Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Margazhi Poove

மார்கழிப் பூவே..! – 5

பூ 5:

 

“என்னங்க விஜய் இப்படி சொல்லிட்டு போறான்..? என்றார் வள்ளியம்மை ஆற்றாமையுடன்.

“அவனைப் பத்திதான் உனக்கு தெரியுமே வள்ளியம்மை. அவனுக்கு எதுவும் யாசகமா கேட்கப் பிடிக்காதுன்னு..!



Advertisement

“விஜய்க்கு தான் துளசின்னு எழுதியிருந்தா அதை யாராலும் மாத்த முடியாது. ஆனா துளசி இப்படி இந்த அளவுக்கு விஜய்யை வெருப்பான்னு நான் நினைக்கவே இல்லிங்க..! என்ற வள்ளியம்மைக்கு கண்கள் கலங்கியது.

“கவலைப் படாத வள்ளியம்மை.துளசி பக்கமும் நாம பார்க்கணும்.நடந்த பாதி விஷயம் துளசிக்குத் தெரியாது.துளசிக்குத் தெரியனும்ன்னா அதுக்கு முதல்ல விஜய்க்கு எல்லாம் தெரியனும். இதெல்லாம் இப்போதைக்கு நடக்குற காரியமில்லை. ரெண்டு பேருக்கும் ஒரு கல்யாணத்தைப் பண்ணி வச்சுட்டா..காலப்போக்குல எல்லாமே சரியாயிடும்ன்னு நினைச்சேன். அதுக்கும் வாய்ப்பில்லைங்கிற மாதிரி பேசிட்டு போறாங்க ரெண்டு பேரும்.ஆனா, இந்த ரத்னவேல் சொன்னா சொன்னது தான்..! என்றார் உறுதியாக.

இவர்கள் பேசிக் கொண்டிருந்ததைக் கேட்ட அருணுக்கு கொஞ்சம் புரிந்தது போலவும் இருந்தது. கொஞ்சம் புரியாததைப் போலவும் இருந்தது.

Advertisement

“இந்த துளசி என் அண்ணனைக் கட்ட குடுத்து வச்சிருக்கணும். ஏம்மா இப்படிப் பண்றா…? என்றான் தாய் நீலாவதியிடம்.

Advertisement

“உண்மைதான் அருண்..! ஆனா அவ மனசுல என்ன இருக்குன்னு நமக்குத் தெரியாதுல.எல்லாம் நல்லதா நடந்தா சரி.. என்றார்.

“எங்க நடக்குறது..? அதான் விஜய் அண்ணா தெளிவா சொல்லிட்டாரே..இனிமே இதைப் பத்தி பேச வேண்டாம்ன்னு. அவர் ஒரு முடிவு எடுத்தா அதுல இருந்து மாறமாட்டார்..! என்றான் அருண்.

“ஒருவேளை துளசிக்கு உன்னைப் பிடிச்சிருக்கோ என்னமோ..? என்றார் நீலா சிரிக்காமல்.

Advertisement

“ஏன்மா..? ஏன்..? நான் நல்லா இருக்குறது உங்களுக்குப் பிடிக்கலையா..? அவ என்னை ஒரு ஆளாவே மதிக்க மாட்டா..இதுல நீங்க வேற.அவ ரொம்ப நல்லவம்மா.அண்ணனுக்கு அவதான் பெஸ்ட்..! என்றான் கனிந்த முகத்துடன்.

“பார்ப்போம் அருண்..! என்ன நடக்குதுன்னு..!நீ இதைப் பத்தி யோசிக்கிறத விட்டுட்டு ஆபீஸ் கிளம்புற வழியைப் பாரு.இதெல்லாம் தாத்தா பார்த்துப்பார்.. என்றார் நீலா.

“இந்த ஒல்ட்மேன் தான் இவ்வளவு பிரச்சனைக்கும் காரணம்..! வீடு…. வீடா இருந்தா பரவாயில்லை.கமேண்டோ படை மாதிரி இருக்கு. சில நேரம் சலிப்பா கூட இருக்கும்மா..! என்றான் அருண் கடுப்புடன்.

