கடம்பன் குன்று 8
கடம்பன் குன்று – 8
மன்னர் நெடுவேள் ஆவி அர்த்தமான புன்னகையுடன் அங்கயற்கண்ணியின் நாட்டியத்தை ரசித்தபடி அமர்ந்திருந்தார். அவரது இடது பக்கவாட்டில் அமர்ந்திருந்த ராணி பவித்ரமங்களாம்பிகை தனது எண்ண ஓட்டத்தை முற்றிலுமாக முகத்திரை இட்டு மறைத்துக் கொண்டவள், எந்த விதமான உணர்ச்சிகளையும் காட்டாது அமைதியாக உடன் அமர்ந்திருந்தாள்.
மங்களாம்பிகை முகம் உணர்ச்சிகள் தொலைத்திருந்த பொதிலும், மனமொ எரிமலை குமிழ் போல கொதித்துக் கொண்டிருந்தது.
Advertisement
“இவள் என்ன ஊரில் இல்லாத அழகியா? நாட்டில் எத்தனை தேவதாசிகள் நடனம் ஆடுகின்றனர். அவர்களிடம் இல்லாத என்ன கவர்ச்சி இவள் நாட்டியத்தில் காணக்கிடைக்கிறது என்று மக்கள் இவளைக் கொண்டாடுகின்றனர். மதிகெட்ட மக்களைக் கூட மன்னித்துவிடலாம். ஆனால், நாடாளும் மன்னன் ஒரு தேவதாசியின் கட்டுப்பாட்டில் இயங்குவதென்பது எத்தனை துர்பாக்கியம்” என்று தன் உள்ளக்குமுறலை கட்டுப்படுத்திக் கொண்டார்.
அவரது கண்கள் அரைமண்டியில் அபிநயம் பிடித்துக் கொண்டிருந்த அங்கையற்கண்ணியின் ஆட்டத்தில் பெருமளவு தொலைந்து போயிருந்த போதிலும், அதனை ஒப்புக் கொள்ளும் மனம் தான் பவித்ரமங்களாம்பிகையிடம் இருக்கவில்லை.
அங்கைக்கு அங்கே இருந்த ஒருவருமே கண்களுக்குத் தெரியவில்லை.மனம் முழுக்க இறையொளி நிறைந்திருக்க, “அருள் தர மாட்டாயா குமரா?” என்று கெஞ்சிய விழிகளுடன் வேரெந்த நினைவுகளும் இல்லாமல் நடனமாகிக் கொண்டிருந்தாள்.
Advertisement
அவளது நிர்கதியான நிலையைக் கண்டும் கூட மங்களாம்பிகைக்கு அவள் மீதிருந்த பொறாமை கொஞ்சமும் குறையவில்லை. “போயும் போயும் ஒரு தேவதாசிக்காக என்னுடன் எத்தனை வாக்குவாதம் செய்கிறார் மன்னர். அப்படி என்ன இந்த ஆயர்குடியில் இல்லாத முருக பக்தர்களா? இவளுக்காக இத்தனை ஆண்டுகளாக கடைப்பிடித்து வரும் மரபுகளை மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மன்னர் நிர்பந்திப்பது ஏன்? நிச்சயம் என்னால் மன்னரது கோரிக்கையை ஏற்க இயலாது. எத்தனை சண்டைகள் வந்தாலும் அதை எதிர்கொள்ள நான் தயாராகத்தான் இருக்கிறேன்.” என்று மனதில் எண்ணிக் கொண்டிருந்தார் மங்களாம்பிகை.
Advertisement
அவரது இந்த கோபத்திற்கான காரணம் நியாயமானதும் கூட.
சில தினங்களுக்கு முன்பு, மங்களாம்பிகைக்கும், மன்னர், நெடுவேல் ஆவிக்கும் இடையே நடந்த சொல்லாடல் மங்களாம்பிகையின் மனதில் நாடகம் பார்ப்பது போல ஓடிக் கொண்டிருந்தது.
எப்பொழுதும் மந்திரிகளுடன் கலந்து ஆலோசித்து விட்டு நள்ளிரவு தாண்டிய பிறகே, அவர்களது சயன அறைக்கு திரும்பும் மன்னர், அன்று அதிசயமாக வெகு சீக்கிரமே வந்து விட்டிருந்தார்.
