஸ் ஓகே!” என்று முடித்துக் கொண்டான் அவள் முடிக்கும் முன்.
“குடி!” என அவனே காபியை கைநீட்ட அவள் எடுக்கவே இல்லை அதை கைகளில்.
“ரொம்ப கில்ட்டா இருக்கு அர்ஜுன்! அன்னைக்கு நிச்சயத்தை நிறுத்தின கோவத்துல தான் நீங்க என்கிட்ட பேசலைன்னு நினைச்சுட்டு இருந்தேன். ஆனா இப்படி எல்லாம் நான் நினைக்கவே இல்ல!” விஜயலக்ஷ்மி அவன் முகம் பார்க்காமல் பேசிட,
“நீ கில்டாக என்ன இருக்கு? எதுவுமே யாருமே எதிர்பார்க்காமல் நடந்தது தான். இப்ப பீல் பண்ணி எதுவும் மாறப் போறதில்ல”
“எவ்வளவோ யோசிச்சேன்! ஆனா கயல் அத்தையை நான் கொஞ்சம் கூட…..” என்றவள் முகத்தை மூடி அமர, அவளை அப்பொழுது தான் நிமிர்ந்து பார்த்தான்.
“ப்ச்! நீ இப்ப அழுது என்னாக போகுது?” என்றதும் அவள் நிமிர, இவன் திரும்பிக் கொண்டான்.
“சாரினு சொல்லி ஒரு வார்த்தைல என் தப்பை நான் சரி பண்ணிட முடியாது!” விஜயலக்ஷ்மி கூற,
“எல்லாத்தையும் எல்லாரும் கடந்து வந்தாச்சு! இதென்ன எதுவும் தெரியாம இப்ப வந்து உனக்கு சம்மந்தமில்லாம நடந்த ஒண்ணுக்கு சாரி கேட்டுட்டு… வீட்டுல சொல்லிட்டு வந்தியா?”
“ஹ்ம்! நீங்க எல்லாரும் இல்லைனு சொன்னாலும் எனக்கு தெரியும்! நான் குழந்தை இல்ல! ஒரு உயிர் போக காரணமா…. நானே!” என்றவள் கைகள் நடுங்கியதை அவனுமே கண்டான்.
“ப்ச்! நான் அக்காக்கு கால் பண்றேன்!” அதற்குமேல் முடியாமல் அர்ஜுன் கூற,
“அண்ணி நைட்டெல்லாம் தூங்கலை! இப்ப தான் தூங்குறாங்க!” என்றதும் மொபைலை கையில் எடுத்தவன் அப்படியே வைத்துவிட்டான்.
“நான் உங்ககிட்ட கொஞ்சம் பேசணும் அர்ஜுன். நான் இதை பேசுறது சரியானு தெரியல! ஆனா பேசி தான் ஆகணும்!” விஜயலக்ஷ்மி கூற,
“இனி பேச எதுவுமே இல்ல! நடந்ததை மாத்த முடியாது. உனக்கும் நடந்த எதுக்கும் சம்மந்தமில்ல! போய் உன் வேலையை கவனி!” எதுக்கும் என்ற வார்த்தைகளில் அவன் அழுத்தம் கொடுக்க, இன்னுமே மனதில் அந்த அழுத்தம் கூடியது விஜயலக்ஷ்மிக்கு.
“அர்ஜுன் ப்ளீஸ்! நான் பேசிட்டு போயிடுறேன்! நான் கனவுல கூட நினைக்காத ஒண்ணு அதுவும் என்னால தான் நடந்திருக்குன்னு தெரிஞ்சும் நான் எப்படி அமைதியா கடந்து போக முடியும்?” என்று விஜயலக்ஷ்மி சொல்லவும் அவள் அலைபேசி அழைக்க, எடுத்து பார்த்த போது ப்ரணித்தா தான் அழைத்துக் கொண்டிருந்தாள்.
“ப்ரணித்தா தான் கால் பண்றது!” விஜயலக்ஷ்மி சொல்ல,
“பேசு!” என சாதாரணமாய் கூறியவன் எழுந்து நடக்க,
“இல்ல! நான் உங்ககிட்ட சொல்லிடுறேன். ப்ளீஸ்!”
