Skip to content
Post Views: 63
அத்தியாயம்: 18
பிள்ளை வளர்ப்பிலேயே மிகவும் சிக்கலான மற்றும் உணர்ச்சி மிக்க கட்டம் என்றால் அது டினேஜ் பேரன்டிங் தான். அந்த வயதில் ஏறி இறங்கும் ஹார்மோன்களின் மாற்றத்தைச் சமநிலைக்குக் கொண்டு வரும் வழிகளைக் கற்றுக் கொண்டு விட்டாளோ, கற்றுப் கொடுக்கப்பட்டு விட்டாளோ அவர்களை அவர்களே பார்த்துக் கொள்வர்.
Advertisement
பிறந்து, பருவம் எட்டும் வரை பெற்றவர்கள் குழந்தைகளோடு குழந்தைகளாக வாழ வேண்டுமென்றால், பருவ வயதில் கண்டிப்புக் காட்டாத ஆசானாக, உலகை எதிர்கொள்ளும் துணிச்சலைக் கற்றுக் கொடுக்கும் குருவாக நடந்து கொள்ள வேண்டும். அவர்கள் பெற்றவர்களின் கண்கள் மூலம் தான் உலகைக் காண்பர் என்பதால் அந்தக் கட்டம் பிள்ளைகளைக் காட்டிலும், பெற்றவர்களுக்குத் தான் சவாலானது.
வளர்ந்த பிள்ளைகளின் மனத்தைப் படித்து, புரிந்து கொள்வதன் மூலம், வாழ் நாள் முழுவதும் பிள்ளைகளுடனான உறவு, அடிக் கரும்பாக இனிக்க வைக்க முடியும்.
Advertisement
Advertisement
இதைத்தான் ரிதன்யா பத்ரியிடம் கூறிக் கொண்டிருந்தாள்.
“இப்ப நான் என்ன பண்ணணும் சொல்ற?”
Advertisement
“உங்களுக்குள்ள இருக்குற இடைவெளிய குறைக்கணும். ‘யார் மிரட்டுனாலும், மிரட்டலன்னாலும் என்னை என் மாமா நம்புவாரு. நான் என்ன பண்ணாலும் எனக்காக வந்து நிப்பாரு’ங்கிற நம்பிக்கைய குடுங்க.” என்றபோது,
‘நான் அவளுக்கு அதைத் தரவில்லை என்று என்னைக் குற்றம் சுமத்துகிறாயா?’ என்றது அவனின் பாவனை. அதை அவனின் முகம் பார்த்து உணர்ந்தவள்,
“நான் உங்கள குறையா சொல்லல. நடந்ததுல உங்க தப்பு எதுவும் இல்லை. அதிதியோடதும் இல்லை.” என்று அவசியமாகச் சொன்னவள்,
“இது கொஞ்சம் கவனமா இருக்க வேண்டிய ஸ்டேஜ். நீங்களும் அந்த ஸ்டேஜ்ஜ தாண்டி வந்தவர் தான. உங்க உணர்வுகளையும் உணர்ச்சிகளையும் எப்படி பேலன்ஸ் பண்ணீங்கன்னு அவளுக்குக் கத்துக் குடுங்க. அவளப் புரிஞ்சுக்கவும் உங்கள புரிஞ்சுக்கவும் டயம் குடுங்க.” என்றவள் பிள்ளை வளர்ப்பு பற்றி, அவளுக்குத் தெரிந்ததைக் கூறினாள்.
முழுவதையும் கேட்டுத் தெரிந்து கொண்டவன், ஆழ்ந்த பெரு மூச்சு ஒன்றை இழுத்து விட்டு, எதையோ முடிவு செய்தது போல்,
“தேங்க்ஸ் தன்யா… ரொம்ப ப்ரெஸ்டேஷனா இருந்தது. உங்கிட்ட பேசுனதுக்கு அப்றம் மைண்ட் ரிலாக்ஸ் ஆயிடுச்சி. தேங்க்ஸ்.” என்று எழுந்து கொள்ள,
“அதிதி ரொம்ப நல்ல பொண்ணு. அவளோட ஆழ் மனசுல ஏதோ ஒரு ஏக்கம் இருக்கு. தேடல் இருக்கு. அதை அவளா உங்ககிட்ட சொல்ற அளவுக்கு, அவகூட உங்க நேரத்த செலவு செய்ங்க. நீங்க ஸ்பென்ட் பண்ற நேரம் தான் உங்க குடும்ப சந்தோஷத்துக்கான முதலீடு.” என்றாள்.
