Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 29.2

அத்தியாயம் 29 (2)

சில வருடங்களுக்கு முன்பு.

கெளதம் தன் பொறியியல் படிப்பை முடித்துக் கிட்ட தட்ட மூன்று ஆண்டுகள் முடிந்திருந்தது. நிலையான வேலை இல்லாமல், இரண்டு கம்பனி மாறி இருந்தான். இந்தச் சூழ்நிலையில், சென்னையின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தில் வேலை செய்யும், நண்பன் ஒருவன் மூலம் அங்கே இண்டர்வியு நடக்கவிருப்பது தெரிய, தான் வேலை செய்யும் நிறுவனத்தில், உறவினரின் திருமண நிகழ்ச்சி என்று பொய் சொல்லி விடுப்பு எடுத்துக் கொண்டவன், காலையே எழுந்து தயாராகி, தந்தையிடம் சொல்லிக்கொண்டு இன்டர்வியுக்கு புறப்பட்டான். சேகர் வேளையில் இருந்து ஓய்வு பெற்று, வீட்டில் இருக்க, ஜெய், பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டுப் படித்துக் கொண்டிருந்தான்.

சிறிது நேரத்தில், நண்பன் சொன்ன கம்பனிக்கு வந்துசேர்ந்த கெளதம், பார்கிங்கில் பைக்கை நிறுத்திவிட்டு, மொபைலை எடுத்து தனது நண்பனுக்குப் போன் செய்தவன், எந்த ப்ளோர், இண்டர்வியு நேரம், போன்ற விவரத்தை கேட்டுக் கொண்டவன், பைக்கை ஸ்டான்ட் போட்டு நிறுத்திவிட்டு, ரெசியுமை எடுத்துக்கொண்டு லிப்டை நோக்கி சென்றான். சில நொடி காத்திருப்புக்குப் பின், லிப்ட் கீழே வர, உள்ளே சென்றவன், தான் செல்ல வேண்டிய ப்ளோர் பட்டனை அழுத்துவிட்டு நிற்க, லிப்ட் கதவு மூடபோகும் நேரம், திடீரென்று ஒரு கை, கதவுகளுக்கு இடையில் வர, ஒரு நொடி பயந்து போய் இவன் பார்க்க, அடுத்த நொடி, வேர்த்து கொட்டியபடி, மூச்சு வாங்க, ஒரு இளம் பெண் லிப்ட்டுக்குள் நுழைந்தாள்.



Advertisement

அவள் உள்ளே வந்ததும், கௌதமை பார்த்தவள், “பார்கிங்ல இருந்து கத்திட்டு வரேன். கொஞ்சம் லிப்டை ஸ்டாப் செஞ்சுருக்கக் கூடாதாங்க?” என்று ஒவ்வொரு வார்த்தைக்கும் மூச்சு வாங்க அவள் கேட்க, “சாரிங்க. நான் கவனிக்கல.” என்றான் சங்கடமாக. இவனை நிமிர்ந்து பார்த்தவள், முகத்தில் என்ன கண்டாளோ, “இட்ஸ் ஓகே.” என்று பதில் கூறிவிட்டு, கையை உயர்த்தி வாட்சை பார்த்தாள். நேரம் ஒன்பது மணி ஆகச் சில நிமிடங்கள் இருந்தது. அதில் இன்னுமே அவள் முகம் பதற்றத்தை பூசிக்கொண்டது.

“நேத்தே சொன்னேன். இன்னைக்குச் சீக்கிரம் போகணும்ன்னு. இந்தக் காயத்ரி கேட்கவே இல்லை. அவ பாய் பிரிண்டை பார்க்க போறேன்னு, கிளம்புற நேரம், அதைச் செய், இதைச் செய்ன்னு என் உயிரை வாங்கிட்டா. கடைசியில இப்போ எனக்கு இண்டர்வியுக்கு டைம் ஆச்சு. இன்னைக்கு இண்டர்வியு அட்டென்ட் செய்ய முடியாம போகட்டும், அவளை உண்டு இல்லைன்னு செஞ்சுடறேன்.” என்று சத்தமில்லாமல் முனங்கியவள் நொடிக்கு ஒருதரம், “ம்ப்ச்!! “ என்று எரிச்சலை காட்ட, இத்தனை நிமிடங்கள் அவளையே பார்த்துக் கொண்டிருந்த கெளதம், “என்னங்க?? என்ன ஆச்சு? ஏன் இவ்ளோ டென்சனா இருக்கீங்க??“ என்று கேட்க, தன் புலம்பல் வெளியே கேட்டுவிட்டதோ என்று நினைத்து, சட்டென்று கீழ்உதட்டை மடித்துக் கடித்தவள், தன்னைச் சரி செய்துகொண்டு, அவன் பக்கம் திரும்பி, “ஒன்னும் இல்லைங்க.” என்றுவிட்டு அமைதியாக நின்றுகொண்டாள். அதற்குள் அவளது மற்றொரு தோழி இவளை தொலைபேசியில் அழைத்தவள், இவள் போக வேண்டிய இடத்திற்குச் சென்று சேர்ந்து விட்டாளா? எத்தனை மணிக்கு இண்டர்வியு? போன்ற கேள்விகளைக் கேட்க, ஒவ்வொன்றுக்கும் இவள் பதில் கூற, அப்பொழுது தான் கௌதமிற்குத் தெரிந்தது, தான் செல்லும் கம்பெனிக்கு தான் இவளும் இண்டர்வியுக்கு செல்கிறாள் என்று. அத்தோடு அவள் ஒன்பது மணிக்கு இண்டர்வியு என்று தவறாக நினைத்து, அதனால் டென்ஷனாக இருக்கிறாள் என்ற கூடுதல் விவரமும் தெரிந்தது.

