Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஏகாந்த பொழுதும் காதலும்

ஏகாந்த பொழுதும் காதலும் 9 2

“சொல்லு ஜோசப், எப்படி இருக்க?”

“நல்லா இருக்கேன். எனக்கு நீ ஒரு உதவி செய்யணும். இப்ப பிரியா இருக்கியா?”



Advertisement

“இன்னும் நாலு பேசண்ட் இருக்காங்க டா. முடிச்சிட்டு வீட்டுக்கு போக வேண்டியது தான். உனக்கு என்ன செய்யணும் சொல்லு”

Advertisement

“எனக்கு தெரிஞ்சவர் ஒருத்தர் இருக்கார். அவர் பேர் புவியரசன். அவர் இன்னும் கொஞ்ச நேரத்துல அங்க வருவார். அவருக்கு சில டவுட்ஸ் இருக்கு. கொஞ்சம் என்னன்னு பாக்குறியா?”

Advertisement

“அதை விட்டா எனக்கு என்ன வேலை? வரச் சொல்லு டா. பாக்குறேன்”

Advertisement

“அவர் அங்க வரதுக்கு எப்படியும் அரை மணி நேரம் ஆகும். பரவால்லயா?”

“நான் வெயிட் பண்ணுறேன் டா. வரச் சொல்லு”, என்று சொல்லி அவர் போனை வைதத்தும் புவியைப் பார்த்த ஜோசப் “நீங்க கிருபாவைப் போய்ப் பாருங்க புவி. என்னோட நண்பன் தான். கண்டிப்பா அவன் உங்க பிராப்ளத்தை சால்வ் பண்ணுவான். இப்பவே போங்க. இது தான் அட்ரஸ்”, என்று சொல்லி கொடுத்தார்.

அடுத்த அரை மணி நேரத்தில் டாக்டர் கிருபாவின் முன்னிலையில் அமர்ந்திருந்தான். அதே நேரம் கடைக்கு வந்த பாரியின் முகம் ஒரு மாதிரி இருக்கவும் அவரிடம் என்னவென்று விசாரித்தான் பரணி.

“ஒண்ணும் இல்லை டா. சும்மா தலைவலி”, என்று அவர் சமாளிக்க சற்று விலகி வந்து வெண்ணிலாவை போனில் அழைத்தான். அதை எடுத்தவள் “சொல்லு மாமா”, என்றாள்.

“வீட்ல எதுவும் பிரச்சனையா டி?”

“ஆமா”

“என்ன ஆச்சு?”, என்று அவன் கேட்டதும் அவள் விளக்கமாகச் சொன்னாள். அதைக் கேட்டு அவனுக்கும் அதிர்ச்சி தான். இன்னும் புவி சுஜியுடன் வாழாமல் இருப்பான் என்று அவன் எதிர் பார்க்கவே இல்லை.

தான் அவனிடம் கொஞ்சம் பேசி இருக்க வேண்டுமோ என்று எண்ணிக் கொண்டு வேலையைப் பார்த்தான். கடை சாற்ற வேண்டிய நேரம் வந்ததும் பாரியும் பரணியும் கடையை அடைத்து விட்டு வீட்டுக்குச் சென்றார்கள்.

மல்லிகா மட்டும் தூங்காமல் விழித்திருந்தாள். “அக்கா நீ என்ன தூங்காம இருக்க?”, என்று கேட்டான் பரணி.

“சுஜி அப்ப உள்ள போனவ தான். வெளிய வரவே இல்லை. தூங்கிட்டா போல? புவியும் வெளிய போனான். அதான் நீங்க எல்லாரும் வருவீங்கன்னு உக்காந்துருக்கேன். ஆமா நீங்க ரெண்டு பேர் மட்டும் வரீங்க? புவி எங்க?”, என்று கேட்டாள் மல்லிகா.

“என்னது புவி வீட்ல இல்லையா? அவனை கடைக்கு வர வேண்டாம் வீட்ல இருன்னு சொல்லிட்டு தானே போனேன்? எங்க போனான்?”, என்று பாரி பதற “பதறாதீங்க மாமா. அவன் வந்துருவான்”, என்று சமாதானப் படுத்தினான் பரணி.

“எல்லாம் இவளால தான்”, என்று பாரி மனைவியை அடிக்கப் போக பரணி தான் தடுத்து நிறுத்தி அவரை சமாதானப் படுத்தி விட்டு புவியின் எண்ணுக்கு அழைத்தான்.