Advertisement
அதுமட்டுமல்லாமல், என்றும் இல்லாத திருநாளாக, மகிழ்ச்சியுடன் மங்களாம்பிகையிடம் உரையாடவும் செய்தார். மங்களாம்பிகையின் தம்பி தமக்கை பற்றியும் விசாரித்து தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டினார்.
சிறிது நேரம் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்த விவாதம் சற்றும் சம்பந்தம் இல்லாமல் அங்கயற்கண்ணியின் பால் வந்து நின்றிருந்தது. “அங்கையின் பேச்சை எடுத்தாலே உனக்கு ஏன் இவ்வளவு கோபம் தோன்றுகிறது மங்களா? அந்தப்புரத்தில் இருக்கும் மற்ற தேவதாசிகளைப் போல அவள் கிடையாது என்று உன்னிடம் நான் பலமுறை சொல்லிவிட்டேன். ஆனாலும் நீ உன் கோபத்தை கொஞ்சம் குறைத்துக் கொள்ள மாட்டேன் என்கிறாய்” என்று அமைதியாக வினவினார் மன்னர் நெடுவேள் ஆவி.
உண்மையிலேயே அங்கயற்கண்ணியின் பெயரைக் கேட்டவுடனேயே மங்களாம்பிகை அவளையும் அறியாமல் மனதில் ஒரு குரோதமும் ஆத்திரமும் தோன்றத்தான் செய்தது.
எத்தனை முயன்றும் முகத்தில் உணார்வுகளைக் காட்டக் கூடாது என்று எண்ணிய பொழுதும் தன்னைக் கட்டுப்படுத்திக் இயலவில்லை. மன்னர் அங்கையைப் பற்றி பெருமையாகப் பேசியதைக் கேட்க மங்களாம்பிகையால் பொறுமை காக்க இயலவில்லை.
“ அவளைப் பற்றிய பேச்சை இப்பொழுது ஏன் எடுக்கிறீர்கள் சுவாமி? தாங்கள் என்னுடன் சிரித்து பேசும் சமயமே வெகு சொற்ப்பம் தான். அவ்வேளையில் கூட அவளைப் பற்றித் தான் பேச வேண்டுமா?” என்று அங்கலாய்ப்புடன் கூறினார் மங்களாம்பிகை.
ராணியின் முக பாவனையை கண்ட மன்னருக்கு சிரிப்புதான் எழுந்தது. “ஏதேது ராணிக்கு அங்கயற்கண்ணியின் மீது பொறாமை போலும். அதனால்தான் அங்கையின் பெயரைக் கேட்டாலே உனக்கு பிடிக்காமல் போகிறதோ?” என்று மன்னர், ராணியை சீண்டும் விதமாகவே வினவினார்.
“பொறாமையா? அதிலும் சாதாரண ஒரு தேவதாசி பெண்ணின் மீதா? அவளைக் கண்டு நான் பொறாமை கொள்வதாவது? என்ன அறிவீனம்?” என்றார் மங்களாம்பிகை விட்டுக் கொடுக்காமல்.
“அப்படியென்றால் அங்கையின் கோரிக்கையை நீ நியாயமாக ஆலோசிக்காமல், கோரிக்கை அவளுடையது என்ற ஒரு காரணத்தினாலேயே அதை நிராகரிக்கிறாய் என்று எனக்குத் தோன்றுவது ஏனோ தேவி?”
“அவள் கோரிக்கை நியாமற்றது. அதனால் அதை நிராகரிக்கிறேன். இதற்கு வேறு எந்த முகாந்திரமும் இல்லை.”
“மங்களா! அவள் கோரிக்கையை நீ என் மனைவி என்ற முறையில் மறுக்கலாம். ஆனால், இந்நாட்டின் ராணி என்ற பதிவியில் இருக்கும் நீ இக்குடிகளின் நன்மையை மட்டுமே முதன்மையாகக் கொண்டு முடிவுகள் எடுக்க வேண்டும். அதுவே தர்மாகும்.”
“எங்கோ மலை நாடுகளில் இருந்து தஞ்சம் புகவந்த ஒருத்தி எப்படி என் பூர்வகுடியாவாள். அதிலும், நியாயமற்ற, மரபு மீறிய அவள் கோரிக்கைக்காக தாங்கள் இவ்வளவு தூரம் பிரயத்தனப்படவும் வேண்டுமா?”
