Skip to content
Post Views: 1,273
கீதம் 💜 27
மணாலியில் இரு நாட்கள் கழித்து விட்டு, சந்தோசமாய் திரும்பி வந்து கொண்டிருந்தனர். போகும் போது மனதில் இருந்த கொஞ்சநஞ்ச தயக்கம் அனைத்தும் மறந்து, முற்றும் முழுதாய் அவன் மனையாளாக மட்டுமே மனம் வியாபிக்க, அவன் தோளில் தலை சாய்ந்து, கண் மூடி இருந்தாள். உள்ளம் நடந்தவைகளை எண்ணி பார்க்க, முகம் முழுவதும் வெட்கத்தில் சிவந்து இருந்தது.
Advertisement
மணாலியில் வந்திறங்கியவர்கள் இரவு பொழுதை இனிதே கழித்து விட்டு, காலையில் ஹடிம்பா தேவி கோயில் சென்று வழிபட்டு, பின் பனிச்சறுக்கு சொர்க்கமான சோலாங் பள்ளத்தாக்குக்கு வந்து விட்டனர்.
பனி மூடிய சிகரங்களை பார்த்தவளோ ” அரு, செமயா இருக்குடா. வாவ். ” அவன் கைகளை பற்றி கொண்டவள் விடாது அவனையும் இழுத்து கொண்டே ஓடினாள். திரும்பி பார்க்கும் இடமெல்லாம் வெள்ளை உறைபனி மனதை கொள்ளை கொள்ள, சிறு பிள்ளை போல ஆர்ப்பரித்து மகிழும் அவளை கண்டவனுக்கு
Advertisement
Advertisement
” இதை எல்லாம் பார்த்தா உனக்கு ரொம்ப பிடிக்கும்னு தானே இழுத்துட்டு வந்தேன். வர மாட்டேன்னு அங்க கத்திட்டு இங்க வந்து குதிக்கிறத பாரு. ” செல்லம்மாய் கோபிக்க.
“ரெண்டு நாளா நீங்க பண்றது எல்லாம் பார்த்து, இழுத்துட்டு வந்து ரூமுல போட்டு அடைச்சு வச்சிருவீங்கனு நினைச்சேன். பரவாயில்ல, நீங்களும் அப்போப்போ நல்ல பிள்ளாயா தான் இருக்கிங்க .” அவளின் கண் சிமிட்டலில்
Advertisement
” இன்னைக்கு நீ பிரீ, ஜாலியா என்ஜோய் மட்டும் பண்ணு, பட் நாளைக்கு ஹெவி ஒர்க் இருக்கும் மேடம் ” அவனும் சீண்டினான்.
” நாளைக்கு தானே பார்க்கலாம், பார்க்கலாம்” என ஓடியவள் சட்டென நின்று கை நிறைய ஐஸ் கட்டிக்களை எடுத்து அவன் மீது வீசி எரிந்தாள்.
” ஏய்,.., ” என பதறி விலகியவன், ” உன்னை…” அவள் மேலும் மாறி மாறி வீசி எரிந்து, கொண்டிருக்க அங்கு ஏற்கனவே விளையாடி கொண்டிருந்த குழந்தைகளும் இவளுடன் சேர்ந்து கொண்டனர். கத்தி கூச்சல் போட்டபடி, ஐஸ் கட்டியால் அடித்து அடித்து விளையாடி, மூச்சிரைத்து ஓய்ந்து போய் தான் பெஞ்சில் சென்று அமர்ந்தார்கள்.
ஆழ பெருமூச்சுகளை எடுத்து விட்டபடியே, தடதடக்கும் இதயத்தை சமன் செய்து, சற்று நேரம் அமைதியாய் அவன் முகத்தையே பார்த்து கொண்டு இருந்தவள், ” ரொம்ப வருசத்துக்கு அப்புறம் இன்னைக்கு தான் இப்படில்லாம் விளையாடுறேன். ரொம்ப தேங்க்ஸ்..,” என்றாள் மனமார.
