கருவறை சொந்தம் – 3
அத்தியாயம் 3
ஞாயிற்றுகிழமை, ரகு தங்கள் பிளாட்டில் எக்ஸ்ட்ராவாக இருந்த கேஸ் சிலிண்டர் மற்றும் பழைய டி.வியை எடுத்துக்கொண்டவன், கடையில் கேஸ் ஸ்டவ் வாங்கிக்கொண்டு தன் தங்கைகளின் அபார்ட்மெண்டிற்குக் கொண்டுவந்து செட் செய்து கொடுத்தவன், அப்படியே DTHக்கு போன் செய்து ஆளை வரவைத்து கேபிள் கனக்க்ஷனையும் ஏற்பாடு செய்து பொருத்தவைத்தான். அடுத்து சில மணி நேரங்கள் மூவரும் தொலைக்காட்சி பார்த்துவிட்டு, தங்களுக்குள் உரையாடிக்கொண்டு அரட்டை அடித்துக்கொண்டும் பொழுதை கழித்தனர்.
இங்கே கௌதமின் வீட்டில் மூவரும் எங்கோ வெளியே கிளம்பினர். கௌதமும், சேகரும் முன்னாடி கீழே இறங்கி சென்றுவிட, அதன்பிறகு வீட்டை பூட்டிக்கொண்டு வெளியே வந்த ஜெய்யின் கண்களில் எதிர் வீட்டில் ஹால் தரையில் அமர்ந்திருந்த ஆரா, பக்கத்தில் இருந்த ரகுவின் தோளில் அடித்துவிட்டு கைகளை ஆட்டி சிணுங்கியபடி விளையாடிக் கொண்டிருந்தது தெரிந்தது.
Advertisement
ஏனோ அந்தக் கட்சியைப் பார்த்தவனுக்கு, ‘யார்டா இவன்?!’ என்று கேள்வி மனதுக்குள் எழுந்தது. அதுவும் ஆரா அவனைத் தொட்டு தொட்டு விளையாடுவது இவனுக்குள் சிறு எரிச்சலை ஏற்படுத்தியது. ‘ஒருவேளை ஹஸ்பண்டா இருப்பானோ?!’ என்று யோசித்தவனுக்கு, நேற்று தன் தந்தை அவளுடைய பெயரை சொன்னது நினைவுக்கு வந்தது. “ஆராதனா” என்று சொல்லிப் பார்த்தவன், “பேரை கேட்டா ஹிந்து மாதிரி தான் தெரியுது. நேத்து கூடப் பார்த்தேனே, நெத்தில கும்குமம், திருநீர் எல்லாம் வச்சிருந்தாளே.” என்று தனக்குள் பேசியவன், ஆராவாய் ஊன்றி பார்க்க திருமணம் ஆனதுக்குண்டான எந்த அறிகுறியும் அவனுக்குத் தெரியவில்லை. “அப்போ லவ்வரா இருப்பானோ?!” என்று யோசித்தவனுக்கு, ஏனோ அந்த நினைவே கசந்தது. ரகுவை கவனித்தவனுக்குள், “நம்மள விடக் கொஞ்சம் கலரா, அழகா தான் இருக்கான்.” என்ற எண்ணம் தோன்ற, அடுத்த நொடி தலையைக் குலுக்கி, “நாம எதுக்கு இதெல்லாம் யோசிச்சிட்டு இருக்கோம்.” என்று தன் எண்ண ஓட்டத்தை அப்போதைக்கு நிறுத்துக் கொண்டவன், படிகளில் இறங்கி சென்றான். ஆனால் அவன் கண்கள் ஆராவின் உருவம் மறையும் வரை அவளைத் தான் பார்த்துக்கொண்டே சென்றது.
