Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 13.2

அத்தியாயம் 13(2)

மேலே மொட்டைமாடியில், தேஜாவை வைத்துக்கொண்டு மிருதுளா ஒருபக்கம் நின்று கொண்டிருக்க, கெளதம் ஒரு பக்கம் நின்று கொண்டிருந்தான். சில நிமிடங்கள் கழித்துத் தனது குரலை செருமி கொண்டவன், “தேஜா இல்லாம உங்களால இருந்திட முடியுமா மிருதுளா?” என்று கேட்க, நிமிர்ந்து அவனைப் பார்த்தவள் கண்களிலோ நீர் நிறைந்துவிட்டது. தேஜாவை கண்முன் வைத்துக்கொண்டு நெருங்கி பழகவும் முடியாமல், எட்டி நிற்கவும் முடியாமல், தன்னால் நிம்மதியாக இருக்க முடியாது என்பதனால் தானே, தான் கஷ்டபட்டாலும் பரவா இல்லை என்று ஊருக்கே திரும்பிபோக முடிவு செய்திருந்தாள். அப்படிப் பட்டவளிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டால், என்ன பதில் சொல்ல முடியும். கண்களில் வழிந்த நீரை அவனுக்குக் காட்ட விருப்பமின்றிக் குனிந்துகொண்டவள் ‘இல்லை’ என்பது போலத் தலையை ஆட்டினாள்.

“அப்போ எதுக்காக அவளை விட்டுட்டுப் போகப் போறீங்க?”

“ தெரியல. என் பொண்…..அவ இல்லாம என்னால இருக்க முடியாது. அதே நேரம் அவ மேல இருக்கிற பாசத்தில அன்னைக்கு உங்க மனசை கஷ்டபடுத்தின, மாதிரி இனிமே நடந்துக்க விரும்பல. நேருக்கு நேர் இருந்தா என்னையும் அறியாம எதையாவது செஞ்சுடுவேன். அதனால தான் ஊருக்கு போறேன். என்ன இருந்தாலும் அவ மேல எனக்கு என்ன உரிமை இருக்கு.” என்று சொன்னவளின் குரல் கரகரத்தது.



Advertisement

“யார் சொன்னா அவளுக்கு உங்க மேல உரிமை இல்லைன்னு. அவ உங்க பொண்ணுதான்.” என்று சட்டென்று உளறிய கெளதம், அடுத்த நொடி, “பெத்த அம்மாவை விட அதிகமாக அவளை நீங்க உங்க பொண்ணு மாதிரி பார்த்துகுறீங்க. அப்புறம் அவ உங்க பொண்ணுதானே. அப்படி இல்லைன்னு சொல்ல முடியுமா?!” என்றவன், “நான் நேரடியாவே உங்ககிட்ட ஒன்னு கேட்கிறேன் மிருதுளா, உங்க வீட்டில இருந்து தேஜாவோட அம்மாவா இருக்கிறதை விட என்னோட வீட்டில இருந்து அவளுக்கு அம்மாவா இருக்க முடியுமா?!” என்று கேட்க, ஒரு நிமிடம் மிருதுளா ஒன்றும் புரியாமல் குழப்பத்துடன் அவனைப் பார்க்க, அவனோ அடுத்து, “தேஜாவோட அப்பாவை உங்களுக்குக் கல்யாணம் செய்துக்க விருப்பமா?” என்று தெளிவாகக் கேட்டுவிட, மிருதுளா அந்தக் கேள்வியில் அதிர்ந்து போனாள்.