“மருந்து கசக்கத் தான் செய்யும் அருண்..! என்ற பாட்டியின் குரலில் திரும்பியவன்,

“ஏன் பாட்டி ஏன்..? இல்லை ஏன்னு கேட்குறேன்..! எல்லார் வீட்லயும் பாட்டின்னா அவ்வளவு செல்லம். இங்க நீங்க மட்டும் விதிவிலக்கு. உங்க  புருஷனுக்கு மேல நீங்க இருக்கீங்க..? என்றான் அருண்.

“டேய் படவா..!உனக்கு கொஞ்சம் செல்லம் கொடுத்தது தப்பா போய்டுச்சு..! ஒழுங்கா ஆபீஸ் கிளம்புற வழியைப் பாரு..! என்று சொன்ன வள்ளியம்மை அந்த பக்கம் நகர,

“நான் கிளம்புறேன் மாம்..! அடுத்து ரூல் நம்பர் ஒன் வந்துடுவார்..! அவர் போடுற ரம்பத்துல காதுல ரத்தம் வந்தா பரவாயில்லை.காதே கையோட வந்துடும்..! என்றபடி கிளம்பினான் அருண்.

அலுவலகம் சென்ற விஜய்க்கு மனசே ஆறவில்லை.காரணம் தெரியாத ஒரு அழுத்தம் மனதிற்குள் குடி கொண்டிருந்தது.

“இப்ப என்னாச்சுன்னு இப்படி இருக்க விஜய்..? என்றான் பிரவீண்.

“இன்னும் என்ன நடக்கணும்ன்னு நினைக்கிற பிரவீண்.என்னை எவ்வளவு அசிங்கப்படுத்த முடியுமோ அந்த அளவுக்கு உன் தங்கச்சி அசிங்கப் படுத்தியாச்சு. இன்னும் சொல்ல என்ன இருக்கு..? என்றான் விரக்தியாய்.

“துளசியைப் பத்தின பேச்சை விடு விஜய்.. என்றான் பிரவீண்.

“அதெப்படி விட முடியும் பிரவீண்.விடுற மாதிரியான வார்த்தையா அது.என்னைக் கட்டிகிட்டா அவ வாழ்க்கை நாசம் ஆகிடுமாம் சொல்றா அவ. என்னைப் பார்த்தா அவ்வளவு மோசமாவா தெரியுது..? அவ இந்த அளவுக்கு என்னை வெறுக்கக் காரணம் தான் என்னன்னு தெரியலை. நானும் யோசிச்சு யோசிச்சு தலைவலி வந்தது தான் மிச்சம்..! என்றான் விஜய்.

அவனைப் பார்த்த பிரவீணுக்கு பாவமாக இருந்தாலும், அதை வெளியே காட்டிக் கொள்ள முடியாத சூழ்நிலை அவனுக்கு.

“இதெல்லாம் ஒரு விஷயமா..? இதை விட முக்கியமா நிறைய விஷயம் இருக்கு. புது மிஷினை லான்ச் பண்ற விஷயம் என்னாச்சு..? என்றான் பிரவீண், பேச்சை மாற்றியவனாய்.

“அதெல்லாம் பேசிட்டேன் பிரவீண்..! எந்த பிரச்சனையும் இல்லை. லீகலா என்ன செய்யணுமோ அதை செஞ்சாச்சு..! என்றவன்,

“இந்த அமைச்சர் கனகவேலுக்கும் நமக்கும் என்ன பிரச்சனை..? என்றான் திடீரென்று.

அந்த பேரைக் கேட்ட பிரவீணுக்கு உள்ளே கொதிக்க,

“ஏன் என்னாச்சு..? என்றான்.

“இந்த மிஷினுக்கு அப்ரூவல் குடுக்கக் கூடாதுன்னு, அவர் பக்கத்துல இருந்து பிரஷர் வந்ததா வந்திருந்த ஆபீசர்ஸ் சொன்னாங்க..! அதான் யோசனையா இருக்கு.. என்றான்.