மென் புன்னகையுடன், தலையை அசைத்தபடி, குடித்த குழம்பிக்கு நன்றி சொல்லி விட்டுச் செல்ல, ரிதன்யா ஆசுவாசம் அடைந்தாள்.
வந்த காவலாளியை அவன் மறந்து விட்டான் என்றதால் வந்தது.
வேகமாக அலைபேசியை எடுத்து நடந்தவற்றைச் சுருதிக்குக் குறுஞ்செய்தியாகத் தட்டிக் கொண்டிருந்தாள்.
அதை அனுப்பி வைக்கும் முன் நிழலாடியது. தன் முன் வந்து நின்ற பத்ரியைக் கண்டு, மெதுவாக எழுந்து நின்றவள்,
“எதையும் மறந்திட்டீங்களா?” என்க, அவன் ஆம் எனத் தலையசைத்தான்.
“என்ன?” என்றன அவளது புருவங்கள்.
“உங்கிட்ட சாரி கேக்க மறந்திட்டேன்.” என்க, உறைந்து போய் நின்றாள் ரிதன்யா.
“அந்த வீடியோஸ்ல அவன் பேசுனதக் கேட்டு, நான் உன்னோட கேரக்டரா ஜர்ஜ் பண்ணிருக்க கூடாது. கண்ணால கண்ட காட்சி உண்மையா இருக்கணுங்கிற அவசியம் இல்லை. அதுலயும் ஒருத்தரோட குணங்கள்ல சேசியல் மீடியா மூலமா கணிக்க கூடாது. அதை நான் செஞ்சது… ரொம்ப பெரிய தப்பு. இனி அதைச் செய்ய மாட்டேன். உங்கிட்ட மட்டுமில்ல யார்கிட்டயும் மாட்டேன். முடிஞ்சா என்னை மன்னிச்சிடு தன்யா. ப்ளீஸ்…” என்று மன்னிப்பைக் கேட்டு இரு கரம் கூப்பியபடி நிற்க, ரிதன்யா திகைப்பூண்டு நின்றாள்.
மன்னிப்பு…
ஆண் கேட்பானா என்ன! இதுவரை அவளிடம் எந்த ஆணும் கேட்டது இல்லையே. அதுவும் மனப்பூர்வமாக தவறு என்று உணர்ந்து அல்லவா கேட்கிறான் இவன்.
அண்ணன், அப்பா, விக்ரம், மாரி என்று அவள் அறிந்த வட்டத்தில் யாரும் அப்படிக் கேட்டது இல்லை. ஏன் மனைவியை நேசிக்கும் மாரி கூட, “சரி விடு… இனி செய்யல.” என்பானே தவிர, நடந்து கொண்டதற்கான வருத்தத்தைக் கூட தெரிவிக்க மாட்டான். இனி நடக்காது என்று உத்திரவாதம் அளித்தாலும். அதைப் பின்பற்றுவானா என்பதை மைதிலியிடம் தான் கேட்க வேண்டும்.
சுற்றிப் பார்வையைச் சுழல விட்டாள். இடைவேளை நேரம் இல்லை தான். ஆனாலும் சிலர் குழுமித்தான் இருந்தனர். அத்தோடு நான்கைந்து கேமராக்கள் வேறு இருந்தன.
பொதுவெளியில் பிறர் பார்ப்பார்கள் என்ற கவலையில்லாது இரு கரம் கூப்பி, “என்னை மன்னிச்சிடு தன்யா.” என்று கேட்கும், ஆணை எந்த வகையில் சேர்ப்பது என்று புரியாது நின்றாள் ரிதன்யா.
‘என்ன சொன்னான்? தன்யா வா!!’
ஆரம்பம் முதல் அவளை ஒருமையில் தான் விளித்திருந்தான். தன்னை விட வயதில் பெரியவன் என்பதால் அதைக் கண்டு கொள்ளாது இருந்தவள், இன்று தன்யா என்று அழைத்தது எதுவோ போல் இருந்தது. உரிமையுடன் அழைப்பது போன்ற பின்பம் தோன்றியது.
இவன் எதற்கு என்னை உரிமையோடு அழைக்க வேண்டும்? முதலில் இவன் எதற்கு இவனின் வீட்டு விசயங்களை என்னுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும்? என்ற கேள்விகள் பிறந்து, குழப்பத்தையே தந்தது அவளுக்கு.