திருமணம் என்றதுமே, அவளுக்கு அவளுடைய திருமண வாழ்க்கை கண்முன் வர அவளையும் அறியாமல் அருவருப்பில் அவள் உடல் நடுங்கியது. அது சில நொடிகள் தான். தான் அனுபவித்த கொடுமைகள் எல்லாம் முடிந்துவிட்டது. இனி நான் அங்கு இல்லை என்பதை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டவள், அதன் பின்பே சற்று தெளிவடைந்தாள். கெளதமும் தன் முன்னால் கணவன் போல இருப்பானோ என்று அவள் மனம் யோசனை செய்ய, அடுத்த நொடி, நான் ஏன் இப்படி யோசிக்கிறேன்?! அடுத்தத் திருமணத்திற்கு அதற்குள் தயார் ஆகிவிட்டேனா?! எல்லாவற்றையும் மறந்துவிட்டேனா?! தெரியாமல் இன்னொரு பந்தத்திற்குள் நுழைய முடியுமா?! என்றெல்லாம் கேள்விகள் அவளைச் சூழ, கிட்டத்தட்ட குழம்பி போனாள்.

மிருதுளா இப்படி யோசனையில் மூழ்கி இருக்க, அவள் கையில் இருந்த தேஜா, அவளுடைய தாடையைப் பிடித்துத் தன்பக்கம் திருப்பியவள், மழலை மொழியில் ஏதேதோ சொல்லி, அவளின் கன்னத்தைத் தன் உதடுகளால் கடிக்க, மிருதுளாவோ, தேஜாவை தான் கண் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள். இவளை விட்டு உன்னால் இருக்க முடியுமா?! என்ற கேள்வி அவள் மனதுக்குள் எழ, நிச்சயம் முடியாது என்றுதான் பதில் கிடைத்தது. இதற்குத் திருமணம் தான் ஒரே தீர்வா? என்று ஒரு பக்கம் தோன்ற அதற்காகத் திருமணம் இல்லாமல் தேஜாவிற்கு உன்னால் அம்மாவாக இருக்க முடியுமா? என்று எதிர்கேள்வி எழுந்தது. பல கேள்விகளின் தாக்கத்தில் அவள் குழம்பிபோக, அவள் முகத்தில் அந்தக் குழப்பம் தெளிவாகத் தெரிந்தது.

Advertisement

மிருதுளாவின் முகத்தில் தெரிந்த குழப்பத்தைப் பார்த்த கெளதம், “என்னடா வைப் இறந்து ஒரு வருஷம் கூட ஆகல. அதுக்குள்ள இன்னொரு கல்யாணத்துக்குப் பேசுறானே அப்படின்னு உங்களுக்கு யோசனையா இருக்கும். நிச்சயமா வேற எதுக்கும் ஆசைப்பட்டு நான் உங்களைக் கல்யாணம் செஞ்சுக்கக் கேக்கல. எனக்குச் செகண்ட் மேரேஜ் செஞ்சுகனும்ன்னு எப்பவும் ஐடியா இருந்ததில்லை. ஆனா நீங்க தேஜா மேல இந்த அளவுக்குப் பாசம் வைப்பீங்கன்னு நான் எதிர்பார்கல. கிட்டத்தட்ட பெத்த அம்மாவா அவளுக்கு இருக்கீங்க. அவளைக் கடத்திட்டு போன அந்த ஒரு மாசம், அவ இல்லாம நீங்க எந்த அளவுக்குத் துடிச்சு போனீங்கன்னு கண்ணால பார்த்தேன். அந்தப் பாசத்தைத் தான் கோபமா என்மேல காட்டுனீங்க. உங்களால் அவளுக்கு நல்ல அம்மாவா இருக்க முடியும். இவ்வளவு பாசம் வச்சிருக்கிற உங்ககிட்ட இருந்து தேஜாவை பிரிக்க நான் விரும்பல. அதனால தான் இப்படி ஒரு யோசனை எனக்கு வந்துது.” என்று சொன்னவன் சில நொடி இடைவேளிக்கு பிறகு “இந்த விஷயத்தில உங்களை நிச்சயம் கட்டாயபடுத்த மாட்டேன். உங்களுக்கு விருப்பம் இல்லைன்னாலும் தாராளமா சொல்லலாம்.” என்று சொல்லிவிட்டு மிருதுளாவின் முகம் பார்த்தான்.

