Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Yendi Unnai Pidikkuthu

ஏன்டி உன்னை பிடிக்குது!! – பிடித்தம் 16

பிடித்தம் 16

உணவகத்தின் வாயிலில் மாலினிக்காக காத்திருந்த கிருஷ்ணமூர்த்தி அவளை உள்ளே அழைத்துச் சென்று அமர்ந்தான்.

 

மேசைப் பணியாளரிடம் வேண்டிய உணவை சொன்ன பிறகு மாலினி, “அம்மா என்ன சொன்னாங்க?”



Advertisement

 

“அம்மா என்கிட்ட எதுவும் சொல்ற மாதிரி நீ நடந்துக்கிட்டியா?”

 

Advertisement

மாலினி தீர்க்கமாக பார்க்க,

Advertisement

 

“அதான் தெரியுதுல அப்பறம் என்ன கேள்வி?” என்றவன் தீர்க்கமான பார்வையுடன், “என்ன குழப்பம் உனக்கு?”

 

Advertisement

“குழப்பம் இல்லை யோசனை”

 

“என்ன?”

 

“ACP ஊரில் வச்சு அவ்ளோ கலாட்டா பண்ணார்.. ஆனா இங்கே வந்த பிறகு என்னை கண்டுக்கவே இல்லையே னு”

 

“நீ தானே டிஸ்டர்ப் பண்ண கூடாது னு சொன்ன?”

 

“நான் சொல்லலை.. டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் னு அவர் சொன்னார்”

 

“சரி அண்ணா தான் சொன்னாங்க.. நீயும் அதைத் தானே விரும்பின?”

 

“ஆமா.. ஆனா” என்று அவள் இழுத்து நிறுத்த,

 

அவன், “ஸோ அண்ணாவை நீ தேடுற”

 

“அப்படி சொல்ல முடியாது.. ஆனா அவரோட நினைப்பு என்னை டிஸ்டர்ப் பண்ணுது”

 

“டிஸ்டர்ப் பண்ணுது னா எந்த வகையில்?”

 

“தெரியலை”

 

கிருஷ்ணமூர்த்தி ‘இது என்ன பதில்?’ என்பது போல் பார்க்க மாலினி, “தெரியலை னா தெரியலை னு தான் சொல்ல முடியும்.. அது தெரிந்தா நான் ஏன் குழம்புறேன்? உன் முன்னாடி ஏன் இப்போ இப்படி உட்கார்ந்து இருக்கிறேன்?” என்றாள் சிறு எரிச்சல் கலந்த முறைப்புடன்.

 

“உனக்கு அவரை பிடிச்சு இருக்குதா?”

 

“தெரியலை”

 

கிருஷ்ணமூர்த்தி இப்பொழுது வெளிப்படையாக முறைக்க, மாலினி, “பிடிச்சிருக்குது ஆனா இது பிடித்தத்தையும் தாண்டிய ஒன்றா னு தெரியலை.. எனக்கு குழப்பம் வந்தா அப்பா கிட்ட தான் கேட்பேன் ஆனா இந்த விஷயத்தில் அது முடியாது.. எனக்காக அப்பா ஓகே சொல்லக் கூடாது”

 

“உனக்காக ஓகே சொல்லக் கூடாது னா என்ன மீன் பண்ற? அப்போ உனக்கு ஓகே யா?”

 

“அதைத் தான் தெரியலை னு சொல்லிட்டேனே”

 

“ஒருவேளை உனக்கு பிடிச்சு, அப்பா நோ சொன்னா என்ன பண்ணுவ?”

 

“பார்க்கலாம்”

 

“என்ன பார்க்கலாம்?”

 

“அப்பாவை கன்வின்ஸ் பண்ற அளவிற்கு ACPயை எனக்கு பிடித்தால், அப்போ யோசிக்க வேண்டிய விஷயம் இது” 

 

அப்பொழுது சற்று தூரத்தில் வெற்றிவேல் ஒரு பெண்ணுடன் வருவதை பார்த்த கிருஷ்ணமூர்த்தி, “நான் ரெஸ்ட் ரூம் போயிட்டு வரேன்” என்று கூறிச் சென்றான்.

 

கழிவறை வாயிலில் நின்ற கிருஷ்ணமூர்த்தி வெற்றிவேலைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். வெற்றிவேல் மாலினியை பார்க்கவில்லை என்றால் கைபேசியில் வெற்றிவேலை அழைக்கும் முடிவில் இருந்தான். ஒருவேளை வெற்றிவேல் மாலினியிடம் பேசினால் மாலினி தன் மனதை உணர்ந்து தெளிவாளோ என்ற எண்ணம் அவனுக்கு. ஆனால் அவனுக்கு அந்த வேலையை வைக்காமல் வெற்றிவேல் புன்னகையுடன் மாலினியை நோக்கி சென்றுக் கொண்டிருந்தான்.

 

அன்று யாழினி அண்ணனின் காதலை கொண்டாடும் விதத்தில் விருந்து கேட்டதால் இன்று வெற்றிவேல் அவளை அழைத்து வந்திருந்தான்.

 

மாலினியை பார்த்தவன், “யாழு.. நீ இங்கே உட்காரு.. நான் மாலினி கிட்ட பேசிட்டு வரேன்.. மேக்சிமம் பைவ் மினிட்ஸ் தான்..” என்று சிறு தவிப்புடன் கூற,

 

அண்ணனை புரிந்தவளாக யாழினி மென்னகையுடன், “நோ ப்ரோப்ளம் ணா.. நீ பேசிட்டு வா” என்றாள்.