அவள் போன் பேசி வைத்ததும், கம்பனி பெயரை சொல்லி, “அங்க தான் நீங்களும் இண்டர்வியு போறீங்களா?” என்று கெளதம் கேட்க, அவளோ ‘ஆம்’ என்பது போலத் தலை அசைத்தாள். “அங்க தான், நானும் இண்டர்வியு அட்டென்ட் பண்ண போறேன். இண்டர்வியு ஒன்பது மணிக்கு இல்லைங்க. ஒன்பதரைக்குத் தான்.” என்று அவன் கூடுதல் விவரம் கூற, நம்ப முடியாமல் அவள் நிமிர்ந்து பார்க்க, “ப்ராமிஸ்ங்க, என்னோட பிரின்ட் அங்க தான் வொர்க் பண்றான். அவன் தான் சொன்னான்.” என்று அவள் கேட்காமலேயே விளக்கம் அளிக்க, நிம்மதி பெருமூச்சு விட்டவள், “தேங் காட். நான் ஒன்பது மணிக்குன்னு நினைச்சேன். அதான் லேட் அகிடுச்சுன்னு டென்ஷன். தேங்க்ஸ்.” என்று கூறி, மெலிதாகப் புன்னகை புரிய, அந்தப் பளீர் சிரிப்பில், வாழ்கையில் முதல் முறையாக அறிமுகம் இல்லாத ஒரு பெண்ணைப் பார்த்து வீழ்ந்தான் கெளதம்.

Advertisement

கஷ்டப்பட்டுத் தன் முகத்தைச் சரிபடுத்திக் கொண்டவன், அவளைப் பார்த்து உதடு பிரியாமல் புன்னகைக்க, அடுத்து அவள் லிப்ட் கதவை நோக்கி திரும்பி நின்றவள், மொபைலில் எதையோ டைப் செய்ய ஆரம்பித்தாள்.

Advertisement

அவள் அந்தப் பக்கம் திரும்பியதும், கௌதமின் கண்கள், அவள் முகத்தை ஆராய்ந்தது. தூக்கிய புருவம், அதற்குக் கீழே, மெல்லிய மைதீட்டிய நீள கண்கள், கூர்மையான நாசி, மெலிதான கோடு போன்ற நீளமான உதடுகள், ஓவல் வடிவ முகம், எனப் பார்க்க நடுத்தரப் பீரியட் நாயகியை போன்ற முக அமைப்புடன் அழகாக இருந்தாள். காதோர முடி தூக்கி கிளிப் போடபட்டிருக்க, அதற்குக் கீழே, இடுப்பை தாண்டி நீளும் ஜடைபின்னல்.

மொபைலில் டைப் செய்துகொண்டே அங்கும் இங்கும் அலைபாயும் அவள் கண்கள், கௌதமை காந்தம் போல இழுக்க, அதில் தடுமாறியவன், தலையை உலுக்கிக்கொண்டு ‘ஊஊஃப்ப்’ என்று பெருமூச்சை வெளியிட, அந்த நேரம் தற்செயலாக, நிமிர்ந்த அந்தப் பெண், எதிரில் இருந்த கண்ணாடியால் ஆன, கதவில், கௌதமின் செயலை பார்த்து, கேள்வியாக அவன் பக்கம் திரும்பியவள், “என்ன ஆச்சு??” என்று கேட்க, “ஒ….ஒன்னும் இல்லை.” என்று தந்தி அடித்தது இவனது நாக்கு.

