Skip to content
Post Views: 2,708
கற்பனை 30
திருமகள் அந்த பள்ளியில் வேலைக்கு சேர்ந்திருந்தாலும் ,அங்கே இருக்கும் எந்த விஷயங்களை பற்றியும் அவள் கவலைக்கொள்ளவோ,யோசிக்கவோ இல்லை. தனது ‘அண்ணன் சொல்லியிருக்கிறான்’என்றால் நிச்சயமாக பாதுகாப்பான,நல்ல இடமாகத் தான் இருக்கவேண்டும் என்று நினைத்தாள் . அதுவும் சரிதானே. ஆனால் ,இந்த யோசனையை சொன்னவன் ‘சாகேத்’ என்று அவளிடம் சொல்பவர்கள் யார்?
Advertisement
சாகேத்துக்கு அவன் பள்ளி தொடர்பான பணிகளே அதிகமாய் இருந்தது. இவள் பயிற்சி பெறும் இடத்திற்கெல்லாம் செல்வதற்கு அவனுக்கு நேரம் கிடையாது. அவனது அறையோ இரண்டாவது தளத்தில் .திரு இருப்பதோ அதற்கு நேரெதிரில் இருக்கும் தரைத் தளத்தில் . அவள்பாட்டுக்கு காலை எட்டு மணிக்கு வந்துவிடுவாள். பள்ளியின் நேரம் என்னவோ எட்டே முக்காலுக்குத்தான் . வீட்டில் இருந்தால் மூச்சு முட்டும் உணர்வு. எல்லோரும் தன்னை ஏதோ வருத்தம்,பரிவு நிறைந்த பார்வை பார்ப்பது போல அவளுக்கு கஷ்டமாக இருந்தது.
அதிலும் சாம்பசிவம் அலுவலகம் போவதைக் குறைத்துக் கொண்டு,தன்னறைக்குள்ளிருந்து ,திருவை பார்த்துக்கொண்டே நேரத்தை கழிப்பதில் அவளுக்கு உடன்பாடில்லை.அவளது துன்பம் அவளது மட்டுமே!மற்றவர்கள் அதை பகிர்ந்துகொண்டு தாங்களும் துக்கம் அனுஷ்டிப்பதில் அவளுக்கு விருப்பம் இல்லை. அதிலும், தான் அண்ணன் மகனை வைத்துக்கொண்டு கொஞ்சிக்கொண்டிருந்தால்,தனது மகனுக்கு பசியாற்றவென கூட உரிமையாய் அண்ணி வந்து குழந்தையை தூக்கி செல்வது இல்லை என்னும்பொழுது,ஒரு அம்மாவாக சாருவின் நிலை எப்படி இருக்கும் என்று கலங்கியது பெண்.
Advertisement
Advertisement
முன்பெல்லாம் எப்படியோ, காலம் சொல்லிகொடுத்திருக்கும் வலி நிறைந்த பாடங்களை அவள் ஒழுங்காகத்தான் படித்து புரிந்து கொண்டிருக்கிறாள். அதனாலேயே, யாருக்கும் பாரமாக வீட்டுக்குள் முடங்கி இராமல் இங்கே பள்ளிக்கூடத்தில் சிறு குழந்தைகளுடன் நேரம் கழிக்கவும்,அவர்களுக்காகவென்று சார்ட்களை தயாரிப்பதிலும்,அவர்களுக்கு ரைம்ஸ் சொல்லித்தருவதிலும் தன்னை புகுத்திக் கொண்டாள் .
மாலை நேரங்களில் பாட்டு வகுப்புகளை எடுக்கத் தொடங்கியும் இருந்தாள் .நிவாஸ் எனும் மனிதனை சுத்தமாக மறந்தவளால், குழந்தைகளை மனதால் சற்றும் விலகி இருக்க முடியவில்லை. வெகுவாக மனம் அவர்களைத்தான் தேடியது.