 

வெற்றிவேல் மென்னகையுடன் தங்கையின் தலையை கலைத்துவிட்டு சென்றான்.

 

கைபேசியை நோண்டிக் கொண்டிருந்த மாலினி, “ஹாய் மாலினி” என்ற உற்சாகக் குரலில் சட்டென்று நிமிர்ந்துப் பார்த்தாள்.

 

ஒரே ஒரு நொடி ‘வந்துட்டீங்களா!’ என்ற பாவனை அவள் கண்ணில் தெரிந்தது ஆனால் அடுத்த நொடியே ‘இத்தனை நாள் என்னை அழகளிச்சீங்களே!’ என்ற கோபம் வரவும் உணர்ச்சியற்ற பார்வையுடன் அமைதியாக இருந்தாள்.

 

தன்னை கண்ட நொடியில் அவள் கண்ணில் தோன்றிய ஆவல் கலந்த நிம்மதியில் அவளது மனதை அறிந்து மேலும் உற்சாகமான வெற்றிவேல், “ஹாய் சொன்னா பதிலுக்கு ஹாய் சொல்ல மாட்டியா?” என்றான்.

 

“என்ன வேணும் உங்களுக்கு?” என்றாள் கறார் குரலில்.

 

“நீ ரியல் போலீஸ் அக்சன்ஸ் பார்த்தது இல்லை னு சொன்னியே! நாளைக்கு ஒரு என்-கௌண்டர் பண்ணப் போறேன்.. அதான் உன்னை இன்வைட் பண்ண வந்தேன்” என்றான் வரவழைத்த தீவிரக் குரலில்.

 

ஒரு நொடி அதிர்ந்தவள் அவன் கண்ணில் தெரிந்த சிரிப்பைக் கண்டு, “சூப்பர் ACP.. எத்தனை மணிக்கு வரணும்?” என்றாள் உற்சாகக் குரலில்.

 

அவளது பதிலை கேட்டு வெற்றிவேல் ஒரு நொடி முழிக்க, மாலினி சிரிப்பை அடக்கியபடி பார்த்தாள்.

 

இப்பொழுது அவளது விளையாட்டை கண்டுக் கொண்ட வெற்றிவேல், “பத்து மணிக்கு ரெடியா இரு” என்றான்.

 

‘இவர் நிஜமா தான் சொல்றாரா?’ என்று மாலினி முழிக்க, அவன் கஷ்டபட்டு சிரிப்பை அடக்கினான்.

 

பின், “ஆனா ஒரு கண்டிஷன்.. என் மனைவியையோ வருங்கால மனைவியையோ தான் கூட்டிட்டு போக முடியும்.. என்ன பண்ண?” என்றான்.

 

“அப்பறம் எதுக்கு என்னை இன்வைட் பண்றீங்க?”

 

‘அதான் உன்னை இன்வைட் பண்றேன் என்ற பதிலை அவள் அவனிடம் எதிர்பார்க்க,

 

அவனோ, “நாள பின்ன வெற்றி வார்த்தை தவறிட்டான் னு இந்த உலகம் சொல்லக் கூடாதே! அதான்..” என்றான்.

 

அவனது பதிலை கேட்டு அவள் முறைக்க,

 

அவனோ புருவம் உயர்த்தி, “என்ன?” என்றான்.

 

“இப்பவே நீங்க வார்த்தை தவறீட்டீங்க ACP”

 

“எப்படி?”

 

“அன்னைக்கு என்னை டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் னு சொன்னீங்க!”

 

“இப்போ நான் எங்கே உன்னை டிஸ்டர்ப் பண்றேன்? எதேர்ச்சையா பார்த்தேன்.. வந்து பேசுறேன்..” என்றவன் குரலை தாழ்த்தி குறும்பு பார்வையுடன், “ஒருவேளை கனவில் டிஸ்டர்ப் பண்றேனோ!”

 

“நினைப்புத் தான் பொழப்பைக் கெடுக்கும்”

 

“யார் நினைப்பு யார் பொழப்பைக் கெடுக்கும்?”

 

“உங்க நினைப்பு உங்க பொழப்பைக் கெடுக்கும்”

 

“ஓ! என்னோட நினைப்பு ஓகே.. யார் மீதான நினைப்பு?”

 

ஒரு நொடி திணறியவள், “ஏதோ ஒரு நினைப்பு… அது எனக்கு எப்படி தெரியும்?”

 

“உனக்கு தெரியாததை பத்தி ஏன் பேசுற?”

 

“இப்போ உங்களுக்கு என்ன தான் வேணும்? டிஸ்டர்ப் பண்ணாம கிளம்புங்க” என்றாள் சிறு எரிச்சலுடன்.

