Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

ஒளி சிந்தும் இரவு

ஒளி சிந்தும் இரவு 11.1

அத்தியாயம் 11

   காலை ஏழு மணிபோல் தனதறையில் குளித்து வெளியே வந்தவர், பேத்தியிடம் பேசியிருந்து எட்டு மணிக்கு பள்ளிக்கு அனுப்பி, இன்ஸ்டியூட்டிற்கு கிளம்புவதாய் கல்பனாவிடம் சொல்ல, “ஏண்ணா இப்படி பண்ற? பசங்ககிட்ட பேசலாம்ல?” என்றார் ஆதங்கமாக.

    “இரண்டு நாள் பேசி என்னாகப்போகுது கல்பனா? ஒரு வாரமோ, பத்து நாளோ இருப்பானுங்க, அதுக்கப்புறம் அவனவன் இஷ்டத்துக்கு கிளம்பப்போறானுங்க. இனி போன்ல கூட தொல்லை பண்ணமாட்டேன்” என்றார் கோபமாக.

    “நான் செய்தது தப்புதான்ப்பா, ஆனாலும் நான் தவறான வழியில போகல. என்னையே என்னால மன்னிக்க முடியல. என்ன செய்யனு புரியாம வெளில கிளம்பிட்டேன். ஆனா என் வேர் இங்கதானு உங்களுக்கு புரியும்தானே?” என்று பாவமாக கலங்கி நின்றான் சரவணன்.



Advertisement

    “கொஞ்ச நாள் பழகினவ ஏமாத்திட்டானு நீ வெளில போய்ட்ட, ஒரு பிள்ளையை பெத்துட்டு பொண்டாட்டி போய்ட்டானு அவன் போய்ட்டான். என் கூட முப்பத்தஞ்சு வருசம் குடும்பம் நடத்திட்டு என் பொண்டாட்டியும்தான்டா நிர்கதியா என்னை விட்டுட்டு போய்ட்டா. நானும்  பரதேசம் போகட்டுமா?” என்று மாதவன் கத்த, அன்பரசு வந்தான் வீட்டிற்கு.

    அன்பரசை கண்டதும் மாதவன் முகம் மேலும் இறுக்கமானது. எப்பொழுதும் தன்னை ஆவலோடு வரவேற்கும் தந்தைக்கு என்னாச்சு என யோசித்தவன், என்னாச்சு என்பதாய் சுகந்தியிடம் புருவம் உயர்த்தினான் அன்பரசு. தெரியல என்பதாய் உதட்டை பிதுக்கினாள் சுகந்தி.

    சத்யனும் சரவணனும் வருவார்கள், அவர்களிடம் பேசவேண்டாம் என தந்தைக்கு அறிவுறுத்த எண்ணி நேற்றே போன் செய்தான் அன்பரசு. ஆனால் மாதவன் அன்பரசின் அழைப்பை ஏற்கவில்லை. எதோ வேலையாக இருப்பார் என்று சாதாரணமாக நினைத்துக்கொண்டது தவறென தற்போது உணர்ந்தான்.

Advertisement

     ஆனாலும் தன்மேல் என்ன கோபம் என யோசித்தவனுக்கு ஏதும் விளங்காமல் போகவே, சத்யன் சரவணனை பார்த்தான். சரவணன் முகம் சிறுவனைப் போல் பாவமாய் காட்சியளிக்க, சத்யன் முகம் சற்று தெளிவாய் இருந்தது.

Advertisement

    “ஏன்டா அங்கையே நிற்குற? உள்ள வா” என அழைத்த சுகந்தி, எதாவது பண்ணுடா என்ற பார்வை பார்த்தாள் அன்பரசை.

   சரி என்பதாய் தலையசைத்து உடமைகளோடு அறைக்குள் சென்று அவசரக்குளியல் போட்டு பத்து நிமிடத்தில் வெளியே வந்தான்.

    ரங்கசாமியிடம் முல்லையை மறுத்த பின்னே மனதே சரியில்லை மாதவனுக்கு. பெரியவனும் சின்னவனும்தான் அவனவன் இஷ்டத்திற்கு இருக்கிறான்கள் என்றால் இவனும் வாழ்வை பற்றி யோசிக்காமல் இருக்கிறானே என்று அன்பரசின் மேல் கோபமானது.

Advertisement

   தந்தையை ஆழ்ந்து பார்த்தவன், பின்னே சத்யனிடம், “கல்யாணம் செய்துக்கும் எண்ணமில்லைனா வீட்டுக்கு வரக்கூடாதுனு சொன்னேன்தான? எதுக்குடா வந்த?” என ஆரம்பித்து வைத்தான் முறைப்போடு.

