கருவறை சொந்தம் 16
அத்தியாயம் 16
தன் தந்தையிடம் பேசிவிட்டு, இரவு அறைக்கு வந்த கெளதம் இதுபற்றி மிருதுளாவிற்கு எதுவும் தெரியுமா? அவளிடம் இது பற்றிக் கேட்போமா? என்று குழம்பினான். ஏனெனில் இது ஆராவும் சம்பந்தப்பட்ட விஷயம். ஒருவேளை மிருதுளாவிற்கு இதில் இஷ்டம் இல்லை என்றாலோ, ஆராவை தான் தவறாக நினைப்பதாக இவள் நினைத்துவிட்டாலோ, என்ன செய்வது என்று யோசனையாக இருந்தது. ஒருவேளை உண்மையில் ஆராவிற்கு ஜெய் மேல் காதல் இல்லை என்றால்? என்ற கேள்வி அவன் முன் பூதாகரமாக எழுந்தது.
அவன் இவ்வாறு யோசித்துக் கொண்டிருக்க, தூங்கிவிட்ட தேஜாவை கட்டிலில் படுக்க வைக்கவென்று அறைக்குள் மிருதுளா வந்தாள். கெளதம் ஏதோ யோசனையாக இருப்பதைப் பார்த்தவளுக்கு, சிறிது நேரத்திற்கு முன்பு, ஜெய்யின் திருமணத்தைப் பத்தி அவன் சேகருடன் பேசிக் கொண்டிருந்தது நியாபகம் வர, அது சம்பந்தமான யோசனையில் தான் இருக்கிறானோ என்று நினைத்தவளுக்கு, காலை ஆரா பேசியதை அவனிடம் சொல்லலாமா என்ற சிந்தனை எழுந்தது. ஆனால் தன் தங்கையே ஆனாலும் ஒருவரின் பெர்சனலை மற்றொருவரிடம் சொல்ல தயக்கமாகவும் இருந்தது அவளுக்கு.
இந்தச் சிந்தனையில் கணவன் மனைவி இருவரும் ஒரே மாதிரி தான் யோசித்தனர். ஆரா ஜெய்யை காதலிக்கவில்லை என்று சொல்லிவிட்டால் மிருதுளா தன்னைப் பற்றி என்ன நினைப்பாள்? என்று கெளதம் நினைத்துக் கொண்டிருக்க, ஆரா மேல் தனக்கு அந்த மாதிரி விருப்பம் இல்லை என்று ஜெய் சொல்லிவிட்டால், கெளதம் தன்னைப் பற்றி என்ன நினைப்பார் என்று மிருதுளாவும் அதையே தான் நினைத்துக் கொண்டிருந்தாள்.
Advertisement
இருந்தும், ஆரா அழுததை நினைக்கும்போது, சகோதரியாக இவளுக்குக் கஷ்டமாக இருந்தது. சிறு வயதில் இருந்து அவளுக்கு ஒரு பொருள் பிடித்திருக்கிறது என்றால், தான் வாங்கியதாக இருந்தாலும், அவளுக்குக் கொடுத்து விடுவாள் மிருதுளா. சில சமயம் அரா அடம்பிடிக்கும் நேரம், இவள் தான் பெற்றோரிடம் பேசி அவள் விரும்பிய பொருளை வாங்கிகொடுப்பாள். எப்பொழுதும் ஆரா என்றால், மிருதுளாவிற்கு ஸ்பெஷல் தான்.
இது பொதுவாகவே மூத்த சகோதரிக்கு உண்டான இயல்பான குணம் போலும். அதனால் தான் அக்கா என்பவள் இன்னொரு அம்மா என்று சொல்கிறார்கள். வெளியில் அவர்கள் எந்நேரமும் சண்டைபோடுவது போலத் தெரிந்தாலும், சகோதரிகளுக்குள் இருக்கும் நெருக்கம், அண்ணன் தன்கையிடமோ, இல்லை அண்ணன் தம்பியிடமோ கூட இருக்காது, அதுவும் அவர்களுக்கு என்று மனைவி வந்துவிட்டாள் இன்னும் மோசம். இங்கேயோ, இருவரும் பெண்களாக இருப்பதாலும் அந்த நெருக்கம் இயல்பாக வந்துவிடுகிறது போல.
இறுதியில் ஆராவிற்காகக் கௌதமிடம் பேசுவோம் என்று முடிவெடுத்தவள், ஒருவேளை தான் சொன்னபிறகு ‘அட இது நமக்குத் தெரியம் போச்சே!’ என்று அவன் யோசிக்க ஆரம்பிக்கலாம் என்ற நினைப்பும் அவளைக் கௌதமிடம் பேசலாம் என்ற மனநிலைக்கு வரவைத்தது.
