Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Tamil Novels at TamilNovelWriters

Tamil Novels And Stories Online

Uncategorized

கருவறை சொந்தம் -9.1

அத்தியாயம் 9(1)

கார் மருத்துவமனையை நோக்கி சென்றுகொண்டிருக்க, பின்சீட்டில் மடியில் குழந்தையுடன் அமர்ந்திருந்த மிருதுளாவிற்கு, குழந்தையின் உடல் உஷ்ணம் மனதுக்குள் பயத்தை உண்டாக்கியது. தேஜாவின் முகத்தையே இமைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தவளின், உதடுகள் சத்தமில்லாமல் கந்த சஷ்டி கவசத்தைச் சொல்லிக் கொண்டிருக்க, கண்களோ கண்ணீரை இடைவிடாமல் வெளியேற்றிக் கொண்டிருந்தது.

தேஜாவின் முகத்தை வருடியவளுக்கு, கைவிரல்கள் நடுங்க, குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயம் அடிவயிற்றைக் கவ்வியது. ‘முருகா! என் பொண்ணுக்கு எதுவும் ஆகக்கூடாது. அவளை எப்படியாவது காப்பாத்து! எனக்கு வாழ்கையில் இருக்கிற ஒரே பிடிப்பு இவதான். என் உயிரை வேணும்னா எடுத்துக்கோ. என் பொண்ணைக் காப்பாத்து.’ என்று மனதுக்குள் வேண்டிக் கொண்டவள், தேஜாவை வயிற்றோடு சேர்த்தணைத்துக் கொண்டாள்.

மிருதுளாவின் செயல்கள் அனைத்தையும், முன்பக்க கண்ணாடி வழியாகப் பார்த்துக்கொண்டுதான் இருந்தான் கெளதம். அவளின் மவுனமான அழுகை, இவனை என்னவோ செய்தது. தன் குழந்தை மேல் இவளுக்கு இவ்வளவு பாசமா?!! இத்தனை நாள் இவள் எங்கிருந்தாள்?! எங்கிருந்து வந்தாள்?! அவளது முகத்தைக் கூட இப்பொழுதுதான் முழுவதுமாகப் பார்க்கிறான். பேசி பழகியதுகூட இல்லை. மிருதுளாவை இவன் இங்குப் பார்த்தே சில மாதங்கள் தான் ஆகிறது. அவளின் அதீத அன்பு இவனுக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.



Advertisement

நடுசாமம் என்பதால் ரோட்டில் சுத்தமாக வண்டிகள் எதுவும் போகவில்லை. ஆதலால் அதிவேகமாக ஜெய் வண்டிய ஓட்டிவர, பதினைந்தே நிமிடத்தில் அந்த 24மணிநேர மருத்துவமனைக்கு வந்து சேர்ந்திருந்தான். காரைவிட்டு கீழே இறங்கிய கெளதம், பின்பக்க கதவை திறந்து மிருதுளாவிடம் இருந்து குழந்தையை வாங்கிக் கொண்டவன், வேகவேகமாக மருத்துவமனை ரிஷப்ஷனுக்குச் சென்று, விவரத்தை கூற, அங்கு வந்த நர்ஸ் அவனைப் பக்கத்தில் இருந்த அறைக்கு அழைத்துச் சென்றவர், படுக்கையில் குழந்தையைப் படுக்கவைக்கச் சொல்லிவிட்டு மருத்துவரை அழைக்கச் சென்றார். சில நிமிடங்களில் அங்கே வந்த மருத்துவர் விவரத்தை கேட்டுக்கொண்டபின், உடனடியாகச் சிகிச்சையைத் தொடங்கினார். மூவரையுமே வெளியே இருக்கும்படி நர்ஸ் சொல்லவும், மூவரும் வெளியே இருந்த பெஞ்சில் அமர்ந்துகொண்டனர்.

