Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 35

அத்தியாயம் 35

தேஜாவை மடியில் வைத்துக்கொண்டு மிருதுளா அமர்ந்திருக்க, அவளைச் சுற்றி கைகளைப் போட்டுக்கொண்டு கெளதம் அவள் அருகில் அமர்ந்திருக்க, மெல்ல குழந்தையின் கேசத்தைத் தடவி கொடுத்தவன், “உண்மையா சொல்லனும்னா, நம்ம கல்யாணத்துக்கு முன்னமே சில தடவை தோணியிருக்கு அம்மு, ஒருவேளை நீ தேஜாக்கு சொந்தாமா இருக்குமோன்னு. ஒரு மூணாம் மனுஷியா நீ தேஜா மேல வச்சிருந்த பாசம் பார்க்கும்பொழுது எனக்குள்ள அந்தச் சந்தேகம் சில சமயம் தோணியிருக்கு. அப்புறம் ஆரா வந்து உண்மையைச் சொன்னதும் தான், நாம சந்தேகப்பட்டது உண்மைன்னு புரிஞ்சுது. எப்படி அம்மு, தேஜா யாருன்னு தெரியாதப்போவே, அவ மேல உயிரையே வச்சிருந்த??” என்று கேட்டான் கெளதம்.

“தெரியலைங்க, முதல் முறை, மொட்டை மாடில வச்சு, எங்கையோ குழந்தை அழற சத்தம் கேட்டதும், எனக்குள்ள அப்படியே ஒரு மாதிரி பரிதவிப்பு, பழசு எல்லாம் நியாபகம் வந்து ஒரு மாதிரி உடம்பு நடுங்கிடுச்சு. அப்போ எனக்கு நம்ம பாப்பாவோட குரல் தான் அதுன்னு தெரியாது. அப்புறம் ஆரா குழந்தையைத் தூக்கிட்டு வந்தப்போ, ஏன்னு தெரியாம, எனக்கு நெருக்கமானவங்களைப் பார்க்கிற உணர்வு. ஏதோ ஒன்னு அவளை நோக்கி இழுத்துச்சு. அவ இல்லாம என்னால இருக்க முடியாத மாதிரி ஒரு உணர்வு. அப்புறம் தான் ஒருநாள், வீட்டில இருக்கும்பொழுது, அவ அழுதப்போ எனக்கு நெஞ்சுல பயங்கர வலி, அவ அழறதை என்னால பார்த்துட்டு இருக்க முடியல. அவளுக்குப் பீட் பண்ண பிறகு தான் என்னால நிம்மதியா மூச்சு கூட விட முடிஞ்சது. அப்போ தான், எனக்கு வர்ற வலி அவளால் தான்னு புரிஞ்சுகிட்டேன். அவளைப் பார்க்கும்பொழுது தான் எனக்குள்ள தாய்மை உணர்வு வருதுன்னு நான் புரிஞ்சுகிட்டேன். அவ மேல எனக்கு இருக்கிற பிடிப்பு இன்னும் அதிகம் ஆச்சு. அவளை என் பொண்ணாதான் பார்க்க ஆரம்பிச்சேன். எங்க உறவுக்கு எதிர்காலம் இருக்கா?? எத்தனை நாளைக்கு இது?? இதெல்லாம் அப்போ எனக்குத் தோணலை. அவ என் பொண்ணு, அவளுக்கு நான் அம்மா. அது மட்டும் தான் என் மனசில இருந்துச்சு. அதான் குழந்தை காணாம போனப்போகூட, குழந்தையோட அப்பா நீங்கன்றதை மறந்து, பாப்பாவை என்கூட வச்சுக்கனும்னு அவ்வளவு ஒரு வெறி.” என்று சொல்லி சிரித்தவள்,

“அப்போ எனக்கு இருந்த உணர்வுக்கு இப்போ தான் பதில் கிடைச்சிருக்கு. தான் ஆடாவிட்டாலும் தன் சதை ஆடும்னு சொல்லுவாங்க. எனக்குள்ள உருவானவ அவ. எனக்குள்ள, சதையும் ரத்தமுமா கொஞ்சம் கொஞ்சமா வளர்ந்தவ. நான் ஸ்வாசிச்ச காத்தை ஸ்வாசிச்சு, நான் என்ன சாப்பிடுறனோ அதை அவளும் சாப்பிட்டு, என்னோட சூட்டை அவளும் உணர்ந்து, எனக்கு உடம்புக்கு ஏதாவதுன்னா, அதை அவளும் அனுபவிச்சு, உருவானவங்க.”



