Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒன்று சேர்ந்த நதியும் கரையும்

ஒன்று சேர்ந்த நதியும் கரையும் 3 3

கிரியோ முடிந்த அளவு மனக் கட்டுப்பாடுடன் இருந்தான். உண்மையான காதல் கிடைப்பது வரம். ஆனால் கிடைத்தும் அதை அனுபவிக்க முடியாத அந்த நிலையை என்ன சொல்ல? கண்களில் காதலை தேக்கி தன்னைப் பார்க்கும் அஞ்சலியை ஒவ்வொரு முறை அவன் உதாசீனப் படுத்தி விட்டு செல்லும் போதும் அவளை விட அவனுக்கே அதிகம் வலித்தது. உள்ளுக்குள் அவளுடைய காதலால் கிரி என்ற அம்மி தளர்ந்து போய் தான் இருந்தது. ஆனால் இன்பன் என்ற நயவஞ்சகனின் தங்கை என்று மனதில் உருப்போட்டுக் கொண்டே அவளை விலக்கி வைத்தான்.

அவனால் இன்பன் செய்ததையும் அதற்கு தன்னுடைய அக்காவும் தாத்தாவும் அழுததையும் மறக்க முடியவில்லை. “உங்க அக்கா நைட் எவன் கூடவோ தங்கிட்டு காலைல கார்ல வந்து இறங்கினாளே? யார் அவன்னு உனக்கு தெரியுமா? நைட் அங்க என்ன நடந்துச்சாம்?”, என்று கூட படித்தவன் கேட்டதற்கு அவனை புரட்டி எடுத்தது போல அந்த இன்பனையும் புரட்டி எடுக்க ஆசை கொழுந்து விட்டு எரிந்தது அவனுக்கு. சில நேரம் அஞ்சலியை வைத்து அவளுடைய அண்ணனைப் பழி வாங்கலாமா என்று கூட தோன்றியது.



Advertisement

அப்படிச் செய்தால் அவனுக்கும் உனக்கும் என்ன வித்தியாசம் என்று அவளுடைய அக்காவே கேள்வி கேட்பது போல தோன்றி வைத்ததில் அதன் பின் அவன் அப்படி எண்ணவே இல்லை.

Advertisement

நாட்கள் அப்படியே கடக்க இந்துவுக்கு சென்னையிலே ஒரு வேலை வாங்கிக் கொடுத்த கிரி தாத்தாவையும் இந்துவையும் சென்னைக்கே அழைத்து வந்து விட்டான். குணசேகரனுக்கும் வயசு ஆகி விட்டதால் அவரால் வயலில் அதிக நேரம் நிற்க முடியவில்லை.  அதனால் வயலை விற்றுவிட்டு அவர்களின் திருநெல்வேலி மற்றும் மதுரை இரண்டு வீட்டையும் வடகைக்கு விட்டுவிட்டு பேத்தி பேரனுடன் சென்னையில் செட்டில் ஆகி விட்டார். இரு வீட்டு வாடகையும் அவருடைய அக்கவுண்டில் மாதம் மாதம் ஏறி விடும். குணசேகரன் இப்போது சென்னை வாசத்துக்கு நன்கு பழகியும் விட்டார்.

Advertisement

இப்போது அவருக்கு இருக்கும் ஒரே ஒரு மனக் கவலை இந்துவுக்கு திருமணம் செய்வது தான். இத்தனை நாள் கிரி பேரைச் சொல்லி அவள் தப்பிக்க இந்த முறை கிரி முன்னிலையிலே குணசேகரன் அவளது திருமண பேச்சை எடுத்தார்.

Advertisement

கிரியும் அவள் என்ன சொல்வாள் என்று ஆவலாக பார்த்தான். இருவரின் எதிர்பார்ப்பையும் பார்த்த இந்து “அதான் இப்ப கிரி வேலைக்கு போய்ட்டானே தாத்தா. இனி எனக்கு என்ன பிரச்சனை? தாராளமா எனக்கு மாப்பிள்ளை பாருங்க. கல்யாணத்துல எனக்கு சம்மதம் போதுமா?”, என்று சொல்லி சிரித்தாள்.

அவள் அப்படிச் சொன்னதும் இருவருக்கும் சந்தோஷமாக இருந்தது. அடுத்தடுத்த நாட்களில் பேத்திக்கு தீவிரமாக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்தார் குணசேகரன். ஆனால் உள்ளுக்குள் இந்துவுக்கு மட்டும் மனதில் அந்த வலி இருந்து கொண்டே இருந்தது.

