Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 25.1

அத்தியாயம் 25(1)

“அம்மா!!!!” என்ற மிருதுளாவின் அலறலை கேட்டதும், பதறியடித்து அவள் பக்கம் திரும்பிய சித்ரா, “என்ன மா?!! என்ன செய்யுது?!” என்று கலக்கத்துடன் கேட்க, “முடியல மா, சுருக்கு சுருக்குன்னு குத்துது. வலி தாங்கல.“ என்றவள் எங்கே வலிக்கிறது என்று காட்ட, அவருக்குப் புரிந்துவிட்டது பிரசவ வலி என்று. ஆனால் இன்னும் ஒன்றரை மாதம் இருக்கிறதே என்று நினைத்தாலும், தாயாக அவரால் அமைதியாக இருக்க முடியவில்லை. உடனே மோகனிடம் விஷயத்தை இவர் சொல்ல, அவர் உடனே டிரைவரிடம் சொல்ல, அவனோ, “சார், இன்னும் பத்து நிமிஷ தூரத்தில ஒரு ஹாஸ்பிட்டல் இருக்கு. அங்க வண்டிய நிறுத்துறேன். இறங்கிகோங்க. அதுவரைக்கும் கொஞ்சம் பார்த்துகோங்க சர்.“ என்றவன், வண்டியின் வேகத்தை அதிகபடுத்தினான்.

இங்கே மிருதுளாவுக்கோ, நேரம் செல்ல செல்ல வலி அதிகரிக்க, கண்களை இறுகமூடி, பற்களை அழுத்தி கடித்துக்கொண்டு, சித்ராவின் கைகளை இறுக பிடித்துக்கொண்டாள். அப்படியும் வலி தாங்க முடியாமல், லேசாக முனங்கினாள். அவளின் வேதனையைப் பார்க்க முடியாமல், “கொஞ்சம் பொறுத்துக்கோ டா. பக்கத்தில ஒரு ஹாஸ்பிட்டல் இருக்காம். அங்க போயடாலாம்.” என்று கலங்கிய குரலுடன் சித்ரா சொல்லிக்கொண்டிருக்க, பேருந்தில் இருந்த சில பெண்களும், இவள் பக்கத்தல் வந்து தலையை வருடி, தட்டிகொடுத்து ஆறுதலாகப் பேசிக்கொண்டு, உதவியாக நின்று கொண்டிருந்தனர். மோகனோ பெட்டிகளை எடுத்துக்கொண்டு போய், வாசல் அருகில் சென்று வைத்தவர், பதட்டத்துடன் ரோட்டை பார்த்துக்கொண்டு டிரைவர் பக்கத்திலேயே நின்றிருந்தார்.

திருச்சியை நெருங்கி கொண்டிருந்தது பேருந்து. சொன்னது போலவே, திருச்சி சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ஒரு ஓரத்தில் பேருந்தை டிரைவர் நிறுத்தியதும், பயணிகள் சிலர் உதவியுடன் பெட்டிகளை இறக்கி வைத்த மோகன், சித்ரா, மற்றும் மிருதுளாவுடன் கீழே இறங்கினார். திருச்சியில் இறங்க வேண்டிய ஒரு சிலரும், இவர்களுக்கு உதவியாக இங்கேயே இறங்கி கொண்டு, டிரைவரிடம் மருத்துவமனை விலாசத்தைக் கேட்டுக்கொண்டு, வழியில் போன காரில் லிப்ட் கேட்டு, ஒருவழியாக அனைவரும் மருத்துவமனை சென்று சேர்ந்தனர்.



Advertisement

அங்கே சென்றதும், உடனடியாகக் கம்பௌண்டர் விரைந்து ஸ்ட்ரெட்சரை எடுத்துக்கொண்டு வர, அடுத்தப் பத்து நிமிஷத்தில் தனி அறை ஒதுக்கப்பட்டுப் படுக்கவைக்கப் பட்டிருந்தாள் மிருதுளா. மோகனும், சித்ராவும் கலக்கத்துடன் உடன் அமர்ந்திருக்க, உதவிக்கு வந்தவர்களும் வெளிய வராண்டாவில் இருந்தனர். இதற்குள் ஆராவிற்கு விஷயம் சொல்லப்பட, அவளும் உடனே சென்னையில் இருந்து புறப்பட்டிருந்தாள்.