இங்கே ஆரா, நித்யா, ரகு மூவரும் சிறு வயதில் அவர்கள் செய்த சேட்டைகளைப் பற்றிப் பேசிக் கொண்டிருக்க, ரகு, “ஆரு, உனக்கு நியாபகம் இருக்கா, சின்ன வயசுல ஒரு தடவை பெயில் ஆகிட்டன்னு ரேங் கார்டை ஒளிச்சு வைக்க எங்க வீட்டுக்கு வந்து, பெட்டுக்கு அடில வைக்கப் போய், அப்போ பார்த்து ஒரு கரப்பான் பூச்சி உன்மேல ஏறிச்சு. அதுக்கு ஒரு அலறல் போட்டியே, இப்போ கூட என் காது ‘ஓய்ங்’ன்னு இருக்கு.” என்று காதை பிடித்துக்கொண்டு வலிப்பது போலச் சைகை செய்ய, “அண்ணா வேண்டாம். இத்தோட நிறுத்திக்கோ. இல்லை அவ்வளவுதான்.” என்று ஆரா அவனை மிரட்ட, அவனோ அவளின் பேச்சை சட்டை செய்யாமல், “அது மட்டுமா, கைய கால உதறிக்கிட்டு, ஜம்ப் செஞ்சுகிட்டே அம்மான்னு அழுதுகிட்டே வெளியே ஓடுனியே, அது இன்னும் என் கண் முன்னாடி தெரியுது.” என்று சொல்லிவிட்டு நித்யாவிற்கு ‘ஹை-பை‘ கொடுத்துக்கொண்டு விழுந்து விழுந்து சிரிக்க, ஆராவோ அவனை நன்றாக மொத்தி எடுத்துவிட்டாள். கூடவே நித்யாவையும்.
சில ஆண்டுகள் முன்பு வரை, ஆராவின் குடும்பமும் நித்யாவின் குடும்பமும், பக்கத்து பக்கத்து வீடுகளில் வசித்து வந்தது. ஆராவின் வீடு அவர்களுடைய சொந்த வீடு. ஆனால் நித்யாவின் குடும்பம் வாடைக்கு வசித்து வந்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு தான், நித்யாவின் தந்தை லோன் போட்டு சற்று தள்ளி இருந்து வேறொரு பகுதியில் சொந்த வீடு கட்டி சென்றிருந்தார். அவர்கள் கல்லூரி சேரும் வரை இரு வீட்டு பிள்ளைகளும் அவ்வளவு நெருக்கமான தோழமையுடன் கலகலப்புடன் இருந்தனர். ஆராவின் அக்கா மிருதுளா, ரகுவை விட ஒன்றிரண்டு வயது இளையவள். மிருதுளா உட்பட மூவருமே அவனுக்குக் கூடபிறந்த தங்கைகள் தான்.
Advertisement
ஆராவின் தந்தை மோகன், பேங்கில் மேனேஜராக வேலைப் பார்த்து வருகிறார். அவளின் அன்னை ஆசிரியராக இருந்து பின்பு தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டார். ஆராவின் பாட்டி பார்வதி, மோகனின் தாய். தன் கணவர் உயிருடன் இருக்கும்வரை கிராமத்தில் இருந்தவர், அதன்பின் மகனுடன் சென்னையில் வந்து தங்கிக்கொண்டார். பார்வதி சித்ராவை தன் சொந்த மகளாகவே நடத்துகிறார். இதுவரையிலும் அவர்களுக்குள் எந்தச் சண்டை சச்சரவும் வந்தது இல்லை.
