Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒன்று சேர்ந்த நதியும் கரையும்

ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 3 2

ஒரு நொடி அவன் மனதுக்குள் கல்லை எரிந்தது போல சலனம் உருவானது. அவளையே பார்த்தான். அழகின் மொத்த உருவமாக இருந்தவளை பார்த்த படியே இருந்தான். அதுவும் அந்த கண்கள் அவனை காதலாக நோக்க அவனை அப்படியே தூண்டில் போட்டு அவள் பக்கம் இழுப்பது போல அவனுக்கு தோன்றி வைத்தது.

தான் அவள் பால் ஈர்க்கப் பாடுகிறோம் என்று புரிந்து கொண்ட கிரி அடுத்த நிமிடம் தலையை உதறிக் கொண்டு “இல்லை அஞ்சலி இது சரி வராது. எனக்கு நிறைய கனவு இருக்கு. எனக்கு ஒரு அக்கா இருக்கு. அதுக்கு ஒரு நல்ல வாழ்க்கையை ஏற்படுத்திக் கொடுக்கணும். படிக்கிற வயசுல என்னால காதல் எல்லாம் செய்ய முடியாது. நாம இத்தனை நாள் மாதிரி இனிமேலும் பிரண்ட்சா இருப்போமே?”, என்று நல்ல விதமாக தான் எடுத்துக் கூறினான்.



Advertisement

அவனுடைய தெளிவான பேச்சு அவன் மீதான காதலை அவளிடத்தில் அதிகப் படுத்த தான் செய்தது. “கிரி நான் யார் தெரியுமா? பெரிய பணக்காரங்க வரிசைல தான் எங்க குடும்பமும் இருக்கு. அதுவும் எங்க அண்ணன் இன்பன் பிஸ்னஸ்ல கொடி கட்டிப் பறக்குறார். அப்படி இருக்க எவ்வளவு பணம் வேணும்னாலும் செலவு பண்ணி உங்க அக்காவுக்கு நாம கல்யாணம் பண்ணி வைக்கலாம். ஏன்னா நான் வேற நீ வேற இல்லை. ஆனா என் காதலை மட்டும் ஏத்துக்கோ பிளீஸ்”, என்றாள்.

Advertisement

“காதலை யாரும் தானம் பண்ண முடியாது அஞ்சலி. அது தானா வரணும். அந்த காதல் எனக்கு உன் மேல வரலை. உன் மேல வரலைன்னு சொல்றதை விட நான் அதை பத்தி யோசிக்கவே இல்லைன்னு தான் சொல்லணும். உன் பணம் உன்னோட. என் குடும்பம் வேற. ரெண்டும் எப்பவும் ஒட்டாது. இன்னும் நமக்கு படிப்பு முடிய ஒரு வருஷம் இருக்கு. அது வரை நாம பிரண்ட்ஸாவே இருப்போம். இனி காதல்னு எல்லாம் உளறிட்டு இருக்காத. இந்த விஷயம் நம்மளோட போகட்டும்”, என்று சொல்லி விட்டு எழுந்து சென்று விட்டான் கிரி.

Advertisement

தன்னை வேண்டாம் என்று சொல்லி விட்டு போகும் அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டு அதே இடத்தில் அமர்ந்திருந்தாள் அஞ்சலி. அவன் தன்னை ஏற்றுக் கொள்ள வில்லையே என்ற கோபமும் அவன் தனக்கு இல்லை என்ற ஏக்கமும் அவள் கண்களில் கண்ணீரை வர வைத்தது.

Advertisement

போகும் அவனையே ஏக்கமாக பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தாள். அப்போது நடந்து கொண்டிருந்த கிரியின் மூளையில் மின்னல் வெட்டியது போல அஞ்சலியின் பேச்சு நினைவில் வந்தது.

“இப்ப இவ என்ன சொன்னா? இவ அண்ணன் இன்பன்னா சொன்னா? இன்பன் இவ அண்ணனா?”, என்று எண்ணியவன் மீண்டும் அவளை நோக்கி நடந்தான்.

அவன் மீண்டும் தன்னை நோக்கி வரவும் சந்தோஷமாக அவனைப் பார்த்தாள் அஞ்சலி. “திருப்பி வரான், என் காதலை ஏத்துக்குவானா?”, என்ற எதிர்பார்ப்புடன் அவனைப் பார்த்தாள். அவள் முகத்தில் இருந்த சந்தோஷமும் அவள் கண்களில் இருந்த கண்ணீரும் முதல் முறையாக கிரிக்குள் சலனத்தை விதைத்தது. ஆனால் அதை மறைத்துக் கொண்டு “என்ன அப்படியே உக்காந்திருக்க? வீட்டுக்கு கிளம்பலையா?”, என்று கேட்டான்.

