Skip to content
Post Views: 48
கண்ணாமூச்சி 25
அனன்யாவும் நிலாவும் வந்ததும், தயக்கமாய் “ம்ம், நிலா… விஷ்வா இப்போதான் கால் பண்ணினான், உங்களை அவனோட வீட்டுக்குக் கூட்டிட்டு வரச் சொன்னான்…” என்றான் தயக்கமாக.
“எதே, வீட்டுக்கு கூட்டிட்டு வரச்சொன்னாரா? யாரு உங்க ஃபிரெண்டா? எதுக்கு? முதல்ல அவர் கூப்பிட்டா நான் எதுக்கு போகணும், அதெல்லாம் வர முடியாது… முன்ன பின்ன தெரியாதவங்க வீட்டுக்குல்லாம் போற பழக்கம் எனக்கு இல்லை…” என்றால் நிலா கோபமாக.
மறுமுனையில் கேட்டுக் கொண்டிருந்த விஷ்வாவுக்குள் செல்லக் கோபம் எழுந்தது… “என்னது நான்… முன்னப் பின்ன தெரியாதவனா? நீ வா, உன்னைப் பேசிக்குறேன்…” என்று தனக்குள்ளேயே அவளை மிரட்டிக் கொண்டான்.
Advertisement
“இல்லை… உங்களை அங்க கூட்டிட்டுப் போகலைன்னா அவன் இங்கே வர்றேன்னு சொல்றான் நிலா, அது பெரிய சிக்கலாயிடும், பிளீஸ் புரிஞ்சுக்கோங்க…” கிட்டத்தட்ட கெஞ்சினான் பிரவீன்.
நிலாவுடன் உள்ளே வந்திருந்த அனன்யா, அங்கே என்ன நடக்கிறது என்று புரியாமல் இருவரையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தாள்.
“ப்ளீஸ், உன் ஃபிரெண்டுக்கு சொல்லு அனன்யா,” என்று பிரவீன் அவளைப் பார்க்க… நிலாவின் கோபத்தில் மிரண்டிருந்த அனன்யா எதுவும் சொல்லாமல் தலையைக் குனிந்து கொண்டாள்.
Advertisement
பிரவீனைப் பார்க்கப் பாவமாக இருந்தது நிலாவுக்கு, “சரி, சரி, வர்றேன், ஆனா தனியால்லாம் என்னால வர முடியாது… இது இந்த எருமை, துரோகி என்கூட வந்தா வர்றேன், இல்லைன்னா வரமாட்டேன்,” என்று அனன்யாவை காட்டிக் கூறினாள் நிலா.
Advertisement
சரி, கிளம்பலாம் என்று அனைவரும் கிளம்ப, “சரிடா… நாங்க கிளம்பிட்டோம், இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவோம்,” என்று அவன் ஃபோனை வைக்கப் போக, “ஃபோனை வீட்டுக்கு வர்ற வரைக்கும் ஆன்லையே வை, பிரவீன்” என்றான் விஷ்வா.
“என்னவோ போடா…” என்றபடி அதை அப்படியே பாக்கெட்டில் வைத்தவன்… கார் சாவியை எடுத்துக் கொண்டு கிளம்பினான்.