Advertisement
விளையாட்டுக்கு சில சமயம் ஆரா பார்வதியிடம், “ஊருல எல்லார் வீட்டுலயும் மாமியார் மருமகனா சண்டை போட்டுகிறாங்க. நம்ம வீட்டில என்னடானா, அப்படி ஒரு சின்னப் பொறிகூடக் கிளம்ப மாட்டேங்குதே!” என்று கூறும்பொழுது, “கண்ணு, தன்னோட பொண்ணு இன்னொரு வீட்டுக்குப் போகும்போது, அங்க சந்தோஷமா இருக்கணுமே, நல்ல மாமியார், நாத்தனார் அமையணுமேன்னு ஒவ்வொரு அம்மாவும் ஆசைப்படும்போது, நம்ம வீட்டுக்கு வர்ற பொண்ணை நாம சந்தோஷமா வச்சுக்க வேண்டாமா?! மருமகள்னுதான் சொல்றோம் கண்ணு. அதுலயே இன்னொரு பொண்ணுன்னு தான் அர்த்தம் இருக்கு. மாமியார் மருமக உறவு தான் ஒரு வீட்டோட நிம்மதியே. மகன் மேல அம்மாக்கு ஏற்படுற உரிமையும், கணவன் மேல பொண்டாட்டிக்கு இருக்கிற பந்தமும் சரிசமமா இருக்கனும். இந்த ரெண்டு உரிமையும் மோதிக்கும்போது தான் அங்க சண்டையே வருது.”
“நாம எப்படிக் கல்யாணம் செய்துகிட்டு வரும்போது, என் வீட்டுக்காரர் கிட்ட எனக்குத் தான் முதல் உரிமை இருக்குன்னு நினைக்கிறோமோ, அதே மாதிரி தான் நமக்கு வர்ற மருமகளும் நினைப்பா. புள்ளைங்களுக்குன்னு தனி வாழ்க்கை அமைஞ்சிட்டா, பெத்தவக் கொஞ்சம் விட்டுக்கொடுத்து போய்டணும். அதே மாதிரி வீட்டுக்கு வர்ற பொண்ணும், மாமியாரை தன்னோட அம்மாவா நினைக்கணும். தன்னோட அம்மாவை தன் அண்ணன் பொண்டாட்டி கொடுமை படுத்துனா எப்படித் தாங்க முடியாதோ அதே மாதிரி தான் மாமியாரையும் நினைக்கணும். அதை விட்டுட்டு மாமியாரை எதிரியா பாக்குறது தப்பு கண்ணு. ரெண்டு பேரும் அந்ததந்த இடத்தில விட்டுக்கொடுத்து போய்டணும்.” என்று நீண்ட விளக்கம் கொடுக்கும்போது, கைதட்டி தன் பாட்டியை கட்டியணைத்துக்கொள்வாள் ஆரா. அப்படி ஒரு வாழ்க்கைதான் அவர்கள் குடும்பத்திலும்.
சிரித்துப் பேசி ஒருவரை ஒருவர் கிண்டல் அடித்து, தங்கள் பொழுதை கழித்த மூவரும் மதியத்துக்குப் பிரியாணி ஆர்டர் செய்து சாப்பிட்டனர். அதன் பின் ஒருமணி நேரம் கழித்து மூவரும் வீட்டுக்குத் தேவையான பொருட்கள் வாங்க வெளியே சென்றனர். இரு தந்தைமார்களும் பெண்களுக்குத் தேவையானவற்றை வாங்கிக்கொள்ளப் பணம் கொடுத்து இருந்தனர்.
Advertisement
முதலில் வீட்டு உபயோக பொருட்கள் விற்கும் கடைக்குச் சென்று, இரண்டு சிங்கிள் பெட் கட்டில் மற்றும் மெத்தை வாங்கிக் கொண்டவர்கள், இருவரும் வேலைக்குச் செல்வதால், உணவு பொருட்களைக் கெட்டுப் போகாமல் வைப்பதற்காகக் குறைந்த விலையில் பிரிட்ஜ் ஒன்றும், இரண்டு பேர் அமரக்கூடிய சின்ன டைனிங் டேபிள் ஒன்றும் வாங்கிக் கொண்டனர். அவற்றை லாரியில் ஏற்றி அனுப்பிவிட்டு, சமையல் பாத்திரங்கள், இருவருக்கும் தேவையான ஆடைகள் உட்பட மற்ற பொருட்கள் எல்லாம் வாங்கிகொண்டு, மூவரும் வீடு வந்து சேர மாலை ஆகிவிட்டது. அவர்கள் வந்த ஒரு மணிநேரத்தில் ஆர்டர் கொடுத்திருந்த வீட்டு சாமான்களும் வந்து சேர, இரு படுக்கை அறைகளிலும் ஒவ்வொரு கட்டிலை செட் செய்தனர். பிறகு மற்ற சாமான்களை அந்தந்த இடத்தில் வைத்து முடிக்க மேலும் அரை மணிநேரம் ஆனது.