 

“மறுபடியும் டிஸ்டர்ப் ஆ”

 

“ஆமா டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் னு சொல்லிட்டு அதைத் தான் பண்றீங்க.. ACP வாக்கு தவற மாட்டீங்க னு வெறும் பேச்சு தான்”

 

“இப்பவும் நான் வாக்கு தவறலையே!” என்றவன் அவளது கண்களை ஆழ்ந்து நோக்கியபடி ஆழ்ந்த குரலில், “நீ என்னை லவ் பண்ணியே ஆகணும்.. என்னைத் தான் நீ கல்யாணம் பண்ணனும் னு (சாதாரண குரலில் தொடர்ந்தான்) சொல்லி டிஸ்டர்ப் பண்ண மாட்டேன் னு சொன்னேன்.. இந்த நொடி வரை அதை கடை பிடிச்சிட்டுத் தானே இருக்கிறேன்!” என்றான் ஒன்றும் அறியாவதவன் போல்.

 

அவள் மீண்டும் முறைப்புடன், “என்னை இன்வைட் பண்ணிட்டு மனைவி அது இது னு சொன்னா என்ன அர்த்தம்?”

 

“நீ ஆசைப் பட்ட.. அதனால் இன்வைட் பண்ணேன் அண்ட் அதில் இருக்கும் டெர்ம்ஸ் அண்ட் கண்டிஷன்ஸ் சொன்னேன்.. அதுக்காக நீ வந்தே ஆகணும் னு  சொல்லலையே! வரதும் வராததும் உன் இஷ்டம்”

 

‘ஓ!’ என்பது போல் ஒரு நொடி பார்த்தவள், “நீங்க உங்க மனைவியை கூட்டிட்டு போங்க”

 

ஒரு நொடி ஆழ்ந்து நோக்கியவன், “ஓகே.. பை” என்றுவிட்டு நகர்ந்தான். தங்கை தனியாக இருக்கிறாளே என்ற நினைப்பு ஒரு பக்கம் அரித்துக் கொண்டிருக்க, பேச்சை முடித்துக் கொண்டு கிளம்பினான். அவன் சென்றதும் கிருஷ்ணமூர்த்தி வந்து அமர்ந்தான்.

 

 

வெற்றிவேல் சட்டென்று கிளம்பியதில் அவள் ஏமாற்றமாக உணர்ந்தாள்.

 

‘என் மனம் என்ன தான் விரும்புது? அவரை வேண்டாம் னு அப்பா கிட்ட சொல்லிட்டு! ஏன் அவரிடமே சொல்லிட்டு அவர் என்னை வந்து பார்க்கலை, பேசலை னு குழம்புறேன்! வேண்டாம் னு முடிவு பண்ண பிறகு அவர் வரலைனா சந்தோசம் தானே வரணும்? இப்போ கூட அவர் ஓகே சொல்லி சென்றது ஏமாற்றமா இருக்குது! அவர் போனதும் ஏன் இப்படி எதையோ இழந்தது போல் உணருகிறேன்? இது தான் காதலா? காதல் உணர்வு இப்படி தான் இருக்குமா? பிடித்தத்தையும் மீறி அவர் மீது எனக்கு காதல் வந்துருச்சா?’ என்று குழம்பியவள் அவனைத் திரும்பிப் பார்த்தாள்.

 

இவள் மீது ஒரு கண் வைத்தபடி தங்கையுடன் பேசிக் கொண்டிருந்தவன் இவள் திரும்பவும் சட்டென்று பார்வையை திருப்பிக் கொண்டான். அதை அறியாத மாலினி, ‘நாலு வருஷமா விரும்புறவர் இப்படி தான் போவாரா? அன்னைக்கு அவ்ளோ பேசிட்டு இப்போ கண்டுக்காம உட்கார்ந்து இருக்கார்! ஒருவேளை கோபம் வந்துருச்சோ? கோபம் வர அளவுக்கு நாம பேசலையே! ப்ச்.. நான் பாட்டுக்கு நிம்மதியா இருந்தேன்.. இப்படி என்னை புலம்ப வச்சிட்டாரே!’ என்று மனதினுள் எரிச்சலுடனும் கோபத்துடனும் திட்டிக் கொண்டிருந்தாள். அவள் நொடிக்கொருதரம் அவனை திரும்பிப் பார்க்க அவனோ இவள் பக்கம் திரும்பவே இல்லை.

 

நண்பன் வந்து அமர்ந்ததை கூட கவனிக்காமல் தன்னுள் உழன்றுக் கொண்டிருந்தவள் சட்டென்று எழுந்து வெற்றிவேல் முன் போய் நின்றாள்.

 

வெற்றிவேல்  ‘என்ன?’ என்பது போல் பார்க்க,

 

அவள், “உண்மையிலேயே நாலு வருஷமா என்னை லவ் பண்றீங்களா?”

 

“ஏன் இந்த சந்தேகம்?” என்று அவன் அமைதியான குரலில் கேட்டான்.

 

ஏதோ ஒரு வேகத்தில் எழுந்து வந்தவள் இப்பொழுது காரணத்தை சொல்ல தயங்கி நின்றாள். ‘ஊரில் இருந்து வந்த பிறகு ஏன் வந்து பார்க்கவோ பேசவோ இல்லை? இப்போ ஏன் ‘நீ தான் என் மனைவி’ என்பது போல் சொல்லலை?’ என்று மனதினுள் எழுந்த கேள்விகளை அவனிடம் வெளிப்படையாக கேட்க முடியாமல் திணறி தவித்தாள்.

 

இப்பொழுது யாழினி, “அண்ணா நான் ரெஸ்ட்ரூம் போயிட்டு வரேன்” என்று கூறி எழுந்து சென்றாள்.