இன்னமும் அந்த குழந்தைகளின் சிரிப்பையே ரசித்து கொண்டு இருந்தவன் அவள் புறம் சரிந்து அமர்ந்து ” நம்ம பசங்க கூட வந்தா, இன்னும் செமயா இருக்கும்ல” முகம் மலர, இதழ் கடையோரம் சிரிப்புடன் அவளை பார்க்காமலேயே அவன் பேச,
” ம்ம்ஹ்ம்., இன்னும் ஜாலியா இருக்கும். ” சொல்லியபின்பே அவன் முகம் பார்த்து, ” அச்சோ.., அதுக்குள்ள குழந்தையா.,” என வெட்கத்தில் சிவந்தாள். நல்லவேளை அவன் கவனம் இவள்புறம் இல்லாது போனதால், அவன் சீண்டலில் இருந்து தப்பித்தாள்.
வேறு பேச்சினை மாற்றி அவள் பேச ஆரம்பிக்க, அவளின் கைப்பற்றி அருகே அமர்ந்து, அவனும் தன் போக்கில் இளமை பருவத்தில் நடந்த கதையெல்லாம் கூறி கொண்டிருந்தவன் தன் பெற்றோரோடு அங்கே விளையாடி கொண்டிருந்த சிறுவனை பார்த்ததும்
” நானும் அப்பா கூட இப்படி தான் ஓடி விளையாடுவேன். செம்ம என்ஜோய் பண்ணுவோம். அப்பா பிஸியானதுக்கு அப்புறம் வரவே முடில. காலேஜ்ல பசங்க கூட வந்தாலும் அந்த ஹாப்பிநெஸ் கிடைக்கல. இன்னைக்கு தான் அதை திருப்பி பீல் பண்றேன். “
அவள் மௌனமாக அவனை பார்த்து கொண்டு இருந்தாலே தவிர எதுவும் பேசவே இல்லை.
” ஆமா நீ உங்க அப்பா கூட எங்க எல்லாம் போயிருக்க..,” என்றான்.
“!!!”
அவள் அப்போதும் பேசாமல் இருக்க ” நந்திதா, ” என தோளை தட்ட
ஹான் என திரும்பினாள்.
” நான் பாட்டுக்கு பேசிட்டு இருக்கேன். நீ பதிலே சொல்லாம ட்ரீம்ஸ்ல இருக்கியா..,”
” என்ன கேட்டிங்க..,”
” உங்க அப்பா கூட இங்க எல்லாம் வந்திருக்கியானு கேட்டேன்..,” என்றான் திரும்ப
” இல்லை..” மெதுவே முணங்க
” ஓ ஓ .., ஒன்லி தமிழ்நாடு தானா”
“!!!”
” என்னம்மா..,” திரும்பி அவள் தோளை திருப்பி முகம் பார்க்க கண்ணீல், நீர் படலம் இமைகளில் தேங்கி நின்றிருந்தது.
” எதுக்குடா.., ” விழி நீரை பார்த்ததும் பதறி கேட்க, விழிநீர் கன்னம் தாண்டி வழிய தொடங்க, சட்டென இறுகி போய் அடக்கி கொண்டாள்.
அவன் முகம் காணாமல் ” இல்ல., அது ..,” என்றவளோ, சற்றே தலை கவிழ்ந்து, கண்ணீரை உள்ளிழுத்து தன்னை சமன்படுத்தி கொண்டு, ” அப்பா என்னோட பத்து வயசுல இறந்துட்டாங்க. அவரு இருந்தவரை தோள்ல தூக்கிட்டு போய் எல்லா இடத்தையும் சுத்தி காட்டுவாரு. இப்போ.., ” அதற்கு மேல் பேச முடியாமல் தரையை பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தாள். அவனுக்கும் அது புதிய தகவலாக இருந்தது. அப்பா இறந்து விட்டார் என்பது வரை மட்டுமே அவனுக்கு தெரியும்
” சாரிடா., உங்க அப்பாவை பத்தி கேட்டு நானே ஞாபமாகப்படுத்திட்டேனே., சாரி., ” கரம் கோர்த்து, ஆறுதலாய் அவள் தோளை அணைத்து கொண்டு, தட்டி கொடுக்க, யாரிடமும் தன் துக்கங்களை காட்டி கொள்ள விரும்பாதவள், தனக்கான துணை கிடைத்ததும், அதுவரை மனதை அழுத்தி கொண்டு, மருகி கொண்டிருந்த தன் சோகங்களை எல்லாம் தன் இளமை பருவத்தில், தந்தைக்காக ஏங்கிய ஏக்க கவலைகளை கலங்கிய குரலில் கூறி கொண்டே இருந்தவள் தொடர்ந்து.
