Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 31.2

அத்தியாயம் 31 (2)

அடுத்த நாள் அதிகாலையிலேயே எழுந்தவன், தன் தந்தையிடம் தான் எடுத்திருக்கும் முடிவை பற்றிச் சொல்ல, அவர் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. யாழினியின் குடும்ப விவரத்தை கேட்டுக் கொண்டவருக்கு, அவளின் பெற்றோர் ஆசிரியர்கள் என்பதே திருப்தியாக இருக்க, “உனக்கு இஷ்டம்ன்னா எனக்கும் பரிபூரணச் சம்மதம் பா. கூடிய சீக்கிரம் அந்தப் பொண்ணோட அண்ணன்கிட்ட பேசிட்டு சொல்லு. பெரியவங்ககிட்ட நான் பேசுறேன்.” என்று நேரடியாகத் தன் சம்மதத்தைச் சொல்லிவிட, அவரிடம் தன் நன்றிகளைத் தெரிவித்தவன், அன்றைய தினமே, இனியனை தேடி அவனது வீட்டிற்குச் சென்றான்.

அரசு விடுமுறை தினம் என்பதால், இனியன் வீட்டில் இருக்க, அவனிடம், கொஞ்சம் தனியாகப் பேச வேண்டும் என்று கெளதம் சொல்ல, சரி என்றவன் அவனை அழைத்துக்கொண்டு மொட்டைமாடிக்குச் சென்றான். மேலே வந்தும் சில நிமிடம் எப்படி ஆரம்பிப்பது என்று யோசனையுடன் நின்று கொண்டிருந்த கெளதம், அதன் பின் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு, யாழினியை தான் திருமணம் செய்ய விரும்புவதாகவும், தன் தந்தையிடம் பேசி சம்மதம் வாங்கி விட்டதாகவும் கூற, அதைக் கேட்ட, இனியனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.

மகிழ்ச்சி, அதே நேரம் நம்பிக்கையின்மை. ஒருவேளை நடந்து முடிந்த நிகழ்வின் காரணமாகத் தான் கெளதம் இப்படிச் சொல்கிறானா என்ற எண்ணம் ஏற்பட, அதை அவனிடமே நேரடியாக இவன் கேட்க, அதை மறுத்த கெளதம், பார்த்த நாள் முதலாகவே, யாழினியின் மேல் தனக்கு இருந்த ஈர்ப்பை பற்றிக் கூறியவன், அன்றைய சம்பவத்துக்குப் பிறகு தான் அவள் மேல் தான் கொண்ட காதலை பற்றியும், அவளுக்கு ஏதேனும் ஆபத்து என்ற பொழுது தனக்குள் ஏற்படும் மாற்றத்தை பற்றியும் கூறியவன், அவளைப் பிரிந்து தன்னால் இருக்க முடியாது என்று கூறினான். மேலும் திருமணம் என்ற பெயரில் அவள் வேறு ஒருவருக்கு மனைவி ஆவதை தன்னால் ஜீரணிக்க முடியவில்லை, என்று தன் மனதுக்குள் இருக்கும் எல்லாவற்றையும் இனியனிடம் கூறினான்.



Advertisement

கெளதம் கூறிய எல்லாவற்றையும் கேட்ட இனியனுக்கு அவனின் உணர்வுகளைப் புரிந்துகொள்ள முடிந்தது. ஒரு வரனாகப் பார்கையில், அவன் எவ்வளவோ பொருத்தமானவன், அது மட்டுமில்லாமல், தனக்கு நன்கு அறிமுகமான நண்பனும் கூட. இதையெல்லாம் யோசிக்கையில், கெளதம் தன் தங்கைக்குக் கணவனாக வருவதில், இனியனுக்கு முழுச் சம்மதமே. கௌதமைவிடப் பொருத்தமானவன் இருக்க முடியாது. யாழினிக்குச் சம்மதம் என்றால் தனக்கும் சம்மதம் என்று கூறியவன், தன் பெற்றோரிடம் பேசிவிட்டுச் சொல்வதாகச் சொல்ல, கெளதமோ அவனின் அனுமதியுடன் யாழினியிடம் பேச, அவளை வெளியே அழைத்துச் சென்றான்.

