Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஏகாந்த பொழுதும் காதலும்

ஏகாந்த பொழுதும் காதலும் 10 3

“சொல்றதுக்கு அஞ்சு நிமிஷம் ஆகாது மைத்தி. ஆனா நான் மாமாவை விரும்புறது அம்மா அப்பாவுக்கு தெரிந்தா மாமா தான் என் மனசை கலைச்சிட்டான்னு சொல்லுவாங்க. என்னால மாமாவுக்கு எந்த கெட்ட பேரும் வரக் கூடாது. அப்படியே நான் பேசினா கூட மாமாவும் என்னை விரும்பினா ஒரு பிரச்சனையும் வராது. ஆனா அவங்க என்னை திட்டிட்டு இருக்காங்க. இந்த நேரத்துல அவங்களுக்கு ஒரு கெட்ட பேரை என்னால உண்டாக்க முடியாது. நீ வேலைக்கு மட்டும் ஏற்பாடு பண்ணு”

“சரி கொஞ்ச நேரம் கழிச்சு கால் பண்ணுறேன்” என்று சொல்லி போனை வைத்த மைதிலி மதனை அழைத்தாள்.



Advertisement

“சொல்லுங்க பொண்டாட்டி. என்ன இந்த நேரம் என்னை தேடிருக்கீங்க? என்னை தேடுதா டி?”

Advertisement

“அது எப்ப தேடாம இருந்திருக்கு? இருபத்தி நாலு மணி நேரமும் உங்க கூட இருந்தா கூட என் ஆசை அடங்காது. நான் இப்ப கால் பண்ணினது வேற விஷயம். உங்க தங்கச்சியோட நாத்தனார்க்கு ஒரு வேலை வேணுமாம். சீக்கிரம் ஏற்பாடு பண்ணனும். உங்களால முடியுமா?”

Advertisement

“வெண்ணிலாவுக்கா?”

Advertisement

“ஆமா”

“என்ன ஆச்சு? என்ன நடந்தது?”, என்று கேட்டதும் நடந்ததைச் சொன்னாள். வெண்ணிலாவின் ஒரு தலைக் காதலைப் பற்றியும் சொன்னாள்.

அனைத்தையும் கேட்ட மதன் “என் ஃபிரண்ட் கிட்ட கேக்குறேன்”, என்று சொல்லி போனை வைத்து விட்டு பேங்க்ளூரில் இருந்த தன்னுடைய நண்பனுக்கு அழைத்தான். அவன் எடுத்ததும் வெண்ணிலா படிப்பை பற்றி சொல்லி ஒரு வேலைக்கு கேட்டான்.

மதனின் நண்பன் உடனேயே இண்டர்வியூக்கு வரச் சொல்லவே அதை மைதிலியிடம் சொன்னான் மதன். எல்லா விவரங்களையும் கேட்ட மைதிலி அதை அப்படியே வெண்ணிலாவிடம் சொல்ல அவளுக்கு அப்பாடி என்ற நிம்மதி வந்தது.

அன்று இரவே அவள் கிளம்ப வேண்டும் என்பதால் அம்மா அப்பா அருகில் சென்று “எனக்கு நாளைக்கு இன்டர்வியூ இருக்கு பேங்க்ளூர்ல? நான் இப்ப போகணும் பா”, என்றாள்.

“அதெல்லாம் ஒண்ணும் வேணாம். இன்னும் நாலு நாள்ல உன்னை பொண்ணு பாக்க வராங்க”, என்றாள் மல்லிகா.

“நாலு நாள் இருக்குல்ல? இண்டெர்வியூ அட்டண்ட் பண்ணத் தானே போறேன்? வேலைக்கா போகப் போறேன். கிடைச்சதுக்கு அப்புறம் எல்லாம் யோசிக்கலாம். இப்ப இன்டர்வியூ மட்டும் அட்டண்ட் பண்ணிட்டு வறேனே மா. அப்பா பிளீஸ் பா”, என்று கெஞ்சினாள் வெண்ணிலா.

பாரி யோசனையிலே இருக்க மல்லிகா முடியவே முடியாது என்றாள். வெண்ணிலா அழ ஆரம்பிக்க விஷயம் புவி காதுக்கு சென்றது.

