Skip to content
Post Views: 7,613
பகுதி 25
“என்னோட குழந்தையை அவங்க தூக்கிட்டு போறதை.. என்னால உணர மட்டுமே முடுஞ்சதே ஒழிய, ஜடம் போல படுக்கையில இருந்த என்னால தடுக்க முடியல..” என கண்ணீரோடு இனியாள் நிறுத்தி,
Advertisement
“முகுந்த் தான் அந்த பிள்ளை.. இதோ, அந்த போட்டோல இருக்காளே.. அவ தான் இவரோட மனைவிங்கறது எல்லாம்.. இன்னைக்கு அந்த போட்டோவ பார்க்கற வரை எனக்கு தெரியாது..” என்றதும்,
கோமதி என்ற பெயரிலும், கர்ப்பமானதை சொல்லாமல் பிள்ளையை காட்டியது.. என சொன்ன போதே கணித்திருந்த ரியான்.. சந்தீப், மலருக்கு இது எதிர்பார்த்த ஒன்றாகி போக,
Advertisement
Advertisement
மற்றவர்கள் தான் இனியாள் சொன்னதை கேட்டு உறைந்து போயினர் ரியானுக்கு நடந்த நம்பிக்கை துரோகத்தை எண்ணி.
தனத்திடமும் அவன் சொல்லியிருந்தானே..!
Advertisement
அவருக்கும் அவனின் மனநிலை நன்றாகவே புரிந்திட, ‘ச்சை.. எப்படிப்பட்ட துரோகத்தை எவ்வளவு ஈசியா செஞ்சுட்டு போயிருக்கா அந்த பாவி..’ என மனதில் பிருந்தாவை திட்டிக்கொண்டே அவனை பார்க்க,
உலகின் ஒட்டு மொத்த வலியையும் தாங்கிக்கொண்டிருந்தது அவனது முகம்.
தொண்டை ஏறி இறங்க, விழியோரம் கசிந்த கண்ணீர் துளி அவனின் உள்ளக்கொதிப்பை பறைசாற்றியது.
எப்போது.. இதில் அவனது வாழ்க்கையும் இணைந்திருக்கிறது என்ற சந்தேகம் எழுந்ததோ.. அப்போதே அவனருகே அமர்ந்து.. அவனின் கரத்தை அழுத்தமாக பற்றிக்கொண்ட சந்தீப்புக்கும் மனமெங்கும் வலியே..
அன்று, ரியான் ஏர்போர்ட் வந்து இறங்கியதும் அப்போது சென்னையில் வேலை பார்த்துக்கொண்டிருந்த தன்னை ஆசையாய் அழைத்து,
“டேய், எனக்கு பையன் பொறந்திருக்கிறான்டா..” என சொன்ன போது,
அதிலிருந்த உவகை.. அப்பப்பா.. வார்த்தையில் வடிக்க முடியுமா, அதை..?!!!
அந்த ஆனந்தம் சில மணி நேரம் கூட நீடிக்க வில்லையே..!!!
ரியானை நேராக ஏர்போர்ட் சென்று அழைத்துக்கொண்டு தம்பி மகனை பார்க்கும் ஆவலோடு வந்தவன் கண்டது.. அவர்களின் சடலங்களை தானே..!!
அன்றைய நிகழ்வை மறக்க முடியுமா வாழ்நாளில்..?
ஆசையாய் தந்தையின் எண்ணுக்கு அழைத்து, “ப்பா.. சென்னை ரீச் ஆகிட்டேன்..” என ரியான் சொன்னதும்,
“நாங்க முகுந்த்தை கூட்டிட்டு வீட்டுக்கு கிளம்பிட்டோம்.
பாதி தூரம் ரீச் ஆயாச்சு. நீ நேரா பிருந்தா அம்மா வீட்டுக்கு வந்திடு..” என்று அவர் சொன்னதும்,
சந்தீப்போடு ஆசையாய் அத்தனை கதை பேசி கொண்டு வந்தவன், வீட்டை நெருங்கும் போது அவர்களுக்காய் காத்திருந்தது போலீஸ் வாகனமே.
போன் பேசி முடித்த சில மணித்துளியில் எதிரில் கட்டுப்பாட்டை இழந்த ஒரு லாரி, இவனின் குடும்பம் வந்த காரில் நேருக்கு நேராக மோதியதில் பெரியவர்கள் அனைவரும் அங்கேயே உயிரை துறந்திருக்க,
முகுந்த் மட்டும் அவர்கள் மடியிலிருந்து நழுவி, கால் பாதத்திற்கு அடியில் விழுந்ததால், முதுகுத்தண்டில் ஏற்பட்ட பாதிப்போடு சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருப்பதாக.. அந்த காவலர் சொன்ன போது.. ரியானின் நிலை.. கண் கொண்டு பார்க்க முடியவில்லையே..!!!
