Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒன்று சேர்ந்த நதியும் கரையும்

ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 2 3

“ஹா ஹா பயமா இருக்கே. இந்த இன்பனை தோற்கடிக்க ஒருத்தன் இனி என் மூலமா பிறந்து தான் டி வரணும். ஆமா, என் மகன் கிட்ட மட்டும் தான் நான் தோத்துப் போவேன். வேற யாராலயும் என்னை அசைக்க முடியாது. சரி ஒரு டீலிங். இனி உன் கற்பை வச்சு மிரட்டி எல்லாம் நான் நிலத்தை வாங்க மாட்டேன். என்ன பாக்குற? பிராமிசா தான் சொல்றேன். ஆனா உனக்கு ஒரு தம்பியும் தாத்தாவும் இருக்காங்களே. அவங்களை என்ன பண்ணலாம்? அவங்க ஆம்பளைங்க தானே?”, என்று அவன் நக்கலாக கேட்க அவளோ அதிர்ந்து போனாள்.

“என்ன இன்னைக்கே நடத்திக் காட்டட்டுமா?”, என்று கேட்டான் இன்பன்.



Advertisement

“வேண்டாம் வேண்டாம்… அவங்களை எதுவும் பண்ணாத”, என்று பயந்தவாறு சொன்னாள் இந்து.

Advertisement

“பரவால்லயே இந்த டெக்னிக் உடனே வேலை செய்யுதே. இப்படி பதறுற? அன்னைக்கே இதைப் பண்ணிருக்கணுமோ? தேவையில்லாம உன்னைக் கடத்தி கேவலமான வேலை எல்லாம் பாக்க வேண்டியதா போச்சு. இப்ப முடிவா சொல்லு. அவங்க ரெண்டு பேர் உயிர் வேணுமா? இல்லை அந்த இடம் தான் உனக்கு வேணுமா?”, என்று கேட்டான் இன்பன்.

Advertisement

“எங்க கையெழுத்துப் போடணும்?”, என்று வெறித்த பார்வையுடன் கேட்டாள் இந்து.

Advertisement

“குட். ஆனா நீ கையெழுத்துப் போட மாட்டேன்னு நினைச்சு நான் இப்ப பத்திரம் எடுத்துட்டு வரலை. நாளைக்கு உன் கிட்ட கையெழுத்து வாங்கிக்கிறேன். இவ்வளவு ஈஸியா உன் திமிரை அடக்கிருவேன்னு நான் நினைக்கவே இல்லை. நல்லதா போச்சு வேலை முடிஞ்சது”, என்று சொன்னவன் தன்னுடைய பாக்கெட்டில் இருந்த கண்ணாடியை எடுத்து ஸ்டைலாக போட்டு கொண்டே புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.

இந்த அயோக்கியனை தன்னால் எதுவுமே செய்ய முடியவில்லையே என்று எண்ணி இயலாமையாக அவனைப் பார்த்தவளின் கண்கள் கலங்கியது.

வீட்டுக்குச் சென்றதும் ஒரு மூச்சு அழுது தீர்த்தாள். பின் குணசேகரன்  வந்ததும் “தாத்தா நான் ஒண்ணு சொன்னா ஏன் எதுக்குன்னு கேக்காம சரின்னு சொல்லுவீங்களா?”, என்று கேட்டாள்.

அவள் முகத்தில் இருந்த கலக்கம் அவருக்கு பீதியைக் கொடுத்தாலும் “என்ன மா சொல்லு”, என்று ஆறுதலாகவே சொன்னார். கிரியும் அவர்கள் பேசுவதை என்ன என்பது போல கேட்டுக் கொண்டு தான் இருந்தான்.

“நாம நம்ம நிலத்தை அவனுக்கு வித்துருவோம் தாத்தா”, என்று அவள் சொன்னதும் அவளை கூர்ந்து பார்த்தார் குணசேகரன்.

அவருக்கு நடந்த விஷயம் ஓரளவுக்கு புரிந்து போனது. கட்டாயம் தங்களை வைத்து தான் அவன் மிரட்டியிருக்கிறான் என்று அவரால் யூகிக்க முடிந்தது.

அதன் பின் அவளை ஏன் எதற்கு என்று துருவிக் கேள்வி கேட்காமல் “சரி மா நிலத்தைக் கொடுத்துறலாம். ஆனா அதுக்கு அப்புறம் தாத்தா ஒரு விஷயம் சொல்வேன். அதை நீ செய்யணும்”, என்றார்.

“என்ன தாத்தா?”

“நீ உடனே கல்யாணம் பண்ணிக்கணும்”

“தாத்தா”, என்று அதிர்ந்து போனாள்.