“உன்னைப் பற்றி நன்கு அறிவேன் மங்களா. மனதால் மற்றவருக்கு துன்பம் இளைக்கக் கூடியவள் நீ அல்ல. உனக்குக் கிட்டும் துர்போதனைகள் காரணமாகவே நீ இவ்வாறெல்லாம் பேசுகிறாய். அங்கையும் உன்னைப் போன்றவள் தான். மனதால் மிகவும் தூய்மையானவள், அவளை நீ விரோதியாகப் பாவிக்கும் அளவிற்கு அவள் ஒரு பாவமும் செய்யவில்லை மங்களா” என மிக மென்மையான முறையிலேயே பேசினார் மன்னர் நெடுவேல் ஆவி.
“என் விரோதி ஆவதற்கு கூட தகுதி இல்லாத ஒருத்தியை பற்றி தாங்கள் இவ்வளவு பேசுவதால் தான் நான் கோபம் கொள்ள வேண்டியிருக்கிறது என்பது உங்களுக்கு புரிகிறதா இல்லையா.”
“அங்கை சிறந்த முருக பக்தை. மிகவும் தூய்மையானவன். உத்தமி தன் மனதார அந்த இறைவன் ஒருவனையே துணையாக பாவித்து தன் வாழ்நாள் முழுவதையும் இறைவனுக்காக சமர்ப்பணம் செய்து வாழ்ந்து வருபவள். அவளது பக்தி என்னை பல சமயங்களில் மெய்சிலிர்க்க வைத்து இருக்கிறது தெரியுமா மங்களா? அப்படிப்ப் அட்ட முருக பக்தையின் ஆசையத் தீர்க்க வேண்டும் என்று நான் எண்ணுவது தவறாகத் தோன்றவில்லை.”
“பக்தியாம் பெரிய பக்தி! நானும்தான் நாள் கிழமை தவறாமல் விரதம் இருக்கிறேன். தங்களுக்கு உடல்நலக் கேடு எதுவும் வந்துவிடக்கூடாது என்று அனுதினமும் தங்களுக்காக மனமுருக கந்தனிடம் வேண்டிக் கொள்கிறேன். அதெல்லாம் உங்கள் கண்களில் தெரியவில்லை தானே” என அமர்ந்திருந்த மஞ்சத்திலிருந்து எழுந்து கொண்டார் மங்களாம்பிகை.
ராணியின் கோபத்தைக் கண்டு மன்னருக்கு, ஆற்றாமையே எழுந்தது. மன்னர் எவ்வளவு புரியவைக்க முயன்று, புரிந்து கொள்ள முயற்சி கூட செய்யாமல் மங்களாம்பிகை நடந்து கொள்வது கண்டு ராணியின் மீது வெறுப்பு தட்டியது.
மன்னர் தன்னைச் சாமாதப்படுத்துவார் என்று நினைத்து கோபத்துடன் பேசிய மங்களாம்பிகை, மன்னர் எதுவும் பேசாமல் மெளனம் காக்க, இன்னமும் ஆத்திரமானார்.
கணவர் சமாதானம் செய்யாமல், அவளது கோபத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருப்பது கண்டு உக்கிரமான மங்களாம்பிகை, என்ன பேசுகிறோம் என்பதை உணராமல் போய்விட்டிருந்தார்.
“இப்போது கூட ஆகம விதிகளை மாற்ற நீங்கள் அமரப்போகும் யாகத்தில் உங்கள் மனையாளும் இருக்கவேண்டும் என்ற நிர்ப்பந்தத்தின் காரணமாக மட்டுமே என்னிடம் நீங்கள் மன்றாடி கொண்டிருக்கிறீர்கள். அந்த நிர்ப்பந்தம் மட்டும் தங்களுக்கு இப்போது இல்லாவிடில் இந்த விஷயங்களை பற்றி எல்லாம் என்னிடம் அபிப்பிராயம் கேட்டுக்கொண்டு இருப்பீர்களா? இல்லைதானே! இதிலிருந்தே தெரியவில்லை தாங்கள் என்னை விட அங்கயற்கண்ணி தான் முதன்மையாக கருதுகிறீர்கள் என்று” எனக் கோபத்துடன் மொழிந்த ராணியார் நடுநாயகமாக வீற்றிருந்த மஞ்சத்தின் ஒரு காலைப் பிடித்துக்கொண்டு கண் கலங்க உரைத்தார்.
எவ்வளவு புரிய வைக்க முயன்ற பொழுது மங்களாம்பிகையின் மனதில் அங்கயற்கண்ணி பற்றிய தவறான அபிப்ராயமே ஊறிப்போய் இருந்ததை கண்ட மன்னருக்கு இதற்குமேல் இவளிடம் பேசி புரிய வைக்க இயலாது என்பது விளங்கிற்று.