அவள் தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்கும் போதே, “தன்யா! நீ தனியா எங்கயும் போக வேண்டாம். எது விசாரிக்கிறதா இருந்தாலும் வீட்டுக்கே வரட்டும். அம்மா பாத்துப்பாங்க. அங்க போனா உன்னை தேவையில்லாம அலைக்கழிப்பானுங்க.” என்றவன்,
“சீ யூ… பை தன்யா…” என்று விட்டு சென்று விட்டான்.
அவனுக்குத் தெரிந்திருக்கிறது. விக்ரமின் மரணம் எப்படி நடந்தது என்று தெரிந்திருக்கிறது. அதற்கு என்னைக் குறை சொல்லாமல் சாதாரணமாக பேசுறானே! எப்படி?
‘சாதாரணமாக இல்லை. அவன் நட்பாக பேசுகிறான். சுருதியிடம் இப்படித்தான் புன்னகைத்துப் பேசுவான். அவளிடமும் அவன் உரிமை எடுத்துக் கொள்வதைப் பார்த்திருக்கிறாய் தானே! பிறகு ஏன் அவனைச் சந்தேகக் கண்ணோடு பார்க்கிறாய்?.’ என்று இடித்தது மனம்.
ஆனாலும், எதற்காக இந்தத் திடீர் வருகை? ஏன் உரிமை?
‘நட்புக் கரம் நீட்டுகிறானா? இல்லை உதவி கேட்கிறான். அவனின் அக்கா மகளின் நல்லதுக்கான உதவி கேட்கிறான். அதற்கு தான் இந்த சாரியும் நன்றியும். மற்றபடி எதுவுமில்லை. கண்டதையும் நினைக்காதே.’
பத்ரி வந்து பேசியதற்கானத் காரணத்தை ஆராய வேண்டி தறிகெட்டு ஓடிய மனத்திற்கு கடிவாளம் இட்டு நிறுத்தி வைத்தாள்.
அவளிடம் கருணையாக, பரிவாக, அனுதாபமாக, வந்து பேசும் ஆண்களிடம் கவனமாக இருக்க வேண்டும் என்று வாழ்க்கை வலிக்க வலிக்க பாடம் கற்பித்திருந்தது.
கணவன் சரியில்லை என்று தெரிந்தால் போதுமே, ஆறுதலாக நான் இருக்கிறேன் என்றும், ‘உனக்குப் புருஷன் பிரச்சனை எனக்குப் பொண்டாட்டி பிரச்சனை. நாம ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலா அரவணைப்பா இருப்போம்’ என்று நெருங்கி, கள்ள உறவுக்கு நேரடியாகவே அழைத்தனர் சிலர். சிலர் மறைமுகமாக, இன்னும் சிலர் விடும் மிரட்டல்களைக் கூட கண்டிருக்கிறாள்.
ஆதலால் தன் கஷ்டங்கள் கவலைகள் என்று எதையும் எவரிடமும் பகிர்வதில்லை. அதே நேரம் யாரின் கஷ்டங்களுக்கும் காது கொடுப்பதில்லை.
எதைக் கேட்டாலும் அசைய மறுக்கும் இறைவன் சந்நிதி தான் அவளின் மனக்குமுறலைக் கொட்ட கிடைத்த ஒரே இடம்.
தன் வீட்டு விசயங்களைப் பகிர்ந்து செல்லும் பத்ரியும் அந்த கேட்டகரியா? என்று யோசிக்க,
இல்லை என்றது அவளின் மனம். அவனின் கண்ணியமான பார்வையும், கறாரான, வெளிப்படையானப் பேச்சும் அவனைத் தவறாக சித்தரிக்கத் தோன்றவில்லை. அனைத்திற்கும் மேலாக அவன் குடும்பத்தை நேசப்பவன். அவனால் தனக்கும், தன் குடும்பத்திற்கு கெட்ட பெயர் வரும்படியானக் காரியங்களை யோசிக்க கூட முடியாது.
அப்படியெனில் என்னிடம் வந்து பேச வேறு என்ன காரணம் உள்ளது? ஏதாவது ஒரு மனோதத்துவம் மருத்துவரிடம் ஆலோசனை கேட்டாளே தந்திருப்பார்கள். அவனுக்குத் தெரியாத ஆள்களா? அவர்களையெல்லாம் விடுத்து தன்னிடம் ஏன்? என்று குழம்பிக் கொண்டிருந்தாள்.
