Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் 7

அத்தியாயம் 7

ஆரா அலுவலகம் சென்றதும், அனைத்து வேலைகளையும் முடித்துவிட்டு சாப்பிட்டு முடிப்பதற்குள் பொன்னம்மா வந்து துணிகளைத் துவைத்துக் காயப் போட்டுவிட்டு சென்றிருந்தாள். அதன்பின் வீட்டு வேலைகள் என்று நேரம் ஓட, பிற்பகல் ஆகிவிட்டது. காயபோட்ட துணிகள் காய்ந்திருக்கும், எடுத்து வரலாம் என்று நினைத்த மிருதுளா, மாடிக்கு சென்றாள்.

ஒவ்வொரு துணிகளாக எடுத்துப் பக்கெட்டில் போட்டு கொண்டிருந்தாள். அப்பொழுது தூரத்தில் குழந்தை அழும் குரல் கேட்டது. அந்தச் சத்தம் அவளுக்குள் என்னவோ செய்தது. அப்படியே சில நொடிகள் நின்றவள் அதன்பின் அதை ஒதுக்கி வைத்துவிட்டு தனது வேலையில் கவனத்தைச் செலுத்தினாள். ஆனால் போகப் போகச் சத்தம் அதிகரித்து, வெகு அருகில் கேட்கவும், அந்த ஓசை அவளுக்குள் புதைந்து கிடந்த நினைவுகளைத் தட்டி எழுப்ப, அதன் பாதிப்பில் அவளது உடல் நடுங்க ஆரம்பித்தது.

இதற்கு முன்பு எத்தனையோ குழந்தைகளின் அழுகுரல்களைக் கேட்டிருக்கிறாள். ஆனால் இந்தக் குழந்தையின் அழுகுரல் அவளுக்குள் இருக்கும் தாய்மையைத் தூண்டிவிட்டது. அடிவயிறு கலங்க, நெஞ்சு பகுதி வலிக்க ஆரம்பித்தது. குழந்தை வீரிட்டு அழ, இவளுக்குள் வலி அதிகரித்தது. அந்த வலியை தாங்கிகொள்ளும் பொருட்டு, கொடிகயிரை இறுக பிடித்துக்கொண்டாள். உயிர் போகும் வலியை பற்களைக் கடித்துப் பொறுத்துக்கொள்ள முயற்சித்தாள். ஏற்கனவே நடந்ததையே நினைத்துச் சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் உடல் பலவீனமாக இருக்க, தற்பொழுது உண்டாகும் உணர்வுகளால் அவள் உடல் அவளது கட்டுபாட்டை மெல்ல மெல்ல இழக்க, கண்கள் சொருக, கொடிகயிருடன் அப்படியே தொப்பென்று மயங்கி சரிந்தாள்.



Advertisement

சரியாக அந்த நேரம் திரும்பி பார்த்த கெளதம், தான் கண்ட காட்சியைப் பார்த்து அதிர்ந்தவன், வேகமாக அவளிடம் விரைந்தான். குழந்தையை அப்படியே தரையில் தன்கைவளைவில் நிற்கவைத்துகொண்டு, மிருதுளாவை அழைத்து அவளை எழுப்ப முயற்சி செய்தான்.

“ஹலோ! என்னங்க! எழுந்துருங்க..” என்று இவன் பலமுறை அழைத்தும் அவள் எழுந்திருக்காமல் போகவே, இவனுக்குப் படபடப்பு அதிகரித்தது. இப்பொழுது என்ன செய்ய என்ன யோசித்தவனுக்கு, மொட்டை மாடியில் இருக்கும் தண்ணீர் குழாய் நியாபகம் வந்தது. ஏதாவது பார்ட்டி, நிகழ்ச்சி என்று மாடியில் உணவு விருந்து கொடுக்க நேர்ந்தால் கைகழுவ உதவும் என்று அங்கிருக்கும் எல்லா ப்ளாக்கிலும் இந்த மாதிரி சிங்குடன் கூடிய பைப் வசதி செய்யப்பட்டுள்ளது.