முதற்கட்ட பரிசோதனை முடித்துவிட்டு மற்ற டெஸ்ட்களுக்கு ஏற்பாடு செய்துவிட்டு வெளியே வந்த மருத்துவர், “என்ன சர் நீங்க? இவ்ளோ சீரியஸா இருக்கும்போது கொண்டு வந்து இருக்கீங்க!! குழந்தைக்குக் காய்ச்சல் ரொம்ப நேரமா இருக்கு. நைட் ஃபுள்ளா பாக்காம என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?!” என்று இவர்களைப் பொரிந்து தள்ளவும், கெளதம் மிருதுளாவின் முகத்தைத் தான் பார்த்தான். ஆனால் அவளோ மருத்துவர் சொன்ன செய்தியில் அழுதுவிடும் நிலைமையில் இருந்தாள். “சாரி டாக்டர். நைட் பாப்பா நல்லாத்தான் இருந்தா. அதனால எங்களுக்குத் தெரியல. நாங்களும் தூங்கிட்டோம். இப்போதான் தெரியும். சாரி டாக்டர். ப்ளீஸ். இப்போ பாப்பாக்கு எப்படி இருக்கு?! சரி ஆகிடும்ல டாக்டர்?!” என்று தவிப்புடன் கெளதம் கேட்கவும், அவரோ, “இப்போ ஒன்னும் சொல்ல முடியாது சர். சில டெஸ்ட் எடுக்கவேண்டி இருக்கும். டெஸ்ட் ரிசல்ட் வந்த பிறகு தான் சொல்ல முடியும்.” என்று கூற, “டாக்டர் நாங்க பாப்பாவை பார்கலாமா?!” என்று மிருதுளா அவரிடம் கேட்கவும் சரி என்று கூறிவிட்டு அவர் செல்ல, மூவரும் உள்ளே சென்றனர்.

குழந்தையின் ரத்த மாதிரி எடுக்கவென்று அவள் கைகளில் ஊசி குத்தப்பட, அந்த வலியில் விழித்துக்கொண்ட தேஜா, வீரிட்டு அழ ஆரம்பிக்க, துடித்துப்போன மிருதுளா, குழந்தையின் அருகில் சென்று “ஒன்னும் இல்லடா அம்முகுட்டி. சரி ஆகிடும் டா.” என்று கூறியவாரே அவளைத் தடவிக்கொடுக்க, சில மணிநேரம் கழித்தே அவளது அழுகை மட்டுப்பட்டது. அதன்பின் குழந்தையின் ரத்தமாதிரி எடுக்கப்பட்டுப் பரிசோதனைக்கு அனுப்பபட, மேலும் சில டெஸ்ட்களும் எடுக்கப்பட்டது. அதன் ரிசல்ட் வர என்று நேரம் கடந்துகொண்டே செல்ல, காலை விடியலும் வந்துவிட்டது.

Advertisement

அதன் பின்பே தனது தந்தைக்கு அழைத்த கெளதம், விஷயத்தைச் சொல்லவும் அந்தபக்கம் அவரும் பதறியவர், உடனடியாக ஊரில் இருந்து புறப்பட்டார். மூவரும் இங்கே தவிப்புடன் அமர்ந்திருக்க, அப்பொழுதுதான் அவர்கள் அருகில் வந்த டாக்டர், “குழந்தைக்குக் கொஞ்சம் சீரியஸா தான் இருக்கு. இப்போதைக்கு எதுவும் சொல்ல முடியாது. Temperature இறங்கனும். இருப்பத்துநாளு மணிநேரம் கழிச்சு தான் எதையும் உறுதியா சொல்ல முடியும்.” என்று ஒரு இடியை அவர்கள் தலையில் இறக்கிவிட்டு சென்றார். அந்த வார்த்தையில் இடிந்துபோய் அமர்ந்துவிட்டாள் மிருதுளா. கண்களில் கண்ணீர் தேங்கிவிட்டது. நெஞ்சுக்குள் ஏதோ பயப்பந்து உருண்டது. தொலைக்காட்சி, நாளிதழ்களில் என்றோ பார்த்த கேட்ட செய்திகள் நினைவில் வர, அவளையும் மீறி கண்ணீர் வந்தது. ‘முருகா!!’ என்றவளுக்கு, அந்த நேரத்தில் கடவுளைதான் சரணடைய முடிந்தது.

Advertisement

கலக்கத்துடன் தேஜாவின் அருகிலேயே மூவரும் அமர்ந்திருக்க, ஜெய்யின் மொபைல் அடிக்கவும், வெளியே வந்தவன் மொபைலை எடுத்துப்பார்க்க, ‘ஆரா காலிங்’ என்று காட்டியது. அதைபார்த்ததும், நேரம் கிடைக்கும்பொழுது போன் செய்கிறேன் என்று சொன்னது நியாபகம் வர, உடனே கால்லை அட்டென்ட் செய்து இவன் ஹலோ என்று சொல்வதற்கு முன்பே அந்தபக்கம், “ஹலோ ஜெய்! பாப்பாக்கு எப்படி இருக்கு?” என்று பதட்டத்துடன் ஆரா கேட்கவும், ‘அக்காவும் தங்கச்சியும் பாப்பா மேல எவ்வளவு பாசம் வச்சு இருக்காங்கப்பா.’ என்று நினைத்து புன்முறுவல் புரிந்தவன், “temperature இன்னும் இறங்கல ஆரா. டெஸ்ட் எடுத்து இருக்காங்க. 24 மணிநேரம் கழிச்சு தான் எதையும் சொல்ல முடியும்னு டாக்டர் சொல்லிட்டாங்க.” என்று இவன் பதிலளிக்க, “ஐயையோ!!” என்று அந்தபக்கம் அதிர்ச்சி.