எல்லா வேலைகளும் முடிந்ததும் ரகு தன் பிளாட்டிற்குப் புறப்பட்டுச் சென்றான். அவன் சென்றதும் குளிக்கவென்று நித்யா சென்றுவிட, ஆரா துடைப்பத்தால் ஹாலை பெருக்கிக் கொண்டிருந்தாள். அப்பொழுது தான் அந்தக் கட்சியைக் கண்டாள். எதிர் வீட்டு ஹாலில், கெளதம் ஒரு குழந்தையை, நடைபழகும் வாக்கரில் உட்கார வைத்துக்கொண்டு அங்கும் இங்கும் தள்ளிக் கொண்டிருந்தான். அந்தக் காட்சியைப் பார்த்தவளின் இதயம் வேகமாகத் துடிக்க ஆரம்பிக்க, கையில் இருந்த பொருள் தானாக நழுவி கீழே விழுந்தது. அதுகூடத் தெரியாமல், மெல்ல நடந்து வாசல் அருகில் சென்றவள், கிரில் கம்பியை பிடித்துக்கொண்டு கெளதம் கையில் இருந்த அக்குழந்தையையே கண்கள் சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஏனோ அவளுக்குள் உடம்பெல்லாம் ஒரு பரவசம் பரவுவது போல இருந்தது. உடனே சென்று அக்குழந்தையைக் கைகளில் வாங்கிக் கொஞ்ச வேண்டும் போலக் கைகள் பரபரத்தது. நொடிகள் செல்ல செல்ல இவள் கண்களில் கண்ணீர் தேங்கி பார்வையை மங்களாக்க, சட்டென்று கைகளால் துடைத்துக் கொண்டாள். அந்த ஒரு நொடி கூட அக்கட்சியை அவள் இழக்க விரும்பவில்லை.
மிகப் பெரிய பாலைவனத்தில் தண்ணீருக்காகப் பல மைல் தூரம் கால்கடுக்க அலைந்தவனுக்குத் தூரத்தில் தண்ணீர் குட்டை தெரிந்தால், எவ்வளவு நிம்மதியும் பரவசமும் அடைவானோ அந்த ஒரு நிலையில் இருந்தாள் ஆரா.
பார்வையாலே குழந்தையை வருடியவள், எத்தனை மாதம் இருக்கும் என்று கணக்குப் போட்டாள். கிட்டத்தட்ட ஆறு அல்லது ஏழு மாதம் இருக்கும் என்று கணித்தவளுக்குக் குழந்தையின் அழகு, மயங்க செய்தது. கோலிகுண்டை போல வெறும் கருவிழிகள் தெரியும் கண்கள், பன் போன்ற குண்டு கன்னங்கள், அதற்குக் கீழே குட்டி செப்பு உதடுகள் என்று அந்தக் கண்ணனையே மிஞ்சி விடும் அழகுடன் இருந்தது. ரசித்து ரசித்துப் பார்த்தவள், முகம் யார் ஜாடையில் இருக்கிறது என்று ஆராய்ந்தாள். ஆனால் கணிக்க முடியவில்லை.
அப்படியே சிலை போல் நின்றுகொண்டு, குழந்தையைப் பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, பழைய நியாபங்கள் கண்முன் காட்சிகளாக ஓட, அந்த வேதனையில் கண்களை அழுத்தமூடி தன்னை ஆஸ்வாச படித்துக்கொள்ள முயற்சித்தாள். ஆனால் முடியவில்லை. தான் நினைத்தது நிறைவேறும் வரை அவளுக்கு ஏது நிம்மதி?!