அதற்குள் லிப்ட் கதவு திறக்கப்பட, இவனைப் பார்த்துக்கொண்டே வெளியேறினாள் அவள். ஆனால் கெளதமோ, சில நொடிகள் லிப்டுக்குள் நின்று தன்னைச் சரி படுத்திக் கொண்டவன், அதன் பின்பே லிப்டை விட்டு வெளியே வந்தான். ‘டேய்! இங்க இண்டர்வியுக்கு வந்திருக்க, பொண்ணு பார்க்க இல்லை. ஒழுங்கா இண்டர்வியு அட்டென்ட் பண்ணி, வேலையை வாங்குற வழியைப் பாரு.’ என்று தனக்குள் சொல்லிக் கொண்டவன், ரிஷப்ஷன் ஏரியா சென்று காலி இருக்கை பார்த்து அமர்ந்து கொண்டான். அதற்குள் அந்தப் பெண்ணும், வெளியே செக்கிங் ஏரியாவில் தனது பேக்கை கொடுத்துவிட்டு உள்ளே வர, பெண்கள் வரிசையில் ஒரு இருக்கையைத் தவிர மற்றவை நிரம்பி இருக்க, வேறு வழியில்லாமல், இவனுக்கு முன் பெண்களாக அமர்ந்திருந்த இருந்த வரிசையில், இவனுக்கு நேர்முன் இருந்த இருக்கையில் வந்து அமர்ந்தாள்.

Advertisement

அவள் அமர்ந்ததும், ஆட்டோமேட்டிக்காக அவன் மனம், ‘சோதனை மேல் சோதனை, போதுமடா சாமி.’ என்ற பாடலை பாட, அதன் வெளிப்பாடாக, இந்த முறை, கொஞ்சம் அதிகமாகவே இவன் பெருமூச்சு விட, இவன் சுவாசம் அவள் பின்னங்கழுத்தை உரச, சட்டென்று திரும்பி இவனைப் பார்த்தாள் அவள். எதிர்பாராத அந்தப் பார்வையில், “அது, அது காத்து வரல. அதான்…” என்று சமாளித்தவன், உடனே தன் கையில் இருந்த பைலை எடுத்து, விசிறி போல வீச, அவளோ, அவன் தலைக்கு மேலே நிமிர்ந்து பார்த்தாள். ‘என்னத்தைப் பார்க்குறா?!’ என்று நினைத்த கெளதம், தானும் மேலே பார்க்க, இவனுக்கு நேர் மேலே, ஏ.சி வேலை செய்து கொண்டிருந்தது. இப்பொழுது, அவளின் பார்வைக்கான அர்த்தம் புரிய, நெளிந்து கொண்டே குனிந்து அவளைப் பார்க்க, அவள் தன்னை ‘லூஸா இவன்‘ என்பது போலப் பார்த்துக்கொண்டிருப்பது தெரிய, “அது….அது ரிப்பேர் போலங்க. எனக்குக் காத்து வரல.” என்று வாய்க்கு வந்ததை உளற, அவளோ, ஒற்றைப் புருவத்தை ஏற்றி, சந்தேகமாக இவனைப் பார்க்க, கௌதமுக்குப் பக்கத்தில் இருந்த இளைஞனோ, “ரிபேர்லாம் இல்லை பாஸ். எனக்குக் காத்து வருதே.“ என்று சொல்ல, பதில் சொன்னவனின் பக்கம் திரும்பாமல், அந்தப் பெண்ணின் முகத்தையே பார்த்துக்கொண்டிருந்த கெளதமோ, “நேரா கீழ இருக்கேன்ல அதான் எனக்குக் காத்து வரல.” என்று மீண்டும் உளற, அதில் பக்கென்று சிரித்த அந்தப் பெண், சிரிப்பை அடக்கமுடியாமல், அந்தப் பக்கம் திரும்பிகொண்டாள்.

அவள் திரும்பியதும், ‘தப்பிச்சேன்டா!!’ என்று மனதுக்குள் நினைத்த கெளதம், சற்று முன்பு ‘காற்று வருதே’ என்று பதில் சொன்ன இளைஞன் பக்கம் திரும்பி, அவன் காதருகே குனிந்து, “பாஸ், ஒரு அட்வைஸ். இண்டர்வியு ரூம்ல, ஹெச்.ஆர் கேட்கிற கேள்விக்கு மட்டும் பதில் சொல்லுங்க. கேட்காத கேள்விக்குப் பதில் சொல்லி வாங்கிக் கட்டிக்காதீங்க. அப்புறம், என்னை மாதிரி யாரும் பொறுமையா இருக்க மாட்டாங்க.” என்று மெல்லிய குரலில் மிரட்டல் தொனியில் சொல்ல, இவன் பேசியது முன்னால் அமர்ந்திருந்த அந்தப் பெண்ணின் காதில் விழுந்ததோ என்னவோ, வாய் பொத்தி சிரிப்பது தெரிந்தது. கெளதம் சொன்னதின் உள் அர்த்தத்தை, சில நொடிகள் கழித்தே புரிந்துக்கொண்ட, பக்கத்து இருக்கை இளைஞன், கப்சிப் என்று வாயை மூடிக்கொண்டு எழுந்து, சற்று தள்ளி இருத்த இருக்கையில் போய் அமர்ந்துகொண்டான்.

