Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

செல்லமான ஊடல் நீயே..

செல்லமான ஊடல் நீயே … 5

அத்தியாயம் 5

அன்று வார இறுதி நாளோடு சேர்ந்து பள்ளிகளுக்கும் விடுமுறை நாளாகி போக சென்னையின் அந்த மால் மக்கள் கூட்டத்தால் மிதந்து கொண்டிருந்தது. 

எதிரில் வருவோர் போவார் எல்லாரும் ஒருவரை ஒருவர் இடித்தபடி செல்ல வேண்டிய நிலையில் தான் ஜன நெரிசல் இருந்தது அங்கு.

அப்படியான இடத்தில் தன் சேட்டையை செவ்வனே செய்த படி நின்று  கொண்டிருந்தாள் கனிகா தனது தோழி ஷர்மிளாவோடு.



Advertisement

“ஏய் கனி இந்த கூட்டத்துல அடுச்சு பிடிச்சு டிக்கெட் வாங்கி அந்த படத்த பார்த்து தான் ஆகனுமா..?

இன்னொரு நாளைக்கு ஃப்ரீயா இருக்கும் போது வரலாம்டீ.

நீயே பார்க்கற தானே இங்கே இருக்கற கூட்டத்தே‌‌..” என சொன்ன தோழியின் வார்த்தையை காதில் வாங்காமல், 

Advertisement

கருமமே கண்ணாய் கையில் வைத்திருந்த பட்டர் பாப்கார்னை ரசித்து சாப்பிட்ட படி சுற்றிலும் போவோர் வருவோரை சுவாரஸ்யமாக பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளை கண்டு இதுவரை பேசிக்கொண்டிருந்தவளுக்கு கொலைவெறி உண்டானது.

Advertisement

“ஏன்டீ.. உன்கிட்ட தானே பேசறேன். கண்டுக்காம யாரோ யார்கூடவோ பேசற மாதிரி நிக்கற..?

யாராவது இப்போ என்ன பார்த்தா.. என்னடா இது தனியா லூசு மாதிரி பேசிட்டு இருக்குன்னு நினைக்க மாட்டாங்க..?” என கடுப்போடு கேட்க,

“டெப்பனட்லி..” என சொல்லி அலட்டாமல் தோளை கனி குலுக்க, கொலைவெறியோடு முறைக்க மட்டுமே முடிந்தது ஷர்மியால்.

Advertisement

அவளின் அந்த முறைப்பையெல்லாம் கண்டும் காணாததை போல, “இங்க பாரு ஷர்மி பேபி.. நா இன்னைக்கே இந்த படத்தை பார்க்கறதுன்னு முடிவு பண்ணி வந்தாச்சு. 

அதனால என்ன ஆனாலும் இந்த படத்தை பார்க்காம இங்கிருந்து நகர மாட்டேன்..” என அலட்டாமல் கனி சொல்ல,

அவளின் பிடிவாதத்தை நன்கு உணர்ந்தவளாய், “சரி டீ கனி.. அதுக்கு வேற படமே உனக்கு கிடைக்கலையா..? 

நீ பார்க்கனுமுன்னு நினைக்கற இந்த படத்துல ஃபுல்லா அடிதடியா இருக்காமே..?! 

நேத்து என் பக்கத்து வீட்டுல இருக்கற அண்ணா பார்த்துட்டு வந்து எங்க அண்ணாகிட்ட சொல்லிட்டு இருந்தாங்க.

ரத்தத்தை பார்த்தாலே எனக்கு ஆகாது. இதுல முழுக்க சண்டை தானாம். 

அதும் எக்கச்சக்க வயலன்ஸ் ன்னு சொல்றாங்க.. அந்த அண்ணா. வேணாம்டீ நாம வேற எதாவது நல்ல படத்துக்கு போலாம்..” என்றதை காதில் வாங்காமல்,

“இந்த மாதிரி நல்ல ஃபைட் சீன் இருக்கற மூவில இருக்கற எனர்ஜி வேற மூவில இருக்காது செல்லோ..

பொண்ண பாத்ததும் மயங்கி.. மரத்த சுத்தி டூயட் பாடி, அவங்க சேர்வாங்கன்னு தெரிஞ்சும் பிரிஞ்சுடுவாங்களோன்னு யோசிக்க வைக்கறேன்னு மொக்கையான சீன்ஸ் வச்சு.. சப்பா.. முடியல. 

