Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 32.2

அத்தியாயம் 32 (2)

இப்படியே கெளதம், யாழினி, திருமண வாழ்க்கை நான்கு வருடங்கள் கடந்தது. இதற்கிடையில், யாழினியின் தாய், அடிக்கடி இவளை போனில் அழைத்துப் பேசுவார். ஆரம்பத்தில் ஒன்றும் சொல்லாமல் இருந்தவர், இப்போதெல்லாம், அடிக்கடி, “மாதவிடாய் சரியாக வருகிறதா??” என்ற கேள்வியைக் கேட்கிறார். சட்டென்று அவரின் பேச்சின் மறைமுகப் பொருளை புரிந்துகொள்ளாத யாழினி, அவரின் கேள்விக்குப் பதில் கூறிவிட்டுப் போனை வைத்துவிடுவாள். அவளது தாய்க்கோ, ஒருவேளை வேலையை நினைத்துக்கொண்டு, குழந்தை தள்ளி போடுகிறாளோ என்ற எண்ணம் இருந்து வந்தது, அதுவும் இல்லாமல், படித்த அவருக்கு, இப்பொழுது இதெல்லாம் சாதராணம் என்ற எண்ணமும் தோன்றினாலும், ஒரு தாயாக, வருடங்கள் கடந்து கொண்டிருக்கிறதே என்ற கவலையும் அவருக்கு இருந்து வந்தது.

அப்படிதான் ஒரு சமயம், திருவிழா என்று கெளதமுடன் ஊருக்கு வந்திருந்தாள் யாழினி. ஒரு நாள் அதிகாலை வேளை, கிட்சனில் நின்றுக் கொண்டிருந்தவள், திடீரென்று வயிற்றைப் பிடித்துககொண்டு கொல்லைபுறம் சென்று, வாந்தி எடுக்க, அங்கே வந்த அவளின் தாய், தவறாகப் புரிந்துகொண்டு, “விசேஷமா டி!” என்றபடி அவளின் முகத்தைத் திருஷ்டி கழிக்க, “என்னம்மா சொல்ற? வாந்தி எடுத்ததுக்கு விசேஷம் அது இதுன்னு. நேத்து இங்க பக்கத்தில கடையில அவரும் நானும், பரோட்டா வாங்கிச் சாப்பிட்டோம். அது ஒத்துக்கல போல. நேத்துல இருந்தே, நெஞ்செல்லாம் ஒரு மாதிரி இருந்துச்சு. அது இப்போ வாந்தியா வந்திடுச்சு. இதுக்குப் போய்.” என்று அலுத்துக்கொள்ள, அவரின் முகம் வாடி போனது.

“ஏன் யாழினி, வேலையை நினைச்சு பிள்ளைய தள்ளிபோட்டுட்டு இருக்குறியா டி. எங்களை நாங்க பார்த்துக்கிறோம். அப்பா கடனையும் அடைச்சாச்சு. இதுக்கு அப்புறம் நீ வேலைக்குப் போய்க் கஷ்டபட வேண்டாம் டி.” என்று கேட்க, “என்னமா சொல்ற??” என்று மகள் முழிக்க, “உனக்குக் கல்யணம் ஆகி நாலு வருஷம் ஓடிடுச்சு. இன்னும் உனக்குக் குழந்தை இல்லையேன்னு, நாலு பேரு என்கிட்டே கேள்வி கேக்குறாங்க. அதான், எங்களை நினைச்சு, தள்ளி போடுறியான்னு கேட்கிறேன்.” என்று அவர் விளக்கம் சொன்னதும் தான், ‘ஒஹ்! நாலு வருஷம் ஆகிடுச்சா!! ஆமாம் இத்தனை நாள், இதைப் பத்தி நான் யோசிச்சது இல்லையே. ஏன் எனக்கு இன்னும் குழந்தை உண்டாகல?’ என்று பல எண்ணங்கள் அவள் மனதை சூழ்ந்துகொண்டன. “அப்படிலாம் ஒன்னும் இல்லமா.” என்று தாயிடம் பதில் கூரியவளுக்கு, சென்னை வரும்வரை, குழந்தை பற்றிய எண்ணம் தான் மனதில் ஓடிக்கொண்டே இருந்தது.