“உனக்கு நிஜமாவே என்னைப் பிடிக்கலையா கிரி? ஆனா நான் மூணு வருஷமா உன்னைத் தான் நினைச்சிட்டு இருக்கேன். என் காதலை புரிஞ்சிக்கோ டா”

“சரி நான் இப்ப உன் காதலை ஏத்துக்குறேன்னு வை…..”

“நிஜமாவா டா?”

“நான் ஒரு பேச்சுக்கு தான் சொல்றேன். நாம ரெண்டு பேரும் லவ் பண்ணுறோம்னு வை அதுக்கப்புறம் நம்ம கல்யாணம் எப்படி நடக்கும்?”

“ஏன் நடக்காது?”

“ஏன்னா நீங்க பணக்காரங்க. நாங்க ஏழைங்க”

“உங்க வீட்ல வந்து என்னால வாழ முடியாதுன்னு நினைக்கிறியா கிரி? இப்பவே எல்லாத்தையும் தூக்கிப் போட்டுட்டு உன் பின்னாடி வரவா?”

“இப்ப என்னை நம்பி என் பின்னாடி வந்தா நீ ஒரு பக்கம், நான் ஒரு பக்கம் உக்காந்து பிச்சை தான் எடுக்கணும்”

“கிரி”

“பிராக்டிகல் அது தான் அஞ்சலி. சரி நாம வேலைக்கு போன அப்புறம் லவ் பண்ணுறோம்னு வை அப்பவும் நம்ம கல்யாணம் நடக்காது”

“ஏன்?”

“ஏன்னா நீ பணக்காரி. அப்புறம் உங்க அண்ணனைப் பத்தி எதுவோ சொன்னீயே? அவர் யாரு?”, என்று கேட்டு அவளிடம் போட்டு வாங்கினான்.

“என் அண்ணன் பேரு இன்பன். அவர் பெரிய தொழில் அதிபர்”

“ஓ அடிக்கடி அரசியல்வாதிங்க கூட நியூஸ்ல வருவாரே அவரா? பேப்பர் டி‌வி எல்லாத்துலயும் கொடி கட்டி பறக்குற பிஸ்னஸ் ஜாம்பவான் உன் அண்ணனா?”

“ஆமா”

“இங்க பாரு அஞ்சலி. எனக்கு படிச்சு முடிக்கிற வரைக்கும் காதலிக்கிற ஐடியாவே இல்லை. வேலைக்கு போன அப்புறம் ஒருவேளை லவ் வந்தா கூட உன் மேல எனக்கு அந்த லவ் வராது”

“கிரி”, என்று அதிர்ந்து போனாள்.

“ஆமா என் வாழ்க்கைல உன்னை மட்டும் காதலியா ஏத்துக்கவே மாட்டேன். ஏன்னா நீ இன்பனோட தங்கச்சி”

“கிரி”

“நான் இந்த உலகத்துல வெறுக்குற ஒரே ஆள் உன் அண்ணன் தான். இனி ஒரு பிரண்டா கூட என் கிட்ட நீ பேசாத. இனியனோட தங்கச்சி என் கிளாஸ்ல தான் படிக்கப் போறான்னு பர்ஸ்ட் இயர்லே தெரிஞ்சிருந்தா நான் இந்த காலேஜே எடுத்துருக்க மாட்டேன். இனி நீ யாரோ நான் யாரோ. இனி என் கிட்ட எக்காரணத்தைக் கொண்டும் பேசுற வேலை வச்சிக்காத. அப்படி பேசினா என்னோட எதிர்காலமே போனாலும் பரவால்லைன்னு சொல்லிட்டு படிப்பை பாதில நிறுத்திட்டு போயிருவேன். எனக்கு என்னோட எதிர்காலத்தை விட அந்த இன்பனோட நிழல் என் மேல படக் கூடாதுங்குறது தான் முக்கியம். இதுக்கு மேல உன் இஷ்டம்”, என்று சொல்லி விட்டு சென்று விட்டான்.