அப்படியான படத்துக்கு போய் என்னை தூங்கி வழிய சொல்றையா..? நோ வே. 

நாம ரெண்டு பேரும் இந்த மூவிக்கு தான் போறோம்..” என உறுதியாய் சொல்ல, 

கனியின் ரசனை தெரிந்தும் படம் பார்க்கும் ஆசையில் அவளோடு வந்த தன்னையே நொந்து கொண்டு, 

அடுத்த காட்சிகான டிக்கெட்டை முண்டி அடித்து வாங்கி வந்து, அந்த காட்சி ஆரம்பிக்கும் வரை கனிகாவோடு காத்திருக்க துவங்கினாள் ஷர்மிளா.

அவர்கள் அவ்வாறு காத்திருந்த இடத்திற்கு வெகு அருகாமையில் திடீரென ஏற்பட்ட சலசலப்பு சட்டென தீவிரமாக.. கனிகா மற்றும் ஷர்மி இருவரின் கவனமும் அந்த பகுதிக்கு திரும்பியது.

அங்கு ஒரு நெடியவன் முதுகு மட்டுமே முதலில் இருவருக்கும் தெரிந்தது.

ஆர்வ மிகுதியில் கையிலிருந்த பாப்கார்னை சுவைத்தபடி கனிகா சற்று முன் சென்று பார்க்க, அங்கே சிறுவயது வாலிபன் ஒருவனை போட்டு தனியாக அடித்து துவைத்துக் கொண்டிருந்தான் அந்த நெடிய மனிதன்.

அதை கண்டு அகண்ட விழியை விரித்து சுற்றிலும் உள்ளவர்களை அவள் பார்க்க, அவனை சுற்றி நின்றிருந்த கூட்டத்திலிருந்து யாரும் அவர்களை விலக்கி விடாமல் வேடிக்கை மட்டுமே பார்த்திருப்பதை கண்ட கனிகாவிற்கு அத்தனை கோபம்.

‘ச்சே.. என்னடா மனுஷங்க இவங்க..? கொஞ்சம் கூடவா மனிதாபிமானம் இல்ல. 

மாட்ட அடிக்கற மாதிரி ஒருத்தன் அடிக்கறான். சுத்தி நின்னு ஜம்முன்னு வேடிக்கை மட்டும் பார்க்குதுங்க..’ என மனதுக்குள் திட்டிக்கொண்டே அவர்களை நோக்கி மெல்ல நகர்ந்தாள்.

அவளோடே ஷர்மிளாவும் செல்ல, ‘என்ன நடக்கிறது..?’ என்பதை அவதானிக்கவும் மறக்கவில்லை இருவரும். 

அவர்கள் நெருங்கி வரும் போது நெடியவனின் அடி தாங்க முடியாது, தனது தாய் மொழியாம் ஹிந்தியில் ஏதோ சொல்லி.. அடிப்பவனின் காலை பிடித்து கெஞ்சும் அந்த வாலிபனை கிஞ்சித்தும் விடாமல் தொடர்ந்து தனது கரம் கொண்டு தாக்கியவனை காணக்காண கோபம் தலைக்கேற துவங்கியது கனிகாவிற்கு.

“ஆள பார்த்தா அய்யனாரூ மாதிரி இருந்தா இப்படி  போட்டு அடிப்பானா..? 

அடி வாங்கறவன பார்த்தாலே தெரியுது அப்பாவின்னு.. பாரு, குழந்த புள்ள மாதிரி இருக்கான். 

சுத்தி நின்னு வேடிக்கை மட்டும் நல்லா பார்க்கறாங்க.. ஒருத்தனாவது அந்த ஆள் அடிக்கறத தடுக்கறாங்களா..?

சுத்தி இருக்கற எல்லாரும் சரியான பயந்தாங்கோழிங்க..

தட்டிக்கேட்க ஆள் இல்லன்னு தானே இப்படி மாட்ட அடிக்கற மாதிரி அடிக்கிறான்..? 

இருடா நா யாருன்னு உனக்கு காட்டறேன்..” என ஷர்மியிடம் சொல்ல,

“வேணாம் கனி, தேவையில்லாம நீ போறது சரி வராது..” என தடுக்க முயன்ற ஷர்மியை தள்ளியபடி முன்னேறினாள் கனிகா.

