Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 13.1

அத்தியாயம் 13(1)

பெட்டிகளை எடுத்துக்கொண்ட மிருதுளா, “ஆச்சி சீக்கிரம் வாங்க. டைம் ஆச்சு.” என்று சொல்லிக்கொண்டு வெளியே வர, எதிரில் அவள் கண்ட காட்சியில் ஆனந்த அதிர்ச்சியில் மூழ்கிப்போனாள். சந்தோஷத்தில் கைகளில் இருந்த பெட்டிகள் கைநழுவியது. ஒரு தாய் தன் குழந்தை முதன் முதலில் செய்யும் சில செயல்களை நினைத்து மகிழ்ச்சி கடலில் மூழ்குவார்களோ, அதைதான் இப்பொழுது மிருதுளாவும் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வாசலில் அவளது மகள் தேஜா, கைகள் இரண்டையும் நீட்டிக்கொண்டு எந்தப் பிடிப்பும் இல்லாமல், தத்தி தத்தி நடந்து இவளை நோக்கி வந்து கொண்டிருந்தாள். அவளது குட்டி உதடுகளோ “ம்ம்…ம்ம்ம” என்று தனது அன்னையை அழைக்க முயற்சி செய்து கொண்டிருந்தது. இதுநாள் வரை கைகாளால் பிடித்துக்கொண்டு நடக்கவைத்தால் நடக்கும் குழந்தை, இன்று முதல் முதலாக எந்தப் பிடிப்பும் இல்லாமல் நடந்து வருவதைப் பார்கையில், மிருதுளாவிற்கு உள்ளம் துள்ளியது. மகிழ்ச்சியில் கண்கள் கலங்கிவிட்டது. தேஜாவிற்குச் சில அடிதூரம் பின்னால் கெளதம் நின்று கொண்டிருந்தான். அவனுக்கு பின்னே சேகர்.

கிட்டத்தட்ட மிருதுளாவின் வீட்டு வாசல் வரை வந்துவிட்ட தேஜா, அவளை நெருங்கும் நேரம், வாசலில் இருந்த மேட் குழந்தையின் கால்களைத் தடுக்கிவிட, தடுமாறி விழப்போனவளை, சட்டென்று அருகில் சென்று பிடித்தக்கொண்ட மிருதுளா, அப்படியே அவளைத் தூக்கிக்கொண்டவள், குழந்தையின் முகம் முழுவதும் முத்தமழை பொழிந்துவிட்டாள். கைகளைக் கட்டிக்கொண்டு மிருதுளாவை கெளதம் பார்த்துக்கொண்டிருக்க, ஆராவோ இவனை வாயப் புலந்து பார்த்துக் கொண்டிருந்தாள். அவளின் நினைவுகளோ சில மணிநேரங்கள் பின்னோக்கி சென்றது.



Advertisement

மிருதுளாவை தடுக்க எவ்வளவோ முயற்சி செய்து பார்த்தும் முடியில்லை ஆராவாள். வெண்ணைத் திரண்டு வரும்போது பானை உடைந்துவிடும் போல இருக்கே என்று நினைத்தவள், யார் இருவருக்கு உண்மை தெரியவேண்டாம் என்று நினைத்தாலோ இன்று வேறு வழியில்லாமல் அவனையே தேடி சென்றாள்.

ஆபீஸ் போகாமல், நேரே கௌதமை தேடி அவனது அலுவகத்துக்குச் சென்றவள், ரிஷப்ஷனில் சொல்லிவிட்டு ஐந்து நிமிடம் காத்திருக்க, வெளியே வந்தான் கெளதம். ஆராவை அங்கே பார்த்ததும் அவனுக்குள் சிறு பதற்றம் வந்து ஒட்டிக்கொண்டது. ஏனெனில் நேற்று மிருதுளா பேசி சென்றவிதமே, இந்தக் கலக்கத்திற்குக் காரணம். நேரே அவள் அருகில் வந்தவன், “என்ன ஆரா? என்னைத் தேடி வந்திருக்கீங்க?! எதுவும் ப்ராப்ளமா?!” என்று கேட்க, அவளோ, “உங்ககிட்ட இப்போ கொஞ்சம் பேசணும் கெளதம் சர். ஒரு அரை மணிநேரம் டைம் கிடைக்குமா?” என்று தயக்கத்துடன் கேட்க, அவள் முகத்தில் ஒன்றும் கண்டறிய முடியவில்லை கௌதமால். ஆனால் ஏதோ முக்கியமான ஒன்று என்று மட்டும் புரிந்துகொள்ள முடிந்தது. “சரி ஆரா. ஒன் செக்கண்ட் இருங்க. இதோ வரேன்.” என்றவன், ரிஷப்ஷனில் உள்ள தொலைபேசியில் இருந்து தனது நண்பனை கூப்பிட்டவன் அவசர வேலையாக வெளியே செல்வதாகவும், ஒரு மணிநேரத்தில் வந்துவிடுவதாகச் சொல்லிவிட்டு வைத்தான். பின்பு ஆராவை அழைத்துக்கொண்டு பக்கத்தில் இருந்த காபேவிற்குச் சென்றான், தனது வாழ்கையையே புறட்டி போடபோகும் அதிர்ச்சி காத்திருக்கிறது என்று தெரியாமல்.