Advertisement

சென்னை வந்ததும், ஒருநாள், குழந்தை பற்றிய விஷயத்தைக் கௌதமிடம் இவள் பேச, அவனோ, “நாம ஒன்னும் தடுக்கலையே அம்மு. நடக்கும்போது நடக்கட்டும்.” என்று அவளைச் சமாதனம் செய்ய, “இல்லைங்க, எனக்கு என்னமோ பயமா இருக்கு. இத்தனை வருஷம் ஆச்சு. குழந்தை உண்டாகல. ஒருவேளை குழந்தையே இல்லா……” என்றவளின் உதட்டை பட்டென்று மூடியவன், “இப்படி எல்லாம் ஏன் பேசுற அம்மு. எல்லாருக்கும் உடனே குழந்தை பிறக்கிறது இல்லை. ஒவ்வொருத்தங்களுக்கு டைம் எடுக்கும். சிலருக்கு ஆறு மாசம், சிலருக்கு ரெண்டு மூணு வருஷம், சிலருக்கு அதுக்கும் மேல. இதெல்லாம் நம்ம கையில இல்லடா. நிச்சயம் நமக்கும் பிறக்கும். அப்படியே உன்னை மாதிரியே உன் பொண்ணு இருப்பா.” என்று சமாதானம் கூற, அவளின் முகம் தெளிவடையவில்லை. இருந்தும் கௌதமிற்காக, அந்தப் பேச்சை அப்படியே விட்டாள்.

ஆனால் அந்த விஷயம் அவள் மனதின் ஓரத்தில் தங்கிவிட்டது. அதன்பின் வந்த நாட்களில், குழந்தை பற்றிய பேச்சும், எதிர்காலத்தைப் பற்றிய பயமும் அவள் பேச்சில் அதிகம் தெரிந்தது. சில சமயம் அதை நினைத்துச் சத்தமில்லாமல் அழுவாள்.

அப்படிதான் ஒருநாள், லேசான விசும்பல் சத்தம் தன் அருகில் கேட்கவும், திரும்பி பக்கத்தில் படுத்திருந்த யாழினியை கெளதம் பார்க்க, கண்ணீர் வழிய அவள் படுத்திருந்தாள். அதில் பதறியவன், அவளைத் திருப்பித் தன் நெஞ்சோடு அணைத்துக்கொண்டு, “அம்மு, எதுக்கு டா அழற?? என்னாச்சு??” என்று கேட்க, அவளோ மீண்டும் குழந்தை பற்றிய பேச்சை எடுக்க, “சரி, அதுக்கு இப்போ என்ன பண்ணலாம் அம்மு??” என்றான் சலிப்பாக. “எதுக்கும் போய் டாக்டரை பார்க்கலாம் மாமா.” என்று அவள் பதில் சொல்ல, “போய்ப் பார்த்து??” என்றவனின் குரலில் லேசாகக் கோபம் எட்டி பார்த்தது.

Advertisement

“அப்போதான மாமா, ஏதாவது ப்ராப்ளம் இருக்கான்னு தெரியும். என்னன்னு காரணம் தெரியாமலே, பிறக்கும், பிறக்கும்ன்னு நாமலே நினைச்சிட்டு இருந்தா. அப்புறம் ரொம்ப லேட் ஆகி, அதால எதுவும் பிரச்சனை வர கூடாதுல.” என்று காரணம் சொன்னவளை என்ன சொல்வது என்று கௌதமிற்குச் சுத்தமாகப் புரியவில்லை. சமாதனம் செய்து செய்து ஓய்ந்து போயிருந்தவன், “சரி போய்ப் பார்க்கலாம். அதுக்கு அப்புறம்??” என்றான் சிறு எரிச்சல் குரலில்.