Advertisement
மிருதுளா சென்று தேஜாவை கட்டிலில் படுக்கவைத்துவிட்டு, அவளுக்குப் போர்வையைப் போர்த்திவிட்டு, சென்று பால்கனி கதவை அடைத்துவிட்டு, வரும்வரை கெளதமின் விழிகள் அவளைத்தான் தொடர்ந்து கொண்டிருந்தது, அவளிடம் பேச காத்திருந்தான். அவளோ ஒரு தயக்கத்தோடு கௌதமை ஏறிட்டவள், பின்பு கிச்சனுக்குச் சென்று குடிக்கத் தண்ணீர் எடுத்துவந்து டேபிளில் வைத்துவிட்டு திரும்பவும், கெளதம் அவளிடம், “ரிது, உன்கிட்ட கொஞ்சம் பேசனும். டைம் கிடைக்குமா மா?!” என்றவன் அவள் ஒருவேளை தூங்கிவிடுவாளோ என்று தயக்கத்துடன் கேட்கவும், “சரிங்க. நான் கூட உங்ககிட்ட ஒரு விஷயம் பேசணும்.” என்று பதில் சொன்னாள் மிருதுளா.
Advertisement
சரி என்று அவளைப் பார்த்து புன்னகைத்தவன், தேஜாவை தொந்தரவு செய்யவேண்டாம் என்று பால்கனிக்கு சென்று, புதிதாக வாங்கிபோட்டிருந்த ஊஞ்சலில் சென்று அமர, மிருதுளாவிற்கு எங்கு அமர்வது என்று தயக்கமாக இருந்தது. ஏனெனில் அபார்ட்மெண்ட் பால்கனி என்பதால், மீடியம் சைஸ் ஊஞ்சலை தான் வாங்கிப் போட்டிருந்தனர். அதிலும் தேஜாவின் தலையணை, டெடி பியர் பொம்மைகள், மற்ற பொம்மைகள், என்று அவை வேறு கொஞ்சம் இடத்தை ஆக்ரமித்திருக்க, மீதி இடத்தில் இருவரும் உட்கார வேண்டும் என்றால், நெருங்கித்தான் உட்கார வேண்டும். அதனாலேயே யோசித்துக்கொண்டு ரிது நின்றுகொண்டிருக்க, அவளை ஏறிட்டு பார்த்த கெளதம், “என்ன மா? ஏன் நின்னுட்டு இருக்க. வந்து உட்க்காரு.” என்றவன், கொஞ்சம் தள்ளி அமர்ந்து அவளுக்கு இன்னும் இடம்கொடுக்க, அவன் எதுவும் நினைக்காத போது, அதற்கு மேல் இவளால் நின்றுகொண்டிருக்க முடியவில்லை. சென்று அமைதியாக அவன் அருகில் அமர்ந்தாள். உடல் முழுவதும் உரசிக் கொண்டுதான் இருந்தது. ஆனால் கெளதம் இதையெல்லாம் கவனிக்கும் நிலையில் இல்லை. மிருதுளா அமர்ந்ததும், ஒரு சில நொடிகள் அமைதியாக இருந்தவன் பின்பு, “ஜெய், கல்யாண விஷயமா அப்பா சொன்னதை நீ கேட்டு இருப்பன்னு நினைக்கிறன் ரிது.” என்று சொன்னவன், பதிலுக்காகத் திரும்பி அவள் முகம் பார்க்க, அவளோ ‘ஆம்’ என்பது போலத் தலையை ஆட்டினாள்.