Advertisement

அவளோ “நான்…..என்…..எனக்குக் கொஞ்சம் யோசிக்க டைம் வேணும். ப்ளீஸ்.” என்று சொல்ல, “கண்டிப்பா மிருதுளா. நீங்க நல்லா யோசிச்சு முடிவெடுங்க.” என்றவன் அவளுடன் கீழே இறங்கி சென்றான்.

கீழே சேகரோ கெளதம் மிருதுளா திருமணம் பற்றிப் பார்வதியிடம் பேச, தன் பேத்திக்கு நல்ல வாழ்க்கை அமைய போகிறதே என்று அவருக்கு மிகுந்த மகிழ்ச்சி. அதே நேரம் முந்தைய திருமணத்தின் தாக்கத்தில் கொஞ்சம் யோசனையாகவும் இருக்க, சேகர் அவருக்குத் தன் மகனை பற்றி எல்லாவற்றையும் சொல்லியவர், “இந்த அபார்ட்மெண்ட்ல யார்கிட்ட வேணும்னாலும் என் மகனை பத்தி விசாரிச்சுகோங்க ம்மா. உங்களுக்குத் திருப்பதினா மேற்கொண்டு பேசலாம்.” என்று கூற, ஆராவே கௌதமை பற்றித் தனக்குத் தெரிந்த எல்லாவற்றையும் பார்வதியிடம் சொல்லி புரியவைத்தாள்.

“அப்போ அந்தத் தம்பியை உனக்கு முன்னாடியே தெரியுமா கண்ணு?!” என்று அவர் ஆச்சரியப்பட, “ஹம், தெரியும் ஆச்சி. அவர் கம்பனில தான் என்னோட காலேஜ் ப்ராஜெக்ட் செஞ்சேன். அவருக்கு என்னை அடையாளம் தெரியல. பட் எனக்கு அவரை நல்லா நியாபகம் இருக்கு. ரொம்ப நல்லவர் ஆச்சி. நல்ல தங்கமான குணம் சொல்வீங்களே அந்த மாதிரி தான் கெளதம் சாரும். அங்க வச்சு அவரைப் பத்தி நிறையக் கேள்வி பட்டிருக்கேன். அவரை அக்கா கல்யாணம் செய்றதுல எனக்கு ரொம்ப ரொம்பச் சந்தோசம் ஆச்சி.” என்று கௌதமின் கீழ் வேலை செய்தபொழுது இவள் தெரிந்துகொண்ட அவனின் குணங்கள் பற்றி பார்வதியிடம் எல்லாவற்றையும் சொன்னாள். பேத்தியே சொல்லிவிட்ட பிறகு அவருக்கு வேறெதுவும் யோசிக்கத் தேவையில்லை. கெளதம் மிருதுளா இரண்டு பேரும் சம்மதித்தால் தனது மகன் மருமகளிடம் சொல்லிவிடலாம் என்று நினைத்துக்கொண்டார்.

Advertisement

பெரியவர்கள் பேசி முடிக்கவும், கெளதம், மிருதுளா கீழே இறங்கி வர, மிருதுளாவிடம் ஒரு சில வார்த்தைகள் பேசிய சேகர், “தேஜாக்கு நீ அம்மாவா வந்தனா நான் ரொம்பச் சந்தோஷ படுவேன்ம்மா.” என்று கூறிவிட்டு கெளதமுடன் சென்றுவிட்டார்.

