Skip to content
Post Views: 3,100
அத்தியாயம் 25
‘யார்கிட்ட ஐடியா கேட்கலாம்?’ என்று யோசித்தால், அவனுக்கு வெற்றி, வீரா, கதிர், சுப்பு.. இவர்கள் ஞாபகம் தான் வந்தது. ஆனாலும் தங்கையை காதலிக்க அண்ணண்ககிட்ட எப்படி ஐடியா கேக்கறது என்று யோசனை.
Advertisement
‘சரி கதிர் கல்யாணத்துக்கு போறப்ப பார்த்துப்போம். சரியான சந்தர்ப்பம் கிடைக்கும் போது சொல்லிடலாம்.. என் விசா தானே’ என்று நினைத்து கொண்டான். இதழில் அழகான புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.
அன்று காரில் விசாகாவிற்கும் இவனுக்கும் நடந்த விபத்தில் இருந்தே முத்து மனதில் ஒரு சலனம். ஆனால் அவனுக்கே தெளிவு கிடைக்கவில்லை. உடன் ஒன்றாக வளர்ந்ததாலோ என்னவோ.. அது பாசம் என்றே தனக்குள் சொல்லிக்கொண்டான்.
Advertisement
Advertisement
சமீபமாக விசாகாவின் பார்வை அவனுக்குள் குறுகுறுப்பை தந்தது என்னவோ நிஜம். அன்னம் விசாகாவை பார்ப்பதை வைத்து அவரின் ஆசை அதுவாக இருக்கலாம் என்று நினைத்து, அப்படி தான் இருக்க வேண்டும் என்று ஆசையை வளர்த்து கொண்டான். பெரியவர்களே பேசட்டும் என்று காத்திருந்தான்.
அங்கே ஊரிலும் அனைவரும் அடுத்து விஷேசம் விசாகா கல்யாணம் தானே என்று கேட்க தொடங்கினார்கள்.
Advertisement
சாலாவிற்கு மகள் தன்னிடம் எதுவும் கூறவில்லையே.. அவள் கூறட்டும் என்று காத்து கொண்டிருந்தார். அனைவரும் ஒரே விஷயத்தை யார் எப்படி ஆரம்பிப்பது என்று கண்ணாமூச்சி ஆட்டம் ஆடிக்கொண்டிருந்தனர்.
இந்த ஆட்டத்தோடு , கதிர்வேலன் கண்ணம்மையின் கல்யாண நாளும் அழகாக விடிந்தது.
பெண்ணின் வீட்டில் தான் திருமணம். மாப்பிள்ளையை அழைத்து கொண்டு கோவிலில் இருந்து மணப்பெண் இல்லத்திற்கு வந்தார்கள்.
வாசலில் பெண்ணின் அத்தை வந்து விளக்கு வைத்து, ஆரத்தி எடுத்து மாப்பிள்ளை வீட்டாரை முறையே உள்ளே அழைத்தனர்.
அடுத்த பத்து நிமிடத்தில் மணப்பெண் கண்ணம்மை முகூர்த்த புடவையில் அவள் தாய் மாமா கை பிடித்து மணமேடைக்கு வந்தாள்.
அனைவரின் ஆசியுடன், கழுத்தீரை கண்ணம்மை கழுத்தில் மகிழ்ச்சியுடன் பூட்டி தன் சரி பாதியாக கரம் பிடித்தான் கதிர்.
திருமணம் என்றாலே கலகலப்பு தான். இங்கே மாப்பிள்ளை பெண் இருவரும் மிகவும் கலகலப்பானவர்கள் என்பதால் மிகவும் சிறப்பாக மகிழ்ச்சியாக இனிதே நடந்தது திருமணம்.
மறு நாள் காலை, திருமண அலைச்சலினால் அனைவரும் சற்று தாமதமாக தான் எழுந்து வந்தனர். அனைவரும் ஒருவர் பின் ஒருவராக வந்து முற்றத்தில் குழுமினர்.
முத்து கருப்பன் ஒரு தூணின் அருகே நீண்ட நேரமாக தீவிரமாக யோசித்து கொண்டு அமர்ந்திருந்தான். அவனுக்கு எதிர் பக்கம் கதிர் தன் சகோதரர்களுடன் அமர்ந்திருந்தான்.