Advertisement

“குழந்தைங்க குப்புற படுத்து, தவழ்ந்து, நடக்க ஆரம்பிக்கிறதை, எல்லோரும் பார்க்கிற மாதிரி, ஒரு சின்னக் கருமுட்டைல இருந்து, கொஞ்சம் கொஞ்சமா சதை, உறுப்பு வளர்ச்சி அடைஞ்சு, இதயம், உடம்பு, கை, கால் இப்படி முழு உருவம் அடைஞ்சு, அதுக்கு அப்புறம் சுவாசிக்க ஆரம்பிச்சு, அசைய ஆரம்பிச்சு, இப்படி அவளோட ஒவ்வொரு வளர்ச்சியை நான் மட்டுமே அனுபவிச்சவங்க. ஒரு சின்னக் கருல இருந்து, முழுக் குழந்தையா உருவானது எனக்குள்ள தான். அவ முதல் முறை உணர்ந்த ஆள், நான் தான். முதல் முத பேசுனதும் என்கூடத் தான். முதல் முறை எட்டி உதைச்சதும் என்னைத் தான். அப்பா யாருன்னு ஒரு குழந்தைக்குச் சொல்லித்தான் தெரியும். ஆனா என் முகத்தைக் கூடப் பார்க்காம, என்னோட ஸ்பரிசத்தை உணர்ந்து, அதுக்குப் பதில் சொல்லுவா பாருங்க, அப்படியே உடம்பெல்லாம் சிலிர்க்கும். அவ அசையும் பொழுது எல்லாம், அம்மான்னு என்னை அவ கூப்பிடுற மாதிரி இருக்கும். அந்தச் செகண்டே குழந்தையோட முகத்தைப் பார்க்கணும்னு மனசு கிடந்தது தவிக்கும். அந்தப் பாட்டுல வர்ற லைன் ரொம்ப உண்மைங்க. அம்மா தன்னையே பிழிஞ்சு தான், குழந்தைய இந்த உலகத்துக்குக் கொண்டு வராங்க. அம்மாவும் குழந்தையும் வேற வேற ஆள் இல்லை. ரெண்டு பெரும் ஒன்னுதாங்க. உருவம் தான் வேற. உயிர் ஒன்னு தான்.” என்றவளின் கைகள், தேஜாவை இறுக அணைத்துக்கொண்டது.

அவளின் ஒவ்வொரு கருத்துக்கும், அவளையே பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த கௌதமுக்கு அவள் மேல் இருந்த மதிப்பு வானளவு உயர்ந்த அதே நேரம், அவள் தாய்மை பற்றிய கூறிய விஷயத்தைக் கேட்கும்பொழுது, தேஜா தனக்கும், மிருதுளாவிற்கும் பிறந்த குழந்தையாக இருந்திருக்கக் கூடாதா! என்ற வருத்தம் ஒரு ஓரத்தில் உண்டானதை அவனால் தடுக்க முடியவில்லை. மிருதுளாவின் தாய்மையில் தன் பங்கு ஒரு சதவீதமாகவாவது இருந்திருக்கக் கூடாதா!! என்ற ஆசை, ஏக்கம் உண்டானது.

இப்படித் தன் நினைவில் மூழ்கி இருந்தவன், மிருதுளா இரண்டு முறை அழைத்த பின்பே, “ஹான்!! என்ன அம்மு??” என்றான் கேள்வியாக. “இல்லைங்க, யாழினி அவங்க போட்டோ ஒண்ணுகூட நான் இந்த வீட்டில பார்க்கல. ஏங்க??“ என்று பதிலுக்கு மிருதுளா கேட்க, “அது வந்து…” என்று தயங்கியவன், பின் “இல்லை அம்மு, உனக்கு எதுவும் கஷ்டமா, சங்கடமா இருக்கக் கூடாதுன்னு தான்.” என்று சொல்ல,