 

யாழினி சென்றதும் “மானு” என்று ஆழ்ந்த குரலில் அழைத்தவன் அவள் அவனை பார்த்ததும், “உட்காரு” என்று எதிரில் இருந்த இருக்கையை காட்டினான்.

 

அவளோ நின்றபடி, “நீங்க பதில் சொல்லுங்க..” என்றாள்.

 

“நீ என் கேள்விக்கு பதில் சொல்லு”

 

“நான் தான் முதலில் கேட்டேன்”

 

அவள் கண்களை காதலுடன் பார்த்தவன் ஆழ்ந்த குரலில், “ஆமா நாலு வருஷமா உன்னை காதலிக்கிறேன்.. என் உயிர் உள்ள வரை காதலிச்சிட்டு தான் இருப்பேன்” என்றவன், “இப்போ சொல்லு.. ஏன் இந்த சந்தேகம்?”

 

“அது”

 

“என்ன தயக்கம்? சொல்லு”

 

“அதெல்லாம் சொல்ல முடியாது” என்றுவிட்டு அவள் கிளம்ப,

 

சட்டென்று அவள் கையை பற்றி நிறுத்தினான்.

 

அவனது தொடுகையில் ஏதோ சொல்ல தெரியாத உணர்வு அவளை ஆட்கொள்ள, “ACP செய்ற வேலையா இது?” என்றாள் நடுக்கத்தை மறைத்து முறைக்க முயற்சித்தபடி.

 

அவளுள் ஓடிய நடுக்கத்தை உணர்ந்தானோ! பிடியை சற்று இறுக்கியவன், “ACP செய்ய மாட்டான்.. மானுவோட வெற்றி செய்வான்”

 

அவனது பதில் மெல்லிய தென்றல் தீண்டிய உணர்வை தந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளாமல், “நீங்க ஒன்னும் என்னோட வெற்றி இல்லை” என்றாள்.

 

“அப்படியா?”

 

அவனது பார்வையை சந்திக்க முடியாமல் அவள் பார்வையை திருப்பியபடி, “ஆமா”

 

“அப்பறம் ஏன் வந்து சந்தேகம் கேட்கிற? நான் உன்னை லவ் பண்ணா என்ன! பண்ணலைனா என்ன?”

 

“..”

 

“இப்போ ஏன் இப்படி தவிக்கிற?”

 

“நான் ஒன்னும் தவிக்கலை.. கையை விடுங்க” என்றபடி அவள் கையை உருவ பார்க்க,

 

மற்றவர்களுக்கு காட்சிப் பொருளா இருக்க விரும்பாமல் அவளது கையை விட்டான்.

 

அவள் நகர, அவன், “மானு” என்று அழைத்தான்.

 

அவள் திரும்பியதும் அவளது தவிப்பை போக்க, “அன்னைக்கே நான் சொல்லிட்டேன்.. எனக்கு மனைவி என்றால் அது நீ தான்” என்றான்.

 

ஒரு நொடி அவளையும் மீறி அவளது கண்கள் மின்னியது தான் ஆனால் அடுத்த நொடியே, “ஆனா எனக்கு அப்படி ஒரு நினைப்பு இல்லை” என்று கூறினாள்.

 

அவன் சிரிக்கவும் அவள் சிறு கோபத்துடன், “எதுக்கு சிரிக்கிறீங்க?”

 

“..”

 

“சொல்லுங்க”

 

“என்ன சொல்ல?”

 

அவள் கோபத்துடன் முறைக்க, அவனோ காதலுடன், “மானுமா ஐ லவ் யூ ஸோ மச்” என்றான்.

 

உள்ளுக்குள் சிலிர்த்தாலும் அதை வெளியே கட்டிக் கொள்ளாமல் முறைத்துவிட்டுச் சென்றாள்.

 

மாலினி சென்றதும் அங்கே வந்த யாழினி, “என்ன ணா அண்ணி ஓகே சொல்லிட்டாங்களா?”

 

வெற்றிவேல் புன்னகையுடன், “கூடிய சீக்கிரம் சொல்லுவா” என்றான்.

 

“ஆல் தி பெஸ்ட்”

 

“தேங்க்ஸ் டா” என்றவன் மனதினுள், ‘லவ் வந்திருச்சு ஆனா அதை மேடம் ஒத்துக்கணும்’ என்று கூறிக் கொண்டான்.

 

 

 

கிருஷ்ணமூர்த்தி, “இப்போ தெளிவாகிருச்சா?”

 

மாலினி, “தெளிவாகிருச்சு ஆனா யோசிக்கணும்”

 

“இன்னைக்கு புல்லா இருக்கு ஆனா இல்லை னு பேசுற”

 

அவள் அமைதியாக இருக்கவும், கிருஷ்ணமூர்த்தி, “மாலினி” என்று அழைத்தான்.

 

அவள், “அக்கா எப்படி இருக்கிறாங்க? சென்னை பிடிச்சிருக்குதா?”

 

அவள் பேச்சை மாற்றுவது புரிந்து அவனும் வெற்றிவேல் பற்றி பேசாமல் வேறு சிலதை பேசி உணவை முடித்துக் கொண்டு கிளம்பினர். வெற்றிவேலிடம் பேசிவிட்டு வந்த பிறகு அவள் அவன் பக்கம் திரும்பவே இல்லை. கிளம்பும் போது கூட வேறு பக்கமாக வெளியே சென்றுவிட்டாள்.

