Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 29.1

அத்தியாயம் 29 (1)

தன் முன் மூச்சு வாங்க நின்றுக்கொண்டிருந்த கணவனைப் பார்த்ததும், மிருதுளாவிற்குப் புரிந்தது, ஆரா மூலம் விஷயம் தெரிந்து வந்திருக்கிறான் என்று. அவன் முகத்தை நோக்கிய மிருதுளாவின் மனதுக்குள் உதித்த எண்ணம், ‘நம்பிக்கை இல்லாமல் தான் என்னை இவர் திருமணம் செய்துக்கொண்டாரா?!‘ என்பது தான்.

கண்களில், அடிபட்ட வலியும், ஏமாற்றமும் போட்டிபோட, கண்ணீர் காட்சியை மறைக்க, அந்தப் பைலுடன் எழுந்து கெளதம் அருகில் வந்தவள், அவன் முன் அதை நீட்டி, “இது என்னதுங்க??” என்று குரல் நடுங்க கேட்க, அவனோ, “அம்மு!” என்றபடி அவள் தோள்களைத் தொடபோக, பட்டென்று ஓர் அடி பின்னால் போனவள், “ மொதல்ல எனக்குப் பதில் சொல்லுங்க. “ என்று பதிலுக்குக் குரலை உயர்த்த, அவள் எவ்வளவு காயபட்டிருக்கிறாள் என்பதைப் புரிந்துக் கொண்டவன், முதலில் அவளைச் சமாதானபடுத்தும் பொருட்டு, “ அம்மு, நான் சொல்றதை மொதல்ல கேளும்மா, ப்ளீஸ். நானே உன்கிட்ட சொல்லனும்ன்னு நினைச்சேன்…..” என்று அவன் பேசி கொண்டிருக்கும்போதே, இடைபுகுந்தவள்,

“எப்போ சொல்லனும்னு நினைச்சீங்க, இனிமே வா?!” என்று உடைந்த குரலில் கேட்க, இப்பொழுது அவள் இருக்கும் மனநிலையில், தான் எது சொன்னாலும் அவள் கருத்தில் பதியாது என்பதை உணர்ந்தவன், முதலில் அவளைச் சமாதனம் செய்த பின் எல்லாவற்றையும், அவளிடம் சொல்வது என்று முடிவு செய்து கொண்டவன், “அம்மு, ப்ளீஸ் அழாத மா.” என்றபடி, அவளை நெருங்க, அவளோ இவனை முறைத்துக்கொண்டு பின்னோக்கி செல்ல, அவளை நெருங்கியவன் கிட்டத்தட்ட வலுகட்டயாமாக அவளைத் தன்னோடு சேர்த்தணைக்க, மிருதுளாவோ அவனின் சட்டையைப் பிடித்துக்கொண்டு, “விடுங்க என்னை! விடுங்க.“ என்றபடி திமிர, அவனின் அன்பின் ஆழத்தை போல, அவனின் பிடியும் உடும்புபிடியாக இருக்க, அதில் இருந்து விலக முடியாமல் சோர்ந்து போனவள், அழுகையுடன், அவன் நெஞ்சில் முகம் புதைத்து, வாய் விட்டு கதறி அழுதாள்.



Advertisement

தன் குழந்தை இறந்த செய்தியை கேட்ட பிறகு, உயிர் வாழ விரும்பாமல் தற்கொலை செய்ய முயன்றவள், மற்றவருக்காக, முக்கியமாக ஆராவுக்காகத் தன் துக்கத்தை மனதுக்குள் போட்டுப் புதைத்துக்கொண்டு, வெளியில் சாதாரணமா இருந்தாலும், இரவில் யாரும் அறியாமல் வாய்பொத்தி அழுது கரைந்த நாட்கள் எல்லாம் இப்பொழுது அவள் கன்முன் வர, அந்தத் துக்கமும், தேஜா தான் பெற்றெடுத்த குழந்தை, என்று தெரிந்துகொண்ட மகிழ்ச்சியும் என இருவேறு உணர்வுகளின் பிடியில் சிக்கி தவித்தவள், வெகு நேரம் அழுது கரைந்தாள்.

