Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

என் ஹைக்கூ காதல்

என் ஹைக்கூ காதல் 13

மெத்தையில் படுத்து, விட்டத்தில் மின்னும் பலவண்ண இரவு விளக்கை மந்தகாச சிரிப்போடு பார்த்துக்கொண்டு அட்டணக்கால் போட்டு அங்குமிங்குமாய் ஆட்டிக்கொண்டிருந்தான் கோவர்த்தன். அவனது பக்கவாட்டில் இருந்த மடிகணினியின் திரையில் மிக நீண்ட கொட்டாவி ஒன்றை வெளியிட்டார் அம்சவர்தினி.

அந்த சத்தத்தில் கலைந்தவன், “ப்ச், என்னம்மா தூங்குறீங்க?” என்று முகம் சுருக்க, “டேய், மணி பன்னெண்டு ஆவப்போது டா… நாலு மணிக்கு பால் கறக்க எழுந்துரிக்கணும். நீ இப்படி நேரங்கெட்ட நேரத்துல இம்சை பண்ணா எப்புடுறா?” என்றார் பரிதாபமாய்.



Advertisement

“தினமும் தானே எழுந்துக்குற? ஒரு நாள் உன் பையனுக்காக கண்ணு முழிச்சா ஒன்னும் குறைஞ்சுட மாட்ட!” என்றான் கடுகடுவென.

மீண்டும் ஒரு கொட்டாவி வர, ‘அவ்..அவ்..அவ்’ என வாய் மீது தட்டிக்கொண்டே, “சொல்லு சொல்லு கேக்குறேன்” என்றார் அம்ஸா.

Advertisement

Advertisement

“அவ கண்ணு கலங்குறப்போ எனக்கு மனசுக்குள்ள என்னவோ பண்ணுதும்மா!” என்றான் நெஞ்சை தடவிக்கொண்டே.

“எல்லாம் தாலி கட்டுற வரைக்கும் தான்…” அவர் சொல்ல, “ம்மா?” என்று முறைத்தான் அவன்.

Advertisement

“ஒருத்தியை மாஞ்சு மாஞ்சு கட்டுற வரைக்கும் தான் இதெல்லாம். அதே பொண்ணை கட்டிக்கிட்டு ரெண்டு புள்ளை பெத்த பின்ன, அவ கண்ணீர் விட்டா என்ன? கதறி அழுதா என்னன்னு திரிவீங்க…” என்று சொல்ல, “என்ன சொன்ன?” என்று அவர் முதுகுக்கு பின்னே விஷ்ணு வர்த்தனின் குரல் கேட்டதும், ஒருக்களித்து படுத்திருந்தவர், தலையை மட்டும் கொஞ்சமாய் திருப்பி, “நீங்க கேட்டீங்கன்னு திரும்ப வேற சொல்லுவேன், உங்களுக்கு தான் கஷ்டம். கேட்காத மாறி தூங்குனா என்ன?” என்றதும், ‘ஹும்!’ என்ற உறுமலோடு அவர் புரண்டு படுக்கும் அசைவு தெரிந்தது.

மீண்டும் ஃபோன் பக்கம் திரும்பிய அம்ஸா, “கண்ணீரு பன்னீருன்னு எதாவது சொல்லிட்டு திரியாத! அந்த பொண்ணோட கதையை கேட்டா, அவ மனசளவுல ரொம்ப தளர்ந்து இருப்பான்னு நினைக்குறேன். நீ இந்த நேரத்துல அவக்கிட்ட சிரிச்சு பேசுனா கூட அவ மனசு உன் பக்கம் திரும்புறதுல எந்த வித ஆச்சர்யமும் இல்ல” என்றார்.

வாணிலா பற்றிய குடும்ப விவரங்களை மேலோட்டமாக தன் அன்னையிடம் பகிர்ந்திருந்தான் கோவர்த்தன். இப்படி யாருடைய பர்சனல் பற்றியும் இதுவரை அவன் பேசியதே இல்லை. ஏனோ அவள் விடயம் சொல்லியே ஆகவேண்டும் என்று தோன்றியது.