Advertisement

“ஹம், ரெண்டு பேருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லைன்னா, சந்தோசம் மாமா, ஒருவேளை என்னால பிள்ளை பெத்துக்க முடியாதுன்னு சொல்லிட்டா……..” என்று தயக்காமாக இழுத்தவளை, பட்டென்று தன்னிடம் இருந்து விலக்கியவன், “ம், சொல்லு, இல்லன்னா??” என்று அவளை முறைத்துக்கொண்டு கேட்க, அவளோ, பயத்துடன், “நா….நான்…..என்னை டைவோர்ஸ் செஞ்சுட்டு……” என்று தயங்கி தயங்கி, அவள் சொல்ல,

“போதும் நிறுத்துடி! ஏண்டி பொம்பளைங்க இப்படி இருக்குறீங்க!! ப்ராப்ளம் நம்ம மேலையே இருந்தாலும், டேய்! கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்துனல, இப்போ மட்டும் பொம்பளை மாதிரி ஓடுறன்னு. புருஷன்காரன் சட்டையைப் பிடிச்சுக் கேள்வி கேக்குறதை விட்டுட்டு, என்னால தான், நான் விலகிக்கிறேன்னு எப்போ பார்த்தாலும், தப்பை உங்க மேல போட்டுக்கிட்டு. ச்சை! புருஷன், பொண்டாட்டி ரெண்டு பேருக்கும் கல்யாண வாழ்கையில சமபங்கு இருக்கு யாழினி. கடைசி வரைக்கும் ஒன்னா இருப்போம்ன்னு தான் ரெண்டு பேரும் கல்யாண வாழ்கையில அடியெடுத்து வைக்கிறாங்க. முன்னபின்ன தெரியாதவங்களைத் தைரியமா, எதோ ஒரு நம்பிக்கையில கல்யாணம் செய்றவங்களுக்கு, அதே போல, அவங்க கஷ்ட நஷ்டத்திலையும் கூட இருக்கத் தெரியனும். அதைவிட்டுட்டு, பிள்ளை பெத்துக்க முடியலை, படிக்காதவ, அழகா இல்லைன்னு, காரணம் சொல்லிக்கிட்டு டைவோர்ஸ் பண்றது, விட்டுட்டு ஓடுறது, இதெல்லாம் அசிங்கம். அதுக்கு அவங்க கல்யாணமே செஞ்சுக்க வேண்டாம். சந்தோசம் இருக்கும்போது, கூட இருந்துட்டு, கஷ்டம்ன்னு வரும்போது, நீ எனக்கு வேண்டாம்ன்னு சொல்றது கோழை தனம் அம்மு. யாருக்காவது பிள்ளை இல்லனா, அவங்களை நாடுகடத்திட போறாங்களா, இல்லை தூக்குத் தண்டனை கொடுத்திடுவாங்களா.”

“குழந்தை இல்லைன்னு புறம் பேசுறவங்க எல்லாரும் மட்டும், அவங்க வாழ்கையில சுத்தமா, ஒழுங்கா இருக்காங்களா?? வீட்டுக்கு வீடு வாசப்படி மாதிரி அவங்கவங்க லைப்ல ஒரு கஷ்டம், குறை இருக்கத்தான் செய்யும் அம்மு. இந்த உலகத்தில குறை இல்லாத மனுஷன்னு யாரும் இல்லை. தன் முதுகுல அழுக்கை வச்சுக்கிட்டு, அடுத்தவங்களைப் பத்தி பேசுறவங்க, அடுத்த நிமிஷம் வேற ஒரு விஷயம் கிடைச்சா, அது பின்னடி போய்டுவாங்க. Facebook, ட்விட்டர்லையும், தினமும் அதுதான நடந்திட்டு இருக்கு. ஒரு நாளைக்கு ஒன்னு ட்ரேன்டிங்க்ல இருந்துட்டு இருக்கு. கண்டதை எல்லாம் மனசுல போட்டுக்கிட்டு யோசிச்சிட்டு இருந்தா, நம்ம லைப் நரகம் ஆகிடும். பிள்ளை பெத்துக்க முடியாட்டி என்ன, எத்தனையோ அனாதை குழந்தைங்க இருக்காங்க. அவங்களும் தாய், தகப்பனுக்கு, அவங்க பாசத்துக்கு, கவனிப்புக்கு ஏங்குறவங்க தான். அப்படி ஒரு குழந்தையைத் தத்து எடுத்து வளர்த்துட்டு போய்டுவோம். வயித்துல சுமந்து பிள்ளைய வளர்த்தா என்ன, நெஞ்சுல சுமந்து பிள்ளைய வளர்த்தா என்ன?? நம்ம பிள்ளை நம்ம பிள்ளை தான்.” என்று தன் மனதில் இருந்ததைப் படபடவென, கோபமாக அவன் சொல்ல,