“வேறென்ன..? எலக்சன் பண்ட் எதிர்பார்ப்பாங்க..! நேரா கேட்க முடியாதுல. அதான் இப்படிக் குடைச்சல் குடுத்தா, நாமளா போய் குடுப்போம்ன்னு நினைப்பு.. என்றான் பிரவீண்.

“அவ்வளவு தானா..? வேற ஒன்னுமில்லையே..? என்றான்.

“வேற  என்ன இருக்கப் போகுது விஜய்..! என்ற பிரவீண், அத்தோடு அந்த பேச்சிற்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டான்.

ஆனால் விஜய் அந்த விஷயத்திற்கு அப்போது மட்டும் தான் முற்றுப் புள்ளி வைத்தான்.

“ஓகே விஜய்..! அப்பா ஆபீஸ் வரைக்கும் போயிட்டு, இன்னைக்கு ஒரு முக்கியமான மீட்டிங் ஒன்னு இருக்கு. அதையும் அட்டர்ன் பண்ணனும். நானும் போகலைன்னா துளசி ஒரே ஆளா சமாளிக்கணும்..! என்றபடி கிளம்பினான் பிரவீண்.

“நம்பிட்டேன்டா..! உன் தங்கச்சி நூறு பேருன்னாலும் பேசியே சாமாளிப்பா..! அவளுக்குத் துணைக்கு இவரு போறாராமா..? இதைக் கேட்டா அவளே சிரிப்பா..! என்றான் விஜய்.

“சரித்தான்டா..! உனக்கு அவளை பேசலைன்னா தூக்கம் வராது. இதுக்கு நான் பொறுப்பில்லை..! வரேண்டா சாமி..! என்றபடி வெளியேறிய பிரவீணின் முகம், அது வரை இருந்த புன்னைகயைத் தொலைத்திருந்தது.

அவன் நேராக சென்ற இடம்…அமைச்சர் கனகவேல் வீடு தான். வெளியே இருந்த ஆட்களை எல்லாம் கண்டு கொள்ளாமல் உள்ளே சென்றான்.

“யாரப்பா நீ…? என்று ஒருவன் கேட்டுக் கொண்டிருக்க, அதை சட்ட செய்யாமல் சென்றான்.

ராதிகாதான் முதலில் வந்தார். அவருக்கு பிரவீணை யார் என்று தெரியவில்லை.

“யார் நீங்க..?

“அமைச்சர் இருக்காரா..? என்றான்.

“இருக்கார் தம்பி..! உட்காருங்க..! என்றபடி ராதிகா உள்ளே செல்ல, சற்று நேரத்தில் வந்தார் கனகவேல்.

“வாங்க தம்பி..! என்றவர்,

“தம்பி யாருன்னு தெரியலை. எங்கையோ பார்த்த மாதிரி இருக்கே..! என்றார்.

“இருக்கும்..இருக்கும்…! RRS இண்டஸ்ட்ரி மிஸ்டர் ரத்னவேல் பேரன் நான்..! என்றான் பிரவீண்.

அதைக் கேட்ட கனகவேலுக்கு உள்ளே பக்கென்று இருந்தாலும் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.

“சொல்லுங்க தம்பி..! நான் என்ன செய்யணும் உங்களுக்கு..! என்றார்.

“நீங்க எதுவும் செய்யாம இருந்தாலே போதும்..! விஜய்யோட பிஸ்னஸ்ல நீங்க தலையிடுற மாதிரி தகவல் வருது. நாங்களும் எல்லா நேரமும் இப்படி சும்மாவே இருக்க மாட்டோம்..! என்றான்.

“என்ன சொல்றிங்க தம்பி…! நான் ஒன்னும் பண்ணலையே..? என்றார் புரியாதவராய்.

“அரசியல்வாதிக்கு நடிக்க சொல்லியாத் தரனும். அதுலயும் பொய் சொல்றதுல டிகிரி பட்டம் வாங்குனவரு நீங்க…! என்றான் நக்கலாய்.

“நான் சொல்றது உண்மைதான். விஜய் தம்பி விஷயத்துல நான் எதுவும் பண்ணலை..! என்றார் மீண்டும்.