அடுத்தச் சில நிமிடங்களில், இண்டர்வியு ஆரம்பிக்க, ஆப்ட்டிடுயுட், கணிப்பொறி திறன், சப்ஜெக்ட் ஸ்கில், என்று அடுத்தடுத்துச் சுற்றுகள் நடக்க, ஒவ்வொரு சுற்று முடியும் பொழுதும், அங்கிருந்தவர்களின் எண்ணிக்கை கொஞ்சம் கொஞ்சம் குறைய ஆரம்பித்தது.

இதற்கிடையில் மதிய உணவு இடைவெளி விடப்பட, உணவு அருந்தும் இடத்திற்குச் சென்ற கெளதம், உணவை வாங்கிகொண்டு, உட்கார இடம் தேட, இவனைப் பார்த்துவிட்ட அந்தப் பெண், தன் லஞ்சபாக்ஸில் இருந்த, கடைசிபிடி உணவை மொத்தமாக வாய்க்குள் போட்டுவிட்டு, இவனை அழைத்துத் தன் இருக்கையை அவனுக்குக் கொடுக்க, “தேங்க்ஸ்ங்க.” என்றான் கெளதம். பதிலுக்கு, புன்னகைத்தவள், அங்கிருந்து நகர்ந்தாள்.

மதியத்துக்கு மேல், இறுதி சுற்று நடந்து முடிய, செலக்ட் ஆகாதவர்கள் பெயர்கள் சொல்லப்பட்டு, அவர்கள் வெளியே அனுப்பப்பட்டனர். நல்லவேளையாகக் கெளதம் தேர்வாகி இருந்தான். அதே நேரம் அவளும் தேர்வாகி இருந்தாள். அடுத்து, தேர்வு செய்யப்பட்டவர்கள் ஒவ்வொருவராக அழைக்கப்பட்டு, சாலரி பேக், ஷிபிட் டைமிங், கேப் வசதிகள் போன்றவை விளக்கப்பட்டு, செலெக்ஷன் ஆர்டர் கொடுக்கபட்டது. ‘காலையில இருந்து பார்க்கிறோம், அந்தப் பொண்ணோட பேரு தெரியலையே.’ என்று கெளதம் மனதுக்குள் நினைத்துக் கொண்டிருக்கும் போதே, “யாழினி!” என்று யாரோ அழைக்கவும், அந்தப் பெண் எழுந்து அறைக்குள் சென்றாள். அதில் மனதுக்குள் குதூகலம் அடைந்த கெளதம், “யாழினி. நைஸ் நேம். அவளை மாதிரியே, எவ்ளோ அழகான பேரு.” என்று மனதுக்குள் குறித்துக்கொண்டான்.

கௌதமிற்கு ஏற்கனவே மூன்று வருட வேலை அனுபவம் இருப்பதால், அவன் சீனியர் ட்ரைணீயாகத் தேர்வு செய்யப்பட்டிருந்தான். யாழினி ஜூனியர் ட்ரைணீயாகத் தேர்வு செய்யபட்டிருந்தாள்.

இண்டர்வியு முடிந்து, பார்க்கிங் ஏரியா சென்று தனது பைக்கை எடுக்கும்பொழுது, யாழினி வெளியே வருவதைப் பார்த்த கெளதம், புறப்படாமல் அவள் வெளியே செல்லும்வரை காத்திருந்தவன், அவள் சென்றதும், அவளுக்குத் தெரியாமல் பின் தொடர்ந்தான். வெளியே பஸ் நிறுத்தத்திற்கு அவள் செல்ல, இவன் சற்று தள்ளி நின்றுகொண்டான். அவள் பஸ் ஏறி கிளம்பும் வரை காத்திருந்து பார்த்தவன், பின் தனது பைக்கை கிளப்பிக்கொண்டு வீடு போய்ச் சேர்ந்தான்.

இரவு உணவை முடித்துக்கொண்டு கட்டிலில் விளுந்த கௌதமின், கண் முன், யாழினியின் அந்த அழகிய சிரித்த முகம் தெரிய, அவள் நினைவுடனே உறங்கிபோனான். இங்கே யாழினியோ, ஹாஸ்டல் அறையில், தோழிகளுடன் அரட்டை அடித்துவிட்டு உறங்க போனவளின், மனதுக்குள் அசடு வழிந்த கௌதமின் முகம் நினைவுக்கு வர, புன்னகையுடனே கண்ணுறங்கினாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!