ரெஸ்டாரண்ட் ஒன்றிற்கு அழைத்துச் சென்றவன், இருவருக்கும் வேண்டியதை வரவழைத்து சாப்பிட்டு முடித்ததும், என்ன விஷயம் என்று கேட்ட யாழினியிடம், “சப்போஸ், இப்போ நான் உன்கிட்ட ப்ரொபோஸ் பண்ணா, நீ என்ன சொல்வ யாழினி??” என்று கேட்க, தண்ணீரை குடித்துக் கொண்டிருந்த அவளுக்குக் கெளதம் சொன்னதைக் கேட்டு சட்டென்று புரையேறியது. “ஹே! பார்த்து….பார்த்து!!” என்றவன், அவளது தலையைத் தட்டிகொடுக்க, அவளோ தன் முகத்துக்கு அருகில் இருந்த கௌதமின் முகத்தைதான் விழி எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தாள்.

“இபோ ஓகே வா?!” என்று கேட்டுக்கொண்டே கெளதம் யாழினியின் முகத்தைப் பார்க்க, அவளோ சட்டென்று தன் பார்வையைக் கீழே இறக்கிக் கொண்டாள். அதைப் பார்த்துவிட்ட கெளதம், சிரிப்புடன், “சரி ப்ரொபோஸ் வேண்டாம், ஸ்ட்ரைட்டா, கல்யாணம் செஞ்சுக்கக் கேட்டா?!!” என்று கூற, நிமிர்ந்து இவனைப் பார்த்த அவள் கண்களோ, எண்ணெயில் போட்ட அப்பளம் போலப் பெரிதாக விரிய, அதைப் பார்த்தவனுக்கோ, “அப்படிப் பார்க்காத யாழினி, உன் கண்ணுக்குள்ள அப்படியே குதிச்சிடலாம் போலக் கைகால் எல்லாம் துருதுருங்குது.” என்று சிரிப்புடன் சொல்லவும், பட்டென்று கீழே குனிந்துக் கொண்டாள். ஏனோ, கௌதமின் பேச்சு, அவளுக்குச் சிறு வெட்கத்தையும் நடுக்கத்தையும் கொடுக்க, நிமிர்ந்து இவனைப் பார்க்க முடியாமல், டேபிளில் இருந்த பொருட்களை அங்கும் இங்கும் இடமாற்றிக் கொண்டிருந்தாள்.

Advertisement

வெகு நேரமாக அதையே செய்து கொண்டிருந்தவள், கௌதமிடம் இருந்து சத்தம் இல்லாமல் போகவே, நிமிர்ந்து பார்க்க, அவனோ, டேபிளில் கைகளை ஊனி, உள்ளங்கையில் தன் முகத்தைத் தாங்கியவாறு, இவளின் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான்.