“ம்மா… அவ வேணா மெண்டலி வீக்கா இருக்கலாம். ஆதரவா பேசுற என்மேல பிடித்தம் வரலாம். ஆனா, எனக்கு அப்படி இல்லல? நான் அவளை உண்மையாவே தான் நெருக்கமா நினைக்குறேன்…” சொல்ல வேண்டிய முக்கியமான வார்த்தையை விடுத்து வேறு வேறு வார்த்தைகளை கோர்த்து பேசினான்.

“எனக்கு அப்படி தோனல!” என்றுவிட்டார் அசட்டையாய்.

திகைத்தவனாய், “ம்மா? எனக்கு முப்பத்தி மூணு வயசாச்சு. எந்த உறவுக்கு என்ன அர்த்தம்ன்னு கூடவா இன்னும் தெளிவா தெரியாம இருக்கும்?” மூக்கு விடைக்க அவன் கேட்க, “தெரியலாம்…” என்றவர், “இது ஏன் இப்டி இருக்க கூடாது?” என்று நிறுத்தினார்.

“எப்படி?”

“கிட்டத்தட்ட பாஞ்சு வருஷமா அங்க குப்பை கொட்டுற! வெள்ளை தோலும் கொல கொல பேசும்மா கேட்டு காஞ்சு போயிருந்த உனக்கு, திடுதிப்புன்னு நம்ம ஊரு பொண்ணு ஒருத்தி சிக்கவும் பிடிச்சு போச்சோ என்னவோ!?” என்றார்.

சில நொடிகள் அப்படியே சமைந்தான். ‘இருக்குமோ?’ என்றது மூளையும்.

வேகமாய் தலையை உலுக்கியவன், “ம்மோவ்… சும்மா கொழப்பாதீங்க சொல்லிட்டேன். இங்க நான் மனோதத்துவ டாக்டரா இல்ல நீங்களா?” என்று கேட்டு முறைத்தவன், “நூறு இல்ல ஆயிரம் நம்மூரு பொண்ணுங்க வந்தாலும் எனக்கு வாணிலா தான்!” என்றான் திண்ணமாய்.

“இப்ப வாய் இப்படி சொல்லும், ஆறு மாசத்துல வேற கூட சொல்லும்” அம்ஸா அப்போதும் விடாமல் அவநம்பிக்கையாய் பேச, உண்மையிலேயே கடுப்பானவன், “ஆறு மாசம் இல்ல, என்னோட அறுபது வயசுல கூட இப்படி தான் பேசுவேன். அவ தான் என்னோட பொண்டாட்டி. அதுல எந்த மாற்றமும் இல்ல” என்றார் கனல் பறக்க.

அம்சமாய் சிரித்த அம்ஸா, “அப்படி சொல்லுடா பளிச்சுன்னு… மனசு கலங்குதுங்குறான், பிடித்தங்குறான், நெருக்கங்குறான்…! கல்யாணம் பண்ணப்போறேன்னு வாய்ல வரதுக்கு இவ்ளோ நேரமா?” அவர் கேட்டதும் தான், இவனுக்கு கனலே இறங்கியது. கூடவே மெலிதான வெட்கப்புன்னகையும்.

அதுவரை மறுபக்கம் படுத்திருந்த விஷ்ணுவர்த்தன், வேகமாய் எட்டிப்பார்த்தார்.

“உண்மையாவே கல்யாணம் கட்டப்போறியாடா?” என்று கேட்டிட, முறைத்தவன், “இல்ல, கல்யாணம் கட்டாமையே இங்க குடும்பம் நடத்தப்போறேன்” என்றான் வெடுக்கென. அவன் வாய் முகூர்த்தம், அதுதான் நடக்கப்போகிறது என்று தெரியாமல்!

விஷ்ணுவர்த்தன் அவனுக்கு மேலாய் முறைக்க, “அடி செருப்பால!” என்றார் அம்ஸா.

