Skip to content
Post Views: 11,299
என் வாழ்வில் அர்த்தமாய் நீ!… அத்தியாயம் 22
மகளின் கண்ணீர் முகத்தை தந்தையால் பார்க்க முடியவில்லை. பிரவீனாவுக்கு வேலைக்குப் போக வேண்டும் என்று ரொம்ப ஆசை. படித்து முடித்தவுடன் அந்த கனவில் தான் இருந்தாள். தந்தை வந்து “உங்க அத்தைக்கு உன்னை மருமகளா எடுத்துக்க ஆசை பிரவீனா. சின்னவனுக்கு உனக்கு கேக்குறாங்க. ரெண்டு நாள்ல பூ வச்சு நிச்சயம் பண்ண வாராங்க.” கல்யாணம் பெண்ணின் சம்மதம் கூட கேட்காமல் வெறும் தகவலாக தான் சொன்னார் தேவதாஸ்.
வேலைக்கு போக வேண்டும் என்று ஏக்கம் மனதில் இருந்தாலும், வீட்டின் மூத்த பெண்ணாக தனக்கு பின் இருக்கும் தம்பி, தங்கையை யோசித்து அப்பா சொன்ன மாப்பிள்ளைக்கு கழுத்தை நீட்டியவள் பிரவீனா. அதை நினைத்து இருவர் மனமும் கனத்தது.
“அப்பா.. அன்னைக்கு நான் உங்களுக்கு மகளா மட்டும் தான் இருந்தேன். ஆனா, இன்னைக்கு ஒரு பிள்ளைக்கு தாய்… என் பிள்ளையை யோசிச்சு தான் எந்த முடிவும் எடுப்பேன்”
Advertisement
“நம்ம ஆதிரனுக்காவும் தான் பிரவீ , மித்ரனை திருமணம் செய்து கொள்ள சொல்கிறேன். உண்மையில் தம்பி ரொம்ப நல்லவர்ம்மா”
“அப்பா, அவர் நல்லவர் தான். பிரச்சனை அது கிடையாது. ஆனா, அவரால ஆதிரனுக்கு அப்பாவா இருக்க முடியாது”
“இளங்கோ இருந்தா கூட இவ்வளவு பாசமா இருக்க முடியுமான்னு எனக்கு தெரியாது பிரவீனா. அவனோட சொந்த இடத்துல கூட அவனுக்கு உரிமை இல்லை. ஆனால், மித்ரன் ஒரு நாளும் உன் பையன விட்டுக் கொடுக்க மாட்டார்”
Advertisement
“குடும்பத்துக்கு வெளிய நின்னு ஒருத்தர் ஆயிரம் வாக்குறுதி கொடுக்கலாம் ப்பா. ஆனா, குடும்பமா வாழும் பொழுது தான் நிதர்சனம் தெரியும். ஆதிரன் என்னைக்கும் இளங்கோவோட பையன் தானே தவிர, மித்ரன் ஓட பையன மாற முடியாது. வெறும் வாய் வார்த்தைக்கு வேணா நாம சொல்லிக்கலாம்”
Advertisement
நான் முடிவெடுத்துட்டேன் பிரவீனா மித்திரனுக்கு உன்னை பேசி முடிக்க போறேன்”
“அதுக்கு ஒரு நாளும் நான் ஒத்துக்க மாட்டேன். அன்னைக்கு பெத்தவங்க என்ன சொன்னாலும் சரின்னு கேட்டுட்டு போன பிரவீனா, இன்னைக்கு கிடையாது. எனக்கு என் பையன் தான் முக்கியம்.. அவனுடைய வாழ்க்கை தான் முக்கியம்”
“உன் பையன் தான் பிரவீனா இந்த முடிவெடுக்கவே முழு முதல் காரணம்”
Advertisement
“அப்பா உங்க பொண்ணு வாழ்க்கையில் பெரிய அடிபட்டவ.. அதுவும் எங்க? சொந்த குடும்பத்தாலே.. எல்லாரையும் பார்த்தாச்சு. என் குடும்பம், என்னோட ரத்த சொந்தம்ன்னு நின்ன என்னையவே குத்தி பதம் பாத்தாச்சு… முன்ன பின்ன தெரியாத ஒருத்தன் தான் என் பிள்ளைக்கு நல்ல தகப்பனா இருக்க போறானா?” என்றவள்,
