Skip to content
Post Views: 50
கண்ணாமூச்சி 26
அனன்யாவும் பிரவீனும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டு, தங்களுக்குள் ஏதோ ஒரு சைகையைப் பரிமாறிக்கொண்டார்கள். “நாங்க எல்லாரும் குடிக்க காபி போட்டு எடுத்துட்டு வரோம்” என்று பிரவீன் நாசூக்காக ஆரம்பிக்க, அனன்யா அவனோடு சேர்ந்து சமையலறைப் பக்கம் நகர்ந்தாள். விஷ்வாவிற்கும் நிலாவிற்கும் சற்று தனிமை தேவை என்பதை அவர்கள் நன்றாகவே உணர்ந்திருந்தார்கள்.
வரவேற்பறையிலிருந்து மெல்ல நகர்ந்து, குளிர்ந்த காற்று வீசிக்கொண்டிருந்த அந்த விஸ்தாரமான பால்கனிக்கு நிலாவை அழைத்துச் சென்றான் விஷ்வா. அவளது சின்னஞ்சிறு கைகளைத் தன் அகன்ற கைகளுக்குள் பொதிந்து, அவளைத் தன் நெஞ்சோடு அணைத்தாற்போல் அரவணைத்து நின்றான்.
நிலா அவனது பிடியில் இருந்து விலக முற்பட்டாள், “விடுங்க… இதெல்லாம் தப்பு… இப்படியெல்லாம் பண்ணக் கூடாது”, என்றபடி ஒருவழியாக அவனது அணைப்பில் இருந்து விலகி நின்றாள் நிலா.
Advertisement
“ஏன் நிலா, என் மேல கோபமா இருக்கியா? நான் நேத்து கால் பண்ணலைன்னு கோபமா? நான் ஃபோன் பண்ணுவேன்னு ரொம்ப எதிர்பார்த்தியா? நான் ஃபோன் பண்ணலைன்னா நீ என்னை மிஸ் பண்ணுவியான்னு பாக்கத்தான் கால் பண்ணலை, என்னை மிஸ் பண்ணுனியா நிலா?” என்றான் விஷ்வா மென்மையாக.
“ஓ… அப்போ வேணும்னேதான் கால் பண்ணலியா, என் கூட விளையாடிப் பார்த்திருக்கீங்க… அப்படித்தானே? ஆனா நான் பாருங்க, பைத்தியக்காரி மாதிரி அஞ்சு நிமிஷத்துக்கு ஒரு தடவை ஃபோனை எடுத்து பார்த்துக்கிட்டு லூசு மாதிரி இருந்திருக்கேன்,” கோபத்தில் அவனைப் பார்க்க மறுத்து திரும்பி நின்று கொண்டாள்.
பின்னிருந்து வந்து அவளைக் கட்டிக்கொண்டவன், மென்மையாக அவளது காதில் “அப்போ மேடம் என்னை நேத்து தேடியிருக்கீங்க… அப்படித்தானே? அதனால மேடம் இன்னிக்கு என்கிட்டே ஃபைட் பண்ண வந்திருக்கீங்க…” என்றான் ரகசியம் பேசுவது போல். அவனது அணைப்பிற்குள் அடங்கியவளிடமிருந்து பதில் ஏதும் வரவில்லை.
Advertisement
அவளது மனதிற்குள் இருந்த தயக்கங்களும் பயங்களும் அவளை வெகு நேரம் அமைதியாக இருக்க விடவில்லை. கீழே வெகு தொலைவில் தெரிந்த சென்னை நகரின் சலனங்களை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தவள், மெதுவாகத் தன் முகத்தைத் திருப்பி விஷ்வாவின் கண்களை நோக்கினாள்.
Advertisement
“வேண்டாம் விஷ்வா சார், இதெல்லாம் வேண்டாம். எதுவுமே சரி வராது. என் வீட்டுல இதுக்கெல்லாம் கண்டிப்பா ஒத்துக்க மாட்டாங்க… எதைப் பத்தியும் யோசிக்காம என்னால இவ்வளவு சுயநலமா முடிவெடுக்க முடியலை. நாம இதை இங்கயே நிறுத்திடலாம்… கொஞ்ச நாளுக்கு கஷ்டமா இருக்கும், அப்பறம் நமக்கே பழகிடும்,” என்றாள் நிலா. அவளது குரலில் இன்னும் அந்தப் பழைய பிடிவாதம் உறுதியாக இருந்தது.