“உன்மேல இருந்த நம்பிக்கைல தான் இத்தினி வருஷமும் விட்டு வச்சது. அதுக்கு பங்கம் வரப்போல ஏதாவது செஞ்ச… ஒரு கட்டு வெளக்கமாரும் ஒரே அடில பிஞ்சுரும் பாத்துக்க” என்றார் சீரியசாய். இந்த மாறி பேச்சு, அடி எல்லாம் பள்ளிக்கூடம் போனபோது வாங்கியது. தன் பிள்ளையே பள்ளிக்கு போகும் வயதில் கூட இதுப்போல திட்டு வாங்கும் ஆண்மகன் தான் ஒருவனாகத்தான் இருப்பேன் என்று சலித்துக்கொண்டான் மனதுக்குள்.

“என்னடா?” அம்ஸா குரல் உயர்த்த, “சரிம்மா!” என்றான் முகத்தை தூக்கி வைத்து.

“விடு, உன் புள்ளைக்கு இப்போதான் குடும்பமா வாழணும்ன்னு புத்தி வந்துருக்கு. அவன் போக்குல விடு!” என்றுவிட்டார் விஷ்ணுவர்த்தன்.

கோவர்த்தனும் விஷ்ணுவர்த்தனும் எலியும் பூனையும் என்றெல்லாம் கிடையாது.  அவன் வெளிநாடு கிளம்பியபோது அம்சாவை விட விஷ்ணு தான் அதிகம் கலங்கினார். படித்து முடித்து இங்கேயே வந்துவிடுவான். தனது ஒன்றுவிட்ட  தங்கை மகள்களை  தன் மருமகளாக்கிக்கொள்ளலாம் என்று ஆசைப்பட்டார்.

மூத்தவன் ஹர்ஷவர்தன், அங்கேயே படித்து, கால்நடை மருத்துவனாக பணியில் இருக்க, தங்கையின் மூத்த மகள் தீபாவுக்கும் அவனுக்கும் நிச்சயம் ஆனது.  அடுத்து படிப்பு முடித்து வந்த  கோவர்த்தனுக்கு, இளைய பெண்ணை பார்த்தபோது, அவன் மறுக்கவெல்லாம் இல்லை.  ஆனால், மீண்டும் வெளிநாடு சென்றுவிடுவேன் என்றுவிட்டான். அதில் பெண் வீட்டுக்கு துளியும் விருப்பமில்லை. மகள்களை கண் முன்னே காண வேண்டும் என்று விரும்பினர்.

விஷ்ணுவர்தன் எவ்வளவோ சொல்லிப்பார்த்தார்.  கோவர்த்தன் விடாப்பிடியாய் வெளிநாடு போயே தீருவேன் என்றுவிட, சம்பந்தம் கைநழுவியது. கூடவே மகனும் நழுவி வெளிநாடு சென்றுவிட, கோவத்தில் அவனோடு சுமூகமாய் பேசுவதை நிறுத்திவிட்டார் விஷ்ணுவர்த்தன். எல்லாம் கொஞ்ச காலம் தான். கோவம் போனாலும், லேசான வீம்பு!

அடுத்தடுத்து அவனுக்கு பார்த்த வரன்கள் கூட ‘வெளிநாடா? வேண்டாங்க!’ என்றுவிட்டனர். மற்ற இடங்களில் எப்படியோ?! அவர்கள் சொந்தபந்தம், அங்காளிபங்காளிகளில் யாருமே வெளிநாட்டு சம்பந்தத்தை ஆதரிப்பதில்லை. சொந்தம் விட்டு வெளியே சென்று பெண் எடுக்கவும் இவர்களுக்கு விருப்பமில்லை.

கோவர்த்தனை இங்கேயே வரும்படி அழைத்தும் தீர்க்கமாய்  மறுத்துவிட்டான். அதனால், அவன் மாதாமாதம் அனுப்பிக்கொண்டிருந்த பணத்தையும் வேண்டாம் என்று கோவமாய் நிறுத்திவிட்டனர்.  அப்படியாவது இவன் மனம் கேட்காமல் ஊரோடு வருவான் என்று பார்த்தால், பணம் சேர்த்து அங்கேயே வீடும் வாங்கிவிட்டான் என்றதும் வெறுத்துப்போனது விஷ்ணுவர்த்தனுக்கு.