Advertisement

“நான் ஏற்கனவே கல்யாணம் ஆகி இன்னொருத்தர் கூட வாழ்ந்தவ, அது உங்களுக்கு எப்போவாவது சங்கடமா, கஷ்டமா இருந்திருக்கா?” என்று இவள் கேள்வி கேட்க, “ச்சே! ச்சே! நிச்சயம் கிடையாது அம்மு. ஒருவேளை நானும் நீயும் லவ் செஞ்சுட்டு, பிரிஞ்சு வேற யாரையோ கல்யாணம் செஞ்சு, அந்த வாழ்க்கை முடிஞ்சு மறுபடியும் ஒன்னு சேர்ந்திருந்தா, கஷ்டமா இருந்திருக்கலாம். ஆனா, நீ எனக்கு அறிமுகம் ஆகுறதுக்கு முன்னாடியே உன் வாழ்கையில நடந்தது. அப்புறம் எப்படி எனக்குக் கஷ்டமாவோ சங்கடமாவோ இருக்கும்.” என்று அவன் பதில் சொல்ல,

Advertisement

“அப்புறம் எனக்கு மட்டும் எப்படி அப்படித் தோணுங்க. யாழினி உங்க பாஸ்ட். நான் உங்க ப்ரெசென்ட். அவ்ளோதான். அதுக்கு மேல எனக்கு எதுவும் தெரியலைங்க. யாழினி உங்க ஒரு கண்ணுன்னா, நான் உங்க இன்னொரு கண். ஒரு கண் இன்னொரு கண்ணைப் பார்த்து எப்படிச் சங்கடமோ, இல்லை பொறாமையோ படும். எனக்கு எதுவும் இல்லைங்க. நீங்க சொன்ன மாதிரி யாழினி, ஒரு ஏஞ்சில். பாப்பாவை பாதுகாக்கிற ஏஞ்சில். அவங்க போட்டோ இல்லாம எப்படி.” என்று அவள் சொல்லவும், புன்னகையுடன் எழுந்து சென்றவன், பீரோவில் மேல் ஷெல்பில் இருந்து பிரேம் செய்யபட்டிருந்த அந்தப் பெரிய புகைப்படத்தை எடுத்து மிருதுளாவிடம் கொடுத்தான்.

அழகிய பிங்க் நிற புடவையில், கன்னங்களில் குழியும் அதில் வெட்கமும் நிறைந்த புன்னகையுடன் பக்கவாட்டில் கேமராவை பார்த்தபடி நின்று கொண்டிருந்தாள் யாழினி. அவளுக்குப் பின்னால் முழுவதும் வெள்ளை போர்வை போலப் பனி. அதில் கொத்தாகப் பிங்க் நிற பூக்களைச் சுமந்தபடி வரிசையாக மரங்கள் என்று பார்க்கவே, snow white beauty போல அழகாக இருந்தாள். அவர்களின் ஹனிமூன் பொழுது எடுத்தது.

புகைப்படத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்த மிருதுளா, “ரொம்ப அழகா இருக்காங்க.” என்று சொல்ல, அவள் பின்னில் இருந்து அணைத்திருந்த கெளதம் அவள் தோளில் தன் தாடையை வைத்துக்கொண்டே, “உன்னை மாதிரி.” என்று சொல்ல, அவனின் வார்த்தையில் மனம் நிறைந்து போனாள் இவள்.

Advertisement

பல நிமிடங்கள் புகைப்படத்தில் மூழ்கி போனவள், தன் தோளில் சில்லென்று நீர் துளியை உணரவும், புரிந்துக் கொண்டாள், கெளதம் அழுகிறான் என்று. ஆயினும் ஒன்றும் சொல்லாமல், அவன் கைவளைவுக்குள் நின்றவாறே, தன் கையை உயர்த்தி, தன் உள்ளங்கையை அவன் கன்னத்தில் வைத்தவள், அவனது மறு கன்னத்தில் மெதுவாக இதழ் பதித்து, அவன் நெற்றியோடு தன் நெற்றியை சாய்த்துக்கொண்டாள். காமம் இல்லாத, காதலும் இல்லாத, உனக்கு நான் இருக்கிறேன் என்கிற, தாய்மை முத்தம் அது.

பல நிமிடங்கள் கழித்து மிருதுளாவிடம் இருந்து விலகிய கெளதம், தன் கண்களைத் துடைத்துக்கொள்ளப் போக, அவன் கைகளைத் தடுத்தவள், கட்டிலில் அவனை உட்கார வைத்து, தன் சேலை முந்தானையால் அவனின் இரு கன்னத்தை அழுத்த துடைத்தவள், அவனின் நெற்றியில், இதழ்களை அழுத்தமாகப் பதிக்க, கௌதமிற்கு யாழினியின் நினைவில் மீண்டும் கண்கள் கலங்க, மிருதுளாவின் இடையை இறுக்கமாக அணைத்தவன், அவள் நெஞ்சில் முகப் புதைத்துச் சத்தமில்லாமல் கண்ணீர் வடித்தான்.