மகிழ்ச்சியை முழுதாய் சுவைத்து பார்க்கும் முன், அதை அப்படியே மொத்தமாய் துடைத்து.. அந்த இடத்தை வெறுமையாக்கிய விதியை அன்று நிந்தித்தது என்ன..?!
தெய்வாதீனமாக, அதில் முகுந்த் மட்டும் தப்பித்தாலும்.. பிறந்து முழுதாய் சில நாட்களை கடக்காத பிஞ்சின் உடல் அதை தாங்குமா..?
அவனை காப்பாற்ற நடந்த போராட்டம். அப்போது ரியானின் தவிப்பும் துடிப்பும்..
அந்த குழந்தையை காக்க.. ‘அவன் உயிரையும் கொடுக்க வேண்டும்..’ என்றிருந்தாலும், அதையும் ‘இந்தா..’ எனக்கொடுத்திருப்பானே..!
தாய், தந்தை, மனைவி, மாமியார்.. என ஒட்டு மொத்தமாய் இழந்த வேளையில்,
மகனுக்காக மட்டும் துணிச்சலை வரவழைத்து கொண்டு.. அவர்களுக்கு கொள்ளி வைத்த கையோடு, மருத்துவமனையே கதியென கிடந்தானே..!
அவன் இத்தனை வருட சேமிப்பையும்.. ஒட்டு மொத்தமாய் கரைத்து வெளிநாட்டிலிருந்து மருந்தையும், மருத்துவரையும் வரவழைத்து.. உடனிருந்து பார்த்த தனக்கே தலை சுற்றியதே..!!!
குற்றுயிராய் கிடைத்த போதும்.. ‘அவனை காப்பாற்றவில்லை எனில் நான் என்ன தந்தை..?’ என்ற வைராக்கியத்தை கொண்டு,
எத்தனை திடமாய்.. “என் மகன் என்கிட்ட வருவான்..” என்று நிமிர்ந்து நின்றான்.
இந்த பெண்ணின் கண்ணீர் தான்.. அவர்களை உரு தெரியாமல் அழித்து விட்டதா..? என தோன்றாமலும் இல்லை அவனுக்கு இப்போது..
ஆனால், இதில் எந்த பாவமும் செய்யாத, தன் சித்தப்பாவும்.. சித்தியும் இறந்தது ஏனோ..?
அந்த ஆண்டவன்.. தப்பு செய்தவர்களோடு.. ஏன், அந்த நல்லவர்களையும் பலி எடுக்க வேண்டும்..?’ என மனதால், சந்தீப் வருந்தத்தோடு இருக்க,
“அப்போ..வெண்பா..? வெண்பா தான் நம்ம சின்னத்தானோட பொண்ணா..?!” என்ற மலரின் ஆச்சரியம் நிறைந்த ஆவலால் வழிந்த குரலில்,
இதுவரை, இருந்த நிலை மாறி.. அத்தனை பேரின் முகமும் திகைப்பிலும், ஆர்வத்திலும் ஒருங்கே இனியாளின் வசமானது.. கேள்வியாய்.
ரியானும் கண்ணீரோடு இனியாளை பார்க்க,
“ம்ம்..” என மெல்ல அவள் தலையசைக்க,
‘இதுவரை, மகன் மட்டுமே தனக்கான உறவு..’ என இருந்தவனுக்கு..
இன்று இன்னும் ஒரு உயிர்.. உனக்கு உறவாக இந்த உலகத்தில் இருக்கிறது.. என்பது எத்தகைய மகிழ்ச்சியை தந்ததோ, அதே அளவு வேதனையும் கொண்டது.
‘தந்தையென நான் இருந்தும்.. இதுவரை அந்த உறவு பற்றி தெரியாமல்.. என் மகள் எத்தனை ஏங்கினாலோ..?!’ என பரிதவித்தது அந்த தந்தை மனம்.
அதன் பிரதிபலிப்பாய் அவனின் கண்கள் அவளை தேட, உள் அறையில் இருந்த போதும் நடக்கும் பேச்சு வார்த்தையை கேட்டுக்கொண்டு தானே இருந்தாள் சம்யுக்தாவும்.