 

 

 

நாட்கள் வேகமாக நகர மனோஜ் மித்ராணி கல்யாண நாளும் வந்தது.

 

காலை 4.45 மணிக்கு வீட்டில் இருந்து பெண் அழைத்துச் செல்லும் போது கமலா சிறிது கண் கலங்க, மித்ராணி அவரை தோளோடு அணைத்து, “ம்மா.. வேற வீட்டுக்கா போகப் போறேன்! நம்ம மாமா வீட்டுக்கு தானே!” என்று கூறி தேற்றவும் கமலா கண்களை துடைத்து புன்னகையுடன் கிளம்பினார்.

 

வானில் சூரியன் மெல்ல உயர்ந்துக் கொண்டிருக்க, கல்யாண மண்டபத்தில் இருந்த கிருபாகரனின் இரத்த அழுத்தம் உயர்ந்துக் கொண்டே இருந்தது. அதற்கு காரணம் புகழ்வேந்தன் செய்திருந்த ஏற்பாடுகள் தான் என்றால் அது மிகையல்ல.

 

 

 

மனோஜ் மணமகன் அறையில் கிளம்பிக் கொண்டிருக்க, யாரோ ‘பொண்ணு வந்தாச்சு’ என்று கூறும் சத்தம் கேட்டு அவன் எழ,

 

மல்லிகா, “உட்காரு டா.. கொஞ்ச நேரம் கழிச்சு பார்த்துக்கோ” என்று அன்புடன் மிரட்டிவிட்டு வெளியேறப் போக,

 

அவன், “அம்மா பிரசாத் எங்க? நேத்து நைட் தனியா அவனோட பிரெண்ட்ஸ்க்கு பார்ட்டி கொடுக்க கிளம்பினப்ப பார்த்தது” என்றான்.

 

“நானும் பார்க்கலை டா.. நேத்து நைட் அவன் வீட்டுக்கே வரலை.. நேரா மண்டபத்துக்கு வரதா சொன்னான்”

 

“ஓ”

 

“சரி நீ சீக்கிரம் கிளம்பு”  என்றவர் வேகமாக மித்ராணியை பார்க்க சென்றார்.

 

உறவில் மூத்த சுமங்கலிப் பெண்கள் இருவர் மித்ராணிக்கு ஆரத்தி எடுத்ததும் மல்லிகா புன்னகையுடன், “வா டா” என்றபடி மித்ராணியை தோளோடு அணைத்து வரவேற்றார்.

 

அதன் பின், “சரி டா நீ போய் கிளம்பு” என்றுவிட்டு வேறு வேலையாக நகன்றார்.

 

மணமகள் அறைக்கு சென்றதும் கமலா, “மித்து பியுடீசியனுக்கு போன் பண்ணு.. இன்னும் காணும்” என்று சொல்லிக் கொண்டிருந்த பொழுது கதவை தட்டும் சத்தம் கேட்டது.

 

உறவுப்பெண் ஒருவர் கதவை திறக்க, உள்ளே வந்த இருவர், “பியூட்டிஷியன்ஸ்” என்று கூற,

 

மித்ராணி புருவத்தை லேசாக சுளித்தபடி, “நான் புக் பண்ணப்ப வேற ரெண்டு பேர் தானே வரதா சொன்னாங்க!” என்று கூற,

 

புகழ்வேந்தனின் ஏற்பாட்டில் வந்திருந்தவர்களில் ஒருவர், “ராகினி மேடமால் வர முடியலை.. அதான் என்னை அலாட் பண்ணாங்க.. நீங்க வேணா போன் பண்ணி கன்பர்ம் பண்ணிக்கோங்க.. என்னோட பெயர் தாருண்யாஸ்ரீ.. இவங்க என்னோட அசிஸ்டன்ட் ஜோஷ்னி” என்றார்.

 

மித்ராணி கைபேசியை எடுத்து அவள் பேசியிருந்த அழகு நிலையத்தின் உரிமையாளருக்கு அழைத்தாள். அவரும் இவர்கள் கூறியதையே கூறவும் சமாதானமடைந்து அழைப்பைத் துண்டித்தாள்.

 

(சதீஷின் ஏற்பாடு தான் இது. ஆம்! மித்ராணி எந்த அழகு நிலையத்தை அணுகி இருக்கிறாள் என்பதை அறிந்துக் கொண்ட சதீஷ் அந்த அழகு நிலைய உரிமையாளரைப் போய் சந்தித்தான். மணமகனின் அன்பளிப்பு என்றும் மணமகளுக்கு இனிய அதிர்ச்சியாக செய்யும் ஏற்பாடு என்றும் கூறியவன், செலுத்திய முன்பணத்தை திருப்பி தர வேண்டாம் என்று கூறியதோடு இன்னும் ஏதேதோ காரணங்களை கூறி அந்த அழகு நிலைய உரிமையாளரைச் சம்மதிக்க வைப்பதற்குள் நொந்து நூடூல்ஸ் ஆகி செய்த ஏற்பாடு இது).

 

அழகுக்கு அழகு சேர்ப்பது போல் அவர்கள் மித்ராணிக்கான ஒப்பனையை தொடங்கினர்.

 

ஒப்பனை முடியும் நேரத்தில் அங்கே வந்த மல்லிகா, “ரொம்ப அழகா இருக்கிற டா” என்று புன்னகையுடன் கூறியபடி மித்ராணிக்கு திரிஷ்டி கழித்தார்.

