மறப்பதில்லை மதிமுகம்-5
அத்தியாயம்-5
நிகழ்காலம்
நெக்சஸ் சிஸ்டம்ஸ்:
Advertisement
“நோ சார்…” மதி மெல்லிய குரலில் பதிலளித்தாள்.
அவளது அந்தப் பதில் அங்கிருந்த மூவரையும் ஸ்தம்பிக்க வைத்தது.
“நோன்னா என்ன அர்த்தம்?” ஆதி நெற்றியைச் சுருக்கிக் கேட்டான்.
Advertisement
“பிரசன்டேஷன்ல இன்னும் கொஞ்சம் கடைசிநேர வேலைகள் பாக்கி இருக்கு..”
Advertisement
“அதுக்கு..?”
“எ.. எனக்கு.. இன்னும் கொஞ்சம் டைம் வேணும்..” அவள் திணறினாள்.
“அப்போ, உன் பிரசன்டேஷன் இன்னும் ரெடி ஆகலைன்னு சொல்ல வர்றியா…?” அவளது கண்களைத் துளைப்பது போலப் பார்த்துக் கேட்டான்.
Advertisement
அவள் ‘ஆம்’ என்பது போலத் தலையசைத்தாள்.
“இதை உன்னோட திறமையின்மைன்னு எடுத்துக்கலாமா..? நான் உங்க ரெண்டு பேருக்கும் ஒரே வேலையை, ஒரே நேரத்துலதான் கொடுத்தேன். ஶ்ரீநிதி பிரமாதமா செஞ்சு முடிச்சிருக்கா.. ஆனா உன்னால முடிக்கக்கூட முடியலைன்னா.. உனக்கு தகுதியில்லைன்னு தானே அர்த்தம்..?”
அவனது வார்த்தைகளால் தொண்டையை அடைத்த துக்கத்தை விழுங்கியபடி அவள் தலையைக் குனிந்து கொண்டாள்.
ஆதித்யாவின் கோவம் ஏறிக்கொண்டே போனாலும் அவள் முகம் வாடி நின்றது, அவனது மனதிற்குள் எங்கோ பலமாகத் தைத்தது.
ஒரு நீண்ட மூச்சை இழுத்துவிட்டான்.
சட்டென எழுந்து கதவை நோக்கிச் சில அடிகள் நடந்தவன், சற்று நின்று.
“தண்மதி.. கொஞ்சம் வெளிய வா..” என்று உத்தரவிடும் குரலில் கூறிவிட்டு வேக நடையுடன் வெளியேறினான்.
அவள் தயங்கியபடி மெல்ல அவன் பின்னே சென்றாள். கான்பரன்ஸ் அறைக்கு வெளியே அவளை எதிர்கொண்டவன்.
“உனக்கு என்னதான் ஆச்சு..?” என்றான் எரிச்சலாக.
“சார், நான் தான் சொன்னேன்ல.., பிரசன்டேஷனை நான் இன்னும் முடிக்கலை..” என்று அவள் அதே பல்லவியை மீண்டும் பாட,
“இந்தக் கதையெல்லாம்… எவனாவது காதுல கடுக்கன் போட்டுட்டு ஊர்நாட்டான் இருப்பான் அவன்கிட்ட சொல்லு, நம்புவான். அதுக்கு நான் ஆள் கிடையாது.. ஒழுங்கா என்ன ப்ராப்ளம்னு சொல்லு?” அவளது கண்களை ஊடுருவிப் பார்த்துக் கேட்டான்.
அவள் எச்சிலை விழுங்கினாள். ஶ்ரீநிதியின் பிரசன்டேஷனை விட நன்றாக இருப்பதற்கு, சில மாற்றங்களைச் செய்ய தனக்கு இன்னும் சிறிது அவகாசம் தேவை என்ற உண்மையை அவனிடம் எப்படிச் சொல்ல முடியும்? அவன் அவளது பழைய “ஆதி சாராக” இருந்திருந்தால் எல்லாவற்றையும் அவனிடம் கொட்டியிருக்கலாம்.. ஆனால் யார் என்றே தெரியாத இந்த வினோத பிறவியிடம் அது முடியாதே.
“தண்மதி, மொதல்ல இந்த மெலோடிராமாவை நிறுத்து. உன்னோட பதிலுக்காக நாள் முழுக்கக் காத்துட்டு இருக்க எனக்கு நேரமில்லை. உன்னைச் சமாதானப்படுத்துறதைத் தவிர எனக்கு வேற வேலையே இல்லைன்னு நினைச்சிட்டியா..?” என்றான் பொறுமையிழந்த குரலில்..