தனியாக பெண் பிள்ளையுடன் இருக்கிறாள் அல்லவா!! எங்கெங்கோ சென்றது அவளின் எண்ண ஓட்டங்கள்.
அது ஓடி முடிக்கட்டும். ஏன் இந்த மாற்றம் பத்ரிக்கு என்று பார்த்து விடலாம்.
நேற்று மாலை, விறுவிறுவென படியேறிய ரிதன்யாவைக் கண்டவன், வந்திருந்த இரு காவலர்களில் ஒருவரிடம், எதற்காக தங்கள் வீடு தேடி வந்தீர்கள்? என்று வினவ,
“ஒரு தற்கொல கேஸ் சார்… இந்தம்மா புருஷன். ஒழுங்கா வா… வாழலாம்னு கூப்பிட்டிருக்கான். வர மாட்டேன்னு சொல்லிடுச்சாம். அதான், சாகப் போறதா யூட்யூப்ல லைவ் போட்டிட்டு செத்திட்டான். ஒரு உசுரு போய்டுச்சி. அதான் விசாரிக்கிறோம். நாங்கூட தெரியாது அதுனால தான் புருஷன காப்பாத்த வரலன்னு நினைச்சேன். வந்து பேசிப் பாக்கும் போது தான் தெரிஞ்சது, சாகட்டும்னே வராம இருந்திருக்கு. புருஷன் செத்துட்டான்னு கொஞ்சம் கூட வருத்தமில்ல அந்த மூச்சில.” என்றுவிட்டு சென்றார்.
வேகமாக விக்ரமின் சமூக வலைதளப் பக்கங்களை ஆராய்ந்து, விக்ரம் கடைசியாக வெளியிட்ட காணொளியைத் தேடிப்பிடித்தான்.
அந்தக் காணொளியைக் காவல் துறை நீக்கியிருக்க வேண்டும். ஆங்கிலத்தில், தகவல் இல்லை என்று சொல்லியது அது.
அதில், தன் வாழ்க்கைப் பாழாய்ப் போனதற்காக, ரிதன்யாவையும், அவளின் குடும்பத்தைக் குற்றம் சாட்டிக் கொண்டிருந்தவன், இருபத்தி நான்கு மணி நேரம் வழங்கி,
“நாளைக்கி இந்த நேரம் இந்த உலகத்துல எங்க இருந்தாலும், என் மனைவியும் எம்பிள்ளையும் எங்கண்ணு முன்னாடி இருக்கணும். அவளோட குடும்பம் கூட்டீட்டு வந்திருக்கணும். இல்லன்னா…” என்று, மனைவிக்குக் காலக் கெடு விதித்திருந்தான்.
கொடுத்த காலம் முடிந்த தருணத்தையும் நேரலையில் பதிவிட்டிருக்கிறான். அதாவது அவனின் தற்கொலையை.
காவலதிகாரி கடைசியாக உதிர்த்துச் சென்ற வார்த்தையிலேயே மனம் நின்றது பத்ரிக்கு.
உயிரின் மதிப்புத் தெரியாதவள் என்று நினைத்தான்.
“என்ன டா பேசிட்டு இருந்த அந்த போலிஸ்காரன் கிட்ட?” என்று சுதா வினவ, அவரிடம் விக்ரம் செய்து கொண்ட தற்கொலையைப் பற்றிக் கூறினான்.
“கொஞ்சம் கூட அனுசரிக்கிற திறமையே இந்தக் காலத்துப் பொண்ணுங்களுக்கு இல்லை. நான் நான்னு எப்ப பாத்தாலும் சுயநலமாவே சிந்திக்குதுங்க. எல்லாம் சம்பாதிக்கிற திமிர். குடும்பம், பெத்தவங்கன்னு பாக்குறது இல்லை. சகிப்புத்தன்மை சுத்தமா கிடையாது. ச்ச…”
“அதுக்காகப் பொருத்தமில்லாத ஆள் கூட காலம் முழுக்க வாழ முடியுமா? அதுலயும் இப்படி ஊரறிய அசிங்கப்படுத்தி பொண்டாட்டிய பணிய வைக்கணும்னு நினைக்கிறவன் கூடலாம் வாழவே முடியாது. அந்தப் பொண்ணு விவாகரத்து பண்ணதுல தப்பே இல்லன்னு சொல்வேன்.” என்க, அவரை நிமிர்ந்து பார்த்தவன்,
“அவளுக்கு விவாகரத்து ஆனது தெரியுமா உங்களுக்கு?”
