Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒன்று சேர்ந்த நதியும் கரையும்

ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 4 3

அவள் சந்தித்த அவமானங்கள், அவள் கேட்ட வார்த்தைகள் ஒவ்வொன்றும் குத்தீட்டியாய் அவள் மனதை கீறிக் கொண்டிருந்தன.

பேசாம கிரிக்கு அஞ்சலியைக் கட்டி வச்சா என்ன? அவன் கெட்டவனா இருந்தா அந்த பொண்ணு என்ன பண்ணும் என்று கூட எண்ணிப் பார்த்து விட்டாள். அவளுக்கு அதில் இரண்டு விடை தோன்றியது.



Advertisement

அதில் ஒன்று இன்பனைப் போல ஒருவன் கட்டாயமாக அவன் தங்கையை கிரிக்கு கட்டித் தரவே மாட்டான். ஒரு வேளை அவன் தங்கை ஆசைக்காக அவன் இறங்கி வந்தால் கூட திருமணம் முடிந்த பின் அவனை அடிக்கடி சந்திக்க நேரிடும். அவனை பார்க்கவே கூடாது என்று அவள் நினைக்க அடிக்கடி சந்திக்க வேண்டியது கண்டிப்பாக முடியாது என்று புரிந்தது.

Advertisement

அதனால் இந்த திருமணம் நடக்க கூடாது என்று எண்ணியது அவள் மனது. அதே நேரம் கிரி மற்றும் அஞ்சலியை பிரித்து வைப்பதா என்றும் கலங்கியது. ஏனென்றால் கிரிக்கும் அஞ்சலியை பிடித்திருக்கிறது என்று தெரிந்து விட்டதே. இரு வேறு பட்ட மன நிலையில்  தவித்தாள் இந்து.

Advertisement

அதே நேரம் கிரியோ “இந்நேரம் அஞ்சலியைப் பாக்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வந்திருப்பாங்களா? கண்டிப்பா யாருக்கா இருந்தாலும் அவளைப் பிடிக்கும். அவளை உடனே பிடிச்சிருச்சுன்னு சொல்லிருவாங்க. அப்புறம் கூடிய சீக்கிரம் அவளுக்கு கல்யாணம் முடிஞ்சிரும். அவ இல்லாம நான் எப்படி இருப்பேன்?”, என்று எண்ணிய கிரியின் இன்னொரு மனதோ அப்படினா உங்க அக்காவை கஷ்டப் படுத்தின இன்பனை நீ ஒண்ணும் செய்யப் போறது இல்லையா? உனக்கு உன் ஆசையும் சுயநலமும் தான் முக்கியமா என்று அவனுக்கு எடுத்துரைத்தது.

Advertisement

அஞ்சலி மேல் உள்ள பாசத்துக்கும் இன்பன் மேலுள்ள கோபத்துக்கும் இடையில் தவித்தான் கிரி.

குணசேகரனோ கடவுளே அப்பன் ஆத்தாளைப் பிரிஞ்சு கஷ்டப் பட்டுட்டு இருக்குற என் பேத்தியும் என் பேரனும் சந்தோஷமா இருக்கணும். அந்த இனியன் குடும்பத்தால இவங்களுக்கு எதுவும் ஆக கூடாது என்று வேண்டிக் கொண்டார்.

இரண்டு மணி நேர கடுமையான போராட்டத்தில் உயிர் பிழைத்தாள் அஞ்சலி. “இப்ப அவங்க உயிரைக் காப்பாத்திட்டோம். இனி ஒரு தடவை இப்படி அவங்க பண்ணாம நீங்க பாத்துக்கோங்க. இப்ப கொஞ்ச நேரம் தூங்குவாங்க. ஒவ்வொருத்தரா போய்ப் பாருங்க. கண் முழிச்சதும் வீட்டுக்கு கூட்டிட்டுப் போகலாம். அவங்க என்னன்ன சாப்பிடணும்னு நர்ஸ் சொல்லுவாங்க. அப்புறம் கொஞ்ச நாளைக்கு காரமா உணவு கொடுக்க வேண்டாம்”, என்று சொல்லி விட்டுச் சென்றார் டாக்டர்.

முதலில் அம்பிகா சென்று பார்க்க அதன் பின் சீனிவாசன் சென்றார். அதன் பின் இன்பன் சென்றான். எப்போதுமே அன்று பூத்த பூ போல இருக்கும் தங்கை இன்று தளர்ந்து போய் உருக்குலைந்து படுத்துக் கிடந்ததைப் பார்த்து அவன் கண்கள் கலங்கிப் போனது. மருந்தின் உபயத்தால் உறங்கிக் கொண்டிருந்த அவள் முகத்தைப் பார்த்தான். சின்னக் குழந்தை போல அவள் முகத்தில் தூக்கத்திலும் பிடிவாதம் தெரிந்தது. அவள் உதடுகள் ஈரப்பசை இல்லாமல் வெளுத்து இருந்ததைப் பார்க்க பார்க்க அவளை இந்த நிலைக்கு தள்ளியவர்களை கொல்லும் ஆத்திரம் வந்தது.