அதனால் மன்னர் மெளனம் காக்க மன்னரின் அமைதியை கண்ட ராணிக்கு இன்னமும் ஆத்திரமே தோன்றியது. “தங்களது முப்பாட்டன் மாமன்னர், பெருமாள் ஆவியின் காலத்தில் இன்று இன்று வரையிலும், இத்தனை ஆண்டுகளாக நாம் பின்பற்றி வரும் மரபுபை நேற்று வந்த ஒருத்திக்காக மாற்ற துணிகிறீர்களே இது எப்படி நியாயம்?”
“மரபு என்பது அன்றைய காலகட்டத்திற்கு ஏதுவாக இருக்கும் விஷயம். கால மாற்றம் காணும் போது, மரபுகளிலும் மாற்றங்கள் வருவது இயற்கை தானே?”
“எது இயற்கை! பொதினி மலைமேல் வீற்றிருக்கும் முருகப்பெருமானை தரிசிக்க மன்னர் பரம்பரையினருக்கு மட்டுமே உரிமை இருக்கிறது என்று தங்களுக்கு தெரியும் தானே. அப்படி இருக்கும் பொழுது, சாதாரண ஒரு ஆட்டக்காரி அதிலும் வேறு தேசத்தில் இருந்து பஞ்சம் பிழைக்க வந்த தேவதாசி பக்கிரி, நான் முருக பக்தை, அவர் மேல் தீராத காதல் கொண்டுள்ளேன். அதனால் நான் மலை ஏறிச் சென்று தண்டாயுதபாணி சுவாமியை தரிசிக்க எனக்கு அனுமதி அளியுங்கள் என்று வந்து கேட்டு நின்றால், அவளை உடனே சிறையில் அடைத்து அவளுக்கு தக்க தண்டனை வழங்காமல், அவளது கோரிக்கையை ஏற்று பரிசீலனை செய்வது உண்மையில் மகா பாவமாகும்” என்று உணர்ச்சி பொங்க வாதிட்டார் ராணி மங்களாம்பிகை.
“நீ என்ன பேசுகிறாய் என்று உணர்ந்து தான் பேசுகிறாயா இத்தனை வருட காலமும் தண்டாயுதபாணி சுவாமி, நம் குடும்பத்தினருக்கு மட்டுமே குலதெய்வமாக இருந்துள்ளார். அது சரியில்ல என்று எனக்குமே சில நாட்களாகத் தோன்றிவிட்டது. இறைவன் என்பன் எல்லோருக்குமானவன். அவனை அனைவரும் தரிசிக்க வேண்டும் என்று நானும் எண்ணுகிறேன்”
“அதுமட்டுமல்லாது, இக்கோரிக்கை அங்கையின் ஆவல் மட்டுமல்ல மங்களா. அரசல் புரசலாக நமது குடிமக்களும் கூட இதைப்பற்றி அங்கங்கே பேசுகின்றனர். தீராத நோய் தீர்க்கும் சக்தி வாய்ந்த நவபாஷாண முருகரை தரிசிக்க மன்னர் குடும்பத்திற்கு மட்டும்தான் அனுமதி உண்டா? நாம் தரிசனம் செய்யக் கூடாதா? என்று கேள்வி எழுப்புகின்றனர்.” என்று கவலையுடன் மொழிந்தார் மன்னர்.
“மக்கள் கேள்வி எழுப்புகின்றனரா? அப்படி கேள்வி எழுப்புகின்றவர்களைப் பிடித்து சிறையில் அடைப்பதற்கு என்ன? இது தாங்கள் ஆட்சி செய்யும் நாடுதானே! தாங்கள் வைத்ததே சட்டம்.” என்றார் ராணி இன்னமும் தீவிரமாக.
