Skip to content
Post Views: 7,869
பெற்றவரிடம் பேசக்கூட பிடிக்கவில்லை அதன்பிறகு. மாதம் இருமுறை ஊருக்கு சென்றுக்கொண்டிருந்தவள் போவதையே நிறுத்திவிட்டாள். அலுவலகத்தில் அவளுக்கு ‘ஸ்பெயின்’ போக ஆன்சைட் ஆஃபர் வந்தது. ‘கேம் டிசைனிங்’ அவளுக்கு மிகவும் பிடித்த ஒன்று! அவளுக்கு இந்த துறையில் முன்னேறிக்கொண்டே போக வேண்டும் என பலபல ஆசைகள் இருந்தது. அதெல்லாம் அவள் அக்கா இருந்தவரை!
அதன்பின் படிக்கவே பிடிக்காமல் ஏதோ படித்து, வீட்டில் இருக்க பிடிக்காமல் வேலைக்கு சென்று… என்று தான் அவள் வாழ்க்கை போனது. எதிலும் பிடிப்பில்லாத நிலை. ஆனால், கொடுத்த வேலையை சிறப்பாக தான் செய்வாள். இப்போது வெளிநாடு போகும் எண்ணமெல்லாம் இல்லை என்பதால் மறுத்துவிட்டாள்.
Advertisement
மகளை வீட்டுக்கு அழைத்துப்பார்த்தவர்கள் அவள் வரவில்லை என்றதும், சில வரன்களை நேரில் பார்க்க சொல்லி அவள் அலுவலகத்துக்கே அனுப்பினார்கள். தன் முன்னே ஆர்வமாய் தன்னை பார்க்கும் ஆண்களை நினைத்து சங்கடமாக இருக்கும் அவளுக்கு.
Advertisement
அவர்கள் ஆசையாய் திருமணம் செய்ய எண்ணித்தானே பெண் பார்க்க வந்திருப்பார்கள் என்று வருத்தம் உண்டாகும் அவளுக்கு. அவர்கள் மனம் கோணாமல் தன் விருப்பமின்மையை சொல்லி அனுப்பிவிடுவாள். இதுவே பின் வாடிக்கையாக அவளுக்கு சினமேறியது.
Advertisement
அன்னைக்கு அழைத்து, ‘இனி யாராவது தன்னை பார்க்க வந்தால் சொல்லாமல் எங்கேனும் சென்றுவிடுவேன்’ என்று மிரட்ட, அது கொஞ்சம் வேலை செய்தது போல. யாரும் அதன்பின் வரவில்லை. அவள் நிம்மதியாய் மூச்சுவிட்டு தன் வேலைகளை பார்க்க துவங்க மீண்டும் அவளுக்கு வம்படியாய் ‘ஆன்சைட்’ ஆஃபர்’.
Advertisement
இம்முறை சற்று வலியுறுத்தினர். ‘பத்து நாட்களில் எல்லா ப்ராசெஸ்ஸும் முடித்து சென்றுவிடலாம், வெறும் இரண்டே ஆண்டுகள் தான் காண்ட்ராக்ட்’ என்றனர். உடனே மறுக்க தோன்றாமல் இரண்டு நாட்கள் அவகாசம் கேட்டுவிட்டு தனது அறைக்கு வந்தாள்.
இரவு மணி பத்தை நெருங்க, அவள் அலைபேசி இசைத்தது. அன்னையில் எண்ணில் இருந்து அழைப்பு என்றதும் சற்று யோசித்து விட்டு ஆன் செய்தாள். மறுமுனையில் ஒரே அழுகை சத்தம். பதறிவிட்டாள் பெண்.
தந்தைக்கு உடல்நலக்குறைவு உண்டானதால் மருத்துவமனையில் சேர்த்திருக்கிறேன், உடனே வா! என்று அழுகை. தாய்க்கு ஆறுதல் சொல்லிவிட்டு போனை வைத்தவள் வேகமாய் கார் புக் செய்து பதைபதைப்புடன் கிளம்பிவிட்டாள்.