“குட்டிமா கண்ணு முழிக்கட்டும். அப்புறம் இருக்கு”, என்று எண்ணிக் கொண்ட இன்பன் அவள் கண் விழிப்பதற்காக காத்திருந்தான். அடுத்த இரண்டு மணி நேரத்தில் கண் விழித்தாள் அஞ்சலி. அவளுக்கு யாருடைய முகத்தையும் பார்க்கும் தைரியம் இல்லை. அதனால் தலை குனிந்த படியே அமர்ந்திருந்தாள்.

“ஏண்டி இப்படி பண்ணின? இதுக்கா நாங்க இன்னும் உயிரோட இருக்கோம்?”, என்று அழுது கொண்டே அம்பிகா புலம்ப அஞ்சலி என்ன பதில் சொல்வாள் என்று பார்த்துக் கொண்டிருந்தான் இன்பன்.

அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க “அம்பிகா, அவளே இப்ப தான் செத்துப் பிழைச்சு வந்திருக்கா. இப்ப போய் கேள்வி மேல கேள்வி கேட்டுகிட்டு இருக்க? வீட்ல போய் எல்லாம் பேசிக்கலாம்”, என்று அனைவரின் வாயையும் அடைத்தார் சீனிவாசன்.

வீட்டுக்கு சென்றதும் சோபாவில் தளர்ந்து போய் அவள் சரிந்து படுத்தாள். அம்பிகா மகளுக்கு ஜூஸ் எடுத்து வரச் செல்ல இன்பனும் சீனிவாசனும் அவள் அருகே அமர்ந்தார்கள். சீனிவாசனின் மடியில் தலை வைத்து படுத்துக் கொண்டாள் அஞ்சலி.

அவள் தலையை வருடி விட்ட சீனிவாசன் “ஏண்டா குட்டி இப்படி பண்ணின? உனக்கு என்ன கஷ்டம்னாலும் என் கிட்ட சொல்லிருக்கலாம்ல? நாங்க எல்லாருமே உன் கிட்ட ஃபிரண்ட் மாதிரி தானே பழகுறோம்? இதோ இன்பன் கிட்ட தான் நீ மனசு விட்டு பேசுவியே? அவன் கிட்டயாவது சொல்லிருக்கலாம்ல? ஏன் மா இப்படி பண்ணின?”, என்று கேட்டார்.

அவள் அமைதியாக இருக்கவும் “நேத்து மாப்பிள்ளை வீட்ல இருந்து வரங்கன்னு சொன்னதுனால இப்படி பண்ணுனியா மா?”, என்று கேட்டான் இன்பன்.

“ஆமா”, என்றாள் அஞ்சலி.

“ஓ, அதை எங்க கிட்ட சொல்லிருக்கலாம்ல? இந்த அளவுக்கு போகனுமா? ஆமா எதுக்கு உனக்கு நாங்க பாத்த மாப்பிள்ளை பிடிக்கலை? உன் மனசுல வேற யாரும் இருக்காங்களா?”

“ஹிம்”

“லவ் பண்ணுறது தப்புன்னு நம்ம வீட்ல ஒரு நாளும் பேசினது இல்லையே? பையன் நல்லவனா இருந்தா நாங்க உனக்கு கல்யாணம் செஞ்சி வைக்க போறோம். இதுக்கு எதுக்கு டா சாகுற அளவுக்கு போன?”

“அண்ணா அவன் என்னை பிடிக்கலைன்னு சொல்லிட்டான்”, என்று சொல்லும் போதே அஞ்சலி கண்களில் கண்ணீர் வந்தது.

“வாட் உன்னைப் பிடிக்கலைன்னு சொல்லிட்டானா?”, என்று உண்மையான அதிர்ச்சியில் கேட்டான் இன்பன். ஏனென்றால் அவன் தங்கை கொள்ளை அழகு, கோடி கோடியா பணம். அனைத்தும் அவளிடம் இருக்க அவளை பிடிக்கவில்லை என்று சொல்லும் அளவுக்கு அவன் என்ன பெரிய இவனா என்று எண்ணம் வந்தது இன்பனுக்கு.

“உன்னை வேண்டாம்னு சொல்ற அளவுக்கு அவன் என்ன அவ்வளவு அழகனா?”, என்று கேட்டான் இன்பன்.

“அழகைப் பாத்தோ பணத்தைப் பாத்தோ ஆட்களை எடை போடுற குணம் அவனுக்கு கிடையாதுண்ணா. அவன் ரொம்ப நல்லவன். அவனுக்கு பாசம் மட்டும் தான் பெருசு. மித்த படி நான் எப்படி இருக்கேன்? என் ஸ்டேட்டஸ் என்ன? அதெல்லாம் அவனுக்கு பெருசே இல்லை”, என்று கிரியைப் பற்றி பெருமையாக சொன்னாள்.