“தாத்தா மாப்பிளை பார்த்து எனக்கு கட்டி வச்சாலும் என்னைக் கல்யாணம் பண்ணிக்கப் போறவன் அன்னைக்கு ராத்திரி ஒண்ணுமே நடக்கலைன்னு சொன்னா நம்புவானா?”, என்ற மிகப் பெரிய கேள்வி அவளை பூதாகரமாக துரத்தியது. ஆனால் விடை தான் தெரியவில்லை. அதனாலயே திருமணம் என்றதும் பெண்களுக்கு தன்னால் வரும் பூரிப்பு அவளிடத்தில் வரவே இல்லை.

அது எதனால் என்று புரிந்த குணசேகரன் மற்றும் கிரிக்கு தங்கள் வீட்டுப் பெண்ணை இப்படி ஆக்கி விட்டானே என்ற கோபம் கொழுந்து விட்டு எரிந்தது. ஆனால் அவர்களால் அவனை ஒன்றுமே செய்ய முடியாது. ஏனென்றால் இன்பன் முன்பை விட இப்போது பல மடங்கு உயரத்தில் இருந்தான். அவர்கள் நெருங்க முடியாத உயரத்தில் அவன் இருக்க அவனை அவர்களால் என்ன செய்து விட முடியும்?

கிரியால் அவனை அஞ்சலி என்ற ஏணி கொண்டு நெருங்க முடியும் தான். ஆனால் அவனுடைய வளர்ப்பு அவனை அப்படிச் செய்ய விட வில்லை .

அதே போல இன்பன் வீட்டிலும் அவனது பெற்றோர் அவனை திருமணத்திற்கு வற்புறுத்த ஆரம்பித்தார்கள். “வயசு இருபத்தி ஒன்பது ஆகிருச்சு டா. எத்தனை நாள் தான் கல்யாணம் வேண்டாம் வேண்டாம்னு சொல்லிட்டு இருப்ப?”, என்று கேட்டுக் கொண்டிருந்தாள் அவனது அன்னை அம்பிகா.

“அதானே தொழில்ல மட்டும் முன்னேறினா போதாது மகனே. கல்யாணமும் காலாகாலத்துல நடக்கணும்”, என்று சொன்னார் அவனது தந்தை சீனிவாசன்.

“இப்ப என் கல்யாணத்துக்கு என்ன அவசரம்? அஞ்சலிக்கு முடிச்சிட்டு நான் பண்ணிக்கிறேன்”, என்று சொன்னான் இன்பன்.

“அவளுக்கு இருபத்திரெண்டு தான் டா ஆகுது”, என்றார் சீனிவாசன்.

“அதுக்கென்னப்பா? சீக்கிரம் கல்யாணம் பண்ணினா தான் பொண்ணுங்களுக்கு நல்லதாம். அதான் அவ படிச்சு வேலைக்கு போக ஆரம்பிச்சுட்டால்ல? இப்பவே நல்ல வரனா பாக்க ஆரம்பிங்க”, என்று அவன் சொல்ல அவர்களுக்கு அது சரி என்று பட்டது.

“சரி ரெண்டு பேருக்குமே பாக்க போறோம். யாருக்கு முதல்ல அமைஞ்சாலும் கல்யாணம் தான். அது எங்க முடிவு. அப்புறம் முடியாதுன்னு சொல்லக் கூடாது”, என்று அம்பிகா சொல்ல சரி என்றான் இன்பன். அவன் இந்த அளவுக்கு ஒத்துக் கொண்டதே பெற்றவர்களுக்கு நிம்மதியாக இருந்தது. ஆனாலும் அவன் மனதில் அஞ்சலிக்கு முடித்து விட்டு தான் நான் திருமணம் செய்வேன் என்று தீர்மானம் எடுத்திருந்தான்.

அடுத்த நாளில் இருந்து தீவிரமாக வரன் பார்க்க ஆரம்பித்தார்கள்.  அதன் விளைவாக இவர்களை போலவே பணக்கார குடும்பத்து பெண்ணான மஞ்சுவின் ஜாதகத்துடன் இன்பன் ஜாதகம் பொருந்தி வந்தது. அதன் பின் வேலைகள் துரிதமாக நடந்தது.

இன்பனும் பெற்றவர்களுக்காக திருமணத்திற்கு சம்மதம் என்று சொன்னான். ஆனால் அவனுக்கு அஞ்சலிக்கு முடிக்காமல் திருமணம் செய்ய விருப்பமே இல்லை. அவன் மனது புரிந்த பெற்றோரும் இருவருக்கும் ஒரே மேடையில் முடிப்பதற்காக அஞ்சலிக்கும் வரன் பார்த்தார்கள். அவள் சின்னப் பெண் என்று சொல்லி அவளிடம் யாரும் அது பற்றி பேசவும் இல்லை. அவளோ கிரி பார்வை தன் மேல் எப்போது படும் என்று சூரியனுக்காக காத்திருக்கும் தாமரை போல காத்திருந்தாள்.