“சாரி சார்…” என்றாள் மெல்லிய குரலில்,
“தண்மி… மொதல்ல நீ உன் மேல நம்பிக்கை வை. நீயே உன்னை நம்பலைன்னா.. அப்புறம் வேற யாரு உன்னை நம்புவாங்க..? வா.. நீ என்ன ரெடி பண்ணி வச்சிருக்கியோ அதையே பிரசன்ட் பண்ணு..” அவளிடம் இருந்து ஒரு பாசிடிவ்வான பதிலை எதிர்பார்த்து மென்மையான குரலில் சொன்னான்.
ஆனாலும் அவள் மௌனமாகவே இருந்தாள். தன் முடிவில் பிடிவாதமாக இருப்பது போலத் தெரிந்தது.
’ஓ காட்… இவ என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறாளே..”
அவளது இந்த விடாப்பிடியான பிடிவாதத்தைப் பார்த்து அவன் வலுக்கட்டாயமாக இழுத்துவைத்திருந்த பொறுமை காற்றில் பறக்க…
“பாரு..எனக்குத் தெரியும் உன்னோட பிரசன்ஸ்டேஷன் ரெடியா தான் இருக்குன்னு. ஒழுங்கா வந்து அதை பிரசன்ட் பண்ணு.. இல்லன்னா என் கண்ணு முன்னாடி நிக்காம இப்பவே ஒரேடியா கிளம்பிடு..” பற்களைக் கடித்தபடி சொல்லிவிட்டு, அவள் பதிலுக்குக் காத்திராமல் கான்பரன்ஸ் அறைக்கு வேகமாகத் திரும்பினான்.
வேறு வழியே இல்லாததால், அதே பிரசன்டேஷனை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயத்தில் அவள் சோகமான முகத்துடன் அவன் பின்னே சென்றாள்.
மதி ப்ரொஜெக்டர் திரையின் முன்னால் நின்று கண்களை மூடிக்கொண்டு, ஒருமுறை அவளது ‘ரட்சகன்’ சொன்ன வார்த்தைகளை நினைத்துப் பார்த்தாள்.
“மதி.. உன் பிரச்சனையைப் பார்த்து பயந்து ஓடாத.. அதை தைரியமா எதிர்த்து நில்லு, ஈஸியா கடந்து வந்துடலாம்…”
நரம்புகளில் ஒரு இனம் புரியாத பலம் ஊடுருவிப்பாய்ந்தது, நிதானமாக ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டுவிட்டு பேசத் தொடங்கினாள்.
“சார், நம்ம பேங்க் யாரைச் சென்றடையணும்னு நினைக்கிறோமோ, அவங்க ஸ்மார்ட்போன் உலகத்துல இல்லை; நிஜமான உலகத்துல உழைச்சிட்டு இருக்காங்க. அதனால வெறும் டிஜிட்டல் டேட்டாவை மட்டும் நம்பாம, அவங்களோட ‘Micro-Patterns’ அதாவது அவங்களோட வாழ்வியல் முறைகளை நாம கவனிக்கணும்.
அவர் ஒரு விவசாயியா இருக்கலாம்.. ஆனா, மாச மாசம் கரண்ட் பில்லையும், போன் பில்லையும் கரெக்டா கட்டுறாரா? உள்ளூர் கூட்டுறவு சங்கத்துல அவரோட பணப்புழக்கம் எப்படி இருக்கு? இதையெல்லாம் டேட்டாவா மாத்தினாலே அவரோட நாணயம் தெரிஞ்சிடும்.
அப்புறம், கிராமத்துல இன்டர்நெட் கம்மியா இருக்கும். அதனால எந்த பழைய ஃபோன்லயும் வேலை செய்யுற மாதிரி ஒரு ‘Offline-First Lite App’ தான் நமக்கு வேணும். முக்கியமா, ஃபார்ம் ஃபில்(form fill) பண்ணத் தெரியாதவங்களுக்காக, அவங்க தமிழ்ல பேசினாலே அதை டேட்டாவா மாத்துற ‘Voice-AI’ வசதியையும் நான் இதுல சேர்த்திருக்கேன்.
சார், பேங்கிங்ங்கிறது வெறும் நம்பர்ஸ் மட்டும் இல்லை; அது ‘நம்பிக்கை’ சம்பந்தப்பட்டது. என்னோட இந்த சாஃப்ட்வேர், சிஸ்டமால தள்ளி வைக்கப்பட்ட மில்லியன் கணக்கான மக்களை வங்கிக்குள்ள கொண்டு வரும்!” என்று அவள் தன் உத்திகளை முன்னெடுத்து வைத்தாள்.