மிருதுளாவை முதற்கட்ட பரிசோதனை செய்த மருத்துவர்கள், முன்பே வலி வந்துள்ளதால், incubator வசதியை தயார்படுத்தி வைத்தனர். மோகனிடம், இதற்கு முன்பு அவள் எடுத்துக்கொண்ட ட்ரீட்மெண்டை பற்றிய விவரங்களைக் கேட்டு தெரிந்து கொண்டனர். மேலும் அவளுக்கு இன்ஜெக்க்ஷன் போட்டிருப்பதாகவும், நார்மல் டெலிவரிக்கு கூடுமான வரையில் முயற்சிப்போம், நிலைமை சரி இல்லை என்றால், ஆபரேஷன் செய்துடலாம் என்று சொல்லிவிட்டு சென்றார். சித்ராவுக்கும் மோகனுக்கும் என்ன செய்வது என்று புரியவில்லை. இப்படியே பரபரப்பாக நிமிடங்கள் கழிந்தது.

வலி வருவதும் போவதுமாக இருக்க, கட்டிலின் பக்கவாட்டு பட்டையை இறுக பற்றிக்கொண்டு வலியை பொறுத்துக்கொள்ள முயற்சித்துக் கொண்டிருந்தாள் மிருதுளா. அவள் அருகில் சித்ரா கலக்கத்துடன் அமர்ந்திருக்க, மோகன் பில் தொகை கட்ட சென்றிருந்தார். இப்படியே பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகு, ஆபரேஷன் தியேட்டருக்குக் கொண்டு செல்லப்பட்டாள்.

Advertisement

வெளியே பெரியவர்கள் கடவுளை வேண்டிக்கொண்டு, பரிதவிப்புடன் அமர்ந்திருக்க, உள்ளே மிருதுளாவோ போராடிக் கொண்டிருந்தாள். நடந்த முடிந்த நிகழ்வுகளையே அவள் மனம் அசை போட்டுக் கொண்டிருக்க, குறிப்பாகச் சந்துருவின் வார்த்தைகளின் தாக்கத்தில், அவளது BP ஏறுவதும் இறங்குவதுமாக இருந்தது. ஒரு கட்டத்தில் அபாயக் கட்டத்தை நெருங்க, குழந்தையைப் பிரசவிக்க அவள் கஷ்டபடுவதால், வேறு வழியில்லாமல் c-section செய்வது என்று முடிவு செய்யப்பட்டு அதற்கான ஏற்பாடுகள் வேகமாகச் செய்யப்பட்டது. மிருதுளாவின் முதுகு தண்டில், Spinal Analgesia (Regional Analgesia) கொடுக்கப்பட்டு ஆபரேஷன் உடனடியாக ஆரம்பிக்கபட்டது. இருந்தும் அவளது உடல்நிலை மோசம் அடையத்தொடங்க, மருத்துவர்கள் உடனடியாகச் சித்ராவை உள்ளே அழைத்தனர்.

Advertisement

செய்தியை கேட்டு பதறித்துடித்த அவர், “மிருதுளா மா, எதையும் மனசில் போட்டு குழப்பிக்காத டா. எங்களுக்கு நீ வேணும் டா. அப்பா அம்மாவை நினைச்சு பாரு டா. உன் குழந்தையை நினைச்சு பாரு அம்மு. உன் மனசை கஷ்டபடுத்திக்காத மிரு மா. ஆரா வந்துட்டு இருக்கா. நீ கஷ்டபடுறதை நினைச்சு எங்களுக்கு வேதனையா இருக்கு அம்மு. நாங்க இருக்கோம் டா. எதை நினைச்சும் வருத்தபடாத டா.” என்று திரும்பத் திரும்பக் கூறியவர், மீண்டும் மீண்டும் அவள் நெற்றியில் இதழ்பதித்து, கைகளை இறுக பற்றிக்கொண்டு அவளை ஆறுதல்படுத்த, மெல்ல மெல்ல அவளது இதயத்துடிப்பு, bp எல்லாம் நார்மல் லெவெலுக்கு வர தொடங்கியது. இப்படிப் பல மணிநேர போராட்டத்திற்குப் பிறகு, அழகிய பெண் குழந்தையைப் பெற்றெடுத்தாள் மிருதுளா.

