Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் ஹைக்கூ காதல்

என் ஹைக்கூ காதல் 12 1

அத்தியாயம் 12

“ஏமாத்திட்டீள்ள கோ?” மீண்டுமாய் அவள் கண் கலங்கி கேட்டுவிட, நொந்துப்போனான் கோவர்த்தன். சண்டைகளும் சமாதானங்களுமாய் மட்டுமே நாட்கள் போக இனியாவது தன் காதலை பட்டவர்த்தனமாய் காட்டிட அவன் முடிவெடுத்த நேரம் அடுத்த தலையிடி ஆரம்பிக்க, இதை என்ன சொல்லி சமாளிக்க என்றே தெரியவில்லை அவனுக்கு.

“அப்படி இல்லம்மா… நான் உன்கிட்ட இதை பலமுறை சொல்ல ட்ரை பண்ணேன். நீதான் பேசவே விடாம டாபிக் மாத்துவ! நானும் உன் போக்குல விட்டுட்டேன்” அவன் சொல்ல, அவள் ஒன்றுமே பேசாமல் அழுகையில் உதடு பிதுக்கினாள்.



Advertisement

அவள் அழுகை பொறுக்காமல், அவளது கன்னங்களை கைகளில் ஏந்திக்கொண்டவன், “அச்சோ… இதெல்லாம் ஒரு விஷயம்ன்னு அழலாமா? கோவம் வந்தா கைநீட்டி தானே பழக்கம் நிலாக்கு… இது என்ன புதுசா அழுகை? ம்ம்ம்? உனக்காக என் நெத்தி கன்னம் எல்லாம் காத்துக்கிட்டு இருக்கு தெரியுமா?” அத்தனை மிருதுவாய் பேசினான்.

Advertisement

அவன் கரத்தை தட்டிவிட்டவள் அதே வேகத்தில் அவனை இறுக அணைத்துக்கொண்டாள். அவன் நெஞ்சில் சாய்ந்ததும் ஓவென்று அழுகை அதிகமானது. அவளது முதல் அணைப்பாயிற்றே என்று புளங்காகிதம் கூட அடைய முடியாமல் அவள் அழுகையில் மிரண்டு திணறிக்கொண்டிருந்தான் கோவர்த்தன்.

Advertisement

பதிலுக்கு அவளை கொஞ்சமாய் அணைத்தபடி தலையை வருடிக்கொடுத்தவன், “ரிலாக்ஸ்! உன்னை மீறி ஒண்ணுமே நடக்காது நிலா. நீ பேச வேண்டாம்ன்னு சொல்லிட்டன்னா நான் பேசவே போறது இல்ல” என்றவன்,

Advertisement

“நீ பேச மாட்டேங்குறன்னு தான் என்கிட்ட அப்பப்ப நீ எப்டி இருக்கன்னு கேட்டுக்குறாங்க நிலா, மத்தபடி உன் சம்பந்தமா எதையும் நான் சொல்றது இல்ல” என்றான் உண்மையாய்.

அவன் நெஞ்சில் புதைந்து விம்மிக்கொண்டே, “அவங்க உன்னை எப்…எப்டி சொன்னாங்க தெரியுமா? நீ… நீ என்னை… துண்…துண்டா வெட்டி தூக்கி குப்பைல” திக்கி திக்கி தேம்பிக்கொண்டே அவள் பேச விழைந்ததை அவன் புரிந்துக்கொண்டாலும் பெரிதாய் பதில்வினை செய்யாது, “சொல்றது உண்மை இல்லன்னு நீ நம்புனா, இந்த அழுகை வீண் நிலா” என்றுவிட்டான்.

அப்போதும் அவள் அழுகை ஓயவில்லை.

அவனும் அணைப்பை விடவில்லை.

அவளே அமைதியாகட்டும் என அலுக்காமல் அவளை வருடிக்கொண்டு ஒரு வைத்தியன் மனநிலையில் தான் நின்றிருந்தான். நேரம் கடக்க, அவள் சற்று தெளிவதை உணர்ந்ததும், “நீ உன் பேரன்ட்ஸ் கிட்ட பேசிருந்தா அவங்ககிட்ட நான் பேச வேண்டிய சூழலே வந்துருக்காது தெரியுமா?” என்றான் மெள்ள.