ரியானின் எதிர்பார்ப்பை உணர்ந்தவள் போல.. சரியாக அவன் பார்வை தேடும் படலத்தை தொடங்கியதுமே.. அந்த அறையிலிருந்து வெண்பாவோடு வெளியே வந்திருந்தாள் அவள்.
இனியாள் பேச ஆரம்பித்த சிறிது நேரத்திற்கெல்லாம்.. ரியானின் இதமான தடவலில் அவனின் அணைப்பில்.. நல்ல உறக்கத்திற்கு சென்றிருந்தான் முகுந்த்.
இப்போது அவன் தேடல் எதற்கு..? என்பது சந்தீப்புக்கு புரிய, வெண்பா வெளியே வரும் போது சரியாக.. முகுந்தை அவன் லாகவகமாக தன்னிடம் மாற்றிக்கொள்ள,
‘நடந்தானா..! இல்லை.. பறந்தானா..!’ என கணிக்க முடியா வேகத்தில் தன் மகளிடம் சென்றவனுக்கு கைகள் நடுங்க தொடங்கியது.. பாசத்தால்.
இதற்கு முன் ஒரு முறை வெண்பாவை பார்த்திருந்தாலும்,
முகுந்தின் நிலை கொண்டு..
அடுத்த பிள்ளைகளை பார்த்தால்.. ‘தன் மகன் ஏன் இன்னும் இப்படி இருக்கிறான்..?
அவர்களை போல
தவழ வில்லையே..! நடக்கவில்லையே..!!
ஓடவில்லையே..!!!’ என்ற எண்ணங்கள்.. ஏக்கங்களாய் மாறி இவனை வதைத்துவிடும்..
அதோடு என் மகன் எப்படி இருக்கிறானோ.. அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டுமாயின்.. அடுத்த பிள்ளைகளை பார்த்து தான் ஏங்க கூடாது.. என முடிவெடுத்திருந்ததால்,
அப்போது அவளை நன்றாக கவனித்து பார்க்க கூட இல்லையே..!
இதோ இப்போது அழகிய பூஞ்சிட்டாய்.. முழு உருவமாய்.. லேசான இதழ் பிரிந்த புன்னகையோடு.. தன் முன் நிற்கிறாளே.. என் ரத்தத்தில் உதித்த என் மகள்.. என்ற பாசத்தோடு அவளை அள்ளிக்கொண்டவனுக்கு தேகத்தில் மெல்லிய சிலிர்ப்பு.
முகுந்தை அவன் தொட்டு தூக்கவே பல மாதங்கள் ஆன போதும் அவனை அள்ளிக்கொண்ட போது வந்த அதே சிலிர்ப்பு மகளிடமும்..
அவனின் தேகம் சிலிர்க்க.. கண்கள் கலங்க.. உணர்ச்சி வசத்தால் உதடு துடிக்க.. அவன் குழந்தையின் முகம் பார்த்து நின்ற நிலை.. ஓவியன் கண்டிருந்தால் அழியா சித்திரமாய் வடித்திருப்பானே.. அதை..!
தன்னை தூக்கி கொண்டவரிடமிருந்து இப்படியான முகபாவனையை எதிர்பார்க்கா மழலையோ,
“என்னாச்சு..? கண்ணுல தூசா..? நா எடுக்கட்டா..?” என்றவள்,
தன் பிஞ்சு விரலால் கண்ணை துடைத்து விட்டு, அவன் கண்ணருகே சென்று இதழ் குவித்து, “ஊப்..” என ஊத,
மொத்தமாய் நொருங்கி போனான் அந்த ஆறடி ஆண்மகன்.
சட்டென மகளோடு மடங்கி அமர்ந்தவன் அவளை தன்னோடு இறுக்கிக்கொண்டு அழ மற்றவர்களுக்கும் கண்ணீரே..
அவனின் கதறலில் பயந்து போன வெண்பா, “சித்தா.. டூக்கு..” என அவளும் அழு குரலில் சொல்ல,
‘அய்யோ.. என் மகள் என்னை விட்டு போவதா..?’ என பதறியவன்,
“இல்லடா பட்டு.. அப்பா அழல.. இதோ.. அப்பா அழல பாரேன்..” என கண்ணை அவசரமாக துடைத்துக்கொண்டே வேக வேகமாக சொல்ல,
அவனின், ‘அப்பா..’ என்ற பதத்தில் அமைதியான குழந்தை,
“அப்பாவா..? வெம்பா அப்பாவா..?!” என்றாள் விழிகள் விரிய இதழ்களில் புன்னகை தவழ.
