Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் பாலையின் குளிர் நிலவு நீ

என் பாலையின் குளிர் நிலவு நீ … 27.1

மெல்லிய திகைப்பும், ஆர்வமும் மேலிட தன் கண்ணை நிமிர்த்தி எதிர் இருந்தவனை பார்க்க, 

அவனும் பார்வையாலேயே அவளின் வாயை திறக்கச்சொல்ல ஒருவித நிறைவோடு.. அவன் தந்ததை வாங்கிக்கொண்டாள் இனியாள். 



Advertisement

அந்த நிறைவு.. அவளை லேசாக கண்கலங்க வைக்க, பிள்ளைகள் அறியா வண்ணம் மறைத்தவளுக்கு தன் கண்ணாளனின் கண்ணில் அது பட்டு விட்டதை அவனின் முறைப்பு காட்டிக்கொடுத்தது.

‘சாரி..’ என்ற இதழசைப்பிலும் மனமிரங்காது.. அவளை பார்த்தவனை கண்டுவிட்டு சுற்றிலும் பார்வையை சுழற்றியவள், 

Advertisement

Advertisement

‘யாரும் தங்களை கவனிக்கவில்லை..’ என்பதை உறுதி செய்துவிட்டு, 

சட்டென அவனை பார்த்து ஒற்றை கண்ணை சிமிட்டி.. இதழ் குவித்து காற்றில் முத்தமிட.. 

Advertisement

அதற்கு மேலும் எங்கிருந்து கோபத்தை பிடித்து வைக்க..?!

“அய்யோ.. கொல்றாளே..!” என்ற நிலை தான் அவனுக்கு.

“நாங்க எதையும் பார்க்கலப்பா.. அப்படி தானே சம்யுக்தா..?” என்ற மலரின் விசமக்குரலில், 

“அய்யோ.. போச்சு..” என முனங்குவது இனியாளின் முறையாக, 

அவசரமாக தலையை மகனின் புறமாக திரும்பிக்கொண்டாள்.

அதைக்கண்டு விசயத்தை புரிந்து கொண்ட சிலரும் சிரிப்பை உதிர்க்க இனியாளுக்கு வெக்கமும், கூச்சமும் நெட்டித்தள்ளியது.

அவளின் அவஸ்த்தையை புரிந்து கொண்ட ரியான், “டேய் சந்தீப்.. உன் பொண்டாட்டி வாய எப்படியாவது அடக்கற வழிய பாருடா..” எனச் சொல்ல, 

“அதை அடக்க முடுஞ்சிருந்தா.. எப்பவோ அதை செஞ்சிருக்க மாட்டேனா..!” என அவன் சலிப்பாக சொல்லி, 

மலரின் முறைப்பையும் பரிசாக பெற்று கொண்டு அவ்விடம் விட்டு நைசாக நழுவிச்சென்றிருந்தான். 

‘இருந்தால் தானே.. அவளின் அடுத்த கவனிப்பை பெற வேண்டும்..!!’ என்ற முன்னெச்சரிக்கை. 

இத்தனை வருட திருமண வாழ்க்கை கற்று தந்த அனுபவம்..!!! 

அவனின் செய்கையில் இனியாளை எல்லாரும் மறந்திருக்க கொஞ்சம் சகஜ நிலைக்கு வந்திருந்தவள்.. குழந்தைக்கு ஊட்டி முடிக்க, 

தங்களுக்கானதை இனியாளிடமும் கேட்டு வாங்கி, அதிலும் முதல் வாயை தன் மனையாளுக்கு ஊட்டிவிட்ட பிறகே தானும் உண்டான் ரியான்.

நிறைவான மனதோடு தம்பதிகள் இல்லம் வந்து சேர மலர்ந்த முகத்தோடு மலர்விழி ஆலம் சுற்றி உள்ளே அழைத்து வந்தாள்.

வந்தவர்கள் நேராக ரியானின் பெற்றவர்களிடம் ஆசி வாங்கிக்கொண்டு பூஜை அறைக்கு சென்று தீபம் ஏற்றி வணங்கி முடிக்க, 

அங்கிருந்த குங்குமத்தை எடுத்து.. இனியாளின் நெற்றி வகுட்டிலும் நெற்றியிலும் சூடினான் அவள் பதி.

சின்ன சிரிப்போடு அவன் அதை செய்ய விழி மட்டும் உயர்த்தி.. அவனின் விழி பார்த்து அதை ஏற்று நின்றவளின் அகமும், புறமும் அழகாய் மலர்ந்திருந்தது நிறைவாய்.