“என்ன நடந்ததுன்னு எனக்குத் தெரியாது. ஆனா ஒன்னு, விஜய்க்கு எதுவும் தெரியாம இருக்குற வரைக்கும் தான் நீங்க சேப். மீறி, நீங்க வம்பை விலை குடுத்து வாங்கியே தீருவேன்னு அடம் பிடிச்சா…அதுக்கு நாங்க பொறுப்பில்லை. பார்த்து நடந்துக்கோங்க..! என்றவன் கிளம்பப் போக,

“நீங்க விஜய்யோட சித்தப்பா சுந்தர சேகர் பையனா..? என்றார் கனகவேல்.

“இல்லை..! அவன் அத்தை வித்யாவோட பையன்..! என்ற பிரவீண் நிற்காமல் சென்று விட்டான். ஆனால் கனகவேல் தான் நின்ற இடத்தை விட்டு அசையவில்லை.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த ராதிகாவின் மனதிற்குள் அலை அடித்துக் கொண்டிருந்தது. கனகவேல் அவன் சென்ற திசையைத் தான் பார்த்துக் கொண்டிருந்தார்.

அதற்குமேல் யோசிக்கவில்லை அவர்.

“ராதிகா..! என்றார்.

“சொல்லுங்க..! என்றார்.

“திவ்யாவைக் கூப்பிடு..! என்றார்.

“திவ்யா ஆபீஸ் போய்ட்டாங்க..! என்று ராதிகா சொல்ல, போனிலேயே திவ்யாவிற்கு அழைத்தார்.

“சொல்லுங்க டாடி..! என்றாள் திவ்யா, எதிர்முனையில்.

“அந்த விஜய்யோட தொழில் விஷயத்துல நீ ஏதாவது பண்ணினியா திவ்யா..? என்றார்.

“என்ன விஷயம் டாடி..?

“கேட்ட கேள்விக்கு பதில்! என்றார்.

“ஆமா டாடி..! ஒரு புது மிஷின் லான்ச் பண்ற விஷயமா.. என்று அவள் இழுக்க,

“இது தான் முதலும் கடைசியும். இனி நீ அவன் விஷயத்தில் தலையிடக் கூடாது. அதுவும் என் பேரைப் பயன்படுத்தி.. என்றார்.

“இனி அப்படி எதுவும் பண்றதுக்கு அவசியம் வராது டாடி..! எப்படியும் நீங்க அவனை எனக்கு மேரேஜ் பண்ணி வச்சிடுவிங்கல்ல…? என்றாள்.

“அப்படி ஒரு விஷயம் நடக்கும்ன்னு எனக்குத் தோணலை.. என்றார்.

“நடந்தாகணும் டாடி.இல்லைன்னா இந்த திவ்யா உயிரோடவே இருக்க மாட்டா..! என்றாள் திவ்யா.

“நான் சொல்றதைக் கேளுமா..! என்று கனகவேல் சொல்லிக் கொண்டிருக்கும் போதே…எதிர்முனை கட்டாகியிருந்தது.

“என்னங்க சொல்றா..? என்றார் ராதிகா.

“விஜய்யை கல்யாணம் பண்ணி வைக்கலைன்னா, செத்துடுவாளாம்..! என்றார்.

“ஐயோ..! என்னங்க சொல்றிங்க..? என்ற ராதிகாவிற்கு கண்கள் கலங்கியது.

“இப்ப எதுக்கு கண் கலங்குற..? பொண்ணுக்கு அளவுக்கு அதிகமா செல்லம் குடுத்து வளர்த்தப்பவே, இப்படி ஒரு நாள் பேசுவான்னு தெரிஞ்சிருக்கணும். இப்ப இவளுக்கு ஒசரம் நான் மாப்பிள்ளை கேட்டுப் போய் அசிங்கப்படனுமா..? என்றார்.