“ஹ்ம்!” என்றவனுக்கு பேச என்ன இருக்கிறது? அன்று சொல்லாமல் இன்று சொல்லி தான் என்ன பயன்? இதில் இவளுக்கு என்ன கிடைத்திடும்? இல்லை தனக்கு தான் நிம்மதி கிடைத்திடுமா? அப்படி என்ன சொல்லிவிட முடியும் இவளால் என பல கேள்விகள் விடை இல்லாமல் தான் நின்றது அர்ஜுனிடம்.
“அன்னைக்கு ஃபங்க்ஷன் வரை உங்களை காத்திருந்து….”
“எனக்கு அதை தெரிஞ்சுக்க விருப்பம் இல்ல! என்ன ஒரு காரணமா இருந்தாலும் இப்போ எனக்கு அது தேவையும் இல்ல! இது நீ நான் மட்டும் சம்மந்தப்பட்ட விஷயமும் இல்ல! அக்கா மாமானு நிறைய பேர் உறவு சொந்தம்னு இருக்காங்க. எந்த பாதிப்பும் வேண்டாம். அம்மா இப்போ இல்லை! அந்த நிஜத்தை நானும் அனுவும் ஏத்துகிட்டோம்! இப்போ பழசை கிளற வேண்டாம். உனக்கு புரியும்னு நினைக்குறேன்!” என அவள் பேச ஆரம்பிக்கவுமே தடுத்துவிட்டான்.
அவள் காரணத்தினால் எதுவும் மாறிவிட போவதில்லை என அத்தனை திடமாய் நம்பினான். கூடவே அன்னை இறந்ததில் தன்னால் தான் என இவள் மனம் வருந்தி அதற்கு காரணம் கூறுவதை இவனால் ஏற்றுக் கொள்ளவும் முடியவில்லை. அன்னைக்காக ஒருபுறம் அவளுக்காக ஒருபுறம் என அவன் நினைக்க, அவளுக்குமே அவள் கவலை தான்.
மீண்டும் ப்ரணித்தா அழைக்க, அதை சைலண்டில் மாற்றிவிட்டவள் பேசாமல் செல்வதாய் இல்லை என்பதை போல அமர, அர்ஜுனுமே அதை கவனித்தான்.
“இல்ல அர்ஜுன்! நான் வேற எதுவும் சொல்ல வர்ல! அன்னைக்கு அப்படி நடந்துக்க எனக்கு சுத்தமா விருப்பம் இல்ல. நான் ரெண்டு நாள் முன்னயே உங்ககிட்ட தனியா பேசிடலாம்னு தான் நினச்சேன்!” எங்கே அவன் பேசவே விட மாட்டானோ என பயந்து வேகமாய் அவள் கூறிவிட, விஜயலக்ஷ்மியைப் பார்த்தவன் பார்த்தபடி நின்றான்.
எற்கனவே முடிவு செய்து வைத்திருந்தேன் என்றல்லவா கூறுகிறாள்? தெரியாதது தெரியாமலே போய் விட்டாள் கூட பரவாயில்லை. உயிர்வரை வலியை வாங்கி வைத்துக் கொள்ள யார் தான் விரும்புவார்கள்.
“இப்ப தோணுது! நான் நினைச்சது தான் சரி! நான் உங்ககிட்ட அப்பவே தனியா பேசி இருக்கனும்! இல்ல அத்தைகிட்டயாச்சும் பேசி இருக்கனும்! ரொம்ப ரொம்ப தப்பு!” விஜயலக்ஷ்மி கூற, பொறுமை எல்லாம் குறைந்து கொண்டிருந்தது அர்ஜுனுக்கு.
“நேத்து தான் அம்மாவும் அண்ணாவும் ப்ரணித்தாவோட பெரியப்பாகிட்ட உங்க கல்யாண விஷயமா பேசணும்னு சொல்லிட்டு இருந்தாங்க!. ரொம்ப நல்ல விஷயம்.. இதை நான்…” என அவள் பேசிக் கொண்டிருக்க, விருட்டென அவன் எழுந்த வேகத்தில் இவளுமே பயந்து எழுந்துவிட்டாள்.
“ஆக மொத்தம் எல்லாரோட நினைப்பும் இது தானா? நொடி நொடியா எல்லாரும் சேர்ந்து கொஞ்சம் கொஞ்சமா கொன்னுட்டு இருக்கீங்க! என்ன பாவத்தை பண்ணி தொலைச்சேனோ தெரியல!” என அர்ஜுன் இருந்த கோபத்தை எல்லாம் சேர்த்து கத்திவிட, மிரண்டு நின்றாள் விஜயலக்ஷ்மி.