“என்ன டாக்டரு ரொம்ப நேரமா யோசிச்சிட்டு இருக்கானே.. பல்பு எரிஞ்சிருக்குமோ.. “ என்றான் கதிர் வீராவிடம்.
“எரிஞ்சிட போது.. நீ வேற.. அவன் எதாவது பேஷண்ட் பத்தி யோசிட்டு இருப்பான்.. இல்ல மருத்துவ அறிக்கை பத்தி.. அதுவும் இல்லன்னா நம்ம சுக்கு காபி குடிக்கலாமா இல்ல பால் காபி குடிக்கலாம்னு யோசிப்பான்” என்றான் கடுப்பாக வீரா.
“நீ பாட்டுக்கு கடலை வறுத்துட்டே இருந்த.. நானும் ரெண்டு மாசமா பார்க்கறேன் ஒரு பல்பும் எரியற மாதிரி இல்லை” என்றான் வெற்றி.
“இல்ல அண்ணா.. அவர் முகத்துல இன்னிக்கு எதோ வித்யாசமா இருக்கு…. அவர் முழியை பாரத்தா காதலிக்கிற மாதிரி தான் இருக்கு” என்றான் சுப்பு சீரியசாக.
இப்பொழுது மூன்று பேரும் ‘அப்படியா?’ என்று சுப்புவை பார்த்தனர்.
“நான் ஒரு வாத்தியார்…” என்று ஆரம்பித்தான் சுப்பு.
“போதும் போதும்.. நிப்பாட்டு.. பார்ப்போம் என்ன ஆகுதுன்னு.. கேப் விட்டா பாடம் எடுக்க ஆரம்பிக்க வேண்டியது” என்றனர் கோரஸாக.
பெண்கள் அனைவரும் வந்து இணைந்து கொண்டனர். கண்ணம்மை புதுப் பெண் என்ற வெட்கமோ தயக்கமோ இன்றி அனைவருடன் கலகலத்து கொண்டிருந்தாள்.
“நல்லு சிஸ்டர் எங்க நம்ம வீட்டு ஒத்த ரோசா?” என்றாள் நல்லமையிடம்.
“யாரை கேக்கற” என்றாள் குழப்பமாக நல்லம்மை.
“தடி தடியா இத்தனை ஆம்பளை பசங்க இருக்க வீட்ல, ஒத்த ரோசாவா வலம் வர சின்ன முருகம்மையை தான்..”
“என்னது.. தடி தடியாவா?” என்று சகோதரர்கள் கதிரை முறைத்தனர்.
“அப்புறம் கண்ணு.. ஹிந்தி சீரியல்ல கல்யாணம் முடிஞ்சதும் அடுத்த நாள் புது மருமகள் தான் காலையில சமைப்பாங்கலாமே.. முதல் சமையல் அப்படினு அந்த சடங்குக்கு பெயராமே? நீ என்ன ஐட்டம் எல்லாம் பண்ணி இம்ப்ரெஸ் பண்ண போற?” என்றான் கதிர் கண்ணம்மையிடம்.
‘அடப்பாவி..’ என்று கணவனை முறைத்தாள்.
சரியாக வள்ளியும் தெய்வாவும் அனைவருக்கும் தேநீர் கொண்டு வந்தனர்.
“யார பார்த்து என்ன கேள்வி கேட்டுட்டீங்க? நான் யாரு… நான் யாரு? தெரியுமா?” என்றாள் கண்ணம்மை
“நீ புதுப் பொண்ணு, எங்க கதிர் பொண்டாட்டி…” என்றார் தெய்வா.
“மாண்புமிகு அத்தையாரே! நான் எப்பயும் உங்க மருமகள். அது தான் முதலில்.. உங்க பேச்சுக்கு மறு பேச்சு எப்பயும் பேச மாட்டா இந்த கண்ணம்மை….” என்றாள் தெய்வாவை கட்டி அனைத்து கொண்டு.
அவர் பீதியுடன் வள்ளியை பார்த்தார். அனைவரும் இப்பொழுது இவர்களை பார்த்தனர்.
“நீங்க எப்ப ஹிந்தி சீரியல் பார்க்க வேணாம்னு சொன்னீங்களோ அன்னைல இருந்து நான் ஹிந்தி சீரியல் பக்கம் எட்டி கூட பார்க்கறது இல்லை. நம்ம ஒத்துமையா இருக்கறத பார்க்க பிடிக்கல உங்க பிள்ளைக்கு. மாமியார் மருமகள் சண்டை மூட்டிவிட்டு அதுல குளிர் காயலாம்னு பார்க்கறாரு.. ஹிந்தி சீரியல் சடங்கு சம்ரதாயம் எல்லாம் நமக்கு தேவையா? சொல்லுங்க அத்தை” என்றாள் ஒரே மூச்சாக.