அதற்க்கெல்லாம் உச்சகட்டமாய் இளைய மகள் ராகவர்த்தினியின்  திருமணதிற்கு விசா கிடைக்காததால் நேரில் வர இயலாமல் வீடியோ காலில் அவன் வாழ்த்து சொல்ல,  ‘போய் தொல’ மனநிலைக்கு போய்விட்டார். அதன்பிறகு ஒத்தையில் நின்றுவிடாமல் பொண்டாட்டி, பிள்ளை என்று ஆனால் போதுமே என்று அவா மட்டுமே!

இப்போது அவனே அதன்போக்கிற்கு வந்துவிட, நெஞ்சில் பாரம் குறைந்த உணர்வு தகப்பனுக்கு.

வீட்டிற்கு பேசிவிட்டு மணியை பார்த்தான். இரவு பதினொன்று என்றது…!

சில மணி நேரங்கள் முன்பு தான் அவளை அணைத்து, ஆறுதல் சொல்லி, உணவு கொடுத்து, உறங்க வைத்து வந்தது. மனசுக்குள் தீர்மானமாய் அவள் பெயர், தன் மனைவி என்ற இடத்தில் பொதிந்துவிட்டது. அவள் வாழ்க்கை இதுவரை எப்படி வேண்டுமானாலும் இருந்துவிட்டு போகட்டும், இனிமேல் அவள் கண்கள் சிறிதும் கலங்கிவிடாமல் கவனமாய் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று தோன்றியது.

இப்போதே இந்த கணமே அவளை தன் கைகளுக்குள் அடக்கிக்கொள்ள பரபரத்தது. சற்று முன்னர் அவளை ஆதரவாய் மட்டுமே அணைத்த உணர்வை இப்போது மீள்கொணர்கையில் புதியதாய் ரோமமெல்லாம் சிலிர்த்து கிளம்பியது.

பெற்றவரிடம் மனதை சொல்லிவிட்ட நிம்மதி வேறு… அதோடு விரல்களில் அவள் அணிவித்த மோதிரமும் குறுகுறுக்க, இப்போதே தன் திருமண வாழ்வு தொடங்கிவிட்ட தோற்றம் அவனுக்குள்.  அவள் இதழ்களை அழுத்தமாய் தீண்டிய கணங்கள் வேறு நிழலாய் நினைவு வந்து அவனை ஏதோ செய்ய, அடுத்து வாங்கிய அடியும் சேர்த்து நினைவு வந்ததில் சற்றே தணிந்தான்.

இருப்பினும், அவன் இருந்த சந்தோசத்தில் உறக்கம் எட்டிக்கூட பார்க்கவில்லை. உருண்டு உருண்டு நேரம் தான் ஓடியது.

ஒரேயொரு முறை  அவள் முகத்தை அருகே பார்த்துவிட்டால் போதுமே என்று தோன்ற… அவள் பல மைல்களுக்கு அப்பால் இருந்திருந்தால் கூட கிளம்பியிருப்பான் எனும்போது, பக்கத்து அறைக்கு போவதற்கு என்ன தடை!?

அவள் அறை வாசலில் தான் நின்றிருந்தான். அவனே தான் கதவை சாற்றிவிட்டு சென்றிருந்ததால் தாழிடாமல் இருந்தது. மெல்லிய விளக்கின் வெளிச்சத்தில் சத்தம் கேட்க்காமல் மெல்ல நடந்து அவள் படுக்கையை அடைந்தான். கழுத்து வரை போர்த்திக்கொண்டு அமைதியாய் படுத்திருந்தாள் பெண்.

அவள்பக்கமாய் முகம் பார்க்கும்படி தரையில் மண்டியிட்டு அமர்ந்தவன், அவள் முகத்தை தான் பார்த்துக்கொண்டிருந்தான். அழுது களைத்த தோற்றம்! அதிலும் கூட வசீகரித்தாள். மனதுக்கு பிடித்து விட்டால் எல்லாம் அழகு தானே!?

