Skip to content
Post Views: 3,153
அத்தியாயம் 16
காலை ஏழு மணிக்கு அந்த கோவிலின் வாசலில் அந்த உயர் ரக ஏ சி பேருந்து வந்து நின்றது. உள்ளே இருந்து கல்யாண கோஷ்டி இறங்கியது. எல்லாம் பார்த்து இறங்குங்க என்று கூறி கொண்டே முதலில் இறங்கினார் முருகம்மை ஆச்சி. வீரவேல் லலிதா திருமணம் இன்று. பெண் வீட்டில் கல்யாணம் நடப்பது தான் முறை. அதனால் முருகம்மை ஆச்சி தங்கள் சொந்த பந்தங்களுடன் வந்திறங்கினார். ஆளாளுக்கு தனியே கார்ல வர வேண்டாம், சேர்ந்து பஸ்ல போவோம் என்று அவர் கூறியதற்கிணங்க, இரண்டு சிறப்பு பேருந்து ஏற்பாடு செய்திருந்தார் அருண். சென்னையில் இருந்து வருபவர்களுக்கு தனியே ஒரு பேருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
Advertisement
மாப்பிள்ளை அழைப்பு கோவிலில் இருந்து தான் துவங்கும். அதனால் முக்கிய சொந்தங்கள் கோவிலில் வந்து இறங்கினார்கள். மற்ற இரண்டு பேருந்துகள் நேரே மணமகள் இல்லத்திற்கு கொஞ்சம் நேரம் கழித்து வருமாறு ஏற்பாடு செய்திருந்தார்கள்.
பெண் வீடு அரண்மனை போல இரண்டு தெருக்கள் அடைத்து கட்டப்பட்ட அந்த காலத்து வீடு. பெரிய வீடு என்பார்கள். தாத்தாவின் தாத்தா காலத்து வீடு. அணைத்து ஆண் சந்ததிகளுக்கும் பங்கு இருக்கும். யார் வீட்டில் கல்யாணம் என்றாலும் அங்கு தான் செய்வார்கள்.
Advertisement
Advertisement
செவ்வாய் ஜாதகம் என்பதால் வீராவிற்கு பெண் கிடைப்பது சற்று தாமதமாகியது. லலிதாவின் ஜாதகம் பொருந்தி இருக்கவும், லலிதாவின் ஜாதகப்படி அந்த மாதத்திலே திருமணம் வைக்க வேண்டும் என்று ஜோசியர்கள் கூறியதாலும், இருபது நாட்களில் விரைவாக ஏற்பாடு செய்யப்பட்டது.
பெரியவர்கள் பார்த்து சொன்னால் போதும் என்று விட்டான் வீரா.
Advertisement
இருபது நாளில் திருமணம் என்பதால், வேலைகள் அனைவரையும் இழுத்து கொண்டது.
சேந்தன் விசாகாவுடன் தான் பெரும்பாலும் இருந்தான். வள்ளிமயில் சாலாவுடன் அவர் கூறுவதை எல்லாம் அழகாக செய்து கொண்டிருந்தாள்.
“மயிலு மாதிரி லலிதாவும் நம்மளோட ஒத்து இருக்கனும் தெய்வா” என்றார் வள்ளி தெய்வாவிடம்.
“எனக்கு மூனு மருமகளுங்க.. சாலா மாதிரி நீங்க இருன்னு நான் எப்பயாச்சும் சொல்லி இருக்கேனா? இல்ல உங்கள மாதிரி இருன்னு சாலாகிட்ட சொல்லி இருக்கேனா?” திடீர் என்று கேட்ட மாமியார் குரலில் திரு திருந்தனர் இருவரும்.
“இல்ல அத்தை.. மயிலு எப்படி ஒத்து போகுதுன்னு பெருமையா தான் சொன்னேன்”
“அஞ்சு விரலும் ஒரே மாதிரி இருக்காது வள்ளி.. ஆனாலும் ஒரு விரல் இல்லனா சிரமம் தானே. குடும்பமும் அதே மாதிரி தான். ஒரு ஒருத்தர் ஒரு மாதிரி.. எல்லார்கிட்டயும் இருக்கிற நல்லதை பார்த்தா குடும்பம் சீரா போகும். ரெண்டு மருமகளையும் சமமா பாரு .. ஒப்பிட்டு பார்க்கக்கூடாது.. உன் நல்லதுக்கு தான் சொல்றேன்” என்று உள்ளே சென்றுவிட்டார்.
