Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 37.1

அத்தியாயம் 37 (1)

“அம்மு!! லஞ்ச எடுத்து வச்சுட்டியா?? ஆபிஸ் டைம் ஆச்சு.” என்று தங்கள் அறையில் இருந்து குரல் கொடுத்தபடி, ஹால் டைனிங் டேபிளில் வந்து அமர்ந்தான் கெளதம். அப்பொழுது வாசலில் காலிங் பெல் சத்தம் கேட்கவும், சோபாவில் அமர்ந்து ஷூ போட்டுக் கொண்டிருந்த ஜெய், எழுந்து வாசலுக்குச் சென்று பார்க்க, தபால்காரர் ஒருவர் நின்று கொண்டிருந்தார். என்ன விஷயம் என்று இவன் கேட்க, “கெளதம் இருக்காங்களா?? அவருக்கு ரெஜிஸ்டர் போஸ்ட் வந்திருக்கு.” என்று கன்னடத்தில் அவர் கூற, “ஒரு நிமிஷம் இருங்க.” என்று அவரிடம் சொல்லிவிட்டு, உள்ளே சென்று கௌதமிடம் விவரத்தை கூறினான் ஜெய்.

ஜெய் சொன்னதும், எழுந்து வந்து கையெழுத்து போட்டு, தபால்காரரிடம் இருந்து அந்த நீளமான கவரை வாங்கியவன், எங்கிருந்து வந்திருக்கிறது என்று பார்க்க, சென்னை என்று தெரிந்தது. ‘சென்னையில் இருந்து, யாரு அனுப்பி இருப்பா??!!’ என்ற யோசனையுடன் அதைப் பிரித்து உள்ளே இருந்த பேப்பரை எடுத்து பார்க்க, அது ஒரு ஸ்டாம்ப்பேட் பேப்பர் போல இருந்தது. சரி என்று அதில் இருந்த செய்தியை படிக்கப் படிக்க அதிர்ந்து போனான் கெளதம். அதில் சொல்லபட்டிருந்த விஷயம் இதுதான்.

‘எனது கிளைன்ட் சந்துரு என்பவருடைய சட்டபூர்வ மனைவியை, தாங்கள் (கெளதம் என்பவர்) சட்டத்துக்குப் புறம்பான வகையில், கடத்தி சென்று மிரட்டி திருமணம் செய்துள்ளீர்கள். ஆகவே, இந்த நோட்டீஸ் கிடைத்த ஒரு வாரத்திற்குள், அவரது மனைவியை அவரிடம் ஒப்படைக்க வேண்டும். இல்லையென்றால், தாங்கள் மீது கிரிமினல் வழக்குத் தொடரப்படும்.’



Advertisement

முழுவதும் படித்து முடித்ததும், அதிர்ச்சியில் தலையைப் பிடித்துக்கொண்டு அப்படியே சோபாவில் அமர்ந்துவிட்டான். என்ன ஆச்சு என்று அனைவரும் கேட்டும் ஒன்றும் சொல்லாமல் அமைதியாக இருக்க, ஜெய் தான் அவன் கையில் இருந்த கடிதத்தை வாங்கிப் படிக்க, அவனுமே அதிர்ந்தவன், “என்ன அண்ணா இதெல்லாம்??” என்று அதிர்ச்சியுடன் கௌதமிடம் கேட்க, அவனோ, “புரியல டா!!” என்று சோர்வுடன் சொன்னான்.

அந்த நேரம் கிட்சனில் இருந்து ஹாலிற்கு வந்த மிருதுளா, என்ன விஷயம் என்று கேட்க, ஜெய் அவளிடம் அந்த நோட்டிஸில் இருந்தவற்றைச் சுருக்கமாகக் கூறினான். பக்கத்தில் நின்றிருந்த ஆராவும், எல்லாவற்றையும் கேட்டாள். அனைத்தையும் கேட்ட மிருதுளாவிற்கு உள்ளுக்குள் ஒருவித பயம் சூழ்ந்துகொள்ள, சோர்வுடன் அமர்ந்திருக்கும் கௌதமின் அருகில் சென்றவள், “என்னங்க??” என்று அழைக்க, நிமிர்ந்து இவளை பார்த்தவனுக்குத் தன் மனைவியின் முகத்தில் இருந்த கலக்கத்தைப் பார்த்ததும், சந்துருவை நினைத்து, சுர்ரென்று கோபம் தலைக்கேறியது.