அவள் அணைப்பின் இறுக்கம் லேசாக தளர்ந்தது. அதை உணர்ந்தாலும், “பேரெண்ட்ஸ் கிட்ட எதுக்கு இவ்ளோ பிடிவாதம் காட்டனும் நிலா? உன் அக்கா விஷயத்துல அவங்க உனக்கு சப்போர்டிவ்’வா நிக்கலன்னு நீ கோவப்படுறது நியாயம் தான். அதுக்காக இப்படி அவங்களை ஒரேயடியா ஒதுக்கி வைக்கணுமா சொல்லு? அவங்களுக்கு உன்னை விட்டா யார் இருக்கா?” என்று அடுத்தடுத்து அவன் கேட்டதும், உடனே அவனிடம் இருந்து விலகினாள் பெண்.

முகம் அழுகையில் சிவந்து சோர்ந்திருந்த போதிலும், கண்களில் கண்ணீரின் மிச்சம் இருந்தபோதிலும், அவளிடம் ஒரு கனல்! தான் செய்வதில் தவறே இல்லை என்ற உறுதியின் வெளிப்பாடாய் அவள் முகத்தில் கனல் பறக்க, அவன் தடுமாறினான்.

“எதாவது தப்பா சொல்லிட்டேனா?” அவன் பதறி கேட்க, “நான் இவ்ளோ பிடிவாதமா இருக்கேன்னா… அதுல கண்டிப்பா ஒரு காரணம் இருக்கும்ன்னு உனக்கு தோணலையா வரூ?” என்றாள்.

‘கோ’ என்பது ‘வா’வென எப்போது மாறும் என காத்திருந்தவனுக்கு அவன் அவளிடம் ‘வரூ’ என்றானது அப்போது உரைக்கக்கூட இல்லை.

“நீ என்கிட்ட சொன்னதை வச்சு தான்…” அவன் முடிக்கும் முன்னே இடையிட்டவள், “உன்கிட்ட நான் முழுசா சொல்லலை வரூ… நான் ஏன் இங்க வந்து தனிமைல சாக நினைச்சேன்னு உன்கிட்டக்கூட சொல்லல நான்…” என்று சொல்லும்போதே கதறினாள்.

அவனிடம் பத்து சிட்டிங் கவுன்சிலிங் வந்தபோது, அவள் சொன்னதை எல்லாம் கேட்டவனுக்கு இன்னும் ஏதோ சொல்லாமல் இருக்கிறது என்ற எண்ணம் வந்தது தான். அதன்பிறகு அவர்கள் உறவு மருத்துவ ரீதியாக இல்லாமல் போனதால் அவனுக்கு மேற்கொண்டு அவளிடம் பிடிக்காத விஷயத்தை பேச பிடித்தம் இல்லாமல் போனது.

இப்போது அவள் அழுகையை காணும்போது அவனுக்கு அடித்துக்கொண்டது, ‘முன்பே கேட்டிருக்கலாமோ?’ என்று. எத்தனை மன அழுத்தத்தை அவள் வெளியே காட்டாமல் மூடி வைத்திருந்து அதோடு உலன்றிருக்கிறாள் என்று அவள் அழுகையே சொன்னது.

“அக்கா சாவுக்கு நியாயம் கேட்டு என் பக்கம் பெத்தவங்க நிக்கலன்னு எனக்கு நிறைய கோவம் இருந்துச்சு. ஆனா, அவங்க பக்கமும் யோசிச்சேன். ஒரு பொண்ணு போயாச்சு, அடுத்து நானும் கோர்ட், கேஸ்’ன்னு அலைஞ்சா என் வாழ்க்கையும் சிக்கலாகிடும்ன்னு சராசரி பெத்தவங்களா பயந்துருப்பாங்கன்னு என்னை நானே தேத்திக்கிட்டேன்.

கஷ்டப்பட்டு மனசை மாத்தி, படிப்பை முடிச்சு வேலைக்கு சேர்ந்து… சாதாரணமா நடக்கல எதுவும்!!!” என்றாள் கண்களை துடைத்தபடி.