ஶ்ரீநிதியின் வழிகள் ஒரு இரும்புக்கோட்டைப் போல் பலமானது ஆனால் உள்ளே நுழையும் வழி கடினமானது.
ஆனால் தண்மதியின் முன்மொழிவோ வங்கியையும் வாடிக்கையாளரையும் இணைக்கும் பாலம் போல் கட்டமைக்கப்பட்டிருந்தது.
ஆதித்யா இருவரையும் பார்த்து இறுதியாக டிசைடர் கேள்வி ஒன்றைக் கேட்டான்:
“ஒருவேளை இந்த ஏஐ(AI) ஏதேனும் தவறு செஞ்சு, தகுதியான ஒரு நல்ல மனுஷனுக்குக் கடனை மறுத்துட்டா என்ன செய்வீங்க? ஒரு மெஷினோட தப்பால அந்த மனுஷனோட வாழ்க்கை பாதிக்கப்படுமே?”
அதற்கு ஶ்ரீநிதி மிகத் துரிதமாகப் பதிலளித்தாள்:
“சார், அதுக்காகத்தான் நாம ‘மாடல் ரீ-ட்ரெய்னிங்’ (Model Re-training) வைக்கப்போறோம். அந்த அல்காரிதத்தோட ‘வெயிட்ஸ்’ (Weights) மற்றும் பாராமீட்டர்களை மாற்றியமைப்பதன் மூலம், அடுத்த முறை அந்தத் தவறு நடக்காம நாம சரி பண்ணிடலாம்.” அவளது பதில் தொழில்நுட்ப ரீதியாகத் துல்லியமாக இருந்தது.
பின்னர் தண்மதி தன் கருத்தைமுன்வைத்தாள்:
“சார், என்னோட சாஃப்ட்வேர்ல நான் ஒரு ‘மேனுவல் ஓவர்-ரைட்’ (Manual Override) பட்டன் கொடுப்பேன். ஒருவேளை மெஷின் ஒருத்தரோட லோனை ரிஜெக்ட் பண்ணாலும், அந்த ஊர் பேங்க் மேனேஜருக்கு அந்த முடிவை மாத்துற அதிகாரம் இருக்கணும். ஏன்னா, பல வருஷமா அந்த மனுஷங்களைப் பார்த்து பழகிட்டு இருக்கிற ஒரு மேனேஜருக்குத் தெரியும், யாரு நேர்மையானவங்கன்னு. சில நேரங்கள்ல மெஷினோட கால்குலேஷனை விட, மனுஷனோட அனுபவத்துல வர்ற வார்த்தை தான் சார் ரொம்ப துல்லியமானது.”
அவளது பதிலில் ஆதித்யாவின் கண்களில் ஒரு மெல்லிய ஆச்சரியம் மின்னி மறைந்தது.
மதி பேசிமுடித்ததும் அறையில் ஒரு நிசப்தம் நிலவியது.
அந்த அமைதியைக் கலைத்து முதலில் கைதட்டியது நவீன்தான்.
பிறகு ஶ்ரீநிதியும் அவனுடன் சேர்ந்து கொண்டாள். மதி மெல்ல ஆதித்யாவின் பக்கம் பார்வையைத் திருப்பினாள். அவன் எந்தச் சலனமும் காட்டாமல் அமைதியாக அமர்ந்திருந்தான்.
ஏமாற்றத்தில் அவள் உதட்டைப் பிதுக்கினாள்.
ஆனால், அந்த தருணத்தில் அவன் மனதில் ஓடுவதை மட்டும் அவளால் படிக்க முடிந்திருந்தால், வானத்தில் பறந்திருப்பாள்.
மதியின் திறமையைக் கண்டு ஆதித்யா வாயடைத்துப் போயிருந்தான். அவளுக்கு வேலையில் அபாரமான அறிவு இருக்கிறது என்பதை அவன் தனக்குளேனும் ஒப்புக்கொண்டுதான் ஆகவேண்டும். சரியான வழிகாட்டுதல் கிடைத்தால் அவள் சிகரங்களைத் தொடுவாள் என்று அவன் உள்ளுணர்வு சொன்னது. அவன் இதயத்தின் ஏதோ ஒரு மூலையில் ஒரு சிறு பெருமிதம் கூட எட்டிப்பார்த்தது. அதற்கான சரியான காரணம் என்னவென்று அவனுக்கே புரியவில்லை.