Advertisement
“பிள்ளைகளால் எப்படி அம்மாவை வெறுத்து வேண்டாம் என்று ஒதுக்க முடிந்தது? இந்தியாவாக இருந்திருந்தால் குழந்தைகளை வளர்ப்பது, அவ்வளவு கடினமாக இருந்திராது. இங்கே குழந்தைகளை பெற்றவள் இரண்டு அடி போடுவதுதான்,கடிந்து கொள்வதுதான். அதெல்லாம் ஒன்றும் பெரிய விஷயமே இல்லை.அங்கே,குழந்தைகளை நம் இஷ்டத்திற்கு வளர்க்க முடியாது. இதோ, நிவாஸும்,நிரூபனும் செய்த சதியில் நான் குழந்தைகளை அவர்களிடம் இழந்து தோற்றுப்போனேன்.எனக்கு இனிமேல் என்ன பிடிமானம்?”என்று தனிமையில் அவள் அழுவது வீட்டில் எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் என்ன செய்வது என்றுதான் யாருக்கும் புரியவில்லை. இதோ,பெண்ணுக்கு முப்பது வயதுதானே ஆகிறது.நிறைய வீடுகளில் இப்போதெல்லாம் பெண்கள் முப்பதுக்கு மேல்தான் திருமணம் செய்துகொள்ளவே ஒத்துக்கொள்கிறார்கள். இவளோ,இப்படி வந்து நிற்கிறாளே என்று எல்லோருக்குமே மனது அடித்துக்கொண்டது.
வீட்டில் இருந்த கலகலப்பும்,சந்தோஷமும்,ஏதோ திருஷ்டி பட்டது போல் எங்கேயோ தொலைந்துதான் போனது. சாருவுக்கு இதோ எட்டாவது மாதம் ஆரம்பித்து விட்டது.மருத்துவர் குறிப்பிட்ட திகதிக்கு முன்பே குழந்தையை எதிர்பார்க்க சொல்லிவிட்டார். அவளால் முன்புபோல் அலுவலகம் செல்லவும் முடியவில்லை. சாம்பசிவம் இப்போது கட்டாயமாக அங்கே சென்று வரவேண்டிய நிலைமை. திரு அரைநாள் பள்ளிக்கூடம் முடிந்ததும் வீட்டுக்கு வந்து சாருவுக்கு உதவியாக மூத்த குழந்தையை பார்த்துக்கொண்டாள்.
அவள் முகத்தில் உணர்வுகள் எதுவும் மிச்சம் இல்லை.சாரு அவளையே உன்னிப்பாக பார்க்கத் தொடங்கியிருந்தாள். மனதுக்குள் வலித்தாலும் , கண்களில் ஒரு கர்வம் காட்டினாள். அந்த பார்வையை எதிர்கொள்ள முடியாமல் திருமகள் அடிபட்டுத் தான் போனாள் சாருவுக்கு குழந்தையும் பிறந்துவிட்டது.அவளது பெற்றவர்களுடன் செல்வதற்கு சாருவுக்கு விருப்பம் இல்லை.அவர்கள் மூன்று மாதங்களுக்கு இங்கே சென்னை வந்துவிட்டார்கள்.
வீட்டில் கொஞ்சம் சந்தோஷம் மீண்டு வந்தது. இதே சாக்காக வைத்து சாகேத் அடிக்கடி இவர்களது வீட்டுக்கு வந்து செல்வதையும்,சரியாக திருமகள் குழந்தை இருவரில் யாரை வைத்திருக்கிறாளோ,அந்த குழந்தையை கொஞ்சுவதுபோல் அவளருகில் சென்று நிற்பதையும் மொத்த குடும்பமும் உற்றுநோக்கியது. ஆனால் ,அதைப் பற்றி திருமகள் உணரவில்லை.
மருத்துவ ஆலோசனை,மாண்டசரி பள்ளிவேலை, பாட்டு வகுப்பு,வீட்டு வேலைகள்,குழந்தைகள் என்று எவ்வளவோ அவள் மனதில் முன்னேற்றம்தான். தடுமாற்றம் இல்லை.இப்போதெல்லாம் ஆறு மாதங்களுக்கு ஒரு முறைதான் மருத்துவ ஆலோசனைக்கு செல்கிறாள். அடிவாங்கிய மனம் இன்னமும் தனக்கு அடுத்து என்ன?என்பதைப் பற்றி யோசிக்கவில்லை. இதோ, அவள் விவாகரத்து பெற்று ஒண்ணரை வருஷங்கள் முடிந்து விட்டது.