“புரியாமல் பேசாதே மங்களா. மக்களின் நன்மைக்காகவே சட்டதிட்டங்கள் இயற்றப்படுகின்றன. சட்டங்களை கொண்டு மக்களை அடிமைப்படுத்துவது சரியன்று. இன்றில்லாவிட்டாலும் என்றேனும் ஒருநாள் அங்கங்கே கேட்கும் குரல்கள் ஒன்றுதிரண்டு பேரிரைச்சலாக, பெரும் புரட்சியாக நம் முன்னே விஸ்வரூபமெடுத்து நிற்கும். அதற்கு முன்னால் நாமே இத்தகைய சட்டம் ஒன்றை வகுத்து, முருகனை தரிசிக்கும் பாக்கியத்தை மக்களுக்கும் அருளச் செய்தால் மக்கள் என்றென்றைக்கும் நம்மீது அன்புடனும் மரியாதையுடனும் இருப்பர் அல்லவா?” என்ற மன்னர், ராணீயார் பேசும் முன்னர், மேலே தொடர்ந்தார்.
“அங்கையின் கோரிக்கையும் இதுவே. அவள் மட்டும் சென்று முருகரை தரிசிக்க வேண்டும் என்று ஒருநாளும் அங்கையற்கண்ணி கேட்கவில்லை. இத்தனைக்கும், “உன்னை நான் அழைத்துச் சென்று முருகரை தரிசனம் செய்ய வைக்கிறேன் என்று நான் சொன்னதற்குக் கூட அங்கை ஒப்புக்கொள்ளவில்லை. மக்களில் ஒருத்தியாக, மக்களுடன் சேர்ந்து சென்று முருகரை தரிசிக்கவே நான் ஆசைப்படுகிறேன் என்று மறுத்துவிட்டாள். ஒட்டு மொத்த நாட்டு மக்களின் குரலாகவே அங்கையின் கோரிக்கையை நான் காண்கிறேன். அதனால்தான் அக்கோரிக்கையை நியாயமாக பரிசீலனை செய்யும் படிக்கு உன்னையும் நான் கேட்டுக்கொள்கிறேன்.” என்று தீர்க்கமாக மங்களாம்பிகை இடம் மொழிந்தார் மன்னர்.
“மங்களா உன் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளை ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு நாட்டு மக்களின் நலன் மட்டுமே கருத்தில் கொண்டு முடிவு எடுப்பாய் என்று நான் நம்புகிறேன். இக்கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று எனக்குத் தீர்க்கமாக தோன்றுகிறது. நன்கு ஆலோசனை செய்து எனக்கு ஒரு நல்ல முடிவை சொல்வாயாக.”
“ஆகம விதிப்படி யாகம் ஒன்றை எழுப்பி கோயிலை மக்களுக்கு தானமாக நான் கொடுத்த பின்பே மக்களை உள்ளே அனுமதிக்க இயலும் என்று மூத்தவர்கள் சொல்கின்றனர். அப்படிச் செய்யப் போகும் சமயத்தில் திருமணமான எனக்கு, மனையாள் அருகிலிருந்து கோவிலை தாரைவார்த்து மக்களுக்கு கொடுக்க வேண்டும் என்பது ஐதீகம்.” என்று மன்னர் சொல்லிக்கொண்டு இருக்கும் பொழுதே மீண்டும் மங்களாம்பிகையின் முகத்தில் கோபம் கொந்தளிக்க துவங்கியிருந்தது.
“ஓ! யாகத்திற்காகத்தானே இந்த மனையாள் தேவைப்படுகிறாள். நான் உடனிருக்க வேண்டும் என்ற காரணத்திற்காக மட்டும் தானே என்னிடம் இவ்வளவு தூரம் இவ்விஷயத்தை பற்றி ஆலோசனை கேட்கிறார்கள். வேண்டுமென்றால், தேவதாசி அங்கயற்கண்ணி தான் என் மனையாள் உலகத்தாரிடம் அறிவித்துவிட்டு அவளையே அருகே அமர்த்திக் கொண்டு யாகத்தை நடத்துங்களேன்” என்று கோபத்தில் என்ன பேசுகிறோம் என்பதை உணராமல் பேசிய மங்கையை வெறுப்புடன் ஏறிட்ட மன்னர் அவர்களது சயன அறையில் இருந்து ஆத்திரத்துடன் வெளிப்பட்டார்.
அவர் முன்னே செல்ல, மன்னரின் பின்னூடே சென்ற மங்களாம்பிகை “நான் பேசுவது கூட கேட்க பிடிக்காமல், அலட்சியம் செய்துவிட்டு எழுந்து செல்கிறீர்கள் அல்லவா? ஏன் அங்கையையே திருமணமும் செய்துகொண்டு இந்நாட்டின் ராணி என்று அறிவித்து விடுங்களேன். எனக்கு மதிப்பு கொடுக்காத இடத்தில்ட நான் ஏன் இருக்க வேண்டும்?” என்று ஆத்திர மிகுதியால் சயன அறையின் வாசலில் நின்று கத்தியிருந்தார் ராணி.