    அப்பா இருக்குற மூட்ல இது இப்போ தேவையா என்பதாய் சத்யன் அன்பரசை பார்க்க, கண்களால் உற்சாகம் கொடுத்து, “பதில் சொல்லுடா” என்றான் கோபம்போல்.

   மாதவன் வேதனை தாளமுடியாமல், “என்னாச்சுனு சொன்னாதான மாமா தெரியும்?” என்றாள் சுகந்தி.

   “பெரியவன் சின்னவனைப் பத்தி இனி நான் பேசப்போறதில்ல” என கோபமாய் சொல்லி, அன்பரசை காண்பித்து, “இவனாவது என் பேச்சை கேட்பான். என் மனசை புரிஞ்சிப்பானு நினைச்சேன். ஆனா இவனுங்க மூனுபேரும் ஒரே புத்தியுள்ளவனுங்கனு இப்போதான் புரியுது” என்றார்.

   “நான் என்னப்பா செய்தேன்?” என தந்தையருகே வந்தான் அன்பரசு.

   “நல்ல இடம் வந்துருக்குனு சொன்னேன், யாருனாவது கேட்டியா? கல்யாணம் இப்போ பண்ணாம எப்போ பண்ணுவ?” என கடிந்து, “கல்யாணத்தை பத்தி உன்கிட்டயாவது உரிமையா கேட்கலாமா? இல்ல நீயும் இவனுங்க மாதிரி கல்யாணம் உன் சொந்த விசயம்னு சொல்லுவியா?” என்றார் ஆதங்கமாக.

   “என்கிட்ட உனக்கில்லாத உரிமையாப்பா?” என பிணைப்பாய் கேட்டு, நாளையோ நாளை மறுநாளோ சத்யன் திருமணம் நடந்திடும் என்ற நம்பிக்கையில், “இவ்வளோ ஃபீல் பண்ற அளவுக்கு யார் எனக்கு பொண்ணு கொடுக்குறேனு சொன்னாங்க?” என்றான் விசாரணையாக.

   “நீ கல்யாணம் பண்ணிக்கிறேனு உறுதியா சொல்லு, பொண்ணு யாருனு சொல்றேன்”

  “இதெல்லாம் அநியாயம்ப்பா. நீங்க நல்ல பொண்ணாதான் பார்த்திருப்பிங்க. குணத்துல நல்லவளா இருந்து, தோற்றத்துல நம்ம சுகந்தி சுண்டெலிமாதிரி இருந்தா எனக்கெப்படி சூட் ஆகும்?” என்றான் பாவமாக.

    “என்னை எதுக்குடா இழுக்குற? சுண்டெலியா நானு? அஞ்சடி உயரம் பொண்ணுங்களுக்கு போதுமான உயரம்தான்” என முறைத்தாள் சுகந்தி.

   ஷப்பா… அன்பரசு கல்யாணத்துக்கு சம்மதிக்கலன்றதுதான் பிரச்சனையா என ஆசுவாசமான சத்யன், “அதானே? என் எருமையை ஏன்டா இழுக்குற?” என்றான் கோபம் போல்.

   “எருமை கிருமைனு பேசுற வேலை வேணாம்னு சொல்லு அன்பு… சின்ன வயசுல மாதிரி இப்போவும் சொன்னா பார்க்குறவங்க தப்பா நினைப்பாங்க” என கண்டித்து,

   “பொண்ணை பார்த்தா உனக்கு கண்டிப்பா பிடிக்கும். இவன் கல்யாணம் செய்துக்காம நான் செய்துக்கமாட்டேன்ற வெட்டி சபதத்தை விட்டுட்டு உன் வாழ்க்கையைப் பத்தி யோசிக்கிறதா இருந்தா சொல்லு. பொண்ணு யாருனு சொல்றேன், இல்ல இனி எவன்கிட்டயும் பேசமாட்டேன்” என்றார் முடிவாக.

   அன்று ரங்கசாமியின் முகம் வாடியது இன்று நினைத்தாலும் தாளமுடியவில்லை மாதவனால். கடந்த பத்து நாள்களாக அவரின் காம்ப்ளக்சிற்கு கூட ரங்கசாமி வராதது பெரும் வருத்தத்தை உண்டாக்கியது மாதவனுக்கு.