சாகேத்தின் அருகாமை திருமகளிடம் எந்த வேதியல் மாற்றத்தையும் கொணரப் போவதில்லை என்பதை சாரு புரிந்துகொண்டாள் .ஒரு பெண்ணாக தனது நாத்தனாரின் நிலைமையை அவளால் நிச்சயமாக புரிந்துகொள்ள முடிகிறதுதான். அதற்காக ,வாழ்நாள் முழுவதும் இந்த விஷயங்களினால் தன்னை தானே குறுக்கிக் கொண்டு, இழந்தவற்றை எண்ணி மருகிக்கொண்டு,தனது பிள்ளைகளை பார்த்துக்கொண்டு,இங்கே பெற்றவர்களுக்கு பெண்ணாய் மட்டும் அவள் வாழ்ந்து முடிக்கவேண்டும் என்று சாருவால் யோசிக்க முடியாது.
‘என்ன செய்வது’ என்று தீவிரமாக சிந்திக்க ஆரம்பித்தாள் சாரு .நரேந்திரனிடமும் அவள் தனது எண்ணத்தையும்,சாகேத் முன்பு இந்த பக்கமே வராதவன் வாரத்தின் மூன்று நாட்கள் வருவதையும் குறிப்பிட்டு சொல்ல நரேனுக்கு மனைவி செய்வது தெளிவாகவே புரிந்துவிட்டது.அதே சமயம் மனதில் தயக்கமும் வந்து சேர்ந்தது.
காலம் எவ்வளவுதான் மாறியிருந்தாலும்,இன்னமும் பல விஷயங்களில் பெண்கள் நிரம்பவே யோசிக்கிறார்கள்.”மறுமணம்”.இந்த விஷயம் முன்பெல்லாம்,அதாவது பல நூறு,ஆயிரம் வருஷங்களுக்கு முன்பாகவே ஆண்களுக்கு சாதாரணமான ஒரு விஷயமாக இருந்திருக்கிறது.இந்த நூற்றாண்டின் மத்தியில் கூட பெண்களுக்கான மறுமணம் பற்றி வெகுவாக யாரும் சிந்தித்து இருக்கவில்லை. அவ்வளவு ஏன்,நான் சிறு வயதினளாக பள்ளிக்கு சென்றுகொண்டிருந்த சமயங்களில்,எங்கோ-யாரோ ஓரிரு பெண்கள் மறுமணம் செய்துகொண்டாலே , அவர்களின் குணநலன்கள் அலசி ஆராயப் படுவதை கேட்டிருக்கிறேன்.
இப்போதும் பல பெண்கள் முதல் திருமணம் தோற்றுப் போகும்பொழுது இன்னொரு திருமணம் செய்துக்கொள்ள யோசிப்பதை பார்க்க முடிகிறது.அதற்க்கு பல காரணங்கள் சொன்னாலும்,முதல் காரணம் மனதின் வலி, அதனால் ஏற்படும் ஆண்களின் மீதான நம்பிக்கை குறைவு .இன்னொருவரை மனதாலும்,உடலாலும் ஏற்கத் தயங்கும் மனம்.அதிலும் குழந்தைகள் இருக்கும் பெண்கள் இதைப்பற்றி யோசிக்க வெகுவாக தயக்கம் காட்டுவதை பார்க்கிறோம்.
இதோ,இப்போது திருமகளின் நிலையை பற்றி பேசுவோம். ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. வெளிநாட்டு மாப்பிள்ளை.நல்ல படிப்பு,வேலை சம்பாத்தியம்,சொத்து என்று வெளியிலிருந்து பார்ப்பவர்களுக்கு பொறாமையை விதைக்கும் அளவுக்குத்தான் இருந்தது. ‘நிஜம் என்ன ‘ என்று இந்தக் கதையை படிக்கும் எல்லோருக்கும் தெரியும்.
