Skip to content
Post Views: 2,288

கருப்பன் ஆட்டம் 12
Advertisement
மலரை பஸ்ஸில் ஏற்றிவிட்டு திரும்பிய மயிலின் பார்வை கருப்பனின் அருகில் நின்றிருந்த தர்மனின் மீது பதிந்தது.
Advertisement
ஆனால் தர்மனோ போகும் பேருந்து தன் கண்ணை விட்டு மறையும் வரையில் பார்த்துக் கொண்டிருந்த கருப்பனையே விழியகலாது பார்த்துக் கொண்டிருந்தான்.
Advertisement
அதன் பின் தன்னை யாரோ துளைப்பதை போல் உணர்ந்தவனின் விழிகள் கருப்பனை விட்டு வேறு திசை நோக்க, அங்கே அவனையே வைத்த கண் வாங்காமல் முறைத்து பார்த்துக் கொண்டிருக்கும் மயிலை பார்த்தவன், ‘அய்யோ இவ வேற முறைக்கிறாளே!’ என்று நினைத்தவன், என்ன என்பதை போல் புருவம் ஏற்றி இறக்க,
Advertisement
அவனை பார்த்து மேலும் முறைத்தவள் தன் வாயை இருபக்கமும் ஆட்டி சுழித்து கட்டியவள் அவனை தாண்டி சென்றாள்.
கருப்பன் புறம் திரும்பிய தர்மன் “டேய் கதிரு” என்று அவன் முன்பு கையைசைக்க, அவனின் விழிகளோ தர்மனை ஏறிட்டும் பார்க்காமல் தூரத்தில் சென்று கொண்டிருக்கும் பேருந்தை பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்தவன், “டேய் மச்சான் நீ அங்கேயே பார்த்துட்டு நான் இந்தா வந்துடுறேன்” என்று கூறவே,
தர்மன் கூறியதன் பொருள் புரிந்ததா என்னவோ சரி என்பதை போல் தானாக தலை அசைந்தது கருப்பனுக்கு.
‘என்ன இவன் எப்படி இருக்கான்! சரி இப்படியே இருக்கட்டும் நம்ம போயிட்டு வந்துருவோம்’ என்று நினைத்து அங்கிருந்து நழுவி, குறுக்கு பாதை வழியாக வளைந்து நிறைந்திருக்கும் வாழைத்தோப்பின் அருகில் சென்று மறைவாக நின்று கொண்டான் தர்மன்.
‘தன்னை ஒருத்தி முறைச்சுட்டு போறாளே! ஒரு வார்த்தை வந்து பேசுறானா பாரு, இருக்கட்டும் இவன இன்னும் கொஞ்ச நாள் சுத்தல்ல விட்டா தான் சரி பட்டு வருவான்’ என்று நினைத்த மயில் வெடுக்கு வெடுக்கு நடந்து சென்று கொண்டிருக்க,
அப்பொழுது அவள் அறியா வண்ணம் பட்டென அவளின் கையை பிடித்து வாழை தோப்பினுள் இழுத்தான் தர்மன்
திடீரென யாரோ ஒருவன் பிடித்து இழுக்கவும் முதலில் அதிர்ந்தவள் பின் அது தர்மன் என்று தெரிந்து கொண்டதும் மனம் முழுவதும் பட்டாம்பூச்சி சிறக்கடித்து பறந்தாலும் அதனை வெளிக்காட்டிக் கொள்ளாத மயிலோ,
“இப்ப எதுக்கு நீ என்ன கைய புடிச்சு இழுத்த? நான் மட்டும் கத்தி ஊரைக் கூப்பிட்டேன்னு வையி உன் மானம் மருவாத எல்லாம் கெட்டு காத்துல பறந்துரும் பாத்துக்கோ!” என்று மயில் கோபமாக இருப்பதைப் போல் வெளிக்காட்டிக் கொண்டாள்.