அவளைத் தன் நெஞ்சோடு சேர்த்து அணைத்திருந்த கெளதம், அவளின் முதுகை ஆறுதலாக வருடிகொடுக்க, இப்படியே பல நிமிடங்கள் அழுகையும், பழைய நினைவும், மிருதுளாவின் உடலை பலவீனபடுத்த, கௌதமின் கைவளைவுக்குள் இருந்தபடியே தளர்வுடன் சரிந்தவள், தரையில் மடிந்து அமர, அவளுடன் தானும் மண்டியிட்ட கெளதம், அவளை இன்னும் தன்னோடு இறுக்கிக் கொண்டான். உடைகளையும் மீறி அவளின் கண்ணீரின் ஈரத்தை தன் மேனியில் உணர்ந்தவனின் கண்களும், தன் உயிரில் பாதியாகக் கலந்தவளை நினைத்துக் கலங்கியது.

அவளின் அமைதி, இவனை ஊக்குவிக்க, தன் மனதில் உள்ளதை சொல்லி விடுவோம் என்று நினைத்தவன், “அம்மு அழாதடா, என்னைப் பத்தி உனக்குத் தெரியும்ல அம்மு. உன்கிட்ட நான் எதையாவது மறைச்சு இருக்கேனா, சரியோ தப்போ எதுனாலும் சொல்லிடுவேன ரிது மா. சின்ன விஷயம்னாலும் யார் கிட்ட சொல்றேனா இல்லையோ, உன்கிட்ட சொல்லிடுவேன். அது உனக்கே தெரியுமே அம்மு. அப்படிப் பட்டவன், தேஜாவை பத்திய விஷயத்தை உன்கிட்ட சொல்லாம இருப்பேனா டா. சத்தியமா சொல்றேன் டா, உன்கிட்ட இந்த விஷயத்தை மறைக்கணும்னு நான் நினைச்சது இல்லை அம்மு. அதைவிட இதைபத்தி உன்கிட்ட சொல்ல, எனக்குக் கொஞ்சம் டைம் தேவைப்பட்டுச்சு டா. இதுதான் உண்மை.” என்று அவன் சொன்னதும் அவனை நிமிர்ந்து பார்த்த மிருதுளாவின் பார்வையே கேட்டது, ‘என்கிட்ட சொல்ல எதுக்கு டைம்?’ என்று.

Advertisement

“அப்படிப் பார்க்காத அம்மு, ப்ளீஸ். உன்னைப் பத்தி தெரிஞ்சிக்கறதுக்கு முன்னாடி, நீ எனக்கு மனைவி ஆகுறதுக்கு முன்னாடி, தேஜா எனக்கு ரொம்ப முக்கியமா தெரிஞ்சா அம்மு. தேஜா, நான் பெத்த குழந்தையா இல்லாம இருக்கலாம், ஆனா அவ தான் அம்மு, டெலிவரி நேரத்தில, யாழினி உயிருக்கு போராடிட்டு இருந்தப்போ, அவ உயிரை காப்பாத்துனா. அவளை நான் யாழினியோட வயித்துல பிறந்த குழந்தையா தான் பார்த்தேன். யாழினி எனக்குக் கொடுத்துட்டு போன உயிரா தான் நினைச்சேன்.”