டாக்டரைப் பார்க்க போவதால் போனை சைலென்ட்டில் போட்டிருந்த புவி போனை எடுக்க வில்லை. இங்கே மூவருக்கும் பதட்டம் வந்தது.

டாக்டர் கிருபா புவியிடம் என்ன பிரச்சனை என்று விசாரிக்க ஆதியோடு அந்தமாக அனைத்தையும் அவரிடம் சொன்னான். தன்னுடைய தயக்கம், சந்தேகம் அனைத்தையும் கேட்டான்.

சிறிது நேரம் பேசியதில் இருந்து அவனைப் புரிந்து கொண்டவர் “உங்க உடம்புல பிரச்சனை இருக்குற மாதிரி தெரியலை. ஆனா உங்க மனசுல சில குழப்பங்கள் இருக்கு. எதுக்கும் நான் ஸ்பெர்ம் டெஸ்ட்க்கு எழுதி தரேன். நாளைக்கு எடுத்துட்டு என்னை வந்து பாருங்க”, என்று சொல்ல சரி என்று சொல்லி விட்டு வந்தான்.

அவன் வீட்டுக்கு வரும் போது மூவரும் பதட்டத்தில் இருக்க “எங்க மாப்பிள்ளை போன? போனைக் கூட எடுக்கலை. நாங்க ரொம்ப பயந்துட்டோம்”, என்றான் பரணி.

“நான் எங்க போறேன் என்ன செய்றேன்னு எல்லார்க் கிட்டயும் சொல்லிட்டு தான் போகணுமோ? எங்க போனாலும் திரும்பி வரத் தானே போறேன்? செத்தா போகப் போறேன்?”, என்று எரிச்சலுடன் சொல்லி விட்டு அறைக்குள் சென்றவன் சுஜி அருகில் அவளையே பார்த்த படி படுத்து விட்டான்.

அடுத்த நாள் எழுந்து அமர்ந்த சுஜிக்கு நேற்றைய நினைவுகள் எல்லாம் சிறு வலியைக் கொடுக்க விரக்தியாக சிரித்து விட்டு அவள் வேலையை ஆரம்பித்தாள்.

ஆனால் அன்று புவி கடைக்குச் செல்லாமல் வீட்டிலே இருக்க யாருக்கும் ஏன் என்று தெரிய வில்லை. ஏதாவது கேட்டால் திட்டிவிடுவான் என்பதால் மல்லிகாவும் கேட்க வில்லை.

ஆனால் வெண்ணிலா “கடைக்கு போகலையாண்ணா?”, என்று கேட்டு விட்டாள்.

“ஒரு ஆளைப் பாக்க போறேன் மா. மதியத்துக்கு மேல கடைக்கு போகணும்”, என்று சொன்ன புவி கிளம்பி டெஸ்ட் எடுக்க சென்று விட்டான். அவ்வளவு நடந்த பிறகும் தன்னிடம் அவன் பேச முயலாதது சுஜியை அதிகம் பாதித்தது.

தயக்கத்துடன் டெஸ்ட் எடுத்து விட்டு ரிப்போர்ட் வாங்கி விட்டு கிருபாவை இரவு தான் பார்க்க முடியும் என்பதால் கடைக்குச் சென்று விட்டான்.

அன்று மாலை டீ குடிக்க வந்த புவி அதற்கு பின் கடைக்கு போகாமல் அறைக்குள் அமர்ந்திருந்தான். ரிப்போர்ட் பார்த்து விட்டு டாக்டர் என்ன சொல்வாரோ? அப்படி தனக்கு ஒரு பிரச்சனை என்றால் சுஜி தன்னை விட்டுப் போய் விடுவாளோ என்று பலவாறு எண்ணிக் கொண்டிருந்தான். அந்த அளவுக்கு சுஜி அவன் மனதில் பதிந்து விட்டாள் என்பது குறிப்பிடத் தக்கது.