கூல்ட்ரிங்க்ஸ் ஆர்டர் செய்துவிட்டு இருவரும் அமர்ந்திருக்க, எப்படி ஆரம்பிப்பது என்று தெரியாமல் ஆரா யோசித்துக் கொண்டிருந்தாள். ஏனெனில் அவளுக்குத் தெரியும், தான் சொல்லபோகும் உண்மை கௌதமிற்குப் பேரதிர்ச்சி கொடுக்ககூடிய விஷயம் என்று. நேரம் சென்று கொண்டிருக்க கெளதம் தான், “என்ன விஷயம் ஆரா. ஏதோ பேசணும் சொல்லிட்டு அமைதியா இருக்கீங்க?!” என்று ஆரம்பிக்க, அவளோ தயக்கத்துடன், “எப்படிச் சொல்றதுன்னு எனக்குத் தெரியலை. இந்த விஷயம் உங்களுக்கு ரொம்பவே ஷாக்கிங்கா இருக்கும் கெளதம் சர். இருந்தாலும் இப்போ சொல்லவேண்டிய கட்டயத்தில நான் இருக்கேன்.” என்றவள் தைரியத்தை வரவழைத்துகொண்டு அனைத்தையும் சொல்லி முடித்தாள்.

Advertisement

அவள் சொல்லச் சொல்ல கௌதமிற்கு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சி! யாருக்குமே தெரியாத உண்மை, ஏன் யாழினிக்கு கூடத் தெரியாத விஷயம் ஆராவிற்குத் தெரிந்திருப்பதை நினைக்கையில் உண்மையில் அதிர்ந்து தான் போனான். அதே நேரம் தேஜாவை நினைக்கையில் ஒரு கலக்கமும் பயமும் அவன் மனதுக்குள் வந்து ஒட்டிக்கொண்டது.

Advertisement

ஆரா சொல்லி முடித்ததும் தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டான். தான் கேட்டதை ஜீரணிக்கவே அவனுக்குப் பல நிமிடங்கள் தேவைப்பட்டது. இப்பொழுது அவன் மனம் எல்லாவற்றையும் முடிச்சிபோட்டுப் பார்த்தது. என்ன பதில் சொல்வதென்று அவனுக்குப் புரியவில்லை. அதைவிடத் தேஜாவை இழக்க நேர்ந்திடுமோ என்ற பயம்தான் அவனுக்கு அதிகம் இருந்தது. அவனின் கண்களில் தெரிந்த கலக்கத்திலேயே அவன் என்ன நினைக்கிறான் என்று புரிந்துகொண்ட ஆரா, மேற்கொண்டு தன் மனதில் நினைத்திருக்கும் சில விஷயங்களையும் சொன்னாள்.

எல்லாவற்றையும் சொல்லி முடித்தவள், “உங்களைப் பயபட வைக்கிறேன்னோ, இல்லை தேஜாவை வச்சு இந்தச் சந்தர்பத்தை நான் யுஸ் செஞ்சுகிறேன்னு என்னைத் தப்பா நினைக்காதீங்க கெளதம் சர். அப்படித் தேஜா தான் எனக்கு முக்கியம்னா, எப்போ எனக்கு உண்மை தெரிஞ்சுதோ, அப்பவே நான் உங்களைத் தேடி வந்திருப்பேன். ஆனா இப்போ வேற வழியில்லாம தான் உங்களைத் தேடி வந்திருக்கேன். இந்த உண்மையை அக்காகிட்ட சொல்லி, உங்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்க நான் விரும்பல. ஏனா, இந்த விஷயத்தைப் பொறுத்தவரை உங்க மூனு பேரையும் என்னால் பிரிக்க முடியலை. தேஜாவை பொறுத்தவரை நீங்க ரெண்டு பேருமே அவளுக்கு வேணும். உங்க ரெண்டு பேருக்குமே தேஜா மேல உரிமை இருக்கு. அந்த உரிமையை ரெண்டு பேருமே எந்தச் சூழ்நிலையிலும் இழக்க கூடாதுன்னு ஆசைபடுறேன்.” என்று ஆரா சொன்னதும் சட்டென்று நிமிர்ந்த பார்த்த கௌதமின் கண்கள் கலங்கி இருந்தது. அதைப் பார்த்து அதிர்ந்த அரா, “சர், ப்ளீஸ். நீங்க நினைக்கிற மாதிரியும் எதுவும் நடக்காது. நிச்சயமா அக்காக்கு தேஜா மேல எவ்வளவு உரிமை இருக்கோ, அந்த அளவுக்கு உங்களுக்கும் இருக்கு. இதை யாராலும் மறுக்க முடியாது. ஆர்மபித்தில எனக்கு இப்படி ஒரு ஐடியா இல்லை. எப்போ உங்களைப் பத்தின விஷயம் எனக்குத் தெரிஞ்சிதோ அப்போதான் எனக்கு இப்படி ஒரு எண்ணம் வந்துது. துணையை இழந்துட்டு நிக்குற நீங்க ரெண்டுபேரும் தேஜாவுக்காக ஒன்னு சேர்ந்தா நல்லா இருக்கும்னு தோணிச்சு. நீங்களே ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிகிட்டு அதுவா நடந்தா அந்தப் பந்தம் நிலைக்கும்ன்னு நினைச்சேன். அதனால தான் இந்த உண்மையை இதுநாள் வரை யார்கிட்டையும் சொல்லல.”

