Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒன்று சேர்ந்த நதியும் கரையும்

ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 2 2

“இங்க பாருங்க டி கதையை? இவளை கடத்திட்டு போனாங்களாமே? ஆனா கடத்திட்டு போய் அடி உதைன்னு எதுவும் இவளுக்கு கொடுத்த மாதிரி தெரியலையே? இவ உடம்புல எந்த அடியும் காயமும் இருக்குற மாதிரி எனக்கு தெரியலை டி., உங்க கண்ணுக்கு தெரியுதா?”, என்று பக்கத்து வீட்டுப் பெண் சொல்ல அதிர்ந்து அவளைப் பார்த்தாள் இந்து.

“நைட் நடந்ததுல காயம் எப்படி டி வெளிய தெரியும்? எல்லாம் உள் காயமா இருக்கும் டி. நமக்கு எதுக்கு இந்த பொல்லாப்பு. யார் எப்படி பட்டவங்கன்னு நமக்கு இன்னும் தெரியலை பாத்தியா?”, என்று நக்கலாக சொன்னாள் எதிர் வீட்டுப் பெண். அதைக் கேட்டு மற்ற பெண்களும் சிரிக்க இந்துவுக்கு அவர்களைக் கண்டு அருவருப்பாக அவமானமாக இருந்தது.



Advertisement

அவர்கள் பேசுவதையும் அதை கேட்டு தன்னுடைய பேத்தி கூனி குறுகி நின்றதையும் பார்த்த குணசேகரன்  “நீ உள்ள வா பாப்பா”, என்று சொல்லி அவள் கை பிடித்து வீட்டுக்குள் அழைத்துச் சென்றார்.

“பாக்க ஊமை மாதிரி இருந்துட்டு என்ன வேலை பாத்துருக்கான்னு பாரேன். காலேஜ் போறேன்னு பொய் சொல்லிட்டு பகல்ல போனவ இப்ப நைட் போறா போல? இவளையா அம்புட்டு நல்லவன்னு நினைச்சோம்?”, என்று மற்ற பெண்கள் பின்னால் பேசுவது இந்துவுக்கு தெளிவாக கேட்டது. அவளுக்கு மனசு வெறுத்துப் போனது.

Advertisement

Advertisement

வீட்டுக்குள் சென்றதும் “அக்கா”, என்ற படி கிரி அவளை அனைத்துக் கொண்டான்.

“என்ன தான் மா நடந்துச்சு? உண்மைலே உன்னைக் கடத்திட்டு போய்ட்டாங்களா?”, என்று கேட்டார் குணசேகரன்.

Advertisement

“உண்மைலே நான் சொன்னது தான் தாத்தா நடந்துச்சு. ஆனா இவங்க எல்லாம் ஏன் இப்படி பேசுறாங்க. நான் கையெழுத்து போடலைன்னா இவங்க இப்படி பேசுவாங்கன்னு அவன் சொன்னான் தாத்தா. ஆனா எல்லாரும் என்னை நம்புவாங்கன்னு சொன்னேன் தாத்தா. ஆனா இவங்க….”, என்று சொல்லி அழுதாள் இந்து.

“மனுசங்க இப்படி தான் மா இருப்பாங்க. நாங்க உன்னை நம்புறோம் டா. ஆனா அந்த பொறுக்கி இப்படி செய்வான்னு நாங்க நினைக்கவே இல்லையே. போலீஷ்ல சொல்லுவோமா மா?”, என்று கேட்டார் குணசேகரன்.

“வேண்டாம் தாத்தா. நாம சொன்னா போலீஸ் காரங்களும் நம்மளை நம்ப மாட்டாங்க. நமக்கு சாட்சிக்கு பக்கத்து வீட்ல உள்ளவங்களே வர மாட்டாங்க. அவன் ரொம்ப பெரிய ஆள் தாத்தா. அவனை ஒண்ணுமே செய்ய முடியாது. நம்ம நிலத்தை அடைய இப்படி செய்வான்னு நான் நினைக்கவே இல்லையே தாத்தா”, என்று விரக்தியாக சொன்னாள்.

“அதை விடு இந்து மா. அப்புறம் அங்க வேற ஒண்ணும் நடக்கலைல டா? நைட் முழுக்க நீ பத்திரமா தானே இருந்த?”, என்று பரிதவிப்பாக கேட்டார் குணசேகரன்.