“ஒரு தடவைக் கேட்டுப் பார்க்குறதில் தப்பில்லையேங்க..? என்று ராதிகா சொல்ல,

“நேத்து தான் சொன்னவ…அவங்களை தொந்தரவு பண்ணாதிங்கன்னு.இன்னைக்கு இப்படி சொல்றவ..? என்றார்.

“திவ்யாவுக்கு இதை விட நல்ல மாப்பிள்ளை கிடைக்க வாய்ப்பில்லைங்க. நீங்க செஞ்ச தப்புக்கு இது பிராய்சித்தமா போய்டும்.. என்றார் ராதிகா.

ராதிகா சொன்ன விஷயத்தை யோசிக்கத் தொடங்கினார் கனகவேல். இது நடக்கும் என்று அவருக்குத் துளியும் நம்பிக்கை இல்லை.ஆனால் நடந்தால் நன்றாக இருக்கும் என்று அவர் உள்மனமும் நினைக்கத் தான் செய்தது.

அலுவலகம் சென்ற துளசிக்கு, கடைசியில் பார்த்த விஜய்யின் சலனமற்ற பார்வை மட்டுமே மனதில் நின்றது. எந்த வேலையையும் அவளால் செய்ய முடியவில்லை. எதைத் தொட்டாலும் அந்த பார்வை மட்டுமே அவள் கண் முன் வந்து, அவளைப் பாடாய் படுத்தியது.

“இந்த விஷ்வ துளசி உனக்கு அவ்வளவு இளக்காரமா போயிட்டேன் இல்லையா..? நான் என்ன உன் வீட்டு நாய்க்குட்டியா..? எனக்குன்னு ஆசைகள் இருக்கவே கூடாதா..? என்று மனம் போன போக்கில் யோசித்தவளுக்கு, இறுதியில் தெரிந்ததும் அந்த பார்வை தான்.

‘ என்ன இருந்தது அந்த பார்வையில்..? என்னை ஏற்றுக் கொள் என்றா..? இல்லை, எனக்கு நீ தேவையில்லை என்றா..? இல்லை எனக்கு யாருமே தேவையில்லை என்றா..? என்று தனக்குள் யோசிக்க, கண்களை மூடி, மீண்டும் மீண்டும் அவன் பார்வையை மனதிற்குள் கொண்டு வந்தாள்.

‘அந்த கண்களில் தெரிந்த வலிக்கு காரணம் யார்..? நானா..? நிச்சயம் இல்லை. என்ன இது எங்க சுத்துனாலும் மறுபடியும் அவனை சுத்தியே நிக்குது மனசு..! என்று நொந்தவள்,

“இப்படியே இருந்தா கதைக்கு ஆகாது. மீட்டிங்குக்கு தேவையானதைப் பண்ணுவோம்..! என்று நினைத்துக் கொண்டிருக்கும் போதே வந்தான் பிரவீண்.

“எல்லாம் ரெடியா துளசி..! என்றான்.

“உனக்கு இப்பதான் வழி தெரிஞ்சதா…? உனக்கு ஆபீஸ் இங்கயா..? இல்லை அங்கயா..? என்றாள் கோபமாய்.

“இப்ப எதுக்கு உனக்கு இவ்வளவு கோபம்..?

“பின்ன இருக்காதா..? நியாயமா பார்த்தா இங்க நீதான் பொறுப்பா இருந்து பார்த்துக்கணும். ஆனா உனக்குத்தான் இங்க விட முக்கியமானவங்க, முக்கியமான வேலை எல்லாம் இருக்குதே..! என்றாள்.

“இங்க பார் துளசி..! நீ நேராவே சொல்லலாம் தப்பில்லை. உனக்கு, நான் விஜய் ஆபீஸ் போறது பிடிக்கலைன்னா அது உன்னோட.எனக்கு நீ எவ்வளவு முக்கியமோ அதே மாதிரி அவனும் முக்கியம். நான் என்ன இப்பவா அங்க போறேன். எப்பவும் போறதுதானே..? என்றான்.

“உனக்கு என்னை விட அவன் தான் பெரிசா போய்ட்டான் இல்லையாண்ணா..? என்றாள் கலங்கிய குரலுடன்.