“இப்ப என்ன வேணும் உனக்கு? சொல்ல வந்ததை சொல்லிட்டு கிளம்பு!” என திரும்பி நின்று கொண்டான்.
“ஒவ்வொருத்தருக்காகவும் பார்த்து பார்த்து யாரும் ஹர்ட் ஆக கூடாதுன்னு நினச்சு நினச்சு ஒருத்தன் ஒதுங்கி போனா அவனை தான் இந்த விதி வச்சு செய்யும் போல!” என அவள் முகம் பார்க்காமல் பல்லைக் கடித்து அவன் கூற, தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது வார்த்தைகள் அவளுக்கு.
“ஓறொருத்தரா கூப்பிட்டு எனக்கு ப்ரணித்தா பிரண்ட் மட்டும் தான். நான் அவளை அப்படி பாக்கலைன்னு சொல்லிட்டு இருக்கணுமா? அசிங்கமா இருக்கு!” என அவன் விரும்பத்தகாத ஒன்றை கேட்டுவிட்டவன் போல முகம் சுழிக்க, அதிர்ச்சியாகிவிட்டாள் விஜயலக்ஷ்மி.
“உங்க எல்லாரோட நினைப்பும் அது தான்னா அப்போ என் மேல தான் தப்பா? அவளுக்குன்னு யாரும் இல்லையே, அவ தனியா இருக்குறதா நினைக்க கூடாதேன்னு நான் நினைச்சது தான் தப்பா?” என இன்னும் கோபம் தீராமல் கத்தியவன்,
“தீபக் சொன்னது தான் சரி! யாரும் வேணாம் எதுவும் வேணாம்னு எங்கேயாவது போய்ட்டா தான் இருக்குற உயிரை காப்பாத்திக்க முடியும் போல” முணுமுணுவென்றாலும் அவன் குரல் நன்றாய் கேட்டதில் அதிர்ச்சி மீளாமல் நின்றிருந்தாள் விஜயலக்ஷ்மி.
இதற்குமேல் அவள் என்ன பேச? ப்ரணித்தாவிற்காக தானே இவனிடம் பேச வந்தது? அவன்மேல் காதல் வைத்து இத்தனை வருடங்கள் அவள் காத்திருக்க இவன் நட்பாய் மட்டும் பார்க்கிறேன் என்கிறானே என அதிர்ந்தவளுக்கு வார்த்தைகள் நின்று போனது அதன்பின்.
இப்பொழுது கூட அவன் நினைத்தால் கேட்கலாம் உன்னைப் பார்த்து சம்மதம் கேட்க வந்த நான் முட்டாளா என்று! அதை கேட்கும் எண்ணம் துளியும் இல்லை. தன்னை மறுக்க முடிவெடுத்து காத்திருந்து தான் அந்த நேரத்தில் வேண்டாம் என்றேன் என்று கூறுபவளிடம் நியாயம் கேட்டு என்ன பயன் என ஒதுங்கிட மட்டும் தான் நினைத்தான் அப்போதும்.
“இதுல நீ என்கிட்ட பேச என்ன இருக்கு?” என நேராய் தன் பக்கம் திரும்பி தன் கண்களைப் பார்த்து அத்தனைக் கோபமாய் அவன் கேட்டதற்கு வழி அறியா பிள்ளையாய் அவள் விழிக்க, அந்த பார்வை எந்தளவு அவனை பாதிக்கும் என அவளுக்கு புரியாதே!
“ப்ரணி…. ப்ரணித்தா சொல்லி தான்… ப்ரணி உங்களை விரும்புறதுனால தான்… கயல் அத்தை வெயிட் பண்ண சொன்னதா சொல்லி…” என்றவளுக்கு அவன் கோபத்தில் அழுகை வரும் போல இருக்க, முழுதாய் பேசவும் முடியவில்லை.
கயல்விழி ஆறு மாதம் காத்திருக்க சொன்னதாய் ப்ரணித்தா கூறியதை கூட அவன்மேல் உள்ள காதலால் தன்னை தவிர்க்க நினைத்திருக்கிறாள் ப்ரணித்தா என அவளை தவறாய் நினையாமல் அவனிடமே அவளுக்காக பேச வந்து அவன் கோபத்தைக் கண்டு அரண்டு வார்த்தைகளை விட்டும் விழுங்கியுமாய் திணறி நின்றாள்.
தொடரும்..
error: Content is protected !!