“அப்பா சொல்றதும் சரி தான். அவனுக்கு முப்பது வயசு ஆகபோகுது. சோ சீக்கிரம் கல்யணம் பண்ணனும். அண்ட், இது அவனோட வாழ்க்கை. நாமளோ இல்லை அப்பாவோ இதுல முடிவு செய்யகூடாது. பரன்ட்டோட பொண்ணுன்றதால அப்பாக்கு அந்தப் பொண்ணை ஜெய்க்குக் கல்யணம் செய்யலாம்னு ஒரு ஐடியா இருக்கு. பட், எனக்கு இதுல ஜெய்யோட விருப்பம் என்னன்னு தெரியனும். தெரியனும்னு சொல்றதை விட, தெரியும்ன்னு சொல்லலாம்.” என்றவன், ஆழ மூச்சை எடுத்துக்கொண்டு, “நான் இப்படிச் சொல்றேன்னு தப்பா எடுத்துக்காத ரிது மா. அவன் மனசில ஒரு பொண்ணை நினைச்சிட்டு இருக்கும்போது, நாம வேற பொண்ணை அவனுக்குப் பார்க்கிறது, தெரிஞ்சே அவன் லைப்பை நாம கெடுக்கிறதுக்குச் சமம். அதே நேரம், அந்தப் பொண்ணுக்கும் இதுல சம்மதம் இருக்கனும். அப்படி இல்லைனா, நிச்சயம் நானே இதுக்கு ஒத்துக்க மாட்டேன்.” என்றவன் மிருதுளா பக்கம் திரும்பி, “அதனால் அந்தப் பொண்ணோட அக்காக்கிட்டையே கேட்கலாம்னு முடிவு செஞ்சு இதைக் கேட்கிறேன்.” என்று அவன் சொல்லி இடைவெளி விட, மிருதுளாவிற்கோ, கெளதம் சொல்லும் அந்தப் பெண் ஆராதான் என்பது ஓர் அளவுக்குப் புரிய, அதில் மனதுக்குள் மகிழ்ச்சி கடலில் திளைத்தாள். துள்ளிகுதிக்க வேண்டும் என்று ஆசை எழுந்தாலும், தன்னைக் கட்டுப்படுத்திக்கொண்டு, அடுத்து அவன் சொல்ல போவதற்காகக் காத்திருந்தாள்.
“ஜெய், ஆராவை லவ் பண்றான் ரிது. எனக்கு இதுல ரொம்பவே சந்தோசம். உனக்கு ஆராவை ஜெய்க்குக் கல்யணம் செஞ்சுகொடுக்க இஷ்டமா?” என்று கேட்டுவிட்டு அவள் முகத்தையே பார்க்க, இவளுக்கோ மெல்ல மெல்ல இதழ்கள் விரிந்து, சிரிப்பும் சந்தோஷமும் பொங்க, அவனைப் பார்த்து அழகாகப் புன்னகைத்தவள், “நானும் இதைப் பத்தி தான், உங்ககிட்ட பேசணும்னு இருந்தேன்.” என்றவள், அன்று காலை ஆரா பேசியதை இவனிடம் ஒன்றுவிடாமல் சொன்னவள், “அவ இந்த அளவுக்கு அழுது நான் பார்த்ததில்லைங்க. எங்க அவ ஆசை கனவாவே போய்டுமோன்னு நினைச்சு கஷ்டமா இருந்துச்சு. இதுல ஜெய்க்கு விருப்பம் இல்லைன்னா, தப்பா போய்டுமோன்னு ரொம்ப யோசனையா இருந்துச்சு. அதுவும் நீங்க என்ன நினைப்பீங்கன்னு…..” என்று அவள் சொல்ல, அவளின் இதழ்களைத் தன் விரலால் மூடியவன், “நானும் உன்கிட்ட இந்த விஷயத்தை சொல்றதுக்கு முன்னாடி இப்படித்தான் நினைச்சேன். ஆனா அந்த நினைப்பு இப்போ இல்லை ரிது. நமக்குள்ள இருக்கிற ரிலேஷன்ஷிப் என்னன்னு மொதல்ல புரிஞ்சிக்காணும். உனக்கு நான். எனக்கு நீ. உன்னோட லைப், என்னோட லைப்ன்னு எதுவும் தனித் தனியா கிடையாது. நம்ம ரெண்டு பேருக்கும் ஒரே லைப் தான். நாம் ரெண்டு பெரும், வேறே வேற ஆள் கிடையாது. நான் தான் நீ. நீ தான் நான். என்கிட்டே உனக்கு என்ன தயக்கம் ரிது மா. என்கிட்ட ஷேர் செய்யாம வேற யார்கிட்ட ஷேர் செய்யப் போற. உனக்கு என்ன கேக்கனும்னாலும் என்கிட்ட நேரடியா கேட்கலாம், எதாவது சொல்லனும்னு தோணினாலும் தாரளமா சொல்லலாம். கிட்டத்தட்ட நமக்குக் கல்யாணம் ஆகி ஒரு வருஷம் ஆகபோகுது ரிது மா. இன்னும் என்ன தயக்கம்?! இனிமே என்கிட்டே உனக்கு எந்தத் தயக்கமும் இருக்கக் கூடாது.” என்றவன், “சரியா!” என்று கேட்க, அவன் பேசிய விதமோ, இல்லை அவனுடம் இத்தனை நாள் வாழ்ந்த வாழ்க்கையோ, இப்பொழுது அவளுக்கு ஒருவித சவுகுரியத்தை கொடுத்திருக்க, கௌதமை பார்த்து சரி என்பது போலப் புன்னகைத்தாள். மிருதுளாவிடம், எந்த ஒளிவு மறைவும் நமக்குள் இருக்ககூடாது என்று சொன்னவனுக்கு, தேஜாவை பற்றியை உண்மையைக் கூடிய சீக்கிரத்தில் சொல்லிவிட வேண்டும் என்று எண்ணம் தோன்றியது.