அடுத்து பால் பழத்தையும் குழந்தைகளோடு பங்கிட்டு சாப்பிட்டு முடித்தவர்கள் கையோடு தனத்தின் வீட்டிற்கு புறப்பட்டனர்.

அருகே தான் என்பதால் இரு குழந்தைகளின் கைகளையும் இருவரும் பிடித்தபடி நடக்க அழகான குடும்பமாக தெரிந்தது அதை பார்த்திருந்தவர்களுக்கு.

அங்கு சம்யுக்தா ஆலம் சுற்றி அழைக்க மீண்டும் பால் பழமென முடித்து கொண்டு அவர்களின் இல்லத்திற்கே திரும்பியிருந்தனர்.

நேரமே எழுந்ததால் குழந்தைகள் இருவரும் உறங்க வேண்டுமென சொல்ல கீழிருந்த ஒரு அறையில் அவர்களை படுக்க வைத்தாள் இனியாள்.

அவர்கள் உறங்கியதும் அவர்களுக்கு அருகே அமர்ந்து ஏதோ யோசனையோடு இருந்தவளை கலைத்தது மலரின் குரல். 

“நீயும் கொஞ்ச நேரம் படுத்து ரெஸ்ட் எடு இனியா..” என்றிட,

“பரவாயில்ல அக்கா.. எனக்கு தூக்கம் வரல..” என அவள் தயங்கினாள்.

அவளின் தயக்கம் புரிந்த மலரோ புன்னகை முகமாகவே அவளின் கரத்தை பற்றிக்கொண்டு, 

“இங்க பாரு இனியா, இது இனி உன் வீடு. நீ ப்ரி யா இரு. யாரும் உன்னை எதுவும் கேட்க மாட்டாங்க.

அதுமட்டுமில்லாம ஈவினிங் பார்ட்டி வேற இருக்கு. எப்போ முடியுமுன்னு சொல்ல முடியாது.

அதோட நைட் சடங்கும் இருக்கு.. இல்ல. அதனால கொஞ்ச நேரம் தூங்கு..” என்றவள், 

“அப்புறம்.. உன்‌னோட ட்ரஸ் எல்லாம் சின்னத்தான் ரூம்ல வச்சாச்சு. 

ட்ரஸ் மாத்தனுமின்னா அங்கேயே போய் மாத்திட்டு வந்திடு. பசங்க பக்கத்துல நான் இருக்கேன்.

சின்னத்தான் வெளியே என் வீட்டுக்காரர் கூட பேசிட்டு இருக்கார். இப்போ ரூமுக்கு வரமாட்டார்..‌” என்று சொல்ல, 

மலர் சொன்னதில், ‘இரவு சடங்கு..’ என்ற வார்த்தை அவளை நடுக்கமுற செய்தது. 

என்ன தான் நிதர்சனம் புரிந்தாலும்.. அதை எதிர்கொள்ள போகும் பயமும் அவளுள்.

அதே சிந்தனையில் மலரிடம் தலையசைத்துவிட்டு ரியானின் அறைக்கு வந்தவள், அங்கிருந்தவற்றை ஆராய்ந்து.. அவளுக்கான உடை இருந்த கபோர்டை திறந்து தனக்கான சுடிதார் ஒன்றை எடுத்தவள், 

தனது சேலையின் பின்னை கழட்டி கொண்டிருக்க கதவு திறக்கும் ஒலி கேட்டது.

‘யார் அது..?!’ என பதறி திரும்பியவள் ரியானை கண்டு திகைக்க, 

அவனுக்கும், ‘தன் அறையில் அதுவும் இப்படி இனியாளை எதிர்பார்க்கவில்லை..!’ என்பதை அவனின் விழியும், இதழில் நெளிந்த விசம சிரிப்பும் காட்டிக்கொடுத்தது.

பின்னை கழட்டி இருந்தாலும்.. இன்னும் தன்னை விட்டு சரியாத சேலையை இன்னும் பதட்டத்தில் தோளோடு இறுக்கி பிடித்து.. தலை குனிந்து அவள் நின்றிருக்க மெல்ல அவளை நெருங்கினான் ரியான்.

அவன் அருகே வரவர.. அவளின் உடல் வியர்வையில் குளிக்க கால்கள் மெல்ல தளர ஆரம்பித்தது.