அண்ணன் மேல இவனுக்கு எதுக்கு இவ்வளவு கோபம் என்ற குழப்பத்திலே இருந்தாள் அஞ்சலி. வீட்டுக்கு சென்றதும் “உனக்கு எங்க கிளாஸ்ல படிக்கிற கிரியை தெரியுமாண்ணா?”, என்று கேட்டாள்.

“தெரியாதே மா. எங்க போட்டோ காட்டு பாப்போம்”, என்று இன்பன் சொன்னதும் தன்னுடைய கிளாஸ் போட்டோவை எடுத்து கிரியைக் காட்டினாள். “இந்த பையனை நான் பாத்ததே இல்லையே. ஏன் கேட்ட?”, என்று கேட்டான் இன்பன். ஏனென்றால் இப்போது கிரி பள்ளிப் பருவத்தில் இருப்பது போல எல்லாம் இல்லாமல் கம்பீரமாக வேறு மாதிரி இருந்ததும் இன்பனால் அவனைக் கண்டு கொள்ள முடியவில்லை.

அண்ணனிடம் எதற்கு என்ற உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் அவள் காதலிக்கும் உண்மையையும் சொல்ல வேண்டும். தோற்றுப் போன காதலைப் பற்றி அவனிடம் சொல்ல மனதில்லாமல் “ஒண்ணும் இல்லை. அவன் உன்னை எங்கயோ பாத்துருக்கேன்னு சொன்னான். அதான் கேட்டேன்”, என்று சொல்லி சமாளித்தாள்.

அதன் பின் வந்த நாட்களில் கிரியிடம் எத்தனையோ முறை பேச முயற்சி செய்திருக்கிறாள். ஆனால் அவன் காலேஜை விட்டே சென்று விடுவானோ என்று பயந்து அவனிடம் பேசாமலே இருந்து விட்டாள். இடையில் அருண் வந்து அவளிடம் காதலைச் சொல்ல அவள் அவனிடம் கிரியை விரும்புவதாக சொல்லி விட அருண் கிரியிடம் பேசுவதை நிறுத்தி விட்டான். கிரியும் அதன் பின் அருணைக் கண்டு கொள்ளவே இல்லை. அவன் அஞ்சலியிடமும் ஒரு வார்த்தையும் பேச வில்லை. டூர் போன போது கூட அவளை திரும்பிக் கூட பார்க்க வில்லை. அஞ்சலி தான் அவன் பாராமுகத்தால் சோர்ந்து போனாள். அதுவும் காரணம் தெரியாமல் இருந்த அவனுடைய விலகல் அவளை அதிகம் பாதித்தது.

ஒரு முறை “என் அண்ணன் மேல என்ன கோபம்? அதையாவது சொல்”, என்று அஞ்சலி கேட்டதற்கு கிரி எந்த பதிலும் சொல்ல வில்லை. இன்னொரு முறை “நீ பேசாம இருக்குறது எனக்கு ரொம்ப வலிக்குது கிரி. பிளீஸ் என்னோட காதலை ஏத்துக்கோ”, என்று சொல்லியும் அவள் காதலையும் அவன் ஏற்றுக் கொள்ள வில்லை. கிளாசில் உள்ள மற்ற அனைவருடனும் பேசுபவன் அவளைக் கண்டாலே ஒதுங்கி விடுவான்.

அவனுடைய ஒதுக்கத்தில் ஒரு வருடம் மன வலியை அனுபவித்தாள் அஞ்சலி. ஒரு வழியாக அவர்கள் படிப்பு முடிய அவர்களுக்கு கேம்பஸ் இன்டர்வியூ நடந்தது.

அவர்கள் கிளாசில் இருந்து முப்பது பேர் ஒரே கம்பெனியில் செலக்ட் ஆகியிருக்க அதில் கிரியும் அஞ்சலியும் அடக்கம்.

அஞ்சலியை இன்பன் “வேலைக்கு எல்லாம் போக வேண்டாம். நம்ம ஆஃபிஸ்க்கு வா”, என்று சொல்ல அவளோ கிரிக்காக அவனிடம் போராடி வேலைக்குச் சென்று கொண்டிருந்தாள். அவள் என்ன தான் அடி அடி என்று அடித்தாலும் கிரி என்ற அம்மி நகர கூட இல்லை. அவனுடைய பிடிவாதம் அஞ்சலிக்கு வியப்பையும், அவன் மனதில் என்ன இருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தையும் ஒருங்கே விதைத்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!