அவளின் குரல் பிரவீணை என்னமோ செய்ய,

“நான் அப்படி சொல்லலை துளசி. அவன் மாமா பையன் அப்படிங்கிறதையும் தாண்டி அவன் எனக்கு நண்பன். அதனால அவனையும் விட்டுக் குடுக்க முடியாது..! என்றான்.

“நான் உன்னை விட்டுக் குடுக்க சொல்லலை.ஆனா, நம்ம ஆபீஸையும் கொஞ்சம் பாருன்னு தான் சொல்றேன்..! என்றாள் விடாப்பிடியாக.

“ஓகே டன்..! என்றான்.

“இப்படித்தான் சொல்லுவ..? அப்பறம் பார்த்தா, பழைய குருடி கதைவைத் திறடி கதை தான்.. என்று சொன்னவள் லேசாக சிரித்து வைக்க,

“சொல்றேன்னு கோவிச்சுக்காத துளசி…! விஜய் விஷயத்துல உன்னோட முடிவு தப்புன்னு தோணுது.ஒரு அண்ணனா, உனக்கு அவன் தான் சரின்னு என் மனசுக்குப் படுது..! அதுக்கு மேல உன் விருப்பம்..! நான் மீட்டிங் ஹாலில் இருக்கேன் வா..! என்றபடி சென்று விட்டான்.

“இல்லண்ணா..! அவன் விஷயத்துல இப்பதான் நான் சரியான முடிவை எடுத்திருக்கேன்..! என்று நினைத்தவள், தானும் பிரவீண் பின்னே சென்றாள்.

மீட்டிங்கை ஏற்பாடு செய்தது தவறோ என்று என்னும் அளவிற்கு தலைவலி அவளைப் படுத்தி எடுத்தது. இதற்கும் அவள் அதிகம் பேசக் கூட இல்லை. அவளின் முகத்தைப் பார்த்து பிரவீனே அனைத்தையும் பார்த்துக் கொண்டான். அடிக்கடி அவளையும் பார்த்துக் கொண்டான்.

“காலையில யார் முகத்துல முழிச்சேனோ..? இந்த நாள் என்னைய பாடாய் படுத்தி எடுக்குது.. என்று எண்ணியவள், எப்படியோ சமாளித்து அமர்ந்தாள்.ஒரு நிலைக்கு மேல் அவளால் முடியாது போன்று தோன்ற,

“ஓகே காய்ஸ்..! இதுக்கான பிரீ பிளானை எல்லாரும் பண்ணுங்க..! வில் சூன் வி வில் மீட். என்று முடித்துக் கொண்டான்.

அவர்கள் அனைவரும் வெளியேறிய பிறகு,

“என்னாச்சு துளசி..? ஏன் ஒரு மாதிரி இருக்க..? என்றான்.

“என்னன்னு தெரியலைண்ணா..? ரொம்பத் தலைவலிக்குது..! என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே, புயலாய் அங்கு நுழைந்தான் விஜய குமார்.

அந்த நேரத்தில், அவர்களுடைய அலுவலகத்தில் சத்தியமாய் அவனை எதிர்பார்த்திருக்கவில்லை இருவரும்.

“என்னாச்சு விஜய்..? ஏதும் பிரச்சனையா..? என்றான் பிரவீண் பதட்டத்துடன். அவன் கவலை அவனுக்கு.

“பிரச்சனை தான்..! என்றான் உக்கிரமாய் பார்த்தபடி.

“என்னாச்சு..? என்றான் பிரவீண்.விஜய்யோ அவன் கேள்வியைப் பொருட்படுத்தாது, வேகமாய் துளசியின் அருகில் சென்றவன், அவள் கழுத்தோடு இறுக்கிப் பிடித்து, சுவரோடு சாய்த்தான்.

“விஜய் என்ன பண்ற..? விடு அவளை..! என்ற பிரவீணின் குரலை விஜய் சட்டை செய்ததாக தெரியவில்லை.