“ஆமாம் ஆமாம், நமக்கு அது எல்லாம் வேண்டாம் கண்ணு… அவன் கெடக்கிறான் கிறுக்கு பய.. நீ டீ எடுத்துக்கோ” என்று அவளுக்கு கொடுத்துவிட்டு, மகனை முறைத்து கொண்டு அமர்ந்துவிட்டார்.
“விசா காலையில வயலுக்கு ஒரு ரவுண்ட் போயிட்டு தான் வருவா. அவளும் அன்னும்மாவும் போயிருக்காங்க” என்றாள் நல்லம்மை.
அனைத்து குடும்ப உறுப்பினர்களும் அங்கே தான் அமர்ந்திருந்தார்கள் அப்பொழுது.
சரியாக அப்பொழுது விசா அன்னத்துடன் உள்ளே நுழைந்தாள்.
முத்து கருப்பன் அவளையே காதலுடன் பார்த்து கொண்டிருந்தான்.
சகோதரர்கள் இவனை பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவன் முகத்தில் ஒரு தனி ரசனை… கண்களில் எல்லை இல்லா காதல்… ஒரு சின்ன புன்னகை.. அது அவனுக்கு ஒரு தனி தேஜஸை கொடுத்தது.
“எரிஞ்சிடுச்சு.. எரிஞ்சுடுச்சு.. ஒரு வழியா பல்பு எரிஞ்சிடுச்சு” என்றான் சுப்பு குசுகுசுவென சகோதரர்களிடம்.
“வாங்க ஆத்தா.. ரெண்டு பேரும் வந்து டீ எடுத்துக்கோங்க” என்றார் முருகம்மை ஆச்சி வாஞ்சையாக.
விசாகா முன்னே நடக்கவும், முத்து மெதுவாக விசாகவிடம் சென்று நின்றான்.
பெண்ணுக்கு இன்ப அதிர்ச்சி.
எல்லோரும் சுற்றி இவர்களை தான் பார்த்து கொண்டிருந்தனர்.
அமர்ந்திருந்தவர்களும் எழுந்து நின்று விட்டனர்.
முத்து கருப்பன் மெதுவாக தொண்டையை செருமிக்கொண்டான்.
பின், விசாகாவை பார்த்து,
“விசாகா… எனக்கு உன்கூட சேர்ந்து ஒரு நிறைவான வாழ்கை வாழ ஆசையா இருக்கு. என்னை கல்யாணம் பண்ணிக்க சம்மதமா?” என்றான் மிகவும் மென்மையான குரலில்.
விசாகா ஒரு வித அதிர்ச்சி நிலையில் இருந்தாள். அவனது கேள்வி தனக்கு சரியாக கேட்டதா என்று குழப்பம் ஏற்பட்டது. சுற்றி அனைவரையும் ஒரு முறை பார்த்தாள். மீண்டும் முத்து கருப்பனை பார்த்தாள். அவனது பார்வை தான் கேட்டது உண்மை என்று உணர்த்தியது.
அவள் கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது. மிகவும் உணர்ச்சிகரமாக இருந்தாள். தன் மொத்த குடும்பத்திற்கு முன்னால் இப்படி ஒரு பரிமாணத்தையும் கேள்வியையும் எதிர்பார்க்கவில்லை தன்னவனிடம் இருந்து.
ஓரளவிற்கு அனைவரும் இதை எதிர் பார்த்து இருந்ததால் யாரும் பெரிதாக அதிர்ச்சி அடையவில்லை.
அன்னமும் சுந்தரமும் மகனின் பக்கத்தில் வந்து நின்று கொண்டனர்.
சாலாவும் அருணும் இப்பொழுது தங்கள் பெண்ணின் பக்கம் வந்து நின்றனர்.
“என் எண்ணத்தை இப்ப தான் உங்க எல்லார் முன்னாடியும் தான் சொல்றேன். என்னை தப்பா நினைக்காதீங்க அத்தை. அதை என்னால் எப்பவும் தாங்கிக்கவே முடியாது. என்னை உங்க மகளுக்கு கட்டி கொடுப்பீங்களா?” என்றான் சாலாவை பார்த்து.