“அப்பாவும் ரொம்ப ஹெல்பிங் மைண்ட் உள்ளவங்க. கார் வச்சி சொந்தமா ஓட்டிக்கிட்டு இருந்தாரு. நம்ம ஹாஸ்பிடலுக்கு வந்த ரவுடி ஒருத்தன பத்திரமா வீட்டுக்கு போய் கார்ல விட்டுட்டு வர போனார். அவனை கொல்ல வந்தவங்க அப்பாவையும் சேர்த்தே கொலை பண்ணி தூக்கி போட்டு போய்ட்டாங்க.
ஆச்சிடேன்ட் கேஸ்னு மாத்தி சொல்லி அவரு உடம்பை பார்சல்ல கட்டி கொடுத்தாங்க. அன்னைக்கு தான் நான் கடைசியா அவரை பார்த்து அழுதது. அடுத்து சொல்லி அழுக கூட யாரும் இல்ல. அம்மாவும் இறுகி போய் நின்னாங்க. அவங்க எங்களுக்காக வாழ்ந்தாங்க. நானும் அவங்களுக்காக என் கஷ்டத்தை எல்லாம் மனசுல வச்சிட்டு சிரிச்சு வாழ பழகினேன்.
எங்க ரெண்டு பேருக்கான ஒரே ஆறுதல் என் தம்பி மட்டும் தான். அவனை நான் என் பிள்ளை மாதிரி தான் வளர்த்துட்டு இருக்கேன். “
அவள் கூறிய அனைத்தையும் அமைதியாக கேட்டு கொண்டிருந்தவன் இடையில் எவ்வித கேள்வியும் எழுப்பவே இல்லை. தன் மன பாரங்களை எல்லாம் அவனிடம் கொட்டி கவிழ்த்து விட்டு, இன்னுமே அமைதியாய் பனி சிகரங்களை பார்த்து கொண்டு இருந்தாள்.
சில நொடி கழித்து ” அப்பா இறந்த அப்புறம் அம்மா எங்கேயும் போக மாட்டாங்க. நானும் போனதே இல்லை…,இப்போ தான் உங்க கூட வர்றேன் “. அந்த பனி பிரதேசத்தில் உறைந்து கிடந்த அவளின் சோகங்களும் உருகி நீராய் வழிந்து ஓடி மறைந்தது..
இத்தனை நேரமும் அவன் தோளை இறுக்க பற்றி கொண்டு, சாய்ந்து பேசி கொண்டிருந்தவளை இனியும் காண சகிக்காமல், பொறுக்க முடியாமல் ” எந்திரிச்சி நில்லு ” என்றான் அதட்டி.
அவள் திகைத்து பார்த்து சட்டென்று எழுந்து நிற்க, அவளை முதுகில் சுமந்து கொண்டு எட்டு வைக்க ஆரம்பித்தான்.
“அரு என்ன பண்றிங்க, விடுங்க..,” என அவளின் கத்தலை கூட பொருட்படுத்தாமல் சற்று தூரம் தூக்கி செல்ல, தொடர்ந்து அவள் கத்திய பின்பே கீழே இறக்கினான்.
” என்னாச்சு உங்களுக்கு. ஏன் இப்போ தூக்கிட்டு வந்திங்க..,” அவன் செயலில் புரியாமல் குழம்பி போய் கேட்க.
” நீ தான் உங்க அப்பா தோள்ல தூக்கிட்டு சுத்துவாருனு சொன்ன. அவர் இல்லை, அப்போ நான் தானே உன்னை தூக்கி சுமக்கணும். இதுக்கு அழுதுட்டு வேற இருப்பியா., ஏன் நான் இல்லையா.,?” என்றவனை பார்த்தவளுக்கு அழுகையோடு சந்தோசம் சேர்ந்து கண்ணீராய் வெளி வந்தது.