“ம்ம்.. ஆமாடா பட்டு.. நா அப்பா.. உன் அப்பா.. இந்த வெண்பாவோட அப்பா..” என்றான் அவளின் விழிகளை பார்த்து,
“நிசமா.. அப்பா..? என் அப்பா..? அப்படியா..?!” என்றாள் மீண்டும் உறுதிபடுத்தும் பாவனையில்.
“ஆமா.. நான் அப்பா..” என்ற ரியான், அவளின் நெற்றியில் இதமாய் இதழ் பதிக்க,
“ப்பா..” என்றாள் குழந்தையும் சிலிர்ப்பாய்..
“சொல்லுடா பட்டு..” என்றவனின் பார்வை மட்டும் அந்த பிஞ்சின் கண்ணை தாண்டவில்லை.
தன்னை.. தன் உறவை.. தன் மகள் ஏற்கும் அந்த நேரத்தில், அவளின் பாவனையை ஒரு சொட்டு கூட வீணாக்காமல் தன் இதயப்பெட்டகத்தில் பூட்ட நினைத்தானோ அந்த தந்தை..!
“ம்மா.. அப்பாவா ம்மா..?” என இனியாளின் புறமும் பார்த்து கேட்க, “ஆமா..” என அவள் கண்கலங்க சொன்னதும்,
சந்தோஷ மிகுதியில் ஆர்ப்பரித்தவள் உற்சாகமாக,
“சித்தா வெம்பா அப்பா.. பாத்தீ.. பாது வெம்பா அப்பா..” என அவளை சேர்ந்த ஒவ்வொருவரையும் அழைத்து,
ரியானின் நெஞ்சை தொட்டு தொட்டு சொன்னவள், “அப்பா.. என் அப்பா..” என்றாள் அவனை இறுக அணைத்து.
அந்த அணைப்பும், அவளின் ஆத்மார்த்தமான அழைப்பும்.. அவளின் இத்தனை நாள் ஏக்கத்தை உணர்த்த,
‘இனி ஒரு நொடி கூட தன் மகளை விட்டு விலகி நிற்க முடியாது..’ என்பதாய் தன்னோடு இறுக்கி கொண்டவன், அவளோடு மீண்டும் சென்று ஷோஃபாவில் அமர்ந்தான்.
வாகாய்.. தன் தந்தை மடியில், இளவரசி தோரணையில் அமர்ந்த அந்த சின்ன சிட்டுக்கு இருந்த ஆனந்தம்.. அவளின் அந்த முகத்திலும் கண்ணிலும் அப்பட்டமாய் தெரிந்தது.
தந்தை மார்பில் தன் முதுகை சாய்த்து அங்கிருந்த ஒவ்வொருவரையும் அவள் பார்த்த பார்வை.. அச்சோ..! அவ்வளவு கர்வம். என் தந்தை.. நான் அவர் மடியில்.. என்பதாய்.
அதை கண்ட அங்கிருந்தவர்களுக்கு.. அது கூட அத்தனை அழகாய் தான் தெரிந்தது.
‘அந்த குழந்தையின் ஏக்கத்தை இப்போதாவது தீர்க்க அந்த இறைவனுக்கு மனம் வந்ததே..’ என்றே எண்ணினர் எல்லாரும்.
அமிழ்தினியாளுக்கோ, பள்ளி செல்லும் முன்னரே, ‘அப்பா வேணும்..” எனக்கேட்ட பிள்ளை,
இப்போது பள்ளி செல்ல தொடங்கியது முதல், அடிக்கடி அப்பா பற்றி பேசி, “அவரு எங்கேம்மா..? எப்போ வருவாரு..?” என கேட்க,
தனக்கே தெரியாத ஒருவரை எங்கிருந்து அவளும் காட்டுவாள்..!
திட்டம் தீட்டி.. ஒரு பெண்ணை வாடகை தாயாக்கியவர்கள்.. புகைப்படத்தில் கூட பிருந்தாவின் கணவனை அவள் காணக்கூடாது.. என்பதையுமா திட்டமிடாமல் இருந்திருப்பார்கள்..?!
‘தன் மகளுக்கு அவளின் தந்தையை காட்டவே முடியாதோ..?
அவளின் அப்பா ஆசையை கடைசிவரை நிறைவேற்ற முடியாதோ..?
நான் அப்பாவுக்காக ஏங்கியது போல.. என் மகளும் ஏங்கியே காலத்தை கடத்த வேண்டுமா..?’
என்றெல்லாம் தவித்தவளின் தவிப்புக்கு பதிலாய் இருந்தது.. அந்த சிட்டு தந்தை மடியில் அமர்ந்திருந்த தோரணை.
error: Content is protected !!