பல நிமிடங்கள் கழித்து இருவரும் விலக, மிருதுளாவோ யாழினியின் புகைப்படத்தை அவர்கள் வீட்டின் பூஜை அறையில் கொண்டு போய் மாட்ட, கெளதமோ, இறந்தவர்களின் புகைப்படத்தைப் பூஜை அறையில் வைக்கலாமா என்று தன் சந்தேகத்தைக் கேட்க, “ஏங்க?? இதுல என்ன தப்பிருக்கு?” என்றாள் பதிலுக்கு. “இல்லை அம்மு, சிலர் சொல்லி கேள்வி பட்டிருக்கேன். சாமி படத்தோட இறந்தவங்க போட்டோவை வைக்ககூடாது. வீட்டுக்கு நல்லது இல்லை. பேட் வைப்ரேஷன் கொடுக்கும். பிரச்சனை, சண்டை சச்சரவு வரும்னு.” என்று குழப்பமாகச் சொல்ல,

“நாம யாரோட போட்டோவையோ மாட்டலையேங்க. நம்ம கூட ஒன்னா வாழ்ந்தவங்க, நமக்கு நெருக்கமானவங்க போட்டோவை தானே மாட்டுறோம். வாழும்பொழுது நமக்காகவே, நமக்கு நல்லதை மட்டுமே நினைச்சு வாழ்ந்தவங்களால, எப்படிங்க இறந்து போன பிறகு நமக்குக் கெட்டதைக் கொடுக்க முடியும். சொல்லபோனா, நம்மளை கெட்டதில இருந்து காப்பாத்துறவங்களே அவங்க தான். நமக்கு ஒரு கெட்டது நடக்கப் போகுதுன்னா, அவங்க தானே ஏதாவது ஒரு வகையில நமக்குத் தெரியபடுத்த முயற்சி செய்றாங்க. அதை நாம தான புரிஞ்சிக்காம போயிடுறோம். அப்படிப் பட்டவங்களால எப்படிங்க பேட் வைப்ரேஷன் உண்டாக்க முடியும். மனுசனுக்கு உயிர் கொடுத்ததே கடவுள் தானங்க. இறந்ததும் நாம அவர் கிட்ட தான போறோம். மனுஷங்க எல்லாரும் கடவுளோட ஒரு துளி தான். அப்போ, அவர் பக்கத்தில, இறந்தவங்க போட்டோவை வைக்கிறதுல என்ன தப்புங்க. ஏன் அவங்க போட்டோவை நாம நம்ம பர்சில வச்சுக்கிட்டு வெளிய போகுறதில்லையா, அப்படி வச்சுக்கிட்டு போகுறவங்க எல்லாருக்கும் ஏதாவது ஆகுதா என்ன?? இல்லையே, அப்படி இருக்கச்ச, வீட்டுக்குள்ள வைக்கிறதுல என்ன தப்புங்க? வைக்கிறதும் வைக்காததும் அவங்வங்க மனசை பொருத்தது. நல்லது கெட்டது எல்லாம் உடம்புக்கு தாங்க. ஆத்மாக்கு இல்லை. அதுவும் யாழினி ஒரு ஏஞ்சில். இவங்க போட்டோவை இங்க தான் வைக்கணும்.” என்று கூறியவள், பூஜை அறையில் மாட்டிவிட்டு, கூடவே ஹாலில் இருந்த கௌதமின் தாய் போட்டோவையும் எடுத்துவந்து பூஜை அறையில் மாட்டினாள். இவள் செய்வதை ஒரு புன்னகையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் கெளதம்.