“நிலா… நான் சொல்றதைக் கொஞ்சம் கேளு…” என்று விஷ்வா அவளைச் சமாதானப்படுத்த முயன்றான்.
அவளது கைகளைப் பற்றிக்கொண்ட விஷ்வா, “அன்னைக்குச் சொன்னதுதான் இன்னைக்கும் சொல்றேன் நிலா… உன்னோட ஃபேமிலி மட்டுமில்லை, நம்ம காதலை இந்த ஒட்டுமொத்த உலகத்தையே ஏத்துக்க வைக்க வேண்டியது என்னோட பொறுப்பு. உனக்காக எதையும் செய்ய நான் தயார்,” என்று அத்தனை ஆழமாக அவளது கண்களை நோக்கி உறுதி அளித்தான்.
Advertisement
ஆனால் அவளோ, “விஷ்வா சார், நான் விளையாடலை… இது எதார்த்தத்துக்குச் சாத்தியமே இல்லை,” என்று படபடப்புடன் தடுத்து, தன் மனதில் தேக்கி வைத்திருந்த அத்தனை காரணங்களையும் ஒவ்வொன்றாக அடுக்கத் தொடங்கினாள்.
“எனக்கு சாதாரண விஷயங்கள் நிறைந்த ஒரு சாதாரண வாழ்க்கைதான் வேணும் விஷ்வா. ஆனா உங்க கூட இருந்தா அது என்னைக்குமே நடக்காது. உங்களோடு என்னால சாதாரண மனுஷங்க மாதிரி ஒரு தியேட்டருக்குப் போய் படம் பார்க்க முடியுமா? டிக்கெட் கவுண்டர்ல நின்னு பாப்கார்ன் வாங்கிட்டு படம் பார்க்கணும்னு எனக்கு ஆசை. ஆனா நீங்க உள்ள வந்தா தியேட்டரே ஸ்தம்பிச்சுடும்.”
சீரியஸாக மறுப்புத் தெரிவித்துக் கொண்டிருந்தவளின் வாதங்கள் விளையாட்டுத்தனமாக மாறியதை உணர்ந்துகொண்ட விஷ்வாவிற்கு அவளது மனதின் குழப்பங்கள் நன்றாகவே புரிந்தது.
அவளது முகத்தையே அமைதியாகப் பார்த்தபடி, காற்றில் பறந்த அவளது கூந்தலை காதோரம் ஒதுக்கிவிட்டு மென்மையாகப் புன்னகைத்தான் விஷ்வா. “ஏன் முடியாது நிலா? உனக்காக ஒரு தியேட்டரையே ஒட்டுமொத்தமா புக் பண்ணி, இடைவேளையில நானே உனக்கு பாப்கார்ன் வாங்கித் தர்றேன். கூட்டம் இல்லாத நள்ளிரவு காட்சியில, உன்னை என் மடியில உட்கார வச்சுகிட்டு நாம படம் பாக்கலாம். விசேஷமா படம் பார்க்கலாம், சரியா?” என்றான் தன் குறும்புக் குரலில்.
நிலா அவனது பதிலை ரசித்தாலும், தன் வாதத்தை விடவில்லை. “சரி, தியேட்டர் போகலாம்… என் அம்மா, அப்பா தினமும் காய்கறி வாங்க கடைக்குக் சாதாரணமா போயிட்டு வருவாங்க, அந்த எளிய வாழ்க்கை எனக்குப் பிடிக்கும். அதை உங்க கூட என்னால செய்ய முடியுமா? தெருவோரக் கடையில நின்னு பேரம் பேசி தக்காளி வாங்க முடியுமா நம்மளால?” என்று படபடத்தாள்.