“உனக்கு என்னை பிடிக்கும் தானே நிலா? என் கூட கடைசிவரை இருக்கனும்ன்னு உனக்கு தோணும்ல?” ஹஸ்கி வாய்சில் உறங்கும் அவள் முகம் பார்த்து பேசினான்.

“யூ க்நொவ் சம்திங்… ஐ’யம் தி கிரேட்டஸ்ட் இன்வெஸ்ட்மென்ட் ப்ளான் ஃபோர் யூ… (நான் உனக்கான மிகசிறந்த முதலீடு)

நீ கொஞ்சூண்டு லவ் குடுத்தா போதும்… உன் லைஃப் டைம் க்கு, நான் ‘ஹை ரேட் ஆஃப் இன்டரஸ்ட்’ல என் லவ்வ குடுத்துட்டே இருப்பேன்!” சிரித்தவன்,

“இது உனக்கு மட்டுமே கிடைக்குற ஸ்பெஷல் ப்ளான்!” என்றுவிட்டு, “ஆனா, எனக்கு தான் இதுல பெனிஃபிட் அதிகம்” என்றான் கள்ளமாய்.

ஹஸ்கி வாய்சில் தான் என்றாலும் அவன் இத்தனை பேசியும் அவள் உறக்கம் தடைப்படவில்லை என்றதும் தைரியம் ஆனது இவனுக்கு. மெதுமெதுவாய் முன்னேறி அவள் முகத்துக்கு வெகு அருகே சென்றான். தடித்திருந்த கண்ணோரங்கள் அவனை அதிகமாய் கவர்ந்துத்தொலைத்தது.

உதடுகள் நமநமக்க ஆரம்பிக்க, அருகே செல்வதும், தயங்கி நகர்வதுமாய் சில நொடிகள் அவன் ஊஞ்சலாட்டம் போட, சில நொடிகளில் அவனது பொய் தயக்கம் பொறுமையின்றி விலகிப்போனது.  மீசை குத்தாவண்ணம் அழுத்தமின்றி அவள் கண்ணோரங்களில் அவன் உதடுகள் முத்தமிட, அவனுக்குள் எழுந்த பரவசம், படபடப்பு, பதட்டம் எல்லாமே அடுத்த நொடியில்லாமல் இறங்கிப்போனது, அவன் உதடுகள் உணர்ந்த வெப்பத்தில்..

வெடுக்கென நிமிர்ந்தவன், அவள் நெற்றியில் கை வைத்தான். உடல் சூடு தெரிந்தாலும், போர்வையை வேகமாய்  விலக்கிவிட்டு அவள் கழுத்தடியில் உள்ளங்கை வைக்க, சூடு அதிகமாய் தெரிந்தது.

‘ப்ச், அழுத அழுகைக்கு காய்ச்சலை இழுத்துக்கிட்டாளே!’ என்று கவலையாக இருந்தது. ஆனாலும் ஒரு சாதாரண காய்ச்சலுக்கு பதறும் அளவுக்கு அவன் மோசமான வைத்தியனும் இல்லை,  அவனுக்கு காதலும் கண்ணை கட்டவில்லை.

கைவசம் வைத்திருக்கும் மருந்துக்களில் இருந்து காய்ச்சலுக்கான மாத்திரையை எடுத்துக்கொண்டு சுடுநீருடன் மீண்டும் அவள் அறைக்குள் வந்தான். அயர்ந்து உறங்கியவளை தாங்கி தூக்கியவன், அவள் தூக்கம் களையும் முன்னே சிறு குழந்தைக்கு புகட்டுவதை போல மாத்திரையை நேர்த்தியாக கொடுத்திருந்தான்.

உடனே படுக்க வைக்க முடியாதென தன் மீதே சாய்த்துப்பிடித்தவன், அவள் முதுகை மெல்ல நீவிவிட்டான். நியாயமாய் நெஞ்சை தான் நீவிவிட வேண்டும். அவன் கண்ணியமான காதலன் என்பதால் முன்னுக்கு வராமல் பின்னுக்கு சென்றுவிட்டான்.