Advertisement
அடுத்து அவளிடம், சேகரிடம் பேசிய சில விஷயத்தை (திட்டத்தை) சொல்ல மிருவுக்கு, ஜெய் – ஆராவை சேர்த்துவைக்க நினைக்கும், அவனின் செயலை நினைக்கும் பொழுதும், ஆராவின் வாழ்கையை நினைத்தும் மனதுக்குள் இருந்த சந்தோசம் வெளியே வர, தன்னையும் அறியாமல், “ரொம்ப தேங்க்ஸ்ங்க!!” என்றவள், கௌதமை அணைத்துக் கொண்டாள். இந்தத் திடீர் அணைப்பில் திக்குமுக்காடி போனவன், அவளின் குழந்தை தனத்தை நினைத்து வாய்விட்டு சிரித்தபடி, பதிலுக்கு அவளை அணைத்துக் கொண்டான். “இந்த ப்ளேன்னால, எப்படியாவது ஜெய்யும் ஆராவும் அவங்க மனசில இருக்கிற லவ்வை வெளியே சொல்லி, ஒன்னு சேர்ந்தா சரி தான்.” என்று கூரியவனுக்கும் அதை நினைத்து மகிழ்ச்சி.
அப்படியே இருவரும் சிறிது நேரம் அணைத்த நிலைமையில் இருக்க, அப்பொழுது கீழே ரோட்டில் கேட்ட குல்பி ஐஸ் வண்டியின் பெல் சத்தத்தில், முதலில் தன்னிலைக்கு வந்த மிருதுளா, அவனை விட்டு சட்டென்று விலகியவளுக்கு, அவன் முகம் பார்க்க முடியாமல் ஏதோ ஒன்று தடுக்க, அங்கிருக்க முடியாமல் எழுந்து உள்ளே சென்றுவிட்டாள். அவள் சென்ற பின்பே, தன்னிலைக்கு வந்த கௌதமிற்கும் உள்ளுக்குள் ஒரு இதம் பரவ, அவள் போவதையே பார்த்துக்கொண்டு பின்னந்தலையை அழுத்த கோதியவனின் உதட்டில், அவனையும் அறியாமல் புன்னகை வந்து ஒட்டிக்கொண்டது.
அன்று புதன்கிழமை, வரலக்ஷ்மி விரத தினம். ஊழியர்கள் கேட்டு கொண்டதற்காக ஆரா அலுவகத்தில், வழக்கத்தை விடச் சில மணிநேரங்கள் முன்பே அனைவரையும் வீட்டிற்குச் செல்ல அனுமதித்தனர். கிளம்ப நினைத்தவர்கள் கிளம்ப ஆரம்பிக்க. வேலை முடிக்க வேண்டியவர்கள் இருந்து செய்து கொண்டிருந்தனர். டீம் லீட் என்பதால், ஜெய்க்குக் கொஞ்சம் வேலை பாக்கி இருக்க, ஆராவும் அவளது தோழிகளும் சீக்கிரமே கிளம்பி விட்டனர்.
அலுவகத்தின் அருகில் இருந்த பஸ் நிறுத்தத்தில் இருந்துதான் தினமும் பஸ் பிடித்து ஆரா வீடு வந்து சேர்வாள். அன்றும் அப்படிதான், தோழிகளுடன் பேசிக்கொண்டும், அரட்டை அடித்துக்கொண்டும், பஸ் ஸ்டான்டில் நிற்க, அவளது தோழிகள் ஒவ்வொருவருக்காகப் பஸ் வர, ஒரு அரை மணிநேரத்தில் அவளின் அனைத்து தோழிகளும் சென்றிருக்க, இவள் மட்டும் தனியாகப் பஸ்சுக்காகக் காத்திருந்தாள். நேரம் வேறு மாலை ஐந்தை தாண்டி சென்று கொண்டிருந்தது.