இப்போது, சாகேத்தின் மனம் புரிந்த நரேந்திரனுக்கு,இப்போதாவது தனது தங்கையை அவனுக்கு திருமணம் செய்து வைத்தால் இருவரது வாழ்க்கையும் சரியான நிலைக்கு வந்துவிடும் என்று அவன் மனம் கணக்கு போடுகிறது. முன்பாவது அப்பாவும் அம்மாவும் எதிர்ப்பார்கள்.திருமகளின் மனப்போக்கு என்று ஆயிரம் விஷயங்கள் இருந்தது.
இப்போது சாகேத் தனது திருமண வாழ்க்கையை திருமகளை மனதில் வைத்திருப்பதால் தொலைத்துவிட்டு வந்திருக்கிறான். திருமகளோ கல்யாண வாழ்க்கையுடன்,குழந்தைகளையும் முன்னாள் கணவனிடம் தொலைத்துவிட்டு வந்திருக்கிறாள்.இருவரும் திருமணம் செய்துகொண்டால் இன்று இல்லாவிட்டாலும் கொஞ்ச மாதங்களிலோ,வருஷங்களிலோ இருவரும் வாழத்தொடங்கிவிடுவார்கள் என்று சாரு சொன்னதிலும் நரேந்திரனது மனதில் ஆசை விதையை வளர செய்துவிட்டது.
திருமகளிடம் பேசுவதற்கு முன்பாக தனது பெற்றவர்களிடம் இதைப் பற்றி பேசி அவர்கள் என்ன நினைக்கிறார்கள் என்று தெரிந்துகொள்ளவேண்டும்.அவர்கள் சம்மதிக்காவிட்டாலோ, சாகேத்-திருமகள் திருமணத்திற்க்காக எப்பாடுபட்டாவது சம்மதம் வாங்கிவிட்டு பிறகு திருமகளிடம் இது பற்றி பேசவேண்டும் என்று தீர்மானம் செய்துகொண்டான்.
அவன் பயந்த அளவிற்கெல்லாம் சாம்பசிவம் தம்பதி இந்த திருமணத்தை எதிர்க்கவில்லை.ஆனால்,பெண்ணை பெற்றவர்களாக அவர்களுக்குள் தயக்கம் வந்துவிட்டிருந்தது. சாகேத்தை வேண்டாம் என்று முன்பு சொல்ல அவர்களுக்கு ஆயிரம் காரணம் இருந்தது என்றால் இப்போது வேண்டாம் என்று சொல்ல இவர்களைவிட சமூக அந்தஸ்த்தில் எவ்வளவோ உயரத்தில் இருப்பவனுக்கு,தனது விவாகரத்து பெற்று வந்த மகளை ‘மணமுடிக்கிறாயா ‘ என்று கேட்க அவர்களுக்கு நா எழவில்லை.அதற்க்கு இன்னொரு சரியான காரணம் அவர்கள் சாகேத்தை பலநேரங்களில் நடத்தியிருந்த விதமாக இருக்கலாம்.
அதோடு இன்று இருக்கும் நிலையில் அவனும் விவாகரத்து பெற்றவன்தான் என்பதையும் அவர்கள் மறந்து விட்டார்கள். அவனை பெற்றவர்கள் எப்படி ஒத்துக்கொள்வார்கள்?ஏதோ..திருமணம் முடிந்து சில மாதங்களில் திருமண உறவு முறிவு என்று வந்திருந்தால் வேறு மாதிரி.இப்போதோ.பல வருஷங்கள் கணவனுடன் வாழ்ந்து,அதற்கு சாட்சியாய் இரண்டு குழந்தைகளை பெற்றவளை எப்படி..என்றெல்லாம் அவர்களுக்குள் குழப்பம்.
ஆணை சுலபமாக இந்த நிலையில் ஏற்கும் சமூகம்,அதிலும் அவன் நல்ல நிலையில் இருந்தால் வேறு கேள்விகள் கேட்காதவர்கள்,பெண்ணுக்கு இது போல் நிலை என்றால் தயங்குவது ஏனோ? பெண் ஒன்றும் ஊறுகாய் இல்லையே!