அதற்குள் காலிங் பெல் சத்தம் கேட்கவும், கெளதம் சென்று கதவை திறக்க, வெளியே சென்றிருந்த சேகர் நின்றிருந்தார். இந்நேரம் கௌதமை பார்த்து ஆச்சரியப்பட்டவர், “என்னப்பா இந்த நேரத்தில வீட்டில இருக்க?!! காலையில தான் ஆபீஸ் போன.” என்று கேட்கவும், “அது ஒன்னும் இல்ல அப்பா.” என்றவன் சந்துரு வந்து போனதை சுருக்கமாகச் சொன்னவன், “பாப்பாவை பத்தி உண்மை தெரிஞ்சதுல, மிருதுளா கொஞ்சம் அப்செட்டா இருந்தா, அதான் வீட்டுக்கு வந்தேன்.” என்றான். ஏற்கனவே ஆரா மூலம் அனைவருக்கும் தேஜா, மிருதுளாவின் குழந்தை என்று தெரியும்.

கெளதம் சொன்னதைக் கேட்டதும், சந்துருவை திட்டியவர், மிருதுளாவின் மனநிலை இப்பொழுது எப்படி இருக்கிறது என்று கேட்க, “ஹம், இப்போ ஓகே ப்பா.” என்று அவன் சொன்னதும், இப்பொழுது மருமகளைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தவர், சரி அவளைப் பார்த்துகொள் என்று கௌதமிடம் சொல்லிவிட்டு, பராயணக் களைப்பில் ஓய்வுடுக்க, அவர் அறைக்குள் சென்றுவிட, கெளதமோ, மிருதுளாவிடம் சொல்லிக்கொண்டு, மனதுக்குள் ஒரு முடிவுடன் அலுவகம் புறப்பட்டுச் சென்றான்.

நேரே அலுவகம் சென்றவன், தன் நண்பன் ஒருவனிடம் சந்துருவின் அலுவக பெயரை சொல்லி அங்கே, வேலை செய்பவர்கள் யாரையாவது தெரியுமா என்று விசாரிக்க, அவனின் நண்பன் ஒருவனின் தம்பி அங்கே ஹச்.ஆர் ஆக வேலை செய்வது தெரியவர, உடனே நண்பனின் மூலம் அவனைத் தொடர்பு கொண்ட கெளதம், அவனிடம் இருந்து சந்துருவின் வீட்டு முகவரியை வாங்கிக் கொண்டான்.

மாலை வேலை முடிந்ததும், நேரே காரை எடுத்துக்கொண்டு சந்துரு தற்பொழுது வசிக்கும் அபார்ட்மெண்ட் சென்ற கெளதம், காரை பார்க்கிங்கிள் நிறுத்திவிட்டு, அவனுக்காகக் காத்திருந்தான். கெளதம் அங்கே சென்ற அரை மணி நேரத்தில் சந்துரு தன் பைக்கில் அங்கே வந்தவன், வண்டியை பார்க் செய்துவிட்டு மேலே தன் வீட்டுக்குச் சென்றான். அவன் படியேறியதை பார்த்துக் கொண்டிருந்த கெளதம், அவன் சென்று பத்து நிமிடம் கழித்து மேலே அவன் வீட்டுக்கு சென்றவன், காலிங் பெல்லை அடித்துவிட்டுக் காத்திருந்தான்.

சில நொடிகள் கழித்துக் கதவை திறந்த சந்த்ருவிற்கு, வாசலில் நின்றிருந்த கௌதமை யார் என்று சட்டென்று நியாபகம் வரவில்லை. யோசனையுடன், “நீங்க யாரு?? என்ன வேணும்??” என்று கேட்க, அடுத்த நொடி சட்டென்று வீட்டுக்குள் நுழைந்த கெளதம், கதவை மூடினான். “ஏய்!! என்ன பண்ற?!!” என்று அதிர்ச்சியுடன் சந்துரு கத்தபோக, அவன் மூக்கிலேயே ஒரு குத்துவிட்டான் கெளதம். இந்தத் திடீர் தாக்குதலில் நிலை தடுமாறி போனவன், கெளதம் அடித்ததில் மூக்குப் பகுதியில் இருந்து தலை வரை ‘சுர்’ என்று வலிக்க, மூக்கை பிடித்துக் கொண்டான். அவனால் உடனே பேசகூட முடியவில்லை, கைகளை உயர்த்தி இவனை நிற்க சொல்ல, இருந்தும், அவனின் சட்டையைக் கொத்தாகப் பிடித்து, தன் அருகே இழுத்த கெளதம், “உனக்கு அன்னைக்கே சொன்னேன். என் பொண்டாட்டிக்கும் உனக்கும் இருந்த ரிலேஷன் முடிஞ்சு போச்சு. இனி அவ கிட்ட எதுவும் பிரச்சனை பண்ணாதன்னு. இருந்தும் தைரியமா என் வீட்டுக்கே வந்து, பெரிய நல்லவன் மாதிரி, உண்மையைச் சொல்றேன்னு அவ மனசை கஷ்டபடுதிட்டுப் போயிருக்க. உன்னை!!” என்றவன், அவனைப் புரட்டி எடுத்துவிட்டான்.