குறிப்பிட்ட தேதிக்கு ஒன்றரை மாத்திற்கு முன்பே குழந்தை பிறந்தாலும், கடவளின் புண்ணியத்தில், குழந்தைக்கு மிகப் பெரிய பிரச்சனை என்று எதுவும் இல்லை. குழந்தை உடனடியாக இன்க்யுபேட்டரில் வைத்துக் கண்காணிக்கப்பட்டது. குழந்தையைப் பரிசோதித்த மருத்துவர்கள், சில வாரங்கள் குழந்தை இன்க்யுபேட்டரில் இருக்கட்டும், அதன் பின் பிரச்சனை எதுவும் இல்லை என்று கூறினார்கள்.

ஆனால் இங்கே மிருதுளாவிற்குத் தான் அடுத்தப் பிரச்சனை ஆரம்பித்தது. குழந்தை பிறந்த சில மணிநேரங்களில் அவளுக்கு ஜன்னி வந்துவிட, குளிரில் உடல் நடுங்க ஆரம்பிக்க, ஒரு கட்டத்தில் அவள் உடல் தூக்கி தூக்கி போட்டது. உடனடியாக மருத்துவர் விரைந்து வர, அவளது உடல்நிலை மோசமடையத் தொடங்கியது. கிட்டத்தட்ட உயிருக்கு போராடும் நிலைக்குச் சென்றுவிட்டாள். அவசர சிகிச்சைக்கு அவள் மாற்றப்பட, அதற்குள் ஆராவும் மருத்துவமனை வந்து சேர்ந்திருந்தாள்.

Advertisement

தொடர் சிகிச்சைகள் வழங்கபட்டு, கிட்டத்தட்ட பல நாள் போராட்டத்திற்குப் பிறகு அவள் உடல்நிலை சீராகத் தொடங்கியது. இருந்தும் இன்னும் இரண்டு வாரம் கண்காணிப்பில் அவள் இருக்கட்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட, அது மிகப் பெரிய மருத்துவமனை என்பதால், அங்கேயே தங்குவதற்கு அறை ஏற்பாடு செய்தார்கள் மிருதுளா குடும்பத்தார்.

ஒரு பக்கம் மிருதுளா, மறுபக்கம் குழந்தை என நாட்கள் சென்று கொண்டிருக்க, இருவரின் உடல்நிலையும் மெல்ல மெல்ல சீரடைய ஆரம்பித்தது. குழந்தை நன்றாகத் தேறியதும், அவள் மிருதுளாவின் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டாள். குழந்தையை வாங்கிய சித்ராவிடம், மோகன் தன் மனதில் தோன்றிய எண்ணத்தைக் கூற, அதிர்ந்து போன அவர், “இப்படிலாம் சொல்லாதீங்க. இது பெரிய பாவம்ங்க. குழந்தைக்காகத் தான் நம்ம பொண்ணு உயிரை கையில பிடிச்சிட்டுக் கஷ்டப்பட்டுப் பிரசவத்தைத் தாண்டி, இப்போ உயிருக்கு போராடி மீண்டிருக்கா. இப்போ போய் அவ தலையில இடியை இறக்கிடாதீங்க. அவ தாங்க மாட்டா. என் பொண்ணுக்கு ஏதாவதுண்ணா என்னால தங்கிக்க முடியாதுங்க. ப்ளீஸ். இப்படிலாம் செய்யாதீங்க.” என்று மன்றாட,

