Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒன்று சேர்ந்த நதியும் கரையும்

ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 4 2

இந்துவை நெருங்கி அவள் கையைப் பற்றிக் கொண்ட அஞ்சலி “அக்கா எனக்கு ஒண்ணுமே புரியலை. உங்க தம்பியை விரும்புனதை தவிர வேற எந்த தப்புமே நான் செய்யலை. எங்க அண்ணன் உங்களுக்கு ஏதோ பெருசா செஞ்சிருக்கான்னு புரியுது. ஆனா என்னன்னு தெரியலை. நான் இப்ப பேச வந்த விஷயமே வேற. இன்னைக்கு என்னை பொண்ணு பாக்க வராங்க. பொண்ணு பாக்க வரது எங்க வீட்ல சாதாரணம் கிடையாது. எல்லாம் முடிவு பண்ணிட்டு தான் பொண்ணு பாக்கவே வருவாங்க. எனக்கு கிரி இல்லைன்னா வாழ்க்கையே இல்லைக்கா. பிளீஸ் நீங்க தான் எனக்கு உதவனும். பியூட்டி பார்லர் போறேன்னு வீட்ல பொய் சொல்லிட்டு தான் இங்க வந்தேன். பிளீஸ், எனக்கு ஹெல்ப் பண்ணுங்க. தாத்தா ஹெல்ப் பண்ணுங்க தாத்தா”, என்று கெஞ்சினாள் அஞ்சலி.

அவள் கெஞ்சல் அனைவருக்கும் வருத்தத்தையும் கலக்கத்தையும் கொடுத்தாலும் ஏற்கனவே அனுபவித்த வலிகள் நினைவில் வந்து அங்கிருந்த யாருடைய மனதையும் இளக்க வில்லை. தன்னுடைய கைகளை விலக்கிக் கொண்டாள் இந்து.



Advertisement

தான் காலில் விழாத குறையாக கெஞ்சியும் மூவரும் கல் போல இருப்பதைக் கண்ட அஞ்சலிக்கு உள்ளுக்குள் வெறுத்துப் போனது. கிரியைத் திரும்பி பார்த்தாள். அவனோ வேறு எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தனது கண்ணீரைக் கண்டு கூட உருகாத ஒருவன் மீதா இவ்வளவு காதலை வைத்தோம் என்று விரக்தியாக எண்ணிக் கொண்டு மற்றவர்களைப் பார்த்தாள். பின் மீண்டும் அவனைப் பார்த்தாள். இப்போது அவனும் அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஆனால் அவனைக் கண்டு அஞ்சலி தான் திகைத்துப் போனாள். ஏனென்றால் அவ்வளவு காதலை கண்களில் தேக்கி அவளைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான் கிரி.

Advertisement

Advertisement

அவள் திடீரென்று திரும்புவாள் என்று தெரியாமல் அவன் அவளைப் பார்க்க அவள் திரும்பியதும் இவன் மாட்டிக் கொண்டதில் திருதிருவென்று விழித்தான். அஞ்சலியோ அவன் கண்களில் இருந்த காதலை துல்லியமாக கண்டு கொண்டாள். ஆனால் அவன் கண்களில் எந்த அளவு காதல் இருந்ததோ அந்த அளவுக்கு வலியும் இருந்தது. அஞ்சலிக்கு அவனுடைய அந்த வலி குழப்பத்தைக் கொடுத்தாலும் அந்த காதலைக் கண்டதும் தான் நிம்மதியாக இருந்தது.

“இது போதும் கிரி. உன் காதலை நான் பாத்துட்டேன். இனி என்ன செய்யணும்னு எனக்கு தெரியும்”, என்று மனதில் முடிவு எடுத்த அஞ்சலி கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்து விட்டு “யாரும் எதுவும் பேச மாட்டீங்கல்ல? உங்களை நம்பி வந்ததுக்கு எனக்கு நல்ல பலன் கிடைச்சிருச்சு. நாலு வருசத்துக்கு மேல விரும்புனவனே கல்லு மாதிரி இருக்கான். நீங்க என்ன செய்வீங்க பாவம். பரவால்ல என்ன பண்ணணும்னு எனக்கு தெரியும். நானே பாத்துக்குறேன்”, என்று குணசேகரன் மற்றும் இந்துவைப் பார்த்துச் சொன்ன அஞ்சலி கிரி புறம் திரும்பி “ரொம்ப நன்றி மிஸ்டர் கிரி. உங்களை விரும்புனதுக்கு இது எனக்கு நல்ல ஒரு பாடம். நாய் மாதிரி உங்க பின்னாடி திரிஞ்சதுக்கு அந்த நாயை விட என்னைக் கேவலமா ஆக்கிட்டீங்கல்ல? இனி என்னோட தொல்லை உங்களுக்கு இருக்காது. எல்லாரும் நிம்மதியா இருங்க. நான் போறேன்”, என்று சொல்லி விட்டு அங்கிருந்து கிளம்பி விட்டாள்.

