Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஏகாந்த பொழுதும் காதலும்

ஏகாந்த பொழுதும் காதலும் 1 3

“பாப்பு, வாய் கொப்பளிச்சிட்டு பால் குடிக்கலாமா?”, என்று மகளுடன் உரையாடிய படியே அவள் அறைக்குள் செல்ல போகும் அவளைப் பார்த்து விட்டு வெளியே வந்தான் புவி.

தம்பி தங்கைகளின் அறைக் கதவு இன்னும் திறக்கப் படவே இல்லை. “கொடுத்து வச்சவங்க”, என்று எண்ணிக் கொண்டு வெளியே வந்தான். வெளியே இருந்த தோட்டத்தில் டேபிள் சேர் போட்டு அதில் அமர்ந்திருந்தார்கள் அவனது தந்தை பாரிவேந்தனும் தாய் மல்லிகாவும்.



Advertisement

அவனைக் கண்டதும் “கடைக்கு கிளம்பிட்டியா பா?”, என்று கேட்டார் பாரி.

Advertisement

“ஆமா பா, நீங்க காபி குடிச்சிட்டீங்களா?”, என்று புவி கேட்டதும் “அதுக்கு என்னைக்கு பஞ்சம் வந்துருக்கு? பல் விளக்கினதும் கையில தந்துருவா”, என்று பாரி மருமகளைப் புகழ “அதை விட்டா அவளுக்கு வேற வேலை என்ன இருக்கு?”, என்று நக்கலாக கேட்டாள் மல்லிகா.

Advertisement

அதைக் கேட்டு விட்டு பதில் ஏதும் சொல்லாமல் செல்லும் மகனை பார்த்த படி இருந்தார் பாரி. “கல்யாணம் ஆகி இத்தனை வருஷம் ஆகியும் மனைவிக்காக தாயைக் கண்டிக்க மாட்டிக்கானே”, என்று அவருக்கு ஆதங்கமாக இருந்தது.

Advertisement

பின் மனைவியை தீர்க்கமாக பார்த்தார். “என்னங்க இப்படி பாக்குறீங்க?”, என்று மல்லிகா கேட்க “உன்னை எப்படி தொலைச்சு தலை முழுகலாம்னு பாக்குறேன்”, என்றார் பாரி.

“என்னங்க?”, என்று அவள் அதிர்ச்சியாக கேட்க “வாயை மூடு டி. சரியான நேரத்துக்கு திங்க கிடைக்குதுல்ல? அந்த திமிர் தான் உன்னை இப்படி பேச வைக்கிது?”, என்றார்.

“நான் இப்ப என்ன சொல்லிட்டேன்?”

“நீ சுஜியை மட்டம் தட்டலையா?”

“நான் சொன்னதைக் கேட்டு அவனே பேசாம போறான். உங்களுக்கு என்ன? பேசாம பேப்பரை படிங்க”, என்று மல்லிகா சொல்ல அவரும் அமைதியாகி விட்டார்.

மருமகளுக்காக சப்போர்ட் செய்து பேசுவது மகன் செய்ய வேண்டிய காரியம் என்று புரிந்தது. ஆனால் அவனுக்கே மனைவி மீது உரிமை இல்லாத போது அவர் பேசினாலும் வீண் தான் என்று அமைதியாகி விட்டார்.

குழந்தைக்கு முகம் கழுவி பால் கொடுத்த சுஜிதா அவளைத் தூக்கி கொண்டு வெளியே வந்தாள். “மாமா, பாப்புவை கொஞ்ச நேரம் பாத்துக்குறீங்களா?”, என்று கேட்டாள்.

“கொடு மா”, என்று கை நீட்டியவர் “குட்டி மா தாத்தா கிட்ட வாங்க. என் அம்மா தானே நீங்க?”, என்று பேத்தியை கொஞ்ச ஆரம்பித்து விட்டார்.

“பிள்ளையை அவர் கிட்ட கொடுத்துட்டு நீ அங்க என்ன வெட்டி முறிக்க போறியாம்?”, என்று கேட்டாள் மல்லிகா.

“ஆரம்பிச்சிட்டாளா?”, என்று பாரி பார்க்க “கொஞ்சம் வேலை கிடக்கு அத்தை”, என்றாள் சுஜி.

“என்ன வேலை இருக்கா? இன்னும் டிபன் செய்யலையா நீ?”

“எல்லாம் செஞ்சிட்டேன் அத்தை. பாத்திரம் விளக்க வேண்டியது இருக்கு, அதான்”

“சரி சரி போ. நான் குளிச்சிட்டு வரும் போது சாப்பாடு ரெடியா இருக்கணும்”, என்று சொல்ல “சரிங்க அத்தை”, என்று சொல்லி விட்டுச் சென்றாள்.

