Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஏகாந்த பொழுதும் காதலும்

ஏகாந்த பொழுதும் காதலும் 3 3

அவள் அருகே சென்ற பரணி வெண்ணிலாவைத் தான் பார்த்தான். அவள் முகம் திருப்பி நின்றிருந்ததால் அவளுடைய கன்னத்தில் அவன் கை விரல் தடம் பதிந்திருப்பது தெரிந்தது. அதைப் பார்த்தவனுக்கு குற்ற உணர்வாக இருந்தது. எந்த உரிமையில் நீ அவளை அடித்தாய் என்று அவன் மனசாட்சி கேள்வி எழுப்ப அவனால் பதில் சொல்ல முடியவில்லை.



Advertisement

“ஏறு”, என்று சொல்லி அவன் வண்டியைக் கிளப்ப அவன் பின்னே ஏறி அமர்ந்த வெண்ணிலாவின் கை அவன் தோளைப் பற்றியது. எப்போதும் அவள் இப்படி தான் அமர்வாள் என்பதால் அவன் ஒன்றும் நினைக்க வில்லை.

இவர்கள் வீட்டுக்கு போன போது புவி வாசலிலே நின்றிருந்தான். அவன் வீட்டில் யாரிடமும் விஷயத்தைச் சொல்ல வில்லை. வண்டியில் இருந்து இறங்கி நின்ற வெண்ணிலா அண்ணனை நெருங்கி “சாரிண்ணா”, என்று சொல்ல அவனால் எப்படி அவளை தண்டிக்க முடியும்?

Advertisement

Advertisement

அவளையே தீர்க்கமாக பார்த்தவன் “இந்த விஷயம் எல்லாம் வீட்ல யாருக்கும் தெரிய வேண்டாம். காலேஜ்ல இருந்தே இப்ப தான் வந்தேன்னு நினைச்சிக்கட்டும். கன்னத்துல என்ன காயம்னு கேட்டா காலேஜ்ல இடிச்சிருச்சுன்னு சொல்லு. மாமா அடிச்சதுன்னு மூச்சு விடக் கூடாது. அப்புறம் இது தான் கடைசி தடவை இப்படி நடக்குறது. போ உள்ள”, என்று சொல்ல தலை குனிந்த படி உள்ளே சென்று விட்டாள்.

புவியும் பரணியும் அங்கே நிற்க “என்னை மன்னிச்சிரு மாப்பிள்ளை”, என்றான் பரணி.

Advertisement

“ஏன் மாமா?”

“வெண்ணிலாவை அடிச்சிட்டேன். நான் அப்படி செஞ்சிருக்க கூடாது. அவ இந்த வீட்டு இளவரசி. ஆனா நான்….”

“எத்தனை தடவை மாமா சொல்றது? நீயும் இந்த வீட்ல ஒருத்தன் தான்னு. அவளுக்கு தாய் மாமன் நீ தான். சிதம்பரம் மாமாவை விட எனக்கு உன்னைத் தான் ரொம்ப பிடிக்கும். நீ அவளை அடிச்சது தப்பே இல்லை. வெண்ணிலாவே நீ அடிச்சதை உரிமையா தான் பாப்பா. உன்னை வேத்தாளா நாங்க நினைக்கலை மாமா. ஆமா வெண்ணிலா எங்க மாமா போயிருந்தா?”

“அந்த கதையை ஏன் கேக்குற? எல்லாரும் ரூம் போட்டு யோசிப்பியான்னு கேப்போமே? இவ ரூம் போட்டு அரட்டை அடிக்க போயிருக்கா மாப்பிள்ளை”, என்று ஆரம்பித்து நடந்ததைச் சொன்னான். அதைக் கேட்டு அழகான புன்னகை புவியின் உதடுகளில் உதயமானது.

“சரி வா மாமா கடைக்கு போவோம். மணி மட்டும் கடைல இருக்கான். கூட்டம் வந்தா தினறுவான்”, என்று புவி சொன்னதும் இருவரும் கிளம்பிச் சென்றார்கள்.

வீட்டுக்குள் வந்த வெண்ணிலாவை பார்த்த மல்லிகா “ஏய் என்ன டி கன்னம் சிவந்திருக்கு?”, என்று விசாரித்தாள். பாரியும் மகளின் முகத்தை கேள்வியாக பார்த்தார்.