“ஆமா டா நீ கல்யாணம் பண்ணிக்கணும்”

“இப்பவே அதுக்கு என்ன அவசியம்?”

“தாத்தா சொன்னா ஏன் எதுக்குன்னு காரணம் கேக்க கூடாது டா”

“சரி தாத்தா”, என்றாள் இந்து.

அடுத்த நாள் மூர்த்தி மற்றும் இன்பன் இருவரும் அவர்களின் வீட்டுக்கே கையெழுத்து வாங்க வந்து விட்டார்கள். இன்பனை எவ்வளவு முடியுமோ அவ்வளவு முறைத்து பார்த்தார்கள் குணசேகரனும் கிரியும். இன்பனோ அவர்கள் முறைப்பை எல்லாம் கண்டு கொள்ளவே இல்லை. அவர்களிடம் கையெழுத்து வாங்குவதிலே குறியாக இருந்தான்.

மூர்த்தி காட்டிய இடத்தில் எல்லாம் கையெழுத்து போட்டாள் இந்து. கடைசியாக அந்த சொத்தில் தங்களுக்கு பங்கு இல்லை என்று எழுதி அதில் குணசேகரன் மற்றும் கிரியிடமும் கையெழுத்து வாங்கினான் மூர்த்தி.

“சீக்கிரம் செட்டில்மெண்ட் பண்ணிட்டு வா மூர்த்தி. நான் கார்ல வெயிட் பண்ணுறேன்”, என்று சொல்லி விட்டு இன்பன் வெளியே சென்று விட்டான்.

அவன் காரில் ஏறப் போக அக்கம் பக்கம் வீடுகளில் இருந்து பல தலைகள் அவனை எட்டிப் பார்த்தது. “ஐயோ பாவம் இவங்க எல்லாரும் இந்த இந்து என்னைத் தான் வச்சிருக்குறதா பேசுவாங்க. இவளுக்கு இது தேவையா? அன்னைக்கே நிலத்தைக் கொடுத்திருந்தா இந்த கெட்ட பேர் எல்லாம் இல்லாம செஞ்சிருக்கலாம். இந்த இன்பனையே திமிரா பேசினால்ல? இவளுக்கு இந்த அவப் பெயர் தேவை தான்”, என்று எண்ணிக் கொண்டே காரில் அமர்ந்தான் இன்பன்.

திட்டினாலும் அவன் நினைவுகள் இந்துவையே சுற்றி வந்தது. அப்போது அங்கே மூர்த்தி வந்து விட காரைக் கிளப்பினான் இன்பன். மூர்த்தி அமைதியாக வரவும் “என்ன ஆச்சு மூர்த்தி?”, என்று கேட்டான் இன்பன்.

“பாவம் சார் இவங்க”

“அன்னைக்கே சொன்னேன், பாவம் பாத்தா தொழில் பண்ண முடியாதுன்னு. இதை இதோட விடு”, என்று சொன்ன இன்பன் மூர்த்தி ஏதோ போல இருக்கவும் அடுத்து எதுவும் சொல்லாமல் அமைதியாக காரை ஆஃபிஸ்க்கு செலுத்தினான்.

ஆஃபிஸ்க்கு வந்ததும் மூர்த்தி அவனிடம் “இந்தாங்க சார் நீங்க கொடுத்த பணம். அந்த பொண்ணு வீட்ல வாங்கலை. வேண்டாம்னு சொல்லிட்டாங்க”, என்று சொல்லி பணத்தைக் கொடுத்தான். அவ்வளவு பணத்தை அவர்கள் வாங்க வில்லை என்றதும் வியப்புடன் பார்த்தான் இன்பன். பின் தோள்களைக் குலுக்கிக் கொண்டான். ஆனால் உண்மை மூர்த்திக்கு மட்டுமே தெரியும்.

அந்த பணத்தைக் கொடுத்த போது அவனை முறைத்து பார்த்த இந்து “இந்த இடத்தை உன் முதலாளிக்கு பிழைச்சு போகட்டும்னு பிச்சையா போட்டதா தான் நான் நினைக்கிறேன். ஒரு நாளும் அவனால என்னை ஜெயிக்க முடியாது. அவன் செஞ்சதுக்கு கடவுள் ஒரு நாள் கூலி கொடுப்பார். அவன் பணத்தை அவன் மூஞ்சுல போய் வீசு. எங்களுக்கு அவன் பணம் தேவையில்லை”,  என்று சொல்லி தான் பணத்தை மறுத்தாள் இந்து.

ஆனால் மூர்த்தி இந்து பேசியதை இன்பனிடம் சொல்ல வில்லை. அதை அப்படியே சொன்னால் இன்பன் மீண்டும் அவளை பழி வாங்க கிளம்பி விடுவான் என்பதால் அதை மறைத்து விட்டான் மூர்த்தி.