பிரவீன் காரைக் கிளப்பியதும், பின்சீட்டில் தன்னுடன் அமர்ந்திருந்த அனன்யாவைத் திரும்பியும் பாராமல் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்த நிலாவை, அனன்யா மெதுவாய் ஒரு விரலால் சுரண்ட, அவள் கையில் இருந்த ஃபைலால் அனன்யாவை சரமாரியாக அடிக்கத் தொடங்கினாள் நிலா,
Advertisement
“துரோகி, கழுத, எரும… உன்னால தாண்டி எல்லாம்… நீயெல்லாம் ஒரு ஃபிரெண்டா… துரோகி… உன்னைப் போயி நம்பினேனே… ஃபோன் நம்பரை கொண்டு அவர் கிட்ட குடுத்து என்னை சிக்கல்ல மாட்டி விட்டுட்டியே… என் வீட்டு அட்ரஸும் நீதான் குடுத்தியா… நீ குடுத்த தைரியத்துல தான் அவர் என்னைத் தேடி வீட்டுக்கே வந்துட்டாரா…” என்று பொரிந்து தள்ள…
அடிக்கும் அவள் கைகளைப் பிடித்துத் தடுத்த அனன்யா “எது… வீட்டுக்கு வந்தாரா? இது எப்போ நடந்துச்சு?” என்ற கேள்வியுடன் நிலவைக் குறுகுறுப்பாகப் பார்க்க…
“அச்சோ, இவளுக்குத் தெரியாதா… நான்தான் தெரியாம உளறிட்டேனா?” என்று தனக்குள்ளே முணுமுணுத்துக் கொண்டவள்… “அதெல்லாம் உனக்கெதுக்கு, நீ பேச்சை மாத்தாத… “ என்று அடிப்பதைத் தொடரப் போக,
அவளை மறுபடியும் தடுத்த அனன்யா, “என்னை அப்பறம் அடிக்கலாம்டி, நான் வேணா ரெண்டு நாள் லீவு போட்டுட்டு வர்றேன், நீ எவ்வளவு நேரம் வேணும்னாலும் ரெஸ்ட் எடுத்து எடுத்து அடி, இப்போ மேட்டருக்கு வா, விஷ்வா உன்னைப் பாக்க வீட்டுக்கு வந்தாரா? எப்போ வந்தார்? எப்படி வந்தார்? என்ன சொன்னார்? என்ன நடந்துச்சு? சொல்லு சொல்லு டீட்டெயிலா சொல்லு?” என்று சீட்டில் அவளை நோக்கித் திரும்பி உட்கார…
நிலா டிரைவர் சீட்டில் உட்கார்ந்திருந்த பிரவீனைப் பார்த்தபடி, “ம்ப்ச், அப்பறம் சொல்றேண்டி, இப்போ வாயை மூடிக்கிட்டு வா…” என்று முகம் சிவந்து தலையைக் குனிந்து கொண்டாள்.
“அடியே, வெக்கப்படுறியா…” என்று தோழியின் சிவந்த முகத்தை அனன்யா உயர்த்திப் பார்க்க, நிலா அவள் கையைத் தட்டிவிட்டு முகத்தைத் திருப்பிக்கொண்டாள்.
சில நொடிகள் தோழியின் வெட்கநிறம் பூசிய முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்த அனன்யா, அவள் மனதில் காதல் வேரூன்றி மொட்டு விட்டிருப்பதை உணர்ந்துகொண்டாள். மென்மையாக அவள் கையைப் பற்றிக் கொண்டவளின் மௌனமான துணை அவர்கள் விஷ்வாவின் அபார்ட்மென்ட் காம்ப்ளெக்ஸை எட்டும் வரை நீடித்தது.
பிரவீனின் கார் விஷ்வா வசிக்கும் அந்த அதிஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்திற்குள் நுழைந்ததிலிருந்தே நிலாவுக்குத் தலை சுற்ற ஆரம்பித்துவிட்டது. ஏதோ ஹாலிவுட் படத்தில் வரும் ரகசிய உளவு அமைப்பின் தலைமையகத்திற்குள் நுழைவதைப் போன்ற ஒரு பிரமை அவளுக்குள் ஏற்பட்டது.
காரை நுழைவாயிலிலேயே நிறுத்திய செக்யூரிட்டி, ஏதோ எல்லையில் ஊடுருவ வந்தவர்களைப் பார்ப்பது போல காரின் உள்ளே உற்று உற்றுப் பார்த்தார். வந்திருப்பது பிரவீன் தான் என்று தெரிந்தும், அவர் சும்மா விடவில்லை. தனது பதிவேட்டை எடுத்து, “யார்? எங்கிருந்து வர்றாங்க? ஏன் வர்றாங்க?” என்று அடுக்கடுக்கான கேள்விகளால் நிலாவையும் அனன்யாவையும் துளைத்தெடுத்தார்.
போதாததற்கு, விஷ்வாவுக்கே நேரடியாக இன்டர்காமில் அழைத்து, “சார்… பிரவீன் சார் கூட ரெண்டு பொண்ணுங்க வந்திருக்காங்க, உள்ளே விடலாமா?” என்று கன்பர்மேஷன் வாங்கிய பிறகே, ஏதோ நாட்டின் எல்லையைத் திறந்துவிடுவது போல கேட்டைத் திறந்தார். நிலா அனன்யாவின் காதைக் கடித்து, “ஏண்டி, ஒரு மனுஷன் வீட்டுக்கு வரதுக்கே இவ்வளவு பில்டப்பா?” என்று முணுமுணுத்தாள்.