இங்கே அலுவகத்தில் அனைத்து வேலைகளையும் முடித்துக்கொண்டு கிளம்பினான் ஜெய். பார்க்கிங் வந்தவன் தனது பைக்கை எடுத்துக்கொண்டு அலுவகத்தை விட்டு வெளியே வர, அந்தப் பஸ் நிறுத்தத்தைக் கடந்த பின்புதான், ஆரா தனியாக நிற்பதை பார்த்தான். சட்டென்று ஓரமாக வண்டியை நிறுத்தியவன், “அப்போவே புறப்பட்டா, இன்னும் கிளம்பலையா?! பஸ் வரல போலவே?!” என்று நினைத்தவனுக்கு, அப்பொழுது ஒரு யோசனை தோன்ற, யோசித்தவன் சரி என்று முடிவு செய்துகொண்டு, பைக்கை திருப்பி, பஸ் ஸ்டாண்டை நோக்கி வண்டிய ஒட்டியவன், ஆராவின் அருகில் வந்து வண்டியை நிறுத்தினான்.
பைக் தன் அருகில் வந்து நின்ற பின்புதான், நிமிர்ந்த பார்த்த ஆரா, ஜெய்யை அங்கே எதிர் பார்கவில்லை. ‘இவன் இங்க என்ன பண்றான்!’ என்று நினைத்தவள், அடுத்த நொடி, ‘எதுக்கோ நிக்கிறான். நமக்கு என்ன?’ என்றுவிட்டு, அவனை விடுத்து, பஸ் வருகிறதா என்று அவனுக்குப் பின்னால் பார்வையைப் பதித்தாள். அவள் செய்கைகளை, அதுவரை அமைதியாகப் பார்த்துக் கொண்டிருந்தவன், ஆராவை பார்த்து, “வண்டியில ஏறு!” என்று சொல்ல, அவளோ, “வேண்டாம் கொஞ்ச நேரத்தில பஸ் வந்திடும். நீங்க போங்க.” என்று சொல்லிவிட்டு மீண்டும் பார்வையை ரோட்டில் பதிக்க, “பஸ் வந்தா வரட்டும். நீ மொதல்ல வண்டியில ஏறு.” என்று பதிலுக்கு ஜெய் கோபமாகச் சொல்ல, ‘இவரு எதுக்கு இப்போ கோபபடுறாரு!’ என்று நினைத்தவள், “இல்லை பரவால. நான் பஸ்லயே வரேன்.” என்று மீண்டும் மறுத்து பேச, “ஏறுன்னு சொன்னேன்.” என்று உறுமினான் அவன்.
அவனின் சத்தத்தில் பதறியவள், யாரும் பார்த்துவிட்டார்களா என்று சுற்றிலும் பார்வையை ஓட்ட, அதற்குள் இவர்களை நோக்கி வந்த இளைஞன் ஒருவன், ஆராவின் பதற்றத்தை பார்த்து, ஏதோ சரியில்லை என்று நினைத்துக்கொண்டு, “எக்ச்குயுஸ் மீ, எனி ப்ராப்ளம்?!” என்று ஆராவை பார்த்து கேட்க, ஜெய்யோ, கால்களைத் தரையில் ஊன்றி, கையை மார்புக்கு குறுக்கே கட்டிக்கொண்டு, அந்த இளைஞனை முறைத்தவன், ‘ஆசிட் வீசும்போதும், அரிவாள்ல வெட்டும்போதும் ஒருத்தனும் வரமாட்டானுங்க. சும்மா பேசிட்டு இருந்தா மட்டும், ஷாலினி, எனி ப்ராப்ளம்ன்னு வந்துடுவானுங்க.‘ என்று மனதுக்குள் அவனை வருத்தெடுக்க, அவனோ, ‘இப்போ எதுக்கு இவன் நம்மைப் பார்த்து முறைக்கிறான்?! ஓஹோ! அவனை விட டோஸ் கொஞ்சம் கூட வச்சுப் பெர்பார்மன்ஸ் பண்றோம்ல, அதான் பொறாமை.‘ என்று மனதுக்குள் பெருமைப்பட்டுகொள்ள, ஜெய்யோ ‘த்தூ!!’ என்று மனதுக்குள்ளேயே அவனைக் காறித் துப்பினான்.