“என்ன! ஊரு கூட்ட போறியா? அடியே என் மனசுல உன்மேல இருக்குற விருப்பத்தை உன்கிட்ட சொல்லி கிட்டத்தட்ட ரெண்டு வாரத்துக்கு மேல் ஆச்சுடி. நீ மெட்ராசுக்கு போறதுக்கு முன்னாடியே சொன்னேன். மெட்ராசுக்கு போயிட்டு வந்து பொறவு பதில் சொல்றேன்னு சொன்னேன்ல. ஆனா இன்னமும் நீ வாயை திறந்து ஒன்னுமே சொல்லலையேடி! எப்படி சொல்லுவ? உன் பதிலுக்காக காத்துட்டு இருக்கேன்டி தங்கம், என்னை பார்த்தா பாவம் இல்லையாடி? என்ற தர்மன் மயிலின் முகத்தை பார்த்து கேட்டான்.
அதற்கு அவனை முறைத்து பார்த்த மயில் அங்கிருந்து நழுவி கிளம்ப பார்க்க, “என்னடி நான் கேட்டுட்டே இருக்கேன் நீ பாட்டுக்கு பதில் சொல்லாமல் நகல பாக்குற?”
“ஆங்… அப்போ எனக்கு விருப்பம் இல்லைனு அர்த்தம்..!”
“ஏய் என்னடி பொசுக்கு இப்படி சொல்லிட்ட?”
“ஆமா! மனசுல உள்ளதத்தேன் சொன்னேன். எனக்கு உன் மேல விருப்பம் இல்ல” என்று அவள் பட்டென கூறிவிட்டு அவனின் கையை உதறிவிட்டு செல்ல,
‘என்ன இவ இன்னும் கொஞ்ச நாள் டயம் குடுன்னு கேப்பான்னு பாத்தா இப்பிடி பொசுக்குன்னு போட்டு ஒடச்சிட்டா! இல்லையே, இவள இப்பிடியே விட கூடாதே!’ என்று நினைத்து சடுதியில் ஒரு திட்டம் தீட்டி அவளிடம் பேச்சை வளர்க்க விரும்பியவன்,
“சரி நம்ம பிரச்சனை அப்புறம் பொறுமையா பாத்துக்குவோம். இப்ப நான் உன்கிட்ட ஒரு விஷயத்தை கேக்கணும்னு நெனச்சேன்” என்றான் தர்மன்.
“என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு, அங்க என் ஆத்தா எனக்காக காத்துட்டு இருக்கும்”
“அடிப்பாவி! உன் பதிலை எதிர்பார்த்து நாங்க ரெண்டு வாரமா காத்துட்டு இருக்கேன். இப்போ உங்க ஆத்தா காத்துட்டு இருக்கிறது ரொம்ப முக்கியமா?”
“இப்ப நீ என்ன விஷயம்னு சொல்லப் போறியா? இல்ல நான் கிளம்பிபோகவா?
“இருடி சொல்றேன், என்றவன் ஆமா! அது என்ன உன் ஃபிரண்டு எப்ப பார்த்தாலும் கதிர சீண்டி கிட்டே இருக்கு? யார் அந்த புள்ள? ஏதோ மெட்ராஸ்காரப் பிள்ளைன்னு சொல்லி கேள்விப்பட்டேன்! எதுக்கு உங்க வீட்டுக்கு வந்திருக்கு? என்ன விஷயம்?” என்று கேட்டான் தர்மன்.
“அது எதுக்கு உனக்கு? ஏன் நான் ஒத்துக்கலன்னதும் அவகிட்ட கடலை வறுக்கலாம்னு பாத்தியா?” என்று கடுகடுவென முகத்தை வைத்துக்கொண்டு கேட்டால் மயில்.
“சீ..ச்சி.. அப்படியெல்லாம் இல்ல அந்த புள்ள என் தங்கச்சி மாதிரி. ஆனா அந்த புள்ள கருப்பனை பார்க்குறப்ப எல்லாம் எதுனாலும் சொல்லி சீண்டிகிட்டே இருக்கு,
கதிரு ஏதாவது ஒரு காரியம் பண்ணா அதுல அர்த்தமோ காரண காரியமோ இல்லாம இருக்குமா உனக்கே தெரியும்ல, அப்படி இருக்கும் போது அந்த பிள்ளை ஏன் எப்ப பார்த்தாலும் அப்படி பண்ணுது?”