“என் புருஷன் செத்து அந்த வீட்ல எனக்கு உரிமையில்லாமல் ஒத்த பிள்ளையை கையில புடிச்சு இந்த வீட்டு படி நான் மிதிக்கும் பொழுது பிறந்த வீடுன்னு நம்பித்தான் உள்ள வந்தேனே தவிர, பிறந்துவிட்டு ஆளுகளை நம்பி வரல… வளர்த்த கடா நெஞ்சுல முட்டுன்ற கதையெல்லாம் இங்க வந்து தான் உண்மைன்னு தெரிஞ்சுகிட்டேன். நம்ம மக, நம்மள நம்பி, நம்ம வீட்ல இருக்கா. நம்ம என்ன சொன்னாலும் கேட்பா அப்படின்னு நினைப்பு இருந்தால் அதை அழிச்சுருங்க… இந்த உலகம் எவ்வளவு சுயநலமானதுன்னு என் குடும்பமே எனக்கு காட்டிக் கொடுத்திருச்சு பெத்தவங்கள தவிர பிள்ளையை யாராலும் அளக்க முடியாது என் கண்ணால நான் அதையும் பாத்துட்டேன் போது எனக்கு கல்யாண வாழ்க்கை”
“ஒருத்தரோட வாழ்ந்து ஒரு பிள்ளையின் கையில கொடுத்து பின்னாடி, எதுவுமே நடக்காத மாதிரி புது பொண்ணு வேஷம் என்னால போட முடியாது. மித்ரன் கிட்ட நீங்க தெளிவா சொல்லிடுங்க. அவரு வேற ஆள பார்த்துக்க சொல்லி” ஆவேசமாக சொன்னாள் பிரவீனா.
தேவதாஸ் முகத்தில் நிறைய இயலாமை… “நான் பெத்து, நல்லது சொல்லிக் கொடுத்து வளர்த்த என் மகளுக்கு இவ்வளவு வைராக்கியம் இருக்குன்னா உன்னோட அப்பன் நான்… என் பேரனுக்காகவும், என் மகளுக்காகவும் இந்த கல்யாணம் அவசியம். நீயே நினைச்சாலும் தடுக்க முடியாது”அவரும் உறுதியாக சொல்லும் போதே, ஆர்த்தி வந்து விட்டாள்.
அதுவரை தகப்பன், மகளுக்கு இடையே நடந்து கொண்டிருந்த வாக்குவாதம் பட்டென்று நின்று கொண்டது. எதுவும் நடக்காத மாதிரி இருவரும் அமர்ந்து கொள்ள, ஆர்த்தி மனதில் சந்தேக விதை.
“வெளிய வாசல் வரைக்கும் சத்தம் கேட்டுச்சே, உள்ள வந்ததும் ரெண்டு பேரும் அமைதியா இருக்காங்க… என்னவா இருக்கும்?” யோசனையோடு ஆர்த்தி பார்க்க தந்தை, மகள் இருவரும் எதையும் வெளிக்காட்டி கொள்ளவில்லை.
பிரேம் உள்ளே வந்தவன் தயக்கமாக தன் அக்காவை பார்த்தான். அவளும் சரி தேவதாசும் சரி என்ன ஏது என்று பிரேமிடம் ஒரு வார்த்தை கூட கேட்கவில்லை. பிரவீனாவும் நிதர்சனம் இதுதான் என்று ஏற்றுக் கொண்டாள். என்ன தான் ரத்த சொந்தமாக இருந்தாலும், ஒரே வயிற்றில் பிறந்து வளர்ந்து இருந்தாலும் அவரவர் குடும்பம் என்பது அவன் மனைவி, குழந்தைகள் மட்டும் தான். பிரவீனா, தான் எவ்வளவு முட்டாளாக இருந்துள்ளோம் என்பதை உணர்ந்தாள். பிரேமின் குழந்தை வயிற்றில் ஐந்து மாத கருவாகத்தான் இருக்கிறது.
அந்த குழந்தைக்காக இப்பொழுதே அவ்வளவு யோசிக்கிறான். தன்னுடைய எல்லாம் தன் குழந்தைக்கு சேர வேண்டும் என்று மெனக்கடுகிறான். என்ன செய்ய? தகப்பன் இல்லா பிள்ளை என்றல்லவா என் மகன் விதி வாங்கி வந்திருக்கிறான்.