“அம்மா வேலைக்கு போக தானே கேக்குறா? அதுவும் இண்டர்வியுக்கு தானே? போகட்டும்”, என்றான் புவி.

“ஆமா வெண்ணிலா நீ போயிட்டு வா. உன் கூட நான் துணைக்கு வரேன்”, என்றார் பாரி.

“நீங்க வேண்டாம் பா. அங்க குளிரா இருக்கும். உங்களுக்கு ஒத்துக்காது. எப்பவும் போல அவளுக்கு துணைக்கு மாமா போகட்டும்”, என்றான் புவி.

தங்கைக்கு துணைக்கு புவி செல்வான் தான். ஆனால் தான் இல்லாத நேரம் மல்லிகா சுஜியை எதுவும் சொல்லி விடக் கூடாது என்பதற்காக தான் பரணியைக் கோர்த்து விட்டான்.

வெண்ணிலா கவுன்சிலிங்க் போன போது, ஒரு இண்டஸ்ட்ரியல் விசிட் போன போதெல்லாம் அவளுக்கு துணைக்கு பரணி தான் செல்வான் என்பதால் மற்ற யாருமே அதை தவறாக நினைக்க வில்லை.

அனைவருக்குமே அந்த யோசனை சரி என்று பட “நீ வெண்ணிலாவை கூட்டிட்டி போயிட்டு வா டா”, என்று பரணியிடம் சொன்னாள் மல்லிகா.

“என்னது?”, என்று அவன் அரண்டு போய் மறுக்க “நீயே போயிட்டு வா மாமா. எப்பவும் நீ தானே அவளுக்கு துணைக்கு போவ?”, என்று சொன்னான் புவி.

ஆனால் அவனுக்கு யார் சொல்வது? முன்பெல்லாம் இருவர் மனதிலும் எதுவும் இல்லை. ஆனால் இப்போது அப்படியா? அவனே வெண்ணிலாவிடம் இருந்து தப்பித்துக் கொண்டிருக்க விதி அவளுடனே சேர்த்து வைக்கிறது. பரணிக்கு என்ன செய்ய என்று தெரிய வில்லை.

எல்லாரும் சொல்லவே வேறு வழி இல்லாமல் சரி என்றான். ஒரு வழியாக கிளம்பும் நேரமும் வந்தது. அவர்கள் இருவருக்கும் புவி தான் டிக்கட் போட்டான். பஸ்ஸில் ஏறி அமர்ந்ததும் பரணிக்கு தவிப்பாக இருந்தது. இத்தனை நாள் இருவரும் அருகருகே அமர்ந்திருக்கிறார்கள் தான். எங்காவது வெளியூர் சென்றால் வெண்ணிலா பரணியின் தோளில் சாய்ந்து தூங்கி இருக்கிறாள் தான். அப்போதெல்லாம் அவன் மனது இந்த அளவுக்கு அலைபாய வில்லை.

எப்போது அவள் மனதை அவனிடம் சொன்னாளோ அன்றில் இருந்து பரணி தடுமாறிக் கொண்டு தான் இருக்கிறான்.

பஸ் கிளம்பியதும் எப்போதும் போல வெண்ணிலா பரணியின் தோளில் சாய அவனுக்கு எப்படி அவளை விலக்க என்று தெரியவில்லை.

“வெண்ணிலா, யாராவது பாக்கப் போறாங்க”, என்று அவன் மெதுவாக சொல்ல அவள் அதை கண்டு கொள்ளவே இல்லை. அவள் அருகாமை அவனை ஒரு வழி செய்ய யாராவது சீட் மாற்றி அமர்ந்து விட மாட்டார்களா என்று ஆசையாக இருந்தது அவனுக்கு.

அவன் தோளில் சாய்ந்த வெண்ணிலா அவன் கையைப் பற்றி உறங்கி விட அவன் தான் உறக்கம் வராமல் விழித்துக் கொண்டிருந்தான். பேங்க்ளூரில் இறங்கியதும் எப்போதும் டூர் செல்லும் போது தங்கும் ஹோட்டலுக்கு சென்றார்கள். குளித்து உடனே கிளம்பி விடுவோம் என்பதால் ஒரு அறையை வாடகைக்கு எடுத்தவன் அங்கே அவளை அழைத்து வந்தான்.