“இங்க நாமளே டம்மி பீஸ்.. ஆனா அட்வைஸ்க்கு ஒன்னும் குறைச்சல் இல்லை” என்று இருவரும் நொடித்து கொண்டே உள்ளே மாமியார் பின் சென்றார்கள்.
மீனாவிற்கு பெருமை பிடிபடவில்லை. அவர் மூலம் வந்த சம்பந்தம் இது, பெரிய இடம், பெண் பார்ப்பதற்கு அவ்வளவு அழகாக இருப்பாள்.
“வீரா, பாரு உனக்கு ஆயா எப்படி பொண்ணை பிடிச்சு கொண்டாந்திருக்கேன்” என்று பெருமை பீத்தி கொண்டே இருந்தார்.
அன்னம், சுந்தரம், முத்து, வெற்றி, சுப்பு, கதிர், பாலு, விசாகா, சேந்தன் என்று இவர்கள் ஒரு புறம் அமர்ந்து கொண்டார்கள்.
திருப்பூட்டு தட்டு எல்லாம் தயாராக இருந்தது. பெண் வீட்டில் இருந்து வந்து மாப்பிள்ளைக்கு மோதிரம் சங்கிலி அணிவித்து மாலை போட்டு அழைத்து செல்லவேண்டும். காலை எட்டு மணி முஹூர்த்தம். அனைவரும் காத்துக்கொண்டிருந்தார்கள். எட்டு மணிக்கு இன்னும் இருபது நிமிடங்களே இருந்தது, இன்னும் யாரும் வரவில்லை.
“செந்தி, பொண்ணு வீட்டுக்கு போன் போட்டு பாரு” என்றார் முருகம்மை ஆச்சி.
யாரும் அலைபேசி எடுக்கவில்லை. ஏதோ சரி இல்லை என்று புரிந்தது. “ஒரு நட யாராவுது போய் பார்த்துட்டு வாங்க” என்றார் சாலா.
உடனே முத்துவும் கதிரும் கிளம்பினார்கள். இரண்டு தெரு தள்ளி தான் பெண் வீடு.
இவர்கள் கோவில் வாயிலுக்கு வரவும் அரக்க பறக்க ஒரு பெண் ஓடி வந்தாள். மூச்சு வாங்கியது, முகத்தில் பதற்றம,. யாரிடம் போவது என்று சுற்றி பார்த்து, நேரே சாலாவிடம் வந்தாள் அந்த பெண்.
எல்லாரும் அவளையே பார்க்கவும், பதற்றம் கூடியது பெண்ணுக்கு.
அன்னம் கையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை கொடுத்தார். வேகமாக குடித்தாள் அந்த பெண்.
சாலாவின் காதில், “அக்காவை காணும், எங்களுக்கும் ஒன்னும் புரியலை. எல்லாரும் தேடிகிட்டு இருக்காங்க. நீங்க எல்லாம் காத்துட்டு இருப்பீங்கனு நான் தகவல் சொல்ல வந்தேன். கொஞ்சம் நேரம் வெயிட் பண்ணுங்க. என்னன்னு நிலவரம் பார்த்தது வந்து சொல்றேன்” என்று தவிப்புடன் கூறிவிட்டு மீண்டும் ஓடி சென்றாள்.
அவள் மெதுவாக கூறினாலும் அங்கே நிலவிய அமைதியில் அனைவர் காதுகளிலும் விழுந்தது அவளது வார்த்தைகள். என்ன செய்வது என்று ஒன்னும் புரியவில்லை.
அருண், “நாங்க போய் பார்க்கிறோம்” என்று தன் தம்பிகளுடன் கிளம்பினார் உடன் முத்துவும் வெற்றியும் சென்றார்கள். மற்றவர்கள் இங்கேயே இருங்கள் என்று விட்டார் முருகம்மை ஆச்சி.
உன்னை யாரு அதிகபிரசங்கி மாதிரி போய் சொல்ல சொன்னது என்று தகவல் சொல்ல வந்த பெண்ணை திட்டி கொண்டிருந்தார் லலிதாவின் அம்மா.