அவனை விடுத்து, பீதியுடன் தன்னைப் பார்த்துக்கொண்டிருந்த ஆராவை முறைத்தபடி, “சார் கேக்குறாருல, சொல்லு.” என்று அடிக்குரலில் ஜெய் சீர, அவளோ பதட்டத்துடன் அந்த இளைஞன் பக்கம் திரும்பி, “ஒன்னும் ப்ராப்ளம் இல்லை சர். தெரிஞ்சவர் தான். நீங்க போங்க.” என்று அமைதியாகச் சொல்ல, “ஆர் யு சுயூர்?!” என்று மீண்டும் அவவன் கேட்க, “yea I’m sure.” என்றாள் பல்லை கடித்துக்கொண்டு. அவனோ சந்தேகத்துடன் ஜெய்யை பார்க்க, இவனோ “ஒழுங்கு மரியாதையா ஓடிடு. வந்துட்டான் பெரிய இவன் மாதிரி.” என்று கண்காளாலே சைகை செய்ய, “நமது ராஜ தந்திரங்கள் அனைத்தும் வீணாகிவிட்டதே. இன்னும் பயிற்சி தேவையோ!” என்று தனக்குள்ளையே சொல்லிக்கொண்டு இருவரையும் முறைத்துவிட்டு அங்கிருந்து அகன்றான் அவன்.
அவன் சென்றதும், “இதுக்குதான் சொன்னேன். வண்டியல ஏறுன்னு. ஒழுங்கு மரியாதையா ஏறு. இல்லை நானே உன்னைத் தூக்கி உட்கார வைப்பேன்.” என்று ஜெய் பல்லை கடிக்கவும், அதிர்ச்சியில் உறைந்து அவள் பார்க்க, ஜெய்யோ, சட்டென்று சைட் ஸ்டாண்டை போட்டு, வண்டியில் இருந்து இறங்க முயற்சிக்க, “வேண்டாம்! வேண்டாம்! நானே ஏறிக்கிறேன்.” என்றவள், அவசர அவசரமாகப் ஏறி அமர்ந்துகொண்டாள். “அடி உதவுறது போல அண்ணன் தம்பி உதவ மாட்டங்க போல.” என்று சொல்லிக்கொண்டே, வண்டியை கிளப்பினான் அந்த அடவாடி காதலன்.
விசில் அடித்துக்கொண்டே ஜெய் வண்டியை ஓட்ட, வழக்கமான பாதையில் போகாமல், வண்டி இடப்பக்கம் சின்னச் சந்துக்குள் திரும்பவும், பயந்துபோன ஆரா, “நேரா போகாம, எங்க போறீங்க?! வண்டியை திருப்புங்க.” என்று கத்த ஆரம்பிக்க, ஜெய்யோ அவளின் புளம்பல்கள் எதையும் கண்டுகொள்ளாமல், வண்டியை ஓட்டியவன், ஐந்து நிமிட பயணத்திற்குப் பிறகு, திறந்த வெளி பார்க் போன்று இருந்த அந்த இடத்திற்குள் சென்று வண்டியை நிறுத்தினான்.
வண்டி நின்றதும், “இது என்ன இடம்?! இங்க எதுக்குக் கூட்டிட்டு வந்து இருக்கீங்க?!” என்று ஆரா பொரிய ஆரம்பிக்க, அவள் பேசி முடிக்கும் வரை அமைதியாக இருந்தவன், “இதோ இந்த மாதிரி மனசுவிட்டு பேச தான் இங்க கூட்டிட்டு வந்தேன்.” என்று அங்கிருந்த ஒரு காதல் ஜோடியை கைகான்பித்து சொல்ல, “உங்களுக்கு இதே வேலையா போச்சு. பேசணும்…பேசனும்ன்னு.” என்று அவனைப் பார்த்து கத்திவிட்டு அந்தப் பார்கை விட்டு வெளியே செல்ல எத்தனிக்க, அவளால் அசைய முடிந்தால் தானே. அவள் கை, ஜெய்யின் பிடியில் சிக்கி இருந்தது.
அதில் இன்னும் கோபமடைந்தவள், “இப்போ கையை விடப் போறீங்களா இல்லையா?’ என்று சீர, “விடுறேன். அதுக்கு முன்னாடி, நம்ம கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம்னு சொல்லு.” என்று அசால்டாகக் கேட்க, அதிர்ந்தவள், “என்னது கல்யாணமா?!” என்று கண்களை விரித்தாள்.
“பின்ன, ஆல்ரெடி, உன்கிட்ட நிறையத் தடவை ப்ரொபோஸ் செஞ்ச செஞ்சு போர் அடிச்சிடுச்சு. அதான் ஸ்ட்ரைட்டா கேட்கிறேன், எப்போ நம்ம கல்யாணத்தை வச்சுக்கலாம்?”