“என்னடி நினைச்சுட்டு இருக்க உன் மனசுல..? மனசுல பெரிய இவன்னு நினைப்பா..! நானும் போனாப் போகுதுன்னு பொறுமையாப் போனா, ரொம்பத்தான் ஆடுற…! என்றான் அனலைக் கக்கிய விழிகளுடன்.

“என்னாச்சு விஜய்..? என்னன்னு சொல்லித் தொலையேண்டா..! முதல்ல அவ கழுத்தை விடு.. என்றான் பிரவீண்.

துளசியோ எதுவும் பேசாமல் அப்படியே நின்றாள். ஆனால் முகத்தில் மட்டும் அப்படி ஒரு வெறுப்பு. அவன் கைகளை கஷ்ட்டப்பட்டு பிரித்தவள்…அவனைத் தள்ளி விட்டாள்.

“ஆமா..! நான் பெரிய இவதான்..இப்ப என்னாங்குற..? என்றாள்.

“ஏய்..! வேண்டாம்.வார்த்தையை அளந்து பேசிக்க..

“அதைத்தான் நானும் சொல்றேன்..! நீயும் பார்த்துப் பேசிக்க. இல்லைன்னா பல்லைத் தட்டி கையில குடுத்துடுவேன்..! என்றான் திமிராக.

“தட்டித்தான் பாருடி..! என்று விஜய் எகிற,

“போடா..! என்றாள் பட்டென்று.

“ரெண்டு பேரும் நிறுத்துறிங்ளா…? என்றவன்,

“நீ சொல்லு விஜய்..! என்றான்.

“வித்யா அத்தை பேர்ல நம்ம கம்பெனில இருக்க ஷேர்ஸ் எதுவும் தேவையில்லை. அப்படி பிச்சை வாங்கி பிழைக்கிற அவசியம் எங்களுக்கு இல்லைன்னு..மேடம் லீகல் நோட்டிஸ் விட்டிருக்காங்க..! நாங்க எங்க அத்தைக்கு செய்றது பிச்சை போடுறதா..? இல்லை என் அப்பா அவர் தங்கச்சிக்கு செய்றது பிச்சை ஆகுமா…? என்ன நினச்சு இப்படிப் பண்றா உன் தங்கச்சி..! என்று கோபத்தில் நிதானம் இழந்து கொண்டிருந்தான் விஜய்.

பிரவீணுக்கு அவன் சொன்னதை நம்பவும் முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை.

“என்ன துளசி இதெல்லாம்..? விஜய் சொல்றது உண்மையா..? என்றான் துளசியிடம்.

“ஆமா..! எங்கப்பா சொத்தே இவ்வளவு இருக்கும் போது, இவங்க கிட்ட இருந்து கிடைக்கிற எதுவும் தேவையில்லைன்னு தோணுச்சு..! என்றாள்.

“அதை நீ சொல்லக் கூடாது..! என் அத்தை சொல்லணும்..! என்றான் விஜய்.

“அவங்க என் அம்மா..! அவங்களுக்குப் பின்னாடி எங்களுக்குத் தான். அதனால அது வேணுமா, இல்லை வேண்டாமான்னு நாங்களும் முடிவு பண்ணலாம்..! என்றாள் அவளும் அதே கோபத்துடன்.

“ஹோ..! நாளைக்கு உன் அண்ணன் உனக்கு ஏதாவது கொடுத்தாலும் அது பிச்சை தான்…இல்லையா..? என்றான் விஜய் நக்கலாய்.

“விஜய்..!! என்று கத்தினாள் துளசி.

“சும்மா எதுக்கு கத்துற..? உனக்கு வந்தாதான் ரத்தமா..? இனிமேல் இப்படி ஏதாவது சில்லித் தனமான வேலையை செஞ்ச…அப்பறம் நான் மனுஷனாவே இருக்க மாட்டேன்..! என்றான்.

“இப்ப மட்டும் நீ என்ன மனுஷனாவா இருக்க..? என்று நக்கல் அடிக்க,

“ஏதும் பேசாத துளசி. நீ செஞ்சது தப்பு..! இது அம்மா முடிவு பண்ண வேண்டிய விஷயம். நாம இல்லை..! என்றான் பிரவீண்.