“அக்கா இல்லாத வீட்டுல இருக்கவே பிடிக்காது. ரெண்டு நாள் தங்குனாலே அந்த வீடு எனக்கு மூச்சு முட்டும். அக்கா இல்லாத வாழ்க்கைக்கு ஈசியா பழகிகிட்ட என் பெத்தவங்களை பாக்குறப்போ கோவமும் வேதனையும் கிளம்பும். என்னால ஏன் இப்டி இருக்க முடிலன்னு ஆத்திரமா வரும். ஒருவேளை நான் செத்தாலும் இப்படி தான் இவங்க ஈசியா கடந்துடுவாங்களான்னு எரிச்சல் ஆகும். வீட்ல இருக்க பிடிக்காம உடனே கிளம்பிடுவேன்”

“வேலைக்கு சேர்ந்த கொஞ்ச நாள்ல என் கல்யாண பேச்சை ஆரம்பிச்சாங்க. எனக்கு கல்யாணம் கட்டவே விருப்பமில்ல. உண்மையா சொல்லனும்ன்னா வெறுப்பு. வேண்டாவே வேண்டாம்ன்னு தள்ளி போட்டுட்டே போனேன். வீட்டோட அதிக ஒட்டுறவா இல்லாதனால அவங்க இன்னமும் என் அக்காவை கட்டிக்குடுத்த வீட்டோட பேசிக்கிட்டு இருக்கிறது தெரியாம போய்டுச்சு!” என்று அவள் சொல்ல, அவனுக்கு ஆச்சர்யம் தான், எப்படி அவர்களால் உறவை தொடர முடிகிறது என்று!?

“கொஞ்ச நாள் கல்யாணம் அது இதுன்னு தொல்லை பண்ணாதீங்கன்னு சொல்லிட்டேன். அவங்களும் என்னை விட்டுட்டாங்க. ரெண்டு வருஷம் ஓடுச்சு. திரும்ப கல்யாணம்ன்னு பேச்சு எடுத்தாங்க. எனக்கு துளிக்கூட விருப்பம் இல்ல கல்யாணத்துல” அவள் சொன்னபோது, தன்னை மீறி, “இப்போவுமா?” என்று கேட்டிருந்தான் கோவர்த்தன்.

“என்னது?” அவள் சட்டென புரியாமல் கேட்க, “ஒன்னும் இல்ல, நீ சொல்லு… அப்புறம் என்ன ஆச்சு?” என்றான்.

“ஒரு முறை வீட்டுக்கு போயிருந்தப்போ சில வரன் பத்தி சொன்னாங்க. நான் இஷ்டம் இல்ல விட்டுடுங்கன்னு சொன்னேன்… அப்போ…” அவளுக்கு அந்த நாட்கள் இன்னமும் கண் முன்னே தெரிந்தது.

“உன் அத்தானுக்கு இன்னும் வரன் எதுவும் கூடி வரலடி” வருத்தமாய் ஆரம்பித்தார் காஞ்சனா.

“எந்த அத்தான்?” அவள் சுரத்தே இல்லாமல் கேட்டபோது, “உன் அக்கா வீட்டுக்கார்டி” என்று சொல்வார் என அவள் துளியும் நினைக்கவில்லை.

“அந்த ஆளுக்கு என்ன ஆனா நமக்கென்ன? நீங்க ஏன் அதெல்லாம் பேசிக்கிட்டு இருக்கீங்க இப்போ?” என்று கோபமாய்.

“என்ன பேசுற நீ? உன் அக்கா இப்படி செஞ்சதால தான் அந்த பையன் வாழ்க்கையே போய்டுச்சு. இப்போ ரெண்டாந்தாரம் கட்ட எல்லாரும் தயங்குறாங்களாம்.  அவருக்கு என்னடி குறைச்சல்? நம்மளால தானே இந்த கஷ்டம்?” என்று கண்களில் நீர் துளிர்க்க கேட்டவரை முகம் சுருங்க புரியாமல் பார்த்தாள் வாணிலா.

“எனக்கு சத்தியமா புரிலம்மா! இங்க செத்தது உங்க பொண்ணு. அவளுக்கு என்ன ஆச்சோ? எதனால சாக துணிஜ்ஜாலோன்னு கொஞ்சமும் யோசிக்காம அது எப்படிம்மா அவங்க பக்கம் இவ்ளோ பேசுறீங்க?” என்று கேட்டவளுக்கு மெய்யாலுமே இது புரியாமல் தான் இருந்தது.