“எனக்குமே அந்த சந்தேகம் இருக்கு தர்மா! இவ குணமே இது கிடையாது. அவ ரொம்ப பயந்த சுபாவம் உள்ள புள்ளை. ஆனா இவன் ஏன் இப்படி பண்றான்னு எனக்கே தெரியல?”
“யாரு! அந்த புள்ள.. பயந்து சுபாவம்…அத நான் நம்பனும்…!!?”
“அட உன் மேல சத்தியங்குறேன்!” என்று அவன் தலையில் தன் உள்ளங்கையால் தொம் என்று அடிக்க,
ஆ.. ஆ… என்று கத்தி தன் தலையை தேய்த்துக் கொண்ட தர்மன் “அடிப்பாவி….! வாயில சொன்னா நான் ஒத்துக்க மாட்டேனா ஏண்டி இப்படி பச்ச புள்ள தலையில பேய் மாதிரி அடிக்கிற? மண்ட ஏதும் ஒடஞ்சுட போகுதுடி, அப்புறம் நீ தான் சிரமப்படும்!”
“ஆமா! சிரமப்படுறாங்க போடா…, நீ தான் நான் சொன்னதை நம்பலல்ல அதுக்கு தான் சத்தியம் பண்ணி நிரூபிச்சேன்! என்றவள்,
சரி சரி, இதுதான் சாக்குனு பேச்சு வழக்காத! நான் விஷயத்தை சொல்லிவிட்டு கிளம்புறேன்” என்றவள்,
அவள் தன்னுடைய நெருங்கிய தோழி என்றும் அவளும் நானும் சென்னையில் ஒரே கல்லூரியில் படித்ததாகவும், அவளின் திருமணத்திற்கு தான் சென்றதும், அவளின் விருப்பமில்லாமல் திருமண ஏற்பாடு செய்யப்பட்டதும், அவள் தற்கொலை செய்ய முயற்சி செய்ததும், தான் தக்க சமயத்தில் அவளை காப்பாற்றியதும் பின் அவள் மதுரைக்கு அழைத்து வந்ததும், அவள் வளர்ந்த சுபாவம் வேறு இங்கு கண்ட காட்சியும் வேறு அதனால் அவளுக்கு கருப்பன் அத்தான் செய்யும் செயல் பிடிக்காமல் ஒவ்வொரு நேரமும் இப்படி செய்கிறாள் போலும் என்று மயில் தர்மனிடம் கூறினாள்.
“ஆமா…! அந்த புள்ள அவங்க வீட்ல பாத்த மாப்ளயோடா செயல் பிடிக்காம தான் கல்யாணம் வேணாம்னு சொல்லுச்சா! இல்ல வேற யாரையும் விரும்புதா? என்று தர்மன் கேட்டான்.
“அவ யாரையும் விரும்பல, அவளுக்கு இதுவரைக்கும் எந்த ஒரு லவ்வும் இருந்ததும் கிடையாது. அவளோட கல்யாண விசயத்துல அவங்க அப்பாவுடைய செயலும் அந்த மாதேஷோட செயலும் பிடிக்காம தான் கல்யாணம் வேணாம்னு சொன்னா”
“இந்த பணக்காரங்களே இப்படித்தான் அறிவே வேலை செய்யாது போல! அவ்வளவு சிறப்பா கல்யாண வேலை பாத்த அவங்க அப்பன் காரனுக்கு அந்த புள்ளைக்கு கல்யாணத்துல விருப்பம் இருக்கா இல்லையான்னு கேட்க தோணலயாமா? சரியான
முட்டாப் பய” என்று தனது ஆதங்கத்தை கூறியவனின் புருவமிடுங்கி சில நொடி யோசித்தவன்,
“ஆமா எனக்கு ஒரு சந்தேகம்?” என்றான்.
“என்ன?”