   சத்யன் திருமணம் செய்வான் என்ற நம்பிக்கையும் இல்லை. பெரியவனை கொண்டு அன்புக்கு கிடைக்கும் நல்ல வாய்ப்பை இழந்திடக்கூடாது என்றும், திரைத்துறையில் இருக்கிறான். எதாவது ஓர் நடிகையை பிடித்திருக்கிறது என்றுவிட்டால் என்ன செய்வது என்ற பயமும் இருக்க, இன்று அன்பரசை திருமணத்திற்கு சம்மதிக்க வைக்கும்  எண்ணத்தில் உறுதியோடிருந்தார் மாதவன்.

     தந்தை மனம் வலிக்கும் எனப்புரிந்த போதும், இன்றைக்கு விட்டால் சுகந்தியை சம்மதிக்க வைக்க முடியாதென்று, “என் கல்யாணத்தை விட எனக்கு என் பொண்ணுதான்ப்பா முக்கியம்” என்றான் உறுதியாக.

    “அன்பு” என சுகந்தியும் கல்பனாவும் பதற, வேகமாய் எழுந்த மாதவன் இன்ஸ்டியூட்டிற்கு கிளம்ப எத்தனிக்க, “நில்லுங்கப்பா” என தந்தை கைப்பிடித்தான் சத்யன்.

    “விட்றா, எல்லாம் உன்னாலதான். என்னைத் தொடக்கூட உனக்கு உரிமை கிடையாது” என கையை உதறினார் கோபமாக.

    “என் அப்பாகிட்ட எனக்கான உரிமையை நானே எடுத்துப்பேன்” என இலகுவாய் சொல்லி மாதவன் முன்னேற முடியாமல் வழிமறைத்து நின்றவன், “நான் கல்யாணம் செய்துக்கிறேன்” என்றான்.

    பொலிவை காட்டிய மாதவன் முகம் சில நொடியிலேயே மாறியது. மகனை நம்பாத பார்வை பார்த்து, “உன் பேச்சை நம்பிலாம் அன்பு கல்யாணம் செய்துக்கமாட்டான். நீ சொல்றது உண்மைனா கல்யாணம் முடிக்காம குவைத் கிளம்பமாட்டேனு உன் அம்மா முன்ன சத்யம் பண்ணு. ஒரே மாசத்துல பொண்ணு பார்க்குறேன்” என்றார்.

   அன்னை புகைப்படத்திற்கு முன்னே சென்று படத்திலுள்ள அன்னையின் தலைமீது கை வைத்தவன், “சத்யமா கல்யாணம் செய்துக்கிறேன்” என்றதும் சுகந்தி கல்பனா மாதவன் முகம் அதீத சந்தோசத்தை காட்டியது.

   “ஒரு மாசம் என்ன? பொண்ணுக்கு சம்மதம்னா இன்னைக்கே கூட பண்ணிக்கிறேன், ஆனா நான் சொல்ற பொண்ணை எனக்கு கட்டி வைங்க. இல்ல, கல்யாணத்தை பத்தி ஜென்மத்துக்கும் யோசிக்கமாட்டேன்” என்றான்.

   மாதவன் அதிர்வோடு பார்க்க, “ஆமாம்ப்பா, இந்த உரிமையை மட்டும் உங்களுக்கு என்னால கொடுக்க முடியல. இந்த முறையும் நானே முடிவு பண்ணிட்டேன்” என்றான்.

    பெருகிய சந்தோசமெல்லாம் வடிந்திட, சுகந்தி “என்னடா சொல்ற? வேலை செய்யிற இடத்துலயே பார்த்துட்டியா?” என்றாள் அதிர்வோடு.

   “பொண்ணு சம்மதிச்சா இன்னைக்கே கல்யாணம் செய்துக்குறேனு சொல்றேன், குவைத்ல பார்த்திருந்தா இன்னைக்கு எப்படிடீ கல்யாணம் செய்துக்க முடியும்? லூசு”

   எப்படியோ திருமணமானால் சரிதான் என்று சந்தர்ப்பத்தை நழுவ விடாமல், “யாரைப்பா பார்த்து வச்சிருக்க?” என்றார் கல்பனா.

   தந்தையை பார்த்தவன், பின்னே சுகந்தியை பார்த்தவாறு, “சுகந்தியைதான்த்த கல்யாணம் செய்துக்க முடிவு பண்ணியிருக்கேன்” என்றதும் அதிர்வில் உறைந்து நின்றாள் சுகந்தி.

    கல்பனாவிற்கும் மாதவனுக்கு சந்தோசம் தாளமுடியாமல் போக, இருவரின் கண்களும் கண்ணீரை வெளியனுப்பியது. “ஏன்ப்பா அத்தையும் நீங்களும் அழறிங்க? தப்பா ஏதும் கேட்டுட்டேனா? சுகந்தியை எனக்கு தரமாட்டிங்களா?” என்றான் இறங்கிய குரலில்.