“லூசு மாதிரி பேசாதீங்க!”
“ஆமாம் டி. உன்னை லவ் பண்ண ஆரம்பிச்சதுல இருந்து பாதி லூஸா ஆகிட்டேன். முழு லூஸா ஆகக் கூடாதுன்னு தான் கல்யாணம் செய்யக் கேட்கிறேன்.”
“அதுக்கு எதுக்கு, என்னை தொல்லை பண்றீங்க. வேற எவளையாவது போய்க் கல்யாணம் செஞ்சுக்க வேண்டியது தான.” என்று அவள் கோபமும் ஆற்றாமையுமாகச் சொல்ல, அவளின் தாடையைப் பிடித்து அருகில் இழுத்தவன்,
“வேற யாரையவதுன்னா, அந்த ஐ.டீ கம்பனி சொந்தகாரியையா?!” என்று அவளது கண்களைக் கூர்மையாகப் பார்த்து கேட்டான். அவனுக்கு எல்லாம் தெரிந்துவிட்டதில் அவளது கண்கள், தாமாக அவன் கண்களைச் சந்திக்க முடியாமல் தரையை நோக்கியது.
“ஆரா, என் கண்ணைப் பாரு.” என்று அவன் கர்ஜிக்க, தன்னை நிலைப்படுத்திக் கொண்டவள், மெல்ல நிமிர்ந்து அவன் முகம் பார்க்க, “சொல்லு, அந்தப் பொண்ணையா?!” என்று அவன் மீண்டும் கோபமாகக் கேட்க, “எனக்குத் தெரியாது. எந்தப் பொண்ணை வேணா கல்யாணம் செஞ்சுக்கோங்க. என்கிட்டே ஏன் கேட்குறீங்க!” என்று அவளும் பதிலுக்குக் கத்த, “அப்படியா, நான் யாரை வேனா கல்யாணம் செஞ்சுக்கவா?!” என்று அடக்கப்பட்ட கோபத்துடன் அவன் கேட்க, “தாராளமா, யாரை வேணா கல்யாணம் செஞ்சுகோங்க. எனக்குக் கவலை இல்லை.” என்று இவள் விட்டேரியாகப் பதில் சொல்ல, “ஓஹ! அப்போ நான் அந்தப் பொண்ணைக் கல்யணம் செஞ்சு, புள்ளைகுட்டி பெத்துகிட்டு, உன் கண்முன்னாடி இருந்தா, உனக்கு ஒன்னும் இல்லை. அப்படித்தான?!” என்றவனின் குரல் இப்போது கடினமாகி இருக்க,
‘இன்னொரு பொண்ணுக்கு தாலி கட்டினாலே, என்னால தாங்க முடியாது. இதுல அவ கூடக் குடும்பம் நடத்தி….’ என்று ஜெய் சொன்னதைக் கற்பனை செய்து பார்த்தவளுக்கு அவளையும் மீறி, அவனைப் பிரிய போவதை நினைக்கையில் நெஞ்சம் பாரமாக இருக்க, கண்கள் கலங்க ஆரம்பித்தது. இருந்தும் தன்னைச் சரி படுத்திக்கொண்டவள், குரலை செருமி கொண்டு, “ஆமாம். எனக்கு ஒன்னும் இல்லை. என்னைத் தொல்லை செய்யாம இருந்தா….” என்று அவள் சொல்லி முடிப்பதற்குள், அடுத்த வார்த்தைகளை உச்சரிக்க வேண்டிய அவளின் இதழ்கள், அவனின் இதழ்களுக்கு இடையில் சிறைபிடிக்கப்பட்டிருந்தது. ஆராவின் தாடையை ஜெய்யின் கைகள் அழுத்தப் பிடித்திருக்க, இருவரின் முகமும் ஒன்றோடு ஒன்று கலந்திருக்க, அதற்குப் பாலமாக அவர்களின் இதழ்கள் செயல்பட்டுக் கொண்டிருந்தது.
திடீரென்ற ஜெய்யின் இந்தச் செயலில் முதலில் ஒன்றும் புரியாமல் விழித்த ஆரா, சில நொடிகளில் கழித்து நடப்பதை உணர்ந்து, தனது இதழ்களைப் பிரித்தெடுக்க முயற்சிக்க, அவனின் முரட்டு முத்தத்தில், அவளால் ஒரு துளி கூட நகர முடியவில்லை. இத்தனை நாள் வாழ்கையில் முதல் முறை, அதுவும் மனதுக்குப் பிடித்த பெண்ணை முத்தமிடுவதால், ஜெய்க்கு இந்த இதழ் ஸபரிசத்தை அவ்வளவு சீக்கிரத்தில் முடிக்க விருப்பம் இல்லை. முக்கியமாகத் தனது காதலின் ஆழத்தை அவளுக்கு எப்படியேனும் வெளிபடுத்தி அவளின் மனதை மாற்ற வேண்டும் என்ற வெறி.