 

 

 

மணமகனிற்கு உண்டான சடங்குகள் முடிந்து மனோஜ் மணமகன் அறைக்கு செல்ல, மித்ராணி மணமகள் சடங்குகளுக்காக ஓமகுண்டலத்தின் முன் அமர்ந்தாள்.

 

மணமகன் அறையில் கிருபாகரனிடம் மனோஜ், “நீங்க எதுவும் வேலையா பிரசாத்தை அனுப்புனீங்களா பா?”

 

கிருபாகரன் முறைக்க, அவன் மெல்லிய குரலில், “காலையில் இருந்து அவனை பார்க்கலை அதான் பா கேட்டேன்” என்று கூற,

 

அவர் முறைப்புடன், “அவன் என்ன சின்ன குழந்தையா? வருவான்.. சும்மா என்னையே அம்மாவும் பையனும் கேட்காதீங்க” என்று கோபமும் எரிச்சலுமாக கூறியவர், “நீ உன் கல்யாணத்தை கவனி” என்றுவிட்டு வெளியேறினார்.

 

மல்லிகாவும் மனோஜும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர். ‘பிரசாத் எங்கே தான் போனானோ! முகூர்த்த நேரத்திற்குள் வந்திடனுமே!’ என்ற கவலை இருவரின் பார்வையிலும் அப்பட்டமாக தெரிந்தது.

 

பெருமூச்சை வெளியிட்டபடி மல்லிகா வெளியேற, அவர் வெளியே வரவும் அங்கே வந்த ஒப்பனையாளர்(பியூடிசியன்), “மேடம் முகூர்த்த புடவையை கொஞ்சம் தரீங்களா? புடவைக்கு ஏற்ற மாதிரி ஜுவெல்ஸ் எடுத்து வச்சிட்டா மேடம் சீக்கிரம் கிளம்ப வசதியா இருக்கும்.. நாங்க யூஷுவலா இப்படி தான் செய்வோம்” என்று கூற, மல்லிகாவும் மணமகன் அறையினுள் சென்று புடவையை எடுத்து வந்து, “வாங்க” என்றபடி மணமகள் அறை நோக்கிச் சென்றார்.

 

ஒப்பனையாளர்கள் இருவரும் ‘இவரும் கூடவே வராரே! என்ன பண்ண?’ என்பது போல் பார்க்க, சரியாக அந்த நேரத்தில் யாரோ மல்லிகாவை அழைக்கவும் அவர் இவர்கள் கையில் புடவை இருந்த பையை ஒப்படைத்து, “ப்ளோவ்ஸ் சரீ உள்ள இருக்குது.. பார்த்து.. பத்திரம்” என்று கூறிச் சென்றார்.

 

இருவரும் சத்தமின்றி பெருமூச்சை வெளியிட்டு மணமகள் அறை நோக்கி விரைந்தனர். அங்கே உறவு பெண்மணி ஒருவர் மட்டுமே இருக்க, இவர்கள் மீண்டும் ஆசுவாசமடைந்தனர். முதலில் புகழ்வேந்தன் கொடுத்திருந்த முகூர்த்தப் புடவையை மாற்றி வைத்தனர். பிறகு புகழ்வேந்தன் எடுத்திருந்த புடவைக்கு பொருத்தமாக அவர்கள் கொண்டு வந்திருந்த ஆயத்த(ready made) ரவிக்கைகளில் மித்ராணியின் அளவில் உள்ள ரவிக்கையை எடுத்து வைத்தனர். மல்லிகா கொடுத்த பையில் புகழ்வேந்தன் கொடுத்த புடவையையும் அதற்கு பொருத்தமான ரவிக்கையையும் வைத்தார்கள். மல்லிகா கொடுத்ததை வேறு பையில் வைத்த ஒப்பனையாளரின் உதவியாளர் அதை எடுத்துக் கொண்டு வெளியே சென்று சதீஷின் ஆளிடம் கொடுத்துவிட்டு வந்தார்.

 

உதவியாளர் வரவும் மல்லிகா வரவும் சரியாக இருந்தது. மல்லிகா வந்து புடவை இருந்த பையை வாங்கவும் அய்யர் முகூர்த்தப் புடவையை கொண்டு வரச் சொல்ல, புடவையை வெளியே எடுத்த மல்லிகா அதிர்ந்தார். அவர் எடுத்த புடவை அரக்கு நிறம் ஆனால் தற்போது அவர் கையில் இருக்கும் புடவையோ ஆரஞ்சு நிறம்.

 

அவர், “என்ன இது?” என்று ஒப்பனையாளரை கேட்க,

 

அவரோ அறியாதவர் போல், “என்ன மேடம்?” என்றார்.

 

மல்லிகா, “இது நான் கொடுத்த புடவை இல்லை” என்று கூற,

 

ஒப்பனையாளர் முகத்தில் சிறு அதிர்வை கொண்டுவந்து, “நீங்க கொடுத்த பையில் இதான் மேடம் இருந்துது” என்றவர் அறையில் இருந்த உறவு பெண்மணியிடம், “நீங்களும் பார்த்தீங்களே மேடம்! சொல்லுங்க” என்றார்.

 

அவரும், “ஆமா மல்லி பையில் இந்த புடவை தான் இருந்துது” என்றார்.