ஆனால், அவனை ஆச்சரியப்படுத்தியது அவனது மனநிறைவுதான். தண்மதியின் வெற்றி அவனுக்கு ஏன் இவ்வளவு திருப்தியைத் தருகிறது?
அவள் சிறப்பாகச் செய்ய வேண்டும் என்று அவன் ஏன் இவ்வளவு மெனக்கெடவேண்டும்?
அவள் வேலைக்கே சேர்ந்துவிடக் கூடாது என்று தானே அவன் நினைத்திருந்தான், இந்தச் சூழலைத் தனக்கு சாதகமாக்கி அவளை வெளியேற்றியிருக்கலாமே. ஆனால் அதை விட்டுவிட்டு அவளை தனியே அழைத்துப்போய் சமா, தான, பேத தண்டம் அனைத்தையும் பயன்படுத்தி அவளை ப்ரசண்டேஷன் செய்ய வற்புறுத்தியது ஏன்?
இப்போது அவள் திறமையைக்கண்டு ஒரு தாயைப்போல பூரிப்படைவதன் காரணம் என்ன?
சில நேரங்களில் அவளை பல காலமாக தெரிந்திருப்பது போன்ற ஓர் உணர்வு ஏற்படுகிறதே.. முன்ஜென்ம பந்தமாக இருக்குமோ..?
“யார் இந்தப் பெண்? இவளுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? இவளோட வாடிய முகம் என்னை ஏன் இவ்வளவு காயப்படுத்துது?”
விடை தெரியாத பல கேள்விகளுடன் உள்ளே போராடிக்கொண்டு வெளியே அமைதியாக இருந்தான்.
“யப்பா… இவ என்னைப் பைத்தியம் ஆக்கிடுவா போலிருக்கு…” என்று தலையை உலுக்கிக் கொண்டான்.
“தண்மதி… நீ அசத்திட்ட! ரொம்பத் தெளிவான, கச்சிதமான பிரசன்டேஷன். என்னோட அறிவுக்கு எட்டின வரைக்கும், ஒரு எக்ஸ்பர்ட் குடுக்க வேண்டிய ஐடியாஸையும் வியூகங்களையும் (Strategies) நீ சொல்லியிருக்க. உண்மைய சொல்லப்போனா, நான் மிரண்டு போயிட்டேன். ஆமா வருங்காலத்துல என்கூடப் போட்டி போடுற ஐடியா எதுவும் இல்லையே? அப்படி இருந்தா இப்பவே சொல்லிடுமா, நான் வேற டீமுக்கு மாறிடுறேன்…” என்று நவீன் அவனது பாணியில் கிண்டலாகப் பாராட்டினான்.
“அய்யோ, நவீன்… அதெல்லாம் ஒன்னும் இல்லை…” என்று மறுத்தாள் அவன் பாராட்டிக் தள்ளியதில் முகம் சிவந்து,
ஆதித்யா ஏதாவது சொல்வான் என்று அவள் மிகவும் எதிர்பார்த்தாள்,
“இப்படி பிடித்துவைத்த பிள்ளையார் மாதிரி இருக்கரே. நல்லதா நாளு வார்த்தை சொன்னா கொறைஞ்சி போயிடுவாரா..” என்று குறைபட்டுக் கொண்டிருக்கையில்,
தன் இருக்கையிலிருந்து எழுந்தவன்,
“தண்மதி… என் கேபினுக்கு வந்து என்னைப் பாரு,” என்று மொட்டையாகச் சொல்லிவிட்டு நடக்கத் தொடங்கினான்.
“இப்போவா சார்?” என்றாள் தயங்கியபடி
“இல்ல, நாளைக்கு,” என்று அவன் நக்கலாகச் சொல்ல,
அவனது கிண்டலைக்கூட புரிந்துகொள்ளாமல்,
“ஓ, சரி சார்… நாளைக்கு எத்தனை மணிக்கு வரணும்?” என்று அப்பாவித்தனமாகக் அவள் திருப்பிக் கேட்க.
ஆதி எரிச்சலில் கண்களை உருட்டினான்.
“கம் டு மை கேபின் ரைட் நவ்!” என்று அழுத்திக் கூறிவிட்டு, விறுவிறுவெனத் தன் நீண்ட காலடிகளில் எட்டுவைத்து சென்றுவிட்டான்.
