Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒன்று சேர்ந்த நதியும் கரையும்

ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 10 1

அத்தியாயம் 10 

மின்மினியாக நான்,

எனக்கு ஒளி தரும்

நட்சத்திரமாக நீ!!!



Advertisement

“உன் ஜாதகத்தைக் காட்டுற இடத்துல எல்லாம் உன்னைப் பிடிச்சிருக்குன்னு சொல்றாங்க மா. ஆனா அடுத்த நாளே தப்பு தப்பா சொல்லி வேண்டாம்னு சொல்லிறாங்க. எனக்குமே உன் கல்யாணம் நடக்கும்னு இருந்த நம்பிக்கை போச்சு மா. எனக்கு அப்புறம் கிரி தான் உனக்கு துணையா இருக்கணும். அதனால அவன் வேற எந்த பொண்ணைக் கல்யாணம் பண்ணினாலும் அந்த அஞ்சலியை மட்டும் பண்ணிக்க கூடாது. நானும் அதுக்கு சம்மதிக்க மாட்டேன். என் பேரப் பிள்ளைங்க கல்யாணம் குழந்தை குட்டின்னு வாழுறதைப் பாக்க எனக்கு கொடுத்து வைக்கலை போல?”,  என்று கலங்கிய குரலில் சொல்லி விட்டுச் சென்றார் குணசேகரன்.

Advertisement

தாத்தா மற்றும் தம்பி முடிவை அறிந்த இந்துவுக்கு தனக்கு திருமணம் ஆனால் மட்டும் தான் அனைத்து பிரச்சனையும் முடியும் என்று புரிந்து போனது. அதே நேரம் தனக்கு திருமணம் நடப்பது அவ்வளவு எளிதல்ல என்றும் புரிந்தது.

Advertisement

என் மானத்தைக் கலங்கப் படுத்தின இன்பனால் மட்டும் தான் என்னோட வாழ்க்கையை சரி பண்ண முடியும் என்று தோன்றியது இந்துவுக்கு.

Advertisement

அவனை திருமணம் செய்தால் கட்டாயம் அஞ்சலி கிரி திருமணம் நடக்கும் என்று அவளுக்கு புரிந்தது. அதற்காக இன்பனை திருமணம் செய்யலாம் என்று முடிவு பண்ணிய இந்துவுக்கு அவனை எண்ணி பயமாகவும் இருந்தது.

ஆனால் இதை விட்டால் வேறு வழி இல்லையே. ஆனால் இன்பனுடனான திருமணத்திற்கு பிறகு அவள் வாழ்க்கை எப்படி இருக்கும் என்ற கேள்வி அவளை பயமுறுத்தியது.

அவன் சொன்ன படி அவனைக் கல்யாணம் பண்ணிட்டு பழி வாங்கலாமா? அவன் வேற இப்ப அவன் மனசுல நான் தான் இருக்கேன்னு சொல்றான்? அதெல்லாம் உண்மையா? அவன் என்னை விரும்புறானா? இல்லை அஞ்சலி கல்யாணத்துக்காக நடிக்கானா?

“அவன் எப்படியும் இருந்துட்டுப் போகட்டும். அவன் கெட்டவனா கூட இருந்துட்டு போகட்டும். இப்போதைக்கு அஞ்சலி கிரி கல்யாணம் நடக்கணும் . அதுக்கு நான் இன்பனைக் கல்யாணம் பண்ணிக்கணும். என் தம்பிக்காக அந்த இன்பன் கிட்ட என் வாழ்க்கையை அடகு வைக்கப் போறேன். இப்ப என் வாழ்க்கையை அந்த இன்பன் நாசம் பண்ணின மாதிரி கல்யாணத்துக்கு அப்புறமும் நாசமாக்கினான்னா ஆக்கிட்டுப் போகட்டும். என் தம்பிக்காக நான் ரிஸ்க் எடுக்கப் போறேன். நான் இன்பனைக் கல்யாணம் பண்ணித் தான் ஆகணும்”, என்று முடிவு எடுத்த இந்து அவனைப் போனில் அழைத்தாள்.