Advertisement

கௌதமின் கோபத்தைப் புரிந்துகொண்டவள், “நான் மட்டும் வேண்டாம்னா சொல்றேன். பெத்த பிள்ளையா இருந்தாலும் சரி, தத்து பிள்ளையா இருந்தாலும் சரி, எனக்கு எந்தப் பிரச்சனையும் இல்லை மாமா. ஆனா, நான் சொல்ல வரதை நீங்க புரிஞ்சிக்கல. நம்ம ரெண்டு பேருக்கும் ஏஜ் அதிகம் ஆகிட்டே போகுது. இப்பவே உங்களுக்கு முப்பது வயசு ஆகப் போகுது. ஒருவேளை நம்மால பெத்துக்க முடியாதுன்னு தெரிஞ்சுகிட்டா, குழந்தையைத் தத்து எடுத்து அவங்களை வளர்த்து ஆளாக்கி, நாளைக்குக் கல்யாணம் காட்சின்னு வரும்பொழுது, நம்ம உடம்புல தெம்பு இருக்கணுமே மாமா. நாம ஒரு நினைப்புல காலத்தைக் கடத்திட்டே இருந்தா, அப்புறம் நாளைக்கு நம்ம புள்ளைங்களுக்குத் தான் கஷ்டம். நான் சொல்றது புரியுதா மாமா??” என்று பொறுமையாகச் சொன்னவளின் முகத்தைப் பார்த்தவனுக்கு அவள் சொல்வது நியமாக இருக்க, அத்தோடு தான் நினைத்ததை முடிக்காமல் விட மாட்டாள் என்ற எண்ணமும் தோன்ற, அவள் முடிவுக்குச் சரி என்று இறுதியாகச் சம்மதம் சொன்னான்.

அடுத்த வாரமே, தோழியின் அறிவுறுத்தல் படி, அந்தப் பிரபல மருத்துவமனைக்குச் சென்றார்கள் கௌதமும், யாழினியும். அவர்கள் இருவரையும் பரிசோதித்த மருத்துவர், இருவருக்கும் பெரிதாக எந்தக் குறையும் இல்லை என்று கூறியவர், யாழினிக்கு தான், ஹர்மோனல் இம்பலேன்ஸ் இருப்பதாகவும், அதற்குச் சில மருந்து, மாத்திரை எடுத்துக்கொண்டால், சரி ஆகிவிடும் என்று கூறி, மாத்திரைகளை எழுதி கொடுத்தார். மருத்துவர் சொன்ன மாத்திரைகளைத் நாள் தவறாமல் யாழினி சாப்பிட்டு வர, சில மாதங்கள் கழித்து, அவள் கருவுற்றாள்.