“நீ தெரிஞ்சு தான் பேசுறியா சித்ரா. அவளுக்கு இந்தக் குழந்தையைப் பார்க்கும்போதெல்லாம் நடந்தது நியாபகம் வராதா? அவளால எதையும் மனசுக்குள்ள நினைக்காம இந்தக் குழந்தையை வளர்க்க முடியுமா? இந்தக் குழந்தையே அவ மனசில இருக்கிற ரணத்தை மறுபடியும் மறுபடியும் கிளராதா? அது மட்டுமா, இந்தக் குழந்தையை எந்தவித கேள்வியும் இல்லாம, கெட்ட பெயரும் இல்லாம வளர்க்க முடியுமா? எனக்கும் இந்த முடிவு ரொம்பக் கஷ்டமா இருக்குதான். ஒரு அப்பனா எனக்கு இப்படிச் செய்ய மனசு வரல. இருந்தும், இவங்க ரெண்டு பேரோட நல்லதுக்குத் தான் சொல்றேன் சித்ரா. நல்லா யோசிச்சு பாரு. அந்தச் சந்துரு அப்படிச் சொன்ன பிறகும் இந்தக் குழந்தையை நம்மோட வச்சுக்க முடியுமா? இன்னைக்கு இல்லாட்டியும் நாளைக்கு இவ பெருசான பிறகு, அப்பன் பேரு தெரியாதவன்னு ஒரு பேச்சு வந்தா என் பொண்ணு எப்படித் தாங்குவா? அவ வாழ்க்கை இப்படியே இருந்துட போறதில்லை. நாளைக்கு அவளுக்கு வேற வாழ்கை அமையும்போது, இந்தக் குழந்தையால அவ வாழ்க்கைக்கு ஒரு பிரச்சனைன்னா என்ன செய்வ? ஒருவேளை குழந்தைக்காக, நம்ம பொண்ணு வேற வாழ்கை அமைச்சுக்காம போனா அப்போ உனக்கு எப்படி இருக்கும் சித்ரா?! எல்லாத்தையும் யோசிச்சிட்டு தான், மனசை கல்லாக்கிட்டு இந்த முடிவை எடுத்துருக்கேன். நல்ல யோசிச்சு பாரு சித்ரா.” என்று அவர் பேச பேச, குழம்பிய சித்ராவுக்கு அவர் சொன்ன முடிவுக்குக் கட்டுபடுவதைத் தவிற வேறு வழியில்லை.

“குழந்தை எங்கன்னு மிருதுளா கேட்டா, என்ன சொல்வீங்க?” என்று சித்ரா கேட்க, “குழந்தை இறந்துடுச்சுன்னு சொல்லிடுவோம்.” என்று மோகன் பதில் சொல்ல, அதைக் கேட்ட அவருக்கு, ஒரு அன்னையாகக் கஷ்டமாக இருந்தது. குழந்தையின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தார். ரோஜா மலரே குழந்தையாகப் பிறந்திருக்கும், அந்தச் சிசுவை எங்கோ அனாதையாக விட அவருக்குத் துளியும் மனம் இல்லை. ஆனால் மோகன் சொல்லும் வார்த்தைகள் ஒவ்வொன்றும் உண்மை. ‘பிறப்பின் ஆதாரம் இல்லாத இந்தக் குழந்தையை எப்படி மிருதுளாவால் வளர்க்க முடியும்?’ என்று யோசித்தவருக்கு மோகன் சொல்வது போல் செய்வதைத் தவிர வேறு வழியில்லை. மனதில் கனத்துடன் தான் மோகனின் முடிவுக்குச் சம்மதித்தார்.