தற்பொழுது இதன் நியாபகம் வந்ததும், குழந்தையைத் தூக்கிக்கொண்டு பைப் அருகே சென்றவன், கையில் கொஞ்சம் தண்ணீர் பிடித்து வந்து மிருதுளாவின் முகத்தில் தெளித்தான். ஆனால் அதற்கும் அவளிடம் எந்த அசைவும் இல்லை. அவள் எழாதது, பயத்தை எற்படுத்த, உடனடியாக மொபைல் போனை எடுத்து கீழே, வீட்டில் இருக்கும் தனது தந்தைக்கு அழைத்தவன், “அப்பா! நம்ம எதிர் வீட்டில் புதுசா வந்துருக்காங்களே ஆராவோட அக்கா, அவங்க பேரு…….ஹா! மிருதுளா, அவங்க இங்க மொட்டை மாடியில மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. எழுப்பிப் பார்த்துட்டேன். எழுந்துக்கல. உடனே அவங்க வீட்டில யாராவது இருந்தா, அவங்ககிட்ட விஷயத்தைச் சொல்லி மேலே கூட்டிட்டு வாங்க ப்பா.” என்று கடகடவென்று விஷயத்தைக் கூறிவிட்டு வைத்தான். சேகரும், உடனே மிருதுளாவின் பாட்டியிடம் விஷயத்தைச் சொல்லி அவரையும் அழைத்துக்கொண்டு மாடியேரினார். இவர்களின் பதற்றத்தை பார்த்துவிட்டு, பக்கத்துவீட்டு மாமியும் அவர்களைப் பின் தொடர்ந்தார்.

Advertisement

மேலே வந்த பார்வதி, மிருதுளாவை பார்த்ததும், “ஐயோ! என் பேதிக்கு என்ன ஆச்சு!!! அம்மா மிருதுளா கண்ணு….!!” என்று பதறியபடி அவள் அருகே ஓடிவந்தவர், அவளை எழுப்ப முயற்சி செய்ய, அவளிடம் எந்த அசைவும் இல்லை. அதற்குள் பக்கத்துக்கு வீட்டு மாமி, “அப்படியே பார்த்துட்டு இருந்தா எப்படி?! இந்தப் பொண்ணை உடனே ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போகணும்.” என்றவர் கௌதமிடம் திரும்பி, “கெளதம், அந்தப் பொண்ணைத் தூக்குப்பா, பக்கத்தில எதாவது ஹாஸ்பிட்டல் இருந்தா கூட்டிட்டு போலாம்.” என்று சொல்ல, “ஆண்டி, நானா!!!” என்று அவன் கண்களை விரிக்க, “ஆமாம் கெளதம். ஆபத்துக்குப் பாவம் இல்லை. சீக்கிரம் ப்பா. எதுவும் சீரியஸ் ஆகுறதுகுள்ள கிளம்பனும்.” என்று அவனை அவசரபடுத்தினார்.

Advertisement

அந்தப் பெண்மணி, ‘எதுவும் சீரியஸ்’ என்றதுமே கலங்கிப்போன பார்வதி, கௌதமிடம், “தம்பி என் பேத்தியை காப்பாத்துப்பா. நான் அவ ஆச்சி சொல்றேன். தூக்குப்பா.” என்றதும் கெளதம் அவன் தந்தையைத் திரும்பி பார்க்க, அவரும், “சீக்கிரம் கெளதம்.” என்று அவசரபடுத்த, குழந்தையைத் தன் தந்தையிடம் கொடுத்தவன், அப்படியே மிருதுளாவை, கைகளில் ஏந்தி கொண்டு, வேகமாகப் படிகளில் இறங்கி தனது காரை நோக்கி சென்றான். அவன் பின்னாலையே சேகரும், பார்வதியும் செல்ல, பின் சீட்டில் பார்வதி மடியில் மிருதுளா படுக்கவைக்கப்பட, முன்சீட்டில் கெளதம் அருகில் குழந்தையை மடியில் வைத்துக்கொண்டு சேகர் அமர்ந்துகொள்ள, அடுத்தச் சில நிமிடங்களில் அனைவரும் ஹாஸ்பிட்டல் விரைந்தனர்.