எந்த நம்பிக்கையில் இங்கு வந்திருக்கிறாள் என்றாள் பதில் அவளுக்கே தெரியாது! அடுத்து என்ன செய்யவேண்டும் என்றால் தெரியாது! தான் நினைத்திருப்பது நிறைவேறுமா என்றால் தெரியாது! ஆனால் என்று அவளுக்கு முதல் உண்மை தெரிய வந்ததோ, அன்று களத்தில் குதித்தவள் தான், போகப் போக அவளுக்கு மேலும் மேலும் அதிர்ச்சிகள் காத்திருந்தது. அனைத்து முடிச்சுகளும் வந்து நின்ற இடம் கெளதம். அதன் பிறகு ஒரு நொடி கூட அவள் தாமதிக்க வில்லை. எதாவது செய்யவேண்டும் என்று கைகளைப் பிசைந்தவளுக்குத் தானாக அமைந்த சந்தர்பம் தான் இந்த வேலை. ஆனால் தனக்குத் தெரிந்த உண்மையை விடப் பெரிய தங்கமலை ரகசியம் ஒன்று இருக்கிறது என்று அவளுக்குத் தெரியாது.
இந்தப் பெங்களுர் வேலை கிடைத்ததும், மேற்கொண்டு ஒருநொடி கூட அவள் யோசிக்கவில்லை. தூரம், மொழி, தெரியாத ஊர் என்று எதையும் அவள் சிந்திக்கவில்லை. உடனே ஒத்துக்கொண்டாள். ரகு இங்கிருப்பதும் அவளுக்குச் சாதகமாக இருக்க, நித்யாவையும் இழுத்துக் கொண்டு வந்துவிட்டாள். இந்தத் தூரம் மட்டும் இல்லை, இதைவிடக் கடல் கடந்து போக வேண்டும் என்றால் கூடச் சென்றிருப்பாள். ஏனெனில் அவளுக்கு வேண்டியது நிறைவேற வேண்டும்.
வாசலில் நின்று யாரையோ வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்த தோழியை அப்பொழுது தான் குளித்துவிட்டு வந்த நித்யா பார்க்க, ‘யாரை அப்படிப் பாக்குறா’ என்று நினைத்தவள் சத்தம் போடாமல் அவள் அருகில் வர, ஆராவின் பார்வை போன திசையைப் பார்த்தவளுக்கு, எதிர் வீட்டில் கெளதம் கையில் இருந்த அக்குழந்தை கண்ணில் பட, தோழியின் உணர்வுகளைப் புரிந்துக்கொண்டவள் ஆறுதலாக அவள் தோளில் கைவைக்க, பட்டென்று திரும்பிய ஆரா, அங்கே தோழியைப் பார்த்ததும் குனிந்தபடியே தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள்.
அவளின் உணர்வுகளைப் புரிந்துகொண்ட நித்யாவிற்கு, அவளின் இந்தச் செயல் கண்ணில் படாமல் போகுமா. ஆராவை நெருங்கி சென்று அவளை அணைத்துக்கொள்ள, உடைபெடுத்த அணையாகக் கதறி அழுதவள், தன் துக்கம் எல்லாவற்றையும் தன் கண்ணீரில் கரைத்துக் கொண்டிருந்தாள். தோழி அழுதவுடன், கதவை அடைத்து சாத்திய நித்யா, அணைத்தபடியே அவளை அறைக்கு அழைத்துச் சென்றவள், கட்டிலில் அமரவைத்தாள்.