“என்ன பண்ண? ஒழுங்கா வளர்த்தேன்னு நினைச்சுட்டு இருந்தேன். கட்டிக்குடுத்த பிறகு தானே அவ ஒழுக்கம் தெரிஞ்சுது. சம்பந்தி வீட்ல எத்தனை அசிங்கம் தெரியுமா? ஏதோ அவங்களா இருக்கப்போய் பெருசுப்படுத்தல. நீ அவங்களை ஸ்டேஷன் வரை இழுத்தப்போ கூட வாய் விடல” பெருமை போங்க தான் சொன்னார் காஞ்சனா.

“என்னம்மா இது புது கதை சொல்லிட்டு இருக்கீங்க?” அத்தனை அதிர்வு அவளிடம்.

“எல்லாம் பழைய கதை தான். உன்கிட்ட சொல்ல வேண்டாம்ன்னு தான் சொல்லல” என்றவர் முகத்தை கடுகடுவென வைத்திருந்தார். அவள் மீண்டும் விவரமாய் சொல்லச்சொல்லி அழுத்திக்கேட்க,

“உன் அக்காவை கட்டிக்குடுத்த கொஞ்ச நாள்ல அவ எங்களுக்கு ஃபோனை போட்டு ஒரே அழுகை. என்னால இங்க இருக்கவே முடில, வந்து கூட்டிட்டு போயடுங்கன்னு” அவர் சொன்னபோது, அதிர்ந்து எழுந்தே விட்டாள் வாணிலா.

“ஏன்ம்மா இப்படி பண்ணீங்க? அக்காவை கூட்டிட்டு வந்துருக்கலாமே ம்மா?” அழுகை கிளம்பியது அவளுக்கு. மகளை முறைத்த காஞ்சனா, “எடுத்தோம் கவுத்தோம்ன்னு ஒன்னும் செய்ய முடியாது வானு. சம்பந்தி வீட்டுல பேசுனோம். பொண்ணுக்கு சங்கடமா இருக்கு போல, ரெண்டு நாள் அனுப்புறீங்களான்னு கேட்டோம்! அப்போ தான் அவங்க சொன்னாங்க…” என்று நிறுத்த,

“என்ன சொன்னாங்க?” தடதடக்கும் இதயத்தோடு கேட்டாள் வாணிலா.

“ஹும்… காலேஜுல எவனோ ஒருத்தனை லவ் பண்ணிருக்கா உன் அக்கா… ஒன்னும் தெரியாதவ மாறி கமுக்கமா இருந்து கட்டிட்டு போயிட்டு, அங்க போனதும் வேலையை காட்டிருக்கா தெரியுமா?” என்று ஆத்திரமாய் சொன்னவர்,

“அவன் கூட ஃபோன்ல பேசுறதும், நேர்ல பாக்க திருட்டுத்தனமா போறதும்ன்னு குடும்ப மானத்தை வாங்க ஆரம்பிச்சுருக்கா… உன் அத்தான் எவ்ளவோ பொறுமையா சொன்னாராம், அதெல்லாம் மறந்துட்டு புது வாழ்க்கையை ஆரம்பின்னு. இவ கேட்கலன்னதும், உங்க வீட்டுக்கு சொல்லிடுவேன்னு அவங்க சொல்லிருக்காங்க. எங்க அவங்க உண்மையை சொல்லிடுவாங்களோன்னு உன் அக்கா முந்திக்கிட்டு அவங்களை பத்தி தப்பு தப்பா சொல்லி அழ ஆரம்பிச்சுட்டா” என்றார்.

அவர் சொன்னதை வாயை பிளந்து கேட்டுக்கொண்டிருந்தாள் வாணிலா. அவளை பார்த்த காஞ்சனா, “உனக்கே அதிர்ச்சியா இருக்குல? எங்களுக்கு எப்படி இருந்துருக்கும்?” என்று நியாயம் கேட்டதும், “இதெல்லாம் நம்பிட்டீங்களாம்மா?” என்று கேட்டவள் குரலில் அத்தனை வலி.