“அன்னைக்கே அவனைக் கொன்னு போட்டு இருக்கணும். விட்டுட்டு வந்தது தப்பு. அதான் இவ்ளோ தூரம் போகத் தைரியம் வந்திருக்கு.” என்று ஆத்திரத்தில் வார்த்தையை விட, மிருதுளாவோ, “நீங்க அவரைப் போய்ப் பார்த்தீங்களா??” என்று குழப்பத்துடன் கேட்க, அப்பொழுதுதான் தான் சொன்னதை உணர்ந்தவன், சந்துரு வீட்டிற்குப் போன அன்று நடந்த அனைத்தையும் சொன்னான்.

Advertisement

அனைத்தையும் கேட்டவள் எதுவும் சொல்லவில்லை. அன்றைக்குக் கெளதம் இருந்த கோவத்தில் நிச்சயம் எதாவது செய்திருப்பான் என்று நினைத்திருந்தாள். அதுதான் நடந்திருக்கு. ஆனால் இது தேவையா என்ற எண்ணம் தான் இப்பொழுது மிருதுளாவிற்கு. இருவரும் தங்கள் எண்ணங்களில் மூழ்கியிருக்க, ஜெய் தான், “அண்ணா, அந்த நோடிஸ்ல இருக்கிறதுக்கு என்ன அர்த்தம்??? என்ன நினைச்சிட்டு இருக்கான் அந்தச் சந்துரு!” என்று கோபமாகப் பேச, அதில் இன்னுமே கடுபேறிய கெளதம், “ஆமாம்னடா. அவன் என் கையில அடி வங்கி சாகப் போறான். என்ன தைரியம் இருந்தா இப்படி ஒரு நோட்டிஸ் அனுப்புவான். எங்க கல்யாணம் இல்லீகல் கல்யாணமா?? என் பொண்டாட்டியை அவன்கிட்ட வந்து ஒப்படைக்கனுமாம். அன்னைக்கே மிருதுளாகிட்ட அவன் பேசிட்டு போனதுக்கு அவன் வாயை உடைச்சிருக்கனும். விட்டுட்டேன்.” என்று கோபத்தில் பேசிக்கொண்டே போனவனுக்கு அப்பொழுதுதான் அந்தக் கேள்வி மனதுக்குள் உதித்தது.

Advertisement

சட்டென்று இருக்கையில் இருந்து எழுந்தவன், “ரிது, அவன்கிட்ட இருந்து டிவோர்ஸ் வாங்கினியா இல்லையா??” என்று கேட்டவனுக்கு, ‘டிவோர்ஸ் வாங்கி இருந்தா, எப்படி அவனால், வக்கீல் வரை சென்று இப்படி ஒரு நோட்ஸ் அனுப்ப முடியும்??’ என்ற கேள்வி. மிருதுளா தயங்குவதைப் பார்த்ததும், இவனுக்கு இருந்த கோவம் அவள் மீது திரும்ப, “சொல்லு மிருதுளா, டிவோர்ஸ் வாங்குனியா இல்லையா??” என்று சற்றே குரலை உயர்த்த, அதில் திடுகிட்டவள், இல்லை என்பது போலத் தலையை ஆட்ட, “அறிவிருக்கா உனக்கு!! அவனை விட்டு பிரிஞ்சு வந்ததும், அதைதானே முதல்ல செஞ்சு இருக்கணும். எந்தத் தைரியத்தில, அப்படியே விட்டுடீங்க. படிச்சு தான இருக்க ரிது, இதுகூடவா தெரியாது.” என்று சத்தம் போட,