அவனைப் பற்றி பேசும் போது அஞ்சலி முகம் ஒளிர்ந்ததிலே அவனை அவளுக்கு எவ்வளவு பிடித்திருக்கிறது என்று மற்றவர்களுக்கு புரிந்தது.

“சரி மா அந்த பையன்….”, என்று இன்பன் ஆரம்பிக்க “அவன் பேர் கிரி அண்ணா”, என்று அவசரமாக சொன்னாள் அஞ்சலி.

“சரி கிரி, குணத்தை மதிக்கிற அளவுக்கு நல்லவன்னா அவனுக்கு உன்னைப் பிடிக்கணுமே? உன் கிட்ட எந்த கெட்ட விஷயமும் இல்லையே மா. நீ தேவதை மாதிரி. உன்னை எதுக்கு அவனுக்கு பிடிக்கலையாம்?”, என்று இன்பன் கேட்க “உன்னால தான் அண்ணா”, என்று சொல்ல முடியாமல் அமைதியாக இருந்தாள் அஞ்சலி.

“உன்னைப் பிடிக்கலைன்னு சொல்றவங்க கிட்ட இருந்து நீயும் விலகிறனும் பாப்பா. அவன் கிட்ட காதலை கெஞ்சிற அளவுக்கு நீ ஒண்ணும் குறைஞ்சு போய்டலை. இதெல்லாம் கெஞ்சி வர விஷயம் இல்லை மா”, என்றார் சீனிவாசன்.

“அவனுக்கும் என்னை பிடிக்கும் பா. அவனும் என்னை விரும்புறான்”, என்று சொன்னதும் மற்ற மூவருக்கும் குழப்பமாக இருந்தது.

“என்ன அஞ்சலி சொல்ற? அவனுக்கும் உன்னைப் பிடிக்கும்னா உன்னை எதுக்கு வேண்டாம்னு சொல்றான்?”, என்று கேட்டான் இன்பன்.

“அதுக்கு காரணம் நீ தான் அண்ணா”, என்று ஒரு வழியாக சொல்லி விட்டாள் அஞ்சலி.

“என்ன மா சொல்ற?”, என்று அதிர்ந்து போனான் இன்பன். அம்பிகா மற்றும் சீனிவாசனுக்குமே குழப்பம் தான்.

“ஆமா நீ தான் காரணம். நான் உன் தங்கையா இருக்குறதுனால தான் அவன் என்னை வேண்டாம்னு சொல்லிட்டான்”, என்று அவள் சொல்ல அவனுக்கு மேலும் திகைப்பாக இருந்தது. மற்றவர்களும் அவனைக் குழப்பமாக பார்த்தார்கள்.

“என்ன ஆச்சு இன்பா? அந்த கிரியை உனக்கு தெரியுமா?”, என்று கேட்டார் சீனிவாசன்.

“இல்லையேப்பா முன்னாடியே அஞ்சலி அந்த பையனோட போட்டோவைக் காட்டி இவனை தெரியுமான்னு கேட்டா. எனக்கு தெரியாதுன்னு சொன்னேன்”, என்று சீனிவாசனிடம் சொன்ன இன்பன் அஞ்சலி புறம் திரும்பி “நீ காலேஜ் படிக்கும் போதே அவனைப் பத்தி சொன்னீயே? அப்ப இருந்து நீ அவனை விரும்புறியா மா?”, என்று கேட்டான்.

“ஆமாண்ணா. எனக்கு காலேஜ் சேந்தப்பவே அவனைப் பிடிக்கும். அவன் கிட்ட காலேஜ் படிக்கும் போதே காதலைச் சொன்னேன். அவன் உன்னைச் சொல்லி என்னை மறுத்துட்டான். அது வரை பிரண்டா பேசிட்டு இருந்தவன் நான் உன் தங்கைன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் என் கிட்ட பேசுறதையே விட்டுட்டான். இப்ப நாங்க ஒண்ணா தான் வேலை பாக்குறோம். ஆனா இப்ப வரை அவன் மனசு மாறலை. என் கிட்ட பேசவும் மாட்டான். நானும் அவனுக்காக வெயிட் பண்ணேன். ஆனா அம்மா இன்னைக்கு பொண்ணு பாக்க வராங்கன்னு சொன்னதும் என்ன செய்யன்னு தெரியாம தான் இப்படி பண்ணிட்டேன்.  அவன் என் காதலை ஏத்துகிட்டு இருந்தா கூட உங்க எல்லார்க் கிட்டயும் நான் கிரியை விரும்புறேன்னு சொல்லுவேன். ஆனா அவனே என் காதலை ஏத்துக்காதப்ப நான் என்னன்னு உங்க கிட்ட சொல்ல? அதான் சொல்லலை”, என்று சொன்னாள் அஞ்சலி.

காதல் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!