அடுத்த நாள் காலை பிரவீனா அலுவலகம் கிளம்பி விட்டாள். மித்ரன் காதல் சொன்னது முதல் அந்தப் பக்கம் சென்றது கூட இல்லை. எவ்வளவு நாளைக்கு ஓடி ஒழிய முடியும். என்றாவது ஒருநாள் ஃபேஸ் பண்ண தான் வேண்டும். போடா நீயும் உன் வேலையும் என்று சொல்லும் அளவுக்கு நம் பொருளாதார நிலை இல்லை. நான் உறுதியாக இருந்தால் அவனால் என்ன செய்ய இயலும்?…
சாய் ஸ்ரீயிடம் கூட பிரவீனா எதையும் காட்டிக் கொள்ளவில்லை நல்ல நட்புதான். ஆனாலும் அவள் திருமணம் ஆனவள். விதவையும் கூட… இந்த நிலையில் தன் மேல் காதல் கொண்டு தன் பின்னால் ஒருவன் சுற்றுகிறான் என்பது, அவளுக்கு எவ்வளவு பெரிய அவப்பெயர். மித்ரன் எப்பொழுதும் போல சகஜமாக பேச முயல, பிரவீனா அளவுக்கு அதிகமாக ஒதுங்கிப் போனாள். சாய் ஶ்ரீ கூட கண்டு கொள்ள வில்லை. அவங்க ரெண்டு பேரும் எப்ப கிளோஸ்ச இருப்பாங்க, வெட்டி நிப்பாங்க தெரியாது.
மதிய உணவு இடைவேளையில், “பிரவீனா, வேலைய வந்து கூட பாத்துக்கலாம்.. சாப்பிட வாங்க” என்றான் மித்ரன். அவள் கண்டுகொள்ளாமல் இருக்க.
“பிரவீனா” என்றான் மீண்டும். ஒரு சத்தமும் இல்லை.
“பிரவீனா” காதில் விழுந்த மாதிரி கூட காட்டிக் கொள்ளவில்லை.
அவள் அருகே வந்த அமர்ந்தவன், “பிரவீனா” என்றதும் பதறிப் போய் திரும்பினாள்.
“எதுக்கு இப்ப என் பக்கத்துல வந்து உட்கார்ந்து இருக்கீங்க தள்ளி போங்க” கடுப்பாக சொல்ல,
“இதுக்கு முன்னால நான் உன் பக்கத்துல வந்து உட்கார்ந்ததே கிடையாதா? ஆபீஸ் விஷயம் பேசும் போது இப்படி பக்கத்து பக்கத்துல உக்காந்து நம்ம சிஸ்டம் பார்த்துக்கிட்டதே இல்லையா?” என்றான்.
“வேலை விசயமா ஆயிரம் பேசலாம் மித்ரன். ஆனா நீங்க? பிளீஸ் தள்ளி போங்க.. நான் ஒரு குழந்தைக்கு அம்மா. என் பேர் கெட்டு போறது எனக்கு விருப்பமில்லை” என்றாள் தெளிவாக.
பிரவீனா மனநிலை மித்திரனுக்கு நன்றாக புரிந்தது. நட்பாக பழகும் பொழுது மனதில் எந்த சலணமும் இல்லை. அதனால், பழக்கவழக்கத்தில் சங்கடம் தோன்றவில்லை. ஆனால், மனதில் இருக்கும் காதலை சொன்ன பின்.. எதார்த்தமாக பேசுவது கூட மற்றவர்களுக்கு தப்பாக போகுமோ என்ற பயம் பிரவீனாவுக்கு உண்டு என்று அறிந்து கொண்டான்.