இருபது நிமிட தூரத்தில் இருந்த அந்தப் பெரிய ஹாஸ்பிட்டல் வாசலில், காரை நிறுத்தியவன், இறங்கி மிருதுளாவை தூக்கிக்கொண்டு உள்ளே செல்ல, பெரியவர்கள் அவனைப் பின் தொடர்ந்தனர். அந்தப் பரபப்பான சூழ்நிலையோ இல்லை தான் போட்டோவில் பார்த்த தன் தாயை பார்த்ததாலோ என்னவோ தேஜா தனது அழுகையை நிறுத்தி இருந்தாள்.

கெளதம் உள்ளே நுழையவும், ஊழியர் ஸ்ட்ரெட்சரை எடுத்துக்கொண்டு வர, அதில் மிருதுளாவை இவன் படுக்கவைக்க, அந்த ஊழியர் அவளை டாக்டரின் அறைக்குக் கொண்டு சென்றான். உடனடியாக ட்யூட்டி டாக்டர் அங்கு வர, அவளைச் சோதனை செய்து பார்க்க அறைக்குள் விரைந்தார். மற்றவர்கள் வெளியே நிறுத்தப்பட்டனர்.

Advertisement

சில நிமிடங்கள் கழித்து வெளியே வந்த லேடி டாக்டர், கையில் குழந்தையுடன் நிற்கும் கௌதமை பார்த்ததும், அவன் தான் மிருதுளாவின் கணவன் என்று தவறாக நினைத்துக்கொண்டு, அவனை உள்ளே வரும்படி சைகை செய்தார். அவன் குழப்பத்துடன் பார்வதியை பார்க்க, அவரும் உள்ளே போகக் காலடி எடுத்து வைக்க, ‘ நங்க இல்லை. அவரு.’ என்று மீண்டும் சைகை செய்துவிட்டு உள்ளே சென்றுவிட்டார். எதற்கு என்று தெரியாமல் அறைக்குள் சென்றான் கெளதம்.

அவன் உள்ளே வந்ததும், “ஏன் சர்? படிச்சவங்க தான நீங்க. இப்படியா உங்க பொண்டாட்டியை போட்டு அடிப்பீங்க?!” என்று கோபப்பட்ட மருத்துவர், மிருதுளாவின் வயிற்றுப் பகுதியில், சேலையை விலக்கி இடுப்பு பகுதியை காட்ட, அங்கே பெரிய கீறல் இருந்தது. அவள் பக்கெட்டின் மேல் விழுந்ததால், அது இரண்டாக உடைந்து, அதன் நுனிபகுதி இவளின் இடுப்பு பகுதியை கீறி இருந்தது.

டாக்டர் ‘உங்க பொண்டாட்டி’ என்றதுமே அவர் தன்னை மிருதுளாவின் கணவன் என்று தவறாக நினைத்துள்ளார் என்பதைப் புரிந்துகொண்ட கெளதம், ஏதோ சொல்ல வாயெடுக்க, அடுத்து அவரின் செயலில் அதிர்ந்தவன், பார்வையை வேறுபுறம் திருப்பிக்கொண்டு, “டாக்டர் நான் அவங்க ஹஸ்பன்ட் இல்லை. நெய்பர். மாடியில இவங்க மயக்கம் போட்டு விழுந்துட்டாங்க. அவங்க வீட்டில ஜென்ட்ஸ் யாரும் இல்லை. அதான் நான் தூக்கிட்டு வந்தேன். வெளியே நிக்குறவங்க தான் அவங்க பாட்டி.” என்று தான் சொல்ல நினைத்ததைப் படபடவென்று சொல்லி முடித்தான்.

கெளதம் சொல்லி முடித்ததும், அந்த டாக்டர், சட்டென்று மிருதுளாவின் சேலையைச் சரி செயதவர், “சாரி சர். நீங்க கையில குழந்தையோட நிக்கவும், நீங்க தான் அவங்க ஹஸ்பன்ட்ன்னு நினைச்சுட்டேன். குழந்தை வேற இவங்க சாயல்ல இருந்துச்சு. சாரி பார் தி மிஸ்டேக்.” என்றார் சங்கடமாக.