விஷ்வா அவளது மூக்கைத் செல்லமாகக் கிள்ளி, “உனக்கு பேரம் பேசணும், அவ்வளவுதானே? விடியற்காலையில நாலு மணிக்கு மார்க்கெட் போனா கூட்டம் இருக்காது நிலா. அப்போ நம்ம ரெண்டு பேரும் மாஸ்க் போட்டுட்டு, கையில கூடை எதுத்துக்கிட்டுப் போய், உனக்குப் பிடிச்ச காய்கறிகளை நீ ஆசைப்படுற மாதிரி பேரம் பேசியே வாங்கலாம். இல்லைன்னா… நம்ம வீட்டுத் தோட்டத்துலேயே நாம ரெண்டு பேரும் சேர்ந்து காய்கறி பயிரிடலாம். நம்ம கைப்பட ஃபிரெஷ்ஷா பறிச்சு சமைக்கிற காய்கறியை விடவா மார்க்கெட் காய்கறி ருசிச்சிடப் போகுது?” என்று அவளது தோள்களை இன்னும் நெருக்கமாக அணைத்துக் கொண்டான்.
நிலா அவனது நெஞ்சில் தன் கைகளை ஊன்றி, அவனை நேராகப் பார்த்து, “நீங்க எல்லாத்துக்கும் பதில் வச்சிருக்கீங்க விஷ்வா. ஆனா யோசிச்சுப் பாருங்க, உங்க கூடப் பீச்சுக்குக் போய் கொஞ்ச நேரம் நிம்மதியா உட்கார முடியுமா? இல்லை ஒரு கோவிலுக்குத்தான் நிம்மதியா போய் சாமி கும்பிட முடியுமா? எல்லாரும் உங்களைச் சூழ்ந்துப்பாங்க. எனக்குத் தேவை ஒரு சிம்பிளான வாழ்க்கை, வெளில போனாலே உங்க ரசிகைகள்கிட்ட இருந்து காப்பாத்திக்கிட்டே இருக்கணும்னா எப்படி? இதெல்லாம் பிராக்டிகலா நடக்க வாய்ப்பே இல்லை!” என்று தன் ஆதங்கத்தைக் கொட்டினாள்.
விஷ்வா அவளது கைகளைப் பற்றித் தன் இதயத்தின் மீது வைத்துக் கொண்டான். அவனது இதயம் அவளுக்காக எவ்வளவு வேகமாகத் துடிக்கிறது என்பதை அவள் உணர வேண்டும் என்று நினைத்தான்.
“நிலா… வெளிய உலகத்துக்குத்தான் நான் சூப்பர் ஸ்டார். ஆனா உனக்கு முன்னாடி வெறும் விஷ்வா மட்டும்தான். நீ கேக்குற இந்தச் சின்னச் சின்ன சந்தோஷங்களை எனக்கும் அனுபவிச்சு வாழணும்னு தான் ஆசை. பீச் வேணுமா? யாருமே இல்லாத நள்ளிரவுல கடலலை நம்ம காலைத் தொட்டுட்டுப் போற தூரத்துல, உன் கையைப் பிடிச்சுட்டு நான் மணல்ல நடப்பேன். கோவில் வேணுமா? விடியற்காலை நடைதிறப்பு பூஜைக்குப் போனா அமைதியா சாமி தரிசனம் பண்ணலாம். உனக்காக என் சூப்பர் ஸ்டார் இமேஜை வீட்டுக்கு வெளியவே கழட்டி வச்சுட்டு வர நான் தயார். எனக்குத் தேவையெல்லாம் உன் கூட வாழற வாழ்க்கை மட்டும்தான். இப்போ சொல்லு… இதெல்லாம் நிஜமாவே இம்பிராக்டிகலா?” என்று அவளைத் தன்னோடு சேர்த்து அனைத்துக் கொண்டு அவளது நெற்றியில் தன் இதழ்களைப் பதித்து ஆழமாகக் கேட்டான்.
அவனது அந்த ஆழமான பதில்களிலும், மாறாத காதலிலும் நிலாவின் பிடிவாதம் கொஞ்சம் கொஞ்சமாகக் கரையத் தொடங்கியது. சமையலறையிலிருந்து காபியின் மணம் பால்கனி வரை மெல்ல வீசத் தொடங்கியது.