ஆறு மணி நேரமும் அவளுக்கு இதயம் வெளியே தான் துடித்தது. தந்தைக்கு என்ன ஆனதோ என்னவோ என்று பெரும் கலக்கம். இதயம் துடித்த வேகத்தில் நெஞ்சு வலியே வரும்போல ஆனது. ஊரை நெருங்கும்போது அன்னையிடம் இருந்து அழைப்பு வர, பதறி எடுத்தாள்.
“கிட்ட வந்துட்டேன் ம்மா! எங்க இருக்கீங்க? ஹாஸ்பிடல் பேரு சொல்லுங்க?” அவள் கேட்டதும், ஒரு இடத்தை சொல்லி, ‘அங்க வா!’ என்றார் காஞ்சனா. குரலில் அழுகை இல்லை.
யோசிக்காமல் அவர் சொன்ன இடத்திற்க்கு சென்றவள், “அண்ணா, கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. எதாவது எமெர்ஜென்சி’ன்னா கார் தேவைப்படும். என்ன பேமென்ட் ஆனாலும் நான் குடுத்துடுறேன்” என்றாள். இங்கிருந்து மீண்டும் சும்மா தானே செல்ல வேண்டும் என்று அவரும் சரி என்றுவிட்டார்.
அன்னைக்கு அவள் அழைக்க, “வந்துட்டியா? எங்க இருக்க?” என்றார் பரபரப்பாய்.
அவள் இடம் சொல்ல, “அப்படியே திரும்பி நாலு கடை தள்ளி வா” என்றார். காலை நேரம் என்பதால் கடைகள் ஒன்றும் திறந்திருக்கவில்லை. வீதியே அமைதியாக இருந்தது. மருத்துவமனை அங்கே இருப்பதற்கான அறிகுறியே தென்படவில்லை என்றாலும், அன்னை மீது இருந்த நம்பிக்கையில் நடந்தாள். சற்றே தொலைவில் அவள் அன்னை நிற்பது தெரிந்தது.
தந்தைக்கு உடல்நலமில்லை என்று அழுதவரா இவர் என்று தோன்றியது வானிலாவுக்கு. மிதமான அலங்காரத்தில் பட்டுபுடவையில் இருந்தவரை அவள் புரியாமல் பார்க்க, அவள் கையை பிடித்து எங்கோ அழைத்துச்சென்றார். அப்போது தான் அவர் தன்னை ஒரு கோவிலுக்குள் அழைத்து செல்கிறார் என்றே புரிந்தது அவளுக்கு.
கண்ணுக்கெட்டிய தூரத்தில் பத்துப்பேர் பக்கம் நின்றிருந்தனர். அதிலும் தனது தந்தையும் அடக்கம் என்று தெரிந்ததும் செயலிழந்து போனாள் பெண். அப்போது உடல் நலமில்லை என்றதெல்லாம் பொய்! என்று புரிய, ஏதோ சாவுக்குழியை நெருங்குவதை போன்ற உணர்வு. அருகே நெருங்கவும் தான், அது உண்மையில் ‘சாவுக்குழியே’ என்று புரிந்தது அவளுக்கு.
அவளுக்கு ‘அத்தான்’ அங்கே மணக்கோலத்தில் நின்றிருந்தார். உடன் அவரது வீட்டு ஆட்கள்.
“இங்க புடவையை கட்டிட்டு வா, போ!” அவள் விருப்பப்பட்டு தான் அங்கே நிற்பது போல பேசினார் அன்னை.
“அப்பாக்கு முடிலன்னு சொன்னீங்க?” அவள் மெல்ல கேட்க, “அதெல்லாம் அப்புறம் பேசிக்கலாம். இப்போ புடவையை கட்டிட்டு வா! முகூர்த்தம் போய்டும்” என்று பறந்தார் காஞ்சனா.