Advertisement

அவள் நிமிர்ந்து பார்த்ததும், கெளதம், ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி, பார்வையாலே, ‘சம்மதமா’ என்று கேட்க, மறுபடியும் கீழே குனிந்துக் கொண்டவளின், கைகளை எடுத்து தன் கைகளுக்குள் வைத்துக் கொண்டவன், “ஏதோ திடீர்ன்னு இப்படி ஒரு முடிவை நான் எடுக்கல யாழினி. உன்னைப் பஸ்ட் டைம் லிப்ட்ல பார்த்ததுமே, உன்னை, உன்னோட இந்தப் பேஸ், அப்புறம் உன்னோட சிரிப்பு இதெல்லாம் பிடிச்சு போச்சு. சரி ஏதோ பிடிச்சிருக்கு அப்படின்னு இருந்துட்டேன். என் மனதுக்குள்ள காதல் முளைச்சதோட வெளிப்பாடு தான் அந்தப் பிடித்தம்ன்னு அப்போ தெரியல. அப்புறம் உன்னோட அமைதியான குணம், நீ உண்டு உன் வேலை உண்டுன்னு இருக்கிறது பிடிச்சது. முக்கியமா, நல்லது கெட்டது தெரியாத உன்னோட இந்த இன்னொசன்ஸ் ரொம்பவே பிடிச்சது. இதுக்கெல்லாம் காரணம் என்னனு நானும் யோசிக்கல. ஆனா, அன்னைக்கு அந்தச் சம்பவத்துக்குப் பிறகு, ஏனோ நீ இல்லாம இருக்க முடியாதுன்னு தோணுது. உனக்கு நான் அவசியம்னு தோணுது. உன்னை என் கண்ணுகுள்ள வச்சு பார்த்துக்கணும், உனக்கு எந்தத் தீங்கும் வரவிடாம ஒவ்வொரு செகண்டும் கூடவே இருக்கணும்னு தோணுது. அத்தோட உன் அண்ணன், உன்னோட கல்யாணத்தைப் பேசியதை யோசிச்ச பார்த்தப்போ, என்னால அதை ஏத்துக முடியல யாழினி. நீ இன்னொருத்தர் பக்கத்தில நிக்குறதை பார்க்க முடியாமான்னு கேட்டா, நிச்சயமா என்னால முடியாது. அதை ஜீரணிக்கவும் முடியாது. நீ எனக்கு வேணும் யாழினி. எனக்கு மட்டும்.” என்று தன் ஆழ் மனதில் இருக்கும் காதல் அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறியவன், அவள் கைகளை விடுவித்து, சிறு இடைவெளிவிட்டு,

“நான் உன்னைக் கம்பல் பண்றேன்னு நினைச்சனா, சொல்லிடு யாழினி. நான் எதுவும் தப்பா எடுத்துக்க மாட்டேன். உனக்கு யோசிக்க டைம் வேணும்னாலும் யோசி. அதுக்கு அப்புறமும், என்னைக் கல்யாணம் செய்துக்க இஷ்டம் இல்லைன்னா, தாராளமா சொல்லிடு யாழினி. நேரடியா உன்னால் சொல்ல முடியாட்டியும், உன் அண்ணன் மூலமா கூடச் சொல்லிடு. அதுக்கு அப்புறம் உன்னை எப்பவும் டிஸ்டர்ப் பண்ணமாட்டேன்.” என்று கூறியவன் ஒரு பெரு மூச்சோடு, “கிளம்பலாமா??” என்று கேட்க, அவளும் ஒன்றும் சொல்லாமல் எழுந்துகொள்ள, அப்படி அவள் சட்டென்று எழுந்தது, கௌதமுக்கு உள்ளுக்குள் ஏதோ பாரமாக இருந்தது. ஒன்றும் சொல்லாமல் அவளை அழைத்துக்கொண்டு, அவளது ஹாஸ்டல் தெருவில் இறக்கி விட்டவனுக்கு, படங்களில் வருவது போல இப்பொழுதாவது எதாவது சொல்வாளா என்று ஆசை தோன்ற, அவளோ வண்டியை விட்டு இறங்கியதும், நிமிர்ந்து இவனை ஒரு நொடி பார்த்தவள், அடுத்து ஒன்றும் சொல்லாமல், சென்றுவிட்டாள். ‘அவ்வளவுதானா’ என்ற எண்ணம் தோன்ற, ஒருவித தளர்ந்த மனநிலையுடன் வீட்டிற்கு வந்து சேர்ந்தான் கெளதம்.

