Skip to content
Post Views: 2,901
அத்தியாயம் 26
நல்லம்மை வள்ளி மயில் இருவரும் மாசமாக இருப்பதால், அவர்களது பிரசவத்திற்கு பின் விசாகா முத்து கருப்பன் திருமணம் என்று அனைவரும் கலந்து பேசி முடிவு செய்தனர்.
Advertisement
விசாகா குரூப் தேர்வில் தேர்ச்சி பெற்று, தஞ்சாவூர் அருகே ஒரு கிராமத்தில் விவாசாய அதிகாரி ஆக போஸ்டிங் கிடைத்திருந்தது. அவள் தேர்ச்சி பெற்றதில் அனைவருக்கும் மகிழ்ச்சியே. ஆனால் சென்னை அருகிலே போஸ்டிங் கிடைக்கவில்லையே என்ற வருத்தம் அனைவருக்கும்.
தங்கை தேர்ச்சி பெற்றதை கொண்டாடுவதற்கு அன்று காலை தூத்துக்குடியில் இருந்து கதிரும் கண்ணம்மையும் வந்திருந்தனர். ஞாயிற்று கிழமை என்பதால் அனைவரும் அன்று சாலா வீட்டில் ஒன்று கூடி இருந்தனர்.
Advertisement
Advertisement
“விசாம்மா.. திரும்ப நீ மட்டும் தனியா எப்படி போய் வேலை பார்ப்ப?” என்று பேச்சை ஆரம்பித்தார் அருண்.
“அதுக்கு என்ன பண்ண முடியும் பெரியப்பா. முதல் முயற்சியிலே எக்ஸாம் பாஸ் பண்ணி போஸ்டிங் கிடைக்கிறது எல்லாம் பெரிய விசயம். நம்ம விசா ரொம்ப திறமைசாலி.. அதை பாராட்டுவதை விட்டுட்டு…” என்றான் வீரா.
Advertisement
“அண்ணன் என்ன சொல்றாரு.. நீ என்ன பேசுற? எங்களுக்கு எல்லாம் சந்தோசம் இல்லையா? புள்ள தனியா போகணுமே.. கல்யாணம் வேற பக்கத்துல இருக்கேன்னு யோசிக்கிறோம்” என்றார் செந்தில்.
“போலீஸ்காரரே..என்ன பஞ்சாயத்து சீன் மாதிரி இருக்கு..நம்ம கருத்தை சொல்லலாமா?” என்றாள் கண்ணம்மை கதிரிடம் மெதுவாக.
“அமைதியா வேடிக்கை பாரு கண்ணு.. நம்ம சொல்றது எல்லாம் எடு படாது”
“ஏன்?”
“கொஞ்ச நேரம் வேடிக்கை பாரு.. உனக்கே புரியும்”
“பேசாமலே வேடிக்கை மட்டும் பார்த்தா போர் அடிக்குமே?”
“அதுக்கு தான் மம்மி, பெரிய மம்மி ரெண்டு பெரும் இருக்காங்க.. ஏதாச்சும் எண்டெர்டைன்மெண்ட் கிடைக்கும். பேசாம வேடிக்கை பாரு”
“ரொம்பத்தான் போலீஸ்காரரே” என்று நொடித்து கொண்டு மீண்டும் வேடிக்கை பார்க்க தொடங்கினாள்.
“கல்யாணத்துக்கு தான் இன்னும் நாலு மாசம் மேல இருக்கே மாமா.. மெதுவா யோசிப்போம்.. இப்ப முதலில் வேலையில சேரட்டும்” என்றான் முத்து கருப்பன்.
“நாலு மாசம் சீக்கிரம் போய்டும், அப்புறம் என்னன்னு யோசிக்க வேணாமா?” என்றார் செந்தில்.
விசாகா அமைதியாகவே இருந்தாள்.