அதன் பின்பே சந்த்ருவிற்குப் புரிந்தது, கெளதம் யார் என்று. அத்தோடு, ‘நாம செஞ்ச வேலை சரியா வொர்க் அவுட் ஆகிடுச்சு போல, மிருதுளா இவனை விட்டுட்டு போயிட்டாளா? அந்த ஆத்திரத்தில தான் இங்க வந்திருக்கிறானா??’ என்று மனதுக்குள் நினைத்தவன், அதையே கௌதமிடம் நக்கலாகக் கேட்டுவிட, மீண்டும் அவன் முகத்தில் ஒரு குத்துவிட்டவன், “மிருதுளாவை பத்தி உனக்கு முழுசா தெரியலடா. கொடுமை படுத்துன உன்னையே மன்னிச்சவ, என்னை எவ்வளவு விரும்புறான்னு உனக்குத் தெரியாது. அதை உன்கிட்ட சொல்லனும்னும் எனக்கு அவசியம் இல்லை. நீ என்ன தகுடுதனம் செஞ்சாலும் சரி, தலை கீழா நின்னாலும் சரி, உன்னால ஒரு **** புடுங்க முடியாது. அவ எப்போவும், மிஸ்ஸஸ் கெளதம் தான். இப்போ நீ வாங்குன அடியிலேயே நான் யார்ன்னு தெரிஞ்சிருக்கும்.” என்றவன், அடிபட்டு கீழே கிடந்தவனை ஒரு புழுவை பார்ப்பது போலப் பார்த்தவன், “இதுக்கு மேலையும் எங்களுக்கு நடுவில வந்த, சத்தியமா சொல்றேன் டா, உயிரோடவே விடமாட்டேன் உன்னை.” என்று கர்ஜித்தவன், கோபத்துடன் விரல் நீட்டி எச்சரித்துவிட்டு, கதவை திறந்துகொண்டு விறுவிறுவென்று சென்றான்.

வீட்டுக்கு வரும்பொழுதே ஜெய்க்கு போன் செய்த கெளதம், மிருதுளாவுக்கும் தனக்கும் நடந்ததைச் சுருக்கமாகச் சொல்லி, தற்பொழுது எந்தப் பிரச்னையும் இல்லை என்றும், மிருதுளாவை நினைத்து கவலைப்பட வேண்டாம் என்று சொல்ல, ஜெய்யோ அடுத்த நாள் தாங்கள் இந்தியாவுக்குப் புறப்படுவதைப் பற்றிச் சொல்ல, இவனோ, “ஏன் ஜெய், ட்ரிப் முடிச்சிட்டு வாங்க. அதான் இங்க எந்தப் பிரச்சனையும் இல்லையே. கல்யாணத்துக்கு அப்புறம் பஸ்ட் ட்ரிப், எதுக்குக் கேன்சல் பண்ற??” என்று சொல்ல, அங்கே ஆராவோ, “இல்லை அத்தான். ட்ரிப் எப்போவேனா போகலாம். நான் இப்போ அக்காவை பார்க்கணும்.” என்று உறுதியாகச் சொல்ல, கௌதமால் அதற்கு மேல் அவளைக் கன்வின்ஸ் செய்ய முடியவில்லை. சரி என்றவன், அவர்கள் புறப்படும் நேரம், பிளைட் எண், போன்ற விவரங்களைக் கேட்டுக் கொண்டான்.

சிறிது நேரத்தில் வீடு வந்து சேர்ந்தவன், ஏன் தாமதம் என்று கேட்ட மனைவியிடம், நண்பனுடன் பேசிவிட்டு வந்ததாகப் பொய் சொல்லிவிட்டு, உடைமாற்ற சென்றுவிட்டான். பின் இரவு சேகர் சாப்பிட்டு முடித்ததும், கௌதமிற்கும் சாப்பாடு எடுத்து வைத்த மிருதுளா, தேஜாவிற்கு உணவு ஊட்டிவிட்டு, அவளைப் படுக்க வைத்துவிட்டு மீண்டும் ஹாலிற்கு வர, கெளதம் சாப்பிடாமல், வெறுமனே அமர்ந்திருக்க, அவன் தட்டில் இருந்த உணவு அப்படியே இருந்தது.