அடுத்த நாள் காலை இனியனிடம் இருந்து கால் வரவே, ஒருவித பயத்துடனே அழைப்பை கெளதம் அட்டென்ட் செய்ய, அவனோ எடுத்த எடுப்பிலேயே, “மச்சான், பாப்பாக்கு இந்தக் கல்யாணத்தில முழுச் சம்மதமாம். வீட்டிலையும் பேசிட்டேன். அப்பா, அம்மாக்கு முழுச் சம்மதம். உங்க வீட்டு பெரியவங்ககிட்ட பேசனும்ன்னு சொல்றாங்க.” என்று படபடவென்று விஷயத்தைச் சொல்லி முடிக்க, அவனின் மச்சான் என்ற அழைப்பில், இங்கே கௌதமிற்கோ பேச்சே வரவில்லை. தான் கேட்பது கனவா என்ற சந்தேகம் வர, தன்னைக் கடந்து சென்ற ஜெய்யை அழைத்தவன், தன் கையைக் கிள்ள சொல்ல, அவனோ இவனை விசித்திரமாகப் பார்த்துக்கொண்டே, இதுதான் சாக்கென்று நறுக்கென்று கிள்ள, “ஆஅ!!” என்று அலறிய கெளதம், தம்பியை அடிக்க எழுந்து செல்வதற்குள் அவன் ஓடி இருந்தான்.

Advertisement

போனில் இனியனோ, இவனின் பேச்சைகேட்டுச் சிரித்துக் கொண்டிருந்தான். “மச்சான், என்னைப் பார்த்தா, உனக்குச் சிரிப்பா இருக்கா??” என்று கெளதம் பொய்யான கோபத்துடன் கேட்கவும், அவனின் சிரிப்பு இன்னும் அதிகம் ஆனது, வெகு நேரம் சிரித்தவன், “இல்லை மச்சான், சின்னக் குழந்தையாட்டம், இன்னும் கிள்ளி விளையாடுறீங்களே, அதான் சிரிப்பு வந்துடுச்சு.” என்று சொல்லிவிட்டு மீண்டும் சிரிக்க, “உன் தங்கச்சி, நேத்து ஒன்னும் சொல்லாம் போயிட்டாளேன்னு நானே, சோகமாக இருந்தேன். இப்போ நீ சம்மதம் சொல்லவும், என்னால நம்ப முடியல, அதான் இந்தக் கிள்ளு விளையாட்டு.” என்று சோகமாக ஆரம்பித்துச் சுகமாக முடித்தான்.

“பாப்பாக்கும் உன்னைப் பிடிச்சிருக்கு மச்சான். ஆனா, நாங்க என்ன சொல்வோம், வீட்டில அம்மா, அப்பா என்ன சொல்வாங்கன்னு யோசிச்சிட்டு உன்கிட்ட ஒன்னும் சொல்லாம வந்திருக்கா. நேத்து நைட் நான் நேர போய் அவகிட்ட பேசினேன். அப்புறம் அவளை வச்சுகிட்டே, வீட்டிலையும் பேசினேன். ஆரம்பத்தில கொஞ்சம் யோசிச்சாங்க. அப்புறம் எங்களுக்குச் சம்மதம்னதும், சரின்னு சொல்லிட்டாங்க.” என்று நடந்த அனைத்தையும் கூறினான் இனியன்.

‘கள்ளி, மனசுக்குள்ள நம்ம மேல ஆசையை வச்சுக்கிட்டு தான், ஒன்னும் சொல்லாம போனாளா!! இதுல பைக்கை விட்டு இறங்கியதும், ஒரு லுக்கு வேற, கல்யணம் முடியட்டும், வச்சுக்கிறேன்.’ என்ற எண்ணம் தோன்ற அதே புன்னகையுடனே இனியனிடம் பேசிவிட்டு, வைத்தான்.

அடுத்து, இரு வீட்டு பெரியவர்களும் பேச, அனைவருக்கும் இந்தத் திருமணம் பிடித்துவிடவே, அடுத்த மூஹூர்ததிலேயே கெளதம் – யாழினி திருமணம் இனிதே நடந்து முடிந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!