மிருதுளாவின் உடல்நிலை நன்றாகத் தேறியதால், நாளை டிச்சார்ஜ் ஆகலாம் என்று மருத்துவர் சொன்னதால், மோகன் அதற்கான ஏற்பாடுகளை செய்தார். முன்பே மிருதுளாவிற்கு உடல்நிலை ஓர் அளவுக்குத் தேறியதும் அவசர வேலையாகச் சென்னை சென்றிருந்தாள் ஆரா. இப்பொழுது மிருதுளாவை அழைத்துக்கொண்டு கிளம்புவதற்குச் சில மணிநேரங்கள் முன்பு, குழந்தையைத் தூக்கிக்கொண்டு மருத்துவமனையில் இருந்து சிறிது தூரம் தள்ளி இருந்த ஓர் அனாதை ஆஷ்ரமத்திற்குச் சென்ற மோகன், யாரும் அறியாவகையில் குழந்தையை அங்கே வைத்துவிட்டு வந்துவிட்டார். அதுநாள் வரை, மிருதுளா கேட்கும் நேரம் எல்லாம், குழந்தைக்குச் சிகிச்சை நடந்து கொண்டிருக்கிறது என்று சொல்லி வந்த மோகன், கிளம்பும் நேரம் அவள் குழந்தை எங்கே என்று கேட்டபொழுது, சொல்கிறேன், என்று அவளைக் கஷ்டபட்டு சமாளித்தவர், கார் ஏற்பாடு செய்து அதில் புறப்பட்ட பின்பு தான், அவளின் சந்தேகப் பார்வையில், குழந்தை இறந்துவிட்டதாகச் சொன்னார். அதைக் கேட்டு வெடித்து அழுதாள் அவள். “எதாவது பிரச்சனையா சர்?!“ என்று கேட்ட டிரைவரையும் சமாளிக்க வேண்டியதாகப் போயிற்று.

ஒரு வழியாகச் சென்னை வந்து சேர, அங்கே ஆராவும் இதே கேள்வியைக் கேட்க, அவளிடம் குழந்தை இறந்த செய்திய சொல்ல, அவளுக்கே மிகப் பெரிய அதிர்ச்சி. “எப்படி ப்பா. நல்ல ஆகிட்டு வர்றான்னு தான டாக்டர் சொன்னாங்க. அப்புறம் எப்படி?!!” என்று கேட்டவளுக்கு, “ஆமாம் ஆரா, நல்லா தான் இருந்தா, திடீர்ன்னு மூச்சு விடுறதுல ப்ராப்ளம் வந்து சீரியஸ் ஆகி, கடைசில,…..” என்று பதில் சொன்ன சித்ராவுக்கு, குழந்தை இப்பொழுது எங்கே இருக்கிறாளோ என்று நினைக்கையில் அவரையும் மீறி கண்களில் கண்ணீர் வந்தது.

அவரைப் பார்த்து மிருதுளா மீண்டும் அழ தொடங்க, அங்கே ஒரு கனத்த அமைதி நிலவியது. இதில் மிருதுளா வேறு, “ஆரா, நீ பாப்பாவை பார்த்தியா?!“ என்று ஆர்வமும் துக்கமும் கலந்த குரலில் கேட்க, ஆராவிற்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை. கண்ணீருடன் ‘ஆம்’ என்பது போலத் தலை அசைக்க, “என்ன பாப்பா அம்மு. பையனா? பொண்ணா?” என்று அடுத்தக் கேள்வி கேட்டவளின் கண்களில், அந்தத் தாய்மை உணர்சு பளிச்சிட, “அக்கா!!!” என்று அவளைக் கட்டிக்கொண்டு அழுதாள் ஆரா.

இப்படியே அழுகையும், துக்கமுமாக நாட்கள் கழிய, சென்னை வந்து சேர்ந்ததில் இருந்து ஒருநாள் கூடத் தூங்கவில்லை மிருதுளா. எப்பொழுதும் சுவற்றை வெறித்துப் பார்த்துக்கொண்டும், குழந்தைக்கு வாங்கிய பொருட்களை எடுத்து பார்த்துக்கொண்டும், அந்த நினைவில் மெல்ல மெல்ல தன்னைத் தொலைத்து கொண்டிருந்தாள். இதில் அவ்வபொழுது சந்துரு சொன்ன வார்த்தைகள் வேறு மனதுக்குள் ஓட, அவளை நினைத்து அவளுக்கே அருவருப்பாக இருந்தது. இதனால் அவளுக்கே தெரியாமல் மன அழுத்தத்திற்கு ஆளானால்.