ஏனெனில் அவன் அதை அவரிடம் இதுவரைச் சொல்லவில்லை. அவளும் அதை விளம்பரப்படுத்தியிருக்க மாட்டாள் என்று நினைத்தான்.
“ஏன் தெரியாது! வந்த ரெண்டாவது நாளே சொல்லிடுச்சி, ‘நான் விதவை கிடையாது. விவாகரத்தானவ. என் முன்னாள் புருஷன் உயிரோட தான் இருக்கான். செத்திட்டான்னு பொய் சொல்லி வீட்ட பேச்சிட்டோம்’ன்னு.”
“நீ எப்படிம்மா சும்மா விட்ட? பொய் சொல்லி ஏமாத்திருக்காம்மா! இப்படிப் பட்ட ஆளுங்களுக்கு வீட்ட விடக் கூடாதும்மா. இவ கொலயாளிக்குச் சமம். நடந்த கல்யாணத்த, மதிக்காம தான் தோன்றித் தனமா திரியுறவளுக்கு நம்ம வீட்டுல இடம் கொடுத்திருக்கீங்க. பாரு இத…” என்று காணொளியைக் காட்டியவன்,
“பாக்க நல்லவனாட்டம் தான் இருக்கான். படிச்சவன் போல. பொண்டாட்டி பிள்ள மேல எவ்ளோ உயிரா இருக்கான்னு அவனோட பேச்சிலேயே தெரிஞ்சுக்கலாம். எதுக் கெடுத்தாலும் எம்பொண்ணு எம்பொண்ணுன்னு உருகுறவன்ட்ட இருந்து பிள்ளைய பிரிச்சி கூட்டீட்டு வந்திருக்கா.
இப்ப செத்திட்டான்…
கூட குறையா இருந்தாலும் விவாகரத்துச் செய்யாம அட்ஜஸ்ட் பண்ணி வாழ்ந்திருந்தா இன்னேரம் உயிரோட இருந்திருப்பான். பிள்ள குட்டி கூட நல்லா வாழ்ந்திருப்பான். அவன இவ தான் சாகடிச்சிட்டா. கல்யாணம்னு ஆகிட்டா, அவன் கூடத் தான வாழ்ந்தாகணும். இப்படிப் பிரிஞ்சி போறதுல யாருக்கு என்ன கிடைச்சிடப் போது.” வெறுப்போடு சொன்னவனுக்கு அதே வெறுப்போடு பதில் தந்தார் சுதா.
“உங்கக்காவும் தான் கட்டி வச்ச கல்யாணத்துக்கு உண்மையா இருந்தா! அவளுக்கு என்ன கிடைச்சது. பத்தினி தெய்வங்கிற பேரா?” என்றவிட்டு மகளின் புகைப்படச் சட்டத்தின் முன் கண்ணீருடன் நின்றார்.
“எம்பொண்ணும் விவாகரத்து முடிவ தைரியமா எடுத்திருந்தா இன்னேரம் உயிரோட இருந்திருப்பா.” என்றார் தழுதழுத்த குரலில்.
அது அவனைக்குப் பிடிக்கவில்லை.
“ம்மா… யார யார் கூட கம்பேர் பண்றீங்க? வாழவே மாட்டேன்னு விவாகரத்து செஞ்சவளும், அத்தானுக்காகவே வாழ்ந்த எங்கக்காவும் ஒன்னா?” என்று கோபத்துடன் தான் கேட்டான்.
“ஒன்னு கிடையாது தான்டா. ஒன்னா இருந்திருந்தா நான் சந்தோஷப்பட்டிருப்பேன். ரிதன்யாவுக்கு இருக்குற தைரியம் உங்கக்காக்குக் கிடையாது. அது இருந்திருந்தா கோழை மாதிரி தற்கொலை செஞ்சிருக்க மாட்டா. நிஜத்த சந்திக்க முடியாம பயந்து செத்திட்டா.