டாக்டர் புரிந்துகொண்ட பின்பே அவர் பக்கம் திரும்பியவன், “இட்ஸ் ஓகே டாக்டர். அவங்களுக்கு ஏதும் ப்ராப்ளம் இல்லையே?!” என்றான் கேள்வியாக. ஏனெனில் எவ்வளவு எழுப்பியும் அவள் எழுந்திருக்காதது இவனுக்குள் ஒருவித பயத்தை உண்டாக்கி இருந்தது. “அதெல்லாம் ஒன்னும் இல்லை சர். கொஞ்சம் ப்ரெஷர், ஸ்ட்ரெஸ் அவ்ளோதான். ரெஸ்ட் எடுத்தா சரி ஆகிடும்.” என்றார் மருத்துவர்.

காரில் வரும்போதே, ஜெய் மூலம் ஆராவிற்குத் தகவல் தெரிவிக்கப்பட்டிருக்க, தங்களது மேனேஜரிடம் சொல்லிக்கொண்டு புறப்பட்டவர்கள், சிறிது நேரத்தில் மருத்துவமனை வந்து சேர்ந்திருந்தனர். கெளதம் வெளியே வந்து, பார்வதியையும், ஆராவையும் உள்ளே போகச் சொல்லவும், இருவரும் உள்ளே சென்றனர்.

இவர்கள் சென்றதும் சேகர், கௌதமிடம் எதற்கு மருத்துவர் இவனை உள்ளே அழைத்தார் என்று கேட்கவும், ஒரு நொடி மருத்துவர் சேலையை விலக்கியக் காட்சி கண்முன்னே வர, தன்னைச் சுதாரித்துக் கொண்டவன், மருத்துவர் ஏன் மிருதுளா மயக்கம் போட்டு விழுந்தாள் என்று சொன்ன காரணத்தைச் சொன்னவன், “என்னை அவங்க ஹஸ்பன்ட் நினைச்சு அவங்க மயக்கம் போட்ட ரீசனை என்கிட்டே சொன்னாங்க அவ்ளோதான் ப்பா. அப்புறம் நான் உண்மை சொன்னதும், சாரி சொல்லி ரிலேடிவ்ஸ அனுப்ப சொன்னாங்க.” என்றான்.

உள்ளே மருத்துவர் ஆராவிடம், மிருதுளா மன அழுத்தத்தில் தான் இப்படித் திடீரென்று மயக்கம் போட்டு விழுந்துவிட்டாள் என்று சொன்னவர், அதற்குச் சில மாத்திரைகளை எழுதி கொடுத்திவிட்டு, அவளைப் பார்த்துக்கொள்ளும்படியும் அறிவுரை வழங்கிவிட்டு சென்றார்.

சிறிது நேரம் கழித்துக் கண்விழித்த மிருதுளா, தான் எங்கே இருக்கிறோம் என்று குழம்ப, நடந்ததை அவளிடம் சொன்னார் பார்வதி. அவர் சொன்னதும் தான், சில மணிநேரங்கள் முன்பு நடந்த நிகழ்வு அவளுக்கு நினைவுக்கு வந்தது. அத்தோடு தான் கேட்ட அந்தக் குழந்தையின் அழுகுரலும்.