 

(ஒப்பனையாளர் திட்டமிட்டே மல்லிகா கொடுத்த புடவையை உறவு பெண்மணி கண்ணில் படாமலும் புகழ்வேந்தன் கொடுத்த புடவையை அவர் கண்ணில் படும்படியும் எடுத்து பார்த்திருந்தார்)

 

வேறொரு உறவு பெண்மணி வந்து, “மல்லிகா என்ன பண்ணிட்டு இருக்கிற? சீக்கிரம் புடவையை கொண்டு வா” என்று கூற,

 

மல்லிகா குழப்பத்துடனும் பதற்றத்துடன் புகழ்வேந்தன் எடுத்த புடவையை கொண்டு சென்றார். அவர் மனதினுள், ‘ஏற்கனவே காலையில் இருந்து எதுவும் சரி இல்லை.. மாறி மாறி இருக்குது னு கத்திட்டு இருந்தார்.. இப்போ இது தெரிந்தால் என்ன செய்வாரோ?’ என்று பயத்துடன் கூறியபடி சென்றார். ‘புடவை எப்படி மாறி இருக்கும்? யார் வேலை இது?’ என்ற குழப்பமான நிலையிலும் இருந்தார் அவர்.

 

 

இங்கே இவை அனைத்தும் நடந்துக் கொண்டிருந்த வேளையில் கல்யாண மணடபத்தின் மேலாளர் அறையில் நின்றபடி மேலாளரிடம் சத்தம் வெளியே வராதபடி கத்திக் கொண்டிருந்தார் கிருபாகரன்.

 

மணமகன் சடங்கு முடிந்ததும் தனது செயலாளரை அழைத்த கிருபாகரன், “எங்க டா இருக்கிற?” என்று கோபமாகவே ஆரம்பித்தார்.

 

“அது வந்து சார்…”

 

“இழுக்காம சொல்லித் தொலை”

 

“மேடம் பிரசாத் சாரை தேடி போக சொன்னாங்…………….”

 

“அவன் என்ன குழந்தையா? அவனே வருவான்.. நீ கிளம்பி வா”

 

“சரி சார்”

 

“உனக்கு வேற மண்டபமே கிடைக்கலையா! இதைப் போய் புக் பண்ணி வச்சிருக்கிற! இங்கே எதுவுமே சரி இல்லை.. இன்னும் பத்து நிமிஷத்தில் என் முன்னாடி வந்து நிற்கிற” என்று கடித்த பற்களிடையே வார்த்தைகளை துப்பியவர் மேலாளர் அறைக்குச் சென்றார்.

 

அனுமதியின்றி உள்ளே சென்ற கிருபாகரன், “என்ன நிர்வாகம் இது? எதுவுமே சரி இல்லை.. நான் யாரு னு தெரியுமா? என்ன நினைச்சிட்டு இருக்கிற?” என்று மேலாளரை பார்த்து குரலை சற்று தாழ்த்தி கத்தினார்.

 

இருக்கையில் இருந்து எழுந்த மேலாளர், “சாரி சார்” என்றார் தன்மையாக.

 

“இந்த வார்த்தையை தான் காலையில் இருந்து சொல்லி என்னோட பிபியை ஏத்திட்டு இருக்கிற.. எதுவும் நான் சொன்னது நடக்கலை.. மண்டப  அலங்காரத்தில் இருந்து சாப்பாட்டு மெனு வரை எதுவும் எதுவுமே நான் சொன்னது இல்லை..” என்று குரலை சற்று உயர்த்த,

 

“இங்கே என்ன பிரச்சனை?” என்றபடி கதவை திறந்துக் கொண்டு புகழ்வேந்தன் உள்ளே வந்தான்.

 

புகழ்வேந்தனை பார்த்த கிருபாகரன் புருவம் உயர்த்தியபடி மேலாளரை பார்க்க,

 

புகழ்வேந்தனிடம், “குட் மார்னிங் சார்” என்ற மேலாளர் அவன் தலை அசைத்ததும் கிருபாகரனை பார்த்து, “சார் இந்த கல்யாண மண்டபத்தின் ஓனர்” என்றார்.

 

‘இவனோட மண்டபமா!’ என்று மனதினுள் அதிர்ந்த கிருபாகரனுக்கு இந்த கல்யாண மண்டபத்தை தேர்ந்தெடுத்த தனது செயலாளரை மனதில் கோபத்துடன் நூற்றியொன்றாவது முறையாக திட்டினார்.

 

மேலாளர் இருக்கையில் கால் மேல் கால் போட்டபடி கம்பீரமாக அமர்ந்த புகழ்வேந்தன் கிருபாகரனை ‘என்ன?’ என்பது போல் பார்த்தான்.

 

தன்னிடம் பேசாமல் தன்னை அமரக் கூட சொல்லாத புகழ்வேந்தனை பார்த்து கிருபாகரனுக்கு இரத்த அழுத்தம் இன்னும் எகிறத் தொடங்கியது.

 

கிருபாகரன் புகழ்வேந்தனை பார்த்து, “நான் யாரு னு தெரியுமா?” என்றார் பல்லை கடித்துக் கொண்டு.

 

புகழ்வேந்தானோ அலட்சியத்துடன், “தெரியுமே” என்றுவிட்டு, மேலாளரை பார்த்து, “என்ன பிரச்சனை னு கேட்டேன்” என்றான்.