“அய்யோ.. இப்படி பண்ணிட்டு போய்ட்டாளே…நான் மாப்பிளை வீட்ல இப்ப எந்த மூஞ்சிய வச்சிட்டு போய் சொல்றது” என்று தலையில் அடித்து கொண்டு கதறினார் லலிதாவின் தந்தை.
இவர்கள் நுழையவும் அனைவரும் கலக்கத்துடன் பார்த்தார்கள். பெண்ணை காணும் என்றால், வேறு பிரச்சனையோ என்று யோசித்து கொண்டு வந்தவர்களுக்கு புரிந்து போனது, பெண் விரும்பியே சென்றுள்ளாள் என்று.
“மன்னிச்சிடுங்க சம்பந்தி” என்று கை எடுத்து கும்பிட்டார் அந்த அப்பாவி தந்தை இவர்களை பார்த்து.
எத்தனை கொடுமையான சூழ்நிலை இது. பிள்ளைகள் பெற்றவர்களுக்கு செய்ய கூடாத பாவம் அல்லவா. தன் மகள் திருமணத்திற்கான கனவு அவள் பிறந்த நொடியிலே ஆரம்பிக்கும் பெற்றோர்களுக்கு. ஊர் கூடி நிறைந்த சபையில் இப்படி கரியை பூசிவிட்டு செல்ல எப்படி மனசு வருகிறது. வந்திருப்பவர்கள் முன் தங்கள் பெற்றோர்களின் நிலை என்று ஒரு முறை யோசிக்க வேண்டாமா? காதலிப்பது தவறில்லை. ஆனால் திருமண தினத்தன்று காலையில் இப்படி செல்வது பாவமில்லையா?
அப்பா, என்று அந்த பெண் இப்பொழுது அவர் அருகில் வந்தாள்.
“இப்படி உங்க அக்கா என் மானத்தை வாங்கிட்டாலே ஆத்தா” என்று மகளை கட்டிக்கொண்டு குழந்தையாக தேம்பி தேம்பி அழுதார் அவர்.
அவரின் அழுகை அங்கே இருந்த அனைவரின் கண்களையும் ஈரமாக்கியது.
“எனக்கு தெரியலேயே? இப்படி அவள் செய்வாள் என்று நினைக்கலையே ஆச்சி?” என்று பக்கத்தில் இருந்த அவரது பெரிய ஆச்சியிடம் கதறினார்.
“ஏன் ஆத்தா, உனக்கு தெரியுமா?” என்று லலிதாவின் அம்மாவிடம் கேட்டார் அவர்.
அனைவரும் இப்பொழுது அவரை நோக்கவும், அவருக்கு வேர்த்து விட்டது. “கூட படித்த பையன விரும்பறேன்னு சொன்னா.. நம்ம குடும்பத்துக்கு ஒத்து வராதுன்னு எடுத்து சொன்னேன். சரி அம்மான்னு தான் உடனே சொன்னாள். இப்படி நேரம் பார்த்து கழுத்தை அறுப்பான்னு தெரியலையே “ என்றார் அவரும் பரிதாபமாக.
யாரை குறை சொல்வது. ஏமாற்றியது லலிதா தான். இங்கே அவளது பெற்றோருக்கோ தங்கைக்கோ ஒன்றும் தெரியவில்லை.
ஊரையே கல்யாணத்திற்கு அழைத்திருக்கிறோம், அவர்களுக்கு என்ன சொல்வது. அருண் தம்பிகளை பார்த்தார். எப்பொழுதும் போல அவர்கள் அண்ணன் என்ன சொல்லுவார் என்று தான் பார்த்தனர்.
“தேடி பார்க்க ஏற்பாடு செய்யவோமா?” என்றார் அங்கிருந்து ஒருத்தர்.
“தொலைந்து போனவர்களை தான் தேடணும், இவங்க விரும்பி போயிருக்காங்க” என்றான் முத்து.
இந்த நிமிடம் உயிரோட இருக்க வேண்டுமா என்று கூனி போய் நின்றார்கள் பெற்றோர்கள்.
“கோவில்ல எல்லாரும் காத்துட்டு இருப்பாங்க..” என்றார் ராஜா.
நிலைமையை கையில் எடுத்துக்கொண்டார் அந்த அத்தை.
“தப்பு எங்க பேர்ல தான், மன்னிச்சிடுங்க. நாங்க வந்து மன்னிப்பு கேக்கிறோம்” என்று தம்பியை அழைத்து கொண்டு கோவிலுக்கு புறப்பட்டார்.