Advertisement

“யாழினி மேல நான் எவ்வளவு அன்பு வச்சிருக்கேன்னு உனக்கே தெரியுமே அம்மு. அவளை இன்னமும் நான் மறக்கல, நினைச்சிட்டு இருக்கேன்னு உனக்கே தெரியும். இதை எத்தனையோ தடவை உன்கிட்ட சொல்லியும் இருக்கேன், என்னோட செயல்லையும் காட்டியிருக்கேன். அப்படிபட்டவளோட வயித்துல பிறந்த மறு உயிரா நினைக்கிற தேஜா மேல, நான் எவ்வளவு பாசம் வச்சிருபேண்ணு நீயே யோசிச்சு பாரு அம்மு. என் வாழ்க்கையே அவதான். அவ இல்லைனா, நான் நடைப்பினம் தான் அம்மு. யாழினியையும் இழந்து, இவளை இழக்க என் உடம்புல தெம்பு இல்லடா. அதுக்கு அப்புறம் நான் உயிரோட இருந்துருப்பேனா, தெரியல…..” என்றவனின் குரல் உடைய, சட்டென்று அவன் உதடுகளை மூடியவள் கண்ணீருடன், “பாப்பாவை நான் உங்ககிட்ட இருந்து பிரிச்சிடுவேன்னு எப்படி நினைச்சீங்க, நான் அப்படிச் செய்வேனா?? இத்தனை நாள் இதை என்கிட்டே சொல்லனும்ன்னு உங்களுக்குத் தோணலையாங்க??” என்று கேட்க,

“இத்தனை நாளா நான் உன்கிட்ட சொல்லாததுக்கு, என்னை மன்னிச்சிடு அம்மு. ப்ளீஸ்டா. உண்மைய சொல்லனும்ன்னா, ஆரம்பத்தில், நான் அப்படிதான் நினைச்சேன்.” என்றதும் அவள் கண்கள் மீண்டும் அழ தயாராக, “அம்மு, ப்ளீஸ். ஆரம்பத்தில தான், நான் அப்படி நினைச்சேன். ஆனா போகப் போக உன்னைப் பத்தி புரிஞ்சுகிட்டேன் டா. ஆரம்பத்தில எனக்குள்ள அப்படி ஒரு எண்ணம் இருந்ததுக்குக் காரணம் இருக்கு அம்மு. கல்யாணத்துக்கு முன்னாடி, தேஜா காணாம போன அப்போ, நீ பாப்பாவை உன்கூட வச்சுக்கப் போறேன்னு சொல்லி என்னை முறைச்சு பார்த்தியே, உனக்கு நியாபகம் இருக்கா??” என்று கெளதம் கேட்க, ‘ஆம்’ என்பது போலத் தலை அசைத்தாள் மிருதுளா.

“அப்போ, பாப்பா மேல உனக்கு இருந்த, பொசசிவ்னஸ் தான் எனக்குத் தெரிஞ்சது. ஆரா மூலமா எனக்கு உண்மை தெரிஞ்சப்போ, மொதல்ல என் மனசில வந்தது அந்த இன்சிடெண்ட் தான் அம்மு, அதுல தெரிஞ்ச உன்னோட தாய்ப்பாசம் தான்.”

Advertisement

“உன் குழந்தைன்னு தெரியாதப்போவே அவ்வளவு பாசத்தை வச்சிருந்த நீ, தேஜா உன் குழந்தைன்னு தெரிஞ்ச பின்னாடி, அவளை என்கிட்ட விட்டு வச்சுருப்பியா அம்மு, சொல்லு??” என்றவன் மிருதுளாவை பார்க்க, இதுதான் அவன் மனதை உறுத்திக் கொண்டிருந்த விஷயமா என்று புரிந்துகொண்டவளுக்கு, உண்மையில் அவன் கேள்விக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. அன்றைய சூழ்நிலையில், தான் எப்படி நடந்திருப்பேன் என்பதை இவளாலே ஊகிக்க முடியவில்லை என்பது தான் உண்மை. அழுகையுடன் “எனக்குத் தெரியலைங்க.” என்றபடி இவள் தலை குனிய,