தேஜாவை மடியில் வைத்துக்கொண்டு எங்கோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த மிருதுளாவின் அருகில் வந்தமர்ந்த ஆரா, “உன் மனசில என்ன யோசிச்சிட்டு இருக்கன்னு எனக்குப் புரியுது க்கா. கெளதம் சர் பத்தி எனக்கு நல்லா தெரியும்.” என்றவள் பார்வதியிடம் சொன்னவற்றரை இவளிடம் சொல்ல, மிருதுளாவும் “உனக்கு அவரை முன்னாடியே தெரியுமா?” என்று அதே கேள்வியைக் கேட்டாள். ‘ஆம்’ என்பது போலத் தலை அசைத்தவள், “சந்துரு அத்தான் மாதிரி இவரு இல்லை க்கா. ரொம்ப நல்லவரு.” என்று சொல்ல, மிருதுளாவோ பழைய நினைவுகளின் தாக்கத்தில் அமைதியா இருக்க, அவளின் கைகளை ஆதரவாகப் பற்றிகொண்டாள் ஆரா. மிருதுளாவை சிரிக்க வைக்கவென, “கெளதம் சாருக்கு நான் கேரன்டி.” என்று விளம்பர பாணியில் அவள் சொல்ல சட்டென்று சிரித்துவிட்டாள் மிருதுளா. அதன்பின் ஆளாளுக்கு மிருதுளாவிடம் பேசி பேசியே எப்படியோ கல்யாணத்துக்குச் சம்மதம் வாங்கிவிட்டனர்.

அடுத்த நாள், கௌதமிடம் பேசவேண்டும் என்று சென்ற மிருதுளா, தனது கடந்த காலத்தைப் பற்றிச் சொல்ல நினைக்க அவனோ, “உங்க பாஸ்ட் எப்படிவேணா இருக்கட்டும் மிருதுளா. இப்போ அது முடிஞ்சு போன ஒன்னு. என்ன காரணத்துக்கு வேணா நீங்களும் உங்க ஹஸ்பண்டும் பிரிஞ்சிருக்கலாம். அதைப் பத்தி உங்ககிட்ட கேட்டு இப்போ உங்களுக்குக் கஷ்டத்தைக் கொடுக்க விரும்பல. கிட்டத்தட்ட ஒரு வருஷமா உங்களைப் பார்த்துட்டு தான் இருக்கேன். எனக்கு உங்களைப் பத்தி எந்தத் தப்பான எண்ணமும் வந்ததில்லை. அதனால் இதை நீங்க என்கிட்டே சொல்லனும்ன்னு அவசியம் இல்லை மிருதுளா. என்னைப் பத்தி ஆரா உங்ககிட்ட சொல்லி இருப்பா. மேற்கொண்டு ஏதாவது கேக்கணும்ன்ன தாராளமா கேக்கலாம்.” என்று பதில் கூறிவிட, மிருதுளாவும் அதற்கு மேல் பேசவில்லை.

மிருதுளாவின் சம்மதம் கிடைத்த அடுத்த நொடி, சித்ராவையும், மோகனையும் அழைத்த பார்வதி, விஷயத்தைச் சொல்ல, அவர்களோ, இவ்வளவு நடந்திருக்குத் தங்களிடம் சொல்லவில்லையே என்று லேசாகக் கோபப்பட்டனர். எப்படியோ அவர்களையும் பார்வதி சம்மதிக்க வைக்க, அடுத்த இரண்டு நாட்களில் அவர்கள் புறப்பட்டுப் பெங்களூர் வந்தனர். விஷயம் கேள்விப்பட்ட ஜெய்க்கும், மிருதுளா அவனுக்கு அண்ணியாக வருவதில் மிகுந்த மகிழ்ச்சி. ஒரு வகையில் அவனும் கெளதமை இந்தத் திருமணத்திற்குச் சம்மதிக்க வைக்கப் பாடுபட்டவனாச்சே! இரண்டு வீட்டு பெரியவர்களும் ஒருவரை ஒருவர் சந்திந்து பேச மிருதுளா – கெளதம் திருமணம் அடுத்த மாதம் என்று நிச்சயிக்கப்பட்டது.

முதன் முதலில் தேஜாவை பார்த்த மோகன் சித்ரா இருவரின் மனதுக்குள், லேசான உறுத்தல் எழுந்தது. ஆனால் இப்படி நடக்க வாய்ப்பிருக்காது, நாம் தான் ஏதோ கற்பனை செய்கிறோம் என்று நினைத்துத் தங்களைச் சமாதனம் செய்துகொண்டனர். ஆனால் அதுதான் உண்மை என்று அவர்களுக்குத் தெரியாது.