அப்போது ஒரு நாள் காலையில் அஞ்சலி வேலைக்கு கிளம்பிக் கொண்டிருக்க அவளது தாய் “அஞ்சலி இன்னைக்கு நீ ஆபீஸ் போக வேண்டாம். லீவ் போடு”, என்றாள்.

“ஹலோ அம்பிகா மேடம், என்ன திடீர்னு இப்படி சொல்ற? கேக்குறப்ப லீவ் தர அது என்ன உன் மகன் கம்பெனியா? லீவ் இல்லை போ மா”, என்றாள் அஞ்சலி.

“என் மகன் தான் உன்னை ஆஃபிஸ்கு வரச் சொல்லி தாங்குறானே? நீ தான் போகாம மாச சம்பளத்துக்கு எவனுக்கோ உழைச்சு கொட்டிக்கிட்டு இருக்க? அந்த பேச்சு எதுக்கு? லீவ் போடுன்னா போடு. இன்னைக்கு ஒரு நாள் சம்பளம் போனா பரவால்ல”

“எதுக்கு மா? நாம எங்கயாவது போறோமா?”

“அதெல்லாம் இல்லை, உன்னை இன்னைக்கு பொண்ணு பாக்க வராங்க. மத்த விவரம் எல்லாம் உனக்கு பையனை பிடிச்சதுக்கு அப்புறம் சொல்றேன். எப்பவும் போல இன்னைக்கும் வாயடிக்காம நல்ல பொண்ணா இருக்கணும் சரியா? அம்மா உனக்கு டிபன் எடுத்துட்டு வரேன்”, என்று குண்டைத் தூக்கிப் போட்டு விட்டுச் சென்றாள்.

அம்பிகா அங்கிருந்து சென்றதும் அதிர்ந்து போய் அமர்ந்த அஞ்சலி உடனே இந்த விஷயத்தை சொல்ல கிரியை அழைக்க எப்போதும் போல் அவன் அவளின் அழைப்பை ஏற்கவே இல்லை.

“இவன் ஒருத்தன். எப்ப பாத்தாலும் இப்படியே பண்ணிக்கிட்டு”, என்று எண்ணிய அஞ்சலிக்கு அடுத்து என்ன செய்ய என்று தெரியாமல் தலை வேதனையாக இருந்தது.

என்ன ஆனாலும் அவளால் கிரியை தவிர வேறு யாரையும் திருமணம் செய்ய முடியாது என்று தெளிவாக புரிந்தது. அதனால் இதை எப்படி நிறுத்த என்று மூளையைக் குடைந்து யோசித்தவள் முகத்தில் சிறு தெளிவு வந்தது.

அடுத்த நொடி தன்னுடைய ஹேன்ட் பேகை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவள் அன்னையின் அருகே சென்றாள்.

கிளம்பி வந்த மகளைப் பார்த்து முறைத்த அம்பிகா “உன்னை எங்கயும் போக கூடாதுன்னு சொன்னேன்ல அஞ்சலி?”, என்று கேட்டாள்.

“அம்மா நீங்க திடீர்னு சொன்னா எப்படி? நான் எப்படி இருக்கேன் பாருங்க. சின்னதா ஒரு பேஷியல் மட்டும் பண்ணிட்டு வரேனே?”, என்று குழைந்த குரலில் கேட்டாள்.

“என் தங்கமே இதுக்கா இவ்வளவு தயங்குற? தாராளமா போயிட்டு வா டா. என் பொண்ணுக்கு இப்பவே கல்யாணக் களை வந்துருச்சு”, என்று சொல்லி அம்பிகா அனுமதி கொடுத்ததும் காரைக் கொண்டு போகச் சொன்ன தாயிடம் மறுத்து விட்டு தன்னுடைய வண்டியை எடுத்துக் கொண்டு சிட்டாக பறந்தாள்.

அவள் வண்டி நேராக சென்று நின்றது கிரியின் வீட்டில் தான். வேலைக்கு கிளம்பி நின்று வெளியே வண்டியை துடைத்துக் கொண்டிருந்த கிரி யாரோ வரும் அரவம் உணர்ந்து தலையை திருப்பி பார்த்தான். அங்கே அஞ்சலி நிற்க சத்தியமாக அவளை அவன் எதிர் பார்க்கவே இல்லை.

காதல் தொடரும்….

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!