மீண்டும் தலைவலிப்பது போல இருக்கவே, அவளின் முகத்தில் வலி தெரிந்தது. அதைப் பார்த்து பதறிய அவளின் பாட்டி “அம்மா கண்ணு, என்னம்மா ஆச்சு? ஏன் டா மயக்கம் போட்டு விழுந்த?!” என்று கேட்க, அவளோ, “ஒன்னும் இல்ல ஆச்சி. காலைல சரியா சாப்பிடல போல. அதான் கண்ணை இருட்டிட்டு வந்துடுச்சு. நீங்க பயப்படாதீங்க.” என்று அவரைச் சமாதனம் செய்தாள். “இதுக்குதான் கண்ணு, சரியா சாப்பிடு. நடந்ததையே நினைச்சிட்டு இருக்காதன்னு சொல்றேன். எங்க நீ கேக்குற! நடந்தது பெரிய இழப்பு தான் கண்ணு. அதுக்காக உன் உடம்பை நீ கெடுத்துகலாமா?” என்று கண்கலங்க ஆரம்பித்தார். “ஐயோ ஆச்சி! எதுகெடுத்தாலும் அழுகையா!! அக்காக்கு ஒன்னும் இல்ல. சீக்கிரம் சரியா போய்டும். நீங்க மொதல்ல உங்க உடம்பை கவனிங்க.” என்று பார்வதியை அணைத்துக்கொண்டு செல்லம் கொஞ்சியவரே, ஆரா அவரைச் சமாதானம் செய்தாள்.

அடுத்து பத்து நிமிடத்தில் ட்ரிப்ஸ் ஏறி முடிந்ததும், டாக்டர் இவர்களை வீட்டிற்குப் போகச் சொல்ல, வெளிய வந்ததும், மிருதுளா கௌதமிடம் தனது நன்றிகளைத் தெரிவித்துக்கொண்டாள். அவனும் “பரவாலங்க. அவசரத்துக்கு உதவலனா எப்படி?!” என்று புன்னகை முகமாகப் பதிலளித்தான். அதன்பின் அனைவரும் வீடு வந்து சேர்ந்தனர்.

அடுத்து வந்த நாட்களில், மிருதுளாவை எந்த வேலையும் செய்யவிடவில்லை பார்வதியும் ஆராவும். முழுவதும் ரெஸ்ட் எடுக்க வைத்தனர். இருவரும் மாறி மாறி அவளைக் கவனித்துக்கொண்டனர். வந்த அன்றே பார்வதி மூலம் மிருதுளா மயக்கம் போட்ட செய்தி, அவளின் பெற்றோர்களுக்குத் தெரியவந்தது. பார்வதிக்கு மேல், அவர்கள் இவளுக்கு அறிவுரைகளை வழங்கினர். அதிலும் சித்ரா இந்த வேலை வேண்டாம். அனைவரும் திரும்பி வந்துவிடுங்கள் என்று மறுபடியும் கத்த ஆரம்பிக்க, மிருதுளா தான் அவரைச் சமாதனம் செய்யவேண்டியதாகப் போயிற்று.

அதன்பின் நாட்கள் அதன்போக்கில் சென்றது. ஆனால் எப்பொழுதும் மிருதுளாவிற்கு அந்தக் குழந்தையின் நியாபகம் தான். ஏனோ அந்தக் குரல் கேட்டபொழுது அவளுக்குள் ஏன் அப்படி ஒரு உணர்வு தோன்றியது என்று அவளால் இன்று வரை புரிந்துகொள்ள முடியவில்லை. தன் குழந்தை இறந்த அன்றும் சரி அதன் பின்னும் சரி இந்த அளவு அவள் துடித்ததில்லை. ஆனால் அன்று?? இப்படியாக அவள் பழையதை அசைபோட ஆரம்பிக்க, கண்கள் கலங்க ஆரம்பித்தது. குழந்தை சுமந்த தன் வயிற்றை மெல்ல தடவி பார்த்தவளுக்கு, கண்ணீர் சுரந்து அவளின் கைகளில் துளி துளியாய் விழுந்தது.

அந்த நேரம் “அக்கா!!” என்ற ஆராவின் குரலில், சட்டென்று தன் கண்களைத் துடைத்துக்கொண்டு இவள் திரும்பி பார்க்க, கையில் குழந்தையுடன் அவளிடம் வந்து கொண்டிருந்தாள் ஆரா. குட்டி இளவரசி போல அழகாக, கொள்ளைகொள்ளும் சிரிப்புடன் தன் தங்கையின் கையில் இருந்த குழந்தையிடம் இருந்து கண்களை மிருதுளாவால் எடுக்க முடியவில்லை.