“ஆனா இப்போ தேஜாவை பத்திய உண்மை தெரியாமலையே, அக்கா அவளை நிரந்தரமா பிரிஞ்சிடுவாளோன்னு பயமா இருக்கு. அதே நேரம் நிச்சயமா தேஜாவை உங்ககிட்ட இருந்து பிரிக்கவும் என் மனசு இடம்கொடுக்கல. யார்கிட்ட இதைச் சொல்லனும்னு எனக்குத் தெரியல. அதனால தான் உங்களைத் தேடி வந்தேன்.” என்று சொன்னவள் சில நொடி இடைவெளிக்கு பிறகு, “கல்யாண விஷயத்தைப் பொறுத்தவரை நான் உங்களை நிச்சயம் கட்டாயபடுத்த மாட்டேன் கெளதம் சர். தேஜாவை வச்சு உங்களைக் கார்னர் பண்றேன்னு நினைக்காதீங்க ப்ளீஸ். உங்களுக்கு இந்தக் கல்யாணத்துல இஷ்டம் இல்லைனாலும் பரவா இல்லை. அக்காகிட்ட நான் எப்பவும் தேஜாவை பத்தின உண்மையைச் சொல்ல மாட்டேன். எங்களால உங்களுக்கு எப்பவும் ப்ராப்ளம் இருக்காது. அக்காவும் ஆச்சியும் இன்னைக்கு ஊருக்கு கிளம்புறாங்க. இனி இங்க திரும்ப வர மாட்டங்க. நானும் கூடிய சீக்கிரம் சென்னை போய்டுவேன்.” என்று சொன்னவளின் குரல், மகளைப் பிரிய நேர்ந்திடுமோ என்ற ஏக்கத்தில் உடைந்திருந்தது.

Advertisement

கெளதம் அப்படியே தலைகவிழ்ந்து அமர்ந்திருக்க, கலங்கிய தன் கண்களைத் துடைத்துக்கொண்ட ஆராவிற்கோ, மனதுக்குள் கெளதம் மிருதுளாவை திருமணம் செய்துகொண்டால் நன்றாக இருக்கும் என்ற வேண்டுதலும் இருந்தது. “நீங்க இந்த விஷயத்தில எந்த முடிவு எடுத்தாலும் எனக்குச் சம்மதம் கெளதம் சர். கிளம்பலாமா?!” என்றவளின் மனமோ அவன் நல்ல முடிவு சொல்லமாட்டானா என்று எதிர்பார்த்தது.

கடந்த இரண்டு நாட்களாக மிருதுளாவுடனான திருமணம் பற்றிய விஷயத்தை யோசித்து யோசித்து எந்த முடிவும் எடுக்க முடியாமல் மதில்மேல் பூனையாக இருந்த கௌதமிற்கு, இப்பொழுது ஆரா சொன்ன விஷயத்தில் இருந்து ஒரு தெளிவு பிறந்திருந்தது. தெளிவு என்று சொல்வதை விட, அனைத்து உண்மையும் தெரிந்தபின்பும், ஊரைவிட்டுச் செல்லும் மிருதுளாவிடம் இருந்து தேஜாவை பிரித்து வைத்து அவளுக்குத் துரோகம் செய்ய இவன் மனம் இடம் கொடுக்கவில்லை. அதே நேரம் உண்மையைச் சொல்லி அதனால் எதுவும் எதிர்மறை விளைவுகள் ஏற்படுவதையும் அவன் விரும்பவில்லை. இதற்கெல்லாம் ஒரே தீர்வு இந்தத் திருமணம் தான் என்பதை அவன் உணர்ந்து கொண்டான்.