அதே நேரம் தோட்டத்தில் நின்ற புவியின் வண்டியில் லேசாக சாய்ந்து நின்று மைதிலியிடம் போன் பேசிக் கொண்டிருந்தாள் வெண்ணிலா. எப்போதும் இப்படி பேசும் போது அவள் கைகள் வண்டியைக் குடையும். இன்றும் அதே போல அவள் பைக் கவரைத் திறந்து பார்த்துக் கொண்டிருக்க ஏதோ ஒரு கவர் இருக்கவும் அவளிடம் பேசிய படியே அதை திறந்து பார்த்தவள் அந்த ரிப்போர்ட்டையும் அதில் இருந்த தேதியையும் பார்த்து திகைத்து விட்டாள்.

மீண்டும் அதே இடத்தில் அதை வைத்தவள் சிறிது நேரம் யோசித்ததில் அண்ணனின் மனது புரிய அவள் உதடுகளில் அழகான புன்னகை உதயமானது. “அண்ணன் வாழத் தயாராகி விட்டான். இனி சுஜிக்கு பிரச்சனை இல்லை”, என்று எண்ணிக் கொண்டாள்.

இரவு உணவை முடித்து விட்டு புவி எங்கேயோ செல்ல வெண்ணிலாவுக்கு மட்டும் அவன் எங்கு செல்கிறான் என்று புரிந்தது. ரிப்போர்ட்டை டாக்டரிடம் கொடுத்து விட்டு டென்சனுடன் அமர்ந்திருந்தான் புவி.

அதை அலசி ஆராய்ந்து பார்த்தவர் “நான் சொல்லலை, உங்க உடம்புல பிரச்சனை இல்லைன்னு. யு ஆர் ஆல் ரைட். ஆனா உங்க மனசுல தான் சில தயக்கம் இருக்கு”, என்று ஆரம்பித்தவர் வெகு நேரம் அவனுக்கு கவுன்சிலிங்க் கொடுத்தார்.

மனைவி என்பவள் யார்? அவர்கள் வாழ்க்கை எப்படிப் பட்டது என்று அவனுக்கு புரிய வைத்தவர் அடுத்த நாளும் அவனை வரச் சொன்னார். அவர் பேச பேச அவனுக்குள்ளும் பல மாற்றங்கள் எழுவதை அவன் உணர்ந்தான். அடுத்த பத்து நாட்கள் அவனிடம் பேசிய கிருபா அவனை முற்றிலுமாக மாற்றி இருந்தார். இந்த பத்து நாட்களும் இரவில் அவன் எங்கு செல்கிறான் என்ன செய்கிறான் என்று யாருமே அவனிடம் கேட்க வில்லை.

சுஜி வாழ்க்கையில் எந்த மாற்றமும் இல்லை. எப்போதும் போல தான் அவளுக்கு நாட்கள் நகர்ந்தது. அடுத்த நாள் காலை அலாரம் சத்தத்தில் கண் விழித்த சுஜி வாசலைப் பெருக்கி விட்டு குளிக்கச் சென்றாள். எப்போதும் போல் அவன் உறங்கிக் கொண்டிருக்க அவள் நிதானமாக உடை மாற்ற ஆரம்பித்தாள்.

இடையில் அவன் கண் விழித்ததோ, அவளைப் பார்த்துக் கொண்டிருப்பதையோ அவள் கவனிக்கவே இல்லை. அவனோ மூச்சு விட மறந்து போய் படுத்திருந்தான். அவன் கண்கள் அவளை அங்குலம் அங்குலமாக ரசித்தது. அவன் பார்வையில் விழுந்த விஷயங்கள் அவனை முதல்முறையாக பரவசப் படுத்தியது மட்டும் நிஜம்.

முதல் முறையாக அவளை இழுத்து அணைத்துக் கொள்ள வேகம் பிறக்க தன்னை அடக்குவதே அவனுக்கு பெரும் போராட்டமாக இருந்தது. அப்போது அவனை அடக்கிக் கொண்டாலும் அவள் வேண்டும் என்ற ஆசைத் தீ மட்டும் அவன் மனதில் கொழுந்து விட்டு எரிய ஆரம்பித்தது.

அவள் உடையை மாற்றி விட்டு வெளியே செல்ல அவளை நினைத்து தலையணையைக் கட்டிக் கொண்டான் புவி. காலையில் உண்ணும் போது அவன் கண்கள் ஏக்கத்துடன் அவளை வருட அவளோ அவன் பார்வையை உணரவில்லை. ஆனால் அதைக் கண்ட வெண்ணிலா தனக்குள் சிரித்துக் கொண்டாள். அவர்களுக்காக கடவுளிடம் வேண்டிக் கொள்ளவும் செய்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!