“போலீஸ்காரரே.. உங்க தங்கச்சி அப்பிராணியா இருக்கு.. ஒன்னும் பேசாம அமைதியாவே இருக்கே.. ஏதாச்சும் ஹெல்ப் பண்ணுவோமே”
“பேசி ஆர்ப்பாட்டம் எல்லாம் பண்ண மாட்டா.. ஆனா எப்படியும் அவ நினைச்சதை சாதிச்சிடுவா.. இந்த டாக்டரே அவகிட்ட அடங்கி தான் போவாரு பாரு கடைசியில”
நீளிருக்கையில் அருண், செந்தில், ராஜா, சுந்தரம் ஒருபுறம்.. சாலா, அன்னம், முத்து ஒரு பக்கம் அமர்ந்திருந்தார்கள். விசாகா தன் அப்பா அமர்ந்திருந்த நீளிருக்கையின் கை பிடியில் அமர்ந்திருந்தாள்.
மற்றவர்கள் அனைவரும் சற்று பின்புறம் இருந்த டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தார்கள். இவர்கள் பேசுவதைக்கேட்கும் தூரத்தில்.
“என்ன யோசனை வச்சிருக்கீங்க.. அதை சொல்லுங்க..” என்றார் சாலா இப்பொழுது அருணிடம்.
“நம்ம ரகுவரன் அயித்தான் இருக்காரு இல்ல”
“ஆமா எம்.பி. எலேகஷன்ல இந்த தடவை ஜெயிச்சாரே..”
“அவர் கிட்ட கேட்டு போஸ்டிங் சென்னை பக்கம் மாத்தி கேப்போமே?”
“ஆமா அண்ணே, நல்ல யோசனை” என்றார் ராஜா.
சுந்தரமும், “நம்ம கேட்டா கட்டாயம் செய்து கொடுப்பாரு” என்றார் உற்சாகமாக.
முத்து கருப்பன் யோசனையாக அமர்ந்திருந்தான்.
விசாகா, “இல்ல.. முதல் போஸ்டிங்.. நான் அங்கேயே சேர்றேன்.. சிபாரிசு பண்ணி மாத்தல் வாங்கினா, நான் படிச்சு கிடைச்ச வேலைக்கு என்ன மரியாதை?” என்றாள் நிதானமாக.
“இதுல மரியாதை எங்க இருந்து வருது விசாம்மா” என்றார் ராஜா.
“நீ எங்க வீட்ல ஒரே பொண்ணு.. முத்துவும் அவங்களுக்கு ஓரே பையன்.. உங்கள பக்கத்துல வச்சிக்க ஆசை பட்றதுல என்ன தப்பு”
இப்படி மேலும் கார சார விவாதம் தொடர்ந்தது.
.
அப்பொழுது வள்ளியும் தெய்வாவும், சூப் கொண்டு வந்து கொடுத்தனர் டைனிங் டேபிளில் அமர்ந்திருந்தவர்களுக்கு.
.
“வாவ்….” என்றாள் கண்ணமை சத்தமாக.
“ஏண்டி.. கத்துற” என்றான் கதிரு கோவமாக.
அனைவரும் “ஷ்…” என்று செய்கை செய்தனர்.
சூப்பின் சுவை கண்ணம்மையை மேலே அமைதியாக இருக்க விடவில்லை.
“என்னா டேஸ்ட்.. அத்தை சூப்பர்” என்றாள் மீண்டும் சத்தமாக சூப்பை ஸ்ஸ்ஸ் என்று உறிந்து கொண்டே…
.
இவள் சத்தம் கேட்டு , “என்ன சூப்?” என்று திரும்பினான் முத்து கருப்பன்.
“போச்சு.. போச்சு” என்று பதறினார் வள்ளியும் தெய்வாவும்.
“மட்டன் ஈரல் மாங்கை சூப் அண்ணா.. சூப்பரா இருக்கு. நீங்க பேசிட்டு இருந்தீங்கன்னு அத்தை இங்க மட்டும் கொடுத்தாங்க. இருங்க நான் போய் உங்களுக்கு எல்லாம் எடுத்துட்டு வரேன். சாப்பிட்டு தெம்பா பேசுங்க” என்று கூறிக்கொண்டே உற்சாகமாக எழுந்தாள் கண்ணம்மை.
“யாரு இன்னிக்கு மட்டன் சூப் வைக்க சொன்னது” என்று கோபமாக எழுந்து இவர்களிடம் வந்துவிட்டான்.