விஷ்வா அவளது வாதங்களை எல்லாம் தன் புன்னகையாலேயே எதிர்கொண்டு, அவளை இன்னும் சற்றே தீவிரமாகத் தன் அணைப்பிற்குள் இழுத்துச் சமாதானப்படுத்த முயன்றான். அவளது முகவாயைத் தன் விரல்களால் மெதுவாக ஏந்தி, அவளது விழிகளை நேராகப் பார்த்து அத்தனை ஆழமாகக் கூறினான்:
“நிலா… உனக்காக, நீ ஆசைப்படுற அந்த எளிய வாழ்க்கைக்காக நான் இனிமேல் சினிமாவுல நடிக்கிறதைக் கூட நிறுத்திக்கிறேன். நீ என்னென்ன சின்னச் சின்ன விஷயங்கள் வேணும்னு ஆசைப்படுறியோ, அது அத்தனையையும் நான் உனக்குச் செஞ்சு தர்றேன். எனக்கு சினிமாவை விட உலகத்துல மத்த எல்லாத்தையும் விட நீதான் முக்கியம்,” என்றான் அவனது ஒட்டுமொத்தக் குரலிலும் உண்மையான காதல் தளும்ப.
அவனது இந்த அதிரடி முடிவைக் கேட்டதும் நிலா அடியோடு பதறிப் போனாள். உடனே அவனது மார்பில் தன் கைகளை வத்துத் தடுத்து பலமாக எதிர்த்தாள்.
“ஐயோ! என்ன பேசிட்டு இருக்கீங்க நீங்க? எனக்காக நீங்க நடிக்குறதை நிறுத்தக் கூடாது! கூடவே கூடாது! உங்களோட கோடிக்கணக்கான ரசிகர்களோட சாபத்தை எல்லாம் என்னால வாங்கிக்கவே முடியாது விஷ்வா சார். நானே ஒரு வெறித்தனமான ரசிகையா இருந்து, என் ஃபேவரைட் ஹீரோ ஒரு பொண்ணுக்காகத் தன் சினிமா வாழ்க்கையையே விட்டுட்டுப் போறார்னு தெரிஞ்சா… அந்தப் பொண்ணை நான் கண்டிப்பா சபிப்பேன்! அந்தப் பழி எனக்கு வேண்டாம்,” என்றாள் தன் கைகளை ஆட்டிப் படபடப்புடன்.
விஷ்வா அவளது பேச்சைக் கேட்டு லேசான அதிர்ச்சியோடு அவளது முகத்தைப் பார்த்தான். அவளது வார்த்தைகளில் இருந்த ஒரு குறிப்பிட்ட விஷயம் அவனது கவனத்தை ஈர்க்க, அவளது காதோரம் சரிந்த குழலை மெதுவாக ஒதுக்கிவிட்டு, “அப்போ… நீ இப்போ என் ரசிகை இல்லையா நிலா?” என்று குறும்புடன் கேட்டான்.
நிலா சற்றும் தயங்காமல், நேராக அவனது காந்தக் கண்களை உற்றுப் பார்த்து, “ஆமாம்! நான் நேத்தோட உங்க ரசிகையா இருக்குறதை நிறுத்திக்கிட்டேன்,” என்றாள் கறாரான குரலில்.
அவளது அந்தப் பதிலும், அதை அவள் சொன்ன தோரணையும் அவனுக்குள் ஒரு விசித்திரமான ரசாயன மாற்றத்தை ஏற்படுத்தியது. விஷ்வா சட்டென்று அவளைத் தன் வலுவான மார்போடு சேர்த்து இறுக்கமாக அணைத்துக் கொண்டான். அவளது இடுப்பைத் தன் கரங்களால் வளைத்து, அவளது முகத்தைத் தன் முகத்திற்கு மிக அருகில், தன் இதழ்களின் வெப்பம் அவள் மேல் படும் நெருக்கத்திற்கு இழுத்தான். அவளது காதோரம் தன் இதழ்களைக் கொண்டு சென்று, அந்த மெல்லிய காந்தக் குரலில் ரகசியமாய் முணுமுணுத்தான்:
“ஏன் நிலா? நேத்து நைட்டுக்கும் இன்னைக்கும் நடுவுல அப்படி என்ன நடந்துச்சு? ஏன் என் ரசிகையா இருக்குறதை நிறுத்திக்கிட்டே?”