யாழினி அவன் வாழ்வில் வராமல் இருந்திருந்தால் மிருதுளாவை திருமணம் செய்து கொள்வதில் அவனுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. மிருதுளாவின் குணம் அவனை உண்மையில் கவர்ந்திருந்தது. ஆனால் யாழினி இருந்த இடத்தில் வேறொருவரை அவன் மனம் அவ்வளவு எளிதில் ஏற்றுக்கொள்ளத் தயங்கியது. ஆனால் நேற்று பொன்னம்மா சொன்னது அவனுக்குள் இருந்த தயக்கத்தைக் குறைத்திருந்தது. நிச்சயம் யாழினி என்னைப் புரிந்துகொள்வாள் என்று நினைத்திருந்தவனுக்கு தற்போது முழுத் தெளிவு பிறந்திருந்தது.

தன்னை ஆசுவாசபடுத்திக்கொண்டு நிமிர்ந்தவன், ஒன்றும் சொல்லாமல் “ம்ம். கிளம்பலாம் ஆரா.” என்றவன் அவளை அழைத்துக்கொண்டு திரும்பி அலுவகம் வர, அங்கிருந்த தனது வண்டியை எடுத்துக்கொண்டு ஒருவித எதிர்பார்ப்புடன் கிளம்பபோன ஆராவை, “ஒரு நிமிஷம் ஆரா.” என்று தடுத்தவன், “இந்த விஷயத்தை நினைச்சு நீங்க கவலைப்பட வேண்டாம். நான் பார்த்துக்கிறேன்.” என்று சொல்லிவிட்டு அவளை வழியனுப்பி வைத்தவன் அலுவலகத்தில் விடுப்பு சொல்லிவிட்டு வீட்டிற்கு வந்துவிட்டான்.

தற்பொழுது இதையெல்லாம் நினைத்து பார்த்த ஆராவிற்கு, ‘நான் பார்த்துக்கிறேன்னு சொன்னாரே. அக்கா கிளம்பவே போறா. இன்னும் ஆளை காணோமேன்னு நினைச்சேன். கடைசில வந்தாலும் கரெக்ட்டான நேரத்தில் வர போலிஸ் மாதிரி, செம்ம டைமிங்ல கூடவே சூப்பர் ஆளோட பட்டய கிளப்புற மாதிரி ஒரு என்ட்ரி கொடுத்துட்டாங்க. கலக்கிட்டீங்க அத்தான்.’ என்று நினைத்தவளுக்கு ‘இந்த அக்கா எதையும் சொதப்பிட கூடாதே’ என்ற பயமும் இருந்தது. கௌதமை பார்த்து ஆரா, கட்டைவரலை தூக்கிகாட்ட, அவன் முகத்திலோ புன்னகை. அந்தப் புன்னகையுடன் மிருதுளாவின் அருகில் சென்ற கெளதம், “நீங்க யாரையோ மறந்துட்டு போறீங்க.” என்று கேட்க சட்டென்று நிமிர்ந்த பார்த்த மிருதுளாவிற்குக் கண்கள் கலங்கிவிட்டது. ஒரு சில நிமிடங்கள் மவுனமாக நின்றவன், “உங்ககூடக் கொஞ்சம் பேசமுடியுமா?!” என்று கேட்க, மிருதுளாவோ தவிப்புடன் திரும்பி தனது தங்கையையும் பாட்டியையும் பார்க்க, ஆராவோ, “போ க்கா” என்று உதடுகளை அசைக்க, பார்வதியோ இங்கே என்ன நடக்கிறது என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருந்தார். “ஆச்சி போகச் சொல்லுங்க.” என்று ஆரா சத்தமில்லாமல் தனது பாட்டியிடம் சொல்ல, அதன்பின்பே, “போ கண்ணு.” என்றார் அவர்.

கெளதம் மொட்டைமாடியை கைகாமிக்க, தேஜாவுடன் மிருதுளா மேலே ஏற, “தேங்க்ஸ் அத்தான்…..சாரி…..சர்.” என்று ஆரா அவனிடம் சந்தோஷத்துடன் சொல்லவும், அவனோ, “உங்க அக்காக்கு ஓகேன்னா நீங்க என்னை அத்தான்னே கூப்பிடலாம்.” என்று புன்னகையுடன் கூறி மறைமுகமாகத் தனது சம்மதத்தைத் தெரிவிக்க, ஆராவிற்கு மயக்கம் வராத குறை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!