நித்யாவுக்கு அவர்கள் குடும்பத்தில் நடக்கும் அனைத்தும் தெரியும். ஆதலால் தன் தோழி எதற்காக அழுகிறாள் என்று புரிந்து கொண்டவளுக்கு, அவளுடைய இப்போதைய அழுகைக்கான காரணம் தெரிய வாய்ப்பில்லை. ஏனெனில் ஆரா இப்பொழுது நடந்து முடிந்தவற்றை நினைத்து அழவில்லை. இனி நடக்கப் போவதை நினைத்து அழுகிறாள்.
தன் எண்ணம் நிறைவேறுமா? நடக்காமல் போய்விட்டால் என்ன செய்வது? என்ற குழப்பம், பயம் எல்லாவற்றோடு, யாரை இத்தனை நாள் பார்க்கவேண்டும் என்று துடித்துக் கொண்டிருந்தாளோ அந்த நபரையும் பார்த்துவிட்ட ஆனந்தம் எல்லாம் சேர்ந்து கண்ணீராக உற்பத்தியாகிக் கொண்டிருந்தது.
சில நிமிடங்களில் தன் அழுகையைக் கட்டுபடுத்திக் கொண்ட ஆரா, தன்னைச் சமன் செய்துகொண்டு தோழியைப் பார்த்துச் சின்னதாகப் புன்னைகைக்க, அதில் தெரிந்த வெறுமையைப் பார்த்த நித்யா, தோழியைச் சமாதனம் செய்யும் பொருட்டு, “கவலைபடாத ஆரு. இனி எல்லாமே நல்லதே நடக்கும்.” என்று கூறினாள். பதிலுக்குப் புன்னகைத்த ஆரா, “அதைத் தான் நானும் எதிர்பார்கிறேன் டி.” என்றாள் மனதில் உள்ளதை.
அதன்பின் ஆரா தனது வேலைகளைச் செய்தாலும், கண்கள் அவ்வபோது எதிர் வீட்டை தான் பார்த்துக் கொண்டிருந்தது. ஏதாவது சந்தர்பம் கிடைக்காதா, குழந்தையை அருகில் சென்று பார்க்க என்று ஏங்கினாள். ஆனால் குடிவந்து இரண்டு நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் குழந்தையைக் கொடுக்கும் அளவுக்கு எப்படி வருவார்கள் என்ற சந்தேகம் வந்தது. போகப் போகப் பழகிட வேண்டியது தான் என்று தன்னைத் தானே சமாதனம் செய்துகொண்டாள்.
அடுத்த நாள் காலை, அலாரத்தின் சத்தத்தில் கண்விழித்த ஆரா, எழுந்து சென்று காலை கடன்களை முடித்துவிட்டு வரவும் வீட்டின் காலிங் பெல் அடிக்கும் சத்தமும் கேட்டது. வாசல் கதவை திறக்க, அங்கே வீட்டு வேலை செய்யும் பொன்னம்மா நின்றிருந்தார்.
அதன் பின் நேரம் வேகமாகச் செல்ல, தோழிகள் இருவரும் தயாராகி வரவும், பொன்னம்மா அனைத்து வேலைகளையும் முடித்து, இருவருக்கும் சாப்பாட்டை டேபிளில் எடுத்து வைத்திருந்தார். தோழிகள் இருவருக்கும் உணவின் சுவை மிகவும் பிடித்திருந்தது. தங்களது பாராட்டை அவருக்குத் தெரிவித்தனர். அவரோ வாஞ்சையுடன், “என் கை ருசி நல்லா இருந்தாதான மா, சாப்பிடுறவங்க வயறு நிறையும்.” என்று கூற தோழிகள் “தெய்வமே!!! நீங்க எங்கையோ போயிட்டீங்க!” என்று தங்கள் மகிழ்ச்சியை வெளிபடுத்தினர்.
மதியத்துக்குத் தேவையான உணவை டிபன் பாக்ஸில் எடுத்துக்கொண்டு ஆட்டோவை பிடித்து ஒருவழியாகச் சரியான நேரத்துக்கு அலுவலகம் வந்து சேர்ந்தனர். இவர்கள் இருவரையும் சேர்த்து மொத்தம் பதிமூணு பேர் புதிதாக வேலைக்குத் தேர்ந்தெடுக்கப் பட்டிருந்தனர். அனைவரும் வந்ததும் அவர்களுக்கு இன்றோ செஷன் கொடுக்கப்பட, அதன்பின் அனைவரையும் டீம் பிரித்தனர்.