” இப்போ தானே சொன்னேன்.,அழுகாதன்னு.., ஏண்டா கஷ்டப்படுத்துற ” குரல் கம்ம கூறியவனை பார்த்து , தலையை இடவலமாய் ஆட்டி ” இனி அழுக மாட்டேன்., சாரி., ” அவனை இறுக்க கட்டி கொண்டு, நெஞ்சில் முகம் பதித்தவளை, காற்று கூட உள் நுழையாமல் அவனும் காத்து நின்றான். எத்தனை நேரம் நின்றிருந்தாலோ அவர்களே அறியவில்லை. அதன் பின்னே சுற்றம் உணர்ந்து விலகி நின்றாள்.
அமைதியாக நடக்க தொடங்கியவர்கள், அதன் பின் சகஜமாய் தங்களை பற்றி பேச ஆரம்பித்தனர்.
” அப்போ வைபவ் உங்க அப்பாவை பார்த்ததே இல்லையா “
” அவனுக்கு ஒரு வயசு இருக்கும் போதே அப்பா போய்ட்டாங்க. அவன் போட்டோல மட்டும் தான் பார்த்து இருக்கான். “
” ஓஓ..,”
” திடிர்னு ஏன் வைபவ் பத்தி கேக்குறீங்க?”
” இல்லை.., அவன் உங்க அப்பாவை பத்தி அடிக்கடி எதாவது சொல்லிட்டு இருப்பான், சோ நான் அவர் கொஞ்ச வருசத்துக்கு முன்னாடி தான் இறந்துருப்பார்னு நினச்சேன்..”
” அவன் இதுக்கு முன்னாடி உங்ககிட்ட பேசி இருக்கானா?” வியப்பாய் கேட்க
” ம்ம்ம்.., டூ இயர்சா அவன் கூட பேசிட்டு தான் இருக்கேன். கேம்ப் ப்ரோப்லேம் ஆனதுல இருந்து உன் சேப்டிகாக பேச ஆரம்பிச்சேன்…,”
“ரெண்டு பேரும் இதுவரை என்கிட்ட சொல்லவே இல்லை..,”
” வீக்லி ஒன்ஸ் பேச ஆரம்பிச்சோம். அப்பறம் அவனே டெய்லி பேச ஆரம்பிச்சுட்டான். அவனோட படிப்பு சம்பந்தமா.., என்ன டவுட் வந்தாலும் என்கிட்டே கேப்பான். சார், சார்னு உன்னை விட அவன் தான் நிறைய பேசி இருக்கான்.”
” ஆமாம்., அவன் சார் சொன்னாங்கன்னு அடிக்கடி சொல்லுவான். அது நீங்களா ? “
” ம்ம்ஹ்ம்., நானே தான். “
” டெய்லி பேசினீங்களா..,? என்கிட்டே ஏன் அவன் சொல்லல ? “
” போச்சு உளறிட்டேன்… ” என மனதிலேயே தலையில் கொட்டி கொண்டவன் அவளை திசை மாற்ற ” ம்ம்ஹ்ம்., என் மச்சானை நான் தான் பார்த்துக்கணும்., பொண்டாட்டி தான் கண்டுக்கவே இல்லை., இப்பவும் கண்டுக்காம இருக்கா., ” அவள் கையை இறுக்கி பற்றி தன் மேல் சாய்க்க.
” விடுங்க., என்ன இது .., நடு ரோட்ல போயிட்டு இருக்கோம்., “
” அப்போ கொஞ்ச நேரம் முன்னாடி கட்டி புடிச்சுட்டு நின்னது எல்லாம் ரூம்லயா., ” வேண்டுமென்றே கேலி செய்ய.