“ இல்ல.. நாள பின்ன உனக்கும் உங்க அண்ணகாரன் வேற ஏதாவது மாப்பிள்ளைய கொண்டாந்து நிறுத்திட்டா நீ அவன கல்யாணம் பண்ணிக்க சம்மதிப்பியா? மாட்டியா?” என்று கேட்டான் தர்மன்.
“இதுல என்ன சந்தேகம்? அப்பிடி நல்ல கவர்மெண்ட் உத்தியோகத்துல இருக்குறவனா பாத்து எங்க அண்ணே கூட்டியாந்தா கல்யாணம் பண்ணிக்க வேண்டியது தான். நான் எதுக்கு வேணான்னு சொல்லப்போறேன்” என்று கூறினால் மயில்.
“அடியே உனக்காக இங்க ஒருத்தன் காத்துட்டு இருக்கேன்டி”
“நீ காத்துக்கொண்டே இரு, நான் சொல்ற மாதிரி எங்க அண்ணன் ஏதாவது மாப்பிள்ளை கூட்டிட்டு வந்தா நான் கல்யாணம் பண்ணிட்டு போயிடுவேன்”
“அடியே மயிலு அப்படியெல்லாம் பண்ணி புடாதடி என் மனசு முழுக்க நீ தாண்டி இருக்க, என்னை ஏமாத்திறாதடி, நான் பாவம்டி” என்று தர்மன் கண்களை சுருக்கி கேட்க,
அவன் அப்படி கூறிய பொழுது அவனை ஓடி சென்று அணைத்து தன் மன விருப்பத்தை கூற நினைத்து அவள் ஒரு அடி எடுத்து வைத்தவளை மனம் கட்டிவாளம் இட்டு தடுத்து நிறுத்தி வைக்க, தூரத்தில் தோட்டி தனது கழுத்தில் தொங்க போட்டு இருந்த கொட்டில், டம்!டம்! டம்! என்று அடித்துக் கொண்டே வந்தார்.
அந்த சத்தத்தில் இருவரும் சத்தம் வந்து திசை நோக்கி பார்த்திருக்க,
“ஆமா.. நம்ம ஊரு திருவிழாக்கு இன்னும் ஒரு மாசம் கிடக்கே, அப்படி இருக்க இந்நேரம் எதுக்கு தோட்டி கொட்டடிச்சிட்டு வறாரு?” என்று மயில் தர்மனிடம் கேட்க,
“அடுத்த மாசம் திருவிழா வந்தா என்ன இந்த மாசம் தான் ஜல்லிக்கட்டு வருதுல்ல, அதுக்குத்தான் ஊர் பூராவும் சேதி சொல்லிட்டு வராப்புடி தோட்டி” என்றான் தர்மன்.
“ஓ…. ஜல்லிக்கட்டா சூப்பர்!! அப்ப அடுத்த பத்து நாளைக்கு உன்னையும் என் அத்தனையும் கையில பிடிக்க முடியாது” என்று மயில் கூற,
“ ஏன் நாங்க ரெண்டு பேரு மட்டும் தான் பூரா மாட்டையும் பிடிக்க போறோமா என்ன? உன் அண்ணங்காரனும் தான இதுல கலந்து இருக்கியான்”
“பின்ன முட்டி செத்த பய நீயே இதுல கலந்துக்கும்போது, எங்க அண்ணே கலந்துக்க மாட்டானா?”
“என்னது!!! முட்டி செத்தவனா!! அடியே உன் அண்ணனை பெருமையா பேசுறேன்னு நீ என்னை கேவலப்படுத்தி பேசுனன்னு வையி, அப்பறம் நான் முட்டி செத்தவனா இல்லையான்னு நிரூபிக்க வேண்டியதா போயிடும் பாத்து சூதானமா நடந்துக்கோ”
“அதுக்கெல்லாம் நீ சரிப்பட்டு வர மாட்ட, என் கையை விடு நான் போறேன்” என்றவள் தர்மனின் கையை உதறி தள்ளிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டால் மயில்.