“எனக்கு இருபது, உனக்கு பதினெட்டு. நான் லவ் லெட்டர் தூக்கிட்டு உன் பின்னாடி சுத்துறேன்.. அப்படியா பிரவீனா. கொஞ்சமாவது பெரிய பொண்ணு மாதிரி பிஹே பண்ணு ப்ளீஸ்… நீதான் என் மனைவி, ஆதிரன் தான் என் மகன். நான் உயிரோடு இருக்கிற வரைக்கும் இது மாறாத பிரவீனா. என்ன தள்ளி நிறுத்தி நீயும் தள்ளி நிக்காத. நம்ம பிரச்சனை இப்போதைக்கு முடிவ தொடாது. நான் ஒன்னும் உன்னை தூக்கிட்டு போய் தாலிய கட்டிட மாட்டேன். அதனால், நமக்குள் இருக்கிற பிரண்ட்ஷிப் கெட வேண்டாம்”
“மித்ரன் ப்ளீஸ், நீங்க என்னோட நல்ல நண்பர். தயவு செஞ்சு என்னை சங்கடப்படுத்தாதீங்க. நான் உங்க மேல ரொம்ப மதிப்பும், மரியாதையும் வச்சிருக்கேன். உங்கள ரொம்ப தப்பா பேசி விரட்டவோ, தரக்குறைவா நடத்தவோ எனக்கு விருப்பமில்லை. நம்ம ரெண்டு பேருக்குள்ளே நல்ல பிரண்ட்ஷிப் இருக்கு.. ஒருத்தரை ஒருத்தர் அவங்க அவங்க நிலையிலிருந்து புரிஞ்சுகிட்டு தள்ளிப் போயிடுவோமே” வற்புறுத்தி சொன்னாள் பிரவீனா.
“குட் இதுதான் என் பிரவீனா. அவளுக்கு தப்பானவங்க கிட்ட கூட மோசமா பிஹேவ் பண்ண தெரியாது. என்னை வெரட்டுற மாதிரியும், அவமானப் படுத்துற மாதிரியும் நீ நடந்துக்கிறது உனக்கே பிடிக்காது”
“அதனாலதான் எங்க வீட்ல சொல்லி உங்க இஷ்டத்துக்கு என்ன வளைக்க பாக்கறீங்களா?”
“நிச்சயமா இல்லை. கட்டாயப்படுத்தி தாலி கூட கட்டலாம். ஆனால், குடும்பம் நடத்த முடியுமா? நம்ம ரெண்டு பேருக்கு இடையில ஆதிரன் இருக்கான். அவன் வாழ்க்கை நம்மள நம்பி தானே இருக்கு. நமக்குள்ள ஒரு நல்ல அண்டர்ஸ்டாண்டிங் இல்லாம எப்படி ஆதிரனை நமக்குள்ள இழுத்துட்டு வர முடியும். உன் மனசுல துளி அளவு என் மேல விருப்பம் இருக்குன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான்.. கல்யாணத்தை நோக்கி உன்னை நகர்த்துவேன்” என்றான் உறுதியாக..
“ப்ளீஸ் மித்ரன். உங்களுக்கு என் வாழ்க்கையில தெரியாததுன்னு எதுவும் கிடையாது. என்னால இன்னொரு கல்யாணம் எல்லாம்… ஓ மை காட்! யோசிக்கவே முடியாது மித்திரன். ஆதிரன்.. அவனுக்கு எப்படி நீங்க அப்பாவா? உங்க மனசுல நீங்க என்னதான் நினைச்சிட்டு இருக்கீங்க?”
“எனக்கு உன்ன பிடிச்சிருக்கு பிரவீனா. உன்னோடு வாழ நினைக்கிறேன். ஒரு உண்மையான வாழ்க்கை… என்ன நம்பு நிச்சயம் நம்ம வாழ்க்கை நல்லா இருக்கும்”
“மித்ரன் நான் ஏற்கனவே கல்யாணம் ஆனவ… ஒரு பொண்ணா என்னால் எங்க அப்பா கிட்ட கூட சொல்ல முடியல. ஆனா, நேருக்கு நேரா நான் உங்ககிட்ட சொல்றேன்” உணவிடவே நேரம் என்பதால் கூட்டம் இல்லை.
“நான் ஒருத்தரோட வாழ்ந்து இருக்கேன் மித்ரன். என்னோட உள்ளும், புறமும் ஒருத்தருக்கு முழுசா கொடுத்தாச்சு… கல்யாணன்றது நீங்க நினைக்கிற மாதிரி விளையாட்டு கிடையாது. புடிக்கலைன்னா ரொம்ப ஈஸியா பிரேக்கப் பண்ணிட்டு போக முடியாது. நான் அப்படிப்பட்ட பெண்ணும் கிடையாது மித்ரன்” ஆவேசம் இருந்தது குரலில்..