இவன் ஆவேசத்தில் ஜெர்க்காகி நின்றுவிட்டாள் கண்ணம்மை.
“அது வந்து.. அது வந்து..” என்று இழுத்தார் தெய்வா.
“என்ன அத்தை இது?” என்று சாலாவிடம் திரும்பினான்.
“புள்ளதாச்சி பொண்ணுங்க ரெண்டு பேரு இருக்காங்க.. கதிரும் கண்ணும் வந்திருக்காங்க, தெம்பா இருக்கட்டும்ன்னு” என்றார் வள்ளி மெதுவாக.
“நான் கேக்கல.. நான் கேக்கல..” என்றான் கதிர் வேகமாக.
“நல்லம்மைக்கு ஏற்கனவே கர்ப்ப நேர சுகர் இருக்கு. மட்டன் வேண்டாம்னு சொல்லி இருக்கேனா இல்லையா?”
அனைவரும் அமைதியாக இருந்தனர்.
“வள்ளிமயில் அண்ணி வெயிட் போன மாசத்துக்கு மூணு கிலோ ஏறி இருக்கு. மாசமா இருந்தா சத்தா சாப்பிடனும், யாருக்கு என்ன ஒத்துக்குமோ அது தானே சாப்பிடனும். டெய்லி நான் வெஜ் வேண்டாம்னு எத்தனை தரம் அத்தை சொல்றது” என்றான் சலிப்பாக.
“இன்னிக்கு மட்டும் தான் விடு முத்து” என்றான் வெற்றி.
“சேந்தா.. நேத்து என்ன சூப்..” என்றான் முத்து சேந்தனிடம்.
“நெஞ்செலும்பு சூப் மாமா..”
“டே பிபோர் என்ன சூப் டா செல்லம்?”
“ஆட்டு கால் சூப் மாமா.. அதுக்கு பிபோர் நண்டு சூப்.. மாமா.. அதுக்கு பிபோர்… “ என்றான் குழந்தை தன்னை பெரிய மனிதனாக கேள்வி கேட்ட மாமாவிடம் பெருமையாக.
“அத்தை உங்க ரெண்டு பேருக்குமே கொலஸ்டரால் பார்டர்ல நிக்குது. இனிமே இப்படி பண்ணுங்க, அப்புறம் இருக்கு. இன்னில இருந்து ரெண்டு ரவுண்டு சேர்த்து வாக்கிங் போங்க… கையில் வாட்ச் கட்டிட்டு போங்க, நான் வந்து செக் பண்ணுவேன்” என்று விலாசி விட்டான்.
கண்ணம்மை பாவமாக கணவனை பார்த்தாள்.
“இன்னிக்கு பொன்னாங்கண்ணி கீரை சூப் தானே வைக்க சொன்னேன்” என்றான் அன்னத்தை பார்த்து.
“என்னது பொன்னாங்கண்ணி கீரைல சூப்லாமா வைப்பாங்க?” என்று அலறி விட்டாள் கண்ணம்மை.
முத்து கருப்பன் அவளை திரும்பி பார்த்த பார்வையில், “குடிக்கலாமே..நல்லா குடிக்கலாமே பொன்னாங்கண்ணி கீரை சூப்..” என்றாள் மண்டையை ஆட்டிக்கொண்டே.
“இன்னும் ஒரு வாரத்துக்கு இலை தலையா சாப்பிட வைப்பான்” என்றான் சுப்பு கதிரிடம் பாவமாக.
மீண்டும் அனைவரும் பேச்சை தொடர்ந்தனர்.
“நம்ம நச்சாந்துப்பட்டியில் இருந்து ரெண்டு மணி நேரம் தான் அப்பா.. அவசரம்னா அங்க இருந்து கூட கார்ல போய்ட்டு வந்துடலாம். நான் அந்த ஊர்ல தான் வேலைல சேரணும்னு நினைக்கிறேன்” என்று விட்டாள் விசாகா பிடிவாதமாக.
சரியாக அந்த நேரம் முருகம்மை ஆச்சியிடம் இருந்து அழைப்பு வந்தது.
ஸ்பீக்கரில் தான் பேசினார் அருண்.