அவனின் வேகமும், ஆழமும் அதிகரித்துக்கொண்டே போகவும், சுற்றுபுறத்தை உணர்ந்து, அவனின் நெஞ்சில் கைவைத்து முழுபலத்துடன் தள்ளிவிட்டாள் ஆரா. அதில் அவன் தடுமாறி பின்னே நகர, அப்படியே தரையில் மடிந்து அமர்ந்த ஆரா, அழ ஆரம்பித்துவிட்டாள். “என்னைப் பலவீனமாக்காதீங்க ஜெய். ப்ளீஸ். உங்களைக் கெஞ்சி கேட்கிறேன்.” என்று அழுகையுடன் சொன்னவள், தன் மேல் எழுந்த கழிவிரக்கத்தில், முகத்தை மூடிக்கொண்டு கதற ஆரம்பித்துவிட்டாள்.
சிறிது நேரம் அவளை அழவிட்டவன், இப்பொழுதாவது ஏதாவது சொல்வாளா, என்று அவள் முதுகையே வெறித்துக் கொண்டிருக்க, அவளோ சிறுது நேரம் அழுது கரைந்தவள், அவன் முன்பு தனது உணர்வுகளை வெளிக்காட்ட விரும்பாமல், வெளிகாட்ட கூடாது என்ற உறுதியில், தன் முகத்தை அழுத்தத் துடைத்துக்கொண்டு எழுந்தவள், “இனிமே இந்த மாதிரி என்கிட்ட நடந்துகிட்டீங்க, அப்புறம் நான் என்ன செய்வேன்னு எனக்குத் தெரியாது.” என்று உறும, அவளுக்குப் பதில் சொல்ல ஜெய் வாயை திறக்க, அதற்குள் அவனின் மொபைல் போனில் அழைப்பு வர, எடுத்துப் பார்த்தான். கெளதம் தான் அழைத்திருந்தான். அவசரமாக அழைப்பை அட்டென்ட் செய்தவன், “ஹலோ! சொல்லுங்க ண்ணா?” என்று கேட்க, அந்தப் பக்கம் கெளதம் என்ன சொன்னானோ, “ஹம், …அமாம் ண்ணா. ஆபீஸ்ல தான் இருக்கேன். சொல்லுங்க ண்ணா என்ன விஷயம்?” என்று ஆராவை பார்த்துக்கொண்டே பேச, அந்தப் பக்கம் கெளதம் சொன்ன செய்தியில் அதிர்ந்தவன், “என்ன ண்ணா சொல்றீங்க! யாரு?!” என்றவன், அதன்பின் சில நிமிடங்கள் பேசியவன், “சரி ண்ணா, இதோ கிளம்புறேன்.” என்று சொல்லிவிட்டு போனை அணைத்து வைத்தான்.
பேசி முடித்துவிட்டு, போனை வைத்தவனை, ஆரா ஆராய்ச்சியாகப் பார்க்க, அவனோ “வண்டியில ஏறு. உடனே வீட்டுக்கு போகணும்.” என்று அவசரபடுத்தினான். அவளோ. “என்ன ஆச்சு?!” என்று நடுக்கத்துடன் கேட்க, வண்டிய ஸ்டார்ட் செய்தவன், அவள் பக்கம் திரும்பி, “என்ன கல்யாணம் செஞ்சுக்கச் சொன்னல. எனக்கு முன்னாடி உனக்குக் கல்யாணம் முடிஞ்சிடும் போல.” என்று பீடிகை போட, “கொஞ்சம் புரியும்படி சொல்லுங்க.” என்று எரிந்து விழுந்தாள் அவள். “ஹம்…உன்னை பொண்ணு பார்க்க மாப்பிள்ளை வீட்டில இருந்து வந்துருக்காங்கலாம். அனேகமா அடுத்த வாரம் கல்யாணம் கூடப் பிக்ஸ் ஆகிடுமாம்.” என்று சுருதியே இல்லாமல் அவன் சொல்ல, தலையில் இடி விழுந்தது போல உணர்ந்தாள் ஆரா.