“என்னங்க சாப்பிடலையா??” என்று கெளதம் அருகில் வந்து கேட்க, அவனோ எப்படிச் சொல்வது என்று யோசித்துக் கொண்டிருந்தான். சந்துருவை அடித்ததில், இவனால் விரல்களை அசைக்க முடியவில்லை. பின் எப்படிச் சாப்பிட!! கெளதம் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, “என்னங்க, நான் கேட்டுட்டு இருக்கேன். நீங்க அமைதியா இருக்கீங்க.” என்றவள், ஒருவேளை அவனுக்கு உடம்பு சரி இல்லையோ என நினைத்து, அவன் நெற்றியில் கைவைத்து பார்த்துவிட்டு, அவன் கழுத்தில் கைவைக்க எண்ணி, அவனின் கையை விலக்க, “ஸ்ஸ்ஸ்!!” என்று வலியில் முகத்தைச் சுருக்கினான் அவன். பதறிபோனவள், “என்னங்க!! என்ன ஆச்சு?!!!” என்று கவலையுடன் கேட்க, என்ன சொல்ல என்று யோசித்தவன், “அது ஒன்னும் இல்லை அம்மு, ஆபீஸ்ல கதவுல இடிச்சிகிட்டேன்.” என்று எதையோ சொல்லி வைத்தான்.

அவன் கையை வலிக்காமல் பிடித்துப்பார்த்த மிருதுளா, “என்னங்க நீங்க, வந்ததும் சொல்லி இருக்கலாம்ல, ஒத்தடம் கொடுத்து இருக்கலாம். இப்போ பாருங்க, எப்படி வீங்கி இருக்கு.” என்று அவனைக் கண்டித்தவள், உடனே ஐஸ் கட்டிகளை எடுத்துத் துணியில் போட்டு கட்டி எடுத்து வந்து அவனின் விரல்களில் ஒத்தடம் கொடுத்தாள். பின் அவனுக்கு உணவை ஊட்டிவிட்டு, முகம் துடைத்துவிட்டு என்று எல்லாம் செய்ய, கெளதம் அவள் முகத்தைத் தான் பார்த்துக் கொண்டிருந்தான். ஏனோ இன்று மிருதுளா அவனுக்குப் புதிதாகத் தெரிந்தாள். இவள் மேல் தனக்கு எவ்வளவு உரிமை உணர்வு இருந்திருந்தால், சந்துருவை போட்டு அந்த அடி அடித்திருப்பேன். இதில் கொன்று விடுவேன் என்ற மிரட்டல் வேறு. தன்னை நினைத்தே சிரித்துக் கொண்டான். காதல் இருக்கும் இடத்தில தானே, உரிமை உணர்வு தானாக வந்து ஒட்டிக்கொள்ளும்.

பின் இரவு எல்லாவற்றையும் எடுத்து வைத்துவிட்டு, அறைக்குள் வந்த மிருதுளா, கட்டிலில் குழந்தையின் அருகில் படுத்துக்கொள்ள, அவளின் அந்தப் பக்கம் படுத்திருந்த கெளதம், மெல்ல இவளை அணைத்துக் கொண்டான். இவளோ பதறிபோய், “பார்த்துங்க, கை வலிக்கப் போகுது.” என்று சொல்ல, “அதெல்லாம் ஒன்னும் வலிக்காது.” என்று சொன்னவன், சலுகையாக அவள் தோள் வளைவில் முகம் புதைத்துக்கொண்டான்.

சில நிமிடங்கள் அப்படியே படுத்திருந்தவன், “ஐ லவ் யு அம்மு.” என்றான் நெகிழ்ச்சியாக. தன் இடையில் இருக்கும் அவன் கைகளோடு தன் கைகளைக் கோர்த்துக் கொண்டவள், “ஐ லவ் யு லாம் சொல்றீங்க. என்ன ஆச்சு என் புருஷனுக்கு.” என்று சொல்லி சிரிக்க, “நானாவது இப்போ சொன்னேன். நீ இன்னும் சொல்லல.” என்றவன், அவள் தோளில் வலிக்காமல் கடித்துவைக்க, “ஆ!! வலிக்குதுங்க.” என்றவள் வலியில் முகத்தைச் சுருக்க, “நீ ஐ லவ் யு சொல்ற வரை சும்மா இருக்க மாட்டேன்.” என்றவன், இம்முறை அவளுக்குக் கிச்சு கிச்சு மூட்ட, “ ஐயோ! விடுங்க பாப்பா எழுந்துக்கப் போறா.” என்று அவள் பதிலுக்குச் சிரிப்புடன் சொல்ல, “அப்போ நான் கேட்டதை நீ சொல்லு.” என்று அவன் மீண்டும் சொல்ல, “சரி ஐ லவ் யு.” என்றாள் மொட்டையாக.