“அது … அது வந்து… எக்ஸாம் எழுதிட்டு வெளிய வரும் போது சுவர் இடிச்சிருச்சு”, என்று சமாளித்தாள்.

“சுவர் இடிச்சிருச்சா? அது எப்படி கன்னத்துல இடிக்கும்?”, என்று மல்லிகா கேட்க “மல்லி, அவளே இவ்வளவு நாள் படிச்சு களைச்சு போயிருக்கா. நீ வேற கேள்வியா கேட்டுட்டு இருக்க? அவ ரெஸ்ட் எடுக்கட்டும். வெண்ணிலா நீ போ மா”, என்று பாரி சொல்ல தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு அறைக்குள் சென்று விட்டாள்.

“உங்க பொண்ணை நான் ஒண்ணு கேட்டுற கூடாதே? உடனே வரிஞ்சு கட்டிட்டு வந்துருவீங்க? அது என்ன அவ மேல மட்டும் அவ்வளவு பாசமோ தெரியலை”

“என் பொண்ணு ஒரு தேவதை டி”

“அவ எனக்கும் பொண்ணு தானே?”

“ஆனா உன் குணம் எதுவும் அவ கிட்ட இல்லை”

“நல்ல குணம் தானே?”

“உன் கிட்ட ஏது நல்ல குணம்? உன் கெட்ட குணத்தை தான் சொன்னேன்”, என்று சொல்லி அவர் சிரிக்க மல்லிகா கணவனை தீப்பார்வை பார்த்தாள்.

“முறைக்காத மல்லி. நீயும் நல்லவ தான். சில நேரம் கொஞ்சம் உன் கிட்ட திமிர் தெரியும். நியாயம் எது அநியாயம் எதுன்னு தெரியாம நடந்துக்குவ? ஆனா என் பொண்ணு தப்புன்னா தப்பு தான்னு நிப்பா டி”

“போதும் பொண்ணு புராணம்”

“என்ன பொறாமை வருதா?”

“பின்ன வராதா?”, என்று கேட்க மனைவியை காதல் பார்வை பார்த்து அவளை சரி செய்தார் பாரி.

அறைக்குள் சென்ற வெண்ணிலாவோ கண்ணாடியில் தெரிந்த தன்னுடைய கன்னத்தையே பார்த்தாள். பரணியின் கைத் தடத்தால் சிவந்து போயிருந்தது.

ஒரு நாளிலே இந்த சிவப்பு மறைந்து விடுமே என்று அவளுக்கு கவலையாக இருந்தது. பரணி மேல் வெண்ணிலாவுக்கு இருக்கும் அன்பு அளவிட முடியாதது.

சிறு வயதில் வீட்டின் கடைசி பிள்ளை வெண்ணிலா என்பதால் பரணி அவளை தூக்கிக் கொண்டே சுற்ற தாய் தந்தையை இழந்து வந்திருக்கும் அவன் மேல் அதிக பிரியத்தை வளர்த்துக் கொண்டாள் வெண்ணிலா.

அவள் சடங்காகி இருக்கும் போது சிதம்பரம் வெளிநாட்டுக்கு வேலை விஷயமாக சென்று விட சீர் செய்யும் உரிமை பரணிக்கு தான் வந்தது.

அழகான ஆண் மகனாக நின்ற அவன் மீது அவளுக்கு தீரா காதல் அப்போது தான் எழுந்தது. அவனை நிமிர்ந்து பார்க்க முடியாமல் அவள் தலை குனிய “ஏய் நிலா குட்டி பெரிய பொண்ணானதும் வெக்கமெல்லாம் படுற?”, என்று சொல்லி அதை எளிதாக விட்டுவிட்டான்.

அதற்கு பின்னர் அவளும் அவனிடம் நெருங்கிப் பழகினால் அவனை வீட்டை விட்டே அனுப்பி விடுவார்கள் என்று பயந்து தன்னுடைய நேசத்தை தனக்குள்ளே புதைத்தாள்.

அவள் அன்று புதைத்த விதை இன்று விரிட்சமாகி பூ பூத்திருந்தது. அதன் வாசனை அவனை என்று தான் தீண்டுமோ?

அப்போது வெண்ணிலா போன் ஒலிக்க அதை எடுத்துப் பார்த்தாள். மைதிலி தான் அழைத்திருந்தாள். அதை எடுத்து “சொல்லு மைத்தி”, என்றாள் வெண்ணிலா.