அடுத்து வந்த நாட்களில் குணசேகரன் இந்துவுக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பிக்க பல இடங்களில் இந்துவை தவறாக பேசி அவரை அவமானப் படுத்தினார்கள்.

அதுவும் அவரை மாமா என்றெல்லாம் தரக்குறைவாக பேச அந்த வயதான மனிதனுக்கு பேத்தியின் வாழ்க்கை என்ன ஆகுமோ என்ற பயம் அதிகமாக வந்தது. கூடவே அங்கு உள்ளவர்களால் இந்துவின் மனது காயப் படுவதையும் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறார்.

கிரியும் யாராவது இந்துவை தவறாக பேசி விட்டால் அவர்களை கண் மண் பாராமல் அடித்து விட்டே வீட்டுக்கு வருகிறான். இங்கிருந்தால் இவர்கள் யாரும் தங்களை நிம்மதியாக வாழ விட மாட்டார்கள் என்று புரிந்தது குணசேகரனுக்கு.

இதற்கு மேல் இங்க இருக்க கூடாது என்று முடிவு எடுத்தார். தங்கள் இடத்தை பிடுங்கி, ஊர் முன்னிலையில் அசிங்கப் படுத்தி, இந்து என்ற சின்ன பெண்ணின் எதிர்காலத்தையே கேள்விக் குறியாக்கிய இன்பன் மேல் அவ்வளவு ஆத்திரம் வந்தது அவருக்கு.

அன்று இரவே “நாம வேற ஊருக்கு போயிறலாம் இந்து மா. நாம இங்க இருக்க வேண்டாம்”, என்று சொன்னார் குணசேகரன்.

“தாத்தா”, என்று அதிர்வாக அழைத்த படி அவரைப் பார்த்தாள் இந்து. ஏனென்றால் அவளுக்கு திருமணம் செய்து வைக்கப் போகிறேன் என்று சொன்னவர் இப்படிச் சொன்னதும் என்ன நடந்திருக்கும் என்று அவளால் புரிந்து கொள்ள முடிந்தது. ஆனாலும் இந்த ஊரை விட்டுச் சென்றால் அவர்களால் எப்படி வாழ முடியும்? அதனால் அவரையே பார்த்தாள்.

“ஆமா மா, என்ன தான் நான் உனக்கு தைரியம் சொன்னாலும் உன்னால இந்த ஊர்ல உள்ளவங்க பேசுறதை தாங்கிக்க முடியலைன்னு என்னால புரிஞ்சிக்க முடியுது. அது மட்டுமில்லாம கிரி கிட்ட நம்ம எதிர் வீட்டுப் பையன் உன்னைப் பத்தி தப்பா பேசிருக்கான். அவனை கிரி அடி பின்னிட்டான். அது வேற பஞ்சாயத்து. நமக்கு இந்த ஊர் வேண்டாம் மா. நைட் எல்லாம் எவனோ வந்து கதவைத் தட்டுறான். எனக்கு வயசும் இளமையும் இருந்திருந்தா இதுக்கு காரணமான அந்த இன்பனை வெட்டிட்டு ஜெயிலுக்கு போயிருப்பேன். இப்ப எனக்கு இருக்குற ஒரே கவலை. உனக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கணும். கிரிக்கும் ஸ்கூல் முடிஞ்சது. இதுக்கு மேல அவன் இங்கே இருந்தா அவன் வாழ்க்கையையும் பாழாக்கிருவாங்க. எனக்கு உங்க ரெண்டு பேரோட எதிர்காலம் ரொம்ப முக்கியம். நாம இங்க இருந்து போயிரலாம் மா”

“சரி தாத்தா. எனக்குமே இங்க இருக்க பிடிக்கலை தான். ஆனா நாம எங்க போறது? நமக்குன்னு யாருமே இல்லையே?”

“மறந்துட்டியா மா? உன் பாட்டி ஊர் தான் இந்து இந்த ஊர். என்னோட ஊர் மதுரை பக்கம் இருக்கு. அங்க நமக்கு இப்பவும் வீடு தோட்டம் துறவுன்னு எல்லாம் இருக்கு. என் தம்பி தான் என் பங்கையும் சேத்துப் பாத்துக்குறான். இது வரைக்கு அவன் கிட்ட இருந்து நான் எந்த விளைச்சலையும் வாங்கலை. இப்ப நாம அங்க போகலாம். இனி நம்ம இடத்துல நாம உழைச்சு வாழ்ந்துக்கலாம். கிரியை வேற ஊர்ல படிக்க வைக்கலாம்”, என்று சொன்னதும் அவள் “சரி தாத்தா, கிளம்பலாம்”, என்றாள்.

காதல் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!