சாலா முத்து கருப்பன் தலையை ஆதுரமாக தடவிக்கொடுத்து, “என் மகள் என்ன முடிவு எடுத்தாலும் நீ என் கரு.. நான் வளர்த்த பிள்ளை. உன்னை ஒருபோதும் தப்பா நினைக்க மாட்டேன்” என்றார்.
“இந்த குடும்பத்தோடு இணைந்து நானும் நீயும் இயல்பா இன்பமா இறைஅன்போடு இன்னிசையா ஒரு வாழ்க்கையை வாழனும் விசாகா…. எனக்கு அந்த வரத்தை தருவியா?” என்றான் கண்ணில் காதலையும் நேசத்தையும் சேர்த்து விசாகாவிடம்.
விசாகா சம்மதம் என்று தலை அசைக்கவும், அனைவர் முகத்திலும் மகிழ்ச்சி. அன்னம் விசாகாவை கட்டி பிடித்து கொண்டு ஒரே அழுகை. இருவருமே மிகவும் உணர்ச்சி வசத்தில் இருந்தனர். வார்த்தைகள் அங்கு தேவை படவில்லை, மௌனமே பல சங்கதிகள் பேசியது.
முருகம்மை ஆச்சி, “எல்லாம் அந்த மலையய்யா அருள்” என்று மனதார அந்த வேலனுக்கு நன்றி கூறினார்.
அனைவரும் தங்கள் மகிழ்ச்சியை தெரியப்படுத்தினார்கள். பாலு மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தான். அவன் அமைதியாக முத்து கருப்பன் பக்கத்தில் சென்று நின்று கொண்டான்.
“நான் எங்க அப்பச்சி கிட்ட கலந்துட்டு சொல்றேன், அப்புறம் மேலே பேசுவோம்” என்றார் சுந்தரம் அருணிடம்.
காலை உணவு அதற்குள் தயாராகி விட்டது. அனைவரும் மகிழ்ச்சியுடன் உணவு உண்ண அமர்ந்தனர்.
தீடீர் என்று “போலீஸ்காரரே… “என்று கதிரை அழைத்தாள் கண்ணம்மை.
அவளது அழைப்பில் அனைவரும் சிரித்து விட்டனர்.
“என்ன கண்ணு” என்றான் கதிர் தன் கெத்தை விடாமல்.
“ ‘மாண்புமிகு அத்தையாரே’ அப்படின்னு ஸ்கோர் பண்ணலாம்னு பார்த்தா உங்க தங்கச்சியும் மச்சானும் ‘அத்தை ஒரு கோவில்..’ அப்படின்னு சென்டம் வாங்கிடுவாங்க போலயே.. காதல் முதல் முதல்ல சொல்லும்போதே.. அவர் அத்தைன்னு மாமியார் காலை பிடிக்க.. ஒத்த ரோசா அத்தைன்னு மாமியாரை கட்டி பிடிக்க… “ என்றாள் பாவமாக.
“ஆமா கண்ணு, இவங்களோடு பாசப்பயிர் வளர்க்க போட்டி போட முடியாது. அவங்க மரமே வளர்த்து வச்சிருக்காங்க.. நீ விட்டுட்டு வேற ட்ரை பண்ணு கண்ணு“ என்றான் கதிர்.
“நீங்க சொன்னா சரி தான் போலீஸ்காரரே.. நம்ம ரெண்டு பேரும் சேர்ந்து யோசிப்போம்” என்றாள் நல்ல பிள்ளையாக.
“நீங்க ரெண்டு பேரும் தனி தனியா யோசிச்சாலே தாங்க முடியாது. ரெண்டு பேரும் சேர்ந்து யோசிச்சா…அய்யோ… முருகா இந்த குடும்பத்தை இவங்ககிட்ட இருந்து காப்பாத்து அப்பா.. ” என்றார் செந்தில்.
இனிமையாக சென்றது அன்றய தினம். மறு நாள் அனைவரும் சென்னை புறப்பட்டனர். கதிர் கண்ணம்மை ஜோடி தூத்துக்குடிக்கு சென்றது. உடன் இருவரின் பெற்றோர்களும் சென்று எல்லா ஏற்பாடுகளும் செய்து கொடுத்துவிட்டு வந்தனர்.
error: Content is protected !!