“முடியாது… நான் செத்தாலும் சரி…” வாணிலா பேச்சை முடிக்கக்கூட இல்லை. ஓங்கி ஒரு அறை வைத்தார் அவள் கன்னத்தில். அவள் அதிர்ந்து நிற்க, “உன் போக்குக்கு வளஞ்சுட்டே இருப்போம்ன்னு நினைச்சியா?” என்று திட்டியவர், குரலை தணித்து, “உன் அக்காவாட்டம் எவனோடவாது ஓட திட்டம் போடுறியோ? அவளை விட்டுட்டோம், உன்னையும் விட முடியாது. ஒழுங்கா அம்மா சொல்றதை கேளு, போ!” என்றார்.
அவள் அப்படியே நிற்க, “வாம்மா” என்று அழைத்துப்போனார் ஒரு பெண்.
“நல்லது பொல்லாததுல்லாம் நீங்க தான் சொல்லிக்குடுக்கனும் சம்பந்தி” என்று அன்னை சொல்வது அவள் காதில் விழுந்தது. அந்த கோவிலில் இருந்த ஒரு சின்ன அறைக்கு அழைத்து வந்த பெண், “மாத்தும்மா!” என்று சொல்ல, “நீங்க வெளில இருங்க” என்றாள்.
அவர் வெளியேறியதும் இவள் அப்படியே நின்றாள். கத்தி ஆர்ப்பாட்டம் செய்ததெல்லாம் இங்கிருந்து தப்பிக்க முடியும் என்றே தோன்றவில்லை. ஆள்நடமாட்டம் குறைந்த நேரத்தில் ஆளில்லாத கோவிலில் அவர்கள் இருக்கும்போது எல்லாம் யோசித்து தான் செய்கிறார்கள் என்று புரிந்தது. என்ன செய்வது என்று கடினப்பட்டு யோசித்தாள். வெளியே கதவு தட்டும் சத்தம்.
“கட்டிட்டியா இல்லையா?” காஞ்சனா தான் கத்தினார்.
“ஹான்…” குரல் கொடுத்தவள், வேறு வழி இல்லாமல் அந்த புடவையை சுற்றினாள். அதற்குள்ளாக மீண்டும் கதவு தட்டப்பட, கதவை திறந்ததும், “ம்ம்ம்… இந்த பூவை வச்சு கூட்டிட்டு வாம்மா” என்ற காஞ்சனா, ஒரு சுற்று பூவை அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு நகர்ந்தார். அந்த பெண்ணும் அவள் தலையில் பூவை சுற்ற, “அக்கா…” என்றாள் வாணிலா தயங்கி.
“என்ன ம்மா?”
“ராத்திரில இருந்து ஒன்னும் சாப்பிடல… மயக்கமா வருது! தண்ணி தரீங்களா?” என்றாள். உண்மையிலேயே அவளுக்கு மயக்கமாய் வந்தது. அந்த பெண்ணும் தண்ணீர் கொண்டு வர செல்ல, அந்த இடைவெளியில் வெளியே வந்த வாணிலா, அவர்கள் இருக்கும் இடத்தை சுற்றிக்கொண்டு எதிர் திசையில் வாசலை நோக்கி நடக்க, அங்கே அந்த பெண்ணிடம் காஞ்சனா கத்துவது தெரிந்தது. வேகமாய் போய்விட வேண்டும் என்று அவள் நகர, அந்த ‘அத்தான்’ பார்த்துவிட்டான்.
அதற்கு மேல் நிற்கவில்லை வாணிலா. உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடினாள். பின்னால் துரத்திக்கொண்டு வருவது தெரிந்தது. கார் டிரைவர் கடவுளாக தெரிந்தார் அப்போது. அவள் வந்த கோலமும், அவசரமும் பார்த்து வேகமாய் காரை இயக்கினார் அவர். நூலிழையில் தப்பிப்பிழைத்து வந்தாள். அடுத்த பத்து நாட்களில் ஸ்பெயினுக்கும் வந்து சேர்ந்தாள்.
கண்ணீர் மரத்து அவள் கதை சொல்லியிருக்க, கோவர்த்தனுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை. இப்படிப்பட்ட ஆட்களை எல்லாம் அவன் இதுநாள் வரை சந்தித்ததில்லை என்பதால் இதெல்லாம் ஏதோ தெலுங்கு பட கதை போல தோன்றியது அவனுக்கு. பதில் வினை புரியாமல் நிலைத்த பார்வையோடு அவன் நிற்க, “நான் பேசணுமா என் வீட்ல? இப்ப சொல்லு!” என்றாள் வாணிலா.