மிருதுளாவிற்கு முதல் முறை அவனின் அதட்டலை பார்த்ததும், கைகால் எல்லாம் நடுங்க ஆரம்பிக்க, கண்களில் நீர் நிறைந்துவிட்டது. அதைப் பார்த்ததும், சற்றே தன்னைக் கட்டுபடுத்திக் கொண்டவன், ஆராவிடம் திரும்பி, “ஏன் ஆரா?? மாமா எதுவும் சொல்லலையா?” என்று கேட்க, “இல்லை அத்தான். அது வந்து, அப்போ இருந்த நிலமையில நானும் இதைப் பத்தி யோசிக்கல. அப்பாகிட்டயும் இதைப் பத்தி பேசலை.” என்று தயங்கி தயங்கி சொன்னாள்.

அவள் பதிலில், “ம்ப்ச்!!” என்று தனது அதிர்ப்தியை காட்டியவன், வந்திருந்த கடிதத்தை எடுத்துக்கொண்டு, விறுவிறுவென்று எதிர் வீட்டில் இருக்கும் தனது மாமனாரை தேடிச் சென்றான்.

Advertisement

ஹாலில் இரு தந்தைமார்களும் அமர்ந்து பேசிக் கொண்டிருக்க, அங்கே சென்ற கெளதம், இருவரிடமும் விஷயத்தைக் கூறியவன், மோகனிடம், “மாமா, டிவோர்ஸ் வாங்குறது எவ்வளவு முக்கியமான விஷயம். அதை ஏன் நீங்க செய்யல??” என்று கேட்டவனுக்கு, இதால் எதுவும் பிரச்சனை வந்து மிருதுளாவை பிரிந்துவிடுவோமோ என்ற ஆதங்கம், கோபம், பயம், ஏக்கம் எல்லாம். அதுதான் அவனின் கோவத்துக்குக் காரணம்.

கெளதம் அப்படிக் கேட்டதும், அவனின் கோபம் மோகனுக்கு நன்றாகப் புரிந்தது. பின்னே, பெற்ற தகப்பன் தனக்கே, ஒரு வித கலக்கம் வரும்பொழுது, தாலி கட்டிய கணவன் அவனுக்கு இருக்காதா!! ஒருவித குற்ற உணர்வு அவரின் முகத்திலும் குரலிலும் இருந்தது. “அது, மாப்பிளை. ஏதோ கோவத்தில சந்துரு தம்பி, வேண்டாம்ன்னு போய்ட்டாங்க நினைச்சோம். ஒரு மூணு மாசமோ, ஆரு மாசமோ போனா, கோபம் எல்லாம் சரி ஆகி, திரும்பி வந்துடுவாருன்னு நினைச்சோம். என்ன இருந்தாலும் பெண்ணைப் பெத்தவன் ஆச்சே மாப்பிள்ளை. அவ நல்லபடியா வாழணும்னு தானே நினைப்போம். நாங்களே எப்படி விவாகரத்துக் கேஸ் போட முடியும். அப்புறம் கிட்டத்தட்ட ஒன்றரை வருஷம் ஆகிடுச்சு. யாரும் வரல. சரி அவங்களுக்கு இஷ்டம் இல்லைன்னு அதுக்கு மேல விட்டுட்டோம். அப்போதான் ஆரா உங்க ரெண்டு பேர் கல்யாணம் பத்தி சொன்னா. அந்தச் சந்தோஷத்தில இதை மறந்துட்டேன். அதுவும் இல்லாம, வேண்டாம்ன்னு போனவங்களால பிரச்சனை வரும்னு யாருக்கு தெரியும் மாப்பிள்ளை. இந்தச் சந்துரு தம்பி இப்படிச் செய்யும்னு எதிர்பார்கவே இல்லை. நான் போய் அந்தத் தம்பிகிட்ட பேசுறேன்.” என்று அவர் சொல்ல,