இல்லன்னா உங்கக்கா உயிரோட இருந்திருப்பா. எம்பொண்ணும் எங்கண்ணு முன்னாடி நடமாடிருப்பா. எம்பேத்திக்கு அம்மா இருந்திருக்கும்.” என்றவருக்குப் புத்திர சோகத்தில் உடல் நடுங்கியது.
“புருஷெ புருஷன்னு தகுதி இல்லாதவனுக்காகப் பாத்து பாத்து, சமூகம் என்ன சொல்லும்னு பயந்து பயந்து தான்… இன்னைக்கு ஃபோட்டோ ஃப்ரேம் குள்ள கிடக்கா. அம்மாயி அநாதையா வளந்தா…. வளருறா…” என்றார் ஆற்றாமையாக.
“அம்மா… அதி எப்படி அநாதையாவா? அவளுக்கு நான் இருக்கேன். நீங்க இருக்கீங்க.”
“யார் இருந்தாலும், இருக்க வேண்டியவங்க கூட இருந்திருக்கணும் டா… நீ இல்ல. நீ கல்யாணம் பண்ணிக்கிட்டாலும் பண்ணலன்னாலும் நாளைக்கி அவளுக்குன்னு இருக்குற வாழ்க்கைய உன்னால வாழ முடியாது. அவ இழந்தத உன்னால குடுக்க முடியாது.” என்று உணர்ச்சி மிகுதியில் பேச,
அவரின் இயல்பை மீறிய பேச்சில் ஒரு கணம் சுதாரித்தவன், அவரின் பேச்சு வீச்சில் அதிர்ந்து தான் போனான்.
“கல்யாணம், புருஷனும் பொண்டாட்டியும் காலம் முழுக்க ஒன்னா இருக்க வேண்டிய உறவு. ஆனா அது ஒருத்தருக்கொருத்தார் தண்டனையா மாறிடக் கூடாது. கட்டிக்கிட்டோங்கிறதுக்காக கடைசி வரை சகிச்சிக்கிட்டும், அனுசரிச்சிட்டும் மட்டுமே இருந்திட முடியாது. அவங்கவங்களுக்குன்னு தனிப்பட்ட வாழ்க்கை இருக்கு. விருப்பு பொறுப்பு இருக்கு. அதுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுத்து பிணைஞ்சி வாழணும்.
அமையுற வாழ்க்கைத் துணை, பாரமா தெரியும் போது இறக்கி வைக்கிறதுல எந்தத் தப்பும் இல்லை. இதை எம்பொண்ணுக்கு நான் சொல்லிக் குடுக்காம விட்டுட்டேன்.” என்றவருக்கு மகள் தற்கொலை செய்து கொண்டதில் ஆத்திரம்.
இதுவரை எதையும் வெளிக்காட்டாதவர், இன்று உடைப்பெடுத்து பொங்கினார்.
மகளைக் கோழை என்று சாடியவருக்கு ரிதன்யாவின் துணிவு பிடித்திருந்தது. தன் மகளுக்காக திடமாய் அக்னிச் சுவாளையாக ஒளி வீசியவளின் உறுதி அவரை ஈர்த்தது.
தன் மகள் செய்யத் தயங்கியக் காரியத்தைச் செய்து, இன்று மகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து கொண்டிருக்கும் ரிதன்யாவைப் பார்க்க பார்க்க, மகளின் மீதிருக்கும் கோபம் கனலென கன்றி புகை விட்டுக் கொண்டே இருந்தது.
இன்று, மகன் ரிதன்யாவின் முடிவை விமர்சித்து, அவளின் மீது தான் தவறு என்று பேசியதும், எரிந்து விட்டார்.
வேகமாக வீட்டை விட்டு வெளியே வந்தவனுக்கு, டிக் கடையில் நின்றிருந்த மற்றொரு காவலர் கண்ணில் பட்டார்.
முதலாவது காவலாளி ரிதன்யாவைக் குறை கூறினான் என்றால் இவன் விக்மரைக் கூறினான். வயது சற்று முதிர்ந்தவர் போலும். பெண் பிள்ளைக்கு அப்பனாக இருக்க கூடும். அவரின் அனுபவம் பேசவைத்தது.
“சாக மாட்டோம்ங்கிற நம்பிக்கைல தான் கயித்த மாட்டிருக்கான் தம்பி. அவனோட ஃப்ரெண்ட்ஸ், நாலஞ்சி பேர பைக்ல, ஆட்டோல ரெடியா நிக்க வச்சிருக்கான். உடனே ஹாஸ்பிட்டல் போய்ச் சேருற மாதிரி ஆம்புலன்ஸ்லாம் ஏற்பாடு செஞ்சிட்டு தான், தூக்க மாட்டுற திட்டத்தையே போட்டிருக்கான்.