“உனக்கே தெரியலைன்னப்போ, என் மனநிலையைப் பத்தி யோசிச்சு பாரு அம்மு. கல்யாணத்துக்கு முன்னாடி, உன்னைச் சில தடவை பார்த்திருக்கேன், ஒரு சில தடவை பேசி இருக்கேன். அவ்ளோதான் எனக்கு உன்னைப் பத்தி தெரியும். பிறந்ததில இருந்து தேஜா என்கூட இருந்து இருக்கா, என்னைப் பொறுத்தவரை, அவ என் பொண்ணு அம்மு, அப்படி இருக்கச்ச, ஒருவேளை நீ வந்து என்னைப் பொண்ணைக் கொடுங்கன்னு கேட்டா, எப்படி என்னால அவளை விட்டுக்கொடுக்க முடியும் அம்மு. நீயே யோசிச்சு பாரு. நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத டா, ஒருவேளை, அவ நீ பெத்த குழந்தை இல்லாம இருந்து, சர்டிபிகேட் படி, அவ எனக்குப் பிறந்த குழந்தை இல்லைன்ற உண்மை மட்டும் உனக்குத் தெரிஞ்சிருக்க, இந்தச் சமயத்தில, குழந்தைக்காக ஆரா என்னைத் தேடி வந்த மாதிரி, நாளைக்குத் தேஜாவை தேடி அவங்க பெத்தவங்கன்னு சொல்லிட்டு யாராவது வந்து பாப்பாவை கேட்டா, நீ அவங்க கிட்ட தேஜாவை தூக்கி கொடுத்துடுவியா அம்மு, சொல்லு??” என்று கெளதம் கேட்க, ஒரு நொடிகூட யோசிக்காமல், அவள் தலை, ‘இல்லை’ என்பது போல அசைந்தது. அவள் கண்களிலோ, அப்படி ஒன்று நடந்திருந்தால்?! என்ற மிரட்சியைக் காட்டியது.

“அப்போ கல்யாணத்தபோ என்னோட நிலைமையை யோசிச்சு பாரு அம்மு. ஆனா அதுக்காக, நீ அவ அம்மான்றதால மட்டும் உன்னைக் கல்யாணம் செய்யல அம்மு, என் பொண்ணுக்கு நீ அம்மாவா இருக்க முடியும்ன்னு நினைச்சு தான் கல்யாணம் செஞ்சேன். ஏன்னா, என்னையும் ஆராவையும் தவிர இந்த விஷயம் அப்போ உனக்குத் தெரிய வாய்ப்பில்லை. நீ சென்னைக்குக் கிளம்புற அன்னைக்குத் தான், ஆரா என்கிட்ட எல்லா உன்மைய சொன்னா, அப்போகூட, அவ சொன்ன ஒரு வார்த்தை, நீங்க என் அக்காவை கல்யாணம் செய்யாட்டியும், நான் இந்த உண்மையை அவ கிட்ட சொல்லமாட்டேன்னு.”

“ஆனா அப்புறம் போகப் போக, உன்கிட்ட உண்மையைச் சொல்லிடனும்ன்னு எத்தனையோ முறை நினைச்சு இருக்கேன். ஆனா உண்மை தெரிஞ்ச பின்னாடி நீ எப்படி ரியாக்ட் பண்ணுவன்னு எனக்குள் ஒரு கேள்வி இருந்துச்சு. அந்தக் கேள்வி நாளுக்கு நாள் வளர்ந்து, எனக்குள்ள ஒரு பயத்தையும், தயக்கத்தையும் உண்டாக்கிடுச்சு.”