பாரி மல்லிகாவை முறைத்துப் பார்க்க “என்னங்க? இன்னைக்கு என்னையவே பாக்குறீங்க?”, என்று கேட்டாள்

“இந்த மாதிரி உன்னையும் அதட்டி மிரட்ட எங்க அம்மா இல்லாம போய்ட்டாங்களேன்னு நினைச்சேன். அப்படியே இருந்துருந்தாலும் இவ்வளவு கீழ்தனமா எல்லாம் எங்க அம்மா நடந்துருக்க மாட்டாங்க. அதை தான் யோசிச்சேன்”, என்றார்.

கணவன் சொன்னது என்னவோ போல இருந்தாலும் தன்னுடைய கெத்தை விட்டுக் கொடுக்காமல் “நான் இப்ப என்ன சொல்லிட்டேன்?”, என்று கேட்டாள்.

“உன் ரெண்டாவது மருமகளும், மூத்த மகளும் இன்னும் எழுந்து கூட வரலை. அவங்களைக் கேக்க வேண்டியது தானே? சுஜிக்கு ஏதாவது உதவி செய்ய சொல்ல வேண்டியது தானே?”

“என் மருமக எப்படி இவ்வளவு சீக்கிரம் எழுவா? அவ செல்லமா வளந்த பொண்ணு”

“உன் அண்ணன் மவன்னு அவளுக்கு மட்டும் வாக்காளத்தா? உன் மகளையாவது எழுப்ப வேண்டியது தானே?”

“அவளே அம்மா வீட்டுக்கு ரெஸ்ட் எடுக்க வந்துருக்கா? மாசமா இருக்காள்ல? அவளை எப்படி எழுப்ப முடியும்?”

“அஞ்சு மாசம் ஆகிருச்சு தானே?? வீட்டு வேலையை ஒழுங்கா செய்ய சொல்லு. அது தான் நல்லது”, என்று அவர் சொல்லும் போது “தாத்தா”, என்று பவித்ரா அழைக்க அதன் பின் அவர் மனைவியை மறந்து பேத்தியுடன் ஒன்றி விட்டார்.

புவி கடைக்குச் சென்ற போது பரணி ஏற்கனவே கடையைத் திறந்து பூஜை எல்லாம் செய்திருந்தான். புவி நேராக சென்று சாமியை கும்பிட்டு விட்டு கல்லாவில் அமர்ந்தான்.

“வந்துட்டியா மாப்பிள்ளை? சரி நான் கிளம்புறேன்”, என்றான் அவனது மாமா பரணி. பரணி வேறு யாரும் அல்ல. மல்லிகாவின் நெருங்கின சொந்தம். மல்லிகாவுக்கு தம்பி முறை. சிறு வயதிலே அன்னை தந்தையை இழந்த பரணியை மல்லிகா தன்னுடனே அழைத்து வந்து விட்டாள்.

பரணியை வீட்டில் இருக்கும் அனைவருக்கும் பிடிக்கும். சிறு வயதில் இருந்து பரணியும் இவர்கள் வீட்டில் தான் வளர்க்கிறான். புவியரசனை விட இரண்டு வயது தான் மூத்தவன் என்பதால் இருவரும் வா போ என்று தான் பேசிக் கொள்வார்கள்.

மாமா மாப்பிள்ளை என்று அழைத்துக் கொண்டாலும் இருவருக்கும் இடையே இருப்பது ஆழமான நட்பு. முப்பத்து ஆறு வயது ஆனாலும் பரணி இன்னும் திருமணம் செய்து கொள்ள வில்லை. சுஜிக்கு பரணி சித்தப்பா முறை என்றாலும் அவன் வயது கருதி அண்ணன் என்று தான் அழைப்பாள்.

“சரி மாமா, நீ வீட்டுக்கு போய் சாப்பிட்டு வா. போயிட்டு வந்து பேங்க்ல பணத்தை போட்டுட்டு வந்துரு”, என்றான் புவி.

“சரி மாப்பிள்ளை, ஆமா நீ சாப்பிட்டியா? இன்னைக்கு என்ன டிபன் தங்கச்சி செஞ்சிருக்கா?”

“இட்லி மாமா”

“என் தங்கச்சி சுடுற இட்லி மல்லிப்பூ மாதிரி இருக்குமே? எத்தனை மொக்கின?”