“கல்யாணத்துக்கான அர்த்தம் என்னன்னு எனக்கும் தெரியும் பிரவீனா. அதனால தான் நான் கல்யாணமே பண்ணிக்காம இருந்தேன். அதோட அர்த்தம் தெரிஞ்சதால தான். இப்ப கல்யாணம் பண்ணிக்கவும் நினைக்கிறேன். இனி, காலத்துக்கு நீ தான். அதை நான் என்னைக்கும் மாத்த மாட்டேன்” அவனும் குரலில் உறுதியோடு சொன்னான்.
விரக்தியாக ஆக சிரித்தவள், “ஒரு பொம்பள மனசு நீங்க யோசிக்கிற மாதிரி யோசிக்காது மித்ரன். கல்யாணம்ன்றது ரொம்ப புனிதமான ஒரு பந்தம். அதை வெளியில நின்னு பார்த்தவங்க நீங்க.. அதை உள்ள நின்னு அனுபவித்தவ நான்… ரெண்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு. இன்னைக்கு முதல் நீ வேற நான் வேற கிடையாது. நம்ம ரெண்டு பேரோட உடல் வேறா இருந்தாலும் உள்ளம் ஒன்னு தான், சிந்தனை ஒன்னு தான், வாழ்க்கையோட பயணம் ஒன்றுதான்… என்னோட வலி, உன்னோட வலி.. என்னோட சந்தோசம், உன்னோட சந்தோசம்.. எனக்கு ஒரு தோல்வி, அது உனக்கும் ஒரு தோல்வி தான். நான் விழுந்தா நீயும் சேர்ந்து விழுவ… இதெல்லாம் கல்யாண வாழ்க்கையோட அடிப்படை மித்ரன்”
“இனிமே வர்ற காலத்துல சாகுற வரைக்கும் நம்ம ரெண்டு பேரும் சேர்ந்தே இருக்க போறோம்.. சாகும்போது கூட உனக்கு நான், எனக்கு நீதான் துணை. என்னை மாதிரி ஒரு குழந்தை, உன்னை மாதிரி ஒரு குழந்தை, நம்மளோட எதிர்காலம். நமக்கான குடும்பம்ன்னு கல்யாண வாழ்க்கையை கனவு கண்டவ நான்” பிரவீனா கண்களில் கட்டுப்படுத்தியும் நீர் வெளியேறியது.
“அதுக்கு தக்க ஒரு ஒருத்தரோட முழுமையாக வாழ்ந்திருக்கேன் மித்ரன். ஆதிரனுக்கு அஞ்சு வயசுல ஒரு தங்கை வேணும்னு ஆசைப்பட்டேன். மூணு வருஷத்துல கார் வாங்கணும் அஞ்சு வருஷத்துல ஒரு பெரிய வீடு கட்டணும். ரெண்டு குழந்தைகளுக்கும் குலதெய்வ கோயில்ல வைத்து காது குத்தனும். என் பசங்களோட கல்யாணம் அவங்க வாழ்க்கை வரைக்கும் ஒரு பெரிய கற்பனை. எங்க மாமா கூட எதிர்காலத்தை பற்றி எவ்வளவு விஷயங்களை சந்தோஷமா பேசி இருக்கொம் தெரியுமா!…” என்றவள்,
“என்னால நிச்சயம் முடியாது மித்ரன். ஒரு தடவ தலை குனிஞ்சு ஒருத்தருக்கு கழுத்தை நீட்டிட்டேன், இவர்தான் காலத்துக்குன்னு நெனச்சு என் உணர்வுகளை வெளிப்படுத்திட்டேன், அவரோட குழந்தைய வயித்துலையும் சுமந்துட்டேன், என் கழுத்துல தொங்குன தாலியும் நான் வச்ச பூவும், பொட்டும் ஒருத்தருக்கானதாவே இருக்கட்டும் மித்ரன். என்னை, மாத்த சொல்லாதீங்க. அதை மாத்திக்கிற அளவுக்கு துணிச்சலான பெண் நான் கிடையாது” அவள் கண்ணீர், மித்ரன் கையை தொட,
பிரவீனா கையை பிடித்து தட்டி கொடுத்தான். அவனை நிமிர்ந்து பார்த்தவள்,
“நீங்க என் கைய பிடிச்சு இருக்கீங்க. எனக்குள்ள அது தப்பாவே படல. இதுதான் மித்ரன் நமக்கான இடம்ன்னு நான் நினைக்கிறேன். என்னால் உங்களை என் பக்கத்தில் வைத்து பார்க்க முடியும். என் ஜோடியா பாக்க முடியாது” என்று அவனுக்கு புரியும் படி சொல்லிவிட்டாள்.