“உப்ப்…” பெருமூச்சு விட்டவன், எழுந்து வெளியே சென்றுவிட்டான். அவன் ஏதாவது சொல்லுவான் என எதிர்ப்பர்த்தவள் அவன் இப்படி ஒன்றுமே சொல்லாமல் சென்றதும், வெறுமையாய் உணர்ந்தாள். கடந்து வந்த நாட்களை மீண்டும் மீட்டியது, அவளை அந்த நாட்களுக்கே கொண்டு சென்றிருக்க, அதன் ரணம் இப்போது பசுமையாய் அணத்தியது. கண்கள் கலங்கிக்கொண்டே வேறு இருந்தது.
தன் மொபைல் கேலரியில் குவிந்திருக்கும் படங்களில் ஒன்றை திறந்து, பார்த்தது பார்த்தபடி இருந்தாள். கண்களில் கோடாக கண்ணீர் இறங்கியது.
“இதான் உன் அக்காவா?” என்ற கோவர்த்தனின் குரலில் சட்டென திரும்பியவள் அவனை பார்க்க, “ரெண்டு பேரும் பாக்க டுவின்ஸ் மாறி இருக்கீங்க” என்றான் இயல்பாய். அவளுக்கு எதிரே வந்து அமர்ந்தான். நடுவே இருந்த டீப்பாயில் கையில் இருந்த தட்டை வைத்தவன், “சுட சுட செஞ்சேன். ஆறிப்போச்சு” என்று சலிக்க, அவனைத்தான் பார்த்தபடி இருந்தாள் அவள்.
“வயிறு காலியா இருக்கப்போ, மனசு ரொம்ப பாரமா தெரியும்ன்னு என் அம்மா அடிக்கடி சொல்லுவாங்க. எவ்ளோ கஷ்டம் வந்தாலும், ‘இரு சாப்பிட்டு வரேன்’ன்னு சொல்லணும். ஒரு விளம்பரம் பார்த்துருக்கியா?
‘பசி வந்தா நீ நீயா இருக்க மாட்ட’
ஹன்ட்ரெட் பர்சென்ட் உண்மை தெரியுமா?” என்றவன், பூரியை கிழங்கில் தோய்த்து அவள் வாய் அருகே கொண்டு வர, இன்னமும் அவள் பார்வை மாறவில்லை.
“ம்ம்ம்” என்றவனின் உந்துதலில் அவள் வாய் திறந்தது. அடுத்து திறந்துக்கொண்டே இருந்தது. அவள் வயிறை நிறைத்த பின்பே தன் வயிறை கவனிக்க ஆரம்பித்தான் கோவர்த்தன்.
இரண்டு பூரிகளை அமைதியாய் உண்டவன், பின் உண்டுக்கொண்டே தன் மொபைலை எடுத்து ஏதோ செய்துவிட்டு அவள் புறம் காட்டினான்.
“மிஸ்டர் ஜெயமோகன் நம்பரை ப்ளாக் பண்ணிட்டேன். வேற நம்பர்ல இருந்து கூப்பிட்டாலும் ப்ளாக் பண்ணிடுவேன். ஓகே?” என்று கேட்க, உதடு பிதுங்கியது அவளுக்கு. அழுகையை அடக்கிக்கொண்டு அவள் அமர்ந்திருக்க, அதற்கு மேல் அவனுக்கு உணவு இறங்குமா? வேகமாய் கையை கழுவிவிட்டு வந்தவன், அமர்ந்திருந்தவளை இடையோடு அணைத்துக்கொண்டான். அவளும் கொஞ்சமும் மறுக்காமல் கட்டிக்கொள்ள, சத்தமில்லாமல் நெடு நேர அழுகை அவளிடம்.அவனிடம் ஆறுதல் மொழிகள் எல்லாம் இல்லை, இதமான தலை வருடல் மட்டும் தான்…!
error: Content is protected !!