போகும் வேகத்தில் கோபமாக தனது கரத்தில் இருந்த பாப்கார்னை அங்கிருந்த குப்பை தொட்டியில் அசால்ட்டாக வீசி விட்டு.. இரு கையையும் தட்டிக்கொண்டு வீராவேஷமாய் அவனை நோக்கி செல்ல,

கனிகாவின் முக பாவத்திலேயே அவளின் அடுத்த செயலை அனுமானித்து அவளிடமிருந்து அந்த பாப்கார்ன் டப்பாவை வாங்கும் முன்பு அவள் வீசி சென்றிருந்ததை பார்த்தவள், 

‘அடிப்பாவி.. இருக்கறதுலையே பெரிய சைஸ் வாங்கு வாங்குன்னு உசிர எடுத்து வாங்கிட்டு, இப்படி ஒரு வாய் கூட என்னைய சாப்பிட விடாம செஞ்சிட்டு போயிட்டாளே..’ என்ற கோபத்தோடும்.‌. பாப்கார்ன் பரிபோன துக்கத்தோடு, ‘வடை போச்சே..!’  எபெக்ட்டில் கனிகா செல்லும் பாதையை பார்த்து முறைக்க மட்டுமே முடிந்தது அந்த தோழியால்.

அங்கிருந்த கூட்டத்தை விலக்கி முன்னால் முன்டியடித்துக் கொண்டு சென்ற கனிகாவிற்கு இப்போதும் அந்த நெடியவனின் முதுகு மட்டும் தெரிய, “ஏய் மிஸ்டர்..” என அழைக்க வாய் திறந்த நேரம்,

“எவ்வளவு தைரியமிருந்தா அந்த குழந்தைய என் கண்ணு முன்னாடியே தூக்க பார்த்திருப்பே..?” என்ற அந்த நெடியவன் வார்த்தையில், 

தனது அழைப்பை வெளிவிடாமல் வாயினுள் அடக்கியவள், நடக்கும் நிகழ்வை நன்றாக கவனிக்க துவங்கினாள்.

“சார், சார் ப்ளீஸ்.. தெரியாம செஞ்சிட்டேன். வயித்து பொலப்புக்காக சார்..!” என ஹிந்தியில் சொன்னவனின் காது மடல் கிழியும் வண்ணம் மீண்டும் அறைந்திருந்தான் அந்த நெடியவன். 

அவன் சொன்னதை கேட்டு, ‘அடப்பாவி.. இவன போய் அப்பாவின்னு நினச்சிட்டேனே..!’ என அதிர்ந்து நின்றாள் பெண்ணவள்.

“ஏன்டா.. ஒரு குழந்தை பெத்து வளர்த்து அதை உயிரா நினச்சிருக்கறவங்க கிட்ட இருந்து தூக்கிட்டு போய் பணத்துக்காக அடுத்தவனுக்கு விக்கறதும், 

குழந்தைன்னும் பார்க்காம அத சீரழிக்கறதும்.. 

கை கால ஒடச்சு, கண்ணை குருடாக்கி பிச்சை எடுக்க ரோட்டுல விடுறதும்.. 

பணம் கிடைக்குமின்னா ப்ளாக்மெயில் பண்ணறதும்.. உன்னோட வயித்து பொழப்புக்கா..?

பெத்தவங்க அந்த குழந்தைய காணாம போன நேரத்துல இருந்து, அந்த பிள்ளைக்கு என்ன ஆச்சோ.. ஏதாச்சோன்னு.. பரிதவிப்போட சோறு தண்ணி கண்ணுல காணாம தவிக்கற தவிப்ப பார்த்தா தான்டா தெரியும்… நாயே.. 

உன்னையெல்லாம் லாக்கப்ல வச்சி லாடம் கட்டில நா வெற்றிவேல் செழியன் இல்லடா.

இனி ஒரு குழந்தைய சாதாரணமா பார்க்கற துணிச்சல் கூட உனக்கு வர கூடாது…” என சொன்னவன்,

தனது போனிலிருந்து அழைத்த சில நிமிடத்திற்குள் அங்கு வந்த காவல் துறையை சார்ந்த சிலர்.. அந்த நெடியவனுக்கு சல்யூட் வைக்க, 

அவர்களிடம் அந்த வாலிபனை ஒப்படைத்தவன், “லாக்கப்ல வைச்சு நல்லா கவனிங்க. 

நா அப்புறமா வந்து வச்சுக்கறேன் இவன..!” என மீண்டும் ஒரு உதையோடு அவர்களுடன் அனுப்பினான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!