“என்ன ஜெய் சொல்றீங்க?! சரி நானும் ஆச்சியும் அங்க வந்துட்டு இருக்கோம். இன்னும் ஒரு டென் மினிட்ஸ்ல வந்துடுவோம்.” என்று கூறிவிட்டு அவள் வைத்துவிட, இவ்வளவு காலையிலேயேவா?! என்று தோன்றியது ஜெய்யிற்கு. ஏனெனில் நேரம் அப்பொழுதுதான் காலை ஆறு.

சொன்னபடியே பத்து நிமிடத்தில் வந்துவிட்ட ஆராவும் பார்வதியும், வாசலிலேயே நின்றிருந்த ஜெய்யுடன் மருத்துவமனைக்குள் சென்றனர். பெஞ்சில் அமர்ந்திருந்த மிருதுளா பார்வதியை பார்த்ததும், அழுகையுடன் மருத்துவர் கூறியதை சொல்லி, “எனக்குப் பயமா இருக்கு ஆச்சி. டாக்டர் என்னனமோ சொல்றாங்க. பா…..பாப்பாக்கு….” என்று அதற்கு மேல் சொல்லமுடியாமல், அவரின் தோளில் முகம் புதைத்து அழ ஆரம்பித்துவிட்டாள். அவளின் இந்தத் திடீர் செயலில் சங்கடமாய்ப் போயிற்றுச் சகோதரர்கள் இருவருக்கும். “சரி ஆகிடும் கண்ணு. நீ கவலைப்படாத.” என்றவருக்கு அவளைச் சமாதானம் செய்யத்தான் ரொம்ப நேரம் ஆயிற்று.

Advertisement

சிறிது நேரம் அங்கே பார்வதியும் ஆராவும் இருக்க, ஜெய் கான்டீன் சென்று அனைவருக்கும் காபி வாங்கி வந்தான். ஆனால் மிருதுளா தனக்குப் பசி இல்லை என்று கூறி குடிக்க மறுத்துவிட்டாள். அதன்பின் அலுவலகம் செல்ல நேரம் ஆனதால், கெளதம் ஜெய்யிடம், “நீ வீட்டுக்குக் கிளம்பு ஜெய். ஆபீஸ்ல முக்கியமான ப்ராஜெக்ட் இருக்குன்னு சொன்னல. புறப்படு. நான் பார்த்துகிறேன்.” என்று கூற, “இல்ல அண்ணா. நானும் இருக்கேன். வொர்க் அப்புறம் பார்த்துக்கலாம்.” என்று அவன் மறுக்க, “பரவால ஜெய். நான்தான் இருக்கேன்ல. நீ கிளம்பு.” என்று வற்புறுத்தி அவனை எப்படியோ சம்மதிக்க வைத்தவன், “நம்ம கார்ல போ. போகும்போது, அவங்களையும் கூட்டிட்டு போ.” என்றான்.

சரி என்ற ஜெய், பார்வதியிடம் சென்று விவரத்தை கூறி, அவர்களைக் கிளம்பச் சொல்ல, சற்று தயக்கத்துக்குப் பின்பே அவரும் ஆராவும் சம்மதித்தனர். பார்வதி சென்று மிருதுளாவை கிளம்பச் சொல்ல, “இல்லை ஆச்சி. நான் வரல. பாப்பா கண்ணு முழிக்கிற வரை நான் எங்கயும் போக மாட்டேன்.” என்று அவள் திடமாகக் கூற, அவருக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. ஆராவும் ஜெய்யும் கூடச் சொல்லி பார்த்துவிட்டனர், அவள் கேட்கவில்லை.