“பேத்திக்கு வேலை கிடைத்ததற்கு வாழ்த்து தெரிவித்தார்”
“நீங்க சொல்லுங்க அத்தை.. நம்ம சென்னை பக்கம் போஸ்டிங் மாத்தி வாங்கி தரேன்னு சொல்றாங்க உங்க புள்ள.. இவ பிடிவாதமா நிக்குறா” என்றார் சாலா.
“எதுக்கு மாத்தி வாங்கனும் ஆத்தா..?”
“கல்யாணத்துக்கு அப்புறம் ஆளுக்கொரு இடத்துலயா இருக்க முடியும்?”
“அதை நீங்க எல்லாரும் எதுக்கு சொல்றீங்க?”
அனைவரும் இப்பொழுது “ஆங்..” என்று விழித்தனர்.
“வளர்ந்த பிள்ளைங்க முருகுவும் முத்துவும்… ரெண்டும் பொறுப்பான பிள்ளைங்க, அவங்க பேசி முடிவு செய்ய மாட்டாங்களா? இல்ல யோசிக்க தான் மாட்டாங்களா? அவங்க யோசிக்கிறதுக்குள்ள ஏன் எல்லாரும் சேர்ந்து கூட்டத்தை போட்டிருக்கீங்க? என்ன பண்ணலாம்னு உங்க கிட்ட கேட்டா.. கேட்டா மட்டும் உங்க கருத்தை சொல்லுங்க.. புரியுதா?” என்றார் ஒரே போடாக.
அப்புறம் யார் என்ன பேசுவது. அமைதியாக இருந்தார்கள்.
“போலீஸ்காரரே.. நீங்க சொன்ன மாதிரி இவங்க எல்லாருமே டம்மி பீஸுங்க தான் போலயே.. காலையில இருந்து சும்மா சலம்பிகிட்டே இருந்தாங்க..
முருகம்மை ஆச்சி தான் நாட்டாமையா.. ஒரே நிமிசத்துல தீர்ப்பை சொல்லி எல்லா டம்மீஸ்சையும் ஆப் பண்ணிட்டாங்களே.. அடடா!”என்றாள் சத்தமாக.
“ஏன்டி ஸ்பீக்கர் முழுங்கிருக்கியா சின்ன வயசுல..” என்று நங் என்று அவள் தலையில் கொட்டிவிட்டு திரும்பி பார்த்தால், அனைவரும் கதிரை தான் முறைத்து பார்த்துக்கொண்டிருந்தனர்.
‘குட்டி பிசாசு… நல்லா கோத்து விடுது’ என்று மனைவியை மனதினுள் செல்லமாக திட்டிக்கொண்டே.. “போங்க போங்க.. வேலை வெட்டிய பாருங்க.. அதான் நாட்டாமை தீர்ப்பு சொல்லியாச்சு இல்ல” என்று கூறி விட்டு நைசாக கிளம்பி விட்டான் தன் மனைவி கை பிடித்து கொண்டு பீச்சிற்கு.
அன்று மாலை, முத்து கருப்பன் விசாவை அழைத்து கொண்டு கோவிலுக்கு சென்றான்.
இருவரும் இறைவனை வணங்கி விட்டு பிரகாரத்தில் அமர்ந்து கொண்டனர்.
“இந்தா விசா.. உனக்கு வேலை கிடைச்சதுக்கு என்னோட சின்ன கிப்ட்” என்று கூறி ஒரு சிறிய அட்டைப்பெட்டியை கொடுத்தான். விசாகா ஆசையாக வாங்கி அதை பிரித்து பார்த்தாள்.
மிக அழகான வேலைப்பாட்டுடன் கூடிய ஒரு டாலர் இருந்தது, லொக்கெட் வடிவில் இருந்தது. அதை திறந்தால், உள்ளே விசாகாவின் சின்ன வயது படம். பாட்டுபாவாடை சட்டையில்“
“சூப்பர் அத்தான்.. ஏது இந்த படம்.. அம்மாகிட்ட கேட்டு வாங்குனீங்களா?”
“இல்ல விசா.. உன்னை நான் முதல் முதலா சந்திச்ச நாள் இது. அப்பா அன்னும்மா கல்யாணத்தப்ப.. ஆல்பத்துல இருந்து எடுத்தேன்“ என்றான் மென்மையாக.