அப்பொழுது டீம் லீட் நான்கு பேர் அந்த அறைக்குள் நுழைய, கடைசியாய் நுழைந்தவனைப் பார்த்த ஆரா, “இவனா?!” என்று ஆதிர்ச்சியாக, நித்யாவும் அவள் காதில், “ஆரு, நீ சொன்னியே அந்தப் பைக் பார்டி, அவன் வராண்டி.” என்று கூறினாள். ஆம்! ஜெய் அங்கே தான் டீம் லீடாக வேலை பார்க்கிறான். வந்து கொண்டிருந்த ஜெய் அராவை கவனிக்கவில்லை. ஏனெனில் அவள் இரண்டு மூன்று வரிசை தள்ளி சுவர் ஓரம் அமர்ந்திருந்தாள். அனைவரும் வந்ததும், ப்ராஜெக்ட் மேனேஜர் யார் யார் எந்த டீம் என்று சொன்னார். அதன்படி ஆராவும், நித்யாவும் ஜெய்யின் டீமில் வந்து சேர்ந்தனர். கூடுதலாகச் சுரேஷும் ஜெய்யின் டீமில் சேர்க்கப்பட்டான்.
ஒவ்வொருவரின் பெயர் சொல்லும்போது தான், ஜெய் ஆராவை பார்த்தான். பார்த்தவனோ இன்ப (??) அதிர்ச்சியில் ‘அட நம்நாடு!’ என்று மனதுக்குள் நினைக்க, அவனின் முகபாவனையில் ஆராவிற்கு எதையும் கண்டுபிடிக்க முடியவில்லை. “ஏற்கனவே நம்மைப் பார்த்தா அவனுக்குப் பிடிக்காது (??), இதுல அவன் டீம்ல வேறையா?” என்று மெல்ல முணுமுணுத்த அவளின் உதடுகளைத் தான் ஜெய் பார்த்துக் கொண்டிருந்தான். ‘என்ன சொல்றா?! ஒருவேளை நம்மளை எதுவும் திட்டுறாளோ?! இருக்கும்…. இருக்கும்!’ என்று இவன் கண்களாலேயே பேச, அதன் பிறகு இருவரும் சைனா ட்ரேகன் போலக் கண்கள் வழியே நெருப்பை (கோப பார்வையை) ஒருவர் மேல் ஒருவர் வீசிக்கொண்டனர். இது எப்போ காதல் பார்வையா ஆகப் போகுதோ?!
இன்ட்ரோ செஷன் முடிந்ததும் அனைவரும் அவரவர் டீமிற்குச் செல்ல, இவளின் வருகைக்காகத் தான் ஜெய் அங்கே காத்துக் கொண்டிருந்தான். இண்டர்வியு நடந்த அன்றே, தோழிகளுக்குச் சுரேஷுடன் பழக்கம் என்பதால், பேசிக்கொண்டே வந்தனர். மூவரும் வந்ததும் அவர்களிடம் தன்னை அறிமுகம் செய்துகொண்ட ஜெய், அவர்களின் விவரங்களையும் கேட்டுக் கொண்டான். பின் அவர்களுக்கான ட்ரைனிங்கை தொடங்கினான்.