அவளை அலுங்காமல் படுக்கையில் கிடத்திவிட்டு போர்வையை இழுத்துவிட்டவன் முடிந்தது வேலை என போகாமல் அங்கேயே கவுச்சில் படுத்துக்கொண்டான். மனதுக்கு உரியவள் அருகில் இருப்பதே சுகமாய் அவனை தூங்க வைத்தது.

அவன் தூக்கம் எல்லாம் சில மணி துளிகள் தான்.  ஏதோ ஒரு சத்தம் அவனை உசுப்பியது. தூக்கம் கலைந்து அவன் பார்த்தபோது படுக்கையில் இருந்த வாணிலா அனத்திக்கொண்டிருந்தாள்.

வேகமாய் அவன் அருகே சென்று தொட்டுப்பார்க்க, விரல்கள் தொடும்முன்னே சூட்டை உணர்ந்தது. அவன் மருந்து கொடுத்தும் குறையாத காய்ச்சல் வேகம் தான் எடுத்திருந்தது.

காட்டன் துணியை பைப் நீரில் நனைத்து பிழிந்து அவள் முகம் கழுத்து கை கால் என துடைத்துவிட ஆரம்பித்தான். அவள் மீது பட்டதும் அந்த ஈரத்துணியே சூடுகண்டுப்போனது. தெர்மாமீட்டரில் காய்ச்சல் நூற்றி நான்கை தாண்டி போக ஆரம்பிக்க மெலிதாக பயம் பிடிக்க ஆரம்பித்தது அவனுக்கு.

அவனது எந்த செய்கைக்கு பெண்ணிடம் விழிப்பில்லை. மூடிய கண்கள் திறக்கவே இல்லை. உதடுகள் மட்டும் என்னவோ சொல்லிக்கொண்டே இருந்தது. தெளிவில்லாத குழறலான வார்த்தைகளை அவனால் மொழிப்பெயர்க்க இயலவில்லை. அவள் இருக்கும் நிலையில் அவனுக்கு அதற்க்கெல்லாம் நேரமும் இல்லை. தொடர்ந்து முதலுதவி செய்துக்கொண்டே இருந்தான்.

உள்ளே போகும் மருந்து வேலை செய்யக்கூட முடியாத அளவு அவள் மனது அலைப்பாய்ந்துக்கொண்டிருக்கிறது என்று மருத்துவனுக்கு புரிகிறது. இதுபோல நோயாளிகள் பலருக்கு அவன் மருத்துவம் செய்திருக்கிறான்.  அப்போதெல்லாம் உண்டாகாத பதட்டம் இப்போது இவளிடம் உண்டாக மெலிதாய் தடுமாறினான்.

அவள் நடுக்கம் கூடக்கூட இவனுக்கும் நடுங்கியது. உடனே மருத்துவமனைக்கு கொண்டு செல்லலாமா என்றெல்லாம் ஒருபக்கம் தோன்ற, மறுபக்கம் எதையும் யோசிக்காமல் அவளுடன், அவள் படுக்கையில், அவளை இறுக்கமாய் அணைத்துக்கொண்டு படுத்துவிட்டான்.

நடுங்கும் அவள் முகத்தில் கைகளால் பற்றி, நெற்றியில் மிக அழுத்தமான முத்தம் ஒன்றை பதித்தவன், “நான் இருக்கேன் நிலா உனக்கு… உன்னை எப்பவும் விட மாட்டேன்!” என்றதோடு தன் நெஞ்சில் புதைத்துக்கொண்டான் அவளை.

என்ன மாயமோ மந்திரமோ!? சிறுது நேரத்தில் அவள் நடுக்கம் குறைந்து இயல்பாக ஆரம்பித்தது. உடல் சூடு சிறுது சிறுதாய் குறைய, மூடிய அவள் விழிகள் திறக்க மட்டும் முழுதாய் நாற்பத்தி எட்டு மணி நேரம் பிடித்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!