“நானும் லைன்ல தான் இருக்கேன்”, என்றாள் சுஜி.

“ஹா ஹா சொல்லு டி சுஜி”

“என்ன நீ சிரிக்கிற? உன் வீட்ல உனக்கு பிரச்சனை ஆகிருக்குமோன்னு நாங்க பயந்து தான் உனக்கு கூப்பிட்டோம்”

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை. அண்ணா கோபப் படவே இல்லை. அம்மா அப்பாவுக்கு விஷயமே தெரியாது”, என்று சொல்ல அப்போது தான் அவர்களுக்கு நிம்மதி வந்தது. அதற்கு பின் தோழிகள் மூவரும் வேறு கதை பேசினார்கள்.

அதன் பின் வந்த நாட்களிலும் தோழிகளின் உரையாடல் போன் வழியே தொடர்ந்தது,. வெண்ணிலா மைதிலிக்கு அழைத்தால் மைதிலி சுஜிதாவுக்கு அழைப்பாள். போன் இருந்ததால் மூவருக்கும் ஆறுதலாக இருந்தது.

அப்படியே ஆறு மாதம் கடந்திருக்க தோழிகள் மூவரும் என்ன செய்ய என்று பிளான் போட்டார்கள். வீட்டுக்குள் அடைந்திருப்பது அவளுக்கு பிடிக்க வில்லை. மூவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்றால் வேலைக்கு போக வேண்டும் என்று முடிவு செய்தார்கள்.

அன்று இரவு உணவின் போது “நான் வேலைக்கு போகப் போறேன்”, என்று சொன்னாள் வெண்ணிலா.

மல்லிகாவோ “வேலைக்கு போறியா? நீ வேலைக்கு போகணும்னு என்ன கட்டாயம்? ஒழுங்கா கல்யாணம் பண்ணிக்கிற வழியைப் பார்”, என்று மகளிடம் சொன்ன மல்லிகா பாரியைப் பார்த்தாள். திருமணம் என்றதும் வெண்ணிலா பரணியைப் பார்க்க அவனோ சலனமில்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்தான்.

“எனக்கு கல்யாணம் ஆச்சுன்னா இவனுக்கு கவலையே இல்லையா?”, என்று வேதனையாக எண்ணிக் கொண்டு அப்பாவைப் பார்த்தாள்.

மனைவி பார்வை புரிந்து “அம்மா சொல்றதும் சரியா தானே பாப்பா இருக்கு? நீ வேலைக்கு போகணும்னு என்ன கட்டாயம்?”, என்று மகளிடம் கேட்டார் பாரி.

“இப்பவாது என் பக்கம் பேசுனீங்களே? சரி சரி சீக்கிரம் வெண்ணிலாவுக்கு மாப்பிள்ளை பாருங்க”, என்று கணவனிடம் சொன்ன மல்லிகா “புவி, நீயும் உனக்கு தெரிஞ்சவங்க கிட்ட சொல்லி வை”, என்றாள்.

“சரி மா”, என்று சொன்ன புவி அமைதியாக இருக்க “அண்ணா, நீயும் ஏன் இப்படி பண்ணுற?”, என்று அண்ணனிடம் கேட்டாள்.

“உன்னை வேலைக்கு போகக் கூடாதுன்னு நான் சொல்லலை டா. வேலைக்கு தாராளமா போ. நீ அப்ளை பண்ணு. கிடைச்சா வேலைக்கு போ. அப்படியே சைட்ல நாங்க உனக்கு மாப்பிள்ளை பாக்குறோம். எது முதல்ல நடந்தாலும் சரி தான். கல்யாணம் பண்ணின பிறகும் நீ வேலைக்கு போகலாம். அப்படி ஒரு மாப்பிள்ளையை நாங்க பாக்குறோம்”, என்று சொல்ல என்ன சொல்ல என்று தெரியாமல் திணறினாள்.

“சும்மா இருந்த சனியனைத் தூக்கி பாக்கெட்ல போட்டுக்கிட்டேன் போல? இப்ப இதுல இருந்து எப்படி தப்பிக்க?”, என்று எண்ணியவளுக்கு ஒரு யோசனை வந்தது.

காதல் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!