அவனது அந்த மிக நெருக்கமான அணைப்பிலும், காதோரம் பாய்ந்த மூச்சுக்காற்றின் வெதுவெதுப்பிலும் நிலா தன் அத்தனை எதார்த்த வாதங்களையும், தர்க்கங்களையும் முற்றிலும் மறந்து போனாள். அவளது இதயம் அவனது அண்மையில் முற்றிலுமாகச் சரணடைந்து, தன் நெஞ்சுக்குள் ஒளித்து வத்திருந்த அந்த உண்மையான காரணத்தை உடைத்தது.
“ஏன்னா… எனக்கு ரொம்ப ரொம்ப பொசசிவ்னெஸ் அதிகம் விஷ்வா!” என்று தவிப்போடு அவனது சட்டையைப் பற்றிக் கொண்டாள். “நீங்க ஸ்கிரீன்ல வேற ஒரு ஹீரோயின் கூட ஜோடியா நின்னு ரொமான்ஸ் பண்றதை என் கண்ணால பார்க்கவே முடியாது! எனக்குப் பொறாமையா இருக்கும்!” என்றாள் தன் கீழ் இதழைக் கடித்து, ஒரு க்யூட்டான குழந்தையைப் போலத் தன் பொறாமையைக் கொட்டி.
அவளது இந்த வெள்ளந்தித் தனமான, உரிமையான பொறாமையைக் கண்டு விஷ்வாவுக்குள் காதல் கரைபுரண்டது. அவன் உரக்கச் சிரித்து, அவளது கன்னங்களைச் செல்லமாக வருடி, “நிலா… அது வெறும் நடிப்பு மட்டும்தான். கேமராவுக்கு முன்னாடி நான் பண்ற ஒரு வேலை, அவ்வளவுதான்,” என்றான் அவளைச் சமாதானப்படுத்தும் தொனியில்.
ஆனால் நிலா விடுவதாக இல்லை. தன் மனதில் இருந்த அடுத்த சந்தேகத்தை, ஒரு காதலியின் பிரத்யேக உரிமையோடு கேள்வியாகத் தொடுத்தாள், “நீங்க இப்போ என்னை எவ்வளவு அன்பா, காதலா பார்த்துட்டு இருக்கீங்களோ… அப்படித்தானே உங்க படத்துல வர்ற ஹீரோயின்களையும் பார்க்குறீங்க? நானே பார்த்திருக்கேனே… அவங்க கண்களைப் பார்த்தும் தானே இந்த மாதிரி காதல் வசனம் பேசுவீங்க? எல்லாரும் உங்களோட இந்த உருகின சாக்லேட் கலர் கண்கள் பார்க்குற காதல் பார்வைக்குதானே ரசிகைகளா இருக்காங்க… அப்போ நீங்க அதே மாதிரி என்னைப் பார்க்குற இந்தக் காதல் பார்வை மட்டும் நடிப்பு இல்லை, நிஜம்னு நான் எப்படி நம்புறது?” என்று தன் ஏக்கத்தையும் சந்தேகத்தையும் ஒன்றாகக் கலந்து கேட்டாள்.
விஷ்வா அவளது அந்தக் கேள்வியால் ஒரு கணம் முற்றிலும் ஸ்தம்பித்துப் போனான். ஒரு பெண்ணால், அதுவும் தன் காதலியால் மட்டுமே தன்னிடம் இப்படி ஒரு கேள்வியைக் கேட்க முடியும் என்பதை அவன் உணர்ந்தான். அவளது இரு கரங்களையும் பற்றித் தன் நெஞ்சோடு சேர்த்துக் கொண்டவன், அவளது விழிகளுக்குள் தன் ஆன்மாவையே ஊடுருவச் செய்வது போல அவளைப் பார்த்தவன், ஆழமாகவும் தீவிரமாகவும் சொன்னான்,
“நடிக்கும்போது என் கண்கள் அவங்களைப் பார்த்தாலும், அதுல எந்த உணர்ச்சியும் இருக்காது நிலா. அது வெறும் நடிப்பு மட்டும்தான், அங்கே உணர்வுகள் இருக்காது. ஆனா, நான் உன்னைப் பார்க்கும்போது… அது வெறும் கண்களோட பார்வை இல்லை நிலா. என் இதயத்துல, என் ஆத்மாவுல இருக்குற அத்தனை காதலையும், மொத்தப் பிரியத்தையும் என் கண்கள் வழியா உனக்கு மட்டுமே காட்ட நினைக்குற என்னோட உண்மையான, தூய்மையான ஆத்மார்த்தமான காதல்! இந்த விஷ்வாவுக்கு நடிக்கத் தெரியாத ஒரே இடம்… உன் முன்னாடி மட்டும்தான்!” என்றான்.