இவர்கள் இவ்வளவு யோசிக்கிறார்கள்..சாகேத் இது மாதிரி எதுவும் யோசிக்கவில்லை. அவனுக்கு மட்டும் இல்லை.துரை -ராஜம் இருவருமே,சமீப காலங்களில் தங்களது மகன் நடந்து கொள்ளும் முறையை , நான்கு வருஷங்களாக இல்லாத முகத் தெளிவை அவனிடம் இப்போது பார்க்கிறார்கள்.துரை மகனுக்கு படிக்கும் காலத்தில் இருந்த அந்த பெண் மீதான ஈடுபாடு இன்னமும் அப்படியே இருக்கிறது போலும் என்று புரிந்துகொண்டுவிட்டார். அவர்களை பொறுத்தவரை மகன் திருமகளை மருமகளாக அழைத்து வந்தால் அவர்களுக்கு பூரண சம்மதமே!
யாரிடம்தான் இல்லை பிரச்சனைகள். அந்த பெண் தாங்கள் சிறுவயதிலிருந்து பார்த்து வளர்ந்தவள்.இப்போது அந்தகுழந்தை பெரியதாக அடி வாங்கிக்கொண்டு வந்து நிற்கும்பொழுது அவர்களால் ஏதாவது செய்ய முடியும்,அதில் தங்கள் மகனின் வாழ்வும் மீள வழியுண்டு என்றால் தயக்கம் எதற்கு?என்று தான் இருவரும் யோசித்தார்கள்.
ஒருவழியாக சாருவும்,நரேனும் சேர்ந்து திருவின் திருமணம் சம்மந்தமான ஒப்புதலை சாம்பசிவம்-கண்மணியிடமிருந்து வாங்கிவிட்டார்கள். “அவங்க முழு மனசோட ஒத்துக்கிட்டு இந்த கல்யாணம் நடந்தா எங்களுக்கு சந்தோஷம்தான்.ஆனா..கேக்கவே தயக்கமா இருக்கே. அவங்க ..இப்போ இருக்குற நிலைமைல இத நாம கேட்டா அபத்தமா இருக்காதா..என்று இழுத்தார் சாம்பசிவம்.நரேன் சிரித்துகொண்டே சென்றுவிட்டான்.சாருவும் தான்.
நரேனுக்கு பொறுமை இல்லை போலும்.சாகேத் வீட்டிலிருக்கும் நேரம் பார்த்து அவர்கள் வீட்டுக்கே சென்று பேசிவிட்டேன். துரை தனது மகனின் முகமாற்றங்களை படித்தார் என்றால், ராஜம் அவன் என்ன சொல்கிறான் என்று பார்த்துக் கொண்டிருந்தார். சாகேத்தின் முகம் லேசாக சிவந்தது. அவன் கண்கள் அவன் சம்மதத்தை அவனுக்கு முன்பாகவே சொல்லிவிட, ராஜமும் “நரேன்,எங்களுக்கு சம்மதம் தான். இவனும் மனைவியோட வாழாம தனியா இருக்கான். அந்த பொண்ணுக்கு கலியாணம் முடிஞ்சு ரெண்டு குழந்தைகள் ஆயாச்சு. உன் தங்கையால என் பையனோட மனம் ஒத்து வாழ முடியும்னா,அவளுக்கு முழு சம்மதம்ன்னா மட்டும் இந்த கல்யாணத்தை மேற்கொண்டு பேசுவோம்.அவளுக்கு வேணாம்னா இதை மேற்கொண்டு பேச வேணா. உன்னோட தங்கச்சி மட்டும் இல்லே.என்னோட பையனும் ரொம்பவே நொந்து போய் இருக்கான்.உனக்கு என்னைவிட நிறைய தெரியும்”என்று நீளமாக பேசிவிட்டு உள்ளே சென்றுவிட,துரையும் ஆமோதிப்பக தலையை ஆட்டிவிட்டு தானும் அங்கிருந்து நகர்ந்து விட்டார்.
சாகேதும் ,” திருமகளோட சம்மதம் ரொம்பவே முக்கியம் நரேன்.இவ்ளோ வருஷமா அவளை நினச்சு வாழ்ந்தா மாதிரி இனிமேலும் கழிச்சிருவேன். ஆனா,கல்யாணும்னு நடந்தா.. அது வேற. அவளுக்காக காத்திருக்கேன்” என்றுவிட்டான்.
error: Content is protected !!