அடுத்த தெருல மல்டி ஸ்பெசாலிட்டி ஹாஸ்பிட்டல் இருந்தும் அவன் செத்திருக்கான்னா அத விதின்னு தான் சார் சொல்லணும்.” என்றவர் விக்ரம் இறந்து போனதை விவரித்தார்.
‘தன்னுடன் வாழ மாட்டேன் என்று விவாகரத்து வாங்கிச் சென்றவளை அவமானப்படுத்தி தலைகுனிய வைக்க வேண்டும். நான் இங்கு தவியாய்த் தவிக்க, அங்க மட்டும் அவள் நிம்மதியுடன் இருந்து விடலாமா!.’ என்று திட்டமிட்டு செய்ய, கடவுள் திட்டம் வேறாக இருந்தது.
சில நிமிடங்கள் தான் கயிற்றைக் கழுத்தில் மாட்டி, துடிப்பது போல் நடித்தான். அவள் வரப் போவதில்லை என்றதும் நேரலையைத் துண்டித்து விட்டு, அவளின் தந்தைக்கு அழைத்து மிரட்டிக் கொண்டிருந்தான்.
அப்பொழுது குரல் கமர, அடுத்த சில நிமிடங்களில் மூச்சு விட முடியாது போனது. அவன் கழுத்தில் போட்ட சுருக்கு, மூச்சுப் பாதையில் வீக்கத்தை உண்டாக்கியருக்க வேண்டும். கஷ்டப்பட்டு மூச்சை விட்டவன், மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டான். ஒரு முறை இழுத்த மூச்சை வெளியே விடவே நெஞ்சு விடைத்துக் கொண்டு, நுரையீரலே வெளியே வந்து விடும் அளவுக்கு இருந்தது. துடியாய்த் துடித்தான். பல மருத்துவர்கள் பல மணி நேரம் போராடிப் பார்த்தனர். ஆனால் தரையில் இட்ட மீனாய் துடிதுடித்து இறந்து போனான்.
அதைக் கேட்டவனுக்கு காவலர் சொன்ன விதி தான் நினைவு வந்தது. எது நடக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறதோ அது நடந்தே தீரும்.
“ஒரு மனுசன் சாவுல நிம்மதி கிடைக்குதுன்னா அவன் எவ்ளோ கஷ்டத்தைக் குடுத்திருப்பான்.” என்று விட்டுச் சென்றார்.
உண்மை தானே. அன்று விக்ரம் இறந்து விட்டான் என்ற போது அவளின் குரலில் எவ்வித சலனமும் இல்லையே.
எப்படி வரும் இப்படிப்பட்ட சைக்கோ உடன் வாழ்ந்தால் இரக்கமும் கருணையும் வர மாட்டேன் என்று ஒதுங்கிக் கொள்ளாது!
பத்ரிக்குள் உள்ளுக்குள் சிறு சுணக்கம். நடந்தவைகள் முழுதாகத் தெரியாது, அவளை விமர்சித்து, ஏதோ தவறு செய்து விட்டதைப் போல் தோன்றியது. அவளிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். காலையில் அதற்கு தான் முயன்றான். ஆனால் அவள் ஓடி விட்டாள். பள்ளிக்குச் சென்றான்.
அவள் வருகைக்குக் காத்திருக்கும் போது தான், ஐஜி அலுவலகத்தில் இருந்து அழைப்பு வந்தது. அவர்களால் அதிதி மிரட்டலுக்குள்ளாக வாய்ப்பிருக்கு என்று எச்சரிக்கை செய்ய, அரண்டு போனான் பத்ரி.
அன்று அதிதியின் நலத்தை மட்டுமே வலியுறுத்தி எச்சரித்த ரிதன்யாவிடம் பேசினால் நல்லது என்று யோசித்தான். அவன் நினைத்தது போலவே அவளிடம் பேசியது அவனுக்குள் தெளிவை தந்திருந்தது. நல்ல மாற்றத்தைத் தந்திருந்தது.
அந்த மாற்றம் இருவருக்கும் நன்மை தரக் கூடியதாக இருக்குமா?
கானம் இசைக்கும்…
error: Content is protected !!