“இதெல்லாம் இருக்குன்னு தான அண்ணா, அந்த பெருசு…நான் இவனைக் கல்யாணம் பண்ணியே ஆகணும்ன்னு பிடிவாதம் பிடிக்குது. இவங்க எந்த பங்கும் தேவையில்லை. இவங்க சொத்தும் தேவையில்லை..! என்றாள்.

“இன்னொரு தடவை தாத்தாவைப் பத்தி ஏதாவது சொன்ன, என்ன பண்ணுவேன்னு எனக்கேத் தெரியாது. நான் தான் காலையிலேயே தெளிவா சொல்லிட்டேனே… எவகிட்டையும் கெஞ்சி..வாழ்க்கைப் பிச்சை கேட்டு, வாழுற நிலையில் இந்த விஜயகுமார் இல்லை. அப்படி வச்சுக்கவும் மாட்டான் இந்த விஜய்.. என்றான்.

“அதான் பார்த்தேனே..! என்று அவள் நக்கலாய் சிரிக்க,

“இப்ப சொல்றேன் கேட்டுக்கோ..! நீயா வந்து, என்னைக் கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு கெஞ்சுனாலும் நான் மாட்டேண்டி. உன்னை மாதிரி ஒருத்திய கல்யாணம் பண்ண எனக்கென்ன கிறுக்கா பிடிச்சிருக்கு. இனி என் வழிக்கு நீ வரவே கூடாது. மீறி அதிகப் பிரசங்கித் தனமா ஏதாவது செஞ்ச…அப்பறம் இன்னொரு விஜய்யை நீ பார்க்க வேண்டி இருக்கும்..!  என்றவன்,

“சொல்லி வச்சுக்கடா உன் தொங்கச்சிகிட்ட..! என்றபடி வெளியேறிவிட்டான் விஜய்.

அவன் பிடித்த கழுத்துப் பகுதி நெருப்பாய் எரிந்தது விஷ்வ துளசிக்கு. ஏற்கனவே இருந்த தலைவலியோடு, இந்த வலியும் சேர்ந்து கொள்ள, அவளையும் மீறி கண்கள் கலங்கித்தான் போனது.

வெளியே சென்ற விஜய்க்கு மனசே சரியில்லை. என்னதான் பேசிவிட்டாலும், அவள் கண்கள் லேசாக கலங்கி இருந்ததைப் போன்று இருந்தது அவனுக்கு.

“உடம்பு சரியில்லையோ..! லேசா காய்ச்சல் அடிச்ச மாதிரி இருந்துச்சோ..! என்று தனக்குத் தானே கேட்டவன், முன்னுச்சி முடியைக் கோதியவன், பெருமூச்சுடன் வெளியேறினான்.

அவன் செல்வதை கண்ணாடித் தடுப்பின் வழியே பார்த்துக் கொண்டிருந்தவளுக்கு, கண்ணீர் வெளியே எட்டிப் பார்க்க, அதை பிரவீண் அறியாதவாறு உள்ளே இழுத்துக் கொண்டாள்.

ஆனால் விஜய்யின் தவிப்பும், தங்கையின் தவிப்பும் பிரவீணுக்கு நன்றாகத் தெரிந்தது. இவர்கள் விஷயத்தில் ஒருநிலைக்கு மேல் என்ன செய்வதென்று அவனுக்கும் தெரியவில்லை.

“என்னைக் கல்யாணம் பண்ணா…இவனுக்கு கிறுக்குப் பிடிச்சிடுமா…? என்று மனதிற்குள் மருக,

“நீதான்  துளசி அவனை வேண்டாம்ன்னு சொன்ன..! அவன் எங்க உன்னை வேண்டாம்ன்னு சொன்னான்..! என்ற மனசாட்சியின் குரல், அவளுக்கு கேட்காமல் போனது தான் பரிதாபம்.

விதியின் விளையாட்டு எப்போது முடியும் தெரியாதே..!

விடியும் திசை என்ன இப்போது அதுவும் தெரியாதே..!

 

 

 

 

 

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!