அவரைத் தடுத்த கெளதம், “வேண்டாம் மாமா. அவன் ஒரு முடிவோட தான் இப்படி எல்லாம் செய்றான். அவன்கிட்ட நீங்க போய்ப் பேச வேண்டாம். அவன் யார் எது சொன்னாலும் கேட்க மாட்டன். வாசல் வரைக்கும் பிரச்சனை வந்துடுச்சு. இனி பேஸ் செஞ்சு தான் ஆகணும். நான் இதைப் பார்த்துகிறேன் மாமா.” என்று சொன்னவன், தன் வீட்டுக்கு வந்து, அலுவகத்திற்குப் போன் செய்து பெர்மிஷன் வாங்கிக் கொண்டவன், கையில் அந்த நோட்டீசை வைத்துக்கொண்டு அதை வெறித்தபடி, அடுத்து என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருந்தான். நண்பர்களுக்குத் தெரிந்த வக்கீல் யாராவது இருகிறார்களா என்று யோசித்துக் கொண்டிருந்தவனின் கருத்தில், அப்பொழுதுதான் அந்தப் பேப்பரில் மேலே வக்கீல் பற்றிய விவரத்தில் இருந்த பெயர் கண்ணில் பட்டது.

‘திருமதி. ராஜேஸ்வரி – ஹைகோர்ட் வழக்கறிஞர். சென்னை’ என்று போட்டிருந்த விவரத்தை பார்த்ததும், இந்தப் பெயரை எங்கேயோ கேட்டது போல இருக்கிறதே! என்று மீண்டும் மீண்டும் யோசித்தவனுக்கு, சட்டென்று நியாபகம் வந்தது. அவனின் கல்லூரி நண்பன் ஒருவனின் சொந்தத்தில் யாரோ இதே பெயரில் வக்கீலாகச் சென்னையில் வேலை செய்து கொண்டிருக்கிரார்கள் என்று. ஒருவேளை இவர்கள் அவர்களாக இருந்தால், நம் பக்க நியாத்தை எடுத்து சொல்ல உதவியாக இருக்குமே! ‘ என்று தோன்ற,

ஏதோ ஒரு பிடிப்புக் கிடைத்தது போல, பெங்களூரிவில், வேறொரு நிறுவனத்தில் பணிபுரியும் அந்தக் கல்லூரி நண்பனுக்குப் போன் போட்டான். இரண்டு ரிங் அடித்த பிறகு போன் எடுக்கபட,

“ஹலோ பரத்!”

“ஹாய் மச்சி, என்னடா ரொம்ப நாளா போனையே காணோம். என்ன ஆள் ரொம்பப் பிஸியா?!!” என்று அந்தப் பரத் என்பவன் உற்சாகமாகப் பேச,

அதன்பின் சில நல விசாரிப்புக்கு பிறகு,

“மச்சி, உன் சொந்தகாரங்க ஒருத்தவங்க லாயரா இருக்காங்க சொன்னல, அவங்க பேர் என்னடா??!”

“எங்க அத்தை டா. பேரு ராஜேஸ்வரி. சென்னை ஹைகோர்டில லாயரா இருக்காங்க. ஏன் டா, என்ன விஷயம்?!!”

“அது, ஒரு ப்ராப்ளம் டா.” என்றவன், சந்துருவை பற்றிச் சுருக்கமாகச் சொல்ல, “என்னடா, இது என்ன புதுத் தொல்லை. எவன் மச்சி அவன்?!! பெரிய இவனா. அதான் பிரிஞ்சு போயிட்டானே. அப்புறம் எதுக்கு இப்படி ஒரு கேஸ் போட்டு இருக்கான். அவன் என்ன லூஸா டா.” என்று பதிலுக்குப் பரத் சந்துருவை திட்ட, “டீடெய்ள்ஸ் எல்லாத்தையும் விவரமா அப்புறம் சொல்றேன் டா. இப்போ அர்ஜெண்டா ஒரு ஹெல்ப். உங்க அத்தை கிட்ட இருந்து, எனக்கு ஒரு விவரம் கேட்டு சொல்றியா டா.”