Advertisement

தளர்ந்து போய் செல்லும் அஞ்சலியைப் பார்த்த இந்து அப்படியே சேரில் தொப்பென்று அமர்ந்து விட்டாள்.

“தப்பு பண்ணிட்டோமா தாத்தா? இவளைப் பாக்க பாவமா இருக்கு”, என்றாள் இந்து.

“எனக்கும் தான் மா. ஆனா இது தான் மா விதி”, என்று சொன்னார் குணசேகரன்.

“கிரி”, என்று அழைத்தாள் இந்து.

“அக்கா”

“பாவம் டா இந்த பொண்ணு. இவளை உனக்கு பிடிச்சிருக்கா?”

“உன் கிட்ட என்னால பொய் சொல்ல முடியாதுக்கா. என் கிட்ட வந்து தைரியமா காதலைச் சொன்னப்ப அஞ்சலியை எனக்கு புடிச்சது உண்மை தான். ஆனா அந்த அயோக்கியனோட தங்கச்சின்னு தெரிஞ்சதும் பிடிக்கலைக்கா”

“என் கிட்ட பொய் சொல்ல முடியாதுன்னு சொல்லிட்டு மறுபடியும் பொய் தான் டா சொல்ற”

“அக்கா”

“உன் கண்ணுல இருக்குற வலி சொல்லுது அவளை உனக்கு எவ்வளவு பிடிக்கும்னு”, என்று இந்து சொன்னதும் தலை குணிந்தான் கிரி.

“ரெண்டு பேரும் இவ்வளவு வருத்த பட ஒண்ணும் இல்லை. கிரியும் அந்த பொண்ணை லவ் பண்ணி அந்த விஷயம் அவளோட அண்ணனுக்கு தெரிஞ்சா அவன் இந்த கல்யாணத்தை நடத்தி வைப்பான்னு நினைக்கிறீங்களா? கட்டாயம் நடக்காது. அந்த பொண்ணுக்கேத்த நல்ல வாழ்க்கையை தான் அவ அண்ணன் உருவாக்கிக் கொடுப்பான். ஏன்னா அது அவன் தங்கச்சியாச்சே? அவன் ஊரா வீட்டுப் பொண்ணுங்க வாழ்க்கையைத் தான் கெடுப்பான். அதனால அவங்க அவங்க வேலையைப் பாத்துட்டு கிளம்புங்க”, என்று சொல்லி அவர்களை அனுப்பி வைத்தார் குணசேகரன்.

அவர்கள் வீட்டை விட்டு வெளியே வந்த அஞ்சலி “என் காதலை தோத்துப் போக விட மாட்டேன் கிரி. அதே நேரம் என்னை நிராகரிச்ச உன்னை சும்மாவும் விட மாட்டேன். நம்ம காதலுக்கு குறுக்கே இருக்குற என் அண்ணன் தப்பு செஞ்சிருந்தான்னா அவனை மன்னிக்கவும் மாட்டேன். இந்த அஞ்சலி யாருன்னு காட்டுறேன்”, என்று எண்ணிக் கொண்டவள் நேராக பியூட்டிப் பார்லருக்கு தான் சென்றாள்.

அங்கே சும்மா மேக்கப் என்ற ஒன்றை ஐந்து நிமிடத்தில் பெயருக்கு முடிக்க சொன்னவள் உடனே அங்கிருந்து கிளம்பி ஒரு மெடிக்கல் ஷாப்பில் தான் வண்டியை நிறுத்தினாள்.

“ஒரு எலி மருந்து தாங்க”, என்று அஞ்சலி கேட்க அவளையும் அவளுடைய நவநாகரிகமான உடையையும் வித்தியாசமாக பார்த்தான் கடைக்காரன்.

“என்ன இங்க பார்வை? வீட்ல எலித் தொல்லை தாங்க முடியலை. சீக்கிரம் தாங்க”, என்று அவள் கேட்டதும் தான் எடுத்துக் கொடுத்தான்.

பின் வீட்டுக்கு வந்ததும் அவளுடைய அன்னை கேட்ட கேள்விகளுக்கு பதில் சொல்லி விட்டு தன்னுடைய அறைக்குச் சென்றவள் சரியாக அவளை அவளுடைய அம்மா சாப்பிட அழைக்கும் நேரத்துக்கு சற்று முன்னதாக அந்த எலி மருந்தை விழுங்கி விட்டாள்.

அவளை சாப்பிட அழைக்க வந்த அம்பிகா நுரை தள்ளிக் கிடந்த மகளைப் பார்த்து அலற இன்பனின் அந்த வீடே அடுத்த நொடி பரபரப்பானது. அடுத்த அரை மணி நேரத்தில் தீவிர சிகிச்சை பிரிவில் அவளைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தார்கள் டாக்டர்கள்.