அவரது தவிப்பு அவளுக்கு புரிந்தது. “சத்தியமா இல்லை தாத்தா. என்னைக் கடத்தி உங்க கிட்ட கையெழுத்து வாங்க நினைச்சிருக்கான். அப்புறம் தான் என் பேர்ல பத்திரம் இருக்குறது தெரிஞ்சிருக்கு. கையெழுத்து போடு நைட் முழுக்க நீ ஆக்ஸிடெண்ட் ஆகி ஹாஸ்பிட்டல்ல இருக்குற மாதிரி பண்ணிறேன். இல்லைன்னா வேற மாதிரி நடக்கும்னு மிரட்டினான். நான் கையெழுத்து போட மாட்டேன்னு சொன்னதும் இப்படி எனக்கு கெட்ட பேர் வர மாதிரி பண்ணிட்டான். என்னை நீங்க நம்புவீங்க தானே தாத்தா?”, என்று சொன்னாள் இந்து.

“உன்னை நம்பாம வேற யாரை டா கண்ணு நம்ப போறேன்? நமக்கு மட்டும் ஏன் தான் இப்படி எல்லாம் நடக்குதோ?”

“தெரியலையே தாத்தா, எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு தாத்தா”

“நடந்ததை விடு மா, யாரும் என்னமும் சொல்லிட்டு போகட்டும். நேத்து நடந்ததை உன் மனசுல இருந்து அழிச்சிரு. உனக்கு நாங்க இருக்கோம். சரி நீ முதல்ல போய் குளிச்சிட்டு வா சாப்பிடலாம். நேத்துல இருந்து கிரியும் சாப்பிடலை”, என்று கிரிதரன் சொன்னதும் கிரியின் தலையை வருடி விட்டு குளிக்கச் சென்றாள்.

அன்று முழுவதும் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வில்லை. அறைக்குள்ளே முடங்கி கிடந்தாள் இந்து. குணசேகரன் தான் அவர்களுக்கு உணவு சமைத்து சாப்பிட வைத்தார். அவர் கண்களும் அடிக்கடி கலங்கிக் கொண்டு தான் இருந்தது.

தாத்தாவும் அக்காவும் படும் வேதனையை கிரியால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. அவனுக்கும் அந்த வயதில் கவலைப் படுவதைத் தவிர வேறு என்ன செய்ய என்று தெரியவில்லை. அன்று இரவு உணவை பேருக்கு கொறித்து விட்டு படுத்த இந்துவுக்கு கண்களைக் கரித்துக் கொண்டு வந்தது. தூக்கம் என்பது அவளுக்கு சுத்தமாக வரவில்லை.

நடந்ததையே நினைத்து அழுது கொண்டிருந்தாள் இந்து. சிறிது நேரத்தில் அவளையே அறியாமல் கண்ணயர ஆரம்பிக்க ஒரு ஐந்து நிமிடம் கூட தூங்கியிருக்க மாட்டாள். பயங்கரமான கனவு அவளை அலைக்களித்தது.

ஏதோ அவள் காட்டுக்குள் அகப்பட்டுக் கொண்டதாகவும் கொடுமையான விலங்குகள் அவளை கடித்து குதறுவது போலவும் கனவு வந்து அடுத்த நொடி அலற ஆரம்பித்தாள். கிரியும் குணசேகரனும் ஓடி வந்து அவளை சமாதானப் படுத்தினார்கள்.

“எல்லாத்தையும் மறந்துரு கண்ணம்மா”, என்று சொல்லி குணசேகரன் அவளை தன் மடியில் படுக்க வைக்க நிம்மதியுடன் அவர் மடியில் தலை சாய்ந்தாள் இந்து. “எல்லாத்தையும் மறந்துறனும்”, என்று மனதுக்குள் உருப்போட்டுக் கொண்டே இருந்தாள்.

ஆனால் அவள் என்ன தான் அதை மறக்க நினைத்தாலும் அடுத்த நாளில் இருந்து அக்கம் பக்கத்தினர் அவளை நிம்மதியாக இருக்க விட வில்லை. அடுத்து வந்த நாட்களில் அவள் அனுபவித்த கஷ்டங்கள் பல. அவர்களுடைய கேவலமான வக்கிர பார்வையே அவளுக்கு அருவருப்பைக் கொடுத்தது. அவர்களின் ஜாடைப் பேச்சும், தன்னைக் கண்டால் அவர்களிடம் இருந்து எழும் நக்கல் பார்வையும் அடுத்து வந்த நாட்களில் இந்துவை நிம்மதியாக இருக்க விட வில்லை. பெண்ணுக்கு பெண்ணே எதிரி என்ற உண்மை இப்போது அவளுக்கு புரிந்தது.

பெண்கள் தான் அப்படி என்றால் ஆண்கள் மட்டும் விதி விலக்கா என்ன? “ஏமா கார் இருந்தா தான் என் கூட எல்லாம் வருவியா?….. என் பொண்டாட்டி கடைக்கு போயிருக்கா, ஒரு அஞ்சு நிமிஷம் வீட்டுக்குள்ள வந்துட்டு போறியா?”, என்று சில ஆண்கள் கேட்க அவளுக்கோ பைத்தியம் பிடிக்காத குறை தான்.