அவனது அதிகாரத் தொனியில் அதிர்ந்து நின்றவளை அருகில் வந்து கட்டிக்கொண்டாள் ஶ்ரீநிதி,
“ஹே, கலக்கிட்ட மதி, நீ இவ்வளவு பெரிய ஜீனியஸா இருப்பேன்னு நான் நினைக்கவே இல்லைடி!” என்று வியந்தாள்.
“நானும்தான்…” என்றாள் தண்மதி.
“சரி, சீக்கிரம் போய் பாஸைப் பாரு… இல்லைன்னா அந்த எரிமலை எப்ப வேணாலும் வெடிக்கும்!” என்று நவீன் அவளுக்கு நினைவுறுத்தினான்.
“ஆமா, நான் கிளம்புறேன்… அப்புறம் பார்க்கலாம் கைஸ்,” என்று சொல்லிவிட்டு அவள் அவனது கேபினை நோக்கி வேகமாக ஓடினாள்.
ஆதித்யாவின் கேபினில்.
“உட்காரு. நோட்பேட் கொண்டு வந்திருக்கியா?” என்று கேட்டான்.
“யெஸ் சார்.”
“குட், நான் சொல்ற பாயிண்ட்ஸை நோட் பண்ணிக்கோ. இது ஒரு புது புராஜெக்ட். பேங்கிங் சம்பந்தப்பட்டது..இதுக்கு ஒரு ரஃப் ஸ்கெட்ச் (Rough Sketch) தயார் பண்ணனும்.”
அவள் எழுதத் தொடங்கியதும், அவன் ஜெட் வேகத்தில் சொல்ல ஆரம்பித்தான். தண்மதியால் ஈடுகொடுக்க முடியவில்லை. முதலில் திகைத்தவள், பிறகு ஒரு யோசனை வரவும் எழுதுவதை நிறுத்திவிட்டு அமைதியாக இருந்தாள்.
அவன் பேசி முடித்ததும், “எல்லா பாயிண்ட்ஸையும் நோட் பண்ணிட்டியா?” என்று நக்கலாக கேட்டான். அவள் ‘இல்லை’ என்று சொல்லப்போகிறாள் என்று எதிர்பார்த்தான்.
“யெஸ் சார்.”
“உனக்கு ஷார்ட் ஹேண்ட் (Short hand) தெரியுமா?” என்று ஆச்சரியமாகக் கேட்டான்.
“இல்லை சார்.. ஆனா டெக்னாலஜியை எப்படிப் பயன்படுத்தணும்னு தெரியும். உங்க பேச்சை என் மொபைல்ல ரெக்கார்ட் பண்ணிட்டேன்,” என்று புன்சிரிப்புடன் மொபைலை ஆட்டிக் காட்டினாள்.
ஆதி வாயடைத்துப் போனான். “இவ வெளிய தெரியிற அளவுக்கு முட்டாள் இல்ல!” என்று நினைத்துக் கொண்டான்.
“சரி, வீட்டுக்குக் கிளம்புறதுக்கு முன்னாடி ரிப்போர்ட் ரெடி பண்ணிடு.”
அவள் சரி என்று தலையாட்டிவிட்டு அங்கேயே தயங்கி நின்றாள்.
“என்ன? ஏதாவது பிரச்சனையா?”
“இல்லை சார்.. என்னோட பிரசன்டேஷன் பத்தி உங்க கருத்து என்ன? உங்க கூட வேலை செய்ய நான் செலக்ட் ஆகிட்டேனா?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
“நீ நல்லா பண்ணலைன்னா இப்ப இங்க நின்னுட்டு இருக்க மாட்ட, ஶ்ரீநிதி தான் இருந்திருப்பா. நீ ஶ்ரீநிதிய விட பெஸ்ட்டா பண்ணிருக்க. இப்போ நீ என்னோட புராஜெக்ட்ல இருக்க, புரிஞ்சுதா?”
“புரிஞ்சது சார்.. தேங்க் யூ சார்!” என்று அவள் குரலில் குதூகலம் துள்ளியபோதும்.
மனதிற்குள், “இதை கொஞ்சம் சிரிச்சிட்டே சொன்னா என்னவாம் சிடுமூஞ்சி?” என்று உதட்டைசுளித்தபடி அவள் கிளம்ப,
“தண்மி” என்று அழைத்து அவளை நிறுத்தினான்
அந்த அழைப்பை அப்போதுதான் உணர்ந்தவளின் இதயம் இன்பமாக அதிர்ந்தது.
அவள் மின்னும் கண்களுடன் அவனை ஏறிட்டுப் பார்க்க,
“குட் ஜாப்..” என்றான் இதழோரம் சிறுபுன்னகையுடன்..
தொடரும்..