அவனது அந்த வார்த்தைகளின் பிரம்மாண்டமான ஆழத்தில், நிலா முற்றிலும் பேச்சு மூச்சின்றி, தன் வார்த்தைகள் அத்தனையையும் இழந்து, அவனது நெஞ்சோடு சாய்ந்து அப்படியே உறைந்து போனாள். அவனுடைய காதலின் நறுமண அவளுக்குள் நிரம்பி, அவள் உடல் பொருள் ஆவி அனைத்தையும் முற்றிலும் ஆட்கொண்டிருந்தது.
அவனது அந்த ஆத்மார்த்தமான வார்த்தைகளின் ஆழத்தில் நிலா முற்றிலும் பேச்சு மூச்சின்றிப் போனாள். தன் வாழ்நாளில் இப்படி ஒரு காதலை, இத்தனை தூய்மையான சொற்களில் கேட்க நேரிடும் என்று அவள் கற்பனையும் செய்து பார்க்கவில்லை. அவளது ஒட்டுமொத்த தர்க்கங்களும், பிடிவாதங்களும் அவனது இந்த ஒற்றை வாக்கியத்தில் தவிடுபொடியாகிப் போக, வார்த்தைகளை இழந்து அவனது மார்போடு சாய்ந்து அப்படியே உறைந்து போனாள். அவளது இதயம் விஷ்வாவின் இதயத்துடிப்போடு போட்டிப் போட்டுக் கொண்டு அதிவேகமாகத் துடித்தது. அவனது அணைப்பு தந்த பாதுகாப்பில், உலகையே மறந்து அந்தப் பரவச விநாடியின் உச்சத்தில் அவள் கண்மூடித் திளைத்திருந்தாள்.
ஆனால், அந்த மாயத் தருணம் வெகுநேரம் நீடிக்கவில்லை. சமையலறையிலிருந்து காபிக் கோப்பைகளுடன் மெதுவாக வெளியே வந்த பிரவீனும் அனன்யாவும், இவர்களின் ரொமான்ஸைக் கலைக்க மனமில்லாமல் அப்படியே வாசலிலேயே நின்றுவிட்டிருந்தனர்.
திடீரென நிலாவின் காதுகளில் அனன்யாவின் மெல்லிய சிரிப்பொலி விழ, அவளுக்குத் தன் சுற்றியிருந்த எதார்த்த சூழலின் நினைவு சுரீரென உரைத்தது. மெதுவாகத் தன் பார்வையைத் திருப்பி வரவேற்பறையை நோக்கியவள் அதிர்ச்சியில் உறைந்தாள்.
அங்கே பிரவீனும் அனன்யாவும் அவர்களின் காதலை, ஏதோ திரையரங்கில் ஓடும் ஒரு சுவாரஸ்யமான மெகா ஹிட் காதல் காவியத்தைப் பார்ப்பது போல, கைகளில் காபி கப்போடு கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தனர்! குறிப்பாக அனன்யா, “ஆஹா… என் தோழியின் காதல் தர்பார் சூப்பராக ஓடிக்கொண்டிருக்கிறதே” என்கிற ரேஞ்சுக்குத் தன் முகமெல்லாம் குறும்பான புன்னகையைத் தேக்கி, ஒரு தியேட்டர் நாடகத்தை ரசிப்பதைப் போல ரசித்துக் கொண்டிருந்தாள்.