ஒரு மாதத்திற்கு மேல் ஓடியிருக்க, அன்றொரு நாள், கல்லூரியில் இருந்து சீக்கிரம் வந்துவிட்ட ஆரா, சகோதரியை தேடி செல்ல, அவளது அறை கதவோ பூட்டி இருந்தது. தட்டி தட்டி பார்த்தவளுக்கு ‘திக்’ என்று இருக்க, உடனே சித்ராவும் வந்து முயற்சி செய்ய, கதவு திறக்கபடவில்லை. பயந்துபோன இருவரும் பக்கத்துக்கு வீட்டு ஆட்களை வைத்து கதவை உடைத்துக்கொண்டு திறக்க, அவர்கள் கண்ட கட்சியில் அதிர்ந்து போயினர்.

கட்டிலில் மிருதுளா மயங்கி இருக்க, அவள் பக்கத்தில், மோகன் பயன்படுத்தும் தூக்க மாத்திரை பாட்டில் முழுவதும் காலியான நிலையில் கிடந்தது. இந்தக் காட்சியைப் பார்த்து அலறியபடி இருவரும் அவள் அருகில் வந்து அவளைத் தட்டி எழுப்ப முயற்சிக்க, அவளோ எந்த அசைவும் இல்லாமல் கிடந்தாள். உடனடியாக அவளைத் தூக்கிகொண்டு மருத்துவமனை ஓடினார்கள் பெண்கள் இருவரும். பேங்கில் இருந்து மோகனும் பதறியடித்து ஓடி வந்தார். அளவுக்கு அதிகமாகத் தூக்க மாத்திரை எடுத்துக்கொண்டதால் மீண்டும் ஒருமுறை உயிர்க்கு போராட வேண்டிய நிலை அவளுக்கு. கூடவே அவளின் குடும்பத்திற்கும்.

சில நாள் போராட்டத்திற்குப் பின் அவள் குணமாக, அவள் செய்த செயலின், அழுத்தத்தைத் தாங்கமுடியாமல், அவளைத் திட்டி தீர்த்துவிட்டாள் ஆரா. “அறிவிருக்க க்கா உனக்கு?! எதுக்கு இப்போ இப்படிச் செஞ்ச? எவனோ செஞ்ச வேலைக்கு நீ ஏன் இந்த மாதிரி செய்யணும். நாங்கலாம் உனக்குத் தேவை இல்லையா? எங்களை அழ வைக்கணும்னு உனக்கு அவ்ளோ ஆசையா? நாங்க அழறதை பார்க்கணுமா, இதோ பாரு. உன்னைப் பெத்து வளர்த்த அம்மா, அப்பா முகத்தைப் பாரு. இது வரைக்கும் அழாத அப்பா அழறதை பாரு. கால் தரையில படாம, சீராட்டி, பாராட்டி, கண்ணுல ஒரு சொட்டுக் கண்ணீர் வராம, எனக்கு இன்னொரு அம்மாவா இருத்தியே, என் முகத்தைப் பாரு. இதுதான் உனக்குச் சந்தோஷமா அக்கா? சொல்லு இதுதான் உனக்கு வேணுமா? உனக்கு இந்த உலகத்தில இருக்கப் பிடிக்கலனா சொல்லிடு க்கா. நாங்களும் உன்கூட வந்துடறோம். நீ இல்லாம நாங்க இருந்து என்ன பண்ண போறோம்.” என்றவள் சட்டென்று அங்கே இருந்த மருத்துவக் கத்திய எடுத்து கையைக் கீற போக, “அம்மு!!!!” என்று கதறலுடன் கட்டிலில் இருந்து எழுந்துவிட்டாள் மிருதுளா. ஆரா கையில் இருந்த கத்தியை பிடுங்கி தூக்கி எறிந்தவள், அவளைக் கட்டிக்கொண்டு அழ ஆரம்பிக்க, அழுகையுடன், அவளை அப்படியே சென்று கட்டிலில் அமரவத்த ஆரா, அவள் அருகில் தரையில் மண்டியிட்டு, “இனிமே இப்படிச் செய்யாத அக்கா. தாங்க முடியல. நாங்க என்ன பாடு படுவோம்னு நினைச்சு பாரு அக்கா. ப்ளீஸ். நீ இல்லாம நாங்க ஒரு நாள் இருந்திருக்கோமா.” என்றவள் தமக்கையின் மடியில் தலை சாய்த்துச் சத்தமில்லாமல் அழ, அமர்ந்த வாக்கில் தங்கையை மிருதுளா கட்டிக்கொள்ள, அடுத்தப் பல நிமிடங்கள் அவர்களின் விசும்பல் சத்தம் மட்டுமே கேட்டது. இதை எல்லாம் அமைதியாகப் பார்த்து கொண்டிருந்தனர் பெற்றோர்.