தொட்டுவிடும் தூரம் வந்தவன் எதுவும் செய்யாமல்.. அமைதியாய் நிற்க, 

‘அவனின் பாதம் தன்னருகே இருப்பதிலேயே.. அவன் எந்த அளவு நெருங்கி நிற்கிறான்..’ என்பது புரிந்தாலும், அவனை நிமிர்ந்து பார்க்கும் துணிவு இன்றி இன்னும் தலை குனிந்தாள் இனியாள்.

“அம்மூஊஊஊ…” என காற்றுக்கும் வலிக்காத குரலில் அழைத்தவனின் கிறக்கமான ஓசையில், 

‘மூர்ச்சையாகி விடுவோமோ..!’ என்ற அச்சம் பரவ கண்களை இறுக மூடிக்கொண்டாள் அவள்.

அதற்கு மேல்.. எந்த சத்தமோ, அசைவோ இல்லாதிருக்க மெதுவாக விழி திறந்து தனக்கு முன்னால் பார்க்க அங்கு யாரும் இல்லை.. என்றதும்,

‘ஒரு வேளை கனவு கண்டோமோ..?’ என நினைக்கும் படியாக இருந்தது அந்த அறையின் நிசப்தம்.

“இல்லையே..! அவர் வந்த மாதிரி தானே இருந்துச்சு..! இனியா உனக்கு முத்தி போச்சுடீ..” என தனக்கு தானே பேசிக்கொண்டு திரும்பியவள் ரியானின் நெஞ்சில் முட்டி நின்றாள்.

அதிர்ந்து அவனை நிமிர்ந்து பார்க்க, “உன் முகத்தை பார்க்க.. என்னவெல்லாம் பண்ண வேண்டி இருக்கு..‌! 

ஆமா, ஹோட்டல்ல வச்சு‌ என்னமோ பண்ணியே..? என்ன அது..?” என்றான் கள்ளச்சிரிப்போடு.

செய்யும் போது தெரியாத கூச்சம் இப்போது தெரிய, “ப்ளீஸ் ங்க..” என்றாள் சிணுங்கலாய்.

“அதான் அம்மூ..” என்றவன், 

“ரிட்டன் கிப்ட் வேற‌ பெண்டிங். எல்லாத்தையும் எப்போ செட்டில் பண்ண போறே..‌?” என்றான் கிறங்கி.

அதில் விழி விரிய அவனை பார்த்தவளின் கண்ணோடு கண் கலக்கவிட்டவன், 

“என் குழந்தைங்க கொடுத்த மாதிரி வேணாம். 

என் பொண்டாட்டி கொடுக்கற பஸ்ட் கிப்ட்.. காலத்துக்கும் மறக்க முடியாத மாதிரி இருக்கனும். 

கிடைக்குமா..?” என்றவனின் விழியில் வழிந்த கிறக்கமும்.. மயக்கமும்.. இனியாளையும் வசப்படுத்த,

தன்னையும் அறியாமல் அவனை நெருங்கியிருந்தாள் அவனின் மனையாள்.

அவளின் நெருக்கத்தில் அவளின்‌ இடையோடு கையிட்டு.. தன்னருகே இடைவெளி இன்றி நெருக்கிக்கொண்டவன்,

“பஸ்ட் டைம் சேரில உன்னை பார்த்துமே டோட்டல் ப்ளாட்.. கிறங்க வைக்கற நீ.. இனி நீ சேரியே கட்டு..” என சொல்லி எதிர்பார்ப்போடு அவளின்‌ முகத்தினருகே நெருங்க, 

இனியாளும் தன்னை மறந்து அவனுக்கு இசைய ஆரம்பித்தாள்.

இருவரின் விழியும் காதல் மொழி பேச இதழ் இணையும் தருணம்.. 

அவசரமாக திறந்த கதவின் பின் நின்றிருந்த சந்தீப், “நா பாக்கல..” என சொல்லிக்கொண்டு திரும்பியவன், வேகமாக அங்கிருந்து ஓட இருவரும் பதறி விலகி நின்றனர். 

முற்றுப்பெறாத முத்தத்தின் தாக்கமும்.. தங்களை இந்த நிலையில் அடுத்தவர் பார்த்த கூச்சமும் ஒருங்கே தாங்க.. இருவரின் முகம் சிவந்து போனது. 

அதிலும் ரியானின் நிறத்திற்கு.. அவனின் அந்த சிவப்பு.. அப்பட்டமாக அவன் நிலையை சொல்ல, 

அவசரமாக அங்கிருந்த குளியலறைக்குள் தஞ்சமானான் அவன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!