மங்களாம்பிகையின் ஆத்திர பேச்சை அலட்சியம் செய்த மன்னர் ஒரு நொடி கூட நின்று ராணிக்கு பதில் ஏதும் கூறாமல் அங்கிருந்து விரைந்து சென்று விட்டிருந்தார்.
இவையெல்லாம் நடந்து சில தினங்கள் கழித்து தான், அங்கையின் நாட்டிய நிகழ்ச்சியானது நடக்கவிருப்பதாக ராணி மங்களாம்பிகைக்கு செய்தி வந்து சேர்ந்தது.
அங்கயற்கண்ணியை ராணி மங்களாம்பிகை இதுவரையில் நேரில் கண்டதில்லை என்ற காரணத்தினாலும் அப்படி என்னதான் அவளிடம் இருக்கிறது என்று தெரிந்துகொள்ளும் ஆர்வத்தினாலும், எங்கே தனியே மன்னரை அனுப்பினால் அவர் அவளிடம் கொஞ்சி குலாவி மகிழ்ந்து போய் விடுவாரோ என்ற அச்சத்தினாலும் நாட்டிய நிகழ்ச்சியைக் காண மன்னரிடம் இருந்து செய்தி வந்த பொழுது அதை ஏற்றுக்கொண்டு அவருடன் நிகழ்ச்சிக்கான செல்ல ஒப்புக் கொண்டார் ராணி மங்களாம்பிகை.
நடந்தவற்றையெல்லாம் மனதில் ஒரு முறை நினைத்து பார்த்தபடி அமர்ந்திருந்த ராணி மங்களாம்பிகை, நாட்டியத்தின் பாடல் உச்சஸ்தாயியில் கேட்பதை உணர்ந்து நாட்டியம் முற்றுப்பெற இருப்பதை அறிந்து கொண்டார்.
முடிந்தவரையிலும் முகத்தில் புன்னகையை தவழ விட்ட படிக்குத் தனது கணவருடன் அமர்ந்திருந்தார் ராணி மங்களாம்பிகை.
நாட்டியம் முடிவு பெற்ற பின்னர் அங்கயற்கண்ணி சபையில் இருந்த மக்களுக்கு வணக்கம் தெரிவித்துவிட்டு மன்னருக்கும் ராணிக்கும் தனது வணக்கத்தை சமர்ப்பித்து கைகூப்பி நின்றாள்.
அங்கையின் நாட்டியத்தில் தன்னை தொலைத்திருந்த மன்னர் நெடுவேள் ஆவி அவளது நாட்டியத்தை கண்டு மெச்சி தனது பெருவிரல் மோதிரத்தை கழற்றி அன்புப் பரிசாக அங்கையின் கைகளில் கொடுத்தார்.
மங்களாம்பிகை செய்வதறியாது, இதை ஒருவித குரூர புன்னகையுடன் பார்த்துக்கொண்டு உடன் நின்றிருந்தார்.
அதிலும், மன்னரின் முகத்தில் கண்களை பதித்திருந்த ராணிக்கு அங்கையையும், மன்னரையும் அருகருகே நிறுத்தி பார்க்க மிகுந்த வெறுப்பு தோன்றியது. ஆதுரத்துடன் சிரித்தபடி அங்கைக்கு தன் மோதிரத்தைப் பரிசளித்த மன்னரையும், மோதிரத்தை பயபக்தியுடன் பெற்றுக்கொண்டு கண்களில் ஒற்றிக் கொண்டு, தன் கைகளில் அணிந்து கொண்ட அங்கயற்கண்ணியின் பாங்கையும் கண்ட ராணியின் மனதில் பொறாமைத் தீ கொழுந்துவிட்டு எரியத் துவங்கியது.
“நீ எத்தனை தூரம் முயன்றாலும் உன் கோரிக்கையை ஒருநாளும் நான் நிறைவேற்ற விடமாட்டேன். உன்னைக் கொன்றால் கூட என் மனதில் ஆத்திரம் கொஞ்சமும் குறையப்போவதில்லை. நீ நினைத்தது கனவிலும் கூட நடக்காது. நான் நடக்க விடமாட்டேன்” என்று அச்சமயம் மனதினுள் உறுதி பூண்டார் ராணி பவித்ரமங்களாம்பிகை.