அதை எடுத்த இன்பன் “சொல்லு இந்து”, என்றான். அவன் குரலில் இருந்த மென்மை அவளுக்கு வியப்பாக இருந்தது. “இவன் இப்படி எல்லாம் மென்மையா பேசுவானா?”, என்று எண்ணிய இந்து “சத்தியமா உங்களை என்னால நம்ப முடியலை. ஆனா என் தம்பிக்காக நான் உங்களைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதிக்கிறேன்”, என்றாள்.

அவள் சொன்னதைக் கேட்டு சந்தோசமானவன் “கண்டிப்பா உன்னால என்னை நம்ப முடியாது. அது நான் வாங்கி வந்த வரம். ஆனா கண்டிப்பா ஒரு நாள் உனக்கு என்னைப் பிடிக்கும் இந்து. கண்டிப்பா உனக்கு புடிச்ச மாதிரி நான் மாறுவேன். உன் தம்பிக்காக என்னைக் கல்யாணம் பண்ணின நீ கண்டிப்பா ஒரு நாள் என் மேலயும் அன்பா இருப்ப. என்னைக் கல்யாணம் பண்ணதுக்கு அப்புறம் ஐயோ தப்பு பண்ணிட்டோமோன்னு ஒரு நாளும் உன்னை வருத்தப் பட மாட்ட. உன்னை நான் கண்டிப்பா சந்தோஷமா வச்சிக்குவேன். தேங்க்ஸ் என்னைக் கல்யாணம் பண்ண சம்மதிச்சதுக்கு”, என்றான்.

“பேச்சு எல்லாம் வெல்லக் கட்டியா தான் பேசுறீங்க? பாப்போம். என்ன நடந்தாலும் இனி அந்த கடவுள் தான் பொறுப்பு. சரி கல்யாணம் பண்ண எனக்கு சம்மதம் தான். ஆனா அது நடக்கணும்னா நீங்க எனக்கு ஒரு உத்திரவாதம் கொடுக்கணும்”

“நீ சம்மதிச்சதே போதும் மா. என்ன பண்ணனும் சொல்லு மா. என் பேர்ல இருக்குற சொத்தைக் கூட நான் உனக்கு எழுதி தரேன். இப்ப எல்லாம் எனக்கு எது மேலயும் ஆர்வம் இல்லை. நானா இப்படின்னு எனக்கே சில நேரம் தோணுது”

“எனக்கு அதெல்லாம் வேண்டாம். ஆனா நீங்க ஒரு விஷயம் செய்யணும். கல்யாணத்துக்கு அப்புறம் நாம மத்தவங்களுக்கு மட்டும் தான் கணவன் மனைவியா இருக்கணும். நீங்க கணவனுக்குரிய எந்த உரிமையையும் என் கிட்ட எடுக்க கூடாது. அப்படி எடுக்க மாட்டேன்னு நீங்க சத்தியம் பண்ணினா நாம கல்யாணம் பண்ணிக்கலாம்”

“கண்டிப்பா உன் அனுமதி இல்லாம உன் பக்கத்துல கூட வர மாட்டேன் இந்து. எனக்கு நீ ஒரு நல்ல தோழியா இருந்தா மட்டும் போதும். இது சத்தியம். ஒரு வேளை நம்ம வாழ்க்கையோட கடைசி வரை நீ என்னை மன்னிக்கலைன்னா கூட உனக்கு பாதுகாவலனா உன் கூட கடைசி வரை இருப்பேன். நான் எழுதி கையெழுத்து வேணும்னா போட்டுத் தரேன். நான் சொல்றது சத்தியமான உண்மை”

“சரி, உங்க சத்தியத்தை நம்புறேன். உங்க வீட்ல பேசி கல்யாணத்துக்கு ரெடி பண்ணுங்க. முதல்ல நம்ம கல்யாணம் நடக்கட்டும். அப்புறம் கிரி அஞ்சலி கல்யாணம் வச்சிக்கலாம்”

“தேங்க்ஸ் இந்து. இனி எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன். அம்மா அப்பா உங்க வீட்டுக்கு பேச வருவாங்க. அங்க நீ பாத்துக்கோ”

“சரி’, என்று சொல்லி அவள் போனை வைத்ததும் உடனே அம்பிகா மற்றும் சீனிவாசனைத் தான் காணச் சென்றான். “நான் செஞ்ச பாவத்துக்கு நான் தான் அவளைக் கல்யாணம் பண்ணனும். நீங்க நம்பினாலும் சரி நம்பலைன்னாலும் சரி. எனக்கு இந்து தான் வேணும். என்னால அவ வாழ்க்கை போச்சு. அதை பல மடங்கு அவளுக்கு நான் திருப்பிக் கொடுக்கணும். உங்களுக்கே என் மேல நம்பிக்கை வரலைன்னா என் பேர்ல இருக்குற சொத்தை எல்லாம் நான் இப்பவே இந்து பேருக்கு எழுதி வைக்கிறேன்”, என்றான்.