கெளதம், மிருதுளா இருவரும் கோவிலில் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று உறுதியாகச் சொன்னதால் திருப்பதி கோவிலில் அவர்களின் திருமண ஏற்பாடுகள் செய்யப்பட்டது. அப்படியே நாட்கள் சிறகடித்துப் பறக்க, திருமண நாளும் வந்தது.

அழகிய பட்டுவேஷ்டியில் கெளதம் உட்கார்ந்திருக்க அவனுக்குப் பக்கத்தில் எளிமையான அலங்காரத்தில் மிருதுளா அமர்ந்திருந்தாள். இரண்டு பக்கமும் நெருங்கிய சொந்தங்கள் மட்டுமே அழைக்கபட்டிருந்தனர். இரு வீட்டுப் பெரியவர்கள் அருகில் நின்று கொண்டிருக்க, தேஜாவை கைகளில் வைத்துக்கொண்டு, தன் அக்காவின் அருகில் நின்று கொண்டிருந்தாள் ஆரா. அவளுக்குப் பக்கத்தில் பட்டு வேஷ்டியில் அவளையே பார்த்தபடி ‘இவ எப்போ சம்மதம் சொல்லி, எப்போ நம்ம கல்யணம் நடக்குமோ.’ என்று மனதுக்குள் ஏக்கத்துடன் நின்றிருந்தான் ஜெய்.

அடுத்தச் சில மணிநேரங்களில், ஐயர் தாலியை எடுத்துகொடுத்து ‘கெட்டிமேளம்’ ‘கெட்டிமேளம்’ என்று குரல் கொடுக்க, அனைவரின் ஆசீர்வாதத்தோடு, அந்த ஏழுமலையான் சன்னதியில் வைத்து மிருதுளாவின் கழுத்தில் மங்கள நானை பூட்டினான் கெளதம்.

கெளதம் தன் கழுத்தில் தாலி கட்டும்பொழுது, தன்னையும் அறியாமல் கண்கலங்கினாள் மிருதுளா. அன்று, இவள் அனுமதியின்றி இவள் கழுத்தில் இருந்த தாலி, வலிக்க வலிக்க வலுகட்டாயமாகப் பறிக்கப்பட்டது. இன்று அதே கழுத்தில் மீண்டும் ஒரு தாலி ஏறியுள்ளதை நினைத்து பார்த்தவளுக்கு, பழைய நினைவுகளின் தாக்கத்தில் நெஞ்சம் பாரமாக இருந்தது.

நினைவுகளின் பிடியில் இருந்தவள் தன் தலையில் தேஜாவின் கை ஸ்பரிசத்தை உணர்ந்து நிமிர்ந்து பார்க்க, அவள் மகளோ தனது சித்தியிடம் அடம்பிடித்துக் குனிந்து தனது அன்னையின் தலையில் தன் கையில் இருந்த அட்சதையை வைக்க, அந்தச் செயலில் நெகிழ்ந்து போன மிருதுளா, சற்று முன்பு வரை இருந்த மனபாரம் எல்லாம் மறைந்து போக, தேஜாவின் கைகளைப் பிடித்து முத்தமிட்டவள், அவளை வாங்கி மடியில் அமர்த்திக்கொண்டாள். இந்தக் கட்சியில் அனைவருமே நெகிழ்ந்து போயினர்.

இந்தக் கல்யாண அவசரத்தில் அனைவரும் ஒரு முக்கியமான விஷயத்தை மறந்துவிட்டனர். அதைப்பற்றிக் கெளதமும் கேட்கவில்லை, மிருதுளாவின் பெற்றோரும் யோசிக்கவில்லை. அது பின்னாளில் பிரச்சனையாக வரும் என்று அப்பொழுது அவர்களுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!