கண்கள் அக்குழந்தையின் மேலேயே நிலைகுத்தி நிற்க, அதற்குள் இவள் அருகில் வந்திருந்த ஆரா, “அக்கா! யாரு வந்துருக்கான்னு பார்த்தியா!!” என்று உற்சாகத்துடன் கூதுகலிக்க, “யாரோட பாப்பா இது அம்மு?!” என்று கேட்டவளின் கைகள் அக்குழந்தையை வாங்க ஏங்க, அதைப் புரிந்துகொண்ட ஆரா, குழந்தையை அக்காவிடம் கொடுத்துவிட்டு, “எதிர் வீட்டுக் கெளதம் சர் இருக்கார்ல, அவரோட குழந்தை.” என்று பதில் சொன்னவளின் உள்மனம், வேறொன்றும் சொன்னது.

இதுநாள் வரை, வேலைப்பளுவின் காரணமாக தாமதாக வீட்டிற்கு வந்து கொண்டிருந்த ஆரா, முன்பு போல தேஜாவை விளையாட கூடிக்கொண்டு வந்திருக்கவில்லை. இன்று நேரம் கிடைக்கவும், முதல் வேலையாகத் தேஜாவை தூக்கி வந்துவிட்டாள் தன் சகோதரியிடம் காட்டவென. ஆனால் மிருதுளாவிற்கு எதிர் வீட்டில் குழந்தை இருப்பதும், அக்குழந்தையின் அழுகுரலை தான், அன்று கேட்டோம் என்று தெரியாது.

குழந்தையை ஆசையுடன் கைகளில் வாங்கியவள், “அவருக்குக் கல்யணம் ஆகிடுச்சா அம்மு?!” என்றாள் ஆச்சரியமாக. இது அவளுக்குப் புதுச் செய்திதான். கௌதமும் பார்பதற்கு இருபதுகளின் இறுதியில் இருப்பவனைப் போலத் தான் தெரிவான். ஆதலால் அவன் திருமணம் ஆனவன் என்று மிருதுளா நினைத்திருக்கவில்லை.

“ஆமா க்கா. ஆகிடுச்சு.”

“அப்போ, குழந்தையோட அம்மா எங்க அம்மு?! அவங்க வீட்டில யாரும் லேடிஸ் இருக்கிற மாதிரி தெரியல!!”

“இல்லக்கா சாரோட வைப் சில மாசத்துக்கு முன்னாடி ஒரு ஆக்சிடென்ட்ல இறந்துட்டாங்க போல. அவ்ளோதான் எனக்குத் தெரியும். அந்த அங்கிள் தான் சொன்னாரு.”

“ஒஹ்!!!” என்றவளுக்கு என்ன பதில் சொல்வது என்றே தெரியவில்லை. அதைவிட இவ்வளவு சின்னக் குழந்தை இதுநாள் வரை தாய் இல்லாமல் இருந்துருக்கிறாள் என்பதே இவளுக்குள் கவலையை உண்டாக்கியது. தாயின் அன்பும் அரவணைப்பும் கிடைக்கவேண்டிய நேரத்தில் இவளுக்கு ஏன் இப்படி? என்று நினைக்கையில், மிருதுளாவிற்குக் கஷ்டமாக இருந்தது.

“சின்னக் குழந்தைய பார்த்துகிறது ரொம்பக் கஷ்டம்னு ஆச்சி சொல்லுவாங்களே அம்மு. இத்தனை நாளா இவங்க தனியாவா பார்த்துட்டு இருந்தாங்க?!!”

“ஹம். ஆமாம் க்கா. சாரும் அவருடைய தம்பியும் பகல்ல வேலைக்குப் போய்டுவாங்க. அங்கிள் மட்டும் தான் கவனிச்சுப்பாரு. சில சமயம் இவ அழ ஆரம்பிச்சுட்டா, நிறுத்திறது ரொம்பக் கஷ்டமா இருக்கும்னு அங்கிள் பல தடவை சொல்வாரு.”

“ஹம்! பாப்பா ரொம்ப அழகா இருக்கா அம்மு.”