அவர்களுக்கும் அவன் சொல்வது சரி என்று பட்டது. ஆனால் அடுத்த நாளே இன்பன் பெயரில் இருந்த சொத்துக்களைக் எல்லாம் இந்து பெயரில் மாற்றி எழுத எல்லாம் செய்து விட்டார் சீனிவாசன். அந்த பத்திரத்தையும் எடுத்துக் கொண்டு தான் இந்துவை பெண் பார்க்க வந்தார்கள் அம்பிகாவும் சீனிவாசனும்.

அவர்களைக் கண்டு கிரி குதி குதியென்று குதிக்க இந்து அவர்களை சந்தோஷமாக வரவேற்றாள். குணசேகரன் வாங்க என்று மட்டும் சொன்னார். அவர்கள் இப்போது கிரி அஞ்சலி திருமணம் பற்ற பேச வந்திருக்கிறார்கள் என்று எண்ண அவர்களோ இந்து இன்பன் திருமணம் பற்றி பேசி சொத்து பத்திரங்களையும் கொடுக்க குணசேகரனும் கிரியும் அதிர்ந்து போனார்கள்.

இன்பன் சொத்தை இந்து பெயரில் எழுதியது இந்துவுக்கே அதிர்ச்சி தான். “இந்து நீ என்ன மா சொல்ற?”, என்று அம்பிகா கேட்க “உங்க பையனால போன வாழ்க்கை திருப்பிக் கிடைச்சா எனக்கு சந்தோஷம் தான்”, என்றாள்.

குணசேகரனும் கிரியும் அவளை அதிர்ந்து பார்த்தார்கள். “அவன் உன்னை கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி மிரட்டினானா?”, என்று கிரி திருப்பி திருப்பி கேட்க “அம்மா அப்பா மேல சத்தியமா அவர் என்னை மிரட்டலை. எனக்கு அவரைக் கல்யாணம் பண்ணிக்க சம்மதம்”, என்றாள் இந்து.

அதற்கு மேல் என்ன சொல்ல என்று தெரியாமல் கிரியும் குணசேகரனும் அவளுக்காக அரை மனதாக சம்மதித்தான். ஆனால் குணசேகரனோ “நான் இந்த கல்யாணத்துக்கு சம்மதிக்கிறேன். ஆனா இந்து கல்யாணம் முடிஞ்ச பிறகு நானும் உங்க வீட்ல உங்க கூட தான் இருப்பேன்”, என்றார்.

அனைவரும் அவரை வியப்பாக பார்க்க “என்ன டா உங்க வீட்ல வந்து டேராப் போட நினைக்கிறேன்னு பாக்குறீங்களா? எனக்கு உங்க மகன் மேல நம்பிக்கை வர வரைக்கும் என் பேத்திக்காக நான் அங்க தான் இருப்பேன். இன்பன் மேல நம்பிக்கை வந்த அப்புறம் நான் அங்க இருந்து கிளம்பிருவேன்”, என்றார்.

அவர் மனது அனைவருக்கும் புரிந்தது. தாத்தாவைக் கட்டிக் கொண்டாள் இந்து. அப்போது “எனக்கும் ஒரு கண்டிஷன் இருக்கு”, என்றான் கிரி.

அனைவரும் என்னவென்று அவனைப் பார்க்க “எங்க அக்கா கல்யாணம் நடக்குற அன்னைக்கே எனக்கும் அஞ்சலிக்கும் கல்யாணம் நடக்கணும். ஏன்னா உங்க மகன் எங்க அக்காவை எதுவும் கொடுமைப் படுத்தக் கூடாதுன்னா அவனோட தங்கை அதாவது உங்க மக எனக்கு பொண்டாட்டியா இருக்கணும்”, என்றான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!