பல நிமிடங்கள் கழித்தே நிமிர்ந்த ஆரா, மிருதுளாவின் கையை எடுத்து தன் தலை மேல் வைத்துகொண்டு, “என் மேல சத்தியமா சொல்லுக்கா, இனிமே எப்பவும் இந்த மாதிரி செய்யமாட்டேன்னு.” என்று கலங்கிய குரலில் கேட்க, “இல்ல அம்மு. இனிமே இந்த மாதிரி செய்யமாட்டேன். உனக்காக. நம்ம பெத்தவங்களுக்காக.” என்று கண்ணீருடன் அவளுக்கு உறுதி அளித்தாள் மிருதுளா.

நடந்தவற்றை எல்லாம் கேள்விபட்டுத் துடித்துப் போய்விட்டார் இவர்களின் பாட்டி பார்வதி. நில ஒத்திகை விஷயமாக ஊரில் இருந்தவர், மிருதுளாவை சென்னைக்கு அழைத்து வந்ததும் அவளைப் பார்த்துக்கொள்ள வரலாம் என்றிருந்தார். ஆனால் ஊரில் விஷயம் முடியாமல் இழுத்தடிக்க, அதற்குள் இங்கே எல்லாம் நடந்து முடிந்திருந்தது. இதுநாள் வரை இங்கு நடந்த எதுவும், அவரிடம் சொல்லப்படவில்லை. மிருதுளா தற்கொலை முயற்சி வரை சென்றதும், எல்லாவற்றையும் அவரிடம் சொல்லிவிட்டாள் ஆரா. இதற்கு மேலும், தன் பேத்திகளை விட மற்ற வேலை அவருக்கு முக்கியமா?!! எல்லாவற்றையும் தெரிந்தவரிடம் ஒப்படைத்துவிட்டு சென்னைக்கே வந்துவிட்டார் அவர்.

அதன் பின் நாட்கள் வெறுமையாகச் சென்றது மிருதுளாவிற்கு. அவள் வாழ்ந்து கொண்டிருந்ததே அவள் குடும்பத்திற்காகத் தான். இதில் அவ்வபொழுது குழந்தையின் நியாபகமும் வர, தன்னைக் கட்டுபடுத்திகொள்ள மிகவும் கஷ்டப்பட்டுப் போனாள். பகல் முழுவதும் முகத்தில் ஒன்றும் காட்டிக்கொள்ளாமல் இருக்கும் அவள், இரவில், தூங்காமல் எல்லாவற்றையும் அசைபோட்டபடி தலையணையை நனைத்து கொண்டிருந்தாள். இதில் கண்ணால் கூடப் பார்க்காத தன் உதிரத்தில் உதித்த மகளை நினைக்கையில், அவள் தாயுள்ளம், குழந்தையின் முகத்தைப் பார்க்க துடிக்கும். இறந்துவிட்டாள் என்று அவளுக்குச் சொல்லபட்டிருந்தாலும், பெற்ற மகளின் முகத்தை அதிகமாகத் தேடியது அவளது மனம். அவள் முகம் எப்படி இருக்கும்? தொலைகாட்சிகளில் பார்த்தது போல, குட்டி குட்டி கால்கள், கை விரல்கள் இருந்திருக்குமோ! பட்டு போல மிருதுவாக இருந்திருப்பாளோ! கோலிகுண்டு போலக் கண்களை உருட்டிக்கொண்டு தன்னையே பார்த்திருப்பளோ! என்று அணுவணுவாகக் குழந்தையை மனதுக்குள் ரசித்துகொள்பவள், அடுத்த நொடி தன் குழந்தை உயிரோடு இல்லை, தன் கற்பனை எல்லாம் பொய் என்று உரைக்கும்போது, சத்தமில்லாமல் அழுது கரைந்தாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!