“சரி வா சாப்பிட போலாம். முகம் கழுவி வா… கண் ரெண்டும் சிவந்து இருக்கு” அவன் என்ன நினைக்கிறான் என்று அவளுக்கு தெரியவில்லை. ஆனாலும், தன் நிலைப்பாட்டை சொல்லிவிட்டாள்.
பிரவீனா போய் முகம் கழுவி வர, இருவரும் சாப்பிடும் இடம் நோக்கி நகர்ந்தார்கள். இருவரும் நடுத்தர வயதிற்கு முதல் நிலையில் நிற்பதால் பெரிதாக அலட்டல்கள் எதுவும் இல்லாமல்… தங்கள் நிலைப்பாட்டை வார்த்தையிலாகவே வைத்தார்கள்.
தேவ தாஸ் மனைவியிடம் மட்டும் மித்ரன் பற்றிய விஷயத்தை சொல்லிவிட்டார். மகேஸ்வரிக்கு ஒரே ஆச்சரியம்.
“என்ன சொல்றீங்க. அத்துவை அவரே பார்த்துக்கிறாரா? ஒன்றரை லட்சமா சம்பளமா? சென்னையில ரெண்டு வீடு இருக்கா? இதுக்கு மேல என்னங்க வேணும். சட்டு புட்டுன்னு பேசி முடிங்க. நம்ம மகளை நான் பாத்துக்குறேன். என் வயித்துல பிறந்தவள, என்ன பண்ணனும்னு எனக்கு தெரியும்” பரபரத்தார் மகேஸ்வரி.
பின்ன முதல் கல்யாணத்தில் கூட இந்த அளவு வசதியான சம்பந்தம் கிடைக்கவில்லையே…
“அவசரப்படாத மகேஷ். விசயம் வெளியே தெரியக்கூடாது. உன்னோட ரெண்டு செல்ல பிள்ளை கிட்ட கூட நீ சொல்லக்கூடாது. இரண்டாம் தாரம் என்பதால் இஷ்டத்துக்கு பேசுவாங்க. யாரும் மனசை கலைத்து விடலாம். கல்யாண மேடை வரை வந்து நின்ற கல்யாணத்தை எல்லாம் பார்த்து இருக்கோம். உன் அவசர குடுக்க தனத்தை காட்டாத.. இது நம்ம பிரவீ வாழ்க்கை. இதை விட்டோம் திரும்ப மித்ரன் மாதிரி ஒரு நல்ல பையன் கிடைக்கிறது குதிரை கொம்பு” என்று கண்டிப்பாக சொல்லிவிட்டார் தேவதாஸ்.
அதன்பின் மகேஸ்வரி, பிரீத்தியிடம் கூட வாய் திறக்கவில்லை. மனதிற்குள்ளே வைத்து சந்தோஷப்பட்டு கொண்டார். மறுநாள் காலை பிரவீனா அலுவலகம் கிளம்பும்பொழுது,
“என்னடி இது மஞ்சள் சேலை கட்டிக்கு போற. கோவிலுக்கு நேத்தி கடனா வச்சு இருக்க.. நீ ஒரு இன்ஜினியர்னு மறந்துடாத. லேட்டஸ்ட்டா பேஸ்டல் கலர் சேலை தானே பேமஸ். அந்த மாதிரி இருக்கிற நாலு சேலை கட்டிபோ”
பிரவீனா தன்னையே குனிந்து பார்த்தவள் எப்பவும் போலத்தான் தயாராகி இருந்தாள். தாயை முறைத்துக் கொண்டு கிட்சன் செல்ல, மதிய உணவு டப்பா வேற வகையில் தயாராகி நின்றது.