“எப்பவும் போல ஆறு. சட்னி சூப்பரா இருந்துச்சு”

“இதை அவ கிட்ட சொன்னியா மாப்பிள்ளை?”

“அவ கேக்கலை, நான் சொல்லலை”, என்று தோளைக் குலுக்கிக் கொண்டவன் வேலையில் கவனம் செலுத்த “இவன் எப்ப தான் திருந்தப் போறானோ?”, என்று எண்ணிக் கொண்டு வீட்டுக்கு சென்றான் பரணி.

தோட்டத்தில் அமர்ந்திருந்த பாரியும் மல்லிகாவும் அவனைப் பார்க்க “நேரம் ஆச்சு பாரு, போய்ச் சாப்பிடு பரணி”, என்று பாரி சொல்ல மல்லிகாவோ தம்பியைக் கண்டு முகம் திருப்பிக் கொண்டாள்.

“என்ன மாமா என்னைப் பாத்ததும் எங்க அக்கா கழுத்து அந்த பக்கம் இழுத்துக்குது?”, என்று கேட்ட பரணி “குட்டி மா தாத்தா கிட்ட வாங்க”, என்று சொல்லி பவித்ராவை தூக்கிக் கொள்ள “அது ஒண்ணும் இல்லை பரணி, நீ கல்யாணம் முடிக்க மாட்டிக்கன்னு கோபத்துல இருக்கா. சீக்கிரம் சம்மதம் சொல்லு பா”, என்றார் பாரி.

திருமணம் என்றதும் அவன் முகம் வாட மனதில் சொல்ல முடியாத சோகம் எழுந்தது. “குட்டி மா பெரிய தாத்தா கிட்ட இருங்க. நான் சாப்பிட்டு வந்து உன் கூட விளையாடுறேன்”, என்று குழந்தையை பாரியிடம் கொடுத்து விட்டு உள்ளே சென்று விட்டான் பரணி.

“எப்படி போறான் பாத்தீங்களாங்க?”, என்று மல்லிகா ஆதங்கமாக கேட்க “விடு மல்லிகா, நாம எவ்வளவோ பேசிட்டோம். அதுக்கு மேல என்ன செய்ய? கையைக் காலை கட்டியா அவனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க முடியும்?”, என்று சொல்லி விட்டு பேத்தியுடன் பேசினார்.

உள்ளே சென்ற பரணியைக் கண்ட சுஜி “வாங்க அண்ணா, டிபன் எடுத்து வைக்கவா?”, என்று கேட்டாள்.

“வை மா”, என்று சொன்ன பரணி கை கழுவி விட்டு டேபிளில் அமர அவன் தட்டில் இரண்டு இட்லியை வைத்து சட்னி சாம்பார் என்று பரிமாறினாள்.

பரணிக்கு தட்டில் மொத்தமாக உணவை வைத்தால் பிடிக்காது. கொஞ்சம் கொஞ்சமாக தான் எடுத்துக் கொள்வான். அவள் பரிமாறிய இட்லியை சாப்பிட்ட பரணி “உன் புருஷன் சொன்ன மாதிரியே சட்னி அவ்வளவு அருமையா இருக்கு மா”, என்றான்.

“இன்னைக்கு இந்த பொய்யா அண்ணா? கண்டிப்பா அவர் சொல்லிருக்க மாட்டார். நீங்களா எடுத்து விடாதீங்க”, என்று புன்னகையுடன் சொன்னாலும் அவள் குரலில் சிறு சோகம் இழையோடியது.

“நான் என்ன சொன்னாலும் நீ தான் நம்ப மாட்டியே? நீயே அவன் கிட்ட சட்னி நல்லா இருக்கான்னு ஒரு வார்த்தை அவன் சாப்பிடும் போது கேக்கலாம்ல மா?”

“நான் கேட்டா நல்லா இல்லைன்னு கூட எனக்கு பதில் வராது. அப்புறம் எதுக்கு கேட்டுகிட்டு? அவர் சாப்பிடுறதே எனக்கு போதும்”, என்று சுஜி சொல்ல அவர்கள் வாழ்வு எப்போது தான் சரியாகுமோ என்று கவலையாக இருந்தது பரணிக்கு.

அதே நேரம் தன்னுடைய டைரியை எடுத்து கணக்கு வழக்குகளைப் பார்த்துக் கொண்டிருந்தான் புவி. சில பேருக்கு அவன் வட்டிக்கு விட்டிருக்க தேதி பதினைந்துக்கு மேல் ஆனதால் அவர்களுக்கு அழைத்து வட்டியைக் கொடுக்கச் சொல்லி நினைவு படுத்தினான்.

காதல் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!