கடவுளே., இனி இதையே சொல்லி காட்டி பேசுவாரே., மனதில் வெட்க பூ பூத்தாலும் அதை மறைத்து ” அரு! நடந்து நடந்து கால் ரொம்ப வலிக்குது. சாப்புட்டு ரூம் போகலாமா? ரெஸ்ட் எடுக்கனும். “
” ரூம்ல போய் பண்ணலாம்கிற., ஓகே போவோம்., “
சற்றே இளைப்பாறி மாலை மயங்கும் வேளையில் மீண்டுமாய் ஒரு நடை பயணம் ஆரம்பித்தனர். பியாஸ் நதியின் குறுக்கே, நிலவு தண்ணீரில் ஒளி வீசும் நிலையில், இரவின் குளுமையில், நிலவின் அழகில், விண்மீன்களை பார்த்து ரசித்தபடி, நடை பயின்றிருந்தனர். நதியில் தெரியும் நிலவு பிம்பத்தை பார்த்தால் கொள்ளை அழகாய் காட்சியளித்தது. சுற்றி எங்கும் அமைதியே வியாப்பித்திருக்க, இருவரின் இதய துடிப்பு ஓசை மட்டும் மெல்லிசை வாசித்து கொண்டிருந்தது. மௌனம் வெண் சாமரம் வீச, அமைதி குடை பிடித்தது.
நித்தமும் ரத்தம், வலி, கதறல், மரணம் இப்படி ரணகள வாழ்க்கையில், தனிமை, அமைதி, நிம்மதி என எதையும் ஆழ்ந்து சுவாசிக்க முடியவில்லை. இன்றோ இந்த சூழ்நிலை ஒரு ஏகாந்தத்தை அவர்களுக்கு அளித்தது. நிம்மதியாய் ஒரு ஆழ்நிலை தியானத்தில் ஈடுபட்டது போல் அமைதியில் மனம் சுகித்தது. ஆரவ் அருகே அதில் லயித்து நடந்து கொண்டிருந்தவளுக்கோ இத்தனை நாள் தவிப்புகள் மறந்து, இறுகி கிடந்த மனம் பூ சிதறல்களாக மாறியது போன்ற நிலை. அவளின் இறுக்கங்கள் தளர்ந்து மனம் இன்னுமே அவனோடு ஒன்றியது.
அவள் இங்கு வந்த போது நினைத்தது அனைவரையும் போல அறையினில் அடைந்து மோகத்தில் விழ போகிறோம் என்றே. ஆனால் அவனோ அவள் இறுக்கம் தளர, மனதளவில் இன்னும் வலு பெற மருத்துவனாய் மருந்து கொடுத்து கொண்டிருந்தான். அதை உணர்ந்தும் இருந்தாள்.
” அரு, ஏன் அமைதியா இருக்கீங்க…,?” மௌனத்தை கிழித்து கொண்டு மெல்லிய குரலோசை எழும்ப
“இந்த மாதிரி அமைதி எல்லாம் நமக்கு கிடைக்காது. கிடைக்கும் போது தான அனுபவிக்கனும். என்றவன் மேலும் தொடர்ந்து ” அடுத்து நம்ம என்ன பண்ணலாம்னு வேற யோசிச்சுகிட்டு இருந்தேன்…,”
” எதை பத்தி..,”
” பியூசர், தென் நம்ம குழந்தைங்க பத்தி..,”
” குழந்தையா..,” என சட்டென்று பதறி கேட்க
” ம்ம்., ” என்றவன் அவள் பதற்றம் உணர்ந்து ” ஆமா, அதுக்கு ஏன் இவ்ளோ ஷாக் ஆகுற?”
” ஒன்னுல்ல,” என்றவள் அவன் ஆழ்ந்து பார்க்கவும்
“இல்ல., திடிர்னு இப்போ தான் மேரேஜ் முடிஞ்சு, உங்க கூட தனியா வர்றேன்., ” அமைதியாக அவளையே பார்க்க
“!!! “
” நீங்க வேற காலையில் இருந்து குழந்தை அது இதுனு பேசிட்டு இருந்திங்க. கொஞ்சம் நெர்வசா ஒரு மாதிரி இருக்கு.,”
” ஓய், இவ்ளோ யோசிச்சா, பத்து பசங்க பிளான் என்ன ஆகுறது? ” என்று கலாய்த்தவனை பார்க்க கூட முடியாமல் முகம் சிவந்தாள்.