ஆபீஸில் இருந்த இன்பனுக்கு விஷயத்தை சொல்ல அடுத்த நொடி தன்னுடைய தங்கையின் செயலை கேட்டு நம்ப முடியாமல் அதிர்ந்து அங்கே ஓடி வந்தான் இன்பன்.

அங்கே வந்து அவளைக் கண்டதும் மேலும் அதிர்ந்து போனான் இன்பன். கிழிந்த நாராய் அஞ்சலி கிடக்க அவளுக்கு தீவிர சிகிச்சை நடந்து கொண்டிருந்தது. விஷம் கொஞ்சம் அதிகமானதால் அவளைக் காப்பாற்ற போராடிக் கொண்டிருந்தனர்.

அம்மா அப்பாவின் புறம் திரும்பியவன் “என்ன தான் மா நடந்துச்சு?”, என்று கேட்டான்.

“வேலைக்கு கிளம்பினா டா, உன்னை பொண்ணு பாக்க வராங்க, போகாதேன்னு சொன்னேன். சரின்னு வீட்ல தான் இருந்தா. அப்புறம் கிளம்பி வந்தவ பேஷியல் பண்ணப் போறேன்னு சொன்னா. சரி பிள்ளை கல்யாணத்துல விருப்பமா தான் இருக்கான்னு நினைச்சு நம்பி அனுப்பினேன். அப்புறம் பேஷியல் பண்ணிட்டு சந்தோஷமா தான் வீட்டுக்கு வந்தா. ஆனா கொஞ்ச நேரத்துல சாப்பிட கூப்பிட போறேன். வாயில நுரை தள்ளிப் போய்க் கிடக்குறா. என் பெத்த வயிறு பதறுது டா. இதுக்கா இவளை கஷ்டப் பட்டு பெத்து வளத்தோம்? எதுக்கு இப்படி பண்ணினான்னு தெரியலையே?”, என்று புலம்பினாள் அம்பிகா.

“அமைதியா இரு மா. நம்ம மகளுக்கு எதுவும் ஆகாது. அவ கண்ணு முழிச்ச அப்புறம் அவ கிட்டயே ஏன் இப்படி பண்ணினேன்னு கேட்டு அதை சரி பண்ணிக் கொடுப்போம். அஞ்சலி ரொம்ப தைரியமான பொண்ணு. அவ கோழை கிடையாது. அவளே இப்படி செஞ்சிருக்கான்னா அதுக்கு சரியான காரணம் இருக்கணும்”, என்றார் இன்பனின் தந்தை சீனிவாசன்.

இன்பனுக்கு குழப்பமாக இருந்தது. சீனிவாசன் சொன்னது போல  அஞ்சலி மற்ற பெண்களைப் போல அல்ல. ரொம்பவும் தைரியசாலி. அவளை மாதிரி ஒரு பெண்ணை பார்ப்பது அரிது. அவனுக்கு தெரிந்து வேறு யாரும் இது போல இல்லை.

இல்லை இல்லை பார்த்திருக்கிறான். அவள் இந்து…. அஞ்சலியைப் போலவே தைரியமான பெண். அவனையே அவள் எதிர்த்திருக்கிறாள். “இப்ப எதுக்கு அவளோட நினைப்பு எனக்கு?”, என்று அவளுடைய நினைவுகளை ஒதுக்கி வைத்தான்.

இப்போது அவளைப் பற்றி ஏன் நினைத்தான் என்று அவனே அறியாத விஷயம். தினமும் அவன் பல பேரை சந்தித்திருக்கிறான். அவர்களை எல்லாம் அவன் மறுபடியும் எண்ணிப் பார்த்தது கிடையாது. அப்படி இருக்க இந்துவை மட்டும் ஏன் நினைத்தான்? இந்த கேள்விக்கு விடை தான் இல்லை.

அதே நேரம் இந்துவும் அவனைப் பற்றி தான் எண்ணிக் கொண்டிருந்தாள். அஞ்சலி என்ன செய்வாளோ ஏது செய்வாளோ என்ற பயம் இந்துவை நிம்மதியாக இருக்க விட வில்லை. அவள் மட்டும் அந்த இன்பனின் தங்கையாக இல்லாமல் போயிருந்தால் கிரிக்கு அவளை கட்டி வைத்திருக்களாமே என்று எண்ணியவளுக்கு இன்பனைப் பற்றிய நினைவு தான் வந்தது. அவன் முகமும் அவன் செயலும் அவன் மிரட்டலும் இப்போது நினைத்தாலும் அடி வயிற்றில் ஒரு எரிச்சலை ஏற்படுத்திக் கொண்டே இருந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!