“பிடிச்சிருக்கா.. ?”
“நல்லா இருக்கு.. ஆனா உங்க போட்டோ வச்சிருக்கலாம்”
“அந்த கிப்ட் பாக்ஸ் கீழே இன்னொரு பாக்ஸ் இருக்கு பாரு”
விசாகா வேகமாக மறுபடியும் பார்த்தால், இன்னொரு சிறிய டப்பா இருந்தது. அதிலும் ஒரு டாலர் இருந்தது. அதை திறந்து பார்த்தால், அதில் முத்து கருப்பன் புகைப்படம் இருந்தது. அதுவும் விசா முதல் முதலில் அவனை சந்தித்த தோற்றத்தில்.
“இதுவும் ஆல்பத்தில் இருந்து தான் எடுத்தேன்”
“ரொம்ப நல்லா இருக்கு அத்தான்”
இருவரும் தங்கள் கழுத்தில் இருந்த சங்கிலியில் இந்த புது டாலரை கோர்த்து போட்டுக்கொண்டனர்.
“சரி.. அப்புறம் சொல்லு.. என்ன பண்ணலாம்.. நீ ஒரு இடத்துல நான் ஒரு இடத்துலன்னு இருக்க முடியாது இல்ல விசா..”
“அத்தான் எனக்கு இந்த வேலை ரொம்ப விருப்பமானது, உங்களுக்கு உங்க வேலை எப்படியோ அப்படிதான் எனக்கும்”
“அது எனக்கு தெரியும்.. ஆனால் என் வேலை சென்னைல மட்டும் அப்படினு இல்ல… நீ போற ஊர் பக்கத்துல பெரிய மருத்துவமணை பார்த்து அங்க அப்ளை பண்ணுவோம்.
வாரத்துல ரெண்டு நாள் இங்கே வந்து முக்கியமான அறுவை சிகிச்சை… முக்கிய கன்சல்டேஷன் எல்லாம் பார்க்கிற மாதிரி ஏற்பாடு பண்ணிக்கலாம்.. இந்த வேலை எல்லாம் ஒரு நாலு மாசத்துல முடிச்சிடலாம்.. இப்ப நீ சந்தோசமா போய் உன் வேலைல சேரு.. என் செல்ல விவசாய அதிகாரியே..”
“என் செல்ல கருப்பன் … நீங்க இது தான் சொல்லுவீங்கன்னு எனக்கு தெரியும்” என்றாள் மலர்ந்த புன்னகையுடன்.
“ஆஹான்.. வேற என்ன தெரியும்.. என் செல்ல பொண்ணுக்கு..”
“டோன்ட் ட்ரீட் மீ லைக் எ சைல்ட்.. நான் உங்க மனைவியா.. உங்க காதலியா.. சரி பாதியா இருக்கத்தான் ஆசை படுறேன்”
“ஹா ஹா ஹா.. ஆனால் எனக்கு நான் உன் குழந்தையா இருக்கணும்னு ஆசையா இருக்கு.. நீ என்னை குழந்தை மாதிரி பார்த்துகிறீயா விசாம்மா?”
“கண்டிப்பா அத்தான்.. நீங்க ஒத்துழைச்சா..”
“ஹா ஹா ஹா… நான் என்ன ஒத்துழைக்கணும் ?”
“ஆமாம்.. நீங்க வீரா அண்ணன் சொல்ற மாதிரி ’நான் நல்லவன்.. வல்லவன்.. நாலும் தெரிஞ்சவன்..’ அப்படின்ற உங்க நினைப்பை தூர வச்சிட்டு வாங்க. கடமை கண்ணியம் கட்டுப்பாடு எல்லாத்தையும் தூர வச்சிட்டு உங்க விசா கிட்ட வாங்க.. நீங்களா வாங்க…. இயல்பா வாங்க.. உங்களை தாயா தோழியா காதலியா அரவணைக்க காத்துகிட்டு இருக்கேன்”
“இப்பவே வரணும் போல இருக்குடா… இன்னும் நாலு மாசம் இருக்கே..” என்றான் ஏக்கமாக.