 

மேலாளர் பயத்துடன் பேச்சு வராமல் அவனை பார்க்க,

 

புகழ்வேந்தன் எதிரில் இருந்த இருக்கையில் தானே அமர்ந்த கிருபாகரன், “அதை என்னிடம் கேளு” என்றார்.

 

இருக்கையில் நன்றாக சாய்ந்து உட்கார்ந்த புகழ்வேந்தன், “சரி நீயே சொல்லு” என்றான்.

 

கிருபாகரன் கோபத்துடன், “மரியாதையுடன் பேசு” என்று கூற,

 

புகழ்வேந்தன் அமைதியான குரலில், “கிவ் ரெஸ்பெக்ட் டேக் ரெஸ்பெக்ட்.. கேள்வி பட்டது இல்லையா?” என்றான்.

 

மனதின் அழுத்தம் காரணமாக கிருபாகரன் எப்பொழுதும் புகழ்வேந்தனை மகன்களிடம் ஒருமையில் விளிப்பதை போன்றே அவனிடமும் ஒருமையில் பேசியிருந்தார்.

 

கிருபாகரன் தனது கோபத்தை கட்டுப் படுத்த முயற்சித்தபடி பேசினார். கிருபாகரனின் நிலையை கண்டு புகழ்வேந்தன் ரசித்தாலும் அதை சிறிதும் வெளியே காட்டிக்கொள்ளாமல் அமர்ந்திருந்தான்.

 

கிருபாகரன், “எதுவுமே நான் சொன்னதை பண்ணலை.. வெல்கம் ட்ரின்க் மாதிரி வரவங்களுக்கு உள்ளே வந்ததும் காபி தராங்க.. இதை நான் சொல்லவே இல்லை.. என்னடா இது! னு போய் கேட்டா சாப்பாட்டு மெனு டோட்டலா மாறி இருக்குது.. ஸ்டேஜ் டெக்கறேஷன் மாறியிருக்குது.. மாலையெல்லாம் கூட மாறி இருக்குது.. வெளியே மனோஜ் வெட்ஸ் மித்ராணி னு பூ அலங்காரம் செய்ய சொல்லி இருந்தேன்.. பூ வாடிரக் கூடாது னு சொல்லி இன்னைக்கு காலையில் கடைசியா வைக்கிறதா சொல்லி இருந்தாங்க.. ஆனா வைக்கவே இல்லை..  கேட்டா பூ வரலை, ரெடி ஆகலை, சாரி னு சொல்றான்.. இதான் நீ..ங்க நிர்வாகம் செய்ற லட்சணமா?” என்றவர், ‘இதில் உனக்கெல்லாம் சிறந்த தொழிலதிபர் விருது’ என்று முணுமுணுத்தார்.

 

அவரது முணுமுணுப்பு புகழ்வேந்தனின் காதில் விழுந்தது தான் ஆனால் அதை கண்டுக் கொள்ளாமல் மேலாளரின் பக்கம் திரும்ப,

 

இவன் திரும்பும் முன், “சதீஷ் சார் தான்……..” என்று அவசரமாக ஆரம்பித்த மேலாளர் அவனது பார்வையில் பேச்சை நிறுத்தினார்.

 

அவன், “வெளியே சதீஸ் இருப்பான்.. அவனை உள்ளே வர சொல்லிட்டு நீங்க வேற உருப்படியான வேலையை பாருங்க” என்றான்.

 

அந்த மேலாளர் விட்டால் போதுமென்று வெளியேற,

 

கிருபாகரன், “வேற உருப்படியான வேலை னா! அப்போ என்னோட பேசுறது வெட்டி வேலையா?” என்று எகிற,

 

புகழ்வேந்தன் அலட்டிக் கொள்ளாமல், “உ..ங்க மகன் கல்யாணம் இது.. இருக்கிற வேலைகளை விட்டுட்டு, வரவங்களை கவனிக்கிறதை விட்டுட்டு இப்படி உட்கார்ந்து பேசிட்டு இருக்கிறதை வேற எப்படி சொல்ல?”

 

கிருபாகரன் அதிகரித்த கோபத்துடன், “ஏய்! உன் தப்பை மறைக்க என்னை சொல்றியா? பலன்ஸ் பேமென்ட் தர மாட்டேன்” என்று மிரட்டினார்.

 

“யாருக்கு வேணும் உன்னோட பணம்? அதை நீயே வச்சுக்கோ” என்று புகழ்வேந்தன் இறுகிய குரலில் கூறிக் கொண்டிருந்தபோது கதவை தட்டிவிட்டு உள்ளே வந்த சதீஷ் ஒரு கோப்பியத்தை அவனிடம் நீட்டினான்.

 

புகழ்வேந்தன் பார்வையால் அதை கிருபகரனிடம் கொடுக்க கூறினான்.

 

சதீஷ் அதை அவரிடம் நீட்ட, அவர், “என்ன இது?”

 

“திறந்து பார்த்தா தெரியப் போகுது”

 

யோசனையுடன் கோப்பியத்தை திறந்து பார்த்த கிருபாகரன் அதிர்ச்சியுடன் சிறிது வெளிறிய முகத்துடன் எழுந்து நின்றார்.

 

“இ..து எ..ப்..படி” என்று பேச்சு வராமல் திணறினார்.

 

 இதயம் இணைய காத்திருப்போம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!