    மகன் வாழ்வு சரியாவதோடு சுகந்தியின் வாழ்வும் அல்லவா சரியாகும்… இப்படி வாய்ப்பை மறுப்பாரா மாதவன்? ஆனாலும் தங்கை மகள் கண்ணீரோடு நின்றிருப்பதால் வற்புறுத்த மனம் வராமல், என்ன சொல்வாளோ என்று பதிலின்றி பதைத்து பார்த்திருந்தார்.

   “சத்யா நிஜமாத்தான் சொல்றியா? உன்னோட சுகந்தி பெரியவ, இந்த கல்யாணம் நடந்தா ஆளாளுக்கு வாய்க்கு வந்தபடி பேசுவாங்க” என உணர்ச்சிப்பெருக்கோடு கல்பனா கேட்க, என் விருப்பம் முக்கியமில்லையா என்ற அதிர்வோடு “ம்மா” என பதறினாள் சுகந்தி.

   சுகந்தியை அறிந்தவனாக, அடுத்து பேச விடாமல், “யார் என்ன சொன்னா என்னத்த? எனக்கு பிடிச்சிருக்கு, வேற இடத்துல பார்த்தா வரவ என் மகளை சுகந்தி மாதிரி பார்த்துப்பாளா?” என்றான்.

    மாதவன் சுகந்தியை யாசகமாய் பார்க்க, சுகந்தி அன்பரசை பார்த்தாள் தவிப்போடு. சுகந்தியருகே சென்றவன், அவளின் கையை பிடித்துக்கொண்டு, “எனக்கு நீயும் முக்கியம், சத்யனும் முக்கியம் சுகந்தி. சத்யன் அவன் விருப்பத்தை சொல்லிட்டான். உன் விருப்பத்தை நீ சொல்லு. உன்னை கட்டாயப்படுத்தமாட்டேன்” என்றான்.

   “என்னை வீட்டுக்கு கூட்டிட்டு போ” என்றாள் கண்ணீரோடு.

   முன்புபோல் திருமணத்தை மறுக்காமல் வீட்டிற்கு அழைப்பதிலேயே சற்று நிம்மதியானவன், அப்பாவும், அத்தையும் சந்தோசத்தை வெளிப்படுத்துவதே சுகந்தி மனதை கரைக்க போதுமானது என, “சரி அழாத” என்று கண்களை துடைத்து விட்டான் அன்பரசு.

   சத்யன் விருப்பம் சொன்னதும் மாதவன் முகத்தின் சந்தோசத்தை பார்த்தவளுக்கு பேச்சு வரவில்லை. ஆனால் சம்மதிக்கவும் முடியாமல், “என்னால முடியாதுடா” என்றாள் வேதனையோடு.

   “அவ விருப்பத்துக்கு சப்போர்ட் பண்ணாத அன்பு” என அதட்டிய கல்பனா “சத்யன் உன்னை கட்டிக்க சம்மதிச்சதே எனக்கு பூர்வ ஜென்ம புண்ணியம் போல இருக்கு. இந்த கல்யாணம் நடந்தா என் கவலையும் என் அண்ணன் கவலையும் மொத்தமா தீர்ந்திடும் சுகந்தி” என்றார் யாசகமாக.

  “அவன் எப்படிம்மா என்னை இப்படி நினைச்சான்?” என்றாள் கேவலோடு.

  இதற்குமேல் சுகந்தியின் வேதனையை பார்க்க முடியாமல் சத்யன் உள்ளே சென்றிட, கல்பனா “ப்ச் அழாத சுகந்தி, அவனுக்கு உன்மேல உரிமையிருக்கு. இதுல ஏதும் தப்பில்லம்மா, விருப்பம் சொன்னாலும் உன் அழுகையை சகிக்க முடியாம உள்ள போய்ட்டான். சத்யனை உன்னை கஷ்ட்டப்படுத்தமாட்டான்” என தேற்ற, அப்பொழுதும் சம்மதிக்க முடியாமல் தவித்தாள் சுகந்தி.

   “பேசிட்டு வரேன்” என்று அன்பரசு உள்ளே செல்ல, “இதுக்கு மேல அவளை கட்டாயப்படுத்த முடியாதுடா. அது மகாபாவமும் கூட. அவளை கூட்டிட்டு போய் வீட்டுல விட்டுடு” என்றான் சத்யன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!