ஒரு நாள் அதிகாலை எழுந்தவளுக்கு, தலை சுற்றுவது போல இருக்க, அப்படியே கட்டிலில் அமர்ந்துவிட்டாள். அடுத்தச் சில நிமிடங்களில் குமட்டிக்கொண்டு வர, வாஷ்பேஸின் சென்று வாந்தி எடுத்தவளுக்கு, சந்தேகம் ஏற்பட, உடனே உள்ளுக்குள் ஒரு குறுகுறுப்பு உண்டாக, ஏற்கனவே வாங்கி வைத்திருந்த, ஹோம் பிரெக்னன்ஸி கிட்டை எடுத்து போய் டெஸ்ட் செய்து பார்க்க, கர்ப்பம் உறுதி என்ற செய்தி அவளைச் சந்தோஷ கடலில் மூழ்க செய்தது. கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் கழித்து உண்டாகி இருப்பது அவளுக்குள் ஒரு சிலிர்ப்பை உண்டாக்கியது. கண்ணாடி முன் நின்று, மெல்ல வயிற்றை தடவி பார்த்தவளுக்கு அவள் அறியாமலே கண்களில் கண்ணீர் வழிந்தது. ‘என் குழந்தை’ என்ற வார்த்தைகள் அவள் மனதுக்குள் ஓட, பல நிமிடங்கள் தன் பிம்பத்தையே பார்த்திருந்தவள், கண்ணாடியில் தெரிந்த தன் வயிற்றைக் கைகளால் தொட்டு, தன் உதட்டில் ஒற்றி முத்தம் கொடுத்தாள்.

உடனே கௌதமிற்குச் சொல்லவேண்டும் என்ற ஆசை எழ, “மாமா! மாமா!” என்றபடி சந்தோஷத்துடன் சென்று கௌதமை எழுப்பியவள் உற்சாகமாக அவனிடம் விஷயத்தைச் சொல்ல, “அம்மு!! நிஜமாவா!!” என்றவன், தன் அருகில் நின்று கொண்டிருந்தவளின் வயிற்றை மிருதுவாகத் தடவிகொடுத்து, இதழ்பதிக்க, அவனைத் தன்னோடு சேர்த்தணைத்துக் கொண்டாள் யாழினி. விஷயம் வீட்டினருக்கும் தெரியபடுத்தப்பட, அனைவருக்கும் மிகுந்த மகிழ்ச்சி. உடனே தன் பெற்றோர் வீட்டிற்குப் போன் செய்து விஷயத்தைக் கூறினாள்.

பல வருடங்கள் கழித்துக் கருவுற்றிருப்பதால், அதன் பின் வந்த நாட்களில், சிரிப்பதில் கூடக் கவனமாக இருந்தவள், செய்யாத அக்கபோரே இல்லை. சில சமயம், கெளதம் சத்தமாகச் சிரித்துவிட்டால் கூட, அவனை அடக்குபவள், “மெதுவா மாமா, வயித்துல பாப்பா இருக்கு.” என்று சொல்வாள். அவனோ, “அடிபாவி, சிரிக்கக் கூடக் கூடாதா??” என்று அழுவதுபோல முகத்தை வைத்துக்கொள்வான்.

அதுமட்டுமில்லாமல், மூச்சு விடுவதற்குக் கூட, டாக்டர், இல்லையென்றால் தாயிடம் கேட்டுத்தான் செய்தாள். ஒரு சின்னத் தலைவலி, ஜலதோஷம் என்றாலும், உடனே ஹாஸ்பிட்டல் வந்துவிடுவாள். குழந்தையின் மீதான ஏக்கம், அவளை இப்படியெல்லாம் நடந்துகொள்ளச் செய்தது. எடுத்துவைக்கும் அடியில் இருந்து, மூச்சுவிடும் காற்று, குடிக்கும் தண்ணீர், உண்ணும் உணவு வரை எல்லாவற்றிலும், டாக்டரின் ஆலோசனை படியே நடந்தாள். இப்படி அவள் மிகவும் கவனமாக இருந்தும், அவள் எதிர்பார்க்காத ஒன்று நடந்து அவள் தலையில் இடியை இறக்கியது.

எந்த ஒரு விஷயத்திலும், அதிகக் கவனமும் அதிக அலட்சியமும் எப்பொழுதும் கூடாது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!