“சும்மா ஒன்னும் நம்பல. நேர்ல போனப்போ அவ போனுக்கு ஒருத்தன் ஐ லவ் யூ’ன்னு அனுப்பிருக்கான். அதை காட்டுனதும் தான் நான் நம்பவே செஞ்சேன்” என்றவரை வெறுப்பாக பார்த்த வாணிலா, “என்ன செஞ்சீங்க அப்புறம்?” என்றாள்.

“நல்லா திட்டி விட்டேன்! இது தான் வாழ்க்கை. இனி ஒரு சொல் உன்னைப்பத்தி அவங்க சொல்றமாறி வரக்கூடாதுன்னு சொல்லிட்டேன். குழந்தை வந்ததுமாது திருந்துவான்னு நினைச்சா இப்படி ஒரேயடியா போய் சேர்ந்துட்டா” என்றவர் வருத்தத்தின் அடையாளமாய் முந்தானையில் மூக்கை சிந்தினார்.

அக்காவுக்கு இப்படி ஒரு காதலன் இருந்திருப்பான் என்றெல்லாம் அவளுக்கு துளியும் தோன்றவில்லை. அவளால் ஆயிரம் மடங்கு உறுதியாய் அதை சொல்ல முடியும். தன்னை பெற்றவரின் வேறொரு முகத்தை பார்த்துவிட்ட அதிர்வு தான் பெண்ணிடம் அதிகமாய் இருந்தது.

அந்த அதிர்வு போகும் முன்னே, “உன் அத்தானுக்கு எங்கயும் அமையல டி… அதனால சம்பந்தியம்மா உன்னை கட்டி குடுக்க கேக்குறாங்க. நீ ஸ்டேஷனுக்கு இழுத்ததெல்லாம் அவங்க மன்னிச்சு மறந்துட்டாங்களாம்!” என்றவர் சொல்ல, ‘அவர்கள் பெண் கேட்டதை விட, அதை ஆமோதிக்கும் பெற்றவர்’ மீது வெறுப்பு எல்லை தாண்டி கிளம்பியது. ஒன்றுமே சொல்லாமல் எழுந்தவள், தனது பையை எடுத்துக்கொண்டு வாசலுக்கு போக,

“எங்கடி போற? இன்னைக்கு தானே வந்த?” என்று கத்தினார் காஞ்சா.

நின்று திரும்பி பார்த்தவள், “உன் ரெண்டாவது பொண்ணும் செத்துட்டான்னு நினைச்சுக்கோ” என்றுவிட்டு பெங்களூருக்கே சென்றுவிட்டாள்.

திருமணம் ஆன அக்கா எதுவுமே சொல்லாமல் இப்படி ஒரு முடிவை எடுத்துவிட்டதாக அதுநாள் வரை அவள் நினைத்திருக்க, இப்படி அவளை பெற்றவர்களே உயிரோடு கொன்றிருப்பார்கள் என்று நினைக்கவே இல்லை. தன்னை பற்றி தவறாக சொல்வதை தன்னை பெற்றவர்கள் நம்புவது எத்தனை வேதனையாய் இருந்திருக்கும் அவளுக்கு. எத்தனை துடித்திருப்பாள். தன் வருத்தங்களை கஷ்டங்களை பகிரக்கூட முடியாத நிலையில் எத்தனை அழுதிருப்பாள்? இறுதியாய் அவளை பார்த்தபோது அவள் முகத்தில் இருந்த செயற்கை புன்னகை, அவள் மரத்துப்போனதை தான் காட்டியிருக்கிறது போலும்!

அதுநாள் வரை அக்காவை எண்ணி அவள் அழுததை விட அதன்பிறகு அதிகமாய் அழுதாள். ஆதரவில்லாத நிலையில் கூட தன்னிடம் பகிர்ந்துக்கொள்ள அவள் நினைக்கவில்லை தானே என்ற எண்ணம் அவளை வாட்டியது.

‘இவளே சின்னப்பெண்… இவளால் என்ன செய்துவிட முடியும்?’ என்று விரக்தியாய் நினைத்திருப்பாள் போல என்று எண்ணினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!