கோடிங்கின் அடிப்படையை விளக்கமாக, அதே நேரம் விரைவாகச் சொல்லிக் கொடுத்தவன், மூவருக்கும் தனிச் சிஸ்டம் ஒதுக்கி சில பயிற்சிகளைக் கொடுத்து செய்யச்சொல்ல, மூவரும் அதில் மூழ்கினர். ஆனால் இங்கே ஜெய் தான், பயிற்சியின் போதும், இதோ இப்பொழுதும் ஆராவை தான் பார்த்துக் கொண்டிருக்கிறான். ஏன் அவளையே அவன் கண்கள் தேடுகிறது என்று அவனுக்கே புரியவில்லை. கல்லூரியில் பல அழகான பெண்களை ஜெய் பார்த்திருக்கிறான். ஆனால் இப்படி யாரையும் காரணமே இல்லாமல் பார்த்ததில்லை. இதற்குப் பெயர் தான் காதலோ?
அலுவலகம் முடிந்து, ஆராவும் நித்யாவும் சீக்கிரமே வீடு திரும்பினர். படிகளில் ஏறி அவர்கள் தளத்திற்கு வரும்போது, கௌதமின் தந்தை குழந்தையை வைத்துக்கொண்டு விளையாட்டு காட்டிக் கொண்டிருந்தார். நித்யா வீட்டுனுள் சென்றுவிட, ஆராவோ அவரிடம் சென்றவள், “ஹாய் அங்கிள்!” என்று சிநேகமாகப் புன்னகைக்க, அவரும் பதிலுக்குப் பேசினார். அப்படியே மெல்ல குழந்தையைப் பற்றி விசாரித்தாள்.
“என் பேத்தி மா. என் மூத்த பையன் கௌதமோட குழந்தை. பேரு தேஜஸ்வினி.” என்றார்.
“பேரு ரொம்ப அழகா இருக்கு அங்கிள். வந்ததில இருந்து பார்க்கிறேன், உங்க மூணு பேரை தவிர வேற யாரையும் பார்க்க முடியலையே. பாப்பா வோட அம்மா எங்க அங்கிள்?” என்றாள் விடை தெரிந்துகொண்டே.
ஆராவின் கேள்வியில் ஒருநொடி பெரியவரின் முகம் வாட, பின் மெதுவாகக் குரலை செருமியவர், “அவ ரெண்டு மூணு மாசம் முன்னாடி தான் ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டா மா.” என்றவரின் கண்கள் கலங்கியது.
சில நொடி இடைவெளிக்கு பிறகு, “என்னை மன்னிச்சிடுங்க அங்கிள்.” என்று உண்மையாக் வருத்தப்பட்ட ஆரா, பின் குழந்தையிடம் விளையாட்டு காட்ட, அந்தக் குட்டி ராதை, இவளை பார்த்துக் கன்னங்களில் குழிவிழ அழகாகச் சிரிக்க, அதில் மயங்கிய ஆரா கையை நீட்ட, இவளின் முகத்தில் எதைக் கண்டதோ, அவளிடம் தாவியது குழந்தை.
குழந்தையைக் கொஞ்சிக் கொண்டிருந்த ஆரா மனதுக்குள், ‘நீயும் அந்தக் கண்ணனும் ஒரு வகையில் ஒண்ணுதான் அம்முகுட்டி.’ என்று நினைத்தவள், ‘கூடிய சீக்கிரம் அடுத்து எதாவது செய்யணும்.’ என்று முடிவெடுத்தாள். பின் சில நிமிடங்களில் மனமே இல்லாமல் குழந்தையை அவளின் தாத்தாவிடம் கொடுத்துவிட்டுத் தங்கள் பிளாட்டிற்கு வந்தாள்.
இரவு உணவு முடிந்து தன் அறையில் கட்டிலில் படுத்தவளுக்கு, அடுத்த என்ன செய்ய? எப்படிச் செய்ய? என்று யோசனையாக இருந்தது. அதற்கான வழி தான் புலப்படவில்லை. மூளையைக் கசக்கி யோசித்ததில் களைப்படைந்தவள், அப்படியே உறங்கி போனாள். ஆனால் அவள் எதிர்பார்க்கும் சந்தர்பம் கூடிய விரைவில் நித்யாவின் மூலம் வரும் என்று அவளுக்குத் தெரியாது.