அவ்வளவுதான்! அந்த விநாடி நிலாவின் கன்னங்கள் இரண்டும் தக்காளிப் பழத்தைப் போலச் சிவந்து போயின. வெட்கமும் கூச்சமும் அவளது உடலெங்கும் ஒரு சேரப் பாய, “ஐயோ… எல்லாரும் பார்த்துட்டாங்களே!” என்கிற பதற்றத்தில், சட்டென்று விஷ்வாவின் அந்த இறுக்கமான அணைப்பில் இருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, படபடப்புடன் நாலடி தள்ளிப் போய் நின்றாள். தன் கலைந்த கூந்தலையும் சுடிதாரையும் சரி செய்வது போலக் காட்டிக்கொண்டு, வெட்கத்தை மறைக்கப் பெரும்படு பட வேண்டியதாயிற்று அவளுக்கு. அவளது இந்தத் திடீர் மாற்றத்தைக் கண்ட விஷ்வாவும், தன் பின் தலையைக் கோதியபடி அந்தச் சூழலைச் சமாளிக்க ஒரு அசட்டுப் புன்னகையை உதிர்த்தான்.
அனன்யாவும் பிரவீனும் கூட சுதாரித்துக் கொண்டு அனைவருக்கும் காபியைக் கொடுக்க, அந்தத் தர்மசங்கடமான வெட்கத் தருணத்திலிருந்து மீண்டு, அவர்கள் அனைவரும் அந்தப் பென்ட்ஹவுஸின் விசாலமான பால்கனியில் வந்து அமர்ந்தனர். மாலையின் இதமான குளிர்ந்த காற்று வீசிக் கொண்டிருக்க, அங்கிருந்து பார்த்தபோது ஒட்டுமொத்த சென்னை நகரத்தின் அழகும், தூரத்தில் அலைமோதும் வங்காள விரிகுடாவின் பிரம்மாண்டமும் கண்கொள்ளாக் காட்சியாக விரிந்து கிடந்தது.
காபிக் கோப்பையிலிருந்து எழும்பிய புகையோடு, நிலாவின் மனதுக்குள் நீண்ட நாட்களாகக் குடைந்துகொண்டிருந்த அந்த இறுதி ரகசியக் கேள்வி அவளது உதடுகளைத் தாண்டியது. தன் கைகளில் இருந்த காபியை ஒரு சிப் குடித்துவிட்டு, விஷ்வாவை நோக்கித் தன் பெரிய விழிகளைத் திருப்பினாள்.
“விஷ்வா… எனக்குள்ள ரொம்ப நாளா ஒரு பெரிய சந்தேகம் இருக்கு,” என்று மெதுவாக ஆரம்பித்தவள், அவனது கண்களை ஆழமாக உற்றுப் பார்த்து, “நேத்து நைட் நம்ம வீட்டு டெரஸ்ல உங்களை நேர்ல பார்க்கிறதுக்கு முன்னாடி, நான் உங்களை டிவியிலயும் தியேட்டர்லயும்தான் பார்த்திருக்கேன். நாம அதுக்கு முன்னாடி பேசினதோ, பழகினதோ கூடக் கிடையாது. அப்புறம் எப்படி, எந்த இடத்துல வச்சு என்னை நீங்க முதல்முதலா பார்த்தீங்க? அதுவும் பார்க்காத என் மேல உங்களுக்கு எப்படி இவ்வளவு காதல் வந்துச்சு?” என்று தன் மனதைக் குடைந்து கொண்டிருந்த அந்தக் கேள்வியை கேட்டே விட்டாள் நிலா.
அவள் அந்தக் கேள்வியைக் கேட்டு முடித்த அடுத்த விநாடி… அந்தப் பால்கனியே ஒரு பயங்கரமான, விசித்திரமான மௌனத்தில் சட்டென்று உறைந்து போனது. அதுவரை வீசிக்கொண்டிருந்த காபி மணமும், கடற்காற்றின் வாசமும் ஒரு நொடியில் காணாமல் போய், அங்கே ஒரு விவரிக்க முடியாத பதற்றம் தொற்றிக் கொண்டது.
error: Content is protected !!