அறைக்குள் வந்ததும் தனியறையில் இருப்பது இருவருக்குமே சற்று படபடப்பைத் தந்தது. “நீ போய் குளிச்சிட்டு வா வெண்ணிலா. நான் சாப்பாடுக்கு சொல்லிட்டு வரேன். கதவை பூட்டிக்கோ”, என்று சொல்லி விட்டு வெளியே சென்று விட்டான்.

பெருமூச்சுடன் குளிக்கச் சென்றாள் வெண்ணிலா. அவள் குளித்து முடித்து உடை மாற்றி விட்டு கதவைத் திறக்கும் போது தான் உள்ளே வந்தான் பரணி. அது வரை வெளியவே தான் நின்றிருந்தான்.

“இப்ப சாப்பாடு வந்துரும். நீ சாப்பிடு வெண்ணிலா. நான் குளிச்சிட்டு வரேன்”, என்று அவள் முகம் பார்க்காமல் சொல்லி விட்டு குளிக்கச் சென்றான்.

சிறிது நேரத்தில் உணவு வர அதை எடுத்து உண்டவளுக்கு பரணி எப்படியாவது தன்னுடைய காதலை ஏற்றுக் கொள்ள மாட்டானா என்று இருந்தது.

அவனும் குளித்து முடித்து அறைக்குள் வர அவனைப் பார்த்தாள். உள்ளேயே உடையை அணிந்து கொண்டு தான் வந்திருந்தான். அவளும் எதுவும் பேசாமல் கிளம்ப ஆரம்பிக்க மீதம் இருந்த உணவையும் அவள் மிச்சம் வைத்த உணவையும் சேர்த்து காலி பண்ணி விட்டான்.

“நேரம் ஆச்சு. கிளம்பலாமா வெண்ணிலா? பைல் எல்லாம் எடுத்து வச்சிட்டியா?”, என்று கேட்டான் பரணி.

“ம்ம்”, என்று சொன்னவளுக்கு அவன் நிலா என்று அழைத்து விட மாட்டானா என்று ஏக்கமாக இருந்தது. அவள் தயாராகி வெளியே நடக்க “வெண்ணிலா ஒரு நிமிஷம்”, என்று பரணி அழைத்ததும் நின்று அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

“பின்னாடி டாப்ல முடிச்சு போடலை”, என்று தயக்கத்துடன் சொன்னான். உடனே கையில் இருந்த பைலை அங்கிருந்த டேபிளில் வைத்து விட்டு தன்னுடைய கையை உயர்த்தி அதை சரி செய்ய முயன்றாள். ஆனால் அவளால் முடியவில்லை.

வெகு நேரம் முயற்சி செய்தும் அவளால் முடியாமல் போக “மாமா இது போட வரலை. பிளீஸ் போட்டு விடு”, என்று சொல்லி அவளது பின்னலை எடுத்து முன்னால் போட்டு விட்டு அவனுக்கு முதுகு காட்டி நின்றாள்.

நேரம் ஆவது உணர்ந்து அவளை நெருங்கியவனுக்கு அவளைத் தொட படபடப்பாக இருந்தது. அவளுடைய மனதை வெளிபடுத்தி இருக்க வில்லை என்றால் இப்போது அவன் சாதாரணமாக இதைச் செய்திருப்பான். ஆனால் இப்போது நடுக்கமாக இருந்தது,

அவளது முதுகு அவன் பார்வைக்கு காண கிடைக்க எச்சில் விழுங்கிக் கொண்டே கையை கொண்டு சென்றான். அவளது நிறத்துக்கும் உடையின் நிறத்துக்கும் அப்படியே தூக்கி அடிக்க அவனுக்கு அதைப் பார்க்கவே மூச்சடைக்கும் உணர்வு தான். முடிச்சை போட்டு விட்டு அவன் நிமிரும் போது எதிலிருந்தோ தப்பித்த உணர்வு தான் அவனுக்கு.

காதல் தொடரும் ….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!