அவர் மனைவியை திரும்பி பார்க்கவும் அவரும் உடன் வந்தார். அவரால் நடக்கவே முடியவில்லை. எத்தனை அருமை பெருமையாக வளர்த்தார் மகளை. இப்படி செய்து விட்டாளே என்று கண்ணீர் நிற்கவே இல்லை. நடையில் தடுமாற்றம் இருக்கவும், வேகமாக வந்து அன்னையை பிடித்துகொண்டாள் அவள்.
அனைவரும் கோவிலுக்கு செல்லும் முன்னே, முத்து சுந்தரத்திற்கு அழைத்து விவரம் தெரிவித்துவிட்டான்.
அனைவரும் அங்கேயும் கலங்கி தான் இருந்தார்கள். எத்தனை பெரிய அவமானம். மீனாவிற்கு ஆத்திரம் தாங்க முடியவில்லை. “ஓடுகாலி பெண்ணை பெத்துட்டு மன்னிப்பு கேக்க எதுக்கு வர்றாங்க” என்று ஒரே சத்தம்.
“மீனா.. சும்மா இரு. இப்படி பேச கூடாது. என்னன்னு பாப்போம்” என்று அவரை அடக்கினார் முருகம்மை ஆச்சி.
வீரா அருகே விசாகா அமர்ந்துகொண்டாள். அண்ணன் கைகளை பிடித்துகொண்டாள், பார்த்துக்கலாம் அண்ணா என்று.
சாலா, “முருகா நல்ல வழியை நீ தான்காட்டணும்” என்று வேண்டிக்கொண்டு திரும்பி பார்த்தார். அவர் கண்ணில் முதலில் பட்டது, அன்னையை தாங்கி பிடித்து வந்த அந்த பெண் தான்.
“முருகா” என்று மனதில் வேண்டிக்கொண்டு மீண்டும் அந்த பெண்ணை பார்க்கவும், சுப்பு மேல் நின்று சேந்தன் கோவில் மணியை அடிக்கவும் சரியாக இருந்தது.
பின் அவர் முருகம்மை ஆச்சியிடம் சென்று அவர் காதில் தனக்கு தோன்றியதை கூறினாள். பெண் வீட்டார்கள் உள்ளே வந்து , எங்களை… என்று ஆரம்பித்தார்கள்.
“இல்ல அப்பச்சி.. மன்னிப்பு கேக்காதீங்க. யாருக்கு யாருன்னு அந்த முருகன் தான் முடிவு செய்வான். உங்க பிள்ளை பண்ண தப்புக்கு நீங்க ஏன் விசனப்படறீங்க” என்றார் முருகம்மை ஆச்சி. இங்க நிலைமையை அவர் கையில் எடுத்துக்கொண்டார்.
“நீ சொல்லு ஆத்தா, தம்பிய கலங்காதேன்னு” பெண்ணின் அத்தையிடம் கூறினார். யாரிடம் பேச வேண்டும் என்று தெரிந்த பெண்மணி அல்லவா?
இது எல்லாம் ஒரு அரை மணி நேரத்திற்குள்ளே நடத்திருந்தது.
“உட்காருங்க முதல்ல” என்றார் சாலா. அவர்களும் அமர்ந்துகொண்டார்கள்.
ஒரு அஞ்சு நிமிஷம் என்று, சாலா இவர்கள் வீட்டு ஆளுங்களை தனியே அழைத்து சென்று,” எனக்கு முருகன் இந்த சின்ன பொண்ணை தான் வீராக்குன்னு அனுப்புன மாதிரி இருக்கு” என்றார் பட்டென்று.
அனைவரும் ஒரு நிமிடம் விசுக்கென்று திரும்பி அந்த பெண்ணை பார்த்தார்கள். அக்காவை போல அழகி இல்லை. இவள் அவள் அப்பாவை போல இருந்தாள். நல்ல கருப்பு, ஆனால் கலையான முகம், லேசாக தெத்து பல். வீராவை அனைவரும் பார்த்தனர்.
“மணிரத்னம் படம் மாதிரி, மாத்தி மாத்தி பார்க்கிறாங்களே?” என்றான் கதிர்.
சுப்புவும், “ஆமாடா கதிர்.. அதே மாதிரி குசு குசுன்னு பேசுறாங்க.. ஒன்னும் சரியா கேக்க மாட்டேங்குது “ என்றான்.