ஆனால் இந்த அட்ராசிட்டி அதோடு முடிந்துவிடவில்லை. காரைப் பார்க்கிங்கில் நிறுத்திவிட்டு லிஃப்ட் இருக்கும் பகுதிக்குச் சென்றபோதுதான் நிலாவுக்கு அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது. அது சாதாரண லிஃப்ட் இல்லை, விஷ்வாவின் பென்ட்ஹவுஸுக்கு மட்டுமே பிரத்யேகமாகச் செல்லும் பிரைவேட் எலிவேட்டர்! பிரவீன் அதன் அருகே சென்று, ஏதோ வங்கியின் லாக்கரைத் திறப்பதைப் போல மிகவும் பவ்யமாகத் தன் கட்டைவிரல் ரேகையை வைத்தான். ‘டிங்’ என்று ஒரு சத்தத்துடன் லிஃப்ட் கதவு திறந்தது.
“அப்பாடா… உள்ளே வந்தாச்சு” என்று நிலா பெருமூச்சு விடுவதற்குள், பிரவீன் லிஃப்டிற்குள் இருந்த டிஜிட்டல் திரையில் ஏதோ விண்கலத்தை இயக்குவது போல ஒரு ரகசிய பாஸ்கோடை கடகடவென தட்டினான். அதன் பிறகுதான் லிஃப்ட் மேலே நகரவே ஆரம்பித்தது. நிலா தன் தலையைப் பிடித்துக் கொண்டாள். பக்கத்தில் நின்ற அனன்யாவோ, இதையெல்லாம் ஏற்கனவே ஒருமுறை பார்த்திருந்ததால் சாதாரணாமாகவே நின்றிருந்தாள்..
லிஃப்ட் நேராக விஷ்வாவின் பென்ட்ஹவுஸ் வாசலில் வந்து நின்றது. “காலிங் பெல் அடிக்கலாம் என்று தேட, அங்கே கதவில் ஒரு பிரம்மாண்டமான டிஜிட்டல் லாக் மிரட்டலாகக் கண்சிமிட்டிக் கொண்டிருந்தது. பிரவீன் மீண்டும் அங்கு சென்று, “யாரும் பாத்துடாதீங்க” என்கிற ரேஞ்சுக்குத் தன் கைகளால் மறைத்துக் கொண்டு, மறுபடியும் ஒரு ரகசிய பாஸ்கோடை டைப் செய்தான். ‘க்ளிக்’ என்ற சத்தத்துடன் அந்த ராட்சச மரக்கதவு மெதுவாகத் திறந்தது.
இந்த அடுக்கடுக்கான, தலைசுற்ற வைக்கும் அதிநவீனப் பாதுகாப்பைக் கண்டு நிலா முற்றிலும் மிரண்டு, வாயடைத்துப் போய் நின்றாள். கதவு திறந்ததும், உள்ளே எவ்வித பில்டப்பும் இல்லாமல் அவர்களை வரவேற்க ஒரு க்யூட்டான புன்னகையுடன் விஷ்வா நின்று கொண்டிருந்தான்.
அவனைக் கண்டதும், நேற்று நாள் முழுக்க அவன் தன்னைத் தவிக்கவிட்ட கோபமும், இந்த விவஸ்தை இல்லாத செக்யூரிட்டி சிஸ்டத்தின் மீதான எரிச்சலும் ஒன்றாகக் கலக்க, நிலா தன் இடுப்பில் கையை வத்துக் கொண்டு உடனடியாக அவனைப் வறுத்தெடுக்கத் தொடங்கினாள்.
“ஹலோ சார்! வெளிய பேசும்போது மட்டும், ‘எனக்கு எந்த ஆரவாரமும் இல்லாத, ரொம்பவும் எளிமையான, சாதாரண வாழ்க்கைதான் வாழப் பிடிக்கும்’னு டயலாக்கா பேச வேண்டியது. ஆனா நீங்க இருக்குற வீட்டுக்கு ஒருத்தர் வரணும்னாலே எழுகடல் ஏழு மலை தாண்டி வரவேண்டியதா இருக்கு… இந்த லட்சணத்துல இவருக்கு சாதாரணமான வாழ்க்கை வாழணுமாம்!” என்று உதட்டைப் பிதுக்கி, ஓப்பனிங்கிலேயே விஷ்வாவை அநியாயத்திற்கு வாரினாள்.
அவளது இந்த அதிரடிப் பேச்சைக் கேட்டுப் பிரவீனும் அனன்யாவும் அதிர்ச்சியில் வாயடைக்க, விஷ்வாவோ அவளது அந்தச் செல்லக் கோபத்தை ரசித்து வாய்விட்டுச் சிரிக்கத் தொடங்கினான்.