“!!!”
“என்ன மேடம், பதில் சொல்லுங்க?”
“உனக்கு தான் குழந்தைன்னா ரொம்ப பிடிக்குமே.” புருவம் சுருக்கி குறுகுறுப்பாய் பார்க்க
அவன் பார்வையில் கூச்சம் பிறக்க ” குழந்தை பிடிக்கும். அதுக்காக உடனே… “
” ஓகே. கொஞ்ச நாள் என்ஜாய் பண்ணுவோம். அப்புறம் பேபி பத்தி யோசிப்போம்..,” டக்கென்று சொல்ல
சில நொடி யோசனையில் இருந்தவள் அவனை பார்த்து தயங்கி ” இல்லை. நம்ம தனியா போய் ஊர்ல இருக்க போறோம்., அதான் யோசிக்கிறேன்.”
” இருந்தா என்ன., வேற பிளான் இருக்கே., ” அதையும் இலகுவாய் சொல்ல.
” எனக்கு குழந்தை வேணும்னா என்ன செய்விங்க..,”
” சிம்பிள். அம்மா, அத்தையை ஆறு ஆறு மாசம் அங்க வர சொல்லுவேன். சகுந்தலா அம்மா கூட நான் வர சொன்னா வந்துருவாங்க”. என்றவனை பார்த்தவள்
” எல்லாம் பிளான் பண்ண மாதிரியே பேசுவீங்களா..,”
” யா. ரெண்டு வருஷம் அத தானே பண்ணிட்டு இருந்தேன்.”
புரியாமல் பார்த்தவளிடம் ” உன்னை பிரிஞ்சி வந்த நாளுல இருந்து வேற என்ன வேலை? பிளான் பண்ணி தான் எதுவும் பண்ணுவேன். ஒவ்வொண்ணா யோசனை பண்ணி, பிளான் போட்டேன் .,”
” என்ன எல்லாம் பிளான் பண்ணீங்க ?”
“அது எல்லாம் நிறைய பிளான் இருக்கு. ஒவ்வொண்ணா நடக்கும் போது சொல்றேன். எக்ஸாக்டா சொல்லனும்னா நம்ம பொண்ணு கல்யாணம் முடிச்சி, நமக்கு அறுபதாம் கல்யாணம் வரை பிளான் பண்ணிட்டேன். அடுத்து யோசிக்கிறதுக்குள்ள நம்ம நிஜமாவே கல்யாணம் பண்ணிட்டு இங்க வந்துட்டோம். “
” எது பொண்ணு கல்யாணமா.., ஓவரா பிளான் பண்றீங்க., சார், உடம்புக்கு ஆகாது.. “
” ஆகுமா., ஆகாதான்னு நான் பார்த்துக்குறேன். நீ டென்ஷன் ஆகாத., “
கிண்டலாய் சொன்னாலும் தங்களை பற்றி கற்பனையில் வாழ்க்கை நடத்தியவனை ஆழ்ந்து பார்த்து, கரம் கோர்த்து கொண்டவள் அவன் வசம் இன்னும் மயங்கினாள் .
அதற்கு பின்னான அவள் பொழுதுகள் அனைத்தையும் அவனே களவாடி கொண்டான். சிரிக்க வைத்து, சிவக்க வைத்து, மனதை தீண்டி, உணர்வை தூண்டி, துகில் உரித்து, துயில் மறுத்து, துள்ள துவல, துவண்டு, அவளை அவளுக்கே புதிதாக உணர வைத்தான்.
இத்தனை வருட சோகங்கள், வருத்தங்கள், தாபங்கள், அனைத்தையும் புதைத்திட்டு அவள் கொண்ட நேசம், காதல் மட்டுமே முற்றும் முழுதாய் உயிர்த்திருக்க இதோ அவன் கை வளைவில் கன்னியவள் புது மலராய் பூத்த சந்தோஷத்தில் தன் உயிர் சேர்ந்தாள்.
error: Content is protected !!