“ஆமாம் க்கா. எனக்குப் பார்த்தவுடனே இவளை ரொம்பப் பிடிச்சு போய்டுச்சு. அதான் உடனே அங்கிள் கிட்ட பெர்மிஷன் கேட்டு தூக்கிட்டு வந்துட்டேன். அன்னைல இருந்து தினமும் இந்தப் பட்டுகுட்டிக்கு நம்ம வீடுதான் ப்ளே ஹௌஸ்.” என்று சொல்லி சிரித்தவள், தேஜாவின் கன்னத்தைப் பிடித்துச் செல்லமாகக் கிள்ள, அவளின் கையைத் தட்டிவிட்ட மிருதுளா, “பாப்பாக்கு வலிக்கப் போகுது அம்மு.” என்றாள் கண்டிக்கும் குரலில்.

“ஆஹா!! பார்த்து ஒரு செகண்ட் கூட ஆகல. அதுக்குள்ள அவளுக்குச் சப்போர்ட்டா. அவளே அமைதியா இருக்கா. உனக்கென்ன க்கா.” என்றவள் மீண்டும் தேஜாவின் கன்னத்தில் கைவைக்கப் போக, “அம்மு!!! அடிவாங்குவ.” என்று அவளின் தோளில் மிருதுளா லேசாக அடிக்க, அதைப் பார்த்த குழந்தை, பல்வரிசை தெரிய, கெக்க புக்க என்று சிரிக்க, ஆராவோ, “நான் அடிவங்குறதை பார்த்து உனக்குச் சிரிப்பா இருக்கா.” என்று விளையாட்டுக்கு குழந்தையை அடிக்கப் போக, மிருதுளாவோ, அடிபடாமல் இருக்கக் குழந்தையை அந்தபக்கம் திருப்ப, ஆராவும் அந்தப் பக்கம் போக என்று மாற்றி மாற்றி இருவரும் சுற்றி கொண்டிருக்க, அந்த ராட்டின சுற்றலில் குழந்தை இன்னும் வாய்விட்டு சிரிக்க ஆரம்பித்தது. குழந்தை சிரிப்பதை பார்த்து ரசித்தபடி நின்றுவிட்ட ஆரா, “அக்கா இவ்ளோ நாள் இவ இந்த அளவுக்குச் சிரிச்சு நான் பார்த்ததில்லை. உன்கிட்ட வந்ததும் என்ன சிரிப்பு இந்தப் பட்டுகுட்டிக்கு.” என்று ஆச்சரியமாகச் சொல்ல, மிருதுளாவோ மனதுக்குள், ‘இனி நான் இருக்கேன் டா உனக்கு அம்மாவா. என்னைக்கும் உன்னை இந்த மாதிரி சிரிச்சிட்டே வச்சுருப்பேன். உன் சிரிப்பில தான் என் சந்தோசம் இருக்கு.’ என்று நினைத்துக் கொண்டாள்.

யார்வீட்டு குழந்தைக்கோ, தாயாக இருப்பேன் என்று எந்த நம்பிக்கையில் சொன்னாள் என்று மிருதுளாவிற்கே தெரியாது. ஆனால் அக்குழந்தை அவளைச் சொல்லவைத்தது.

குழந்தையின் சிரிப்புச் சத்தத்தில் அங்கே வந்த பார்வதியும், குழந்தையை பார்த்து ஆச்சரியமும் சந்தோஷமும் அடைந்தார். “யார் குழந்தை கண்ணு?!” என்று கேட்டவரிடம், ஆரா அனைத்தையும் சொல்ல அவரும் குழந்தையின் நிலைமையை நினைத்து வருத்தப்பட்டார். கூடவே குழந்தையுடன் மிருதுளாவை பார்த்ததும் அவருக்குள் அவளைப் பற்றிய கவலை. ‘இப்படிப் புள்ளகுட்டியோட இருக்கவேண்டியவ, எல்லாத்தையும் இழந்துட்டு நிக்குறாளே!!’ என்ற உள்ளுக்குள் வருத்தப்பட்டார். ஆனால் வெளியே சொல்லவில்லை. சொன்னால் தன் இரு பேத்திகளும், ‘என்ன ஆச்சி நீ! சின்னக் குழந்தை மாதிரி அழுதுட்டு.’ என்று அவருக்கே அறிவுரை வழங்க ஆரம்பித்து விடுவார்களே.