“உதாரணத்துக்கு ஒன்னு சொல்றேன் அம்மு. என்னதான் பெத்தவங்க லவ் மேரேஜ் செஞ்சவங்களா, ஓபன் மைண்டட்டா இருந்தாலும், அவங்க பிள்ளைங்க ஒருத்தரை லவ் செய்ய ஆரம்பிச்சிட்டா, உடனே தங்களோட லவ்வை வீட்டில சொல்லமாட்டாங்க, பெத்தவங்க திட்டுவாங்களோ, அப்படின்ற பயம் இருக்கும். அப்புறம் நாள் போகப் போக, மனசில ஒரு ஓரத்தில சொல்லிடலாமான்னு தோணினாலும், இத்தனை நாளா ஏன் எங்ககிட்ட சொல்லல, எங்க மேல உனக்கு நம்பிக்கை இல்லையா? அப்படின்னு பெத்தவங்க மனசில ஒரு கேள்வி வந்து, அதனால அவங்க மனசை கஷ்டப்பபடுத்திடுவோமோ, அப்படின்னு ஒரு தயக்கம் நமக்குள்ள வந்து சொல்லவிடாம தடுத்திடும்.”

“அப்படிதான் அம்மு, இத்தனை நாளா, எனக்குள்ள ஒரு தயக்கம், பயம் இருந்துச்சு டா. நீ என்ன சொல்லுவ, திட்டுவியா, இல்லை என்னை விட்டுட்டு போய்டுவியோன்னு கூடச் சில சமயம் நினைச்சு ரொம்பவே பயந்திருக்கேன் அம்மு. உண்மைய சொல்லபோய் நான் உன்னை இழந்துடுவேனோன்னு, எனக்குள்ள ஒரு பயம் இருந்துச்சு. உன்னைக் கல்யாணம் செய்ய வச்சதும் உன்னோட தாய்பாசம் தான், உன்கிட்ட உண்மையைச் சொல்லவிடாம தடுத்தும் உன்னோட தாய்பாசம் தான் அம்மு.”

“ஆனா நேத்து நீ பாப்பாவை பத்தி பேசினது எனக்கு ரொம்பக் கஷ்டமா போயிடுச்சு அம்மு. உன் மனசு ஓரத்தில், இப்படி ஒரு எண்ணம் இருக்குன்னு நினைச்சு வருத்தப்பட்டேன். வயசாகிற வரைக்கும், பிள்ளைய இழந்துட்டேன்னு நீ தினம் தினம் நினைச்சு கஷ்டபடுவன்னு தான், இன்னைக்கு உன்கிட்ட எல்லா உண்மையும் சொல்லிடனும்ன்னு முடிவெடுத்தேன் அம்மு. காலையிலே உங்கிட்ட சொல்லி உன்னை டென்ஷன் பண்ண வேண்டாம்னு தான், ஈவ்னிங் சொல்லிடணும்னு முடிவு செஞ்சு இருந்தேன், ஆனா….” என்றவன் சில நொடி அமைதிக்கு பின்பு, அவள் முகத்தைப் பார்த்து, “உன்கிட்ட நான் சொல்லாம இருந்துடுவேனா அம்மு?? உன்னைக் கஷ்டபடுத்தனும்ன்னு நான் நினைப்பேனா டா?? “ என்று கேட்டவனின் குரலில், இத்தனை நாள் மனதுக்குள் இருந்த, மனவருத்தம் தெரிய, அவனைத் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்ட மிருதுளாவின் இதயத்தில், சற்று முன்பு வரை இருந்த, ஏமாற்றமும் கோபமும் முற்றிலும் மறைந்திருந்தது.

அவன் சொல்லச் சொல்ல அமைதியாகக் கேட்டு கொண்டிருந்தவளுக்கு, கொஞ்சம் கொஞ்சமாக அவனின் விளக்கங்கள் நியாமாகத் தெரிய, இறுதியில் கௌதமின் நிலைமையை அவளால் முழுவதுமாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அதே நேரம், திருமணமாகி இத்தனை நாள் கடந்தும், இந்த உண்மையைத் தன்னிடம் சொல்லவில்லையே, அது ஏன்?? என்ற உறுத்தல் கூட, கடைசியில் அவன் சொன்ன விளக்கத்தில் மறைந்து போனது.