“என்ன மச்சி, ஹெல்ப்ன்னு கேட்டுகிட்டு. கேட்டு சொல்லு டான்னா சொல்ல போறேன். என்ன விவரம் வேணும் சொல்லு??”

“அவங்ககிட்ட, சந்துருன்றவருக்காக, பெங்களூர்ல கெளதம்ன்ற பேருக்கு எதுவும் நோடீஸ் அனுப்பி இருக்கீங்களான்னு கேட்டு சொல்லு டா. ஒருவேளை நோடீஸ் அனுப்பி இருக்கிறவங்க, உங்க அத்தை பேர்ல இருக்கிற வேற ஒருத்தவங்களா இருக்கலாம்ல.”

“அட!! ஆமாம் டா. சரி இதோ இப்போவே கேட்டுட்டு உனக்குக் கால் பண்றேன்.” என்று சொல்லிவிட்டு பரத் போனை வைக்கக் கௌதமிற்கு, ஏதாவது நல்ல செய்தி கிடைக்காதா என்று ரொம்பவும் எதிர்பார்ப்பு இருந்தது.

ஆராவும், ஜெய்யும் அலுவகம் கிளம்பி சென்று இருந்தனர். குழந்தையை விளையாட விட்டுவிட்டு, கெளதம் அருகில் வந்து அமர்ந்த மிருதுளா, கண்களில் கலக்கத்துடன், அவன் கைகளில் தன் கையை வைக்க, தன் நினைவுகளில் இருந்து மீண்டவன், திரும்பி மனைவியைப் பார்க, அவளது கவலை இவனுக்குப் புரிந்தது. மெதுவாக அவளைத் தோளோடு அணைத்துக் கொண்டவன், “என் அம்முகுட்டி எதுக்கு இப்படி உம்ம்ன்னு முகத்தை வச்சு இருக்கீங்க!! தப்பா எதுவும் நடக்க நான் விட்டுடுவேனா அம்மு. ஒன்னும் பிரச்சனை இல்லை டா. நீ எதையும் நினைச்சு கவலை படாத. நான் இருக்கேன்.” என்று அவளுக்கு ஆறுதல் கூற, மிருதுளாவோ, “எனக்குப் பயமா இருக்குங்க.” என்றவளின் குரல் நடுங்க, கண்கள் கலங்கி, ஒரு துளி கண்ணீர் கௌதமின் கைகளில் விழுந்தது.

அவள் கண்ணீரை உணர்ந்ததுமே, அவசரமாக மிருதுளாவை நிமிர்தியவன், அவள் கண்களைத் துடைத்துவிட்டு, “என்ன அம்மு நீ!! எதுக்கு அழறா டா. அதான் நான் இருக்கேனே. நான் இருக்கிற வரை யாராலும் ஒன்னும் பண்ண முடியாது.” என்று சொன்னவன், அவள் முகத்தைக் கைகளில் ஏந்தி, “அப்படியே உன்னையும், பாப்பாவையும் தூக்கிட்டு போய், எழு கடல் எழு மழை தாண்டி கொண்டு போய் வச்சுடுவேன். அப்புறம் எவன் உங்களைத் தேடி வர்றான்னு பார்க்கலாம்.” என்று விளையாட்டு போலச் சொல்ல, மிருதுளாவோ கௌதமின் பாவனையில் புன்னகை புரிய, அவளின் உதட்டின் இரு முனையிலும் விரல்வைத்து, இழுத்தவன், “என் பொண்டாட்டிக்கு சிரிக்கிறதுல என்ன கஞ்சத்தனம். இப்படிச் சிரிக்கணும்.” என்று சொல்ல, உள்ளுக்குள் பயம் இருந்தாலும், கணவனுக்காகச் செயற்கை சிரிப்பை உதிர்த்தாள் மிருதுளா.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!