ஒரு அசட்டு சிரிப்பு சிரித்தபடி உள்ளே வந்த மகேஸ்வரி, “மித்ரன் தம்பிக்கு சுறா புட்டும், நாட்டுக்கோழி வறுவல் பிடிக்குமாம். செஞ்சு வச்சிருக்கேன். அவருக்கும் சேர்த்து எடுத்துப்போ”
“அம்மா, என்ன இது? என்னால அப்படி எல்லாம் கொண்டு போக முடியாது”
“ஏன் இதுக்கு முன்னால ரசம் வச்ச எல்லாம் எடுத்து போன?”
அன்னைக்கு அவன் காதல் சொல்லவில்லையே நட்பாக தானே பழகினான்.
“எல்லாமே ஒரு அளவு தான் ம்மா.. பிரண்ட்ஷிப் கூட”
“என் மருமகளோட ஒன்னுவிட்ட சொந்த அண்ணன்டி. அவங்க அம்மா போன் பண்ணி அப்பப்ப பாத்துக்க மகேஷ்ன்னு சொல்லி இருக்காங்க. சம்பந்தக்காரங்கல அவமதிக்க கூடாது. ஒரு நாளைக்கு கொண்டு போனா தான் என்னவாம்” என்று மகளை சரி கட்டி விட்டார் மகேஸ்வரி.
முகத்தை தூக்கிக்கொண்டு உணவு பார்சலை அவனிடம் நீட்ட.. சந்தோசமாக வாங்கிக் கொண்டான் மித்ரன். இப்பொழுதெல்லாம் இவன் பயங்கர பிசி. அதாவது, போனில்… இவன் காதல் கல்யாணம் வரை சென்றது தெரிந்த பின் இவன் அக்கா இருவரும் உறங்க விடுவதில்லை. மாத்தி மாத்தி என்ன? ஏது என்று போன் வந்து கொண்டே இருக்கும்.
அந்தப் பக்கம் மாமனார், மாமியார். ஆம், தேவதாஸ், மகேஸ்வரி தினமும் ஒரு முறையாவது பேசி விடுவார். ஆதிரனை பற்றிய ஒவ்வொரு விஷயத்தையும் தேவதாஸ் மூலமே அறிந்து கொண்டிருந்தான் மித்ரன். தினமும் பள்ளிக்கு செல்வதும், மாலை அவனோடு அதிக நேரம் செலவிடுவதையும் வழக்கமாகி கொண்டிருந்தான் மித்ரன்.
இப்பொழுதெல்லாம் ஆதிரன் தன் தாய் மாமனை தேடுவதே இல்லை. வந்ததும் தூக்க சொல்வது, கடைக்கு கூட்டி போ, இது வாங்கித்தா என்ற எதுவும் இருக்காது. ஆதிரனின் நேரமெல்லாம் மித்ரனோடு தான். பிரவீனா ஏழு மணிக்கு மேல் தான் வீட்டுக்கு வருவாள். அதுவரை அதிரன் எங்கு சென்றிருந்தான் என்ற விஷயம் அவளுக்கு தெரியாமல் போனது.
இப்படியே மேலும் ஒன்றிரண்டு வாரங்கள் கடக்க, அவனின் வகுப்பு ஆசிரியர்தான் போன் செய்து, “நேத்து ஆதிரன் வாமிட் பண்ணிட்டான் பிரவீனா. இனிமே அவன் பேக்ல எக்ஸ்ட்ரா ஒரு டிரஸ் வச்சு விடுங்க”
“சரிங்க மிஸ்”
“ரெண்டு நாளைக்கு முன்னாடியே.. அவங்க அப்பா கூப்பிட வரும் போது சொல்லிவிட்டேன். மித்ரன் சார் மறந்துட்டாரு போல” என்றதும், ஒரு நிமிடம் திகைத்துப் போனவள். வரிகளுக்கு இடையே அர்த்தங்களை கண்டு கொள்வது போல, விஷயம் என்ன என்பதை துல்லியமாக அறிந்து கொண்டாள் பிரவீனா.
மித்ரன் கொஞ்சம் அமைதியாக இருந்ததும் அவனை மிகவும் நம்பி விட்டாள். அத்தோடு ஆதிரன் இவளிடம் மறைத்ததை தான் அவளால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. முன்பாவது மித்து மித்து என்று வார்த்தைக்கு வார்த்தை சொல்லிக் கொண்டிருப்பான். இப்போது அதை எல்லாம் காணோம். ஆக, மித்ரன் ஒதுங்கவில்லை மகன் பொய் சொல்லி இருக்கிறான்.