அப்பொழுது மருந்து வாங்கிவிட்டு அங்கே வந்த கெளதம், அனைவரும் கிளம்பாமல் இருப்பதைப் பார்த்து என்னவென்று கேட்க, ஜெய் விஷயத்தைச் சொன்னான். அதன்பின் இவனே மிருதுளாவிடம் சென்று, “நீங்க கிளம்புங்க மிருதுளா. நான் பார்த்துக்கிறேன். பாப்பாக்கு ஒன்னும் ஆகாது. போயிட்டு ஈவ்னிங் வாங்க. எவ்வளவு மணிநேரம் இங்கயே இருப்பீங்க?!” என்று சொல்ல, “இல்லை பாப்பா கண்முழிச்சதும் போறேன்.” என்றாள் மிருதுளா.

“பாப்பா கண்முழிக்க நேரம் ஆகும்ன்னு டாக்டர் சொல்லி இருக்காங்க மிருதுளா. அதுவரைக்கும் இங்க எப்படி இருப்பீங்க? நான் பார்த்துப்பேன். உங்களை நீங்க எதுக்குக் கஷ்டபடுத்துக்குறீங்க?” என்று இவன் மறுபடியும் சொல்ல, நிமிர்ந்து அவனை ஒரு நொடி உற்று பார்த்தவள், “எனக்கு எந்தக் கஷ்டமும் இல்லைங்க. உங்களுக்கு என்னால டிஸ்டர்பா இருக்குன்னா சொல்லுங்க, நான் போய்டுறேன்.” என்றாள் லேசான கலங்கிய குரலில்.

மிருதுளா அப்படிச் சொன்னதும், “என்ன கண்ணு?!” என்று பார்வதி சங்கடமாகக் கௌதமை பார்க்க, அமைதியாக நின்றிருந்த அவன் சில நொடிகள் கழித்து ஜெய்யிடம் திரும்பி, “மிருதுளா இங்க இருக்கட்டும் ஜெய். நீ அவங்களைக் கூட்டிட்டு போ.” என்றான். அதன்பிறகும் செல்லாமல் நின்றுகொண்டிருந்த பார்வதியிடம், “நான் உங்க பேத்தியை பார்த்துக்கிறேன் பாட்டி. இங்கயே சாப்பிட இடம் இருக்கு. பாப்பா கண்முழிச்சதும் உங்களுக்குத் தகவல் சொல்றேன். நீங்க வீட்டில ரெஸ்ட் எடுத்துட்டுச் சாய்ந்திரம் வாங்க.” என்று கெளதம் சொன்னபிறகு மிருதுளாவை பார்த்துக்கொண்டே அங்கிருந்து சென்றார் அவர்.

அவர்கள் சென்றதும் சில மணிநேரம் கழித்து மிருதுளாவிற்கு மதிய உணவு என்ன வாங்க என்று கெளதம் அவளிடம் கேட்க, பசியில்லை என்று அவள் சொல்லிவிட, “என்னங்க நீங்க? காலையில இருந்து ஒன்னும் சாப்பிடல. இப்பவும் எதுவும் வேண்டாம் சொல்றீங்க. ப்ளீஸ் ஏதாவது சாப்பிடுங்க. பாப்பாக்காக உங்க உடம்பை கெடுத்துக்காதீங்க.” என்று இவன் பலமுறை சொல்லி பார்த்தும், “ஒரு நாள் சாப்பிடலனா செத்து போய்ட மாட்டேன். நீங்க போய்ச் சாப்பிடுங்க.” என்று சாதரணமாக அவள் சொன்னதும், இவனுக்குத் தான் ‘என்ன இப்படிச் சொல்றாங்க?!‘ என்று அதிர்ச்சியாக இருந்தது. சொல்லிவிட்டு மிருதுளா இருந்த இடத்தை விட்டு அசையாமல் இருக்க, வேறு வழியில்லாமல் கௌதமும் அமைதியாக அமர்ந்துவிட்டான்.

மருத்துவர் அவ்வபொழுது வந்து குழந்தையைப் பாரத்துவிட்டு சென்றார். குழந்தையின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படுவதுபோலத் தெரியவில்லை. அவர்களாலளான எல்லா முயற்சியையும் செய்து கொண்டிருந்தார்கள். இப்படியே நேரம் சென்று கொண்டிருக்க, மாலை நேரம், திடீரென்று தேஜா இருந்த அறையின் நர்ஸ், வேகவேகமாகச் சென்று டாக்டரை அழைத்துவர, இவர்கள் இருவருக்கும் குழப்பமாக இருந்தது. பதற்றத்துடன் எழுந்து உள்ளே சென்று பார்க்க, குழந்தையின் உடல் தூக்கி தூக்கி போட்டுக் கொண்டிருந்தது

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!