இவர்கள் பேசுவதை கேட்டு வள்ளிமயில் சிரித்து விட்டாள்.
திரும்பி முத்து முறைக்கவும் கப்சிப்.
இப்பொழுது முத்து “அத்தை அவசர படமா யோசிக்கனும். இது என்ன சினிமாவா?” என்றான் சாலாவிடம்.
“இல்லை கரு.. முருகன் சொல்றதா தான் எனக்கு படுது. அவங்க வீட்ல பிரச்சனை அப்போ கூட, இங்க ஒரு குடும்பம் காத்துட்டு இருக்கும். அவங்களுக்கு தகவல் சொல்லனும்னு, யோசிச்ச அந்த மனசு எனக்கு பிடிச்சிருக்கு” என்றார் சாலா.
வீராவிற்கு அவன் பெரியம்மா சொன்னால் போதும். ஆனாலும் திரும்பி ஒரு முறை அவளை பார்த்தான். அப்பாவின் தோளில் தட்டிக்கொடுத்துக்கொண்டு எதுனாலும் பாத்துக்கலாம் என்று தைரியம் சொல்லி கொண்டிருந்தாள்.
வள்ளி, தெய்வா, மயில் என்று அனைவரும் அவளை பார்த்தார்கள்.
இதை கவனித்த அங்கயற்கண்ணி அத்தைக்கு அவர்கள் யோசனை புரிபட்டது
அவர் உடனே தன் தம்பியிடம், “நல்லம்மையை கேட்டா கட்டி கொடுத்திடலாமா?” என்றார்.
“லலிதாவை பிடிச்சிருக்கவங்களுக்கு நல்லாவை பிடிக்குமா” என்றார் அவர்கள் அன்னை.
கணவனின் கோபப் பார்வையில் வாயை மூடிக்கொண்டார். அவருக்கு நல்லம்மையை பிடிக்காது என்று இல்லை, தன்னை கொண்டு பிறந்த பெரிய மகள் அழகில் ஒரு பெருமிதம் அவ்வளவே.
வேண்டாம் என்று நிராகாரித்தால் மகள் மனம் வருந்தும் என்றே நினைத்தார். அவருக்கு பேச தெரியாது என்பதுதான் நிஜம். மனதளவில் நல்ல பெண்மணி தான் அவரும்.
வீரா, “எனக்கு சம்மதம், அவங்களுக்கு பிடிச்சிருக்கான்னு பார்த்துக்கோங்க “ என்று விட்டான்.
அத்தை கூறியதை யோசித்த நல்லம்மைக்கு தன்னை கேட்டாள் என்ன சொல்ல வேண்டும் என்று புரியவில்லை. கலங்கி நிற்கும் தந்தைக்கும் தாய்க்கும் ஆறுதல் கிடைக்குமா என்று யோசித்தாள். அப்பா, உங்களுக்கும் அம்மாக்கும் இதனால நிம்மதி கிடைக்கும்னா, உங்க முடிவு எனக்கு சம்மதம்” என்று விட்டாள்.
பெண்ணும் மாப்பிள்ளையும் தனியே போய் பேசிட்டு சொல்லட்டும் என்றான் வெற்றி. அவனுக்கு தம்பியின் மனதில் எந்த சஞ்சலமும் இருக்க கூடாது. நன்றியுடன் அண்ணனை பார்த்தான்.
“டேய் சுப்பு, என் கல்யாணத்துல ஏதாச்சும் பிரச்சனைனா.. நீயும் இப்படி அண்ணனுக்கு ஆதரவா இருக்கனும்” என்றான் கதிர்.
“நீ பிரச்னையை இழுத்து விடாம இருந்தா போதும்” என்றான் சுப்பு.
இருவரும் அங்கேயே சற்று தள்ளி நின்று பேசினார்கள்.
“நிர்பந்தத்தில என்னை பிடிச்சிருக்கு சொல்றீங்களா?” என்றாள் நல்லம்மை. யோசித்து பேசவோ, வெக்கபடவோ நேரமில்லை.
“அப்படி இல்ல.. ஏதோ நீ ஓடி வந்து அக்கா காணும்ன்னு சொன்னே இல்ல.. அப்பவே உன் முகம் என்னை கவர்ந்தது. எனக்கு உன்னை பிடிச்சிருக்கு. நீ தான் உன் முடிவை சொல்லனும். அக்கா செஞ்ச தப்பிற்காக நீ சம்மதம் சொல்ல வேண்டாம்” என்றான் பட்டென்று அவனும்.