விஷ்வா நிலா தன் வீட்டிற்கு வந்தது கண்டு உள்ளுக்குள் பேரானந்தம் அடைந்தான். நேற்று நாள் முழுக்கத் அவளைத் தவிக்கவிட்ட கோபத்தில், வந்த உடனே மூச்சுவிடக் கூட நேரம் தராமல் படபடவென்று பொரிந்து தள்ளிய அவளது மழலைத்தனமான கோபத்தைப் பார்க்க அவனுக்கு அத்தனை அழகாக இருந்தது.
அவள் பேசி முடிக்கும் வரை தன் கண்களால் அவளையே ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தவன், சட்டென்று அவளது மென்மையான கரத்தைப் பற்றித் தன்னருகே இழுத்தான். அவனது திடீர் தீண்டலில் நிலாவின் படபடப்பு அப்படியே அடங்கி, அவளது இதயம் ஒரு விநாடி ஸ்தம்பித்தது.
“வா நிலா… வெல்கம் டு மை வேர்ல்ட்” என்றான் அவளது கண்களை ஆழமாக நோக்கி, தன் இதழ்களில் கசிந்த குறும்புப் புன்னகையுடன்.
அவளது கையை மெதுவாக விடுவித்தவன், பின்னால் திகைத்து நின்று கொண்டிருந்த அனன்யாவையும் பிரவீனையும் முகமலர்ச்சியோடு வரவேற்று, அனைவரையும் அந்த ஆடம்பரமான வரவேற்பறை சோபாவில் அமர வைத்தான்.
ஆனால், நிலாவோ சோபாவில் அமர்ந்த பிறகும் அமைதியாக இருக்கவில்லை. கண்ணுக்கெட்டிய தூரம் வரை பிரம்மாண்டமாய் விரிந்து கிடந்த அந்தப் பென்ட்ஹவுஸின் உள் அலங்காரத்தையும், அதன் பிரம்மாண்ட அளவையும் பார்த்து அவள் அடியோடு திகைத்துப் போனாள். ஏதோ ஒரு பெரிய அரண்மனைக்குள் வந்து அமர்ந்திருப்பது போன்ற வியப்புடன் தன் பெரிய கண்களை உருட்டி வீட்டைப் பார்த்தவள், சட்டென்று விஷ்வாவின் பக்கம் திரும்பி ஆச்சரியத்துடன் கேட்டாள்,
“வீட்டுல வேற யாருமே இல்லையா, உங்க அம்மா அப்பல்லாம் எங்க?” என்றாள் அவனிடம்.
விஷ்வா, அவங்கல்லாம் இங்க இல்லை” என்று கூற, “இவ்வளவு பெரிய வீட்ல நீங்க தனியாவா இருக்கீங்க? உங்க பேரண்ட்ஸ், ஃபேமிலி யாருமே இங்க இல்லையா? எங்க அவங்கல்லாம்?” ஒருவித கவலை தொனித்தது அவள் குரலில்.
விஷ்வாவைப் பற்றி, அவனது பின்னணியைப் பற்றி நிலா முதன்முறையாக இத்தனை அக்கறையோடு விசாரிப்பதைக் கண்டதும் அவனுக்குள் ஒரு மெல்லிய சந்தோஷச் சாரல் அடித்தது. தன் தோள்களைச் செல்லமாய் குலுக்கி, அவளை நோக்கி இன்னும் சற்றே நெருங்கி அமர்ந்து பேசத் தொடங்கினான்.
“என் அம்மா, அப்பா, ஃபேமிலி எல்லாரும் யுஎஸ்-ல இருக்காங்க நிலா. எனக்கு ஒரு அண்ணன், ஒரு அக்கா இருக்காங்க. சொல்லப்போனா, எங்க வீட்ல இருக்குற எல்லாருமே டாக்டர்ஸ். நான் மட்டும்தான் அவங்க பேச்சைக் கேட்காம, இந்த சினிமா இண்டஸ்ட்ரிக்குள்ள நுழைஞ்சு, இப்படி இவ்வளவு பெரிய வீட்ல தனியா மாட்டிக்கிட்ட பிளாக்ஷீப்,” என்று தன் வெண்ணிறப் பற்கள் தெரிய குறும்புடன் சிரித்துக் கொண்டே கூறினான்.
அவனது அந்த வெள்ளந்திப் புன்னகையும், தன் குடும்பத்தைப் பற்றி அவன் பகிர்ந்துகொண்ட விதமும் நிலாவின் நெஞ்சுக்குள் அவளறியாமலேயே ஏற்பட்டிருந்த மெல்லிய காதலை இன்னும் ஆழமாக விதைக்கத் தொடங்கியது.
error: Content is protected !!