அதனால் அவள் யாரையும் எதிர்க் கொள்ள பிடிக்காமல் வீட்டுக்குள் முடங்க அதைக் கண்ட குணசேகரனுக்கு அவள் மனநிலையை எண்ணி பயம் வந்தது.

அவளைத் தேற்ற எண்ணி “இப்படி நீ கோழையா வீட்டுக்குள்ள அடைஞ்சு கிடந்தா அவங்க பேசினது உண்மைன்னு ஆகிரும் டா. இப்படி பேசுறவங்களைக் கண்டு பயப்படாம எதிர்த்து போராடி பாரு மா. உனக்கு நாங்க இருக்கோம்”, என்று சொன்னார் குணசேகரன். அதன் பின்னர் தான் அவருடன் வயலுக்கு செல்ல ஆரம்பித்தாள். ஆனால் ஏற்கனவே அவளை கடத்திய அதே வழியில் செல்ல மிகவும் பயந்தாள்.

அப்போது ஒரு நாள் அவள் வேறு வழியில் வீட்டுக்கு சென்று கொண்டிருக்க அவளை வழி மறைத்து நின்றது ஒரு கார். அதிர்ந்து நிமிர்ந்து அவள் யாரென்று பார்க்க உள்ளே இருந்து இறங்கினான் இன்பன். அவனைக் கண்டதும் “இவனா”, என்று அருவருப்பாக எண்ணியவளுக்கு உடம்பெல்லாம் மிளகாயை அரைத்து பூசியது போல இருந்தது.

“என்ன இந்து மேடம் சவுக்கியமா?”, என்று நக்கலாக கேட்டான் இன்பன். அவனை தீப்பார்வை பார்த்தாள் இந்து.

“பாக்குற பார்வையே நீ நல்லா இல்லைன்னு சொல்லுதே? என்ன உன் சொந்தக்காரங்க எல்லாம் உன்னை நம்பிட்டாங்களா? ஹா ஹா இதுக்கு தான் என் கிட்ட வச்சிக்காதேன்னு சொன்னேன். கேட்டியா? இப்பவாது ஒழுங்கா கையெழுத்து போட்டுரு. இல்லைன்னா அன்னைக்கு நைட் ஒண்ணுமே நடக்கலை. ஆனா இன்னொரு தடவை கட்டாயம் நடக்கும்”,  என்று அவன் சொன்னதும் விதிர்த்து போய் அவனைப் பார்த்தாள் இந்து.

ஒரு நொடி தான் அவள் அதிர்ந்து போனது எல்லாம். அடுத்த நிமிடம் நிமிர்ந்து நின்று அவனை நேருக்கு நேராய் பார்த்தவள் “உங்க வீட்ல யாரெல்லாம் இருக்கா?”, என்று கேட்டாள்.

“இது என்ன சம்பந்தமில்லாம கேக்குறா?”, என்று எண்ணினாலும் “நான், என் அம்மா, அப்பா, என் தங்கை அவ்வளவு தான். ஏன் கேக்குற? எங்க வீட்டுக்கு வேலைக்காரியா வரணும்னு ஆசை இருக்கா என்ன?”, என்று கேட்டான்.

“இன்னைக்கு எனக்கு நீ என்ன செய்யுவேன்னு சொன்னது நாளைக்கு உன் தங்கைக்கு நடந்தா என்ன செய்வ?”, என்று நக்கலாக கேட்டாள்.

“ஏய்”, என்று சீறினான் அவன்.

“கத்தாத, உன் உடன் பிறப்பைச் சொன்னா துடிக்குதோ? உன் தங்கைக்கு ஒண்ணுன்னா பதறிட்டு வர. கேவலம் நிலத்துக்காக கற்பை வச்சு மிரட்டுறியே? நீயெல்லாம் ஒரு மனுஷன். து”

“வார்த்தையை அளந்து பேசு டி”

“இல்லைன்னா என்ன டா பண்ணுவ? நான் ஒரு பொண்ணா இருக்கப் போய் தானே என்னை ஆள் வச்சு கடத்தின? இதுவே நான் ஒரு பையனா இருந்தா இப்படி என்னை மிரட்டுவியா? இங்க பாரு முடிவா சொல்றேன் கேட்டுக்கோ. என் உயிரே போனாலும் நான் அந்த இடத்தை உனக்கு தர மாட்டேன். நீ ஆள் வச்சு என்னைக் கடத்தி கேவலமா எதுவும் செஞ்சாலும் நான் இந்த உலகத்தை விட்டு போவேனே ஒழிஞ்சு உனக்கு பணிய மாட்டேன். ஆனா எனக்கு நீ நடத்துனது கட்டாயம் உன் தங்கைக்கு நடக்கும். ஏன்னா வல்லவனுக்கு வல்லவன் இந்த உலகத்துல உண்டு”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!