இந்த நிறைவுடனே, “புரிஞ்சிகிட்டேங்க. உண்மையைச் சொல்லவும் முடியாம, மறைக்கவும் முடியாம, உங்க மனசுக்குள்ள எத்தனை நாள் கஷ்டபட்டு இருப்பீங்கன்னு, என்னால உணர முடியுது. உங்க நிலைமையில நான் இருந்தாகூட, இப்படித் தான் நடந்திருப்பேன். குழந்தைக்காகவாவது உண்மைய உடனே சொல்லி இருக்க மாட்டேன். அது நிஜம். ஏதேதோ பேசி, உங்களை மனசை நோகடிச்சிட்டேன். என்னை மன்னிச்சிடுங்க.” என்றாள் உளமார.

அவளின் மன்னிப்பில் சட்டென்று நிமிர்ந்தவன், “அம்மு ப்ளீஸ் டா. நீ என்கிட்டே மன்னிப்பு கேக்காத. கேக்கனும்னு எந்த அவசியமும் இல்லை. யாரா இருந்தாலும் சரி, இந்த மாதிரி தான் ரியாக்ட் செய்வாங்க. இதுல எந்தத் தப்பும் இல்லை. காலையிலேயே உன்கிட்ட சொல்லி இருக்கணும். தப்புச் செஞ்சுட்டேன். ஆனா, உனக்கு எப்படித் தெரிஞ்சுது அம்மு?? நிச்சயமா இந்தப் பைலை பார்த்து நீ தெரிஞ்சிரிக்க வாய்ப்பில்லை. வேற யாரோ தான் சொல்லி இருக்கணும். நிச்சயமா ஆராவா இருக்க முடியாது.” என்று கெளதம் கேட்டதும், சந்துரு வந்ததில் இருந்து நடந்த அனைத்தையும் மிருதுளா சொல்ல, கௌதமின் முகம் கோபத்தைக் காட்ட, அவன் கைமுஷ்டி இறுகியது. அதிலும் சந்துரு கடைசியாக, ‘உனக்காக நான் இருக்கேன்’ என்று சொன்ன வார்த்தைகள், இவனை ஆத்திரம் கொள்ளச் செய்தது. அவனைத் துவம்சம் செய்யும் வெறி இவனுள். ‘நாளைக்கு இருக்கு டா உனக்கு. வந்து கவனிச்சிக்கிறேன்!‘ என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டான்.

அதைவிட முக்கியமாக, தற்பொழுது மிருதுளா மனதில் இருக்கும் சின்ன உறுத்தலையும் இன்றொடு, இந்த நிமிஷத்தோடு போக்கிவிட வேண்டும் என்று நினைத்தவன், “நான் உன்கிட்ட சொல்லாதது, யாழினியை பத்தி, அவளோடான என்னோட கல்யாண வாழ்க்கை பத்தி. அதையும் உன்கிட்ட சொல்லிடறேன் அம்மு. இனி நம்மகுள்ள எதுவும் இருக்ககூடாது.” என்று இவன் சொல்ல, அதை மறுத்தவள், “இல்லைங்க, பாப்பா விஷயத்தைத் தவிர வேற எதையும் நீங்க என்கிட்டே சொல்லனும்னு எந்த அவசியமும் இல்லை. யாழினிக்கும் உங்களுக்குமான வாழ்க்கை, உங்க பெர்சனல். அது எனக்குத் தெரியனும்னு எந்த அவசியமும் இல்லை.” என்று அவள் பதில் சொல்ல, “இல்லை அம்மு. எனக்குள்ள இப்போ நீயும் ஒரு அங்கம். என்னோட சரிபாதி நீ. நமக்குள்ள எந்தப் பெர்சனலும் இல்லை. எல்லாமே நீ தெரிஞ்சிக்கோ.” என்றவன் அவள் மறுக்கும் முன், யாழினை முதன் முதலில் பார்த்த நாளை கூற ஆரம்பித்தான்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!