இருவரும் அந்த நிமிடத்தை அமைதியாக நெகிழ்ச்சியாக அனுபவித்தனர்.
“சீக்கிரமா நாள் போய்டும் அத்தான்.. அப்புறம் நாம அந்த கிராமத்துல நம்ம புது அத்தியாயத்தை அழகா செதுக்குவோம்”
“நீ சென்னை வேண்டாம்ன்னு சொல்றதுக்கு இதுவும் ஒரு காரணம் தானே. எனக்காக.. நமக்காக.. நம்ம தனிமைக்காக.. சரியா?”
“ஆமா அத்தான், கொஞ்ச நாள் நாம தனியா இருப்போம். நீங்க நீங்களா இருங்க.. அன்பு சங்கிலி விட்டு சுதந்திரமா.. நம்ம ரெண்டு பேராலயும் குடும்பத்தை விட்டுட்டு தூரமா இருக்க முடியாது. நம்ம குடும்பம் நம்ம வாழ்வில் ஒரு அங்கம், ஆனா கொஞ்சம் இடைவெளி இப்பொழுதைக்கு இருக்கட்டுமே.. கொஞ்சம் நாட்கள் நமக்காக இருக்கட்டுமே”
“நீ இப்படி தான் யோசிச்சு இந்த முடிவை எடுத்திருப்பேன்னு என்னக்கு தெரியும்“
“ஆஹான்… வேற எண்ணலாம் தெரியும்” என்றாள் விசாகா முத்துக்கருப்பன் மாதிரியே.
“எனக்கு ஒரு ஆசை… கனவு அப்படின்னு கூட சொல்லலாம்”
“சொல்லுங்க அத்தான்”
“நம்ம ஒரு கிராமத்துல ஒரு இல்லம் மாதிரி கட்டி அதை நடத்தணும். அது கேன்சர் நோயாளிகளை பார்த்துக்கற இல்லம்.
எங்க அம்மா முடியாம இருந்தப்ப அவங்களை பார்த்துக்க முடியாம நானும் அப்பாவும் ரொம்ப கஷ்டப்பட்டோம். கீமோ ரேடியோ.. இதுலாம் கொடுக்கும் போது உடம்பும் மனசும் ரொம்ப பலவீனமா இருக்கும். அந்த வேதனை அனுபவிக்கிறவங்களுக்கு மட்டும் கிடையாது, பார்த்துக்கறவங்களுக்கும் இருக்கும்.
நிறைய டாக்டர்ஸ் இருக்காங்க இப்ப.. நிறைய மருத்துவ வசதிகளும் இருக்கு.. ஆனால், ‘தைரியமா இருங்க.. பார்த்துக்கலாம்.. இதுவும் கடந்து போகும்னு அனுசரணையா சொல்றதுக்கு ஒரு ஆள் இருந்தா யானை பலம். அந்த பலத்தை நம்ம இல்லத்துல கொடுக்கனும்.
இயற்கையான சூழல்.. மனசுக்கு இதமான பொழுது போக்கு.. நேர்மறையான எண்ணங்கள்.. இனிமையான சேவகர்கள்.. நல்ல மருத்துவர்கள்.. இப்படி நிறைய யோசிச்சு வச்சிருக்கேன்”
அவனது கனவு ஒரு பிரமிப்பை ஏற்படுத்தியது பெண்ணுக்கு.
“கண்டிப்பா அத்தான்.. நம்ம கனவை நோக்கி பயணிப்போம். இதை நல்ல முறையில செயல் படுத்துவோம். இறைவன் கொடுத்த வரம் நம்ம குடும்பம். அவங்க துணையோடு முருகன் அருளால் நாம இதை செயல் படுத்துவோம்.
நிதானமா பக்குவமா நம்ம கனவை நோக்கி ஒவ்வொரு அடியா எடுத்து வைப்போம்“
ஆதூரமாக ஒருவர் கையை ஒருவர் பிடித்துக்கொண்டனர். சரியாக கோவில் மணி ஒலித்தது.
நிறைவான மனதுடன் இருவரும் புறப்பட்டனர்.
error: Content is protected !!