“எனக்கு அப்பா அம்மா சொல்ற யாரா இருந்தாலும் சரி தான். உங்க மனசுல அக்கா மேலே.. “ என்று இழுத்தாள்.
“இருபது நாள்ல வேகமா எல்லாம் நடந்தது. அவங்களை பார்த்ததும் பிடிச்சிருந்தது தான். ஆனா, நாங்க பேசிக்கவோ சந்திச்சுக்கவோ இல்லை. உங்க அக்கா, அந்த விஷயத்துல நல்லவங்க தான்.. என் மனசுல எந்த வித ஆசையையும் வளர்க்கல. நானும் கல்யாணத்திற்கு அப்புறம் பார்த்துக்கலாம்னு தான் இருந்தேன். எனக்கு நிச்சயம் அவங்க மேல கோபம் இருக்கு, ஆனால் ஏமாற்றம் இல்லை. முழு மனசா நம்ம வாழ்க்கையை ஆரம்பிக்கலாம் “ என்றான்.
“என்னை பத்தி உங்களுக்கு ஒன்னும் தெரியாதே”
“ஆமாம்.. உன் பெயர் என்ன?”
“அடப்பாவி பெயர் கூடவா தெரியாது?” என்று வாயை பிளந்தாள்.
அந்த நொடி, அந்த பாவனை வீரா மனதில் அழகாக பதிந்தது.
“நல்லம்மை” என்றாள் மெதுவாக.
“வாழ்க்கை பூரா இருக்கு, சேர்ந்தே ரெண்டு பேரும் தெரிஞ்சுக்கலாம் வா” என்று அழைத்துக்கொண்டு எல்லோர் இருக்கும் இடம் சென்றான்.
இருவரும் மலர்ந்த முகத்துடன் வந்தார்கள்.
“அம்மா” என்று தன் தாயிடம் வந்து நின்று கொண்டாள்.
“உன் நல்ல மனசுக்கு கடவுள் உனக்கு நல்லதுதான் செய்வான் நல்லு. வா போய் தயார் ஆவோம்” என்றார் .
பின் முருகம்மை ஆச்சியும் அங்கயற்கண்ணி அத்தையும் தான் பேசினார்கள். அடுத்த முகூர்த்தம் அன்றைக்கு பதினோரு மணிக்கு என்று இருந்தது. அதிலே திருமணத்தை வைத்துக்கொள்வோம் என்றாகிவிட்டது.
அவள் தயங்கி நிற்பதை பார்த்து, அன்னம், “என்னமா ஏதாச்சும் சொல்லனுமா?” என்றார்.
“எனக்கு அக்காவுக்கு செய்த நகை புடவை எல்லாம் வேண்டாம். அப்பா மெதுவா எனக்குன்னு செய்வாங்க” என்றாள் மெதுவாக.
அவளது மனம் அனைவருக்கும் புரிந்தது.
“கழுத்தீரு உடனே செய்ய முடுயாது நல்லா” என்றார் அங்கயற்கண்ணி. “அது கழுத்தீரு அப்பத்தாவுடையது தானே அத்தை, அது இருக்கட்டும்” என்றாள்.
“புடவை, வேற வீட்ல இருக்கிறதே கட்டிக்கலாம்” என்றாள்.
அந்த புடவை லலிதா அவள் மேலே போட்டு பார்த்து, ”இந்த மாதிரி கலர் எல்லாம் உனக்கு நல்லா இருக்காது. உனக்கு ஏதாச்சும் டல் கலரா எடுக்கனும் உன் கல்யாணத்துக்கு”, என்று இவளை மட்டம் தட்டியே அந்த அறக்கு நிற புடவையை தேர்ந்துதெடுத்து இருந்தாள்.
புடவை தானே, நாங்க வேற ஏற்பாடு பண்றோம். நீங்க போங்க.. போய் மேற்கொண்டு ஆக வேண்டியதை விரசா கவனிங்க என்று முருகம்மை ஆச்சி அவர்களை அனுப்பி வைத்தார்.
“நாங்க எல்லாம் தங்க மண்டபம் ஏற்பாடு பண்ணுங்க” என்றார் மீனா கடுப்பாக நல்லம்மை பெற்றோர்களிடம்.