அதன்பின் வந்த நாட்கள், தேஜாவிற்கு, மிருதுளாவின் வீட்டில் தான் அதிகநேர வாசம். முன்பு மாலை அரா வரும்பொழுது மட்டுமே இவர்கள் வீட்டில் இருந்த குழந்தை, இப்பொழுதெல்லாம் பகல் பொழுதுகளிலும் இங்கே இருக்க ஆரம்பித்தது. வெளியே வேலை என்று செல்லும் வேலைகளில் மிருதுளாவிடம் குழந்தையை விட்டுசெல்ல ஆரம்பித்த சேகர், அதன்பின் குழந்தை முழுநேரமும் அங்கே இருப்பதற்கு எந்த ஆட்சேபனையும் சொல்லவில்லை. அதற்குக் காரணம் மிருதுளாவின் நிலைமை.

மிருதுளாவை பற்றியை சில உண்மைகள் அவருக்குப் பார்வதி மூலம் தெரியவந்தது, அதன்பின் குழந்தை அங்கே வெகு நேரம் இருப்பதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவில்லை. மிருதுளாவின் ஆறுதலுக்குத் தேஜா அங்கே இருப்பதில் அவருக்கு எதுவும் தவறாகத் தெரியவில்லை.

இவ்வாறாக மிருதுளா பெறாத பிள்ளையாகவே தேஜா மாறிபோனாள். அனைவரும் அலுவலகம் சென்றதும் இவள் வீட்டில் இருக்கும் தேஜாவிற்கு, குளிப்பது முதல் அனைத்தையும் மிருதுளாவே செய்தாள். அவ்வாறாகக் குழந்தை இவளுடன் இருக்கும் நேரம் மெல்ல மெல்ல அதிகரிக்க ஆரம்பித்தது. ஆரம்பத்தில் அரை மணிநேரம் ஒரு மணிநேரம் என்று இருந்தவள் சமீபமாகப் பல மணிநேரங்கள் மிருதுளாவுடன் இருந்துகொள்ள ஆரம்பித்தாள். அடுத்த வீட்டு குழந்தையை அதிக நேரம் வைத்திருக்க வேண்டாம் என்று ஆரம்பத்தில் சொன்ன பார்வதிக்கு கூட, அக்குழந்தையால் தன் பேத்தி மகிழ்ச்சியாக இருப்பதில் தற்பொழுது மன நிம்மதி. அதனால் அவரும் ஒன்றும் சொல்லாமல் விட்டுவிட்டார்.

இப்படியாக வாரங்கள் சென்றுகொண்டிருக்க, அன்றொரு நாள், வழக்கம் போலப் படுக்கை அறையில் குழந்தை விளையாடி கொண்டிருக்க, பார்வதியும் சேகரும் பக்கத்தில் இருந்த கோவிலுக்குச் சென்றிருந்தனர். மிருதுளா மட்டுமே வீட்டில் தனியே இருக்க, அந்த நேரம் குழந்தை திடீரென்று அழுதது. செய்து கொண்டிருந்த சமையலை அப்படியே விட்டுவிட்டு அறைக்கு வந்த மிருதுளா, குழந்தையைத் தூக்கி சமாதனம் செய்ய முயல, குழந்தையின் அழுகை அதிகரித்ததே தவிரக் குறையவில்லை.

குழந்தையின் அழுகுரல் அதிகரிக்க அதிகரிக்க, மிருதுளாவுக்குள் இனம் புரியா ஓர் உணர்வு. மயக்கம் போட்டு விழுந்த அன்று போல இன்றும் அவளுக்குள் என்னவோ செய்ய, அவளால் நிற்க முடியவில்லை. கையில் குழந்தையுடன் அப்படியே கட்டிலில் தொப்பென்று அமர்ந்தவள், சில நிமிடங்கள் தன்னை ஆசுவாச படுத்திக்கொள்ள முயல, அப்பொழுதுதான் அந்தக் காட்சியைப் பார்த்தாள்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!