அவளை வலுகட்டயாமாகத் தன் பக்கம் திரும்பி படுக்கச் சொன்னவன், “இப்போ சொல்லு அம்மு. அதுவும் என் பேரை சொல்லி சொல்லு. அப்போதான் விடுவேன்.” என்றவன், அவள் முகத்தையே விழுங்கிவிடுவது போலப் பார்க்க, அவன் பார்வை வீச்சில், தலைய குனிந்துக் கொண்டவள், வெட்கத்துடன், “ஐ லவ் யு கெளதம்.” என்று சொல்ல, அவனோ தன் கண்களைப் பார்த்து சொல்லச் சொல்ல, “நீங்க ரொம்பப் பண்றீங்க.“ என்று அலுத்துக் கொள்பவள் போலச் சொன்னவள், அவன் முகத்தைப் பார்த்து, அவன் கண்களை ஊடுருவி, “ஐ லவ் யு சோ மச் கெளதம்!” என்று காற்றே வராத குரலில் வெட்கத்துடன் சொல்ல, அடுத்த நொடி, இவள் இதழ்கள், அவனின் இதழ்களுக்கு இடையில்.

அடுத்த நாள் காலை, அலுவகம் புறப்படாமல் இருந்தவனிடம், ஏன் என்று மிருதுளா கேட்க, அவனோ இன்று மதியத்துக்கு மேல் தான் போக வேண்டி இருப்பதாகச் சொன்னான். உண்மையில், ஆரா வரும் நேரம், மிருதுளா எப்படி நடந்துகொள்வாளோ என்ற பயத்தில் தான், ஆரா வந்த பிறகு அலுவகம் செல்லலாம் என்று முடிவு செய்திருந்தான். ஏனெனில் அவனுக்குத் தெரியும், தான் வரும்பொழுதே மிருதுளா எவ்வளவு கோபமாக இருந்தாள் என்று, இதில் ஆராவிற்குத் தான் எல்லோருக்கும் முன்பே உண்மை தெரியும். அதுவும் இல்லாமல், மிருதுளாவிற்குக் கூடப் பிறந்த தங்கை இவள். அப்படி இருந்தும், தன் தங்கை தன்னிடம் உண்மையைச் சொல்லவில்லையே என்று கொஞ்சமாவது மிருதுளாவிற்குக் கோபம் இருக்கும் என்று நம்பினான். அதன் வெளிபாடு எப்படி இருக்கும் என்று தான் கௌதமிற்குக் கணிக்க முடியவில்லை.

சொன்னது போலவே, காலை எட்டரை மணி பிளைட்டில் புறப்பட்டு, பெங்களுர் ஏர்போர்ட்டில் பதினோரு மணி அளவில் வந்து இறங்கிய ஜெய்யும், ஆராவும், டாக்சி பிடித்து வீடு வந்து சேர, கிட்டத்தட்ட அரை மணிநேரத்துக்கு மேல் ஆகிவிட்டது.

“அக்கா!!” என்றபடி வீட்டிற்குள் வந்த தங்கையை நோக்கி சென்ற மிருதுளா, ஓங்கி ‘பளார்’ என்று அவளது கன்னத்தில் அரைந்தாள். யாரும் இதை எதிர்பார்க்கவில்லை. “அண்ணி!!” என்றபடி தன் மனைவியைத் தன் அருகில் இழுத்துக் கொண்டான் ஜெய். கெளதமோ, “அம்மு, என்னதிது..!!” என்றபடி, மிருதுளாவை பின்னாடி இழுத்தான்.

விழுந்த அரையில், கன்னத்தில் கைவைத்த ஆரா, வாழ்நாளில் முதல் முறை தன்னை அடித்த அக்காவை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டு நின்றாள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!