“எங்க வீட்டுக்கு வாங்க எல்லோரும். நாங்களும் உள்ளுர் தான்” என்று அங்கயற்கண்ணி இவர்களை தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றார்.
தம்பி, சாப்பாடு அங்க நம்ம வீட்டுக்கு அனுப்ப ஏற்பாடு பண்ணு என்று சட்டென்று பொறுப்புகளை தனதாக்கி கொண்டு அனைவரையும் அழைத்து சென்றார் அங்கயற்கண்ணி.
இன்னும் இரண்டு மணி நேரமே இருந்தது. இப்பொழுது எல்லோரும் வள்ளியையும் தெய்வாவையும் திரும்பி பார்த்தார்கள்.
“இப்ப தான் நாங்க கண்ணுக்கு தெரிஞ்சோமா? இதுக்கு மட்டும் நாங்க வேணும். எல்லாரும் சேர்ந்து கல்யாணத்துக்கு திடீர் சேலை எடுக்கும் வேலைக்குன்னு நம்மள நேத்து விட்ருவாங்க போல” என்று இருவரும் நொடித்துக்கொண்டார்கள்.
“என்ன கலர் வேணும்னு நல்லம்மை கிட்ட கேக்கலயா?” என்றான் வீரா.
“டேய்.. ஓஹோ …”என்று அனைவரும் கூச்சலிட்டார்கள்.
“உனக்கு பிடிச்ச கலர்லயே எடுப்போம் சொல்லு “, என்றார் வள்ளி மகனின் கன்னத்தை வருடிக்கொண்டே. மகனை நினைத்து அவர் கலங்கி தான் போயிருந்தார்.
“லைட் எல்லோ கலர் கிடைச்சா பாருங்க” என்றான்.
செந்திலுடன் வள்ளியும் தெய்வாவும் புடவை எடுக்க சென்றார்கள். வெற்றி எனக்கும் மேட்சிங் ஷர்ட் என்றான் அண்ணனிடம். சரி என்று அவன் சட்டை வாங்க சென்றான்.
மாலையும் வேற வாங்கிடலாம் என்றார் சாலா. அம்மா, புதுக்கோட்டைல தாமரை பூ கிடைக்கும். அதுவும் தாழம்பூவும் சேர்த்து மாலை வாங்குவோம் என்றாள் விசாகா.
தம்பி வண்டி ஏற்பாடு பண்ண சொல்றேன், ஆளுங்கள வர சொல்றேன் என்றார் அங்கயற்கண்ணி. இல்ல, வண்டி மட்டும் அனுப்ப சொல்லுங்க நாங்க போறோம் என்று முத்துவும் கதிரும் கிளம்பினார்கள்.
“தாலி சங்கிலி வேற வாங்கிடு சாலா. இந்த சங்கிலி பிள்ளைகளுக்கு நகை செய்யும் பொழுது சேத்துக்குவோம்” என்றார் முருகம்மை ஆச்சி.
அன்னமும் சாலாவும் நகைக்கடைக்கு சென்றார்கள். இப்படி ஆளாளுக்கு வேலைகளை விரைந்து செய்தார்கள்.
பார்த்துக்கொண்டிருந்த அங்கயற்கன்னிக்கு கண்கள் கலங்கி விட்டது.
“எங்க நல்லமை நான் வளர்த்த பொண்ணு. பெருமைக்கு சொல்லல, தங்கமான பொண்ணு. என் தம்பிபோல கருப்புன்னு தம்பிவண்டிக்கு வருத்தம், ஆன குணத்துலயும் என் தம்பிய கொண்ட பிள்ளை” என்றார் நெகிழ்வுடன்.
வெளிர் மஞ்சள் நிறத்தில் தங்க ஜரிகைகள் கொண்டு, அழகாக இருந்த புடவையில் அழகாக இருந்தாள் நல்லம்மை. அதே நிற சட்டை அணிந்து, கம்பீரமாக திருப்பூட்டி நல்லம்மையை தன்னவள் ஆக்கினான் வீரவேல்.
குழப்பங்களும் கலக்கங்களும் இருந்தாலும், கடைசியில் நிறைவான மனதுடன் அனைவரின் ஆசியுடன் இனிதே நடந்தது திருமணம்.
error: Content is protected !!