அன்று மாலை மித்ரன் அலுவலகம் விட்டுக் கிளம்பி சென்றதும்.. அவசரமாக அவள் முடிக்க வேண்டிய வேலையை முடிக்க ஆரம்பித்தாள் பிரவீனா. நேராக மகனின் பள்ளிக்குச் சென்றவள்.. ஆதிரனை கேட்க.
“அவனை தினமும் அவங்க அப்பா வந்து கூட்டிட்டு போயிருவாருங்க மேடம்? நாலு மணிக்கு சரியா வந்துருவாரு” என்றார் காவலாளி.
பிள்ளையை தூக்கிக் கொண்டு எங்கு சென்றிருப்பான் என்று யோசிக்கும்போதே பக்கத்தில் இருக்கும் சிறுவர் பூங்கா நினைவு வந்தது. தனது தாய், தந்தையும் அவன் வீட்டு ஆட்களாக மாறிப் போனார்கள் என்பதை அறிந்து கொண்டாள் பிரவீனா. தந்தையை நம்பி தானே பிள்ளையை விட்டு வருவது.
அங்கே சென்று மகன் எங்கேயும் இருக்கானா என்று தேட.. ஆதிரனை தோளில் சுமந்து கொண்டு, பேஸ்கட் பால் விளையாண்டு கொண்டிருந்தான் மித்ரன். பிரவீனா மகன் முகத்தை மட்டுமே பார்த்திருந்தாள். சற்று தள்ளி இருக்கும் அவளுக்கே கேட்கும் படி சத்தமாக சிரித்து விளையாண்டு கொண்டிருந்தான் ஆதிரன்.
தந்தைக்கான ஏக்கத்தை தாய் மாமனிடம் போக்கிக் கொள்ள முயன்றவன், அந்த மாமனும் ஒதுங்கிக் கொள்ள.. முழுதாக மித்ரன் பக்கம் சாய்ந்து விட்டான். தனக்கே தனக்கென்று சொந்தமான ஒரு உறவை மகன் தேடுகிறான் என்று அறிந்ததும்.. பிரவீனா மனம் பிசைய ஆரம்பித்தது.
“ஆதிரன்” சத்தம் கொடுத்தாள் பிரவீனா. தாயைப் பார்த்ததும் பயந்து போய் மித்திரனை விட்டு கீழே இறங்க.. வேகமாக அவன் அருகே வந்தவள், மித்ரன் ஏதோ சொல்ல வருவதையும் காதில் கேட்காமல்.. மகன் கையைப் பிடித்து தரதரவென்று இழுத்துக் கொண்டு தன் ஸ்கூட்டி நோக்கி நகர்ந்தாள்.
“பிரவீனா”
“பெத்த அம்மா கிட்டயே எப்ப இருந்துடா பொய் சொல்ல ஆரம்பிச்ச. கண்டவங்க பேச்சு எல்லாம் கேட்க ஆரம்பிச்சுட்டியா?” என்றவள், மகன் முதுகில் ஓங்கி ஒரு அடி அடித்தாள்.
“கை” என்று மகன் கத்த, மேலும் ரெண்டு விழுந்தது. அதற்கு மேல் மித்ரன் எவ்வாறு பொறுப்பான். வேகமாக வந்தவன் பிரவீனா கையை அழுத்தி பிடித்தான்.
“பைத்தியமா நீ? குழந்த அவன்.. எதுக்கு இப்படி மாட்ட அடிக்கிற மாதிரி அடிக்கிற?” கண்களில் கோபம் பறந்தது.
“அவன் நான் பெத்த மகன். நான் அடிப்பேன், என்னமும் பண்ணுவேன். உங்களுக்கு என்ன வந்துச்சு நீங்க யாரு?”
“வாய மூடு பிரவீனா. இனி ஒரு முறை பிள்ளையை பார்த்து கைய ஓங்கின.. தொலைச்சிடுவேன்” மிரட்டினான் மித்ரன்.
“அப்படித்தான் அடிப்பேன் மித்ரன். அப்பா இல்லாதவன்.. அதை அவன் உணரனும். இப்படி யார்கிட்டயும் அப்பாவோட பாசத்தை தேடி அவன் ஓடக்கூடாது” அழுத்தமாக சொன்னாள் பிரவீனா.
error: Content is protected !!