போகும் அவளைப் பார்த்து மீசையை முறுக்கி விட்டு கொண்டவன் “அடியே உன்னை ஒரு நாளைக்கு வச்சிக்கிறேன்டி. அன்னைக்கு தெரியும் இந்த தர்மனோட திறமை என்னன்னு” என்று கூறிவிட்டு முகத்தில் அரும்பிய புன்னகையோடு கருப்பன் அருகில் சென்றான் தர்மன்.
தர்மன் தனது அருகில் வருவதை பார்த்த கருப்பன்,
“இத்தன நேரம் ஆள காணோம் எங்கடா போயிருந்த?”
“அ..அதுவா மச்சான் ஒன்னுக்கு இருக்க போயிருந்தேன்”
“நீ இவ்வளவு நேரம் எங்க ஒக்காந்து என்ன வேலை பார்த்தன்னு எனக்கு எல்லாம் தெரியும்டா வெண்ண” என்றான் கருப்பன்.
“உனக்கும் தெரிஞ்சு போச்சா மச்சான்! என்றவன் ஈ…” என்று இழுத்து வைத்தான்.
“எனக்கு தெரியும். ஆனா இதுக்கு அப்புறம் இந்த மாதிரி வேலை எல்லாம் வச்சுக்காத, என்ன இருந்தாலும் அது என் அத்தை மக, ஒரு நேரம் போல ஒரு நேரம் நான் இருக்க மாட்டேன். கூட பழகுனவன்னு கூட பாக்க மாட்டேன் முதுகு தண்டு முறிச்சுவுட்ருவேன். என்ன பத்தி உனக்கு தெரியும்ல!!
அப்பறம் நான் அமைதியா இருக்கேனோ இல்லையோ அவளோட அண்ணன் காரன் காரனுக்கு தெரிஞ்சது ஒன்ன உருச்சி உப்புக் கண்டம் போட்ருவியான் சூ** சாத்திக்கிட்டு சூதானமா இருந்துக்க”
“அதுக்கெல்லாம் எதுக்கு மச்சான் நாங்க கவலைப்படணும்! அதான் எனக்கு தோள் குடுக்க நண்பன் நீ இருக்கியே!” என்று கருப்பனை தன்னுடன் இணை சேர்த்துக் கொள்ளும் படியாக தர்மன் பேச,
“உனக்கே தெரியும் . எனக்கு இந்தக் காதல் கருமாந்தரம் எல்லாம் அறவே பிடிக்காதுன்னு, என் வாழ்க்கையில நான் அனுபவிச்ச விஷயங்கள் எல்லாம் போதும். நீ ஏதாவது பண்றேன்னு கண்டதையும் ஞாபகப்படுத்தி விட்டு என்னை வெறி ஏத்திவுட்றாத, உன்னால எனக்கு எந்த ஒரு பிரச்சனையும் வராமல் இருக்கிற வரைக்கும் நீ தப்பிச்ச,
இரண்டாவது எனக்கும் அந்த அய்யனாருக்கும் சுத்தமா செட் ஆகாது , இப்ப ஜல்லிக்கட்டுக்கு வேற தோட்டி சொல்லிட்டு போயிருக்கியான். இனி இதை வச்சு அவன் என்ன என்ன சல்லித்தனம் பண்ணி என்கிட்ட வாங்கி கட்டிக்க போறான்னு தெரியல!” என்று நண்பர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்தனர்.
அதேநேரம் ஊருக்குள் வயக்காட்டில் வேலை செய்து கொண்டிருக்கும் பெண்களுக்கும், ஊர்க் கோடியில் தண்ணீர் சுமந்து செல்லும் பெண்களுக்கும், மளிகை கடையில் பொருள் வாங்கி செல்லும் பெண்களுக்கும் இடையிலும் பேச்சு பொருளாகவே மாறிப் போயிருந்தனர் கருப்பன் மற்றும் மலர்விழி இருவரும்!!!
கருப்பன் வேட்டை தொடரும்….
💝கருப்பனின் காரிகையவள் 💝💝💝
error: Content is protected !!